Advertisement

அத்தியாயம் – 11
ஒருநாள் முழுமையான ஓய்விலும், வானதியின் சரியான கவனிப்பிலும் சகுந்தலாவின் உடல்நிலை சரியாகிவிட்டது.
“அம்மா, என்னோட ஆதார் கார்டு காலேஜ்ல கேட்டாங்க… எடுத்து வைங்க, நாளைக்கு கொண்டு போறேன்…” மதிய உணவு முடிந்து ஓய்வில் இருக்கையில் மகள் சொன்னது நினைவு வரவே அதை வைத்திருந்த அலமாரியைத் திறந்தார் சகுந்தலா. சுந்தரம் அலைபேசியில் நோண்டிக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தார்.
அந்த பைலின் மேலே வேறு ஏதோ புதிய ஒரு பைல் இருப்பதைக் கண்டவர் யோசனையுடன் அதை எடுத்தார். திறந்து பார்த்தவரின் முகத்தில் ஆச்சர்யமும் அடுத்து கோபமும் தெரிந்தது.
“ஏங்க, இந்த பைல் எப்படி இங்க வந்துச்சு…” என்றார் கணவரிடம்.
அவர் கையிலிருந்த பைலைப் பார்த்த சுந்தரம், “ஓ… இதுவா… இது அந்த நர்ஸ் பொண்ணோட சர்டிபிகேட் பைல்… முன்னப் பின்னத் தெரியாத பொண்ணை எப்படி வீட்டுக்குள்ள விட முடியும்… அதான், எதுக்கும் ஒரு செக்யூரிட்டிக்கு இருக்கட்டும்னு அன்னைக்கு அந்த டாக்டர் கிட்ட சொல்லி அந்தப் பொண்ணு சர்டிபிகேட்ஸ் வாங்கி வச்சுகிட்டேன்…”
கணவன் சொன்னதும் அதிர்ச்சியோடு நோக்கியவர், “உங்களுக்கு இந்த உலகத்துல யாரு மேலயுமே நம்பிக்கை கிடையாதா… எப்படிங்க இப்படி இருக்கீங்க… பாவம் அந்தப் பொண்ணு… எவ்வளவு அன்பா இந்த வீட்டுல ஒருத்தி மாதிரி பழகுது… எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யுது… அந்தப் பொண்ணுக்கு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படும்…”
“அது சரி, அந்தப் பொண்ணு வருத்தப்படுதேன்னு யாரு எவருன்னு தெரியாத பொண்ணை நம்பி வீட்ல சேர்க்க முடியுமா… அதனால இப்ப உனக்கு என்ன பிரச்சனை… வேலைக்கு வர்ற எல்லாரும் இப்படி பண்ணறது தானே…”
அசால்ட்டாய் கேட்ட கணவனிடம் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திகைத்தவர் சொன்னாலும் அவர் புரிந்து கொள்ளப் போவதில்லை என்று அமைதியானார்.
பணத்தை மட்டுமே நம்பும் அவருக்கு தன்னைத் தவிர மற்ற மனிதர்களிடம் நம்பிக்கை இல்லை என்பது அறிந்தது தானே…
மனைவியின் முக சுளிப்பே தான் செய்தது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்த, “இவ ஒரு உலகம் தெரியாதவ… யாரையாவது நம்பி ஏமாந்தா தான் நான் செய்யறது சரின்னு புரியும்…” என நினைத்தார் சுந்தரம்.
“சகு… நம்ம பொண்ணுக்கு லாஸ்ட் செமஸ்டர் முடிஞ்சதும் கல்யாணம் வச்சுடலாம்னு நினைக்கிறேன்… நீ என்ன நினைக்கற…” என்றார் மனைவியிடம்.
“ஏதோ, இந்த மட்டும் தன்னை மகளின் தாயாய் மதித்து அபிப்ராயம் கேட்டாரே…” என நினைத்தவர் சட்டென்று அவர் மகளின் கல்யாணப் பேச்சை எடுக்கவும் திகைத்து, “இப்ப என்னங்க, திடீர்னு அவ கல்யாணத்தைப் பத்தி யோசனை…” என்றார் அவர் மனதிலுள்ளதைத் தெரிந்து கொள்ள எண்ணி.
