Advertisement

அத்தியாயம் – 13
வானதியின் உடல் முழுதும் அருள் மேல் அழுத்திக் கொண்டிருந்தாலும் கொஞ்சம் கூட பாரம் தோன்றாமல் பூ மூட்டையைத் தாங்குவது போல் சுகமாய் உணர்ந்த அருளின் உடலில் உணர்வு நரம்புகள் சிலிர்த்துக் கொள்ள ஆவலுடன் அவளை நோக்கினான். அவள் கண்ணிலோ இப்படி விழுந்துவிட்ட பதட்டம் தெரிந்தது.
“ச..சோரி…” என்றபடி எழுந்து கொள்ள முயன்றவள் ஈரமுள்ள இடத்திலேயே கையை ஊன்றி எழுந்திருக்க முயல வழுக்கி மீண்டும் அவன் மீதே பூக்குவியலாய் சாய்ந்தவளை தாங்கிக் கொண்டவனின் இதழ்களை அவளது பிறை நெற்றி உரசி அவன் கொடுக்காமலே முத்தம் பெற்றுக் கொண்டது. அந்தத் தீண்டலில் தேகத்தில் புதுவித உணர்வு சுகமாய் நரம்புகளை மீட்ட அனிச்சையாய் கண்களை மூடிக் கொண்டவளின் முகத்தை அத்தனை அருகாமையில் கண்டவனின் மனம் தடுமாறியது. அவனது நெஞ்சில் முகம் வைத்து கிடந்தவளின் கூந்தல் வாசம் அவன் நாசியைத் தழுவ சுகமான உணர்வில் அவன் மனம் தடுமாறியது. அவள் சட்டென்று கூச்சத்துடன் பதறி எழுந்திருக்க அந்த முகத்தில் தோன்றிய நாணமும், தவிப்பும் காண்கையில் அவனுக்கு உற்சாகமாய் இருந்தது.
அவளது சிவந்த முகமும், குனிந்த தலையும் மனதுக்கு இதமாய் இருக்க கண்ணெடுக்காமல் பார்த்துக் கிடந்தவனை ஏறிட முடியாமல் ஓட்டமாய் சென்று விட்டவளைப் பார்த்துக் கொண்டே மெல்ல எழுந்தான் அருள் மொழி வர்மன்.
இதழில் ஒரு புன்னகை நெளிய, மனதில் அவளது பதறிய முகம் பதிந்திருக்க, கண்களில் வெட்கத்தில் தவித்த அவள் விழிகளே நிறைந்திருக்க சோபாவில் அமர்ந்தான்.
அத்தனை அருகாமையில் தன் முகத்தைக் கண்ட அவள் விழிகளின் படபடப்பு பட்டாம்பூச்சி சிறகடிப்பது போன்று தோன்றியது. அவளது அழகான சந்தன நிற நெற்றியைத் தனது உதடுகள் அனுமதி இல்லாமலே உரசியபோது நெஞ்சில் எழுந்த உணர்வுகளை அதிசயமாய் உணர்ந்தான்.
இதுவரை எந்தப் பெண்ணிலும் அவன் உணராத ஒரு உணர்வு… கல்லூரியில் நிறைய பெண்களின் ஆதர்ச நாயகனாய் இருந்தாலும் யாரையும் நெருங்க விட்டதில்லை. எட்டி நின்று பேசுவதே வழக்கம்.
“அவளது சிறு நெருக்கத்தில், ஸ்பரிசத்தில் சலனப்படும் அளவுக்கு என் மனம் பலவீனமானதா… அருள் நீ இவ்ளோ வீக்காடா…” அவன் மனம் கேள்வி கேட்க கண்ணை மூடி சோபாவில் சாய்ந்து கொண்டவன் அவளைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான்
வானதியை முதன்முதலில் பேருந்தில் கண்டபோதே அவன் மனதில் அவள் அழகு ஒரு சலனத்தை ஏற்படுத்தியது.
அவளைப் பார்க்கக் கூடாதென்றே வம்படியாய் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். அவள் சாதாரணமாய் கேட்டதற்கு கூட பதில் சொல்லாமல் தவிர்த்தான். ஆனால் அவள் தனது வீட்டுக்கே நர்சாய் வரவும் தடுமாறி தவித்துப் போனவன் அன்னையிடம் வேண்டாமென்று முறையிட்டான்.
