Advertisement

அத்தியாயம் – 12
காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களையும், பணிக்கு செல்வோரையும் வயிற்றில் அள்ளித் திணித்துக் கொண்டு சுமக்க முடியாமல் ஒருபக்கம் சரிந்தபடி நகர்ந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. கூட்டத்தில் நிற்கவே முடியாமல் மேலிருந்த கம்பியைப் பிடித்து தொங்கிக் கொண்டு அவஸ்தையுடன் நின்று கொண்டிருந்தாள் குந்தவை. தந்தையும் அண்ணனும் ஏதோ மீட்டிங் என்று நேரமாய் கிளம்பிப் போய்விடவே அவள் அன்று பேருந்தில் செல்ல வேண்டியதாய் போயிற்று.
“ச்ச்சே… இந்த அப்பாகிட்ட எனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கித் தர சொன்னா படிச்சு முடி… காரே வாங்கித் தரேன்னு வசனம் பேசுறார்… பஸ்ல போறவங்க அவஸ்தை அவருக்கு எங்கே தெரியப் போகுது…” மனதுக்குள் முனங்கிக் கொண்டே நின்றாள். அடுத்தடுத்த நிறுத்தத்தில் மற்றவர்கள் ஏற இவள் பின்னே நகர்ந்து வழி கொடுக்க வேண்டியதாய் போயிற்று.
கல்லூரி மாணவர்கள் சிலர் மாணவிகளின் கவனத்தைக் கவர புட்போர்டில் நின்று சாகசம் செய்து கொண்டிருந்தனர்.
“இவனுகளுக்கு வேற வேலை இல்லை… கீழ விழுந்து கையைக் காலை உடைச்சுட்டு கிடக்கும்போது தான் புத்தி வரும்…” என சலிப்புடன் திரும்பிக் கொண்டவளின் முதுகில் ஏதோ குறுகுறுத்தது. எவனோ ஒருத்தன் தன் முதுகில் மெல்ல ஊதிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
ஆனாலும் நிற்கக் கூட முடியாத அவஸ்தையில் சற்றுத் தள்ளி நிற்க அவள் பக்கத்தில் நின்ற பள்ளி மாணவியின் முதுகை உரசிக் கொண்டிருந்தான் அந்தப் பையன். அடுத்த ஸ்பீடு பிரேக்கரில் அவனது முகம் அப்பெண்ணின் முதுகில் உரச தீயால் சுட்டது போல் முகம் கன்ற அருவருப்புடன் அப்பெண் முகத்தை சுளிக்க அதைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவை கோபத்துடன் அவனிடம் திரும்பினாள். அதற்குள் பளாரென்று யாரோ அறையும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க அங்கே தேவ் கோபத்துடன் நின்று கொண்டிருந்ததும் மனம் லேசாகி ஒரு நிம்மதி பரவுவதை உணர்ந்தாள்.
“இவன் எப்படி இங்கே…” என யோசனையுடன் பார்க்க அவன் அவளைக் கவனிக்காமல் அந்தப் பையனின் சட்டையைப் பிடித்து கத்திக் கொண்டிருந்தான்.
“உன்னை மாதிரிப் பசங்களால தாண்டா பொண்ணுங்க வெளிய வரவே யோசிக்கறாங்க… படிக்கிற வயசுல இப்படி வக்கிர புத்தியோட இருக்கறதால தான் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை, பலாத்காரம்னு நாட்டுல கேஸ் அதிகரிச்சுட்டே போகுது… அவங்களும் நம்மளைப் போல மனிதப் பிறவிங்க தான்… அவங்களை தலைல வச்சு கொண்டாடலைன்னாலும் தரைல போட்டு மிதிக்காதிங்க…” ஆவேசமாய் சொல்லிக் கொண்டிருந்தவனைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் குந்தவை.
“வி..விடுங்க சார்… தெரியாம மேல உரசினதுக்கு இப்படில்லாம் சொல்லறிங்க…” எகிறினான் அந்தப் பையன். “ஓ… தெரியாம உரசுனியா…” என்றவன் நாக்கைக் கடித்துக் கொண்டு கோபத்துடன் அவன் கழுத்து சட்டையை இறுக்க சுற்றி நின்ற மற்றவர்களும் திட்டத் தொடங்கினர்.
அதற்கு மேல் எதிர்த்துப் பேசினால் தர்ம அடி நிச்சயம் என்பதை உணர்ந்த அந்தப் பையன், “சாரி சார்… இனி இப்படிப் பண்ண மாட்டேன்… மன்னிச்சிருங்க… சாரி மா…” என்று அப்பெண்ணிடமும் சொல்லி சரண்டராக, “இந்தப் பசங்களால இதே தொல்லையாப் போயிருச்சு… தயவுசெய்து போலீஸ் ஸ்டேஷன்க்கு போக சொல்லி நேரமாக்கிடாதிங்க சார்… இன்னைக்கு பிள்ளைகளுக்கு எக்ஸாம் வேற இருக்கு… லேட்டாகிடும்…” என்று கண்டக்டர் சொல்ல, பேருந்தை நிறுத்த சொல்லி அவனை அங்கேயே இறங்க வைத்தான்.
