Advertisement

அத்தியாயம் – 18
“அண்ணா, இன்னைக்கு நீங்க என்னை ஸ்கூல்ல விடறீங்களா…” குந்தவை ஆவலுடன் ஆதித்யனிடம் கேட்க லாப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.
இரட்டைப் பின்னலுடன் யூனிபார்மில் குழந்தை முகம் மாறாமல் நின்ற தங்கையைக் கண்டவன், “ஓகே…” என்று லாப்டாப்பை மூடி வைக்க சகுந்தலா மகளிடம் கேட்டார்.
“அவனை எதுக்குடி டிஸ்டர்ப் பண்ணற… பாவம் என் புள்ள… நைட் ஊருக்கு கிளம்பிருவான்… எப்பவும் போல உன் சின்ன அண்ணன் கூடப் போக வேண்டியது தான…”
“போங்கம்மா, அருள் அண்ணா பாதி சாமியார் மாதிரி… என்னவோ, பொண்ணுங்களையே தலை நிமிர்ந்து பார்க்க மாட்டேன்னு சபதம் போட்டு வந்த மாதிரி கேட்டுக்கு கொஞ்சம் தள்ளியே என்னை இறக்கி விட்டுட்டுப் போயிருவான்… ஆதி அண்ணா தான் கெத்து… அவரோட போனா செம மாஸ் தெரியுமா…” சொன்ன தங்கையை ஆதி புன்னகையுடன் பார்க்க சகுந்தலா,
“போதும், போதும்… நீ சொன்னது மட்டும் அருளு காதுல விழுந்துச்சு… அப்புறம் நாளைக்கு நீ பஸ்ல தான் போகணும்… அவனுக்கு கூச்ச சுபாவம்… பொண்ணுங்களைப் பார்த்தா எட்டி நிக்கறான்… அதுக்கு இப்படி எல்லாம் சொல்லுவியா…”
“போம்மா, ஆதி அண்ணா ஓட்டின அதே பைக் தானே அருள் அண்ணாவும் ஓட்டறான்… அவர் ஓட்டும்போது எப்படி ஸ்பீடா, ஸ்டைலிஷா ஓட்டுவார் தெரியுமா… உன் செல்லப் பிள்ளையும் தான் ஒட்டுறாரே…” மகள் மீண்டும் கிண்டலடிக்க, “மெதுவா வண்டி ஓட்டுறது நல்லது தானே…” என்று பரிந்து பேசினார் சகுந்தலா.
“ஹூக்கும், பிள்ளையை விட்டுக் கொடுக்க மாட்டியே…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுந்தரம் தயாராகி வர இருவரும் வாயை மூடிக் கொண்டனர்.
“ஆதி, நீ எப்ப கிளம்பற…”
“நைட் பஸ்ல புக் பண்ணிருக்கேன் ப்பா…”
“ம்ம்…” என்றவர், “குந்தவை, உன் ஸ்கூல் பக்கம் தான் ஒரு சைட்டுக்குப் போறேன்… நான் டிராப் பண்ணிடறேன்…” என்றதும் அவள் முகம் பொசுக்கென்று போனது.
“ம்ம்… சரிப்பா…” என்று உதடுகள் சொன்னாலும் கண்களில் ஏமாற்றத்துடன் அண்ணனை நோக்க, “அப்பா, நானும் ஒரு வேலையா பைக் எடுத்திட்டு வெளிய கிளம்பறேன்… குந்தவையை நான் டிராப் பண்ணிடறேன்… நீங்க அருளை டிராப் பண்ணிடுங்க…” என்றவன் அவரது பதிலுக்காய் காத்திருக்காமல், “கிளம்பலாமா…” என்று தங்கையிடம் கேட்க பலமாய் தலையாட்டினாள் அவள்.
அருளும் அதற்குள் புறப்பட்டு வர, “அருள்… நீ அப்பாவோட கிளம்பிக்க… நான் பைக் எடுத்திட்டுப் போறேன்…” என்றவன் சாவியை சுழற்றிக் கொண்டே வாசலுக்கு செல்ல குந்தவை பாவமாய் நின்ற அருளிடம் பழிப்பு காட்டிக் கொண்டே மூத்த அண்ணன் பின்னில் நடந்தாள்.
“ஏன் சகு, உன் பிள்ளை மாறவே மாட்டானா… என்கிட்டே அருளைக் கூட்டிட்டுப் போங்கன்னு ஆர்டர் போட்டுட்டு பதிலைக் கூட எதிர்பார்க்காம அவன் பாட்டுக்குப் போறான்… கொஞ்சம் கூட மரியாதை இல்லாம என்ன வளர்ப்போ…” என்று மனைவியையும் குட்ட, “சரி விடுங்க… எப்பவாச்சும் வரான், பிள்ளையைத் திட்டாதிங்க… குந்தவை தான் ஆசைப்பட்டு கேட்டா…” என்று சமாதானம் சொன்னார்.
