Advertisement

வானதி, கப், சாசர் எல்லாம் ரெடியா இருக்கு… காபிக்கு டிகாஷன் வச்சிட்டேன்… எல்லாத்தையும் சரியா கொடுக்கணும்… அச்சோ, எனக்கு கொஞ்சம் டென்ஷனா இருக்கு… நீ என் கூடவே இரு…” என்றதும் குந்தவையிடம் செல்ல முடியாமல் தவித்தவள் அவரிடமே கேட்டாள்.
“ஆன்ட்டி, இதுல மாப்பிள்ளை யாரு, வரலியா…”
“நானும் அதான் பாக்கறேன்..” என்றவர், “அண்ணா, முக்கியமான ஆளை எங்கே காணோம்…” என்றதும் சிரித்த ராஜ்மோகன், “இப்ப வந்திருவான் மா…” என்றார்.
“வானதி எல்லாம் ரெடியா எடுத்து வச்சிரும்மா, மாப்பிள்ளை வந்ததும் கொடுத்துடலாம்…” சகுந்தலா சொல்ல வானதி அடுக்களைக்கு சென்றாள்.
“தவிப்புடன் அறைக்குள் அமர்ந்திருந்த குந்தவை ஜன்னலில் யாரோ தட்டும் சத்தம் கேட்டதும் எழுந்து திறக்க, வெளியே தேவ் நின்று கொண்டிருக்க பதறிப் போனாள்.
“ஐயோ, தேவ்… நீ எதுக்கு இங்க வந்த…”
“என்னால முடியல டார்லிங்,  நான் பார்த்து ரசிக்க வேண்டிய உன்னை வேறொருத்தன் பொண்ணு பார்க்க வரான்னு சொன்னதுமே தாங்க முடியல… நான் வேணும்னா உள்ள வந்து எல்லாரு முன்னாடியும் நாம லவ் பண்ணறோம்னு சொல்லிடட்டுமா…” என்றான்.
“ஐயோ, அதெல்லாம் வேண்டாம்… அப்பா என்னைக் கொன்னே போட்டிருவார்… இதை பக்குவமா தான் சொல்லணும்… நான்தான் உன்னை வர வேண்டாம், நானே பார்த்துக்கறேன்னு சொன்னேன்ல… முதல்ல கிளம்பு… யாராச்சும் பார்த்துடப் போறாங்க…” என்றாள் பயத்துடன்.
“சரி டார்லிங், இந்தப் புடவைல நீ சூப்பரா இருக்க… ஹூம்… எனக்கு தான் சரியா பார்த்து ரசிக்க முடியல… அவனை எப்படியாச்சும் சொல்லிப் புரிய வச்சிடுவ தான, என்னை ஏமாத்திட மாட்டியே… நீ எனக்கு தானே…” என்றவனைப் பாவமாய் பார்த்தாள் குந்தவை.
“கண்டிப்பா ஏமாத்த மாட்டேன்… நீ முதல்ல கிளம்பு…” என்று அவசரப்படுத்தவும் அவன் அங்கிருந்து சென்றான். அவளுக்கு இருக்கும் பதட்டத்தில் இவன் எதற்கு மாப்பிள்ளை வேஷத்தில் வந்திருக்கிறான் என்று யோசிக்க மறந்து போனாள்.
“எப்படியாச்சும் மாப்பிள்ளை கூட தனியாப் பேசணும்னு அனுமதி வாங்கி கல்யாணத்துல விருப்பம் இல்லேன்னு சொல்லிடணும்…” அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே வானதி உள்ளே வந்தாள்.
“குந்தவை, மாப்பிள்ள இனியும் வந்திட்டில்லா, ஆனா, உன்னை கூட்டி வரான் சொல்லி…” எனவும் குழம்பினாள்.
“ஒருவேளை பெரியவர்கள் மட்டும் பார்த்து தீர்மானித்து விடுவார்களோ… மாப்பிள்ளை வராவிட்டால் எப்படி அவனிடம் என் விஷயத்தைப் பேசி புரிய வைப்பது…” என்று யோசிக்க வானதி அவளை அழைத்துச் சென்றாள்.
கால்கள் பின்னிக் கொள்ள தயக்கத்துடன் உடன் நடந்தவள் ஹாலுக்கு செல்ல மகளிடம் வந்த சகுந்தலா, “எல்லாரையும் நமஸ்கரிச்சுக்கோ…” என்று சொல்ல பொதுவாய் வணக்கம் சொன்னாள்.
“பொண்ணே வந்தாச்சு… எங்க என் மாப்பிள்ளை இன்னும் காணோம்…” சுந்தரம் கேட்க, “அதோ… உன் மாப்பிள்ளை வந்துட்டான் பாரு…” என்று ராஜ்மோகன் புன்னகையுடன் சொல்லவும் நிமிர்ந்த வானதி, உள்ளே வந்த தேவ் மோகனை நோக்கி அதிசயிக்க, குனிந்து நின்ற குந்தவையின் கையில் இடித்து, “குந்தவை, நோக்கு…” என்று சொல்ல, அவள் “ப்ச்…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி முனங்கினாள்.
