Advertisement

“நான் இங்கே வந்த காரணம் என்ன… இப்ப சந்தோஷப்படற விஷயம் என்ன… இந்த சில நாள்ல எதுவும் மாறலியே… என் குடும்ப கஷ்டம் எல்லாம் அப்படியே தானே இருக்கு… ஆனா என் மனசுல எப்படி இந்த மாற்றம் வந்துச்சு… வேலைக்கு வந்த இடத்துல காதலைப் பத்தி யோசிக்க எனக்கு எப்படி தைரியம் வந்துச்சு… அதுவும் வேலைக்கு சேர்ந்த வீட்டிலேயே… எல்லாரும் என்மேல பிரியம் காட்டினா நான் இந்த வீட்டுப் பெண்ணாகிருவேனா… அவங்க பொண்ணு போல அக்கறையோட பார்த்துகிட்டா இங்கே மருமக ஆகணும்னு ஆசை வரலாமா…” சட்டென்று மனதின் சந்தோசம் எல்லாம் வடிந்து போனது. தன்னை அவன் நேசிப்பது தெரிந்தும் தனக்கும் அவனைப் பிடித்திருப்பது புரிந்தும் அது சரியாய் வராது என்ற நிதர்சனம் நெஞ்சில் அறைய, கண்களில் ஒரு கலக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
அந்தப் புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு தவிப்புடன் அவனைப் பார்த்தவள் கண்கள் தானே கலங்கின.
“வேண்டா அருள்… நமக்கு இது சரியாவில்லா… மனசில் நடக்காத்த ஒந்தினு ஆஷிக்கண்டா…” சொல்லிக் கொண்டே அவன் அருகில் அமர்ந்து தலைமுடியைக் கோதிவிட உறக்கம் கலைந்தவன் மெல்ல கண்ணைத் திறக்க அதை எதிர்பார்க்காதவள் சட்டென்று எழுந்து நின்றாள்.
“வ..வந்து, சூடு உண்டோந்து…” என்றவளுக்கு வார்த்தைகள் தடுமாற அவளையே பார்த்தவன் அந்தக் கண்களின் மின்னும் கண்ணீரையும் கவனித்து விட்டான்.
வேகமாய் முகத்தை திருப்பிக் கொண்டவள், “இட்லி எடுத்திட்டு வராம்…” சொல்லி செல்லப் போக சட்டென்று அவள் கையைப் பற்றியவனைக் கண்டு திகைத்தாள்.
மனசுக்குள் சட்டென்று ஒரு பரவசம் நிறையத் தொடங்கினாலும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவனை என்னவென்பது போல் ஏறிட்டாள்.
“என்னாச்சு வானதி, கண்ணெல்லாம் கலங்கிருக்கு… அப்பா எதுவும் சொல்லிட்டாரா…” முடியாத நிலையிலும் வருத்தத்துடன் அவன் கேட்க நெகிழ்ந்து போனாள்.
“ஹேய், அதொந்தும் இல்லா… இப்ப எங்கனே உண்டு…” பரிவுடன் கேட்டுக் கொண்டே கையை விலக்கினாள்.
“ம்ம்… கொஞ்சம் பரவால்ல… அம்மா எங்கே…” என்றான் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே.
“பாத்ரூம் போயிட்டு வரின்… இட்லி எடுத்திட்டு வராம்… ஆன்ட்டி அம்பலத்தில் போயதானு…” சொல்லி விட்டு அவள் செல்ல மெல்ல எழுந்து அமர்ந்தவனின் மனம் அவள் அருகாமைக்காய் ஏங்கியது. பாத்ரூம் போய்விட்டு வந்தவனுக்கு அங்கேயே உணவை எடுத்து வந்தாள் வானதி.
இரண்டு இட்லியை சாப்பிட்டு போதும் என்றவனிடம், “பால் எடுத்திட்டு வரட்டே…” அவள் கேட்க, “காபி கிடைக்குமா…” என்றான். புன்னகையுடன் சென்றவள் காபி எடுத்து வர அவன் குடித்ததும் மாத்திரை கொடுத்தவள் ரெஸ்ட் எடுக்க சொல்லி செல்ல அவனுக்கு உறக்கம் வரவில்லை… எழுந்து கீழே வர வானதி மதிய சமையலுக்கான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள். அலைபேசியுடன் சோபாவில் வந்தமர்ந்தவனின் பார்வை அவனையும் மீறி அடிக்கடி அவள் மேல் பதிய அதை உணர்ந்தவள் மனமும் தவித்தது.
