Advertisement

எதற்கும் தந்தையை எதிர்த்துப் பேசாதவள், “என்னப்பா, வானதியை இப்படி சொல்லறீங்க… நம்ம மேல உள்ள அன்புல தான் அம்மாக்கு முடியலைன்னு அவ எல்லா வேலையும் செய்யுறா… அதுக்கு விலை சொல்லி அவளை அசிங்கப் படுத்தாதீங்க…” என்ற மகளை திகைப்புடன் நோக்கியவர், “ஓ… அப்ப எக்ஸ்ட்ரா மணி கொடுக்க வேண்டாம்னு சொல்லறியா… எனக்கு லாபம்தான்…” என்றபடி கையை நக்கிக் கொண்டு எழுந்து செல்ல வானதி சட்டென்று கண்ணில் துளிர்த்த கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டவள் வேகமாய் அடுக்களைக்கு சென்று விட்டாள்.
அன்னையிடம் டாக்டரிடம் போக வேண்டுமா என்று விசாரித்துவிட்டு அவரை சாப்பிட அழைத்து வந்த அருளின் காதிலும், சகுந்தலாவின் காதிலும் சுந்தரம் சொன்ன வார்த்தை விழ விக்கித்து நின்றனர்.
“ச்சே… எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இந்த வீட்டுப் பெண் போல நினைத்து வானதி செய்த உதவியை இப்படியா அசிங்கப்படுத்த வேண்டும்…” காய்ச்சலின் தாக்கத்தில் சோர்ந்து நின்றாலும் அப்போதே கணவனிடம் நியாயம் கேட்க வேண்டுமென்று மனம் துடித்தது சகுந்தலாவுக்கு. அருளுக்கும் தந்தை சொன்ன வார்த்தை பிடிக்கவில்லை என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது.
கை கழுவி வந்தவர், “என்ன சகு, எழுந்துட்ட… இப்பப் பரவால்லியா… சாப்பிட்டு ரெஸ்ட் எடு…” சொல்லியவாறே கையை டவலால் துடைத்துக் கொண்டு, “நான் ஆபீஸ் கிளம்பறேன்… நீ, நம்ம ஆடிட்டர் ஆபீஸுக்குப் போயிட்டு வந்திடு…” மகனிடம் உத்தரவிட்டு கிளம்பினார்.
“ஏன்மா, உன் புருஷன் இப்படிப் பேசிட்டுப் போறாரே… நீயாச்சும் கண்டிச்சு வைக்க மாட்டியா… நாக்கு இருக்குன்னு என்ன வேணும்னாலும் பேசுவாரா… பாவம் வானதி…” சாப்பிடாமல் பாதியிலேயே எழுந்து கொண்ட குந்தவை அடுக்களைக்கு செல்ல அங்கே கலங்கிய கண்களைக் கண்ட்ரோல் பண்ணி இவளை நோக்கி சிரித்தாள் வானதி.
“குந்தவை, இன்னொரு தோசை தரட்டே…” புன்னகையுடன் கேட்டவளை முறைத்தவள், “வானு, நீ இனி இங்கே எந்த வேலையும் செய்ய வேண்டாம்… அம்மாவை மட்டும் பார்த்துகிட்டாப் போதும்… ஹோட்டல்ல சாப்பாடு ஆர்டர் பண்ணிக்கலாம்…” என்றவளை நெகிழ்வுடன் பார்த்தாள்.
“ஹேய் அதொண்ணும் வேண்டா, அங்கிள் பரஞ்சதில் தெற்றொந்தும் இல்லல்லோ… நான் பைசய்க்கு வேண்டி ஜோலிக்கு வந்தவள் தன்னே அல்லே… நிங்கள்டே சிநேஹவும், எனிக்கு தந்த சப்போர்ட்டும் காரணம் நான் குறச்சு அதிகம் அட்வான்டேஜ் எடுத்து போயி… சாரமில்ல… நிங்கள் அதினே ஓர்த்து விஷமிக்கண்டா…”
கண்ணில் நீர் மின்ன சொன்னவளின் பின்னில் நின்ற சகுந்தலா, “வானதி, உனக்கு அவர் சொன்ன வார்த்தை எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும்… எதையும் எதிர்பார்க்காம நீ செய்த உதவியைக் கூட அவரால எதார்த்தமா எடுத்துக்க முடியாது… அவருக்கு எல்லாமே பணம் தான்… எல்லா செயலுக்கும் விலை பேசறது தான்  அவர் சுபாவம்… எப்போ எப்படிப் பேசி மனசைக் கிழிப்பார்னு சொல்லவே முடியாது… நீ வருத்தப்படாத மா…” ஆறுதலாய் சொல்ல அவர் கையைப் பற்றிக் கொண்டாள்.