வீட்டில் அவளைக் கண்டு கொள்ளாமல் விலக நினைத்தாலும் விதி அவளோடு பேச வைத்தது. அவளது சிரிப்பும், மென்மையான குணமும் மனதில் குறுகுறுத்து என்னவோ செய்தது.
தன்னைக் குடிகாரன் என்று அவள் தவறாய் நினைப்பாளோ என்று விளக்கம் கொடுத்தது, நண்பன் அவளை ஜொள்ளு விட்டபோது ஆத்திரமாய் வந்தது, அவள் தனது அன்னையை நேசித்தபோது குதூகலித்தது, தந்தை அவளை வேலைக்கு வந்த பெண்ணாய் கண்டபோது வருந்தியது, இந்த மாற்றங்கள் எல்லாத்துக்கும் பின்னில் இருந்த ஒரே காரணம் அவளை தன் மனம் விரும்பத் தொடங்கியது தான் என்று புத்தியில் உரைக்க தவித்துப் போனான் அருள்.
“எ.. என்னது, எனக்கு வானதியின் மீது காதலா… கடவுளே, இது எப்படி சாத்தியம்… என் தந்தையைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் என் மனதில் எப்படி இந்த ஆசை வந்தது… இல்லை… இது சரியாய் வராது… இந்தக் காதல் என்னிலேயே கருகிப் போகட்டும்… இனியும் இந்த எண்ணத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது… பாவம் வானதி, குடும்ப கஷ்டத்துக்காய் வேலைக்கு வந்த பெண்ணிடம் காதல் பேசி அவள் வாழ்க்கையைத் தொலைத்திடக் கூடாது…” தீர்மானத்துக்கு வந்தவன் எழுந்து அறைக்குள் சென்றான்.
ஆனாலும் மனதுக்குள் வெட்கத்தோடு தலை தாழ்த்திய வானதியின் அழகான முகமே நிறைந்திருக்க தவிப்பாய் உணர்ந்தான். மகன் காபி கூட குடிக்க வராமல் ரூமில் என்ன செய்கிறான் என நினைத்த சகுந்தலா மாடிக்கு அவனைத் தேடி வந்தார்.
“அருளு… என்னப்பா, வந்து இவ்ளோ நேரமாச்சு… காபி கூட குடிக்க வரல… என்னாச்சு… உடம்புக்கு எதுவும் முடியலையா…” மகனிடம் அன்போடு கேட்டவர் கட்டிலில் கிடந்தவனின் நெற்றியைத் தொட்டுப் பார்த்து தலையைக் கோதிவிட, “ப்ச்… எனக்கொண்ணும் இல்லைமா… மழைல நனைஞ்சு உங்களுக்கு எதுவும் வந்திடாமப் பார்த்துக்கோங்க…” என்றான் அன்னையிடம் சாதாரணமாய் இருப்பது போல் காட்டிக் கொண்டு.
“அடப் போடா… நம்ம சென்னைல மழை வர்றதே அதிசயம்… அதை சந்தோஷமா அனுபவிக்காம சளி பிடிக்கும், காய்ச்சல் வரும்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தா எப்பதான் இந்த இயற்கையை எல்லாம் அனுபவிக்கறது… அதெல்லாம் ஒண்ணும் வராது… குளிச்சு வந்ததுமே சூடா காபியோட ஒரு மாத்திரையும் வானதி கொடுத்துட்டா… உன்னை தான் காணமேன்னு பார்க்க வந்தேன்… சூடா உனக்கு காபி கொண்டு வரட்டா…” என்றார் சகுந்தலா.
தலை வலிப்பது போல் உணர்ந்தவன், “ம்ம்… சரிம்மா… அப்பா வந்துட்டரா…” என்று கேட்க, “அவர் இன்னும் வரலப்பா… உனக்கு காபி கொடுத்திட்டுதான் டிபன் வேலையைத் தொடங்கணும்…” என்றபடி கீழே சென்றார்.
மகனுக்குப் பிடித்தது போல் காபி கலந்தவர், “குந்தவை, இதை அண்ணனுக்கு கொடுத்திருடி…” என்று சொல்ல டீவி நிகழ்ச்சியில் மும்முரமாய் இருந்தவள், “மா, ப்ளீஸ் மா, முக்கியமான சீன்… வானதிகிட்ட கொடுத்து விடுங்களேன்…” சிணுங்கினாள் மகள்.
