Advertisement

அத்தியாயம் – 15
“அண்ணா, இன்னைக்கு ஆபீஸ்க்கு டொக்காவா… சரி… நல்லா ரெஸ்ட் எடு…” அருளிடம் சொல்லிவிட்டு கீழே வந்த  குந்தவை அன்னை எல்லாரின் ஜாதகத்தையும் வைக்கும் மஞ்சள் பையுடன் அறையிலிருந்து வெளியே வரவும் யோசனையாய் பார்த்தாள்.
“என்னம்மா, யாருக்கு ஜாதகம் பார்க்கப் போறிங்க… உன் முகத்தையே பார்த்து போரடிக்குதுன்னு மிஸ்டர் சுந்தரம் வேற பொண்ணு எதுவும் பார்க்கப் போறாரா…” கேட்ட மகளை முறைத்தவர் கையை ஓங்கிக் கொண்டு, “அப்படியே வாயில ஒண்ணு போட்டேன்னா… பேச்சைப் பாரு… இந்த வாய்க்கு உன் மாமியார் கிட்ட நல்லா சிக்கி சிங்கியடிக்கப் போற பாரு…” என்றார் சகுந்தலா.
“ஹூக்கும்… நான் எதுக்கு என் மாமியார்கிட்ட வாயாடப் போறேன்… அவங்களுக்கு நான் வைக்குற ஐஸ்ல எனக்கு எதிரா வாயே திறக்காம கூலாப் பார்த்துப்பேன்… ஈஈ…” என பல்லைக் காட்டிய மகளை வாத்சல்யத்துடன் பார்த்து நின்றார் சகுந்தலா. இப்போதுதான் கையில் வைத்துக் கொஞ்சி, ஜடை போட்டு, அலங்காரம் பண்ணி அழகு பார்த்தது போல் இருக்கிறது… அதற்குள் கல்யாணத்துக்கு வளர்ந்து நிற்கிறாள்… இன்னொரு வீட்டுக்கு மணமாகிப் போகப் போகிறாள்… நினைக்கும்போதே சந்தோஷத்துடன் துக்கமும் சேர்ந்து வந்தது. 
அன்னையின் பார்வையில் புன்னகைத்தவள், “என்னமா பாக்குறிங்க…” என்றதும், “ஒண்ணும் இல்லடி, உனக்குதான் ஜாதகம் பார்க்க கொடுக்கணும்னு அப்பா கேட்டார்… முதன் முதலா கல்யாணத்துக்குப் பார்க்கறோம்… சாமிகிட்ட வச்சு பூஜை பண்ணிட்டு தரேன்னு சொன்னேன்…”
“எனக்கா… நான் படிச்சிட்டு தான இருக்கேன்… எதுக்கு இப்பவே கல்யாணம்…” என்றாள் அதிர்ச்சியுடன்.
“அதெல்லாம் உன் அப்பாகிட்ட கேக்க முடியுமா… அவர் எடுத்து வைக்க சொன்னார்… இன்னைக்கு கோவிலுக்குப் போயி பூஜை பண்ணிட்டு வந்து தரேன்னு சொன்னேன்…” என்ற அன்னையை யோசனையுடன் பார்த்தாள் மகள்.
“இதென்னடா புதுக்குழப்பம்… படிச்சு முடிக்கறதுக்குள்ளே கல்யாணமா…” என யோசித்தவளின் கண்ணுக்குள் நின்று தேவ் வேறு காதலுடன் சிரிக்க அவஸ்தையாய் உணர்ந்தாள்.
“ம்மா… இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம் மா… படிச்சு கொஞ்ச நாள் வேலைக்குப் போயிட்டு மேரேஜ் போதும்…” என்ற மகளைக் கவலையுடன் பார்த்தவர், “சரி, இப்ப ஏன் பீல் பண்ணற… ஜாதகம் தானே பார்க்கப் போறோம்…” என்ற சகுந்தலா, மகளின் தோளை ஆதரவுடன் பிடித்தார்.
“உனக்காச்சும் சீக்கிரம் நல்லது பண்ணி கண்ணாரப் பாக்கணும்னு எனக்கும் ஆசையிருக்கு… நீ மனசைப் போட்டு குழப்பிக்காம காலேஜ் கிளம்பற வழியைப் பாரு…” சொல்லிவிட்டு சகுந்தலா அடுக்களைக்கு சென்று டிபனை எடுத்துவைக்க சற்றுநேரத்தில் சுந்தரம் குளித்து பூஜை முடித்து சாப்பிட வந்து அமர்ந்தார்.