“இல்ல ஆன்ட்டி… ஜோலிக்கு வேண்டி நாடும் வீடும் விட்டு இவிடே வந்தவளை யாரெந்து கூடி அரயாதே அங்கிள் ஜோலி தந்து வீட்டில் கூட்டி வந்து தாமசிப்பிச்சு… அதோண்டல்லே எனிக்கு பேடிக்காத இவிடே நிக்கான் பற்றியது… ஆ நன்னி நான் எந்தும் மறக்கில்லா… அங்கிள் எந்து பரஞ்சாலும் எனிக்கு என்டே அச்சன் பறயனது போல தன்னே… எல்லாரும் ஒரே சுபாவக்காரர் ஆவில்லல்லோ…” அவள் அமைதியாய் சொல்ல மகிழ்வோடு பார்த்தார் சகு.
“சின்ன வயசுல உனக்கு எவ்ளோ பக்குவப்பட்ட மனசு மா… சரி, நீயும் போயி சாப்பிடு…” என்றார் சகுந்தலா.
“ம்ம்… அதானே, உன்னால வேற எப்படி யோசிக்க முடியும்…” என்ற குந்தவை புறப்பட செல்ல அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அருளின் மனமும் அவளை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டது. குடும்ப பொருளாதாரம் கூட சிலரின் சுபாவத்தையும் பொறுமையையும் தீர்மானிக்கும் என்று தோன்றியது.
“ஆன்ட்டிக்கு கஞ்சி வச்சிருக்கேன்… இரிக்கு… எடுத்திட்டு வராம்…” என்றவள் ஒரு பவுலில் அரிசியைப் பொடியாக்கி காய்ச்சியிருந்த கஞ்சியை எடுத்து வந்தாள்.
“நானும் இட்லியே சாப்பிட்டிருப்பேனே மா… எதுக்கு ஆளுக்கு ஒண்ணு செய்து மெனக்கெடற…”
“மனசுக்குப் பிடிச்சவருக்காக செய்யுந்த ஏதொரு காரியமும் மெனக்கேடல்ல ஆன்ட்டி… அது ஒரு சந்தோஷம்…” என்றவள், “ஒற்ற மினிட்டு, தோசை கொண்டு வராம்…” என்று அருளிடம் சொல்லி செல்ல திகைத்தான்.
“எனக்கு இட்லி பிடிக்காதுன்னு தோசை ஊத்தப் போறாளே… அப்ப என்னையும் இவளுக்குப் பிடிக்குமா…” என்று துள்ளிக் குதித்த மனசாட்சியை “கொஞ்சம் அடங்கறியா… அவ ஏதோ பாவம் பார்த்து தோசை கொண்டு வரேன்னு சொன்னா, ஓவரா குதிக்கற… இந்த மாதிரி நல்ல பொண்ணை எல்லாம் என் அப்பா மாதிரி ஹிட்லர் மாமனார்கிட்ட மாட்டிவிட என்னால முடியாது…” என்று பதில் சொன்னான் அருள்.
“நான் உன்னைப் பிடிக்குமான்னு தானே யோசிச்சேன்… நீ என்னடான்னா உன் அப்பாக்கு அவளை மருமகளாக்குறது வரைக்கும் யோசிக்கற… ரொம்ப தான் பாஸ்டா போற அருளு…” கேலி செய்த மனசாட்சியை விரட்டியவன் அவள் தோசையோடு வரவும் நிமிர்ந்து பார்த்தான். இன்று என்னவோ அவள் புதிதாய் தெரிய உன்னிப்பாய் பார்க்கக் கூட தயங்கிய மனதை அடக்கி அவளை நோக்கிப் புன்னகைத்தான்.
அவனிடம் அதை எதிர்பார்க்காதவள் திகைத்து பதிலுக்குப் புன்னகைத்து உள்ளே செல்ல அவனுக்கு மனம் லேசானது போல் சந்தோஷமாய் இருந்தது.
எத்தனை சமாதானம் சொல்லியும் அலட்டிக் கொண்டிருந்த மனதுக்கு அவனது புன்னகை மயிலிறகால் வருடியதுபோல் சுகத்தைக் கொடுக்க மனதில் சஞ்சலம் நீங்கி அடுத்த தோசையை எடுத்துக் கொண்டு அருளிடம் சென்றாள்.
“அண்ணா, ரெடியா…” கேட்டுக் கொண்டே குந்தவை வர அருளும் சாப்பிட்டுக் கிளம்பினான். சகுந்தலாவுக்கு மாத்திரை போட்டதால் காய்ச்சல் சற்று குறைந்திருக்க சோபாவில் அமர்ந்து ஓய்வெடுத்தார்.