“ம்ம்… அவளையும் அவனைப் போல சொல்பேச்சு கேக்காதவளா மாத்திடப் போறான்… பார்த்துக்க…” என்று அதற்கும் ஒரு பதிலை சொல்லிவிட்டு,
“என்னடா, உனக்கு எதுவும் அபிப்ராயம் இருக்கா… இல்ல, என்னோட வர்றியா…” என்று இளைய மகனிடம் கேட்க, “இதோ வந்துட்டேன்ப்பா…” என்று அடுத்த நொடியே அவர் முன்னில் தயாராய் நின்றான் அருள்.
“ம்ம்… ஏதோ, இவனாச்சும் என் பேச்சைக் கேக்கறவனா இருக்கானே… அதுவரைக்கும் சந்தோஷம்…” என்று அவர் நொடிந்து கொண்டு வாசலுக்கு நடக்க சகுந்தலாவின் முகம் வாடியது.
“அப்பா, எப்பவும் இப்படித்தான மா… இதுக்கெல்லாம் பீல் பண்ணாதிங்க…” சொல்லி அன்னையின் தலையில் செல்லமாய் முட்டிவிட்டு செல்லும் இளைய மகனின் நேசத்தில் அவர் மனம் நெகிழ்ந்தது.
முன்னவன் அடாவடி என்றால் பின்னவன் அமைதி… தந்தையின் அதட்டலுக்கு பெரியவன் அடிபணியாமல் நின்றாலும் சின்னவன் அவரையும் புரிந்து கொண்டு அனுசரித்துப் போவான். ஆனால் இருவருக்கும் அன்னை மீது கொள்ளைப் பிரியம் இருந்தது.
அவர்கள் கிளம்பியதும் ஆதிக்கு பிடித்த இனிப்பு அப்பம் செய்து முடித்து மதிய சமையலைத் தொடங்க ஆதியின் பைக் சத்தம் வாசலில் கேட்டது.
“ம்ம்… என்னம்மா நெய் வாசம் தூக்கலா இருக்கு…” கேட்டுக் கொண்டே அடுக்களைக்கு வந்தவன் பாத்திரத்தில் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இனிப்பு அப்பத்தைக் கண்டதும், “வாவ், சூப்பர்மா…” சொல்லிக் கொண்டே அதை எடுக்க வர, “முதல்ல கையைக் கழுவு டா…” அதட்டினார் அன்னை.
“ப்ச்… சாப்பிட்டு எப்படியும் கழுவத்தானே போறேன்…” சொன்னாலும் கை கழுவி அன்னையின் முந்தானையில் உரிமையுடன் துடைத்துவிட்டு ஆவலுடன் அப்பத்தை எடுத்துக் கொண்டான்.
“ம்ம்… சூப்பர்மா… என்னதான் இதெல்லாம் கடைல கிடைச்சாலும் நீங்க செய்யற போல வருமா… இதுல அம்மா ஸ்பெஷலும் கலந்திருக்கே…” சொல்லிக் கொண்டே ருசித்து சாப்பிட்ட மகனை நோக்கிப் புன்னகைத்தவர், “அதுல என்னடா ஸ்பெஷல் கலந்திருக்கேன்… எல்லாரும் செய்யறது போலத்தான்…” என்றார் சகுந்தலா. “இல்லமா, இதுல என் அம்மாவோட அன்பும் அக்கறையும் கலந்திருக்கு… அதான் இவ்ளோ ருசி…” சொன்ன மகனை நெகிழ்வுடன் பார்த்தார்.
“உனக்கு நான் என்ன செய்தாலும் ஸ்பெஷல் தான், போடா…” செல்லமாய் அலுத்துக் கொண்ட அன்னையை பின்னிலிருந்து அணைத்துக் கொண்டவன், “இந்த அன்பான அம்மாக்கு நானும் ஒரு ஸ்பெஷல் கொடுக்கணும்னு நினைக்கறேன்…” சொல்லிக் கொண்டே அவரது வாயிலும் அப்பத்தை வைக்க, “நீயே எனக்கு பெரிய ஸ்பெஷல் தான் டா… இன்னும் பெருசா என்ன ஸ்பெஷலைக் கொடுத்திடப் போற…” கேட்டுக் கொண்டே சமையலை முடித்து அடுப்பை அணைத்தார்.
அடுக்களைத் திண்டில் அமர்ந்து அப்பத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் மீண்டும் ஒரு அப்பத்தை எடுக்க, “மதியம் சாப்பிட முடியாதுடா… போதும்…” என்றார் அன்னை.