“தே… தேங்க்ஸ் அண்ணா…” கண்ணில் நீருடன் அப்பெண் தேவிடம் சொல்ல, “இட்ஸ் ஓகே மா… எப்பவும் யாராச்சும் வந்து கேப்பாங்கன்னு அமைதியா இருக்கக் கூடாது… உனக்கு சொந்தமான உன்னை, உன் அனுமதி இல்லாம ஒருத்தன் தொட்டா நீதான் முதல்ல அதை எதிர்க்கணும்… தைரியமா அவனைத் தட்டிக் கேக்கணும்… தேவையில்லாத பிரச்னை வேண்டாம்னு கண்டுக்காம இருக்குறதால தான் அதே தப்பை மறுபடி தைரியமா செய்யறாங்க…” 
அப்பெண்ணிடம் சொல்லிக் கொண்டே வந்தவனின் பார்வை சற்றுத் தள்ளி நின்று தன்னையே நோக்கிக் கொண்டிருந்த குந்தவையின் மீது படிய சட்டென்று ஒரு வியப்பு தோன்றி இதழ்கள் தானே புன்னகைத்தது.
பேருந்தில் அவளிடம் பேசலாமா, பேசினால் எதுவும் முகத்தில் அடித்தாற்போல சொல்லி விடுவாளோ என தயக்கத்துடன் பார்த்தவன், “என்ன பஸ்சுல…” என்று மட்டும் கேட்க, அவளுக்கும் அவன் மீதிருந்த பிரமிப்பும், சில நாளாய் அவனைக் காணாத வருத்தமும் நீங்கியதில் சின்னதாய் புன்னகைத்தவள் “இன்னைக்கு அப்பா, அண்ணா மீட்டிங் இருக்குன்னு நேரமா கிளம்பிட்டாங்க… அதான் பஸ்…” என்று பதில் சொன்னவளை கண்களில் காதல் வழிய பார்த்தான் தேவ் மோகன். அவன் பார்வை வீச்சைத் தாங்க முடியாமல் பார்வையைத் தழைத்துக் கொண்டவள், “அவன் எதற்கு பஸ்ஸில் வருகிறான்… இந்த நேரத்தில் எங்கே போகிறான்…” என அறிய வேண்டுமென்று மனம் விரும்பினாலும் கேட்க தயங்கிக் கொண்டு அமைதியாய் திரும்பிக் கொண்டாள்.
அமைதியாய் அவனது பார்வை அவ்வப்போது தனைத் தழுவி விலகுவதை அவனை நோக்காமலே உணர்ந்தாள். இத்தனை அருகாமையில் அவனைக் கண்டதும், அந்த சூழ்நிலையும் ஒருவித படபடப்பைக் கொடுக்க முகத்தை அவன் பக்கம் திருப்பாமல் பிடிவாதமாய் பார்வையை வெளியே பதித்தாள். ஆனாலும் அவன் பார்வை தனைத் தீண்டுவதை அறிந்து பரவசமாய் உணர்ந்தாள்.
அவளது கல்லூரி நிறுத்தத்தில் பேருந்து நிற்கவே அனிச்சை செயலாய் அவள் கண்கள் அவனைத் தீண்டி விலகியது. பெண்கள் பகுதியில் அவள் இறங்க ஆண்கள் சைடில் அவனும் இறங்கி இருந்தான். தனக்கு முன்னே இறங்கி நிற்பவனைக் கண்டு அவளுக்கு பதட்டமானது.
“கடவுளே… இங்கே எதுவும் அவன் பேசி வச்சு யாராச்சும் பார்த்தா என்னாகறது…” பயத்துடன் அவனைக் கண்டு கொள்ளாமல் குனிந்தபடி அவனைக் கடக்க முயல, அலைபேசியை காதில் வைத்தபடி நின்றவன் “தேங்க்ஸ்…” என்றதும் எதற்கென்று புரியாதவள் நிமிர்ந்தாள்.
“இதோ, இந்தப் பார்வைக்கு தான்… எனக்கான பதிலை உன் கண்கள் சொல்லிடுச்சு… அதுக்குதான் தேங்க்ஸ்… பை… டேக் கேர்…” என்றவன், “கண்களின் வார்த்தைகள் புரியாதா… காத்திருப்பேன் என்று தெரியாதா…” என அவன் பாட்டில் பாடிக் கொண்டே அவளைக் கடந்து செல்ல திகைத்து நின்றாள் குந்தவை.