“மதியத்துக்கு நமக்கு மட்டும் ரசம் சாதம் வச்சாப் போதும்… அவங்களை வெளிய சாப்பிட சொல்லிடறேன்…” என்றார் சகுந்தலா கணவன் மீதிருந்த கோபத்தில். “ஹாஹா, அங்கிள் பாவம் ஆன்ட்டி… சாம்பார், ரசம், ஒரு பொறியல் வைக்காம்…” என்றாள் வானதி.
“உன் பேருக்குத் தகுந்த போல உன் மனசும் வானத்தைப் போல பெருசு மா… உனக்குப் பிடிச்சதைப் பண்ணு…” என்றார்.
அவருடன் பேசிக் கொண்டே காய்கறிகளைக் கட் பண்ணி அடுக்களைக்கும் சென்று சமையலை முடித்தாள்.
காலையில் தான் சொன்னதைப் பற்றிய எந்த வருத்தமும் இல்லாமல் மதியம் சாப்பிட வந்த சுந்தரத்துக்கு மலர்ந்த முகத்துடன் பரிமாற திருப்தியாய் சாப்பிட்டார்.
அருகில் அமர்ந்து ரசம் சாதம் சாப்பிடும் மனைவியிடம், “இன்னைக்கு சாம்பார் புது டேஸ்ட்டா இருக்கு…” என்று கேட்க, “உங்களுக்கு ருசியா இருக்கட்டும்னு அரைச்சு விட்ட சாம்பார் வச்சிருக்கா… நாக்குக்கு நல்லாருக்கா… நல்லா சாப்பிடுங்க…” மனைவி குரலில் வித்தியாசம் உணர்ந்தவர், அமைதியாய் சாப்பிட்டு சிறிது ஓய்வெடுத்து கிளம்பினார்.
சாப்பிட்டு வானதி கொடுத்த மாத்திரையைப் போட்டதும் சிறிது நேரத்தில் நன்றாக வியர்க்க காய்ச்சல் ஓடிப்போனது.
அருள் வருவான் என்று காத்திருந்த வானதி அவனைக் காணாமல் சகுந்தலாவிடம் கேட்டாள்.
“ஆன்ட்டி, சமயமாயி… செறிய சார் இன்னும் கழிக்கான் வந்தில்லாலோ…”
“தெரியலியே மா… என்கிட்ட எதுவும் சொல்லவும் இல்லை… மொபைல்ல அவன் நம்பர் இருக்கும், எடுத்துப் பேசிப் பாரு…”
“சரி ஆன்ட்டி…” என்றவள் அவரது அலைபேசியில் அழைக்க அது எடுக்கப்படவில்லை.
“எந்தா எடுக்காத்தது…” யோசித்துக் கொண்டே மீண்டும் அழைக்க இந்த முறை அழைப்பைக் கட் பண்ணினான். அடுத்த நிமிடமே அவனது போட்டோவுடன் அழைப்பு வர புன்னகையுடன் எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.
“அம்மா, இன்னைக்கு என்னால லஞ்சுக்கு வர முடியாது… வெளிய இருக்கேன்…” என்றான் அருள் எடுத்ததும்.
“நான் வானதி…” அவள் சொல்லவும் ஒரு நிமிடம் திகைத்து, “சொல்லு வானதி…” என்றான்.
அவன் சொல்லும்போது தனது பெயரின் அழகு கூடுவது போல் உணர்ந்தாள்.
“அல்ல, சமயமாயி, ஹோட்டலில் கழிக்குமோ…” என்றாள்.
“இல்ல வானதி… நேத்து சொன்னேன்ல, அந்த பிரண்டுக்கு பிட்ஸ் வந்திருச்சுன்னு சொன்னாங்க, அதன் பிரண்ட்சோட பார்க்க வந்தேன்…” என்றான் அவன்.
“ஓ… ஹாஸ்பிடலில் ஆனோ… சரி, வைக்கட்டே…” என்றவள் அழைப்பைத் துண்டித்த பின்னும் அவளது குரல் அவன் காதிலேயே கேட்டுக் கொண்டிருக்க, “நான் சாப்பிட வரலேன்னு மேடம் கால் பண்ணி விசாரிக்குறாங்களே… என் மேல அவ்ளோ அக்கறையோ…” என புன்னகைத்துக் கொண்டே நண்பர்களிடம் சென்றான். உணவால் வயிறு நிரம்பாவிட்டாலும் அவள் அக்கறையில் மனம் நிறைந்தது.
யாராலும் வரையறுக்க
முடிவதில்லை…
எந்த நொடியில்
எதனால் இந்த அன்பு
ஏற்படுகிறதென…
சலனமில்லா நீரில்
விழுந்த கல் போலவே
இந்தக் காதலும் மனதில்
சலசலத்துச் செல்கிறது…
காரணங்கள் காதலுக்குத்
தேவையில்லை…
காற்றைப் போல்
சடுதியில் உள்
நுழைந்துவிடுகிறது…

Advertisement