Advertisement

“ஓ… ரியல்லி… கேள்க்கவே ரெம்ப சந்தோஷமாயிட்டுண்டு ஆன்ட்டி… நானும் சீக்கிரம் தமிழ் கத்த போறேன்…” அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தவர், “கத்தறது இல்ல, கத்துக்கப் போறேன்னு சொல்லு…” என்று திருத்தினார்.
“ஹாஹா… ம்ம்… கத்துக்க போறேன்…” என்றாள் நிதானமாக.
“உங்களுக்கு தமிழ் ரொம்ப இஷ்டமா ஆன்ட்டி…”
“பின்னே… நான் தமிழ்ல எம்ஏ ஆக்கும்… அவ்ளோ விருப்பமா தமிழைப் படிப்பேன்… சரி, நீ அடுத்து எழுதினதைப் படி…” என்றவர் தனது கையிலிருந்த அமேசான் கிண்டில் பக்கத்தில் கண்ணைப் பதித்தார்.
“அந்தி மந்தாரை, பேரே ரொம்ப அழகாருக்கு… பர்வீன் பானு ரொம்ப அழகா உணர்வுப் பூர்வமா எழுதிருக்காங்க… வார்த்தைகள் எல்லாம் ரொம்ப அருமையா வடிவமைச்சு இருக்காங்க…” என யோசித்தபடி அந்தப் பக்கத்தை எடுத்தார்.
“எவ்ளோ அன்பான அண்ணன், தம்பி… அவங்களைப் பிரிக்க இந்த சந்திரன் இப்படித் துடிக்கிறாரே… அழகான குடும்பத்தைக் கலைக்கவே சிலர் திரியுறாங்க…” என புலம்பிக் கொண்டே படிக்கத் தொடங்கியவர் கதையின் உணர்வுப் போராட்டத்தில் ஆழ்ந்து போனார்.
மாலையில் வானம் மேக மூட்டமாய் இருந்தது. அடுக்கடுக்காய் கறுப்பும் வெளுப்புமாய் மேகங்கள். மேற்கில் மறையும் சூரியனின் வெளிச்சம் மேகத்துக்குள் ஊடுருவி ஒளிப்பிழம்பாய் தெரிய கீழ்வானம் சிவந்து பார்க்கவே மிகவும் அழகாய் இருந்தது. துவைத்து காயப் போட்டிருந்த துணிகளை எடுத்துவிட்டு வானத்தை ரசனையுடன் பார்த்துக் கொண்டு நின்றாள் வானதி.
சற்று நேரத்தில் அவளுடன் குந்தவையும் வந்து சேர்ந்து கொண்டாள்.
“இன்னைக்கு வானம் எவ்ளோ அழகாருக்கு… போட்டோ எடுக்கலாம்…” என்றவள் தனது அலைபேசியில் அதைப் படம் பிடித்துக் கொண்டாள்.
வானதியின் தோளில் கையிட்டு இருவரையும் ஒரு கிளிக் செய்ய, அவளது முகத்தில் தெரிந்த மலர்ச்சியைக் கண்ட வானதி, “எந்தா, முகத்தில் ஒரு பரவசம்… எனிதிங் ஸ்பெஷல்…” என்று கேட்க, தோளைக் குலுக்கினாள்.
“ஸ்பெஷல் எல்லாம் ஒண்ணும் இல்லை…” சொல்லிக் கொண்டே வானதியின் ஷாலைப் பிடித்து திருகியவள், “ஆனா, இன்னைக்கு காலைல பஸ்ல போனேன்ல… அங்க ஒரு சம்பவம் நடந்துச்சு…” என்றாள் குந்தவை.
“எந்து சம்பவம்… மழ வர போல இருக்கி… வேகம் சொல்லு…”
“ஹாஹா… சொல்லறேன்…” என்றவள் பேருந்தில் நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்து, “லாஸ்ட்ல அவன் என்ன சொல்லிட்டுப் போனான்னு தான் எனக்குப் புரியல… நானும் அப்ப இருந்து இப்ப வரைக்கும் யோசிக்கறேன்… என்ன பதில்னு தெரியலை…” என்றவளின் முகத்தை வானதி ஆழ்ந்து நோக்க தவிப்புடன் சிரித்தவள், “என்ன லுக்கு… உனக்கு எதுவும் புரியுதா…” என்றாள்.
“ஓ… ரெம்ப நல்லாவே புரிஞ்சது…” என்றாள் கண்ணடித்து.
“என்ன சொல்லற வானதி… உனக்குப் புரிஞ்சுதா… ப்ளீஸ் என்னன்னு சொல்லேன்…” என்றாள் ஆர்வத்துடன்.
