Advertisement

“யாருடி பைத்தியம்… போடி, ரசனை கெட்டவளே… நான் கதைக் களஞ்சியம் டி… போ, உனக்கு தோசை கேன்சல்…” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள, “அச்சோ, சரி சரி… இந்த வீட்டின் கதைக் களஞ்சியமே… நான் சொன்னது தப்பு… தோசையைக் குடு…” என்று வேகமாய் வாங்கிக் கொண்டு மேசையில் இருந்து மொக்கத் தொடங்கினாள் மகள்.
“நீ என்ன பேசினாலும் உன் சமையலை அடிச்சுக்க ஆளே இல்ல மா… ப்ளீஸ், இன்னொரு தோசை மா…” தலையை சரித்து உதட்டை சுளித்து கேட்ட மகளின் அழகில் அடுத்த தோசை தயாராகிக் கொண்டிருந்தது.
அது பிளேட்டுக்கு வந்ததும், “உஸ்ஸ்… ஒரு தோசைக்கு இந்தம்மாவை எப்படிலாம் ஐஸ் வைக்க வேண்டிருக்கு…” என்று சொன்னபடி உள்ளே தள்ளியவள், “லவ் யூ சகு…”
என்று கன்னத்தில் முத்தமிட, “ஏய்… ச்சீ போடி…” என்று கடிந்தபடி துடைத்துக் கொள்வது போல் காட்டினாலும் அன்னையாய் அவர் மனம் குளிர்ந்திருந்தது. சுந்தரம் உடை மாற்றி தயாராகி வர, அவருடன் கிளம்பினாள் குந்தவை. இருவரும் காரில் கிளம்பியதும் சிறிது நேரத்திலேயே வாசலில் பைக் சத்தம் கேட்டது.
“ஆஹா, பிள்ளை வந்துட்டான் போலருக்கு…” என்றபடி வாசலுக்கு வர மகனைக் கண்டதும் மலர்ந்தார்.
“வாப்பா… பஸ் லேட்டா…”
“இல்லம்மா லேட் ஆகும்னு தான் நினைச்சேன்… ஆனா டிரைவர் நல்ல ஸ்பீட்… கரக்ட் டைமுக்கு வந்தாச்சு…” என்றவன் போர்ட்டிகோவில் வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும், தங்கையும் கிளம்பியாச்சா… நீங்க சாப்டிங்களா… செம பசிம்மா… குளிச்சிட்டு வந்திடறேன்… சாப்பிட்டு பேசிக்கலாம்…” என்றபடி அவனது அறைக்கு செல்ல அவனுக்கு தோசை ஊற்ற சென்றார் சகுந்தலா.
“அதென்னவோ குழந்தையா இருக்கும்போதும், பெரியவங்க ஆகும்போதும் விரும்பி சாப்பிடற இட்லி, இளமைப் பருவத்துல சில பிள்ளைகளுக்குப் பிடிக்காம போயிடுது… அதே தோசைன்னா விரும்பி சாப்பிடறாங்க…” மனதுள் நினைத்தபடி மகனுக்குப் பிடித்தவாறு முறுகலாய் தோசை வார்க்கத் தொடங்கினார்.
மூன்று படுக்கை அறைகள் வசதியுடன் ஒரு குட்டி சைஸ் பங்களா அவர்களின் வீடு… முன்னில் கார் பைக் வைக்க போர்ட்டிகோ. இப்போது அதைவிடப் பெரிதாய் கட்டும் அளவுக்கு வருமானம் இருந்தாலும் முதன் முதலில் அவர்களுக்காய் பார்த்துக் கட்டிய வீடு என்பதால் வேறு யோசிக்க மனம் வரவில்லை. மகன் குளித்து தலையில் ஈரத்துடன் வர, “இவ்ளோ வளர்ந்தாச்சு… இன்னும் சரியா துவட்ட தெரியலை…” என்றபடி கையிலிருந்த டவலை வாங்கி துவட்டி விட்டார்.
“பிஜூ கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா…”
“ம்ம் மா… உன்னைக் கூட்டிட்டு வரலைனு கோச்சுகிட்டான்… சரி, ஒய்பைக் கூட்டிட்டு சென்னைக்கு விருந்துக்கு வாடா… அம்மாகிட்ட வாழ்த்து வாங்கிக்கலாம்னு சமாளிச்சேன்…”
“ம்ம்… நல்ல பிள்ளை… இங்க ஹாஸ்டல்ல இருக்கறப்ப நம்ம வீட்டுக்கு வரும்போது அம்மா, அம்மான்னு வாய் நிறைய கூப்பிடுவான்… உன் அப்பா பத்தி தான் உனக்கு தெரியுமே… உன்னை திருச்சூர் அனுப்பினதே பெருசு… நானும் போறேன்னு சொல்லியிருந்தா உன்னையும் அனுப்பிருக்க மாட்டார்… ஹூம்…” ஒரு பெருமூச்சுடன் சொல்லிக் கொண்டே தோசையை எடுத்து வந்தவர் அதற்குப் பின் மௌனமாகிவிட்டார். அன்னையின் மௌனத்தின் காரணம் அருளுக்குப் புரிய அமைதியாய் சாப்பிட்டு எழுந்தான்.
