Advertisement

“அம்மா, உங்களுக்கு என்னைப் பத்தி தெரியாதா… என் வாழ்க்கைல நடக்கற எதுவும் என் சுய விருப்பத்தோட நானே எடுக்கிற முடிவா இருக்கணும்னு நினைக்கறவன்… என் நம்பிக்கை இது வரைக்கும் எந்த விஷயத்திலும் பொய்த்துப் போனதில்லை… இந்தப் பொண்ணைத் தேர்வு பண்ண விஷயமும் அப்படித்தான்… அப்பாவோட வறட்டு பிடிவாதத்துக்கும், வீண் உருட்டல் மிரட்டலுக்கும் எல்லாம் அருள் வேணும்னா கட்டுப்படலாம்… ஆதி நிச்சயம் கட்டுப்பட மாட்டான்… நான் அவர் வார்த்தையை மீற நினைக்கல… என் வாழ்க்கையை நானே வாழணும்னு நினைக்கறேன்… அதேநேரம் எனக்கு உங்க விருப்பமும் ரொம்ப முக்கியம்… தயவுசெய்து புரிஞ்சுக்கங்கம்மா…” தெளிவாய் அதே நேரம் அழுத்தமாய் மனதிலுள்ளதை சொன்ன மகனை தவிப்பும் கவலையுமாய் பார்த்தார் சகுந்தலா.
“கடவுளே… என் மகனது விருப்பத்தை நான் புரிந்து கொள்வேன்… ஆனால் காதல் என்றாலே காத தூரம் ஓடும், வெறுப்பாய் பார்க்கும் இவன் தந்தையிடம் எப்படி இதைப் பற்றி சொல்லுவேன்…” கவலையுடன் யோசித்தார்.
“ஆதி, நீ சொல்லுறது எனக்குப் புரியுது… இதுவரைக்கும் உன் தீர்மானம் எதுவும் தப்பாப் போனதில்லை… இந்தப் பொண்ணும் உனக்கு சரியான தேர்வா இருக்கலாம்… ஆனா அப்பா ஒத்துக்க மாட்டாரேடா…” கையைப் பிசைந்தவர் முகத்தில் கவலையோடு பயமும் தெரிந்தது.
“அம்மா, இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு நான் அவளுக்கு வாக்கு கொடுத்துட்டேன், இப்ப கூட உங்க சம்மதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கா… என் வாக்கு எப்பவும் பொய்யாகாது… அப்பாக்கு இது பிடிச்சா எல்லார் சம்மதத்தோடவும் எங்க கல்யாணம்… இல்லேன்னா உங்க ஆசிர்வாதத்தோட நாங்களே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்…” அவன் சாதாரணமாய் சொல்லவும் சகுந்தலா கோபத்துடன் ஏறிட்டார்.
“என்னடா பேசற… இத்தனை வருஷம் உன்னோட நல்லது கெட்டது பார்த்து, எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லபடியா வளர்த்து, இப்ப நாலு காசு நீ சொந்தமா சம்பாதிக்கத் தொடங்கினதும் அப்பா சம்மதம் முக்கியம் இல்லாமப் போயிருச்சா… உனக்கு உன் ஆசைகளும், அபிப்ராயமும் பெருசா இருக்கலாம்… அதுக்காக பெத்தவரோட விருப்பம் முக்கியம் இல்லேன்னு நினைக்கற அளவுக்கு நீ பெரியவன் ஆகிட்டியா… எனக்கு உன்னைப் பிடிக்கும் தான்… உன் ஆசைகள் முக்கியம் தான்… ஆனா, அவரை மீறி எப்பவும் நான் யோசிக்க மாட்டேன்…” கண்ணில் நீர் பொங்க படபடப்புடன் ஆவேசமாய் பேசிய சகுந்தலா வாசலில் இருந்து கை தட்டும் ஓசை கேட்டதும் திகைத்து நிமிர்ந்தார்.
உள்ளே வந்து கொண்டிருந்த சுந்தரத்தின் முகம் சோர்ந்து வாடிப் போயிருந்தது.
“சபாஷ்… பையன் சொல்லுற எல்லாத்துக்கும் ஆமாம் போடுவியே… இந்த விஷயத்துலயும் அவன் ஆசையை தான் பெரிசா மதிப்பன்னு நினைச்சேன்… பரவால்ல… இத்தனை வருஷம் உன்னோட குடும்பம் நடத்தினதுல என் மேலயும் கொஞ்சம் மரியாதை வச்சிருக்கேன்னு புரிஞ்சுகிட்டேன்…” சுருங்கிப் போன முகத்துடன் வேதனையோடு தன்னிடம் சொல்லும் கணவனைக் கண்ணீருடன் பார்த்தார் சகுந்தலா.
