Advertisement

வாசலிலேயே பரிதவிப்புடன் காத்திருந்த சகுந்தலா, அவளைக் கண்டதும், “அம்மாடி, வந்துட்டியா… எத்தனை தடவ உன் மொபைலுக்கு கூப்பிட்டேன்… சுவிட்ச் ஆப் னு வந்துச்சு… மழைல எப்படிமா வந்த… முதல்ல தலையைத் துவட்டு…” என்று டவலை நீட்டினார்.
அந்த அன்னையின் உண்மையான நேசத்தில் மனம் கலங்கியது அவளுக்கு. “மொபைல் சார்ஜ் இல்லாதே ஆப் ஆகி ஆன்ட்டி… ஆட்டோவில் வந்து…” அவர் நிம்மதிக்கு பொய் சொன்னாள்.
“ஓ… ஆட்டோலயா… இந்த மழை ராத்திரில அதுவும் பாதுகாப்பு இல்லமா… இனி இப்படிப் போகாத… காலம் கிடக்குற நிலமைல உனக்கு எதுவும் ஆச்சுன்னா என்ன பண்ணுறது…” என்றவர் அவள் கையிலிருந்த டவலை வாங்கி தானே துடைத்து விட்டார்.
“அப்படியே உடம்புக்கு ஊத்திட்டு வா… சூடா தோசை ஊத்தித் தரேன்…” என்றதும் தன் அன்னையை அவரில் கண்டவள், அவர் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
“தேங்க்ஸ் ஆன்ட்டி…”
“அட, எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்… குந்தவையும், நீயும் எனக்கு வேற வேற இல்ல… வயசுப் பொண்ணுகளை வச்சிருக்கிற எல்லா அம்மாக்களுக்கும் இந்தப் பதட்டம் இருக்கும்… போயி குளிச்சு டிரஸ் மாத்திட்டு வா…” என்றவர், “இந்தப் பையன் இன்னும் வீட்டுக்கு வராம எங்க போயி கிடக்கறானோ…” என புலம்பிக் கொண்டே அடுக்களைக்கு செல்ல அவள் காதிலும் தெளிவாய் விழுந்தது.
குளித்து உடை மாற்றி வானதி ஹாலுக்கு வர அருள் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். அவளைக் கண்டதும் ஒரு கள்ளப் பார்வையுடன் முகத்தைத் திருப்பிக் கொள்ள,
“கொட்டற மழைல எங்கடா போயித் தொலைஞ்ச… சாயந்திரம் வந்ததுல இருந்தே ஒரு மாதிரி இருந்த… இப்ப மழைல நனைஞ்சு உடம்புக்கு எதுவும் வந்துச்சுன்னா…” அவர் கேட்கும்போதே “ஆச்ச்…” என்று தும்மல் போட்டான் மகன்.
“ஒரு வேலையாப் போயிருந்தேன்மா… மழை வரும்னு நான் என்ன கனவா கண்டேன்… குளிச்சிட்டு வந்திடறேன்… ஆச்…” என்று மாடிக்கு செல்ல, “ஹூக்கும், என் வாயை அடைக்க மட்டும் நல்லாத் தெரியும்…” என்றவர், “நீ உக்காருமா… தோசை வைக்கறேன்…” என, “நிங்கள் கழிச்சோ ஆன்ட்டி…” என்றாள்.
“இல்லமா, புள்ளைங்க வீட்டுக்கு வராம எனக்கெப்படி சாப்பாடு இறங்கும்…” என்றவரை நெகிழ்வுடன் நோக்கியவள்,   “ஆத்யம் நிங்கள் கழிக்கு ஆன்ட்டி… டாப்லட் இடன்டே…” என்று அவரை அமர்த்தி தோசையை வைத்தாள்.
அவர் சாப்பிட்டு முடிக்கும்போதே அருள் வந்திருக்க, “என்னமா இவ்ளோ லேட்டா சாப்பிடறீங்க…” கேட்ட மகனை முறைத்தவர், “ஆமா, அவ்ளோ அக்கறை இருக்கவன் தான் நேரங்காலத்துல வீட்டுக்கு வந்துட்ட பாரு…” என்று நொடிந்து கொள்ள அவஸ்தையாய் வானதியின் முகத்தைத் தீண்டி மறைந்தது அவன் விழிகள்.
அவள் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவன் தட்டில் தோசை வைத்துவிட்டு நகர, “அவங்க சாப்பிட்டாச்சா மா…” என்ற மகனை அதிசயமாய் பார்த்தார் சகுந்தலா.
“எங்கே, அவளும் கொஞ்சம் முன்னாடி தான் ஆட்டோல வந்தா… பாவம், பசிக்கும்… நீயும் சாப்பிடுமா…” என்றார்.