அதற்குள் காபி டிரேயுடன் வந்த சகுந்தலா, “குந்தவை, இந்தாம்மா, எல்லாருக்கும் காபி கொடு…” என்று மகளிடம் நீட்ட கடமையே என்று அதை  வாங்கிக் கொண்டவளை தேவ் மோகன் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க திகைப்புடன் அவனை நோக்கிய வானதியிடம் புன்னகைத்து கண்ணை சிமிட்டினான் அவன்.
வானதியைப் பார்த்துக் கொண்டிருந்த அருள் கண்ணில் அவளது திகைப்பும் தேவ் செய்த கண் சிமிட்டலும் விழுந்துவிட “இவங்களுக்கு முன்னமே பழக்கம் இருக்கோ…”
என்று அவன் புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.
“குந்தவை, நாங்க என்ன உனக்குத் தெரியாதவங்களா… ரொம்ப தான் வெக்கப்படற… நிமிர்ந்து உன்னைக் கட்டிக்கப் போறவனைப் பாரு மா…” தேவிகா சொல்லவும் சிரித்தனர்.
அவர் சொல்லவும் சற்று இயல்பாய் தன்னைக் காட்டிக் கொண்டவள் அவர்களுக்கு காபி கொடுத்துவிட்டு தேவ் மோகனை நோக்கி வந்தாள்.
தன்னைக் கண்டதும் அவள் முகத்தில் தெரியப் போகும் அதிர்ச்சியைக் காண்பதற்காய் அவள் முகத்தையே பார்த்திருந்தவனை ஏமாற்றாமல் நிமிர்ந்தவள் கண்களில் தெரிந்த வியப்பு, மலர்ச்சி, சந்தோசம் என்று மாறி மாறி உணர்ச்சிகளைக் காட்டி அப்படியே கோபத்துக்கு மாற சிவந்து போனவள் கண்ணில் துளிர்த்த கண்ணீருடன் முறைத்தாள்.
“மகனே போதும் டா, என் மருமக நீ பாக்குற பார்வைல உருகிப் போயிடப் போறா…” ராஜ் மோகன் கிண்டல் செய்ய சட்டென்று இருவரும் சுதாரித்துக் கொள்ள குந்தவை காபி கொடுத்துவிட்டு நகர்ந்தாள். வானதி பின்னிலேயே ஒவ்வொருவருக்கும் பலகாரங்களைக் கொடுத்து வந்தாள்.
“அட, சுந்தரத்துக்கு இன்னொரு பொண்ணு இருக்குன்னு தெரிஞ்சிருந்தா என் மகனுக்கும் பார்த்திருக்கலாம்… இந்தப் பொண்ணும் அழகா இருக்கே…” என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல கூச்சத்துடன் வானதி அருளை நோக்க அவன் கண்களில் புகை வந்து கொண்டிருந்தது.
“இது சுந்தரம் பொண்ணு இல்லை மாமா, சகுந்தலாவைக் கூட இருந்து பார்த்துக்க வந்த நர்ஸ் பொண்ணு… நீயும் அழகா இருக்க மா…” தேவிகா சொல்லவும் அவரை நோக்கிப் புன்னகைத்தாள் வானதி..
“குந்தவை, எப்பவும் போல இயல்பா இரும்மா… இப்படி வந்து உக்காரு…” மருமகளை அருகே அமர வைத்தார் தேவிகா.
“அப்புறம் என்ன, ரெண்டு குடும்பத்துக்கும் பிடிச்சுட்டா மத்த விஷயங்களைப் பேசிடலாம்…” பெரியவர்கள் சொல்ல,
“அதுக்கென்ன பேசிடலாமே…” என்ற சுந்தரம் மனைவியைப் பார்க்க அவரும் தலையாட்டினார்.
“தேவ், உனக்கு குந்தவை கிட்ட எதுவும் பேசணும்னா போயி பேசிட்டு இருடா…” அன்னை சொல்ல எழுந்து கொண்டவன்,
“கடவுளே, கல்யாணத்துக்கு முன்னாடியே அடி வாங்கப் போற புருஷன் நானாத்தான் இருப்பேன்… கொஞ்சம் பார்த்து பக்குவமா அடிக்கற மாதிரிப் பார்த்துக்க… என்ன இருந்தாலும் நான் ஒரு போலீஸ்காரன்…” என்று வேண்டிக் கொண்டான்.
“குந்தவை, மாப்பிளையை மாடிக்கு அழைச்சிட்டுப் போம்மா…” சகுந்தலா சொல்லவும் எழுந்த குந்தவை மாடிப்படிக்கு நடக்க புன்னகையுடன் தொடர்ந்த தேவ் மோகனைக் கண்டு வானதி புன்னகைக்க யாருக்கும் தெரியாமல் கட்டை விரலை அவளிடம் காட்டிவிட்டு சென்றான் தேவ் மோகன்.
