Advertisement

அத்தியாயம் – 16
அருளுக்கு சாயந்திரம் ஆனபோது காய்ச்சல் நன்றாகவே விட்டிருந்தது. ஹாலில் அமர்ந்திருந்தவனின் பார்வை வானதியைத் தேட அவள் கண்ணிலேயே சிக்கவில்லை.
உற்சாகத்துடன் வீட்டுக்குள் நுழைந்த குந்தவை, “அண்ணா, வானதி கொடுத்த மருந்துல உன் பீவர் பயந்து ஓடிடுச்சா… ரெஸ்ட் எடுக்காம இங்க உக்கார்ந்திருக்க…” என்று கேட்க,
“ம்ம்… போயிடுச்சு மா… எவ்ளோ நேரம் தான் படுக்கறது… கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு வந்தேன்…” என்றான்.
“ம்ம்…” என்றவளிடம் பூ கட்டிக் கொண்டிருந்த சகுந்தலா,  “காபி தரட்டுமா…” என்று கேட்க, “ம்ம்… சூடா…” என்றவள் அறைக்கு சென்று பிரஷாகி வந்து சோபாவில் அமர்ந்தாள்.
அருளுக்கும் சேர்த்து காபியுடன் வந்தவர் இருவருக்கும் கோப்பையை நீட்ட தேவ் பேசியதைத் தோழியிடம் சொல்லும் ஆர்வத்தில் வானதியைத் தேடினாள் குந்தவை.
“வானதி எங்கே மா… இன்னைக்கும் கிளினிக் போயிட்டாளா… ரூம்ல காணோம்…” காபியை ருசித்துக் கொண்டே அவள் கேட்க, “இல்லடி, மாடில தான் இருப்பா… வீட்டுக்கு போன் பேசிட்டு வரேன்னு போனா… அங்கயே இருப்பா போலருக்கு… அவளுக்கும் காபி கலந்திருக்கேன்… நீ போயி வர சொல்லு…” என்றதும் அருள் எழுந்தான்.
“நீ குடி… நான் ரூமுக்கு தான் போறேன்… சொல்லிடறேன்…” என்றவனிடம், “அண்ணா, நம்மெல்லாம் வெளிய போயி எவ்ளோ நாளாச்சு… மூவி போகலாமா… டிக்கட் புக் பண்ணித் தர்றியா…” தங்கை ஆவலுடன் கேட்க, “இப்ப எதுக்குடி மூவி எல்லாம்… என்ன படம் பார்க்கணுமோ டவுன்லோடு பண்ணி வீட்லயே பார்க்க வேண்டியது தானே…” சகுந்தலா சொல்ல,
“போம்மா… என்ன இருந்தாலும் தியேட்டர்ல பாக்குற த்ரில் வருமா… ஒரு இங்கிலீஷ் பேய்ப்படம் ரிலீஸ் ஆகிருக்காம்… பிரண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க… மேகி கூடப் போகலாமான்னு கேட்டா… ப்ளீஸ்மா, போகலாம் மா…” குந்தவை கெஞ்ச அவர் முகத்தை சுளித்தார்.
“என்னது, இங்கிலீஷ் படமா… நான் வரலை… வேணும்னா உன் அண்ணனைத் துணைக்கு அழைச்சிட்டுப் போயிட்டு வாங்க…” என்றதும் குந்தவை துள்ளிக் குதித்தாள்.
“ஹே… தேங்க்ஸ்மா… அம்மான்னா அம்மாதான்…” கொஞ்சிய மகளிடம், “பின்ன அம்மான்னா சும்மாவா…” நொடித்துவிட்டு, “வானதியையும் அழைச்சிட்டுப் போங்க… பாவம், அவளும் வீட்லயே தான இருக்கா…” என்றதும் அருளின் இதயத்தில் ஒரு சில்லிப்பை உணர்ந்தாலும் பிகு செய்தான்.
“நான் எதுக்கு, நீங்க லேடீஸ் எல்லாம் போகும்போது… டிக்கட் வேணும்னா புக் பண்ணித் தர்றேன்…” என்றவனிடம்,
“வயசுப் பொண்ணுங்களை எப்படிடா தனியா விடறது… கூடப் போயிட்டு வா…” என்றார் சகுந்தலா.
“ம்ம்… சரிம்மா…” என்றவன் நாளைக்கு ஈவனிங் ஷோ புக் பண்ணிடறேன்… நான் ஆபீஸ்ல இருந்து வந்திடறேன்… நீங்க தியேட்டர் வந்திருங்க…” என்றுவிட்டு நகர்ந்தான்.
“ஹே சூப்பர்…” என்று குதித்த குந்தவை, “அம்மா, காபியைக் கொடுங்க… நான் மாடிக்கே கொண்டு போயி வானதிக்கு கொடுத்துடறேன்…” குந்தவை உற்சாகத்துடன் சொல்வது அருளின் காதில் விழ அமைதியாய் அறைக்கு சென்றான்.
