Advertisement

“இல்லண்ணே… யாரையோ பார்க்கணும்னு வெளிய போயிருக்கான்… ஜூஸ் கொண்டு வரட்டுமா…” எனக் கேட்க, “இல்லம்மா, இப்பதானே சாப்பிட்டு வந்தேன்… கொஞ்சம் கழிச்சு தண்ணி மட்டும் போதும்…” என்றார்.
“ம்ம்… பிள்ளைகளைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிருச்சு… சகுந்தலாவைக் கூட ஒரு கல்யாண பங்க்ஷன்ல பார்த்தது… அவங்களையும் அப்பப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்ல…” என்ற தேவிகாவிடம், “எங்கேம்மா டைம் இருக்கு… எப்பவும் பிசினஸ் பத்தி யோசிக்கவே சரியா இருக்கு… கல்யாணம் முடிஞ்சிட்டா அப்புறம் போக வர இருக்கத்தானே போறோம்…” என்றார் சுந்தரம்.
“ஆமா, அந்த புது புரோஜக்ட் என்னாச்சு… ஸ்டார்ட் பண்ணிட்டியா…” என்றார் ராஜ்மோகன்.
“ம்ம், அது போயிட்டு இருக்கு… அது முடிஞ்சா நல்ல ஒரு தொகை கைல நிக்கும்…” அவர்கள் பிசினஸ் பேசத் தொடங்க தேவிகா எழுந்து உள்ளே சென்றார். ராஜ்மோகனும் சுந்தரமும் பால்ய கால நண்பர்கள்… சுந்தரத்தின் தந்தை டிராவல்ஸ் வைத்திருந்தார். இவர் பிறந்த சில ஆண்டிலேயே அன்னை இறந்துவிட மனைவியின் பிரிவில் மனமுடைந்த தந்தை பிசினஸை சரியாய் கவனிக்காமல் விட கடனுக்கு ஈடாய் தொழில், பணம் எல்லாவற்றையும் இழந்து நின்றனர்.
படித்துக் கொண்டிருந்த சுந்தரம் அதிக நேரமும் ராஜ்மோகனின் வீட்டிலேயே இருப்பார். சுந்தரத்தின் குடும்ப சூழல் அறிந்து அவனது படிப்புக்கு ராஜ்மோகனின் பெற்றோரே உதவி செய்தனர். எல்லாம் இழந்து வீடு கூட இல்லாத நிலை வந்தபோது அவரது தந்தையும் இறந்து போக படித்து முடித்த சுந்தரத்துக்கு நல்ல வேலை வாங்கிக் கொடுத்து உதவி செய்தார் ராஜ்மோகனின் தந்தை. சுந்தரமும் பொறுப்பாய் வேலைக்கு சென்று ஒரு இடத்தை வாங்கி வீட்டு வேலையைத் தொடங்கினார். ராஜ்மோகனின் பெற்றோரே சுந்தரத்துக்குப் பெண் பார்க்க சகுந்தலாவைக் கண்டதும் அவருக்குப் பிடித்துப் போனது. சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவரது பெற்றோர் சுந்தரத்தின்  குடும்ப சூழல் கண்டு பெண் கொடுக்கத் தயங்க ராஜ்மோகனின் தந்தை தனது உத்தரவாதத்தில் நல்லபடியே மணமுடித்துக் கொடுத்தார்.
மனைவியின் வரவும் அவரால் கிடைத்த பொருளாதாரமும் சுந்தரத்தின் வாழ்வில் மறுமலர்ச்சியைக் கொடுக்க கல்கி பில்டர்ஸ் உருவான பிறகு வாழ்வில் நல்ல முன்னேற்றம் வந்தது. ஆனாலும் பிறக்கும்போது வசதியில் பிறந்து, வளரும்போது பணமில்லாத சூழலில் மற்றவரின் கையை எதிர்பார்க்க வேண்டி வந்ததால் சுந்தரம் மனதில் பணமே வாழ்வில் பிரதானம் என்ற நம்பிக்கை பதிந்து விட்டது.
தன்னைப் படிக்க வைத்து, எல்லாம் இழந்து நின்றவனைக் கை பிடித்துத் தூக்கி விட்ட நண்பனின் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும், நன்றியும் சுந்தரத்துக்கு இருந்தது. எந்த விஷயமாய் இருந்தாலும் நண்பனிடம் தான் முதலில் ஓடிவருவார். தனது தொழில் முன்னேற்றத்துக்கு இப்போதும் ராஜ்மோகன் கொடுக்கும் ஆலோசனையும் ஆதரவும் நண்பன் மீது மிகுந்த மரியாதையைக் கொடுத்திருந்தது. இருவருக்கும் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவர் மற்றவர் மீது தங்கள் கருத்துகளை திணிக்க முயன்றதில்லை. இருவருக்குள்ளும் நல்ல புரிதலும், கருந்து சுதந்திரமும் இருந்ததால் இப்போதும் அவர்களின் நட்பு பலப்பட்டுக் கொண்டே இருந்தது.
