Advertisement

அத்தியாயம் – 10
“பகவானே… நான் எந்தா காணுந்தது… இவன் குடிச்சிட்டு வந்திரிக்குனோ… ஆன்ட்டி கண்டால் எத்தர பீல் செய்யும்… நல்ல காலம் எல்லாரும் நேரத்தே உறங்கி…” வானதி யோசித்துக் கொண்டே தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி தோசையை ஊற்றினாள்.
குளித்து வேறு உடையில் வந்த அருள், அடுக்களை வாசலில் நின்று தொண்டையை செரும அவளுக்குத் திரும்பி அவனைப் பார்க்கவே பயமாயிருந்தது.
“அம்மா தூங்கிட்டாங்களா…” மெல்லிய குரலில் கேட்டான் அருள்.
“ம்ம்… எல்லாரும் உறங்கி… இரிக்கு… தோசை கொண்டு வராம்…” என்றவள் திரும்பாமலே பதில் சொல்ல அவன் உள்ளே வருவதை முதுகில் உணர்ந்தவளுக்கு திக்கென்றது.
மற்றவர்களுக்கு உதவ மனமில்லா விட்டாலும் பெண்கள் விஷயத்தில் கண்ணியமானவன் என நினைத்திருந்தவளுக்கு அவனது இப்படியான வருகை பயத்தைக் கொடுத்தது.
அச்சத்துடன் சட்டென்று திரும்பியவள் அவன் கிளாஸில் தண்ணி எடுத்து குடிப்பதைக் கண்டதும் நெஞ்சில் கை வைத்து நிம்மதிப் பெருமூச்சு விட கவனித்துவிட்ட அருள், கேள்வியாய் அவளைப் பார்த்தான்.
“ஹூம்… என்ன…”
“ப்ச்….” என்றவள் தோளைக் குலுக்கிவிட்டு திரும்பிக் கொள்ள அவன் மேசைக்கு சென்றான். தோசையை எடுத்துத் தட்டில் வைத்து அவன் முன்னில் வைத்துவிட்டு வேகமாய் அடுக்களைக்கு சென்று விட்டாள் வானதி. இதுவரை அவனைப் பற்றி பெரிதாய் யோசிக்காவிட்டாலும் பயம் இருந்ததில்லை. சகுந்தலாவின் மகன் என்ற மதிப்பும் இருந்தது. இப்போது தனிமையும் அவன் நிலையும் பயத்தைக் கொடுத்தது.
அமைதியாய் தோசையை சாப்பிடத் தொடங்கியவன் சட்டென்று விக்கத் தொடங்க வேகமாய் தண்ணியைக் கொண்டு போய் வைத்துவிட்டு ஓடிச் சென்றாள்.
நான்கு தோசையில் அவன் எழுந்து கொண்டு, “தேங்க்ஸ்… அம்மா செய்து கொடுக்கிற தோசை போலவே இருக்கு…” என்று சொல்லி செல்ல அவள் முழித்தாள்.
“நல்லோணம் தன்னயானு சம்சாரிக்குந்தது… அப்போ வெள்ளம்(தண்ணி) அடிச்சது போலே எனிக்குத் தோணியது ஆனோ…” யோசித்துக் கொண்டிருக்க, “எனக்கு சூடா ஒரு கப் பால் தர முடியுமா…” அவன் கேட்க, தலையாட்டினாள்.
“நான் எந்தா இவன்டே கெட்டியவளோ…(பொண்டாட்டியா) ஆன்ட்டிக்கு வையாந்து சகாய்க்கான் வந்தா இவிடத்தே பணிக்காரி ஆக்கும் தோணுந்து…” அவனைக் குடிகாரனாய் கண்டதும் எதுவும் செய்யப் பிடிக்காமல் முனங்கியபடி பாலைக் காய்ச்சி, நன்றாக ஆற்றி இளம் சூடில் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர அவனைக் காணவில்லை.
“ஹா, குறச்சுநேரம் வெயிட் செய்யான் பற்றாதே ரூமிலேக்கு போயோ…” என்றவள் மாடியில் வெளிச்சம் தெரிய அங்கே கொண்டு போயி கொடுக்க வேண்டுமா என யோசித்தாள்.
பாலை வீணாக்க விருப்பமின்றி எரிச்சலுடன் படியேறினாள்.
இயர் போனை மாட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தான் அருள். தொண்டையை செருமிக் கொண்டு கதவைத் திறந்தவள், “பால்…” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று அதை மேசை மீது வைத்துவிட்டுத் திரும்ப அவளது முந்தானையை அவன் இழுப்பதுபோல் தோன்ற திடுக்கிட்டு திரும்பியவள் அசடு வழிந்தாள்.