“அப்புறம், பொண்ணுக்கு நாங்க என்ன சீர்வரிசை பண்ணனும்னு எதிர்பாக்குறிங்க சம்மந்தி…” சுந்தரம் சந்தோஷப் புன்னகையுடன் நண்பனிடம் கேட்க, “போடா ராஸ்கல்… எனக்கு உன் பொண்ணு மருமகளா வந்தாப் போதும்… மத்ததெல்லாம் உன் விருப்பம்… ஆனா ஒரே ஒரு சின்ன ஆசை இருக்கு… அதுக்கு நீ சம்மதிச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன்…” என்றார் ராஜ்மோகன்.
“ஹேய்., என்ன பண்ணனும்னு சொல்லாம இதென்ன ராஜ்… என்ன ஆசைன்னு சொல்லு…” என்றார் சுந்தரம்.
“நம்ம ஆதித்யனும் என் மருமகளோட மூத்த சகோதரனா இந்தக் கல்யாணத்துல கலந்துக்க நீ சம்மதிக்கணும்…” அவரது விருப்பத்தைக் கேட்ட சுந்தரத்தின் முகம் இறுகியது. அவரது முகத்தைக் கண்ட ராஜ்மோகன், “ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு நம்ம ரெண்டு குடும்பத்துலயும் ஒரு விசேஷம் நடக்குது… இதுல எந்த மனஸ்தாபமும் இல்லாம நம்ம குடும்பத்தை சேர்ந்த எல்லாரும் சந்தோஷமா கலந்துக்கணும்னு என் ஆசை…” என்ற ராஜ்மோகனை கண்கள் கலங்க நெகிழ்ச்சியுடன் நோக்கினார் சகுந்தலா. அருளுக்கும் அவர் சொன்னதைக் கேட்டு சந்தோஷமாய் இருந்தது. ஒருவேளை யாருக்கும் இறங்கி வராத தந்தை அவரது விருப்பத்துக்கு இறங்கி வரலாம் என்று தோன்றியது.
ஆதித்யன் என்ற பெயரைக் கேட்ட வானதிக்கு “இது யாரு புது அவதாரம்… குந்தவைக்கு மூத்த சகோதரன்னு சொன்னா அருள் இல்லாம இன்னொரு அண்ணன் இருக்காரா…” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
“ராஜ்… என் வாழ்க்கைல நீ எவ்வளவு முக்கியமானவன்னு உனக்குத் தெரியும்… முதன்முறையா நீ என்கிட்ட ஒரு விருப்பத்தை சொல்லி இருக்க… அதை என்னால மறுக்க முடியல… ஆனா அதே நேரம் என் மனசையும் என்னால மாத்திக்க முடியல… உன் விருப்பப்படியே அவன் வந்து கல்யாணத்துல கலந்துக்கிட்டும்… குந்தவைக்கு அண்ணனா செய்ய வேண்டியதை செய்யட்டும்… ஆனா என் மகனா இந்த வீட்டுக்குள்ள வர மட்டும் சம்மதிக்க மாட்டேன்…” என்றதும் இத்தனை வருடமாகியும் அவரது இளகாத பிடிவாதத்தைக் கண்டு அதிர்ந்தாலும் இந்த அளவுக்கு அவர் இறங்கி வந்ததே பெரிய விஷயம் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டனர்.
“ரொம்ப சந்தோஷம் டா…” என்று சுந்தரத்தின் கையைப் பிடித்துக் கொண்ட ராஜ்மோகன், “உனக்கு இப்போது சந்தோஷமா…” என்பது போல் சகுந்தலாவை நோக்க அவர் கண்ணாலேயே நன்றி சொன்னார். அடுத்து கல்யாணம், நிச்சயம் என்று அவர்கள் பேசத் தொடங்க மாடிக்கு சென்றவர்களின் நிலை என்னவாயிற்றோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் வானதி.
“மாப்பிள்ள போலீஸ்னு பரஞ்சு… இவகிட்ட அவரு யாருன்னு சொல்லாமே டென்ஷன் செய்ததினு எந்தாயாலும் தர்ம அடி நிச்சயம்… எப்படியோ சந்தோஷமாயி பகவானே…” என யோசித்துக் கொண்டே அங்கே அவர்கள் சாப்பிட்டு வைத்த கிண்ணங்களை எடுத்து அடுக்களைக்கு கொண்டு சென்றாள்.
சிறிது நேரத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்த இருவரின் முகத்திலும் சந்தோஷம் நிறைந்திருந்தது.
“ம்ம், எல்லாம் உள்காயம் தான் போல… நல்லவேளை, புறத்து காணுந்தில்லா…” என்று வானதியும் சந்தோஷமாய் அவர்களை நோக்கி சிரித்தாள்.
எனக்கான தருணங்கள்
எல்லாம் உனதாக
மாற்றிக் கொண்டாய்…
எனதான எண்ணங்கள்
எல்லாம் உனதாக்கி
நிறைந்து கொண்டாய்…
என்னை எங்கேயென்று
தேடித் தேடி இறுதியில்
உன்னிடம் கண்டு கொண்டேன்…
எனதான நீயும்
உனதான நானும்
நமக்கான நாமாய் என்றும்
பிரியத்தில் நிறைந்திருப்போம்…

Advertisement