“நம்மள் மீட் செய்தப்போ அந்த தேவ் எந்தா பரஞ்சது… நின்னே எனிக்கு இஷ்டமானு… என்னே நினக்கு இஷ்டமானோ… எந்தல்லே…” வானதி கேட்கவும் குந்தவைக்கு சட்டென்று எல்லாம் விளங்க முகம் சிவந்து போனது.
“அ..அப்படின்னா, அவன் தேங்க்ஸ் சொன்னது…”
“ம்ம்… நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி… னு அவன் உன் பார்வையை சம்மதமாக்கி எடுத்திருக்கு…” வானதி சொல்ல, “ஐயோ, அது எப்படி… அவனே ஒரு தீர்மானத்துக்கு வரலாம்… என் மனசுல அப்படில்லாம் எதுவும் இல்ல…” வேகமாய் உதடுகள் சொன்னாலும் கண்களில் குடி கொண்டிருந்த மயக்கமும் முகசிவப்பும் அவள் மனதை விளக்கிக் காட்டின.
வானதி கிண்டலாய் அவளை நோக்க, “எனக்கு அவனைப் பிடிக்குதான்னு தெரியல… ஆனா, அவனைக் காணாதபோது மனசு தேடுது… அவன் பக்கத்துல இருக்கும்போது மனசு லேசா பாதுகாப்பா உணருது… இதுக்கு காரணம் என்னன்னு எனக்கு சரியா தெரியல வானதி…” என்றாள் குந்தவை.
“ம்ம்… அப்ப நினக்கு அவனை இஷ்டமாயி எந்தல்லே அர்த்தம்…” வானதி கேட்க குந்தவையின் முகம் மாறியது.
“அ..அது வந்து… ப்ச்… அதெல்லாம் சரிப்பட்டு வராது…” என்றவளின் முகத்தில் யோசனை தெரிய அவள் கையைப் பிடித்தவள், “ரிலாக்ஸ்… நீ ரொம்ப கன்பியூஸ் ஆகிருக்கு… நிதானமாய் யோசிச்சு நோக்கு… மனசிலாவும்…” வானதி சொல்ல, “ம்ம்…” என்றவள் அமைதியானாள்.
விழிவழி வந்த
காதல் சொல்ல
வாய்மொழி ஏதும்
தேவையில்லை…
விழிகள் உணர்த்த
முடியாததை வார்த்தைகள்
வடித்திடுவதில்லை…
அவளைக் கலைக்க விரும்பாமல் வானதியும் அமைதியாக மழைத்துளி ஒன்று நெற்றியில் விழுந்து தெறித்தது.
கையிலிருந்த துணியை வேகமாய் மாடி ஹால் சோபாவில் போட்டுவிட்டு வானதி வர மழைத்துளி விழுவது அதிகமாக சடசடவென்று சத்தமாய் தொடங்கி மிதமாய் பெய்யத் தொடங்கியது மழை.
மழையைக் கண்டதும் மயில் போல் சந்தோசம் கொண்டு சிறு குழந்தை போல் உள்ளங்கையில் பிடித்து குந்தவை மீது தெளித்தாள் வானதி.
“எத்தர திவசமாயி மழை கண்டிட்டு… குந்தவை வா, மழையில் களிக்காம்…” அவளை அழைக்க, “அச்சோ, அம்மா திட்டுவாங்க, ஜலதோஷம் பிடிக்கும்…” என்று மறுத்தவளை, “அதொக்கே மாத்திரை போடலாம்… வா பெண்ணே…” என்று இழுத்துக் கொண்டு சென்றாள்.
குந்தவைக்கும் சந்தோஷமாக இருவரும் கையை விரித்துக் கொண்டு, “அடடா, மழை டா… அட மழை டா…” என்று பாடத் தொடங்க, வானதிக்கும் அந்தப் பாடல் தெரியுமாதலால் அவளும் சேர்ந்து பாடிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தனர்.
“குந்தவை, வானதி… பிள்ளைகளா… மழைல மாடில என்ன பண்ணறிங்க…” கீழிருந்து குரல் கொடுத்த சகுந்தலா பதில் வராததால் அவர்களைத் தேடி மாடிக்கு வர இருவரும் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு திகைத்தார்.
“ஏய்… சளி பிடிக்கப் போகுதுடி… ரெண்டு பேரும் மழைல ஆடிட்டு இருக்கீங்க…” என்று கேட்ட சகுந்தலாவை இருவரும் ஆளுக்கொரு புறமாய் பிடித்து இழுக்க அவரும் நனையத் தொடங்க சிறு பிள்ளைகளாய் சுயம் மறந்து குதூகலமாய் ஆடிக் கொண்டிருந்தனர் மூவரும்.