மனதின் கட்டுப்பாட்டை மீறி விழிகள் அவன் முகம் காணத் துடிக்க நிமிர்ந்தவள் அவன் பார்வை தன்மேல் இருப்பதைக் கண்டு மாற்றிக் கொள்ள அவனும் அவள் பார்த்ததும் மாற்றிக் கொண்டான். இருவருக்குள்ளும் காதல் சடுகுடு, கண்ணாமூச்சி எல்லாம் விளையாடிக் கொண்டிருந்தது. மனதில் உணர்ந்த காதலை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
கல்லூரி வாசலில் குந்தவை வரவுக்காய் காத்திருந்த தேவ் அவள் தனியே வருவதைக் கண்டதும் உற்சாகமானான். பேருந்தில் கண்டபிறகு இன்றுதான் அவனைக் காண்கிறாள். முன்புபோல் கல்லூரிப் பக்கமும் தினமும் வருவதில்லை. அன்று மேகலை கல்லூரிக்கு விடுமுறை என்பதால் குந்தவை மட்டும் தனியே வந்து கொண்டிருந்தாள். அவளுக்காய் காத்திருந்த தேவ் மோகனின் முகம் தேனைக் கண்ட வண்டாய் இன்ஸ்டன்டாய் மலர்ந்து புன்னகைத்தது. திகைத்தவள் தயங்கி நிற்க, அவளை நோக்கி வந்தான் தேவ்.
“ஹாய் டியர், என்ன இன்னைக்கு தனியா… ஒரு வாரம் என்னைப் பார்க்காம ரொம்ப இளைச்சுப் போன போல இருக்கே… அதான் தரிசனம் கொடுக்க ஓடி வந்தேன்…” சொல்லிவிட்டு அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்.
“நீ முறைச்சாலும் ரொம்ப அழகாருக்க தெரியுமா…” அவன் சொல்ல, “இப்ப என்ன வேணும்… உங்களுக்கு வேற வேலை எதுவும் இல்லையா… இப்படி காலேஜ் வாசல்ல வாட்ச்மேன் வேலை பார்த்துட்டு இருக்கிங்க…” அவள் வேண்டுமென்றே அவனை சீண்டினாள்.
“எனக்கு உன்னோட சம்மதம் தான் வேணும்… அதுக்காக தான் இந்த உத்தியோகம் எல்லாம் பார்க்க வேண்டிருக்கு…” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது குந்தவையின் வகுப்பு மாணவர்கள் இருவர் கவனித்து அருகே வந்தனர். “என்ன குந்தவை, எதுவும் பிரச்சனையா… இது யாரு…” ஏதோ ஒருவன் அவளிடம் பிரச்சனை செய்கிறானோ என நினைத்து அருகில் வந்து விசாரித்தனர்.
“அ..அதெல்லாம் ஒண்ணும் இல்ல, தெரிஞ்சவர் தான்… நீங்க போங்க…” அவள் சமாளித்து அவர்களை அனுப்ப மார்புக்கு குறுக்கே கையைக் கட்டிக் கொண்டு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்.
அவனை முறைத்து விட்டு நடக்கத் தொடங்கியவள், “என்ன சிரிப்பு… நான் மட்டும் அவங்ககிட்ட சொல்லி இருந்தா என்னாகும் தெரியுமா…” என்று கேட்க, “என்னாகும்…” என்றான் அவன் சிரிப்பு மாறாமல்.
“ஹூம், நாளைக்கு இப்படி வந்து நிற்க கால் இருக்காது…”
“ஹஹா… லுக் டியர்… நான் என்ன டைம்பாஸ்க்கு உன்னை சுத்தி வர்ற ரோமியோனு நினைச்சியா… லவ் மா லவ்… உன் மேல வச்சிருக்கிற கன்னா பின்னா லவ்… அதுதான் என்னை மறுபடி உன் முன்னாடி நிக்க வைக்குது…” அவன் சொல்லவும் யாராவது கவனிக்கிறார்களா என்று அவசரமாய் சுற்றிலும் பார்த்துக் கொண்டவளை நோக்கி சிரித்தான்.
“ஹையோ கடவுளே… இப்ப உங்களுக்கு என்னதான் வேணும்… யாராச்சும் பார்த்தா பெரிய பிரச்சனை ஆயிடும்… ஏன் புரிஞ்சுக்காம டிஸ்டர்ப் பண்ணறீங்க…” அவள் பயத்துடன் சொல்ல, “ஓகே… நான் டிஸ்டர்ப் பண்ணலை… உனக்கு என்னைப் பிடிக்கலைன்னு ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லு… நாளைல இருந்து உன் கண்ணுலயே படாம ஓடிப் போயிடறேன்… சரியா… என் கண்ணைப் பார்த்து சொல்லு…”
அவன் சொல்ல, “அவ்ளோதானே… சொல்லிட்டா வர மாட்டேல்ல… சொல்லிடறேன்…” என்று நின்றவளை அவன் குறும்பு கொப்பளிக்கும் பார்வையுடன் நோக்கி நிற்க, அழகான அவன் முகத்தில் கண்ணைப் பதித்தவள் வார்த்தை வராமல் தொண்டையை நனைத்துக் கொண்டாள்.
பரந்த நெற்றி, ஒட்ட வெட்டிய கிராப்… குறும்பு கொப்பளிக்கும் கண்கள்… அளவான மூக்கு, அதற்குக் கீழ் இருந்த கட்டை மீசை… தடித்த உதடுகளில் உறைந்திருந்த புன்னகை… ஆறடி உயரத்தில் அசராமல் நின்றாலும் அவளிடம் மென்மையைக் காட்டிய பாங்கு… மாநிறமாய் இருந்தாலும் அவன் முகத்தில் நிறைந்திருந்த வசீகரம் கண்களுக்குள் ஒட்டிக் கொள்ள காதலோடு நகைக்கும் அவன் விழிகளைத் தவிப்புடன் நோக்கியவள் தாங்க முடியாமல் குனிந்து கொண்டாள்.