“இவ ஒருத்தி… டீவி முன்னால உக்கார்ந்தா எழுந்திருக்க மாட்டா… அடிக்கடி ஏறி இறங்கினா கால் வலிக்குதுன்னு சொன்னா கேட்டா தானே…” புலம்பிக் கொண்டே “வானதி, நீ இதை அருளுக்கு மாடில கொடுத்துடறியா மா…” என்றார்.
“மீண்டும் அவனை சந்திக்கப் போவதா…” என்று சின்னதாய் ஒரு தவிப்பு தோன்றியதையும் மீறி உள்ளுக்குள் சிலிர்ப்பாய் ஒரு உணர்வு ஓட மறுக்காமல் வாங்கிக் கொண்டு படியேறிய வானதி அவன் அறையை நெருங்கியதும் ஒரு படபடப்பு வர தயங்கினாள்.
அறைக் கதவு திறந்துதான் இருந்தது. அவன் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டவள், “எந்து பற்றி, இந்த நேரத்துல கிடக்குந்து… மழையில் வந்திட்டு சுகமில்லையோ…” என யோசித்தபடி உள்ளே வந்தவள் அவன் கண் மூடி கிடப்பதைக் கண்டதும் காபி கோப்பையை மேசை மீது வைத்துவிட்டு தான் ஒரு நர்ஸ் என்ற நினைவில் இயல்பாய் அவன் நெற்றி மீது கை வைத்துப் பார்க்க லேசாய் சுட்டது. அவள் ஸ்பரிசத்தில் கண்ணைத் திறந்தவன் முன்னில் நின்றவளைக் கண்டதும் திகைத்து எழுந்து, “நீ எதுக்கு இங்க வந்த…” என்றான் குரலில் சிடுசிடுப்பைக் காட்டி.
மனதில் அதுவரை இருந்த உற்சாகம் காணாமல் போக அவனது கோபக் குரலில் முகம் சுருங்கியவள், “காபி கொடுக்கான்…” மேசையைக் காட்ட, “ம்ம்… கொடுத்தாச்சுல்ல… கிளம்பு…” என்றான் குரலில் அதே கடுமையுடன்.
அவன் கோபத்தின் காரணம் புரியாமல் நகர்ந்தவள் கண்ணில் முணுக்கென்று ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்க்க அதைக் கண்டவன் இதயம் வலித்தது.
“சாரி வானதி… உன்னைக் விரும்பறேன்னு என்னால சொல்ல முடியாது… அதான் உன்மேல வெறுப்புள்ள மாதிரி பேசிட்டேன்… என் காதலை உன்கிட்ட சொல்லுறதுக்கு முன்னாடியே அதை சமாதி கட்ட நினைக்கறேன்… என் காதல் உன்னைப் பிரச்சனைல தள்ளிடக் கூடாது… நீ நல்லாருக்கணும்…” என்றவனின் இதயம் “என் நிலை யாருக்கும் வரக் கூடாது…” எனக் கதறியது.
இரவு உணவுக்கு ஒரே ஒரு சப்பாத்தியை மட்டும் உள்ளே தள்ளி எழுந்து கொண்ட மகனை யோசனையுடன் பார்த்த சகுந்தலா, “என்னாச்சு அருளு… சப்பாத்தி நல்லா இல்லியா…” என்றார் கவலையுடன்.
“இல்லமா, பசிக்கல…” என்றவனிடம், “ஒரு கிளாஸ் பாலாச்சும் குடிப்பா…” என்று அன்னை நிர்பந்திக்க மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டான்.
“இந்தா, மழைல நனைஞ்சுட்டு வந்ததால வானதி, இந்த மாத்திரையைப் போட சொல்லிக் கொடுத்தா…” என்று நீட்ட, வாங்கிக் கொண்டவன் வாயில் போட்டுக் கொண்டே  பார்வையை சுழற்றினான். குந்தவை தான் டீவி முன்னில் அமர்ந்து பாட்டு கேட்டுக்கொண்டே எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். வானதி கண்ணில் தட்டுப்படவில்லை.
பாலைக் குடித்து விட்டு அருள் மாடிக்கு செல்ல யோசனையுடன் நின்று கொண்டிருந்தார் சகுந்தலா.