“நமக்கிருக்கிறது ஒரே பொண்ணு… படிப்பு முடிஞ்சா கல்யாணம் பண்ணிட வேண்டியது தானே… எதுக்கு லேட் பண்ணிட்டு… அப்புறம் நாளைக்கு காதல் கீதல்னு உன் பெரிய பையன் போல வந்து நின்னுடக் கூடாது பாரு…” என்றவர் மனைவியின் முகம் மாறவும், நல்ல விஷயம் பேசும்போது அவர் மனதை வாட்ட வேண்டாம் என நினைத்து அதோடு நிறுத்திக் கொண்டார்.
சகுந்தலா கணவனின் சுருக் வார்த்தையில் முகம் வாடி அமைதியாக, “மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா நீ அசந்து போயிடுவ…” என்றார் சுந்தரம். “ஹூக்கும், எல்லாம் முடிவு பண்ணிட்டு எனக்கு சும்மா இன்பர்மேஷன் மட்டுமா…” என்ற கடுப்பு வந்தாலும் மகளின் கல்யாண விஷயம் என்பதால் அமைதியாய் “யாருங்க…” என்றார் சகுந்தலா.
“நம்ம ராஜ் மகன் தேவ் தான்… ரொம்ப நல்ல பிள்ளை… எந்த கெட்ட பழக்கமும் இல்லை… ஐபிஎஸ் முடிச்சு போஸ்டிங்க்கு வெயிட் பண்ணிட்டு இருக்கான்… பார்க்கவும் ரொம்ப ஸ்மார்ட்டா நம்ம குந்தவைக்கு பொருத்தமா இருப்பான்… நீ கூட ஒரு பாமிலி பங்க்ஷன்ல பார்த்திருக்கியே…” அவர் சொல்லவும் ராஜ் குடும்பத்தைப் பற்றியும் அவர்களின் ஒரே மகனைப் பற்றியும் அறிந்திருந்த சகுந்தலாவின் முகமும் சந்தோஷத்தில் மலர்ந்தது.
ராஜ் மோகன் சுந்தரத்தின் நெருங்கிய நண்பர் என்றாலும் இவரைப் போல அல்ல… அவர் பரம்பரைப் பணக்காரர் என்பதால் பணத்தோடு உள்ள மோகத்தைவிட மனிதர்களை நேசிக்கும் சுபாவம் கொண்டவர். அவருடைய மனைவி தேவிகாவும் மிகவும் சாந்தமானவர். இருவரும் நிறைய அநாதை இல்லங்களுக்கு வழக்கமாய் நன்கொடை செய்து வரும் பழக்கம் உள்ளவர்கள் என்பது மட்டும் சுந்தரத்துக்கு நண்பரின் பழக்க வழக்கத்தில் பிடிக்காத ஒன்று… அதை எத்தனயோ முறை சொல்லவும் செய்திருக்கிறார்.
“இப்படி இல்லாதவங்களுக்கு கொடுத்துட்டே இருந்தா நம்ம கிட்ட எவ்ளோ பணம் இருந்தாலும் பத்தாது… தான தருமம் எல்லாம் ஒரு அளவோட வச்சுக்கோ…” என்று.
நண்பனின் அறிவுரையைக் கேட்டு புன்னகைப்பவர், “கொடுக்கக் கொடுக்க எங்கிட்ட கூடிட்டு தானே இருக்கு… என் அப்பா விட்டுட்டுப் போனதை விட நாலு மடங்கு சொத்து நான் சம்பாதிச்சுட்டேன்… எங்கிட்ட உள்ள முழுதையும் கொடுக்க நான் பைத்தியக்காரன் இல்லை… ஆனா என்னால முடிஞ்சதை மத்தவங்களுக்குக் கொடுக்கிறதில் வருத்தமும் இல்லை… இல்லாதவங்களுக்கு கொடுக்கிறதுல கிடைக்குற சந்தோஷமே தனிதான்…” என்பார். அதற்கு மேல் பதி்ல் சொல்லாமல் வாயை மூடிக் கொள்வார் சுந்தரம்.
