Advertisement

அத்தியாயம் – 1
கலபம் தராம்…
பகவானென் மனசும் தராம்…
மழப்பக்ஷி பாடும் பாட்டில்
மயில்ப்பீலி நின்னே சார்த்தாம்…
உறங்காதே நின்னோடெந்தும்
சேர்ந்திரிக்காம்…
கலபம் தராம்…
பகவானென் மனசும் தராம்…
சித்ராவின் தேனை விழுங்கிய குரல் ஸ்பீக்கரில் பகவானை வேண்டி மலையாளத்தில் ஒலித்துக் கொண்டிருக்க, அடர்ந்திருந்த இருட்டை ஹெட் லைட் வெளிச்சத்தால் விரட்டிக் கொண்டு மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது திருச்சூரிலிருந்து சென்னை புறப்பட்டிருந்த அந்தப் பேருந்து.
பயணிகள் அவரவருக்கான இருக்கை, படுக்கையிலாய் நிறைந்திருக்க சில இருக்கைகள் மட்டும் காலியாய் பயணிகள் வருகைக்கு காத்திருந்தன.
தனக்கான இருக்கையில் செட்டிலாகியிருந்த அருள்மொழி வர்மன் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
வண்டி புறப்பட்டு பத்து நிமிடம் ஆகியிருக்க வழியில் பஸ் நிறுத்தம் அருகே ஒரு பெண் நின்று கை காட்டினாள்.  வண்டியை நிறுத்திய கண்டக்டர், “ஸ்லீப்பர் சீட் இல்லா…” என்று மலையாளத்தில் சொல்ல, “சீட் கிட்டியால் மதி…” என்றாள் அவளும் மலையாளத்தில்.
“ம்ம்… கயறிக்கோ…” என்றவர் அவள் ஏறியதும் விசிலை ஊத வண்டி நகரத் தொடங்கியது.
“எவிடேக்கா…”
“சென்னை…” அவள் நீட்டிய ஐநூறை வாங்கி டிக்கட்டுடன் மீதிப் பணத்தைக் கொடுத்துவிட்டு ஒரு சீட்டைக் காட்டி அமர்ந்து கொள்ள சொன்னார். தனக்கு முன்னில் இருந்த காலி சீட்டில் வந்தமர்ந்த சுரிதார் பெண்ணை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வெளியே பார்த்தான் நம் நாயகன்.
அருள்மொழி வர்மன் சிவில் எஞ்சினியரிங் முடித்துவிட்டு, சென்னையில் தந்தையின் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியிலேயே இணைந்து கொண்டான். அவனது வரவுக்குப் பிறகு “கல்கி பில்டர்ஸ்” இன்னும் மேல் நோக்கி கால் பதித்திருந்தது.
அருள்மொழிவர்மன் அளந்து பேசும் சுபாவக்காரன். தேவை இல்லாமல் எந்தப் பிரச்சனையிலும் தலையிட மாட்டான். தங்கை குந்தவை கல்லூரியில் படிக்க, அம்மா சகுந்தலா முழுநேர கதைப் பைத்தியம். வீட்டில் ஒரு குட்டி லைப்ரரியே வைத்திருந்தார். பொன்னியின் செல்வன் கதையின் தீவிர வாசகி. எனவே அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயரையே பிள்ளைகளுக்கும் வைத்திருந்தார். கணவனின் பெயரைக் கேட்டு அவரை சுந்தர சோழராகவே கற்பனை செய்து மணந்தவர். தனது பெற்றோர் சகுந்தலா என்று பெயர் சூட்டியதை நினைத்து எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டு கஜட்டில் கொடுத்து மாற்றி விடலாமா என்று வரை யோசித்தவர், பெற்றோர் வைத்த பெயரை மாற்றுவது பாவம் என்று விட்டுவிட்டார்.
இந்த வசதி வாய்ப்பும், பவுசும் எல்லாம் மனைவியின் பிறந்த வீட்டிலிருந்து வந்ததன் காரணமாய் அவர் செய்யும் பைத்தியக்காரத்தனத்தை எல்லாம் சுந்தரம் கண்டு கொள்ள மாட்டார். பொதுவே பிள்ளைகள் உட்பட எல்லாரிடமும் மிகவும் கண்டிப்பான குணமுடையவர் என்றாலும் மனைவியிடம் மட்டும் அவருக்கு தனி நேசம் இருந்தது. தன்னுடைய வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டு வந்தவள் என்ற மதிப்பு இருந்தது. அதனால் அவரது இஷ்டப்படியே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு கூட கல்கியின் பெயரை வைக்க சம்மதித்திருந்தார்.
