Advertisement

அத்தியாயம் – 2
சுகமான காற்று இதமாய் தாலாட்ட தொட்டில் போல அசைந்தாடி சென்று கொண்டிருந்த பேருந்து சட்டென்று சடன் பிரேக்கிட்டு நிற்கவும் உறக்கம் கலைந்த பயணிகள் திடுக்கிட்டனர்.
முன்னில் வேகமாய் சென்ற சரக்கு லாரி ஒன்று நடுவில் இருந்த டிவைடரில் தட்டி நின்று கொண்டிருக்க அதன் பின்னில் வந்த வண்டிகள் சட் சட்டென்று பிரேக்கிட்டன. நல்ல உறக்கத்தில் இருந்த அருள்மொழி வர்மன் திடுக்கிட்டு விழிக்க வானதி அரக்கப் பறக்க எழுந்து ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதிகாலை மூன்று மணியின் இருட்டு விடியலைக் காத்திருக்க நின்றிருந்த வண்டிகளின் வெளிச்சம் அதை விரட்ட முயன்று கொண்டிருந்தது. கண்ணைக் கசக்கிக் கொண்டு வெளியே பார்த்தவன் வானதி ஜன்னல் வழியே பார்ப்பதைக் கண்டு அவளிடம் கேட்டான்.
“என்னாச்சு…” அவன் குரலில் திரும்பியவள் உதட்டைப் பிதுக்கி, “ஆக்சிடன்டா தோணுந்து…” எனவும் அதற்குள் பஸ்சிலிருந்த பயணிகள் கீழே இறங்கி என்னவென்று பார்க்க விரைந்து கொண்டிருந்தனர்.
லக்கேஜ் இருப்பதால் போகலாமா, வேண்டாமா என அவன் யோசித்துக் கொண்டிருக்க, வானதி வேகமாய் கீழே இறங்கி அங்கிருந்த மலையாளிப் பெண் ஒருத்தியிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் திரும்பி வந்தவள் பெருமூச்சுடன் தனது இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
என்னவென்று அவளிடம் கேட்கலாமா என அவன் யோசிக்க, “பாவம் டிரைவர், உறக்கக் கலக்கத்தில் டிவைடரில் கொண்டு இடிச்சு தோணுந்து…” அவளே சொல்லவும் கவனமாய் கேட்டதால் அவனுக்குப் புரிந்தது.
“ஓ… யாருக்காச்சும் அடி பட்டிருக்கா…”
“ம்ம்… டிரைவர்க்கு நல்ல அடி… ஆம்புலன்ஸ் வரணம்…”
“ம்ம்…” அவன் அமைதியாக சில நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது. அடி பட்டவர்களை எடுத்துக் கொண்டு விரைய, பயணிகள் அவரவர் இடத்தில் வந்து அமர்ந்தனர். சிறிது நேரத்தில் அங்கே எல்லாம் கிளியராகி இருக்க பேருந்து புறப்பட்டது.
மீண்டும் பயணிகள் நித்திரையைத் தொடர சிலர் மட்டும் உறக்கம் கலைந்து அமர்ந்திருந்தனர். ஐந்து மணிக்கு மீண்டும் ஒரு பெட்ரோல் பங்கில் பேருந்து நின்றது. வண்டி அரை மணி நேரம் அங்கே நிற்கும் என்றார் கண்டக்டர்.
அருள் எழுந்திருக்கவும், நெளிந்து கொண்டே அமர்ந்திருந்த வானதி தயக்கத்துடன் அவனை ஏறிட்டாள்.
“நான் பர்ஸ்ட் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரட்டே, ப்ளீஸ்…” முகமும் உதடும் சுளித்து அவள் சொன்னது அவளது அவசரத்தை சொல்ல தலையாட்டியவன் அமர்ந்திருந்தான்.
பத்து நிமிடத்தில் திரும்பி வந்தவள் முகம் கழுவி தலையை ஒதுக்கி பளிச்சென்று இருந்தாள்.
“தேங்க்ஸ், நிங்கள் போயிக்கோ…” அவள் சொல்லவும் எழுந்து சென்றவன் பாத்ரூம் சென்றுவிட்டு இரண்டு காபியுடன் பேருந்துக்கு திரும்பினான்.
