Advertisement

அத்தியாயம் – 14
கிளினிக் முன்னில் இருந்த டீக்கடையில் பைக்கை நிறுத்திய அருள் மொபைலை நோண்டியபடி வானதி வருகிறாளா எனப் பார்த்துக் கொண்டிருக்க முழுதாய் பத்து நிமிடம் கரைந்தபின் அவளது உருவம் பிரசன்னமானது.
கைகடிகாரத்தைப் பார்த்தவள் பரபரப்புடன் தோளில் மாட்டிய பாகுடன் வேகமாய் சாலைக்கு வந்தாள். பருவநிலை மாற்றத்தால் மழையும், காற்றும் வெப்பநிலையை குளிர்மையாய் வைத்திருக்க நிலாவைத் தொலைத்திருந்த வானம் அன்றும் மழை வரும் அறிகுறியைக் காட்டியது.
ஆள் நடமாட்டம் குறைந்திருக்க ஏதாவது ஆட்டோ வருமா எனப் பார்த்தவளின் கண்ணுக்கு அதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. ஐந்து நிமிடம் பார்த்தவள் மீண்டும் கடிகாரத்தைப் பார்க்க சமயம் ஒன்பதரை ஆகியிருந்தது. அதற்குமேல் அங்கே நிற்பது உசிதமில்லை என்று நினைத்தவள் நடக்கத் தொடங்கினாள்.
சில எட்டுகள் எடுத்து வைக்கும் போதே மழைத்துளிகள் மேனியில் பட்டுத் தெறிக்க “அச்சோ… குடையும் எடுத்தில்லல்லோ…” என யோசித்தவளின் அருகில் ஒரு பைக் வந்து நிற்க அதிர்ந்து திரும்பினாள்.
“வண்டில ஏறு…” அதட்டலாய் சொன்னவனை நிமிர்ந்து பார்க்க மழைக்கோட்டுடன் இருந்த அருளைக் கண்டதும் மனதுக்குள் ஒரு சமாதானம் நிறைய, “சாரமில்லா, நான் நடந்து வந்தோளாம்…” என மறுத்துவிட்டு முன்னில் நடக்கத் தொடங்க அருள் கடுப்பானான்.
அவள் பின்னில் பைக்குடன் அருள் மெதுவாய் தொடர வேகமாய் நடக்கத் தொடங்கியவளின் வேகத்துக்கு மழையும் வேகமாய் சடசடத்து அவள் உடையை நனைக்கத் தொடங்கியது. வேறு வழியின்றி சாலை ஓரமாய் சாத்தியிருந்த கடை முன்னில் ஒதுங்கி நின்றாள் வானதி.
அதைக் கண்டதும் அருளுக்கு கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
அவள் முன்னில் வண்டியை நிறுத்தியவன், “நீ என்ன நினைச்சிட்டு இருக்க… இந்த நேரத்துல தனியா வந்ததும் இல்லாம, மழைல நின்னுட்டு இருக்க…” சிடுசிடுத்தான்.
அவன் கோபத்தைக் கண்டதும் அவளுக்கும் கோபம் வந்தது.
“அய்யடா, நானா நிங்களே வரான் பரஞ்சது… செய்யுந்தது ஒக்க செய்துட்டு பின்னே என்னத்தன்னே சீத்த பறயும்… நான் மழ நிந்துட்டு வந்தோளாம்…” சொல்லி முடித்ததும் தான் வானதி யோசித்தாள்.
“நான் ஏன் இவனிடம் கோபப்படுகிறேன்… இவன் வந்ததே வலிய காரியம்… இதில் இங்கனே ஒக்க பரஞ்சால் எந்து விசாரிக்கும்…” எனத் தன்னைத் தானே கேள்வி கேட்டு கடைக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.
கோபத்துடன் அவளைப் பார்த்தவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு உர்ரென்று வண்டியில் அமர்ந்திருந்தான். மழைக் கோட்டும் ஹெல்மெட்டும் அவனை நனையாமல் காத்தது.
கடைக் கூரையின் கீழ் முன்னமே நின்றிருந்த பாட்டி ஒருவர் இவர்கள் பேசுவதை கவனித்துவிட்டு, “என்னமா, புருஷன்கூட சண்டை போட்டு கோச்சுகிட்டு வந்துட்டியா… அதான் தம்பி கூப்பிடுதுல்ல… மழை அதிகமாக முன்ன அவரோட வீட்டுக்குக் கிளம்பு தாயி…” என்றார் புன்னகையுடன்.