திருச்சூரில் உடன் படித்த நண்பன் ஒருவனின் கல்யாணத்தில் கலந்து கொண்டு அருள்மொழிவர்மன் திரும்ப சென்னைக்கு பஸ் ஏறியிருந்தான்.
அழகாய் வெட்டப்பட்டிருந்த கிராப் காற்றில் பறக்க,  மாநிறமாய் இருந்தாலும் தீட்சண்யமான கண்கள், கூர் நாசி, அளவான மீசையுடன் களையாய் கம்பீரமாய் இருந்தான்.
பேருந்து சிட்டியைக் கடந்து ஹைவேயில் கலக்க வேகம் எடுத்தது. வெளியே எங்கும் இருட்டு மட்டுமே நிறைந்திருக்க பார்வைக்கு ஒன்றுமில்லாமல் பாகில் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்து விரித்து வைத்துக் கொண்டான்.
முன்னில் அமர்ந்திருந்த பெண் கொண்டு வந்திருந்த பாகை காலுக்கடியில் வைத்துவிட்டு அலைபேசியில் யாரையோ அழைக்க முயன்று கொண்டிருந்தாள். நிமிர்ந்து அவளைப் பார்க்காவிட்டாலும் அவள் செய்வதெல்லாம் அவனுக்குத் தெரியவே செய்தது.
அவர்களுக்கு வலது பக்கத்தில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களின் பார்வை இவள் மீது படிவதும் தங்களுக்குள் கிசுகிசுப்பதுமாய் இருக்க அதுவும் அவன் கவனத்தில் படவே செய்தது.
“பச்ச்…” அலைபேசியில் முயன்று கிடைக்காமல் அந்தப் பெண் ஏமாற்றத்துடன் தலையாட்டி டென்ஷனாய் இருந்தாள்.
“எந்தா பேரு…” (பேரென்ன) அவளையே பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிரிப்போடு கேட்க அவள் முறைத்தாள்.
“ஹா, நோக்கிப் பேடிப்பிக்கல்லே… எவிடயோ கண்ட போல உண்டு… அதா சோதிச்சது…” (அட பார்த்து பயப்படுத்தாத… எங்கயோ பார்த்த போலருக்கு… அதான் கேட்டோம்…) அவர்கள் சொல்ல முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அதைக் கேட்டு அவளை ஏறிட்ட அருள்மொழி வர்மன் அப்போதுதான் சரியாய் பார்த்தான்.
தனுஷ் படத்தில் வரும் பாட்டு ஒன்று நினைவு வந்தது.
“இவளை வெள்ளாவி வச்சு தான் வெளுத்திருப்பாங்களோ… இவ்ளோ கலரா இருக்கா…” என நினைத்தவன் அவள் கவனிக்காத வண்ணம் அவளை நோட்டமிட்டான்.
கறுத்து சுருண்ட முடிக் கற்றைகள் காற்றில் படபடக்க சுண்டினால் ரத்தம் வரும் நிறத்தோடு சோகமாய் அமர்ந்திருந்தாள். முகத்தில் ஸ்டிக்கர் பொட்டு மட்டும். பவுடர் கூட இல்லை. அவளது வெளுத்த முகம் டென்ஷனால் மேலும் சிவந்திருக்க, “பாவம், என்ன பிரச்சனையோ…” என நினைத்தவன் மீண்டும் புத்தகத்தில் கண்ணைப் பதித்தான்.
பேருந்து சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருக்க பாட்டின் சத்தத்தைக் குறைத்திருந்தனர்.
ஸ்லீப்பர் வசதியுள்ளவர்கள் வசதியாய் படுத்துக் கொண்டிருக்க முன்னில் மட்டும் செமி ஸ்லீப்பர் என்பதால் சீட்டை அட்ஜஸ்ட் செய்து சாய்வாய் அமர்ந்து கொண்டான் அருள்மொழி வர்மன்.
அந்தப் பெண் இருட்டை வெறித்துக் கொண்டிருக்க கண்கள் கலங்கியிருந்தது.
“என்னவென்று கேட்கலாமா…” என யோசித்தவன், “எதுக்கு வம்பு, வேண்டாம்…” என்று கண்ணை மூடிக் கொண்டான்.