“இந்தப் பையனுக்கு என்னாச்சு… ஒழுங்கா சாப்பிடாமப் போறான்… இந்த வானதியும் எதுவும் வேண்டாம்னு சொல்லி படுத்திட்டா… என்னவோ…” என்றபடி எல்லாம் எடுத்து வைத்துவிட்டு கணவர் வரும்வரை கதை படிக்கலாம் என்று புத்தகத்தை எடுக்க வாசலில் கார் சத்தம் கேட்டது.
“அதானே… நான் கையில புக்கை எடுத்தாலே மூக்குல வேர்த்திடுமே…” என்றபடி அதை வைத்துவிட்டு அவரை கவனிக்க சென்றார்.
அடுத்தநாள் காலையில் அருள் நேரமாகவே சைட்டுக்கு கிளம்பிவிட்டான். மாலையில் வீட்டுக்கு வரும்போது சகுந்தலாவும், குந்தவையும் மட்டும் இருக்க வானதியைக் காணாமல் தவித்தான். காலையில் அவள் கண்ணில் படாமல் கிளம்பியவன் மாலையில் அவளைக் காணாமல் தவித்தான். அன்னையிடம் கேட்கவும் தயக்கமாய் இருந்தது. மூளை எதை வேண்டாமென்று நினைக்கிறதோ அதைத்தான் இந்த மனம் முதலில் தேடும் என்பது பாவம் அருளுக்குப் புரியவில்லை. 
காட்ட முடியா பாசமும்
தவிர்க்க நினைக்கும் நேசமும்
நமக்கு நாமே விதித்து
கொள்ளும் தண்டனைகள்…
மனதின் விருப்பத்தை
அடக்கி வைத்தல் என்பது
நீரில் அமிழ்த்து வைக்க
நினைக்கும் பந்தைப் போல்
சாத்தியமற்றது…
தான் ஹாலில் அமர்ந்திருப்பதையே கவனிக்காமல் தன் பாட்டில் மாடிக்கு படியேறும் மகனைக் குழப்பமாய் பார்த்துக் கொண்டிருந்தது அந்தத் தாயுள்ளம்.
அவனிடம் கேட்காமலே சூடாய் காபி கலந்து எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றார். உடையைக் கூட மாற்றாமல் கட்டிலில் படுத்துக் கிடந்த மகனின் வாடிய முகம் அவருக்கு கவலையைக் கொடுத்தது.
அன்னை வந்ததைக் கூட உணராமல் உலகத்தையே பார்க்கப் பிடிக்காதவன் போல கண்ணை மூடிக் கிடந்தான் அருள்.
அவன் அருகே நின்று முகத்தையே ஒரு நிமிடம் பார்த்த சகுந்தலா, “அருளு… காபி குடிப்பா…” என்று சொல்ல எழுந்து அமர்ந்தவன், “சாரி மா.. நீங்க வந்ததை கவனிக்கலை…” என்று சொல்ல, “ம்ம்… நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன்… சூடா குடி…” என்றவர் அருகில் அமர்ந்து அவன் குடித்து முடிக்கும் வரை அமைதியாய் அமர்ந்திருந்தார்.
காலிக் கோப்பையை மேசை மீது வைத்தவன் அன்னையிடம், “நான் கொஞ்சநேரம் மடில படுத்துக்கவா…” என்றதும் அவன் மனதுக்குள் எதையோ யோசித்து குழம்புவதை உணர்ந்தவர் அவன் படுப்பதற்கு வாகாய் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.
மகனின் தலையை ஆதரவாய் கோதிக் கொடுக்க அந்த வளர்ந்த பிள்ளை சுகமாய் கண்ணை மூடிக் கொண்டான்.
“அருளு… என்னப்பா, மனசுல எதையோ போட்டு அலட்டிகிட்டு இருக்க… அம்மாகிட்ட சொல்லக் கூடாதா…” அன்போடு கேட்ட தாயின் முகத்தைப் பார்த்தவன்,
“என்னவென்று சொல்லுவான்… காதல் வேண்டாம் என்று மனதுக்குள் ஆயிரம் முறை கதறித் தள்ளினாலும் தன் மனதை விட்டு நீங்காத அந்த வட்ட நிலவின் பெயரை சொல்ல முடியுமா… அவளை காதலிப்பதை மனம் உணர்ந்து கொண்ட நிமிடம் முதல் அவள் பார்வைக்காய், அருகாமைக்காய் இந்தப் பாழும் மனது தவிப்பதை சொல்ல முடியுமா… மனம் வரைந்த மங்கை முகத்தை அழிக்கும் ரப்பர் தெரியாமல் உள்ளுக்குள் கதறுவதை தான் சொல்ல முடியுமா… இந்தப் பாழாய் போன மனம் அவள் மீதான என் காதலை உணராமலே இருந்திருக்கலாம்…” என்று ஏதேதோ மனதுக்குள் புலம்பிக் கொண்டு அமைதியாய் இருந்தான்.