அவர் சொன்னதைக் கேட்டு திகைத்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அந்த நேரத்திலும் வானதியின் முகம் சிவப்பதன் காரணம் புரியாமல் அவள் முகத்தையே பார்த்தான் அருள்.
உன் வெட்கம் கண்டு
மலர்கள் முணுமுணுக்கும்
தான் இத்தனை
சிவப்பில்லையே என்று…
தலையில் விழுந்த மழைத்துளிகள் முகத்தில் கோடாய் கீழிறங்கி வெண்ணை போன்ற அவள் சங்குக் கழுத்தில் வழுக்கிக் கொண்டு… ரசனையுடன் கீழிறங்கிய கண்களை அதற்குமேல் அவள் மேனியில் மேயவிடாமல் தடை போட்டுத் திரும்பிக் கொண்டான். அவனது பார்வை தனது உடலில் செல்லும் இடம் கண்டு கூசிய வானதி, “ச்ச்சே… இவன் எந்தா இங்கன நோக்கனது…” என உடலோடு ஒட்டி நின்ற நனைந்த ஆடையை உதறி விட்டுக் கொண்டாள்.
இரண்டு கைகளை கோர்த்துக் கொண்டு நெட்டி முறித்தவன், “வானதி, மழை இப்ப நிக்காது போலிருக்கு… டைம் வேற ஆகுது… ப்ளீஸ் வந்து உக்காரு…” என்றான் கெஞ்சும் குரலில்.
“போம்மா… ஒரு புருஷன் இதுக்கு மேல எப்படிக் கெஞ்சுவான்…” அந்தப் பாட்டி மீண்டும் சொல்ல, “நோக்கு தள்ளே… (பாருங்க பாட்டி) இயாள் என்டே புருஷன் ஒண்ணும் இல்ல…” என்றாள் வெடுக்கென்று.
அவர் சரியாகப் புரியாமல் இவளை நோக்க, “இப்ப அவங்களுக்கு கிளியர் பண்ணறது ரொம்ப முக்கியமா… நீ வரப் போறியா இல்லையா…” அருள் மீண்டும் கேட்க, பளிச்சென்ற மின்னலுடன் டமார் என்று பெரிதாய் இடி முழங்கி அவளை மிரள வைத்தது. சட்டென்று அந்த சத்தத்தில் பயந்து உடல் நடுங்கியவள் அருளின் அருகில் சென்று நிற்க, சோவென்று மழையின் வேகம் கூடியது.
“இந்தக் கோட்டைப் போட்டுக்க…” என்றவன் தான் போட்டிருந்த கோட்டைக் கொடுக்க தயக்கமாய் வாங்கினாள். அவன் மேல் வேகமாய் விழுந்த மழைத்துளிகள் சட்டென்று அவன் உடையை நனைக்க, “நிங்களுக்கு…” என்றவளை “எனக்கு தான் ஹெல்மெட் இருக்குல்ல… தலை நனையாம இருந்தாப் போதும்… உக்காரு…” என்றான்.
அதற்குமேல் தாமதிக்காமல் அவன்மேல் பட்டுவிடாமல் கவனமாய் பைக்கில் அமர்ந்தாள்.
“வர்றோம் பாட்டி…” என்றவனை அதிசயமாய் பார்த்தவள்,
“இவனு எந்து வட்டாயோ… (பைத்தியம் பிடிச்சிருச்சா) தள்ள கிட்ட போட்டே பரயுந்து…” என அவள் யோசித்துக் கொண்டிருக்க வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் அருள்.
சில நிமிடத்தில் மீண்டும் மின்னல் வெட்டவும் பயத்தில் கண்ணை மூடியவள் இடியின் சத்தத்தில் வேகமாய் அவனை கட்டிக்கொள்ள மழையில் நனைந்து உடல் குளிர்ந்து இருந்தவனுக்கு கதகதப்பான அவளது அணைப்பு இதமாய் இருக்க சிலிர்த்துக் கொண்டான் அருள். முன்தினம் அவன் எடுத்த முடிவுக்கு எதிராய் இயற்கையும் விளையாடியது.