“ஏய், என்னடி இங்க நிக்கற…” கேட்டுக் கொண்டே வகுப்புத் தோழி ஒருத்தி தோளைத் தொட, “ஒ… ஒண்ணுமில்ல டி… வா போகலாம்…” என்று கல்லூரிக்குள் நுழைந்தாள்.
ஆனாலும் தேவ் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் முழுமையாய் விளங்காமல் வண்டின் ரீங்காரமாய் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“அவனுக்கான பதிலை என் கண்கள் சொல்லுச்சா… அப்படி என்ன கேள்வி கேட்டான்… என் கண்ணு என்ன பதில் சொல்லுச்சு…” எத்தனை யோசித்தும் புரியாமல் குழம்பினாள்.
“ச்சே… போகுற போக்குல எதையோ சொல்லிட்டுப் போயிட்டான்… இப்ப எனக்கு மண்டை வெடிக்குது…” என சலித்துக் கொண்டாலும் மனதில் சந்தோஷமாய் உணர்ந்தாள்.
மதிய உணவு முடிந்து ஆண்கள் கிளம்பியதும் சகுந்தலா கையில் அலைபேசியில் கிண்டிலில் ஒரு நாவலை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்க அவருக்கருகில் அமர்ந்து தமிழ் எழுத்தைப் படித்துக் கொண்டிருந்தாள் வானதி.
“ஆன்ட்டி… இது என்னா…” கேட்ட வானதியின் கையிலிருந்த புத்தகத்தில் கண்ணைப் பதித்த சகுந்தலா, “இது தான் ழ… தமிழோட சிறப்பான எழுத்து…” என்றார் பெருமையுடன்.
“ஓ…” என்றவள் க வரிசையைப் பார்த்துவிட்டு, “இதென்னா… ஒரு க, ஒரு ச, ஒரு த, ப மாத்திரம் இருக்கி… ஹிந்தி, மலையாளத்தில் எல்லாம் நாலு க, நாலு ச, நாலு த, ப இருக்கி…” என்றாள் அரைகுறை தமிழில். அதைக் கேட்டு சிரித்தவர், “ஹஹா, தமிழைப் படிக்கறியோ இல்லையோ, நீ பேசறது ரொம்ப நல்லா இருக்கி…” என்றார்.
“ஹாஹா ஆன்ட்டி…” என்று தலை சரித்து சிணுங்கியவளின் அழகை ரசித்தவர், “தமிழுக்குன்னு ஒரு அழகு இருக்கு… சிறப்பு இருக்கு… அதை சரியா புரிஞ்சுக்காம தமிழை குத்தம் சொல்லுற நிறைய பேரு இருக்காங்க… இரு, உனக்கு தெளிவா சொல்லறேன்…” அவர் சொல்லவும், “ஓ…” என்றவள் ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினாள்.
“மத்த மொழியில நாலு எழுத்து இருக்கறதும் ஒண்ணுதான்… தமிழ்ல ஒரு எழுத்து இருக்குறதும் ஒண்ணு தான்… இந்த க வையே எடுத்துக்கோயேன்… மகன், இதுல க வை மென்மையா உச்சரிப்போம்… மக்கள், இதுல க அழுத்தமா தான் வரும்… ஆக, க ஒரே எழுத்தா இருந்தாலும் இடத்துக்கு தகுந்த போல மாறிடும்… ஒரு எழுத்தை எப்படி உச்சரிக்க வேணும்னு முந்தைய எழுத்து தீர்மானிக்கறது தமிழைத் தவிர வேற எந்த மொழியிலயும் இல்லை… அதனால மத்த மொழியில நாலு எழுத்து தனித்தனியா செய்யற வேலையை தமிழோட ஒரே எழுத்து இடத்துக்கு தகுந்த போல திறமையா செய்து முடிக்கும்…”
அவர் சொல்லிக் கொண்டிருக்க ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் வானதி.
“உனக்கு பாரதியார் தெரியுமா…” சகுந்தலா கேட்க, “ஓ, பெரிய மீச, தாடி வச்சிட்டு… அவரல்லே…” என்றாள் வானதி.
“ம்ம்… அவரேதான்… அவருக்கு தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருத மொழி எல்லாம் அத்துப்படி… இதில்லாம லத்தீன், கிரேக்கம், கன்னடம், மராத்தி எல்லாம் பேசினா புரிஞ்சுக்குவாராம்… அப்படிப்பட்ட பெருமையுடைய பாரதியாரே சொல்லில் உயர்வு தமிழ் சொல்லேன்னு பெருமையா சொல்லி இருக்கார்… இதைவிட தமிழுக்கு சிறப்பு வேறென்ன வேணும்…” என்றார் தன் மொழியின் மீதுள்ள பெருமையில்.

Advertisement