உயர்வுக்காய் தளராமல் ஓடிக்கொண்டிருக்கும் சுந்தரத்தை, ராஜ்மோகனுக்கும் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட நண்பன் குந்தவையை அவர் வீட்டு மருமகளாய் கேட்கையில் சுந்தரம் எப்படி மறுப்பார்… மிகுந்த சந்தோஷத்துடன் சம்மதிக்கவே செய்தார்.
நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க அலுவகத்தில் இருந்து சுந்தரத்துக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அவர் விடைபெற்று அலுவலகம் கிளம்பிய சில நிமிடத்தில் உள்ளே வந்தான் தேவ்.
“எங்கடா கண்ணா போயிட்ட… இப்பதான் உன் மாமனார் வந்துட்டுப் போறார்…” என்றார் தேவிகா.
அதைக் கேட்டதும் ஆர்வத்தோடு அன்னையிடம் வந்தவன், “பார்றா.. இன்னும் கல்யாணமே முடிவு பண்ணலை… அதுக்குள்ள என் மாமனாரா… அப்பா, உங்க பிரண்ட்ஷிப்பை டைவர்ஸ் பண்ணிட்டிங்களா என்ன…” கேட்டுக் கொண்டே அவர் அருகில் அமர, “அடேய்… ஏண்டா எங்க பிரண்ட்ஷிப்ல கைய வக்கிற…” என்றார் அவர் புன்னகையுடன்.
“ஆமா… அங்கிள், உங்க மருமககிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டாரா… அவளுக்கு சம்மதமா…” என்று கேட்க,
“அதெல்லாம் சம்மதமா தான் இருக்கும்… இல்லேன்னா ஜாதகம் கொடுத்துட்டுப் போவாரா…” தேவிகா சொல்ல தேவ் மோகனின் மனதில் யோசனை அலையடித்தது.
“அம்மா, அதுக்கு முன்னாடி பார்மலா நாம பொண்ணு பார்க்கப் போனா என்ன…” என்றவனை வியப்புடன் நோக்கிய தேவிகா, “என்னடா மகனே, அதுக்குள்ளே என் மருமகளைப் பார்க்க ஆசை வந்திருச்சா… நாளைக்கு முதல்ல ஜோசியரைப் பார்ப்போம்… அப்புறம் மத்ததெல்லாம் தீர்மானம் பண்ணிக்கலாம்…” என்றார் அவர்.
“ஓகே…” என்று எழுந்தவன், “என்னப்பா, ஆபீஸ் போகாம வீட்ல உக்கார்ந்து அம்மாவோட கடலை போட்டுட்டு இருக்கீங்களா…” என்று சிரிப்புடன் கேட்க, “போடா டேய்… நீ கடல போட வேண்டிய வயசுல எங்களைக் கிண்டல் பண்ணிட்டு…” என்ற ராஜ்மோகனும் எழுந்து கொண்டார்.
“சரி தேவி, நானும் ஆபீஸ் கிளம்பறேன்…” சொல்லிவிட்டு கிளம்பிய கணவனை சந்தோஷமாய் நோக்கி நின்றார். கல்யாணம் முடிந்து வந்தது முதல் எந்த வருத்தமும் தராத அன்பான கணவன். நிறைவான வாழ்க்கை.
“என் மகனின் வாழ்க்கையும் இப்படி அமைதியா சந்தோஷமா இருக்கணும்… ஆண்டவனே…” என மனதில் வேண்டிக் கொண்டபடி உள்ளே சென்றார்.
தியேட்டரின் வாசலில் நின்ற டாக்ஸியில் இருந்து தோழிகள் மூவரும் இறங்கினர். வானதியின் கண்கள் தயக்கத்துடன் சுற்றிலும் நோக்க முன்னமே அங்கு வந்து காத்திருந்த அருள் புன்னகையுடன் அவர்களை நோக்கி வந்தான். மாலையில் தியேட்டருக்கு கிளம்பும்வரை வானதிக்கு அருளும் வரப் போகிறான் என்பது தெரியாது. மணிமேகலை நான்கு மணிக்கே தோழியின் வீட்டுக்கு வந்துவிட்டாள்.