“குந்தவை, உன்னால என்னைப் பிடிக்கலைன்னு சொல்லவே முடியாது… ஏன்னா, உனக்குப் பிடிச்சிருக்கு… அப்புறம் என்ன தயக்கம்…” அவன் கேட்க வருத்தமாய் நிமிர்ந்தாள்.
“ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க… நீங்க யாரோ, என்னமோ… எனக்குத் தெரியாது… என்னால உங்களை மட்டுமில்ல, யாரையும் காதலிக்க முடியாது… அது என் குடும்பத்தை பாதிக்கும்னு தெரிஞ்சே இந்தத் தப்பை என்னால பண்ண முடியாது… என் வீட்டுல இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாங்க…”
“ஓ ஷிட்… இதானா உன் பிரச்சனை… வீட்டுல சம்மதம் வாங்கறது, கல்யாணம் பண்ணறது இதெல்லாம் செகண்டரி… அதை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு எனக்குத் தெரியும்… முதல் பிரச்சனை என்னை உனக்குப் பிடிச்சிருக்கா… அதை மட்டும் சொல்லிடு…” என்றவன் ஆவலாய் அவள் முகம் பார்க்க கோபமாய் நிமிர்ந்தாள்.
“பிடிச்சிருக்கா, பிடிச்சிருக்கான்னு அதையே கேட்டா, பிடிக்காம தான் நின்னு பேசிட்டு இருக்காங்களாக்கும்… உங்க பேரைத் தவிர எதுவும் எனக்குத் தெரியாது… நீங்க கொஞ்சம் நல்லவனா இருக்கலாம்னு அந்த பஸ் சம்பவம் வச்சு முடிவு பண்ணிட்டேன்… வேற எதுவும் தெரியாதே… அப்புறம் எதை வச்சு உங்களை நம்பறது…” அவள் சொல்லவும் ஆனந்தமாய் சிரித்தான் தேவ் மோகன்.
“ஹாஹா… நீ பயப்படற அளவுக்கு மோசமான பாகிரவுண்டு எல்லாம் ஐயாக்கு இல்ல மா… என்னைப் பத்தி தெரிஞ்சுக்க ஆசை இருந்தா கேட்டிருக்கணும்… நானும் நல்ல குடும்பத்துப் பையன் தான்… நல்லாப் படிச்சிருக்கேன்… நல்ல வேலை… என் குடும்பமும் வசதியான குடும்பம் தான்… நிச்சயம் உன் வீட்டுல இருந்ததை விட என் வீட்டுல நீ ரொம்ப சந்தோஷமா இருக்கலாம்… அதுக்கு நான் கியாரண்டி…”
“ஓஹோ… நீங்க சொல்லிட்டா நாங்க நம்பிடனுமா…” அவள் கேட்க, “போலீஸ்காரன் பொண்டாட்டி ஆகப் போறவளுக்கு இந்தத் தெளிவு நல்லதுதான்…” என மனதுள் நினைத்துக் கொண்டே, “உன் பஸ் வந்திருச்சு… இப்பக் கிளம்பு… நைட் நான் கால் பண்ணறேன்…” என்றதும் பேருந்தில் ஏறப் போனவள், “அச்சோ, வீட்டுக்கு எல்லாம் கால் பண்ணிடாத…” என்று சொல்லிக் கொண்டே ஏறினாள்.
“ஹூம்… பார்க்கலாம்…” என்றவன் நிறைந்த மனதுடன் தன் பைக் நிறுத்தி இருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.
மனதை அரித்துக் கொண்டிருந்த காதலை அவனிடம் ஒத்துக் கொண்டதும் உள்ளிருந்த பயம் ஓரமாய் சென்று விட பெரிய ஒரு நிம்மதி வந்து சந்தோஷத்துடன் அவளைத் தழுவிக் கொண்டது. “சொன்ன மாதிரி நைட் கால் பண்ணிடுவானோ…” பயமும் ஆவலும் ஒரு சேர நெஞ்சுக்குள் நிறைய காதலின் அவஸ்தையை அவளும் அனுபவிக்கத் தொடங்கினாள்.
உனதான விலகல் என்றும்
எனக்கான பாதுகாப்பு
என்பதை அறிந்த போதே
மனதில் நெருங்கி விட்டாய்….
விலகலில் நெருக்கத்தை
விதைத்துச் செல்கிறாய்…
மௌனத்தில் அதிகமாய்
பேசிக் கொண்டிருக்கிறாய்…
காணாமல் கண்டு எட்டி நின்றே
உனை உணர்த்துகிறாய்…
எத்தனை விலகினாலும்
எனக்குள்ளே உயிர்ப்புடன்
என்றும் துடித்துக்
கொண்டிருப்பாய்…!

Advertisement