“சாப்பாடு எப்பவும் தானே சாப்பிடறோம்… இது ஸ்பெஷல்…” என்று அவன் சொல்லவும் கையைத் துடைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவர், “நீ ஏதோ எனக்கு ஸ்பெஷல் தர்றேன்னு சொன்னியே… சீக்கிரம் கொண்டு வா…” என்று கூறியவர் “உஸ்ஸ்… என்று கழுத்தில் வியர்வையைத் துடைத்துக் கொண்டு மின்விசிறியை சுழலவிட்டு சோபாவில் அமர்ந்தார்.
அவனும் அருகே வந்து அன்னை மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்ள, “இதென்னடா, தாடி மீசை எல்லாம் இவ்ளோ வளர்த்தி வச்சிருக்க… கொஞ்சம் ட்ரிம் பண்ணலாம்ல…” என்றார் தலையைக் கோதிக் கொண்டே.
“இதான்மா இப்ப பேஷன்…” அவன் சொல்லவும், “என்ன பேஷனோ… தாடிக்குள்ள மூஞ்சியைத் தேட வேண்டி இருக்கும் போலருக்கு… சரி ஏதோ ஸ்பெஷல்னு சொன்ன… எங்கே எடுத்திட்டு வா…” என்றார் ஆர்வத்துடன்.
எழுந்து அமர்ந்தவன், “அம்மா… ஒரு நிமிஷம், கண்ணை மூடுங்களேன்…” என்றான்.
“எதுக்கு டா… கண்ணை மூடினா நான் எப்படிப் பார்ப்பேன்…” அவர் கேட்க, “ப்ச்… பண்ணுங்க மா…” என்றான் மகன்.
“சரி…” என்றவர் கண்ணை மூடிக் கொள்ள, வேகமாய் மாடிக்கு சென்று ஒரு கவரை எடுத்து வந்தவன் அதைப் பிரித்து அதிலிருந்த புகைப்படத்தை வெளியே எடுத்தான்.
“ம்ம்… இப்ப கண்ணைத் திறங்கம்மா…” என்றதும் திறந்தவர் முன்னில் பளிச்சென்று பல விதமாய் சிரித்துக் கொண்டிருந்த அழகான பெண்ணின் புகைப்படத்தைக் கண்டு திகைத்தார்.
“யா..யாருடா இந்தப் பொண்ணு…” மனதுக்குள் ஒரு கலக்கம் நிறைய மகனிடம் கேட்டார்.
பதில் சொல்லாமல் சிரித்தவன், “அழகா இருக்காளா… இதான் உங்களுக்கு நான் கொடுக்கறேன்னு சொன்ன ஸ்பெஷல்…” என்றதும் அவருக்குள் மெல்ல திகில் படர்ந்தது.
“ஆதி, விளையாடாம விஷயத்தை சொல்லு… இந்தப் பொண்ணு யாரு… எங்கிட்ட எதுக்கு காட்டற…”
“இவதான் உங்களுக்காக நான் பார்த்திருக்கிற மருமக… பிள்ளைக்கு பொண்ணு தேடற வேலையை கூட உங்களுக்கு மிச்சம் பண்ணிக் கொடுத்திருக்கேன்…”
“ஆதி, என்னடா சொல்லற…” அதிர்ச்சியுடன் கேட்டார்.
அவர் முகத்தைக் கண்டவன் சீரியஸாகி, “ஆமாம் மா, இந்தப் பொண்ணை நான் லவ் பண்ணறேன்… இவளும் என்னோட கம்பெனில தான் பெங்களூருல வொர்க் பண்ணறா… பார்த்ததுமே பிடிச்சிருச்சு… பழகப் பழக ரொம்பப் பிடிச்சுது… ரொம்ப நல்ல, அன்பான பொண்ணு… நம்ம குடும்பத்துக்கு நிச்சயம் நல்ல மருமகளா இருப்பா… அவ அழகைப் பார்த்து எல்லாம் நான் விரும்பத் தொடங்கல… குடும்பத்து மேல ரொம்ப பாசம் உள்ளவ… பேரு நந்தினி…”
மகன் சொன்ன விஷயத்திலேயே இறுதியில் சொன்ன பெயர் மட்டும் அவருக்குப் பிடித்துப் போனாலும் கணவரைப் பற்றி யோசித்தவர் மனதில் அச்சம் பரவியது.
“ஆதி, அப்பாவைப் பத்தி நல்லாத் தெரிஞ்சிருந்தும் நீ இப்படிப் பண்ணலாமா… இதுக்கு அவர் நிச்சயம் சம்மதிக்க மாட்டார்…”
“எனக்கு தேவை அவரோட சம்மதம் இல்லமா, உங்களோட ஆசிர்வாதம் தான்…” உறுதியாய் ஒலித்தது மகனின் குரல். ஆனால் அன்னை மனமோ கலங்கத் தொடங்கியது.
அவர் அமைதியாய் மனதுக்குள் தவித்துக் கொண்டிருப்பதை கண்ட ஆதித்யன் அவர் அருகே அமர்ந்து அன்னையின் கையைப் பற்றிக் கொண்டான்.

Advertisement