“அவரு முடிக்கட்டும் ஆன்ட்டி…” என்றவள் அவன் தட்டில் தோசையை வைக்க, “போதும்…” என்றான் அவன்.
“ஏண்டா, ரெண்டு தோசையோட போதும்னு சொல்லற… பசி இல்லையா…” என்றார் சகுந்தலா.
“போதும்மா, என்றவன் சாப்பிட்டு எழுந்து கொள்ள, “தனக்காக தான் அவன் போதுமென்று எழுந்து கொண்டானோ…” என நினைத்த வானதி, “சேச்சே… அத்தர வலிய மனசொந்தும் உண்டாவில்லா…” என நினைத்து சாப்பிட அமர்ந்தாள். உண்மையிலேயே கொள்ளைப் பசியாய் இருந்தது.
அன்பை உணர்ந்தும்
ஏற்க மறுக்கும் மனம்
குறைகளை முன்னிறுத்தி
குற்றப்படுத்திக் கொள்ளும்…
சாப்பிட்டு அடுக்களையை ஒதுக்க வந்த சகுந்தலாவை அனுப்பிவிட்டு தானே எல்லாம் முடித்து படுக்கைக்கு வந்தாள் வானதி. குந்தவை நல்ல உறக்கத்தில் இருக்க அசதியோடு படுத்தவளை அதிகம் அலைக்கழிக்காமல் வேகமே நித்திரா தேவி பிடித்துக் கொண்டாள்.
“மனசுக்குள்ளே காதல் வந்துச்சா… வந்தல்லோ வந்தல்லோ… தமிழ் படிக்க ஆசை வந்துச்சா… வந்தல்லோ வந்தல்லோ…” என்று அருள்மொழி வர்மனும் அவளும் பின்னணி இசையுடன் கனவில் ஆடிப்பாடிக் கொண்டிருக்க பாதி உறக்கத்தில் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள் வானதி.
“பகவானே… இதெந்தா இங்கனே ஒரு ஸ்வப்னம்…” என்றவள் வேர்த்திருந்த நெற்றியைத் துடைத்துக் கொண்டு தண்ணியைக் குடித்தாள். சுவரில் டிக் டிக்கிக் கொண்டிருந்த கடிகாரம் சமயம் அதிகாலை மூன்று மணி என்றது.
“ச்சே… எனிக்கு எந்து பற்றி… வந்த ஜோலி மறந்து இதெந்தா ஆவஸ்யமில்லாதே ஒரு ஸ்வப்னம்…” தன்னைத் தானே கடிந்து கொண்டு பாத்ரூம் சென்று வந்து படுத்துக் கொண்டாள். கண்ணை மூடினால் அருள் பாடலைத் தொடங்க பயத்துடன் கண்ணைத் திறந்து கொண்டே வெகு நேரம் கிடந்தவள் தன்னையறியாமல் உறங்கிப் போனாள்.
காலையில் தனக்கு முன்னே எழுந்திருக்கும் வானதி நல்ல உறக்கத்தில் இருப்பதைக் கண்ட குந்தவை தொந்தரவு செய்யாமல் ஹாலில் சென்று படிக்கத் தொடங்கினாள்.
வழக்கம் போல் கணவர் வாக்கிங் கிளம்ப மகனைக் காணாமல் சகுந்தலா அவன் அறைக்கு சென்று பார்க்க நல்ல காய்ச்சலில் இழுத்துப் போர்த்தி படுத்திருந்தான் அருள்.
நெற்றியைத் தொட்டுப் பார்த்தவர் அனலாய் தகிக்க வானதியைத் தேடி வந்தார். அதற்குள் அவள் எழுந்து குளித்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“சாரி ஆன்ட்டி, குறச்சு லேட்டாகிருச்சு…”
“அது பரவால்லமா, இந்த அருளு நேத்து மழைல நனைஞ்சிட்டு வந்தான்ல… உடம்பு அனலா கொதிக்குது… அவனுக்கு மழையே சேராது… கொஞ்சம் பாரேன்…” என்றார்.
அதைக் கேட்டு மனதுக்குள் பதறினாலும் “ஒரு கிளாஸ் பால் கொண்டு வரின் ஆன்ட்டி… டாப்லட் கொடுத்து நோக்காம்…” என்றவள் மாத்திரையை எடுக்க செல்ல சகுந்தலா பால் எடுத்துவர சென்றார். அவள் வந்தபிறகு வீட்டில் பொதுவான மாத்திரைகளை ஸ்டாக் வைப்பதை வழக்கமாக்கி இருந்தாள்.
