Advertisement

அத்தியாயம் – 25
அன்னை சொன்ன பொருட்களை எல்லாம் வாங்கி வந்த  அருள் லிஸ்ட்டைப் பார்த்துக் கொண்டே அடுக்களைக்கு செல்ல பரணில் இருந்த தாம்பூலத் தட்டை எடுத்துக் கொண்டு இறங்கிய வானதியின் மேல் இடித்துக் கொண்டான்.
“ஆ…” வலியில் முகத்தை சுளித்துக் கொண்டே கீழே சரிந்தவளைப் பிடித்துக் கொண்டவன் விழிகள் ஆவலுடன் நோக்க கண்களுக்குள் தொலையத் துடிக்கும் மனதுக்கு கடிவாளமிட்டு அவனை விட்டு விலகினாள் வானதி.
“ச..சாரி வானதி… தெரியாம இடிச்சுட்டேன்…”
“ம்ம்… அதெங்கனே சரியா என்டே மேலே தன்னே வந்து எப்பளும் இடிக்குனதோ…” முனங்கிக் கொண்டே “ஆகாசத்தை மாத்திரம் நோக்கி நடக்காம குறச்சு பூமியும் நோக்கி நடக்கணும் சாரே…” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் தலையை நீவிக் கொண்டு நகர்ந்தவளைக் கண்டு அவனுக்கு சிரிப்பாய் வந்தது.
“இவ என்ன, விட்டா நான் வேணும்னே வந்து இடிச்சேன்னு பழியைப் போட்டிருவா போலிருக்கு…” என நினைத்துக் கொண்டவன் கண்களுக்குள் வெட்கமும் தவிப்புமாய் அவனை ஏறிட்ட அவளது விழிகள் நினைவு வர உற்சாகத்துடன் சிரித்துக் கொண்டான்.
குந்தவையின் அறையிலிருந்து வந்த சகுந்தலா மகனை நோக்கி, “என்னடா அருளு, தனியா சிரிச்சிட்டு இருக்க… ஒண்ணும் பிரச்சனை இல்லையே…” என்று தலையை சுட்டிக் காண்பிக்க, “ஆஹா, இந்த அம்மா விட்டா நம்மளை லூசுன்னு சொல்லிடுவாங்க போலருக்கே…” என்று நினைத்து,
“அம்மா… நீங்க சொன்ன பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்… சரியாருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…” என்று லிஸ்ட்டை அவரிடம் நீட்டினான்.
அதை வாங்காமல், “இதை வானதி கிட்ட கொடுத்து ரெண்டு பேருமா செக் பண்ணி வச்சிருங்கடா… எனக்கு நிறைய வேலை இருக்கு…” சொல்லிக் கொண்டே நகர்ந்தார்.
“வானதியே… வானதியே…” என விசில் அடித்துக் கொண்டே அவளைத் தேடி மாடிக்கு செல்ல அறையில் இருந்த கர்ட்டனை எல்லாம் மாற்றிக் கொண்டிருந்தாள் அவள்.
“வானு, வானு…” விசிலடித்து அவன் அழைக்கவும் திகைப்புடன் திரும்பியவள் என்னவென்று பார்க்க, “அம்மா இந்த லிஸ்ட்ல உள்ளது எல்லாம் இருக்கான்னு நம்மளை செக் பண்ண சொன்னாங்க…” என்றான் புன்னகையுடன்.
“இது முடிச்சிட்டு நானே செக் பண்ணிக்கறேன்… அந்த லிஸ்ட்டை பையிலேயே வச்சிருங்க…” என்றாள் அவள்.
“வானு… நானும் உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா…” கேட்டுக் கொண்டே அருகில் வந்தவனிடம், “நீ பக்கத்துல வந்தாலே பெரிய இம்சையாருக்கு… பேசாமப் போயேன்டா…” என்பது போல் மனதுக்குள் நினைத்துக் கொண்டவள், “இல்ல வேண்டா…” எனவும், “அட குடும்மா… நீ ஒவ்வொண்ணா சேர்ல ஏறி, இறங்கி எப்ப மாட்டி முடிக்கறது…” என்று அவள் கையிலிருந்த கர்ட்டனை வாங்கி கம்பியில் வேகமாய் கோர்த்து நின்றபடியே அதில் மாட்டினான்.
“ஹூக்கும், பன போல வளர்ந்துட்டு என்ட ஹைட்டு போறான்னு…” முனங்கியவளின் அருகில் தோளோடு சேர்ந்து நின்றவன் “நீ ஹைட் கம்மி எல்லாம் இல்ல வானு, என்னை விட கொஞ்சம் கம்மி அவ்ளோ தான்…” என்று சொல்ல, “இம்சை பண்ணறானே…” என நினைத்தவள், “இதையும் நீங்களே செய்தோ…” என்று பாக்கி உள்ள கர்ட்டனையும் அவன் கையில் கொடுத்துவிட்டு கீழே சென்றாள்.