அது மேசையின் கைப்பிடி ஸ்க்ரூவில் மாட்டிக் கொண்டிருக்க அவள் செய்கையை கவனித்தவன், “ஒரு நிமிஷம்… நானும் வந்ததில் இருந்து கவனிக்கிறேன்… எங்கிட்ட ஒருவித பயத்தோடவே நடந்துக்கறிங்க… என்னாச்சு…” என்றான் அருள் நிதானமாக.
“அ..அது வந்து…” என்று திணறியவள், “எனிக்கெந்து பேடி…” என நினைத்துக் கொண்டு, “டிரிங்க்ஸ் செய்து வந்தால் பேடி உண்டாவில்லே… பாவம் ஆன்ட்டி, நிங்களே இங்கனே கண்டிருந்தால் எத்தர விஷமிக்கும்… குடி நிங்களே மாத்திரம் அல்லா… நிங்கள குடும்பத்தையே விஷமிப்பிக்கும் (வேதனைப்படுத்தும்)… எந்தினா புதிய ஓரோ துர்ஷீலம் (கெட்ட பழக்கம்) ஒக்கே பழகனது…” அவள் சொல்லிக் கொண்டே போக புன்னகைத்தான் அருள்.
“இரு… இரு… விட்டா குடி குடியைக் கெடுக்கும்னு ஸ்பீச் கொடுப்ப போலருக்கு…” அவன் இடைமறிக்க, “சாரி, நிங்கள்டே அடுத்து இங்கனே பிரதீக்ஷிசில்லா…”(எதிர்பார்க்கல)
“அதுக்கு நான் டிரிங்க்ஸ் பண்ணவே இல்லையே…” என்றதும் திகைத்தவள் சந்தேகமாய் பார்த்தாள்.
“நிஜம் தான் வானதி…” முதன்முறையாய் அவள் பேரை சொல்லுகிறான் என்பதை கவனித்தவளுக்கு காரணம் தெரியாமலே சந்தோஷமாய் இருந்தது.
“என் பிரண்டு ஒருத்தன் ஒரு பொண்ணை நாலு வருஷமா லவ் பண்ணினான்… அது ஒரு முஸ்லிம் பொண்ணு… அவங்க வீட்ல பையன் மதம் மாறினா கல்யாணம் பண்ணி வைக்கறோம்னு ஒத்துகிட்டாங்க… ஆனா, இவன் வீட்ல அந்நிய மதத்துப் பொண்ணைக் கல்யாணம் பண்ண ஒத்துக்கலை… மீறிப் பண்ணினா குடும்பத்தோட விஷம் குடிச்சு செத்துப் போயிருவோம்னு அவன் அப்பா மிரட்டி இருக்காரு… காதலிச்ச பொண்ணை மறக்கவும் முடியாம அப்பா சொல்லை மீறவும் முடியாம தவிச்சவன் பிரான்டில விஷத்தைக் கலந்து குடிச்சுட்டான்…”
“ஐயையோ…” பதறினாள் அவள்.
“நான் என் மத்த பிரண்ட்ஸ்களோட உக்கார்ந்து பேசிட்டு இருக்கும்போது தான் போன் பண்ணி வீட்ல யாருமில்லாத நேரத்துல இப்படிப் பண்ணிட்டதா சொல்லி அழுதான்… நாங்க பக்கத்துல இருந்ததால சீக்கிரம் போயி அவனை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டுப் போனோம்… போற வழியில என் மேல வாந்தி எடுத்திட்டான்… அதைக் கழுவினாலும் பிரான்டி ஸ்மெல் போகாம எனக்கு குமட்டிட்டு வந்துச்சு… வந்து குளிச்சதும் தான் எனக்கே மூச்சு விட முடிஞ்சது…” அப்பாவியாய் சொன்னவனைக் கண்டு, “ச்சே… விஷயம் அறயாதே இவனைத் தெற்றாயி (தப்பா) விஜாரிச்சல்லோ…” என மனதுக்குள் வருந்தியவள், “இப்ப அவருக்கு எங்கனே உண்டு…” என விசாரித்தாள்.
“ம்ம்… ஆபத்து இல்லேன்னு டாக்டர் சொல்லிட்டார்… இப்பவும் ட்ரீட்மென்ட்ல தான் இருக்கான்… அவங்க பேரன்ட்ஸ் வந்துட்டாங்க…” என்ற அருளுக்கு, அவளிடம் எதற்கு தான் நல்லவன் என்று நிரூபிக்க வேண்டும்… இந்த விஷயத்தை எல்லாம் சொல்ல வேண்டும் என்று புரியவில்லை… ஆனால் அவள் தன்னை கெட்டவனாய் நினைப்பதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“இப்ப உன் சம்சயம் எல்லாம் போயிருச்சா…” அவன் கேட்க, புன்னகைத்தவள், “சாரி…” என்றாள்.
“எதுக்கு… நான் தண்ணி அடிச்சேன்னு நினைச்சதுக்கா…”
“அல்ல… நிங்கள் என்டே ஷால்னே பிடிச்சு வலிச்சு எந்து விசாரிச்சதினு…” சொல்லிவிட்டு அவள் கீழே செல்ல அவன் இதழில் மலர்ந்த புன்னகை அப்படியே நிலைத்திருந்தது.