அப்படிப்பட்ட குடும்பத்தில் அத்தனை சொத்துக்கும் ஏக வாரிசாய் பிறந்த தேவ் மோகனை தனது ஒரே மகளுக்கு மணமுடித்து அந்த வீட்டின் இளவரசியாய் ஆக்க வேண்டும் என்ற அவரது ஆசையில் தவறில்லையே.
கணவன் சொன்னதைக் கேட்டு திகைத்த சகுந்தலாவின் மனமும் தேவ் வீட்டு சம்மந்தம் என்றதும் சந்தோஷமானது. அவர் பணத்துக்காக யோசிக்கா விட்டாலும் தேவின் பெற்றோரின் சுபாவத்துக்காகவே அந்த நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டால் மகளின் வாழ்வு சந்தோஷமாய் இருக்கும் என்று எண்ணினார்.
மனைவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் சுந்தரத்தை உற்சாகமாக்க, “என்ன சகு, நான் சொன்னது நல்ல சம்மந்தம் தானே…” என்றார்.
“ம்ம்… நீங்க உங்க வாழ்க்கைலயே உருப்படியா பண்ணின ரெண்டாவது நல்ல காரியம் இதுதான்…” என மனதில் நினைத்துக் கொண்டவர், “ராஜ் அண்ணா வீட்டுக்கு மருமகளாப் போக நம்ம பொண்ணு கொடுத்து வச்சிருக்கனுமே… அவங்க வீட்ல பேசிட்டீங்களா… அந்தப் பையனுக்கு குந்தவையை கல்யாணம் பண்ண விருப்பமா…” என்றார் ஆர்வத்துடன். 
“அதுசரி, அவங்ககிட்ட பேசாமலா உங்கிட்ட சொல்வேன்… நம்ம குந்தவை படிப்பு முடிய வெயிட்டிங்… பொண்ணு படிச்சிட்டு இருக்கும்போது கல்யாணத்தைப் பத்தி பேசி அவ மனசைக் குழப்ப வேண்டாம்னு அவங்க சொல்லிட்டதால தான் உங்கிட்ட கூட இத்தனை நாள் சொல்லாம இருந்தேன்… அவங்க மகன் பெத்தவங்க பேச்சைத் தட்டாத பிள்ளை… இதான் பொண்ணுன்னு ராஜ் சொன்னதுமே சரின்னு சொல்லிட்டான்… உன் பிள்ளை மாதிரின்னு நினைச்சியா…” கிடைக்கும் கேப்பில் எல்லாம் தன் மூத்த பிள்ளையைப் பற்றி அவர் குத்திக் காட்ட சகுந்தலாவின் முகம் வாடியது.
“ம்ம்… நல்லதுங்க… நீங்களும் நம்ம பொண்ணுகிட்ட ஒரு வார்த்தை கேட்டிருங்க…” என்றார் சகுந்தலா.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… இதைப் பத்தி இப்ப எதுவும் சொல்லாத… லாஸ்ட் செமஸ்டர் முடிய இன்னும் நாலஞ்சு மாசம் இருக்கே… அப்புறம் பேசிக்கலாம்…” கணவர் சொல்ல சரியென்று தலையாட்டி வெளியே வந்தார்.
நாட்கள் அழகாய் நகர வானதியும் அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாகவே மாறியிருந்தாள். சுந்தரம் அன்று அப்படி சொன்ன பிறகும் வானதி எட்டி நிற்காமல் இன்னும் அக்கறையோடு அவரை கவனித்துக் கொண்டாள். 
கல்லூரிக்குக் கிளம்பிய குந்தவையின் முகத்தில் ஒரு சோர்வும் யோசனையும் தெரிய, “இவளுக்கு எந்து பற்றி, நேற்று தொட்டு இப்படி தான் டல்லா இருக்கா…” என யோசித்த குந்தவை அன்று இரவே அவளிடம் கேட்டாள். முதலில் ஒன்றுமில்லை என்று மழுப்பியவள், பிறகு மெல்ல மனதில் உள்ளதை சொன்னாள்.
“அ..அதுவந்து… அன்னைக்கு நாம ஐஸ்க்ரீம் பார்லர்ல பார்த்தோம்ல…” என்றதும் யோசித்தவள், “யாரு ஆ கட்டி மீசக்காரனோ…” என்றாள் வானதி பட்டென்று.