“என்னங்க, இப்படி சொல்லறிங்க… நீங்கதான் எனக்கு முதல்ல… பிள்ளைங்க எல்லாம் அப்புறம் தான்… உங்களுக்கு மரியாதை கொடுக்காத ஒரு விஷயத்தை நான் பெத்த மகனே சொன்னாலும் எப்படி சம்மதிப்பேன்…” என்றார் தழுதழுத்த குரலுடன்.
“ம்ம்… அந்த வரைக்கும் எனக்கு நல்ல பொண்டாட்டியா இருக்கியே… சந்தோஷம்…” என்றவர் அன்னை சொன்ன வார்த்தைகளை இப்போதும் நம்ப முடியாமல் திகைத்து அதிர்ச்சியில் நிற்கும் பெரிய மகனை ஏறிட்டார்.
“அப்ப, சாருக்கு எங்க சம்மதம் தேவையில்லை… சரி, எப்ப கல்யாணம்…” அவர் கோபப்படாமல் நிதானமாய் கேட்கவும் ஆதியே சற்று கலங்கிப் போனான்.
“அப்பா, அது வந்து… நீங்க சம்மதிக்கலேன்னா தான் அப்படி சொன்னேன்… எனக்கு அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்குப்பா… அவளும் என் மேல உயிரா இருக்கா… ஒரே ஆபீஸ்ல வொர்க் பண்ணறோம்… ரொம்ப நல்ல பொண்ணுப்பா… நீங்களே அவ போட்டோ பாருங்க… உங்களுக்கும் பிடிக்கும்…” என்றவன் வேகமாய் அவளது  புகைப்படத்தை எடுத்துக் காட்ட அமைதியாய் அதில் கண்ணைப் பதித்தார் சுந்தரம்.
அவர் மனதுக்குள் கோபத்தின் கனல் கனன்று கொண்டிருக்க முகத்தில் அதன் ஜுவாலைகள் மெல்ல சுடர் விட்டுக் கொண்டிருந்தன.
“நீதான் அந்தப் பெண்ணா…” என்பது போல் அதையே சுந்தரம் பார்த்து நிற்க சகுந்தலா கூட ஒருவேளை இவர் சம்மதித்து விடுவாரோ என மனதுக்குள் சந்தோஷித்தார். மெல்ல மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் அன்னையாய் கணவனிடம் பேச்சுக் கொடுத்தார்.
“என்னங்க, அவன் ஏதோ ஆசைப்பட்டுட்டான்… நல்ல பொண்ணுன்னு வேற சொல்லறான்… கல்யாணத்துல அவன் விருப்பம் தானே முக்கியம்… நாமளே இந்தக் கல்யாணத்தை நடத்திக் கொடுத்திட்டா என்ன…” மகனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கணவரிடம் சொன்னார் சகுந்தலா.
சட்டென்று மனைவியை நோக்கித் திரும்பிய சுந்தரத்தின் கண்களில் கோபம் கொண்ட சர்பத்தின் சீறல் தெரிந்தது. அதைக் கண்டு அதிர்ந்து போனவர் மீண்டும் வாயை மூடிக் கொண்டார்.
மகன் சொன்ன விதம் பிடிக்காமல் கணவனுக்காய் வெகுண்டாலும், அன்பான அன்னையாய் மகனின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுக்கவும் அவரது மனம் தவித்தது. கணவனின் அமைதி கண்டு சந்தோஷித்தவர் அது சூறாவளிக்கு முன் வரும் பேரமைதி எனப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டார். அன்னை இனி சப்போர்ட்டுக்கு வர மாட்டார் எனப் புரிந்து கொண்ட ஆதித்யன் அவனே தந்தையிடம் பேசினான்.
“அப்பா, நான் சொல்லறேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க… இப்ப எல்லாம் லவ் மேரேஜ் சர்வ சாதாரணம் ஆகிடுச்சு… நீங்க தான் இன்னும் பழைய காலத்து அப்பாக்கள் போல அதை கெட்ட விஷயமாப் பாக்கறீங்க… கல்யாணத்துக்கு முக்கியமா கட்டிக்கப் போறவங்க மனசு பொருத்தப்படனும்… எங்களுக்கு அது இருக்கு… என் விருப்பத்தைப் புரிஞ்சுகிட்டு நல்லபடியா கல்யாணத்தை நடத்திக் கொடுங்கப்பா…” சற்று தன்மையாகவே தந்தையிடம் உரைத்தான் ஆதித்யா.
அவனை ஒரு பார்வை பார்த்தவர் பதில் சொல்லாமல் சட்டென்று அறைக்கு சென்றுவிட கையைப் பிசைந்து கொண்டு மகனைப் பார்த்தார் சகுந்தலா.