அவளிடம் நீட்ட புன்னகைத்து “தேங்க்ஸ்…” சொல்லி வாங்கிக் கொண்டாள் வானதி. அமைதியாய் இருவரும் குடித்து முடித்தனர். வெளியே சென்றவர்கள் ஒவ்வொருவராய் அவரவர் சீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். டிரைவர் புகை இழுத்துக் கொண்டு கண்டக்டரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
சூரியன் கிழக்கு திசையில் கடமைக்குத் தயாராகிக் கொண்டிருக்க அதிகாலைக் காற்று சில்லென்று தேகம் தழுவி குளிர வைத்தது. “சென்னை எத்தர மணிக்கு போகும்…” வானதி கேட்கவும் வெளியே பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பினான்.
“என்ன கேட்டிங்க…”
“சென்னைக்கு பஸ் எப்ப ரீச் ஆகும் கேட்டது…”
“ஒன்பது மணி ஆகிடும்…” என்றான் அவன்.
“என்னது, ஒம்பதா… என்டே ஈஸ்வரா…” அவள் தலையைக் குலுக்கிக் கொள்ள அவன் கேட்டான்.
“எதுவும் எமர்ஜன்சி வொர்க்கா…”
“ஹா, அங்கனயும் பரயாம்… நிங்கள் சென்னையில் எவிடயா…”
“தாம்பரம்…” என்றதும் ஆச்சர்யமாய் ஏறிட்டாள்.
“தாம்பரம்… ஆஹாங், நானும் அங்கோட்டு தன்னே…” என்றவள் மலர்ச்சியுடன் அடுத்த கேள்விக்குத் தயாராக, “ஓ…” என்றவன் மேலே பேச தயங்கி மொபைலை எடுத்து நோண்டத் தொடங்கினான்.
“தாம்பரத்தில் எவிடயா…” அவளது கேள்வியை கவனிக்காத போல மொபைலில் கவனமாய் இருக்க, அவனுக்கு பேச விருப்பமில்லை என்று புரிந்தவள் அமைதியானாள்.
சாலையில் காலை நேர பரபரப்பு தொடங்கியிருக்க பால் வண்டிகளும் இரு சக்கர வாகனங்களும் சாலையில் பறந்து கொண்டிருந்தது. அடுத்து பள்ளி வாகனங்களும் பணிக்கு செல்வோரின் வாகனங்களுமாய் சாலை நிறையத் தொடங்கியது. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த வானதி பிறகு அவனிடம் பேசவில்லை. சரியாய் ஒன்பது பத்துக்கு சென்னையைத் தொட்டு இயக்கத்தை நிறுத்திக் கொண்டது பேருந்து.
அதுவரை அமைதி காத்த பயணிகளுக்கு சட்டென்று இறங்க என்ன அவசரமோ முன்னில் போய் நின்று கொண்டிருந்தனர். வானதியும் தனது பாகை எடுத்துக் கொண்டு சுற்றிலும் பயப்பார்வை பார்த்துக் கொண்டே இறங்கினாள். அவளுக்குப் பின்னில் வந்த அருள்மொழி வர்மனும் தனது பேகைத் தோளில் போட்டுக் கொண்டு உற்சாகமாய் இறங்கினான்.
“அந்த சேச்சி அடுத்து ஏதாவது மலையாளத்தில் சம்சாரிக்கும் முன்னாடி இடத்தைக் காலி பண்ணுவோம்…” என நினைத்தவன் பைக்கை பார்க் செய்திருந்த டூவீலர் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். தனது பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கிப் பறந்தான்.
“அப்போ நினைச்சேன்… ஒண்ணு நீ என்னைக் கல்யாணம் பண்ணனும் இல்ல நீ கல்யாணமாகாமயே இருந்துடனும்னு…”
மல்லிகா மணிவண்ணனின் ஆன்கோயிங் தொடர் ஒன்றில்  ஆர்வமாய் மூழ்கி இருந்தார் சகுந்தலா. மொபைலை படிக்க வசதியாய் பிடித்துக் கொண்டு குனிந்த தலை நிமிராத குமரிப்பெண் போல் அடுக்களையில் நின்று கொண்டிருந்தவர் அடுத்து என்னவென்று படிப்பதற்குள் கணவரின் குரல் இடையிட்டு கதையோட்டத்தை தடைப்படுதியது.
“சகு, டிபன் எடுத்து வை…” பூஜையறையில் கணவரின் குரல் கேட்க, “சரிங்க…” குரல் கொடுத்தார் சகுந்தலா.