“ம்ம்… அன்னைக்கு நாம பேசின பிறகு என் கண்ணுலேயே படலை… அதான் என்ன ஆச்சோன்னு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு…” என்றாள் கவலையுடன்.
“எந்து கஷ்டம்… நினக்கு பின்னில் பாடிகார்டு வராத்த கஷ்டமோ… அல்லெங்கில்…” என்று அவள் இழுக்கவும் குந்தவையின் முகம் சிவந்தது.
“அதுவந்து… எனக்கு சரியா சொல்லத் தெரியல… அவன் அங்கங்கே நின்னு என்னைப் பார்த்து சிரிக்கும்போது ஒரு மாதிரி கடுப்பா தான் இருந்துச்சு… ஆனா, இப்போ வரலைன்னதும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு… அன்னைக்கு என்னைப் பிடிக்கும்னு வேற சொல்லிட்டுப் போயிட்டான்…”
“ம்ம்… நினக்கு அவனை இஷ்டமானோ…”
“சரியா யோசிக்கத் தெரியலை வானதி… ஆனா ஒருநாள் அவனைப் பார்க்கலைனாலும் அந்த நாள் முழுமையடையாத மாதிரித் தோணுது…” என்றாள் சோர்வுடன்.
“அப்ப சம்சயிக்கண்ட, இது அதன்னே…” என்றாள் வானதி. “அதுன்னா, எதை சொல்லற…” குந்தவை புரியாத போல கேட்க அர்த்தத்துடன் புன்னகைத்தாள் வானதி.
இருவரும் மாலை நேரத்தில் மொட்டை மாடியில் காற்றை அனுபவித்து நட்சத்திரங்களை எண்ணியபடி பேசிக் கொண்டிருந்தனர்.
“இப்பிராயத்தில் ஒரு பெண்ணினு ஒரு ஆணோடு தோணுந்த சினேஹம்… அதினே மலையாளத்தில் பிரேமம் எந்து பரயும்… ஹிந்தியில் பியார், தமிழில் காதல்… நின்டே மனசில் காதல் வந்து… கள்ளிப் பெண்ணே…” என்று அவள் கன்னம் கிள்ள இருட்டிலும் முகம் சிவந்தாள் குந்தவை.
“ச்சீ… அதெல்லாம் ஒண்ணும் இல்லை… எனக்கு இந்த காதலில் எல்லாம் விருப்பம் இல்லை…”
“ஓ… விருப்பம் இல்லாதயானு அச்செக்கனே காணாதே இங்கனே பரிதவிக்குன… நீ சம்மதிச்சில்லெங்கிலும் இது அது தன்னே…” என்று உறுதியாய் கூறினாள் வானதி.
“ப்ச்… வானு, நீ பாட்டுக்கு கதை கட்டி விடாதே… அவன் யாரோ என்னவோ, டெய்லி பாக்குற ஒருத்தன் திடீர்னு காணாமப் போயிட்டா என்னாச்சுன்னு மனசு பதறும் இல்லையா… அது போல தான் எனக்கும் தோணுச்சு… மத்தபடி வேறொண்ணும் இல்ல…” என்றவள் தள்ளி நின்று கொள்ள வானதி புன்னகைத்தாள்.
இல்லை, இல்லை என்று சொல்வதிலேயே ஏதோ இருக்கும் போலிருக்கிறதே… என்பது போல் அவளது பார்வை தோழியைத் துளைக்க, “மழை வரும்போல இருக்கு… வா கீழ போகலாம்…” என்றாள் குந்தவை பேச்சை மாற்றி. அவளுக்கே அவள் மனது இன்னும் தெளிவாய் புரியாமல் இருக்க தேவ் மோகனை காதலிப்பதாய் ஒத்துக் கொள்ள மனம் மறுத்தது.
“நீ போ… நான் குறச்சு நேரம் கழிச்சு வராம்…” வானதி சொல்லவும் குந்தவை கீழே சென்றாள். ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் வானதி.
இப்போது நட்சத்திரங்கள் எல்லாம் காணாமல் போயிருக்க வானம் இருட்டிக் கொண்டிருந்தது.