“என்னடா ஆதி… அப்பாவைப் பத்தி தெரிஞ்சும் இப்படி ஒரு இக்கட்டுல என்னை நிறுத்திட்டியே டா…” கலக்கத்துடன் சொல்லிக் கொண்டே கணவனை சமாதானப்படுத்த சென்றார்.
ஆதித்யன் பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டே அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தான்.
அருளும், குந்தவையும் மாலையில் வீடு திரும்பிய போது வீட்டுக்குள் நிறைந்திருந்த நிசப்தம் ஆச்சர்யமாய் இருந்தது. ஆதி வீட்டில் இருந்தால் டீவி சத்தமோ, அன்னையுடன் பேசும் சத்தமோ நிச்சயம் இருக்கும்… இன்று எதுவும் இல்லாமல் அவன் அறைக்குள் அடைந்திருக்க, அழுது கலங்கிய முகத்துடன் படுத்திருந்தார் சகுந்தலா.
கணவருடனான சமாதான முயற்சிகள் தோல்வியைத் தழுவ, கோபத்துடன் அவர் கிளம்பி செல்ல மகனின் பிடிவாதம் உணர்ந்து கவலையுடன் அழுது கொண்டிருந்தார்.
அவரைக் கண்டு பதறிப் போன அருளும், குந்தவையும் என்னவென்று கேட்க ஆதியின் காதலைப் பற்றியும், தந்தை கோபப்பட்டதையும் சொல்லி மீண்டும் அழ அவர்களும் அதிர்ந்து நின்றனர்.
“நான் அப்பவே சொன்னேன்ல, அண்ணா நிஜமாதான் சொல்லி இருக்கான்…” அருளிடம் அவள் கிசுகிசுக்க, “ப்ச்… சும்மாரு…” என்று தங்கையை அதட்டி மாடிக்கு சென்றான்.
இரவு கிளம்புவதற்காக உடைகளை பாகில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த ஆதித்யா திரும்பினான்.
“அண்ணா… இன்னைக்கு கிளம்பனுமா…” அருள் கேட்க, “ம்ம்… டிக்கட் எல்லாம் போட்டிருக்கனே… கிளம்பிதான் ஆகணும்…”
“அம்மா பாவம், ரொம்ப அழறாங்க…” வருத்தத்துடன் ஒலித்த தம்பியின் குரலில் அவனுக்கும் விஷயம் புரிந்து விட்டதை உணர்ந்தவன், “ம்ம்…” என அதில் வேதனை தெரிந்தது.
“உன் முடிவை நீ மாத்திக்கக் கூடாதா…”
“அப்பாவோட வெட்டி வீராப்புக்கு என் காதலை பலி கொடுக்க முடியாது… அவளுக்கு வாக்கு கொடுத்திருக்கேன்…”
“அப்ப அம்மா…” என்ற சின்னவனின் கேள்விக்கு சற்று மௌனித்தான் ஆதித்யன்.
“அம்மா எனக்கு ரொம்ப முக்கியம் தான்… ஆனா, நந்தினியும் முக்கியம்…” என்றான் அழுத்தமாக.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த குந்தவை, “அப்பா சம்மதிக்காம எப்படிண்ணா நடக்கும்… நாங்க யாரும் உன் கல்யாணத்துக்கு வேண்டாமா…” என்றாள் வருத்தத்துடன்.
“எனக்கு எல்லாரும் வேணும்தான்… அதுக்காக நந்தினியை வேண்டாம்னு சொல்ல முடியாது…” என்றான் உறுதியாக.
“அப்பாவைப் பத்தி தெரிஞ்சும் இப்படிப் பேசினா எப்படிண்ணா… அந்தளவுக்கு உன் மனசுல இடம் பிடிச்ச அவங்க போட்டோவைக் காட்டு…” என்றாள். அண்ணனின் மனதைக் கவர்ந்த நந்தினியைக் காணும் ஆவலுடன்.
“ம்ம்… இப்பதான் என் தங்கை…” சிரிப்புடன் சொன்னவன் ஒரு கவரை எடுத்து நீட்டினான். அதில் விதவிதமாய் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் நந்தினி. முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் மிச்சமிருக்க துடைத்து வைத்த குத்துவிளக்கைப் போல பளிச்சென்று இருந்தவளின் முகம் கண்ணிலேயே ஒட்டிக் கொண்டது.
இழந்து விட்ட
ஏதோ ஒன்றிற்காய்
இருக்கின்ற வாழ்க்கை
இரையாக
வாழ்வின் அர்த்தம்
தொலைத்து
எதார்த்தங்களை
ஏற்றுக் கொள்ள
மறுக்கிறது மனம்…
காலத்தின் சுழற்றியில்
சுழலியில் சிக்கிய
சிறு இறகாய் சிக்கித்
தொலைந்து போகிறது…

Advertisement