மழை வருவது போல் இருந்ததால் சீக்கிரமே வீட்டுக்குக் கிளம்பி வந்திருந்த அருள் பைக்கை நிறுத்திவிட்டு மழைக் கோட்டை அவிழ்த்து வாசலில் சிட் அவுட் கம்பியில் போட்டுவிட்டு உள்ளே வந்தவன் கீழே யாரையும் காணாமல் திகைத்தான்.
“மழை வருது, டோர் கூட லாக் பண்ணாம மூணு பேரும் எங்க போனாங்க…” யோசித்துக் கொண்டே மாடிக்கு வந்தான்.
மொட்டை மாடிக்கு செல்லும் கதவு திறந்திருக்க அங்கிருந்து கேட்ட சிரிப்புக் குரலும் பாடலும் காதில் விழ மெல்ல சென்று எட்டிப் பார்த்தவன் அணிந்திருந்த ஆடை முழுதும்  தொப்பலாய் நனைந்திருக்க மழையில் குதூகலத்துடன் ஆடிக் கொண்டிருந்த மூவரையும் கண்டு திகைத்தான்.
“அம்மா… என்ன இது…” அவனது அதட்டலான குரல் கேட்கவும் பதறித் திரும்பியவர்கள், “அய்யய்யோ, இவன் எப்ப வந்தான்…” என்றபடி ஒதுங்கி நிற்க கோபத்துடன் முறைத்தான் அருள் மொழி வர்மன்.
“இப்பதானே உங்களுக்கு காய்ச்சல் வந்து சரியாச்சு… மழைல நனைஞ்சு மறுபடி வந்திட்டா…” கடுப்புடன் கேட்டவன், “ஏய்… குந்தவை, உனக்கு எங்க போச்சு அறிவு… எக்ஸாம் டைம்ல உடம்புக்கு முடியாமப் படுத்திட்டா என்ன பண்ணுவ… புதுசு புதுசா ஒவ்வொரு பழக்கம் பழகிட்டு…” என்றவன் வானதியை நோக்கி, “இதெல்லாம் உன் வேலைதானா…” என்பது போல் கோபமாய் முறைத்துவிட்டு எதுவும் பேசாமல் செல்ல அவளுக்கு அந்தப் பார்வையே நடுங்கியது.
“ச்சே… தேவையில்லாம இவன் கிட்ட மாட்டிகிட்டோமே… இப்ப நனைஞ்ச டிரஸ்சோட எப்படி கீழ போறது…” சகுந்தலா புலம்ப வானதியின் கண்ணில் நீர் முட்டிக் கொண்டிருந்தது.
“சாரி ஆன்ட்டி… என்டே காரணம் நிங்கள்க்கும் சீத்த கேட்டு…” என்றவளின் கையைப் பிடித்த சகுந்தலா, “இவ ஒருத்தி… தொட்டதுக்கெல்லாம் பொசுக்குன்னு கண்ணைக் கசக்கிட்டு… அவங்க எதுக்கு தான் திட்டாம இருக்காங்க… இதெல்லாம் சின்ன சின்ன சந்தோஷம்… சின்ன வயசுல இப்படி விளையாடினது… மனசுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா… சரி, சீக்கிரம் வாங்க… நனைஞ்ச துணியோட இப்படி நின்னா உடம்புக்கு சேராது…” என்றவர் அப்படியே படியில் இறங்கி கீழே வர அவர்களின் உடையிலிருந்து விழுந்த தண்ணீர் மாடிப் படிகளில் ஒழுகிக் கிடந்தது.
சகுந்தலாவும், வானதியும் குளியல் போட செல்ல, வேகமாய் உடையை மட்டும் மாற்றிக் கொண்டு மாடிப் படியைத் துடைப்பதற்காய் துணியுடன் மாடிக்கு சென்றாள் வானதி.
உடை மாற்றி தலை துவட்டிக் கொண்டே ஹாலுக்கு வந்த அருள் படியேறி வந்தவளைக் கண்டு, “என்ன…” என்று கேட்க, “துடைக்கான்…” அவள் சொல்லும் போதே கவனிக்காமல் அடுத்த எட்டு வைத்து வழுக்கி சோபாவில் விழப் போனவன் பிடித்தத்திற்காய் கையை நீட்ட பதறி அவன் கையைப் பிடித்தவளையும் இழுத்துக் கொண்டு தன் மார்பில் பூமாலையாய் தாங்கிக் கொண்டு கீழே விழுந்தான் அருள். 
அணையிட்ட வெள்ளமும்
மடை திறக்கா மனமும்
ஒன்றுதான்…
அலையென ஆர்ப்பரிக்கும்
அன்பு அடங்கிடுமா…
நுரையென ததும்பும்
நேசம் இல்லையென்று
ஆகிடுமா… மனதின்
முகமூடியாய் வெறும்
பொய்வேஷம்…

Advertisement