என்னதான் அவளை விட்டு விலகி நிற்க மூளை சொன்னாலும் மனம் அவளைக் காணும்போதே மெழுகாய் உருகி அவளிடம் ஒட்டிக் கொள்ளத் துடித்தது. அவளது கண்ணிலும் தனது அருகாமையில் காதலையும், தவிப்பையும் உணர்ந்து கொண்ட அருளுக்கு அவளும் தன்னைப் போல காதலைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயல்கிறாள் எனத் தோன்றியது. அண்ணனின் காதலே இன்னும் கைகூடாமல் இருக்க நாமும் இதே பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வேண்டுமா என்று மூளை சொன்னாலும் காற்றைப் போல் காதலாய் தன் மனதில் நிறைபவளை விலக்கி நிறுத்தும் வழி தெரியாமல் முழித்தான்.
அவளைக் காணும்போது தனது உறுதி எல்லாம் கரைந்து போவது போல் உணர்ந்தான். காதல் என்ன, சொல்லிக் கொண்டு வருமா… வரவேண்டாம் என்றால் நிற்குமா… அது ஒரு அழகான உணர்வல்லவா…
குந்தவை யோசனையும் குழப்பமுமாய் அவளது அறையிலேயே இருக்க சகுந்தலா அவளிடம் இந்த சேலை கட்டு, நகை போடு… என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
வெளியே சென்றிருந்த சுந்தரம், “சகு…” என்று அழைத்துக் கொண்டே உள்ளே நுழைய, கணவரிடம் வந்தார் அவர்.
“சகு… அவங்க சரியா அஞ்சு மணிக்கு வந்திருவாங்க… பத்து பேரு வருவாங்கன்னு ராஜ் சொன்னான்… பலகாரம் எல்லாம் அமர்க்களமா இருக்கணும்… எல்லாம் ரெடி பண்ணிடு…”
“சரிங்க… பண்ணிடறேன்…” என்றவரிடம், “குந்தவை கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டே தானே… அவங்க முன்னாடி தேவதை போல வந்து நிக்கணும்… வானதியை வச்சு சிம்பிளா அலங்காரம் பண்ணிக்க சொல்லிடு… நம்ம பொண்ணு அழகுன்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன…” என்றவர் ஒரு பரபரப்புடனே இருந்தார்.
“தட்டுல வைக்க எல்லாப் பொருளும் வாங்கியாச்சா… அருள் எங்கே…” என்றவரின் குரலைக் கேட்டு எட்டிப் பார்த்தான்
“நீங்க எதுக்கு இவ்ளோ பரபரப்பா இருக்கீங்க… எல்லாம் ரெடி பண்ணியாச்சுங்க… எடுத்து வச்சாப் போதும்…”
“ம்ம்… நம்ம வீட்ல நடக்குற முதல் விசேஷம்… எந்தக் குறையும் இல்லாம நிறைவா செய்யணும்…”
“ம்ம்… செய்துடலாங்க…” என்றவரின் மனது “ஆதி இந்த நேரத்தில் இல்லையே…” என்று வருந்தாமல் இல்லை. அருள் கூட அன்னை இதை சொன்னதும் அதைத்தான் கேட்டான்.
“தங்கைக்கு இப்படி ஒரு விசேஷம் நடக்கும்போது அண்ணன் இங்க வேண்டாமா மா… அவனை அப்படியே விட்டுடப் போறீங்களா… மனசுக்கு கஷ்டமா இருக்கு…” என்றவனிடம்,
“அருளு… எனக்கு மட்டும் வருத்தம் இல்லாமலா இருக்கு… ஹூம்… எப்பதான் எல்லாப் பிரச்சனையும் சரியாகப் போகுதோ… அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்… நாம அவனைப் பத்தி பேசறது தெரிஞ்சா உன் அப்பா ஹிட்லர் அவதாரம் எடுத்திருவார்… வேலையைப் பார்ப்போம்…” என்று அடுக்களைக்குள் நுழைந்து கொண்டார்.
நான்கு மணிக்கு வீடே நெய் வாசம் மணக்க இரண்டு இனிப்பு, இரண்டு காரத்துடன் பலகாரம் ரெடியாகிக் கொண்டிருந்தது. அதுவரை சகுந்தலாவுக்கு உதவி செய்த வானதி குந்தவையை புறப்பட வைக்க சென்றிருந்தாள்.