“சகு… அருள்க்கு எப்படி இருக்கு, டாக்டர்கிட்ட போகணுமா…”
“வானதி மாத்திரை கொடுத்தாங்க, இப்ப தூங்கறான்…”
“ம்ம்… மழை சேரல போலருக்கு… முடியலைனா டாக்டரை வேணும்னா வீட்டுக்கு வர சொல்லறேன்…”
“சரிங்க… இன்னொரு இட்லி வைக்கட்டுமா…” என்றார் சகு.
“ம்ம்… எங்கே அந்தப் பொண்ணை காணோம்…”
“மாடில துணி காயப் போட்டுட்டு இருக்கா…”
“ஓ…” என்றவர், “அவ கொடுக்கிற மாத்திரை போதுமா… அவளுக்கு பணம் எதுவும் வேணும்னா அட்வான்ஸ் மாதிரி கொஞ்சம் கொடுத்திரு…” சுந்தரம் சொல்லவும், “சரிங்க…” என்று சந்தோஷமாய் தலையாட்டினார் சகுந்தலா.
“இன்னைக்கு குந்தவை ஜாதகத்தை பூஜை பண்ணிட்டு வந்திருவேல்ல…” எனக் கேட்க தலையாட்டினார்.
“அவங்களுக்கு நம்ம குடும்பத்துல பொண்ணு எடுக்க விருப்பம்னாலும் ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம் இருக்கான்னு பார்க்க விரும்பறாங்க… அப்புறம் நிச்சயம் கூட சீக்கிரம் வச்சிட்டு பரிச்சை முடிஞ்சதும் கல்யாணம் வச்சிடலாம்… பையனுக்கு முதல் போஸ்டிங் எங்க போடுவாங்கன்னு தெரியலைன்னு சொன்னாங்க… அதான் ரெண்டு பேர் ஜாதகமும் ஜோசியரை வச்சுப் பார்த்துட்டா கல்யாண யோகம் எப்பன்னும் தெரிஞ்சிரும் பாரு…” சொல்லிக் கொண்டே சாப்பிட்டு கை கழுவ எழுந்த கணவனை யோசனையுடன் பார்த்தார் சகுந்தலா.
“என்னங்க, அவங்க சம்மந்தம் பத்தி நம்ம பிள்ளைங்க கிட்ட சொல்ல வேண்டாமா… என்னதான் தெரிஞ்ச குடும்பமா இருந்தாலும் அந்தப் பையனை இவங்களுக்கு பழக்கம் இல்ல… இவங்க விருப்பத்தையும் கேக்க வேண்டாமா…”
கேட்ட மனைவியை முறைத்தவர், “ஒரு வெங்காயமும் வேண்டாம்… எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்… நீ பூஜைக்கு வச்சிட்டு நாளைக்கு ஜாதகத்தை கொடு…” என்றவர்,
“ஏன் மூத்தவன் மாதிரியே இவங்களும் கை விட்டுப் போயிருவாங்கன்னு பயமோ… அப்படி மட்டும் நடந்துச்சு… எல்லாத்துக்கும் விஷத்தை வச்சு கொன்னுட்டு நானும் செத்திருவேன்…” கணவனின் மிரட்டலைக் கேட்டு அதிர்ந்தவர் கண்ணீருடன் வாயை மூடிக் கொண்டார்.
தந்தை கோபமாய் செல்வதையும், அன்னை கண் கலங்கி நிற்பதையும் பார்த்துக் கொண்டே வந்த குந்தவை, “என்னாச்சுமா…” என்று கேட்க, “ப்ச்… ஒண்ணுமில்ல… நீ சாப்பிடு…” என்றதும் அமர்ந்தவள், “அப்பாக்கு எப்பவும் திட்டறதைத் தவிர வேற என்ன தெரியும்… அதுக்கெல்லாம் அழுதா இதுக்கே தான் நேரம் இருக்கும்…” கிண்டலாய் சொல்லவும் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.
அதற்குள் வானதியும் கீழே வர, “நீயும் வந்து சாப்பிடு மா…” சகுந்தலா சொல்ல அவளும் அமர்ந்தாள். “நீங்களும் வாங்க ஆன்ட்டி…” என்று அவரையும் அழைக்க மூவரும் அவரவர் யோசனைகளுடன் சாப்பிட்டு முடிக்க புறப்பட்டு வந்த தந்தையுடன் கல்லூரிக்கு கிளம்பினாள் குந்தவை.