சொல்லிய காதலை விட, சொல்லாத காதலை விட கொடுமையானது உணர்ந்ததுமே மறக்கத் துடிக்கும் காதல்…
“என்னப்பா, உன் மனசை எது அலட்டுது…”
“ப்ச்… ஒண்ணும் இல்லமா, கொஞ்ச நேரம் இப்படியே படுத்திருந்தா எல்லாம் சரியாப் போயிரும்…” அன்னை மடியில் தனது சுமையும் இறங்கிவிடும் என நினைத்தான். கண்ணை மூடிக் கொள்ள, வானதி மின்னல் வெட்டுவது போல் அழகாய் சிரித்தாள்.
“என்னடா எதும் சொல்ல மாட்டேங்கற… உடம்புக்கு எதுவும் முடியலையா… இந்த வானதி வந்தாலாச்சும் என்னன்னு பார்க்க சொல்லி மருந்து கொடுக்க சொல்லலாம்…” அவர் பாட்டில் சொல்ல சட்டென்று கண்ணைத் திறந்தான்.
“ஏன்… வீட்ல இல்லையா…” என்றான் அருள்.
“இல்லப்பா… அந்த சங்கீதா டாக்டர் கிளினிக் போயிருக்கா… அங்க ரெண்டு நர்ஸ் இன்னைக்கு லீவாம்… சாயந்திரம் வந்து ஒன்பது மணி வரைக்கும் ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டாங்க… அதான் போயிருக்கா…”
“ஓ… அப்ப உங்களை யாரு பார்த்துப்பா… இங்க வேலைக்கு வந்தா இங்கயே இருக்க வேண்டியது தான… ராத்திரி நேரத்துல எதுக்கு வெளிய அனுப்பறிங்க…” என்று எழுந்து கொண்டவனைப் புரியாமல் பார்த்தார் சகுந்தலா.
“நீ ஏண்டா எழுந்துகிட்ட…”
“ப்ச்… ஒண்ணும் இல்ல மா…” என்ற மகனிடம், “வரவர நீ செய்யற எதுவுமே எனக்குப் புரிய மாட்டேங்குது…” என்றவர் கீழே சென்று சமையலை கவனிக்கத் தொடங்கினார்.
“அம்மா, பசிக்குது… எனக்கு தோசை ஊத்துங்க… சாப்பிட்டுப் படுக்கறேன்… காலைல நேரமா எழுந்துக்கணும்…” குந்தவை சொல்ல அவளுக்கு ஊற்றிக் கொடுத்தார். அடுத்து கணவனும் வந்து சாப்பிட்டு அறைக்குள் புகுந்து கொள்ள மகன் மட்டும் வராமல் இருக்க சலித்துக் கொண்டார்.
நேரம் ஒன்பது மணி ஆகியிருக்க உடை மாற்றி கீழே வந்தவனைக் கண்டவர் யோசனையாய் பார்த்தார்.
“இந்த நேரத்துல எங்கப்பா கிளம்பிட்ட… சாப்பிட வா…”
“இங்க பக்கத்துல போயிட்டு வந்திடறேன் மா…” என்றவனை அவர் புரியாமல் பார்க்க பைக்கை எடுத்துக் கொண்டு இருளில் கலந்தான் மகன்.
“ராத்திரி நேரத்துல இந்த வானதி எப்படி தனியா வருவா… அவளுக்கு தான் அறிவில்லேன்னா இந்த அம்மாவாச்சும் போக வேண்டாம்னு சொல்லி இருக்கலாம்…” என நினைத்தபடி வழியில் அவள் வருகிறாளா என்ற தேடலுடனே வண்டியை செலுத்தினான் அருள்.
மனதில் மலர்ந்த
மொட்டொன்று
மலர்ந்த கணமே
மடியும் வலியானது
ஆயுள் ரணமானது…

Advertisement