“என்னைப் பார்த்தா அவ்ளோ கேவலமானவனா தெரியுதா… இரு உன்னை வச்சுக்கறேன்…” என்றவனின் மைன்ட் வாய்ஸ் கேட்டு, மனசாட்சி சிலிர்த்துக் கொண்டு எழுந்தது.
“எதுக்கு அவளை வச்சுக்கணும்… காதலிச்சு, கல்யாணமே பண்ணிக்கலாமே…” என்றதும் அதிர்ந்தான்.
“அடப்பாவி மனசாட்சி… காதல், கல்யாணம்னு அடுத்து என்னையும் விஷம் குடிச்சு சாகப் போட்டிருவ போலருக்கு… அப்படி எதுவும் இல்ல… நீ அடங்கு…” என்றவன் கட்டிலில் படுத்துக் கொண்டு கண்ணை மூட, “அவ ஏன் என்னை அப்படி நினைச்சா…” என்ற கேள்வியே மனதில் வந்தது.
நான் எப்படி இருந்தா அவளுக்கென்ன… அவள் எப்படி எனைக் கேள்வி கேட்கலாம் என நினைக்கத் தோன்றாமல் அவள் உரிமையோடு கேள்வி கேட்டு, அன்னைக்காய் கவலைப்பட்டது பிடித்தது. தன் மனதுக்கு அவளது அக்கறை சந்தோஷத்தைக் கொடுப்பது புரியாமல் மொத்தமாய் அவளைப் பிடிக்கத் தொடங்கியதை உணராமலே அந்த மடையன் உறங்கத் தொடங்கியிருந்தான்.
வானதியின் மனதிலும் அவனைத் தேவையில்லாமல் சந்தேகப் பட்டு விட்டோமே… என்ற வருத்தம் இருக்க, “ச்சே நான் இங்கே நர்ஸா வேலைக்கு வந்ததையே மறந்துட்டு இந்த வீட்டுப் பொண்ணாவே யோசிக்கத் தொடங்கிட்டேனே… நான் எப்படி இருந்தா உனக்கென்ன… நீ யாரு எனக்கு அட்வைஸ் பண்ணன்னு அவன் ஒரு வார்த்தை கேட்டிருந்தா என் மூஞ்சியைக் கொண்டு போயி எங்க வச்சுக்கறது… அதும் அவன் என் ஷாலைப் பிடிச்சு இழுத்தான்னு கேவலமா வேற யோசிச்சிருக்கேன்… இனி இப்படித் தேவையில்லாம எதுலயும் தலையிடக் கூடாது…” என மலையாளத்தில் யோசித்தபடி புரண்டு கொண்டிருந்தவள் சிறிது நேரத்தில் அலுப்பில் உறங்கிப் போக விதி மட்டும் உறங்கவில்லை.
காலையில் சகுந்தலாவுக்கு காய்ச்சலடிக்க அவருக்கு மாத்திரை கொடுத்துவிட்டு ரெஸ்ட் எடுக்க சொன்னாள் வானதி. குந்தவை காலை உணவை ஹோட்டலில் ஆர்டர் பண்ணுவதாக சொல்ல, வேண்டாமென்று மறுத்துவிட்டு வானதியே கோதாவில் இறங்கினாள்.
காலையில் சாப்பிட அமர்ந்த சுந்தரத்துக்கு புன்னகையுடன் இட்லியை வைக்க ருசித்து சாப்பிட்டார்.
“நீ நர்ஸிங் படிச்சதுக்குப் பதிலா குக்கிங் படிப்பு படிச்சிருந்தா பெரிய ஹோட்டல்லயே வேலை கிடைச்சிருக்கும்… நல்லா சமைக்கிற…” அவர் சொன்னதைக் கேட்டு விருது கிடைத்த பெருமையுடன் புன்னகைத்த வானதியின் முகம் அடுத்து சொன்ன வார்த்தையில் தொலைந்து போனது.
“சகுக்கு உடம்புக்கு முடியாததால வீட்டு வேலையும் உன் தலைல விழுந்திருச்சேன்னு வருத்தப்படாத… அதுக்கும் சேர்த்து உனக்கு சம்பளம் தந்திடறேன்…” சுந்தரம் சொல்ல, முதன் முறையாய் மனதில் அடிபட்டாள் வானதி.
அந்த வீட்டில் தன்னையும் ஒருத்தியாய் நினைத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு அவள் செய்ய, அந்த வேலைக்கு விலையை சொல்லி நீ வேலைக்காரிதான் என்பதை சுந்தரம் நினைவு படுத்தியது போல் இருந்தது. தந்தையுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த குந்தவையின் முகம் அவர் வார்த்தையைக் கேட்டு கோபத்தில் சிவந்தது.

Advertisement