“மழை வருமோ…” என மேகத்தை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தவள், “வானதி… போன் அடிக்குது பாருமா…” சொல்லிக் கொண்டே சகுந்தலா மெதுவாய் படியேறி வரவும்,
“அச்சோ… நீங்கள் எந்தினு ஆன்ட்டி புத்திமுட்டுந்தது… நான் வரில்லே…” என்றவளிடம் புன்னகைத்தவர், “அம்மான்னு போட்டிருந்துச்சு… எதுவும் முக்கியமான காலா இருக்கப் போகுதோன்னு எடுத்திட்டு வந்தேன், பேசும்மா…”
“ம்ம்… சரி ஆன்ட்டி…” என்றவள் அன்னையின் மிஸ்காலைத் தொட அழைப்பு சென்று ரிங்கானதும் எடுக்கப்பட்டது.
“ஹலோ மோளே…” அன்னையின் குரல் கேட்கவும் மனதுக்கு சந்தோஷமாய் இருக்க, “அம்மே… விளிச்சிருந்தோ… அவிடே எல்லாருக்கும் சுகமல்லே…” நலம் விசாரித்தாள் வானதி.
அவர் ஏதோ சொல்லவும் அவள் முகம் கவலையாய் மாற, “அச்சோ… சேச்சியை பன்னி பிடிச்சோ…” என்றதும் அவள் பேசத் தொடங்கியதும் கீழே சென்ற சகுந்தலாவின் காதில் விழ, “என்னது அவ சேச்சியை பன்னி பிடிச்சிருச்சா…” என்று அதிர்ச்சியுடன் நிற்க அப்போதுதான் வீட்டுக்கு வந்த அருள் அன்னை மாடிப்படியில் நிற்பதைக் கண்டு, “என்னம்மா, இங்கே நிக்கறிங்க…” என்றான்.
“அருளு… நம்ம வானதி அக்காவைப் பன்னி பிடிச்சிருச்சாம் டா… அவ அம்மாட்ட பேசிட்டு இருக்கா…” சொல்லிக் கொண்டே மீண்டும் ஏறி வானதியிடம் செல்ல, அன்னை சொன்னதைக் கேட்டு அதிர்ந்த அருளும் அன்னையின் பின்னிலேயே சென்றான்.
“சரி மா, நான் பரஞ்ச மெடிசின் வாங்கிக் கொடுக்கு… வைக்கட்டே…” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு தன்னை கவலையோடு பார்த்து நிற்கும் சகுந்தலாவையும், புரியாமல் நிற்கும் அருளையும் பார்த்து, “எந்தா ஆன்ட்டி…” என்றாள் குழப்பத்துடன்.
“ஏம்மா, நீ கொடுக்கிற மெடிசின் போதுமா… அக்காவை ஹாஸ்பிடல் அழைச்சிட்டுப் போக சொல்லு…” அவர் சொல்ல, “ஆமா வானதி… பன்னி கடிச்சதுக்கு ஊசி எதாச்சும் போடுவாங்க… நாமளே மருந்து சாப்பிட்டு செப்டிக் எதுவும் ஆகிடப் போகுது… ஆமா, எப்படி ஆச்சாம்…” என்றான் அருள்.
“நிங்கள் எந்தா பரயுனது… எனிக்கு மனசிலாயில்ல…” அவள் குழப்பமாய் கேட்கவும் அன்னையை ஒரு பார்வை பார்த்தவன், “உங்க அக்காவைப் பன்னி பிடிச்சிருச்சாம்… ரொம்ப கடிச்சிருச்சா, பிராப்ளம் இல்லையே…” என்றான்.