“என்னாச்சு, வானதிக்கு… ரொம்ப நேரமா கண்ணுலயே படலை… மதியம் கூட அம்மா தான் சாப்பாடு, டேப்லட் கொண்டு வந்தாங்க… இப்பவும் மாடில போயி நின்னுட்டு இருக்கா…” யோசித்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தான்.  அடுத்தநாள் அவளுடன் சினிமாவுக்கு செல்லப் போவதை நினைக்கும் போது மனதுக்குள் இருந்த உறுதி ஆட்டம் கொள்ள, குந்தவை சொன்ன படத்துக்கு ஆன்லைனில் டிக்கட் புக் பண்ணிவிட்டு SPB யின் பாடல்களை அலைபேசியில் ஒலிக்க விட்டு கண் மூடிப் படுத்திருந்தான்.
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர்கவிதை…
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு… ஆஆ… 
மனதின் காதல் முழுவதையும் குரலில் தேக்கி இசையோடு இழைத்துக் கொண்டிருந்தார் அவர். அந்த கந்தர்வ குரலில் கட்டுண்டு அமைதியாய் ரசித்துக் கிடந்தது அவன் மனம்.
இரவு உணவை நேரமே முடித்துக் கொண்டு அறைக்குள் தஞ்சமான குந்தவையைக் கண்டு வானதிக்கு சிரிப்பு வந்தது. தேவ் சொன்னது போல் அழைத்து விடுவானோ… அன்னை அருகில் இருந்தால் யாரென்று கேப்பாரோ… என பயந்து கொண்டே சீக்கிரம் சாப்பிட்டு அலைபேசியை மௌனியாக்கி வைத்துவிட்டு நொடிக்கொருதரம் அதையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அடுக்களையில் சகுந்தலாவுக்கு உதவ வேண்டி இருந்ததால், தேவ் அழைத்தால் அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்குமாறு சொல்லிவிட்டு வானதி அடுக்களைக்கு சென்றுவிட்டாள். தேவ் பற்றிய விஷயத்தை சொல்லும் உற்சாகத்தில் அடுத்தநாள் சினிமாவுக்கு செல்வது பற்றி வானதியிடம் சொன்னாலும் அருளும் உடன் வருவது பற்றி சொல்லாமல் விட்டுவிட்டாள் குந்தவை.
முன்னிலிருந்த அலைபேசியைப் பார்த்துக் கொண்டு தவிப்புடன் கட்டிலில் அமர்ந்திருந்த குந்தவை அது அலறி அறியாத எண்ணைக் காட்டவும் பதட்டத்துடன் வேகமாய் எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.
“ஹ..ஹலோ…” ரகசியம் பேசுவது போல் அவளது குரல் ஒலிக்க எதிர்ப்புறம், “ஹலோ, யாரு ராசம்மாவா பேசறது…” என்றதும் முழித்தவள், “இல்ல, ராங் நம்பர்…” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு, “ச்சே… ராங் நம்பருக்கு கால் பண்ண கண்ட நேரத்தைப் பாரு…” என்று விரலைக் கடித்துக் கொண்டிருக்க சற்று நேரத்தில் மீண்டும் அழைப்பு வந்தது.
மணிமேகலையின் எண்ணைக் கண்டவள், “என்னடி, இந்த நேரத்துல கால் பண்ணிருக்க…” எரிச்சலுடன் கேட்க, “நீதாண்டி நாளைக்கு ஈவனிங் மூவி போறோம்னு மெசேஜ் போட்டிருந்த… இப்பதான் பார்த்தேன்… அதான், கால் பண்ணேன்…” என்றதும், “ம்ம்… ஆமாடி, நாளைக்கு ஈவனிங் சீக்கிரமே வீட்டுக்கு வந்திரு… வீட்ல இருந்து டாக்ஸில தியேட்டர் போயிடலாம்… சரி, காலைல கால் பண்ணறேன்…” சொன்னவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு, “இவ வேற மனுஷனோட அவஸ்தை புரியாம…” என்று கடுப்புடன் சொல்லி மீண்டும் அலைபேசியை வெறித்துக் கொண்டிருக்க நேரம் பத்து மணியைக் கடந்திருந்தது. ஆனாலும் அவளுக்கு உறக்கத்தின் அறிகுறியைக் காணவில்லை.
வானதியும் வேலை முடிந்து வந்துவிட உறங்காமல் அமர்ந்திருந்தவளை அதிசயமாய் பார்த்துவிட்டு, “எந்தொரு அதிசயம்… பத்து கழிஞ்சு பத்து மினிட் ஆகியும் குந்தவை இந்து உறங்காதே இரிக்குந்து..” என்று கிண்டலாய் சிரிக்க உதட்டை சுளித்தவள், “இன்னும் அவன் போன் பண்ணவே இல்லை…” என்றாள் சிணுங்கலுடன்.