எல்லாவற்றையும் நீட்டாய் செய்து வைத்துவிட்டு அவசரக் குளியல் போட்டு ஆதி வாங்கிக் கொடுத்த, மனதுக்குப் பிடித்த மாம்பழக் கலர் மைசூர் சில்க் புடவையுடன் வந்து நின்ற மனைவியை முறைத்தார் சுந்தரம்.
“உன்கிட்ட இந்தப் புடவையைத் தவிர வேற புடவையே இல்லையா… எல்லா விசேஷத்துக்கும் இதையே கட்டற…”
“வெயிட்லஸ் சேலைங்க… பார்க்கவும் ரிச்சா இருக்கும்… பாருங்களேன்… நான் கூட இந்த சேலைல கொஞ்சம் ஒல்லியாத் தெரியறேன்ல…” என்று அசட்டுத்தனமாய் சிரிக்கவும், அந்தப் புடவையோடு மனைவியின் பிரியத்தின் காரணம் அவருக்குத் தெரியுமென்றாலும் இந்த நேரத்தில் ஒரு பிரச்சனை வேண்டாமென்று அமைதியாய் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க தயாராகி நின்றார் சுந்தரம்.
உற்சாகமே இல்லாமல் கடமையே என்று அன்னை கொடுத்த புடவையைக் கட்டிக் கொண்டிருந்த குந்தவையின் முகத்தில் புடவையின் பளபளப்பு இல்லை.
“குந்தவை, முகத்தினே இங்கனே வைக்கல்லே… குறச்சு சிரிச்ச போல இரிக்கு… இதா ஈ நெக்லஸ் இட்டோ…” வானதி சொல்லவும், “அது ஒண்ணு தான் குறைச்சல்… எனக்குப் பிடிக்கவே இல்ல வானதி…” என்றாள் சிணுங்கலுடன்.
“இப்ப ஒண்ணும் பேச வேண்டாம்… பர்ஸ்ட் இந்த சடங்கு நடக்கட்டே…” என்றவள் ஒரே ஒரு நெக்லஸைப் போட்டுவிட்டு பெரிய ஜிமிக்கியை காதில் அணிவித்தாள். கண்ணில் ஐலைனர் போட வந்தவளிடம் வாங்கிக் கொண்டவள், “கொடு… நானே போட்டுக்கறேன்…” என்று சாதாரணமாய் புறப்படுவது போல புறப்பட்டுக் கொண்டாள். தலையில் பூ வைத்ததுமே அந்தப் புடவைக்கும் நகைக்கும் அவளது அழகு தூக்கலாய் தெரிய வானதி புன்னகைத்தாள்.
“ஹூம், நின்னே இங்கனே கண்டால் அவருக்கு பிடிக்காம இரிக்கனது கஷ்டம் தன்னே… சந்தக்காரி…” என்று கன்னத்தை செல்லமாய் பிடித்துக் கொஞ்ச, “ஹூம், மனசுக்குள்ள ஒருத்தன் மேல விருப்பம் வச்சிட்டு இப்படி பண்ணறது நாடகம் போல இருக்கு, வானதி…” என்றாள் குந்தவை.
“ம்ம்… அப்படியே நினைச்சுக்கோ… எல்லார் முன்னிலும் வந்து காபி கொடுத்துட்டு ஒரு ஸ்மைல்… அவ்ளோதான்… போதும்… டென்ஷன் ஆகாதே ரிலாக்ஸ் ஆயிட்டு இரிக்கு…” என்றவள், அவளும் உடை மாற்றி எளிமையாய் தயாரானாள்.
“இந்த ஆன்ட்டி கிட்டே பையன் போட்டோ உண்டோ சோதிச்சால் ஈவனிங் நேரில் காணான் போகுவல்லே… பின்னே எந்தினு போட்டோன்னு சோதிக்குனு…”
“சரி, நமக்கு நேரில் சம்சாரிச்சு சரியாக்காம்…” என்றவள் வாசலில் சத்தம் கேட்கவே, “அவரு வந்து தோணுந்து…” என்று வாசலுக்கு சென்றாள்.
“வாங்க…” சுந்தரம் வாயெல்லாம் பல்லாக வந்தவர்களை வரவேற்க அருளும் உடனிருந்து அமர சொல்லி உபசரித்துக் கொண்டிருந்தான். மாப்பிள்ளையைத் தேடிய வானதியின் கண்களுக்கு எல்லாரும் சற்று முதிர்ந்தவர்களாகவே தெரிய, “யாரு மாப்பிள்ளை… ஒருவேளை, வரலியோ…” என்று குழம்பிக் கொண்டிருக்க சகுந்தலா அழைத்தார்.

Advertisement