கிளம்பும் நேரத்தில் “அண்ணா தியேட்டருக்கு வந்திருவான்… நாம டாக்ஸில போகலாம்…” என்று குந்தவை அவளிடம்  சொன்ன போதுதான் அவன் வருவதே வானதிக்கு தெரிந்தது. பிறகு வர மறுத்தால் நன்றாக இருக்காது என்ற காரணத்தால் அமைதியாய் கிளம்பினாலும் மனதின் ஓரத்தில் அவன் வருவது சந்தோஷத்தையும் மறுபக்கம் அவஸ்தையையும் கொடுத்தது. என்னதான் இது வேண்டாம், சரியாகாது என்று மூளை சொன்னாலும் மனம் விரும்பும் ஒன்றை அத்தனை சீக்கிரம் போ என்று ஒதுக்கிவிட முடிவதில்லை. அப்படி ஒரு போராட்டத்தில் தான் வானதியும் சிக்கிக் கொண்டிருந்தாள்.
அது ஒரு ஆங்கில பேய்ப் படம் என்பதால் இளசுகளின் கூட்டத்தோடு குழந்தைகளும் பெற்றோருடன் வந்திருந்தனர். குந்தவையும், மேகலையும் ஜீன்ஸ், குர்தி அணிந்திருக்க பளிச்சென்ற சிவப்பு நிற சுரிதாரில் கண்ணை நிறைத்த வானதி அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அருளின் பார்வை அவளை விட்டு வேறெங்கும் விலகுவேனா என்று அடம்பிடிக்க கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டான்.
முந்தைய காட்சி முடிந்து எல்லாரும் வெளியேற இவர்களை அழைத்துக் கொண்டு தியேட்டர் உள்ளே நுழைந்தான் அருள்.
குந்தவையும், மேகலையும் ஆர்வத்துடன் அருள் பின்னால் வர வானதி தயக்கத்துடனே பின்னில் தொடர்ந்தாள். மாடிப்படியேறி அவர்களுக்கான ஸ்க்ரீன் முன்னில் வந்து நின்றனர். கதவு முன்னில் இருந்த பரிசோதகரிடம் அருள் டிக்கட்டை நீட்ட வாங்கி கிழித்து கொடுக்க அதற்குள் குந்தவையும், மணிமேகலையும் முன்னில் நடக்க அவர்கள் பின்னே வானதி, இறுதியாய் அருள் உள்ளே நுழைந்தான்.
சீட் எண்ணைப் பார்த்துக் கொண்டு வந்த குந்தவை நடுவில் இருந்த பகுதியில் அவர்கள் இருக்கை எண் தொடங்க ஓரமாய் இருந்த சீட்டில் அவள் அமர்ந்து கொள்ள அவளைத் தொடர்ந்து மணிமேகலையும் அமர, வானதிக்கு அருகில் அருள் அமர்ந்தான். தன் அருகில் அவன் அமர்ந்ததும் மனதில் ஒரு தவிப்பு குடிகொள்ள ஒதுங்கி அமர்ந்திருந்தாள் வானதி. குந்தவையும், மணிமேகலையும் இவர்களை கவனிக்கும் நிலையில் இல்லை. சலசலவென்று பேசிக் கொண்டு செல்பி எடுக்கும் முனைப்பில் இருந்தனர்.
வானதியை கவனித்த அருள், “ஏன் வானதி, ஒருமாதிரி இருக்க…” என்று கேட்க, “உன் பக்கத்தில் உக்கார எனக்கு ஒருமாதிரி தவிப்பா இருக்குடா…” என்று சொல்ல முடியாமல் ஒன்றுமில்லை என்று சமாளித்தாள்.
“வானதி, இங்க பாரு…” குந்தவை சொல்ல அவளும் அருளும் எட்டிப் பார்க்க இருவரையும் கிளிக்கினாள் குந்தவை. தன் அருகே அவள் அவஸ்தையுடன் அமர்ந்திருப்பதைப் புரிந்து கொண்ட அருள், “குந்தவை, வானதி உன் சீட்ல உக்காரட்டும் நீ இங்கே வா…” என்று சொல்ல, “போ அண்ணா, எனக்கு சைடு சீட் தான் பிடிக்கும்னு உனக்குத் தெரியாதா… அவ பக்கத்துல உக்கார்ந்தா வானதி ஒண்ணும் உன்னைக் கடிச்சுத் தின்னுட மாட்டா…” என்று சொல்ல அவனும் ஏதும் சொல்ல முடியாமல் அமைதியானான். சிறிது நேரத்தில் தியேட்டர் நிறைந்து பெல் ஒலிக்க, விளக்குகள் எல்லாம் அணைய வானதிக்கு அந்த ஏசி குளிரிலும் வியர்க்கத் தொடங்கியது.
இருந்தும் இல்லாமல்
இருப்பதும்…
புரிந்தும் புரியாமல்
நடிப்பதும்…
அருகாமையில் தொலைய
நினைப்பதும்…
தொலைவினில் அணைக்கத்
துடிப்பதும்…
காதலின் பெரும்
அவஸ்தைகள்…

Advertisement