அதற்குள் சகுந்தலாவின் அலைபேசி சிணுங்க, “வானதி, இந்தாம்மா பால்… கோவில் குருக்கள் தான் கூப்பிடறார்… பேசிட்டு வந்திடறேன்…” என்று சொல்ல பால் கிளாஸை வாங்கிக் கொண்டு மாடிக்கு சென்றாள் வானதி.
மேசை மீது கையிலுள்ளதை வைத்துவிட்டு அருள் அருகே சென்றவள் சோர்ந்து கிடப்பவனைக் கண்டு கலங்கினாள். அவன் நெற்றியில் கை வைத்துப் பார்க்க தீயாய் சுட்டது.
“மழை சேராதுன்னா எந்தினு என்னை விளிக்கான் வந்தது…” என மனதுக்குள் அவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டே, அவனை எழுப்ப முயன்றாள்.
“ச..சார்…”
அவன் அசையாமல் படுத்திருக்க, “எனிக்கு சார்…” மீண்டும் அழைத்தாள். அவன் வெறுமனே அசைய, “ஹூம் இது சரியாவில்லா…” என நினைத்தவள், “அருளு… எந்திரிடா…” என்று சகுந்தலா போல சொல்ல கண்ணை அசைத்தான்.
“அம்மா, டயர்டா இருக்கு…” என்றவன் கண்ணை மூடிக் கொண்டே சொல்ல, “மெல்ல, எனிக்கு… டாப்லட் குடிச்சிட்டு கிடந்தோ…” என்றாள் வானதி.
கண்ணைப் பிரிக்க முடியாமல் மெல்லத் திறந்தவன் கஷ்டப்பட்டு எழுந்திருக்க முயல அவன் கையைப் பிடித்து சாய்வாய் அமர வைத்தாள் வானதி.
“இது குடிக்கு…” என்று நீட்டியவளை நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் அத்தனை சோர்விலும் லேசாய் புன்னகைத்தது. அவன் குடித்ததும் மாத்திரையைக் கொடுக்க வாங்கி வாயில் போட்டுக் கொண்டான்.
சகுந்தலா போன் பேசிவிட்டு அங்கே வந்தவர், “டாப்லட் குடிச்சிட்டானா வானதி… ஹாஸ்பிடல் போக வேண்டி வருமா…” என்று கேட்டார். அதற்குள் அருளுக்கு குமட்டிக் கொண்டு வர வாயை மூடிக் கொண்டு எழப் போனவனை அருகே நின்று கொண்டிருந்த வானதி பிடித்து அமர்த்தி, “வாமிட் வருதா…” என்று கேட்கும்போதே “உவ்வே…” என்று குமட்டலுடன் அவன் வாந்தி எடுக்க சற்றும் முகம் சுளிக்காமல் கையை நீட்டி தாங்கிக் கொண்ட வானதியை சகுந்தலா அதிர்ச்சியுடன் பார்த்தார்.
“ஐயோ, வானதி, என்னம்மா இது… கைல எல்லாம் வாந்தியை வாங்கிட்டு…” அவர் பதற, “இட்ஸ் ஓகே ஆன்ட்டி…” என்றவள் வேகமாய் குளியலறைக்கு சென்று சுத்தப்படுத்திக் கொண்டு தண்ணியுடன் வந்தாள்.   
தளர்ந்து போய் அமர்ந்திருந்த அருளின் கண்களிலும் அதிர்ச்சி. அவனுடைய வாயை டவலால் துடைத்து விட்டு, “ரெஸ்ட் எடுக்கட்டே ஆன்ட்டி… குறச்சு சுடுவெள்ளம் குடிக்கான் கொடுக்கு…” என்றதும் சகுந்தலா கீழே செல்ல, “கிடந்தோளு சார்…” என்றவள் பிடித்து படுக்க வைத்தாள்.
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், “சாரி…” என்றதும் சினேகமாய் புன்னகைத்தவள், “எந்தினு… இட்ஸ் மை டியூட்டி…” என்றதும் மனதுக்குள் சுருங்கிக் கொண்டான்.
காதல் ஒரு சங்கீதம்…
அதை உணரும்போதே
உள்ளமெங்கும் இனிதாய்
பரவி இன்பம் தரும்…
காதல் ஒரு அவஸ்தை
இதயம் முதல் இறுதி வரை
இம்சையாய் உயிரைத்
தின்னும் உயிர் கொல்லி…
காதல் ஒரு வைரஸ்…
காணும் நொடிக்குள்
இதயம் துளைத்து
இயல்பைத் தொலைத்து
தன்னையே தொலைக்க
வைத்திரும் உயிர்த்தொற்று…

Advertisement