வானதியிடம் குந்தவையின் ஜாதக விஷயம் சொன்ன சகுந்தலா, “நான் கோவிலுக்குப் போயி பூஜை பண்ணிட்டு வந்துடறேன்… அருள் எழுந்தா பார்த்துக்கமா…” என்றார்.
“நிங்கள் தனியே போகணுமா ஆன்ட்டி… நான் வேணமெங்கில் கோவில் போயிட்டு வராம்…” வானதி சொல்லவும், “நீ சின்னப் பொண்ணு மா… அங்கே என்ன ஏதுன்னு விவரம் சொல்லத் தெரியாது… நான் போயிட்டு வந்திடறேன்… அருள் முடியாமப் படுத்திருக்கும்போது தனியா விட்டுப் போகவும் முடியாது… நீ கூட இருந்து பார்த்துக்க மா…” என்றதும் மறுக்க முடியாமல், “சரி, நோக்கிப் போயிட்டு வரு ஆன்ட்டி… ஓட்டோவில் போயா மதி…” என்றாள்.
“ம்ம்… சரி…” என்றவர் கிளம்பிச் செல்ல அருளைப் பார்க்க நினைத்தவள் அவனது அறைக்கு செல்ல நல்ல உறக்கத்தில் இருந்தான் அவன். நெற்றியில் கை வைத்துப் பார்க்க சூடு குறைந்திருந்தது. சோர்ந்து கிடந்தவனைக் காண பாவமாய் இருந்தது. முன்தினம் அவன் பேசியது நினைவு வந்து மனதுக்குள் சலசலத்தது
அவனையே பார்த்துக் கொண்டு நின்றவளின் மனதுக்குள் சுகமாய் ஒரு செல்லக் கிறுகிறுப்பு. அவனுக்கு மழையில் நனைந்தால் காய்ச்சல் வந்துவிடும் என்பதால் தான் இவர்கள் மழையில் நனைந்து ஆடியதைக் கண்டு சத்தம் போட்டான்… எனப் புரிந்து கொண்டாள்.
அவனது அறையை சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். விஸ்தாரமான பெரிய அறை நடுவே பெரிய கட்டில். அதன் அருகே ஒரு மேசை… சுவரில் பதித்த அலமாரியைத் தொடர்ந்து புக் செல்ப் ஒன்றும் இருக்க வெறுமனே அதை நோட்டமிட்டவள் கண்கள் ஒரு புக்கைக் கண்டு திகைத்தது..
ஒரே மாதத்தில் மலையாளம்… என்று தமிழ், மலையாளம் இரண்டிலும் எழுதி இருந்த புத்தகத்தை வியப்புடன் எடுத்தவள் புரட்டிப் பார்க்க அதில் மலையாளம் வார்த்தைகளுக்கு தமிழ், ஆங்கிலத்தில் விளக்கம் இருந்தது. ஆவலுடன் முதல் பக்கத்தைப் பார்க்க அதில் வானதி என்ற பெயரை மலையாளத்தில் எழுத முயற்சி செய்திருந்தான் அருள்மொழி வர்மன். 
அதைக் கண்டதும் சில்லென்று ஒரு உணர்வு அவள் இதயத்தைத் தீண்ட அவன் மனதை சொல்ல வேறு எதுவும் தேவையாய் இருக்கவில்லை. அவன் தன் பெயரை உச்சரித்த போது மகிழ்ந்ததை விட தனது பாஷையில் தனது பெயரை அவன் எழுத முயன்றது சுகமாய் இதயத்தை இம்சித்தது.
நிசப்தமாய் அவன் இதயம் அவளோடு பேசிக் கொண்டிருக்க இருவருக்குள்ளும் நடந்த சம்பாஷனைகள் மனக்கண்ணில் ஓட, தனக்குள்ளும் அவன் ஒளிந்திருப்பதை உணர்ந்தாள்.
“கள்ளன்… மனசில் இத்தர இஷ்டம் வச்சிட்டு ஒந்தும் அறயாத போல கிடந்து உறங்கன கண்டில்லே…” என நினைத்தவளுக்கு சட்டென்று வீட்டு நினைவு வந்தது.

Advertisement