அவளது அருகாமையும் அணைப்பும் அவன் மனதின் தீர்மானத்தை மழையோடு கரைத்துக் கொண்டிருந்தது. வானதியின் மனதில் அவனது அக்கறையும், அருகாமையும், கோபப்பட்டாலும் விட்டுவிடாமல் வம்படியாய் தனைக் கூட்டி வந்ததையும் நினைத்து ஒருவித சந்தோஷமாய் உணர்ந்தாள். முன்தினம் அவன்மேல் தான் விழுந்து கிடந்தது     நினைவு வர நாணத்துடன் விலகி அமர்ந்து கொண்டாள்.
மழையும் அவனோடான பாதுகாப்பான பயணமும் வாழ்நாள் இறுதிவரை தொடரக் கூடாதா என மனம் ஏங்குவதை உணர்ந்தவளுக்கு வருத்தமாய் இருந்தது.
ராத்திரியில் தான் தனியாக வரவேண்டுமே என நினைத்து அக்கறையோடு கூட்டிப் போக வந்தவனிடம் ஆயுள் முழுதும் பாதுகாப்பைத் தேடுவது அபத்தமாய் தோன்றியது.
“அவன் வீட்டில் ஜோலிக்கு வந்த எனிக்கு அவனோடு கோபப்படும் உரிமையை யார் தந்தது… இப்ப இது போல நினைவுகள் தோன்ற என்ன காரணம்… பகவானே…” என தலையை குலுக்கிக் கொண்டாள் வானதி. கண்ணாடி வழியே அவளது முகத்தில் தோன்றும் பாவனைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அருள் சட்டென்று வண்டியை நிறுத்தி, “என்னாச்சு வானதி…” என்றான். கட்டுப்பாடில்லாமல் மனதுக்குள் கிளர்ந்தெழுந்த ஆசைகளை அடக்க முடியாமல் வானதியின் கண்ணில் நீர் துளிர்க்க மழையோடு அதுவும் வழிந்து சென்றது.
“ஒ..ஒந்தும் இல்லா… தேங்க்ஸ்…” என்றாள்.
“ஓ.. ஓகே…” என்றவன் வண்டியை எடுத்து, “எதுக்கு தேங்க்ஸ்…” என்றான்.
“என்னைப் பிக்கப் செய்யான் வந்ததினு…”
“ஹூம்… உன்னை என் வாழ்நாள் முழுதும் பிக்கப் பண்ணனும்னு தான் மனசு நினைக்குது… ஆனா அது நடக்காதே…” என மனதுள் நினைத்தவன் பெருமூச்சு ஒன்றை வெளியேற்ற வீடு நெருங்கி இருந்தது.
“வானதி, இனி இந்த மாதிரி நைட் தனியா வர்ற மாதிரி வச்சுக்காத… டாக்டர் கேட்டா வர முடியாதுன்னு சொல்லிடு…” என்றவனை வியப்புடன் அவள் நோக்க, “நீ எங்க வீட்ல தங்கிருக்க… உனக்கு எதுவும் ஆச்சுன்னா நாங்க தான் பதில் சொல்லணும்… அதனால ஈவனிங் மேல கூப்பிட்டா வர முடியாதுன்னு சொல்லிடு…” அவன் சொல்லவும் அவள் உள்ளத்தில் ஏமாற்றமாய் உணர்ந்தாள்.
அவள் மீதுள்ள அக்கறையில் அழைத்துப் போக வந்தான் என்று அவள் நினைக்க, அவனோ தங்கள் வீட்டில் தங்கியிருந்தவளைப் பாதுகாப்பது தங்கள் கடமை என்பது போல் பேசவும் மனதில் வலிப்பதன் காரணம் புரியவில்லை.
“டாக்டர் விளிச்சா எனிக்கு போகாதிரிக்கான் பற்றில்லா… கிளினிக் ஈவனிங் மாத்திரமே ஓபன் செய்யுள்ளு… எதுவும் எனிக்கு தீர்மானிக்கான் பற்றில்லா…” என்றவள் அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை என்பது போல் அமைதியாக வீட்டுக்கு சற்றுத் தள்ளி வண்டியை நிறுத்தினான் அருள். மழை சற்று மட்டுப்பட்டிருந்தது.
அவள் புரியாமல் அவனைப் பார்க்க, “கோட்டைக் கழற்றி கொடு… நீ உள்ளே போ… நான் வந்திடறேன்…” என்றான். தன்னை வண்டியில் அழைத்து வந்ததைக் கூட வீட்டுக்குத் தெரியக் கூடாது என நினைக்கிறானே என்று அவளுக்கு கஷ்டமாய் இருக்க அமைதியாய் அவன் சொன்னது போல் செய்தாள்.

Advertisement