“எங்க போயி விதவிதமா எவ்ளோ சாப்டாலும் என் அம்மா கையால சாப்டா தான் வயிறோட மனசும் நிறையுது…” சொல்லிக் கொண்டே எழுந்தவனை நோக்கி புன்னகைத்தார்.
“இப்ப இப்படிதாண்டா மகனே சொல்லுவிங்க… கல்யாணமாகி பொண்டாட்டி வந்துட்டா அப்புறம் அம்மா சமையல் பிடிக்காமப் போயிடும்…” என்று சிரிக்க அவன் முறைத்தான்.
“யார் வந்தாலும் என் அம்மா சமையலை அடிச்சுக்க முடியாது… இப்படில்லாம் சொன்னா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்…” என்றான் அவன் வேண்டுமென்றே.
“அடடா, நான் சும்மா சொன்னேன்டா… அப்படியே என் மருமக என்னை விட நல்லா சமைச்சா, இந்தாடிம்மா… நீயே இனி எல்லாத்தையும் பார்த்துக்கன்னு சந்தோஷமா அவ கைல கொடுத்திட மாட்டேனா…” என்றார் சகுந்தலா.
“ஓ… புரியுதும்மா, அப்ப உன் மருமகளை சமையல்காரி ஆக்கலாம்னு பிளான் போடற…” என்றான் அவன் சிரிப்புடன்.
“இதென்னடா வம்பாப் போச்சு… வராத பொண்டாட்டிக்கு இப்பவே வக்காலத்து வாங்கிட்டு இருக்க… போயி கொஞ்சம் ரெஸ்ட் எடு… நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்…”
“ம்ம்… நான் வேணும்னா வண்டில டிராப் பன்னட்டுமாம்மா…”
“வேண்டாம்டா அருளு… ராத்திரி பஸ்ல சரியா தூங்கிருக்க மாட்ட… நீ தூங்கு… நான் நடந்து போயிக்கறேன்…”
“சரிம்மா, பத்திரமா போயிட்டு வாங்க…” என்றவன் ரெஸ்ட் எடுக்க செல்ல சகுந்தலா கோவிலுக்கு கிளம்பினார்.
நான்கு வீதி தள்ளியிருந்த மாரியம்மன் கோவிலை நோக்கி நடந்தவர் காலை வெயில் சுள்ளென்று அடித்ததில் முகம் சிவக்க வேகமாய் நடந்தார். சகுந்தலா மஞ்சள் நிறத்தில் சற்று பூசிய உடல்வாகுடன் கம்பீரமாய் அழகாய் இருந்தார்.
உடலில் சக்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் எல்லாம் குடி இருக்கத் தொடங்கி சில வருடங்கள் ஆகியிருந்தது.
பூஜைக்குத் தேவையான பொருட்களை முன்னிலிருந்த கடையில் வாங்கிக் கொண்டு அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார்.
“தாயே, மகமாயி…” அம்மனை அழைத்துக் கொண்டே உள்ளே சென்றவர் அருள் வடியும் முகத்துடன் அழகான புன்னகையுடன் நின்று கொண்டிருந்த அன்னையை மனமுருக வேண்டி நின்றார்.
“அம்மா, எனக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியும்… என் மனசுல ரொம்ப நாளா இருக்கற ஒரே ஒரு குறையைத் தவிர சந்தோஷமா தான் இருக்கேன்… அந்தக் குறையையும் நீ சீக்கிரமே தீர்த்து வச்சிடு தாயே…” கை கூப்பி நின்றவரின் கண்கள் பனிக்க மணியின் ஒலியையே அம்மனின் வாக்காய் நினைத்து சந்தோஷமாய் கண்ணைத் திறந்தவர் திரும்பிப் பார்த்தார்.
சுரிதார் அணிந்த பெண்ணொருத்தி சற்று உயரத்தில் இருந்த கோவில் மணியை எம்பி அடித்துக் கொண்டிருந்தாள். சந்தோஷ சகுனத்தில் மனம் நிறைய தீபாராதனையைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு பிரகாரத்தை வலம் வந்து மற்ற கடவுள்களையும் வணங்கிவிட்டு வெளியே வந்து அமர்ந்தார்.
மனதுக்குள் ஏதேதோ சம்பவங்கள் வழக்கம் போல் மாறி மாறி சந்தோஷமும் துக்கமுமாய் மனதை அழுத்தியது. சிறிது நேரம் அமர்ந்திருந்தவர் வீட்டுக்கு செல்ல எழுந்திருக்க தலை சுற்றி அப்படியே சாய, பிரகாரத்தை சுற்றி வந்த சுரிதார் அணிந்த பெண் வேகமாய் தாங்கிக் கொண்டாள்.