அடுப்பை பற்றவைத்து ஹார்லிக்ஸ் கலக்க பாலை சூடாக்க வைத்துவிட்டு ஒரு கையில் மொபைலில் மீதித் தொடரைப் வாசித்துக் கொண்டிருக்க மகளின் குரல் கேட்டது.
“என்னம்மா, டிபன் எடுத்து வைக்காம மொபைலை நோண்டிட்டு இருக்க… அப்பாகிட்ட சொல்லட்டுமா…”
கிண்டலாய் கேட்ட மகளிடம் முறைப்புடன் திரும்பியவர், “மகளாடி நீ… இல்ல, நீ எனக்கு மகளான்னு கேக்கறேன்… என் மாமியார் கூட இப்படில்லாம் என்னை விரட்டினதில்லை… நான் இப்பதான் மொபைல கைல எடுத்தேன்… அதுக்குள்ள பொறுக்கல… போ, போயி டேபிள்ள உக்காரு… கொட்டிக்க எடுத்திட்டு வரேன்…” என்றவர் தோசைக்கல்லை அடுப்பில் சிம்மில் வைத்துவிட்டு ஹார்லிக்ஸை கலக்கினார்.
ஆவி பறக்கும் இட்லியோடு இரண்டு வகை சட்னியும் காத்திருக்க இடுப்பில் வேஷ்டி, மார்பில் ஒரு துண்டுடன் வந்தமர்ந்தார் சகுந்தலாவின் கணவர் சுந்தரம்.
அவருக்கு தட்டை வைத்து இட்லி, சட்னியைப் பரிமாற, “அருள் போன் பண்ணினானா…” என்றார் சாப்பிட்டுக் கொண்டே.
“ஆமாங்க, கொஞ்ச நேரத்துல வந்திருவேன்னு சொன்னான்…” என்றார் சகுந்தலா.
“அப்பா என்னை காலேஜ்ல டிராப் பண்ணிடறீங்களா…” மகள் கேட்கவும், “ம்ம்… என்றவர் இட்லியில் கவனம் வைத்தார். அவளுக்குத் தட்டை வைத்து இட்லியை வைக்க முகம் சுளித்தாள் குந்தவை.
“இன்னைக்கும் இட்லிதானா…” என்பது போல் அன்னையை பார்த்தாலும் தந்தை இருந்ததால் கேட்கவில்லை. குழந்தைகளுக்கு தந்தையிடம் உள்ள பயம் தெரியுமாதலால் மகளை நோக்கி பழிப்புக் காட்டினார் சகுந்தலா.
சகுவின் கை மணத்தில் இட்லி பஞ்சு போல இருக்க திருப்தியாய் சாப்பிட்டவர் எழுந்தார். நல்ல ஒரு மனைவிக்கு கணவனின் வயிற்றை முதலில் நிரப்பத் தெரிந்திருக்க வேண்டும்… அப்போதுதான் ஈஸியாய் அவர் மனதை நிரப்ப இயலும்… சகுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
தந்தை சென்றதும், “இன்னும் ஒண்ணு வச்சுக்க குந்தவை…” என்ற அன்னையை முறைத்தவள், “பிடிக்காத இட்லியை ரெண்டு தின்னதே பெருசு… இதுல இன்னும் ஒண்ணா… போதும் போதும்…” என்றபடி எழுந்திருக்க, “உனக்கு வேணும்னா தோசை சுட்டுத் தரவா…” என்று ஆசை காட்டினார் அன்னை.
உடனே மலர்ந்தவள் வேகமாய் தலையாட்டி, “ம்ம்… சீக்கிரம் மா… அப்படியே சாரல் மாதிரி இட்லிப் பொடியை தூவி நெய் ஊத்திக் கொண்டு வாம்மா…” என்று கொஞ்சினாள் மகள்.
“ம்ம்… நல்லா நாக்கை வளர்த்து வச்சிருக்க… உன்னைக் கட்டிக்கப் போற வந்தியத்தேவன் எங்கிருந்து வரப் போறானோ…” சொல்லிக் கொண்டே தோசையை ஊற்ற, “இம்சை பண்ணாத மா… அந்தப் பேருல மட்டும் நீ எனக்கு மாப்பிள்ளை பார்த்தேன்னு வை… நான் அவ்வையாரே ஆனாலும் சரி, கல்யாணத்துக்கு மட்டும் சம்மதிக்க மாட்டேன்… படிக்கணும், படிக்கறது எனக்கும் பிடிக்கும் தான்… ஆனா பைத்தியமாகுற அளவுக்கு படிக்கக் கூடாது…”

Advertisement