அதைக் கேட்டு பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தவள், “ஹாஹா, சேச்சிக்கு பீவர்… பனி பிடிச்சுவெந்து பரஞ்சது நிங்கள்க்கு பன்னி எந்து தோணியதா…” என்று சிரிக்க அசடு வழிந்த அருள் அன்னையை நோக்கி முறைக்க,
“ஓ பீவர் தானா… நானும் கூட பயந்துட்டேன்… சீக்கிரமே நீ தமிழ் படிக்கணும்… இல்லேன்னா நான் மலையாளம் படிக்கணும்… இல்லேன்னா இந்த லாங்குவேஜ் பிராப்ளம் வந்துட்டே இருக்கும் போலருக்கு…” என்றவர், “நீ குளிச்சிட்டு வாடா, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…” என்று அங்கிருந்து நழுவ வானதி அப்போதும் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவன் அங்கேயே நிற்பதை கவனித்தவள், “நிங்களே பிரண்டினு சுகமாயோ…” என்று கேட்க, “ம்ம்… டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க… ரெண்டு வீட்டுலயும் கல்யாணத்துக்கும் சம்மதிச்சுட்டாங்க…” என்றான் அருள்.
“ஆஹா, இது அடிபொளி… சரி சாப்பிட வாங்கோ…” என்று தமிழில் சொல்ல அவன் வியப்புடன் நோக்கவும், “நான் நிறைய தமிழ் மூவி ஒக்கே காணுந்துண்டு… சீக்கிரமே தமிழ் பேசும்…” என்று புன்னகைத்து செல்ல, “அடடா, இந்த கேரளத்துப் பைங்கிளி தமிழ் பேசப் போகுதாமே… நாமதான் பாஷை புரியாம இந்த அம்மாவால தேவை இல்லாம பல்பு வாங்கிட்டோம்…” என நினைத்தபடி சிறிது நேரம் நின்றவன் குளித்துவிட்டு சாப்பிட சென்றான்.
அடுத்தநாள் மதிய உணவுக்கு அருளுடன் அவனது நண்பன் ஒருவனும் வந்திருக்க வானதியைக் கண்டவனின் பார்வை அவளையே சுற்றி வர கடுப்புடன் கவனித்துக் கொண்டிருந்த அருள் அவன் விசாரிக்கவும் எரிச்சலானான்.
“டேய், யாருடா இந்தப் பொண்ணு, உன் தங்கச்சியா…” என்றதும் முறைத்தவன், “இவனை எல்லாம் வீட்டுக்கு கூட்டி வந்து சாப்பாடு போட்டிருக்கவே கூடாது… ஹோட்டல்ல சாப்பிட்டு போடா நாயேன்னு தள்ளி விட்டிருக்கணும்…” என நினைத்தபடி, “அது என் தங்கை இல்ல டா… உனக்குத் தங்கை முறை… என் மாமா பொண்ணு… ஓவரா சைட் அடிக்கிறதை நிறுத்திட்டு தின்னுட்டு கிளம்பற வழியைப் பாரு…” என்று காதில் ஓப்பனாகவே சொல்லிவிட்டான்.
“ஓ… இப்படி ஒரு சூப்பர் பிகர் உனக்கு மாமா பொண்ணா இருக்கும்னு முன்னமே தெரிஞ்சிருந்தா…”
“தெரிஞ்சிருந்தா, ஏன் நிறுத்திட்ட சொல்லு…” முறைப்பாய் கேட்டவனிடம், “தெரிஞ்சிருந்தா, சிஸ்டர்னு முன்னமே மனசைத் தயார்படுத்தி வச்சிருப்பேன்… இப்ப கொஞ்சம் ஏமாற்றமா இருக்கு…” என்றவன் கிளம்பும்போது “போயிட்டு வரேன் சிஸ்டர்…” என்று சொல்லி செல்ல வானதி அருளிடம், “நான் நர்ஸ்னு நிங்களே பிரண்டினு முன்னமே அரயுமோ…” என்றாள் புன்னகையுடன்.
“ம்ம்… அறயும், அறயும்… கன்னத்துல ஓங்கி ஒண்ணு அறயும்…” கடுப்புடன் மனதில் நினைத்தபடி ஆமென்று தலையாட்டினான் அருள். அவள் மீதுள்ள அவன் விருப்பமே நண்பனின் மீது வெறுப்பாய் பொறாமைப்பட வைத்தது என்பதை அவன் யோசிக்கவில்லை.
களவாடி சென்றது
காதல்தானா என
ஆராயும் முன்னே
மொத்தமாய் மனதை
கொள்ளையிட்டு
கொல்லும் காதல்
வார்த்தைகள் இன்றியே
நிசப்தமாய் சப்திக்கிறது…

Advertisement