“அதுசரி, அப்ப போன் வரனது வரே உறங்குனில்லே…” கேட்டுக் கொண்டே கட்டிலில் வந்து அமர அலைபேசி சிணுங்கி புதிய எண்ணைக் காட்ட அவள் முகம் மலர்ந்தது.
“ஹா, நின்டே ஆளானு தோணுந்து… எடுத்து சம்சாரிக்கு…” என்றதும் தயக்கத்துடன் எடுத்தாள் குந்தவை.
அவள் நம்பிக்கை வீண் போகவில்லை. எதிர்ப்புறம் கம்பீரமாய் ஒலித்தது தேவ் குரல்.
“ஹலோ டியர்… என்ன பண்ணிட்டு இருக்க…” பிசிறின்றி ஒலித்த அவன் குரலில் பேச மறந்தவள் அமைதியாய் காதில் வைத்திருக்க, “ஹலோ, என்ன பேச மாட்டீங்கற… என் காலுக்கு தான வெயிட் பண்ணிட்டு இருந்த…” அவன் கேட்டதும் முறுக்கிக் கொண்டாள்..
“என்னது, உன் காலுக்கு வெயிட் பண்ணினேனா… அதெல்லாம் ஒண்ணும் இல்லை…” சொல்லிக் கொண்டே வானதியை நோக்கி அசடு வழிய சிரித்தவள், “பேசு…” சைகை செய்துவிட்டு வெளியே சென்றாள். மறக்காமல் கதவை சாத்திவிட்டு ஹாலுக்கு சென்று அமர்ந்தாள்.
மனதுக்குள் அருளின் முகம் வந்து போக அவஸ்தையாய் உணர்ந்தாள். எத்தனை ஒதுங்கி சென்றாலும் அவனை விட்டு எட்டி நின்றாலும் உள்ளே வந்துவிட்ட முகத்தின் பிம்பம் மறையவே செய்யாமல் வேதனைப்படுத்தியது.
முன் வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தாள். இரவு நேர காற்று சில்லிப்பாய் தேகம் வருடியது. நகரம் உறங்கத் தொடங்கியிருக்க நிலா சோகமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
சிறிதுநேரம் ஏதேதோ யோசித்துக் கொண்டு நின்றவள் பின்னில் அசைவு தோன்ற திரும்பினாள். அருள் கேள்வியாய் அவளைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.
“இந்த நேரத்துல இங்க என்ன பண்ணற… தூங்கலியா…”
“ம்ம்… தூங்கணும்…” என்றவள் அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பது போல் அமைதியாக, “என்னாச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்க…” என்றான் அவள் முகத்தையே பார்த்து.
“ப்ச்… அங்கனே ஒண்ணும் இல்லா… நிங்கள் போயி கிடக்கு… தணுத்த காற்றில் நிக்கண்டா…” என்றதும், “உனக்கு மட்டும் சூடாவா காத்தடிக்குது… போயி படு…” என்று அதட்ட, “ம்ம்…” முனங்கியபடி அவளது அறைக்கு செல்ல அவனும் கதவைத் தாளிட்டு விட்டு மாடிப்படி ஏறினான்.
அடுத்தநாள் மதியம் உணவு முடிந்து மகளின் ஜாதகத்துடன் நண்பன் வீட்டுக்கு சென்றார் சுந்தரம். ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ராஜ்மோகன் நண்பனைக் கண்டதும் உற்சாகமாய் வந்தார்.
“வாடா சுந்தரம்… உன்னைத் தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்…” புன்னகையுடன் வரவேற்றார்.
“வாங்கண்ணா, வீட்ல எல்லாரும் சுகமா… என் மருமக எப்படி இருக்கா…” அன்போடு விசாரித்தார் தேவ் அன்னை தேவிகா.
“எல்லாரும் நல்லாருக்காங்க மா… சகுகிட்ட இந்த விஷயத்தை சொன்னேன்… அவளுக்கும் ரொம்ப சந்தோஷம்… காலைல ஜாதகத்தைப் பூஜை பண்ணி கொண்டு வந்துட்டா… அதான் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்…”
“ஓ… ரொம்ப சந்தோஷம்… நாளைக்கு காலைலயே நம்ம ஜோசியரைப் பார்த்திடுவோம்… குந்தவைக்கு எங்க வீட்டு மருமகளா வர விருப்பம் தானே…” ஆவலுடன் கேட்ட தேவிகாவிடம், “அடப்போம்மா, இந்த வீட்டு மருமகளா வர யாருக்கு தான் பிடிக்காது… மாப்பிள்ளை எங்கே, வீட்ல இல்லையா…” என்றார் பார்வையை சுழற்றியபடி.

Advertisement