“அச்சோ, ஆன்ட்டி…” என்றவள் அவளது நெஞ்சில் அவரை சாய்த்துக் கொள்ள வேறு சில பெண்களும் ஓடி வந்தனர்.
“என்னாச்சு மா…” என்று கேட்க, “கொறச்சு வெள்ளம்…” என்று சைகையில் கேட்க, ஒரு பெண்மணி வேகமாய் தன்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டினார்.
கண் மூடி மயக்கத்தில் இருந்த சகுந்தலாவின் முகத்தில் சட்டென்று நீர்த்துளிகள் விழவும் உணர்வு திரும்ப கண்ணைத் திறக்க முயல வாயில் நீரைப் புகட்டினாள். குடித்தவர் தன்னைச் சுற்றி எல்லாரும் நிற்பதைக் கண்டு திகைத்து எழுந்து அமர்ந்தார்.
“என்னாச்சுமா, திடீர்னு அப்படியே விழுந்துட்டிங்க… நல்லவேள, இந்தப் பொண்ணு வந்து தாங்கிகிச்சு…”
“தல சுத்திருச்சு அதான்…” என்றதும் மற்றவர் செல்ல, நன்றியுடன் அந்தப் பெண்ணை பார்க்க புன்னகைத்தாள்.
பளிச்சென்ற அழகுடன் அன்று மலர்ந்த தாமரை போல் தனை நோக்கி சிரித்தவளின் அழகு மனதை சுண்டி இழுக்க அவள் கையைப் பற்றியவர், “ரொம்ப நன்றி மா… உன்னை இதுக்கு முன்னாடி இங்க பார்த்ததில்லையே… புதுசா…” என்று கேட்க சிரித்தாள்.
“பர்ஸ்ட் டைம் இவிடே… இப்போ எங்கனே உண்டு ஆன்ட்டி…” அவள் கேட்டது சரியாய் புரியாவிட்டாலும் குத்துமதிப்பாய் புரிந்து கொண்டவர், “பரவால்ல மா… நீ மலையாளியா…” என்று கேட்க தலையாட்டினார்.
“ஓ… நீ ரொம்ப சுந்தரியாருக்க… பேரெந்தா, எனக்கு கொஞ்சம் மலையாளம் அறியாம்…” என்றதும் சிரித்தாள்.
“நான் வானதி, ஆன்ட்டி ஒற்றைக்கு வீட்டிலேக்கு போண்டா… யாரெங்கிலும் வந்து கூட்டிட்டு போவான் பர…” என்றாள்.
(ஆன்ட்டி தனியா வீட்டுக்குப் போக வேண்டாம்… யாரையாவது வந்து கூட்டிட்டுப் போக சொல்லுங்க…)
“என்னது, உன் பேர் வானதியா…” என்று அதிசயமாய் தனைப் பார்ப்பவரைக் கண்டு வானதி குழம்பினாள்.
“ஆமா ஆன்ட்டி… எனி பிராப்ளம்…”
“பிராப்ளமா… சேச்சே… சந்தோஷம்…” என்றவர், “நீ யாரு வீட்டுக்கு வந்திருக்கே மா…” என்றார்.
“ப்ச்… அது ஒரு கதை ஆன்ட்டி… ஆத்யம் நிங்கள் போன் செய்து யாரெங்கிலும் வரான் பரயு…”
“ம்ம்…” என்றவர் மகன் தூங்கிக் கொண்டிருப்பான் என்று கணவரின் அலைபேசிக்கு அழைத்தார்.
“சொல்லு சகு…” கரகரப்பான குரலில் எதிர்முனை ஒலிக்க, தான் மயங்கி விழுந்ததை சொல்லவும் அவரிடம் பதட்டம் தொற்றிக் கொள்ள உடனே கிளம்பி வருவதாய் சொன்னார்.
“என் ஹஸ்பண்ட் வரேன்னு சொன்னார் மா… கொஞ்ச நேரத்துல வந்திருவார்… நீ யாருன்னு இன்னும் சொல்லலியே…” என்றார் கதை கேட்கும் ஆர்வத்துடன்.
“நான் இவிடே ஜெயந்தி டாக்டரைக் காணான் வந்ததா…” (நான் இங்க ஜெயந்தி டாக்டரைப் பார்க்க வந்தேன்…) அவள் சொல்லவும் அவர் முகத்தில் திகைப்பு தெரிந்தது.
எங்கேயோ தொலைந்த
கனவுகளின் மிச்சங்கள்
மனதின் மூலையில்
நிசப்தமாய் உறங்கிக்
கொண்டு தானிருக்கிறது…
அதற்கான பாஷைகளால்
உணர்த்தப்படும் வரை…

Advertisement