“குட்டி எந்தெங்கிலும் பிரஸ்னத்தில் ஆனோ…” (ஏன்மா, நீ எதுவும் பிரச்சனைல இருக்கியா…) அந்த இளைஞர்கள் கேட்பது காதில் விழுந்தது.
“ப்ச்… ஒண்ணும் இல்லா…” (அதெல்லாம் ஒண்ணுமில்ல)
“பின்ன எந்தினா கரையுந்த… பேடிக்காண்ட பரயுந்தே…” (அப்புறம் எதுக்கு அழறே… பயப்படாம சொல்லுமா…)
அவள் பதில் சொல்லாமல் இருக்க, அவர்கள் தொடர்ந்தனர்.
“குட்டி ஒற்றைக்கானோ… ஞங்கள் கோயம்பத்தூர்… குட்டி எங்கோட்டா…” (தனியாவா வந்திருக்க… நாங்கள் கோயம்பத்தூர்.. நீ எங்க போற…)
அவளிடம் மீண்டும் அமைதி.
“இங்கன ஒற்றைக்கு போரடிச்சு இரிக்காதே, எந்தெங்கிலும் பர… இதொக்கே ஒரு ரசல்லே… அல்லடா…” நண்பனிடம் கேட்க, அவனும் தலையாட்டினான்.
(இப்படி தனியா உக்கார்ந்திருந்தா போரடிக்கும்ல… ஏதாச்சும் பேசிட்டுப் போனா நல்லர்க்குமே… இல்லடா நண்பா…)
“பின்ன… குட்டி விஷமிக்காதே… ஏது பிரஸ்னத்தினும் ஒரு தீர்மானம் உண்டாகும்… கடல் போல உள்ள பிரஸ்னங்கள் ஒரு ஒற்ற ராத்திரியில் மஞ்சு போலே மாறிப் போகும்…” (பின்ன, நீ கவலைப்படாதேம்மா… எந்த ஒரு பிரச்சனைக்கும் முடிவு இருக்கும்… கடல் போல ராத்திரியில் தோனுற பிரச்சனை ஒரே ராத்திரியில் பனி போல மறைஞ்சு போகும்…) அவர்கள் வேதாந்தம் பேசிக் கொண்டிருக்க அவள் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
“சென்ட் தோமஸ் காலேஜ்லானோ படிச்சது… கண்டது போலுண்டே…” (சென்ட் தாமஸ் காலேஜ்லயா படிச்ச… பார்த்த போலருக்கு…) அதற்கும் அவளிடம் பதிலில்லாமல் போக,
“சரி விடடா… சம்சாரிக்கான் இஷ்டமில்லா தோணுந்து… (பேசப் பிடிக்கல போலருக்கு…)” ஒருவன் சொல்ல மற்றவனும் அமைதியானான்.
அவர்களின் தொணத்தல் நின்று போக இங்கே நடக்கும் எதையும் கண்டு கொள்ளாமல் கண் மூடி சாய்ந்திருந்த அருளின் மேல் அவளது பார்வை படிந்தது.
“ம்ம்… கஷ்டம் தன்னே… அடுத்து நடக்கனது அறயாதே இங்கனயும் ஒரு ஜென்மம்…” (ம்ம்… கஷ்டம் தான், பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூடத் தெரியாம இப்படி ஒரு ஜென்மம்…) என மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் நிமிர்ந்திருந்த சீட்டை சரியாக்கி சுடிதார் துப்பட்டாவை இழுத்து போர்வை போல் சுற்றிக் கொண்டு உறங்குவதற்கு தோதாய் சாய்வாய் அமர்ந்து கொண்டாள்.
மனதுக்குள் சற்று பயமாய் இருந்தது. நினைத்து வந்த காரியம் நல்லபடி நடக்கவேண்டுமென்று குருவாயூரப்பனிடம் வேண்டுதல் வைத்துவிட்டு கண்ணை மூடிக் கொண்டாள்.
சலசலவென்ற பேச்சுக் குரல்கள் நின்று போயிருக்க பேருந்தில் டிரைவர், கண்டக்டர் தவிர அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். ஆலத்தூரில் பேருந்து நிற்க சிலர் ஏறி காலியாய் இருந்த சில இருக்கையில் நிறைந்தனர். அடுத்து பாலக்காட்டில் சிலர் இறங்க, சிலர் ஏறிக் கொள்ள பஸ் சீராய் வேகமெடுத்தது. பேருந்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அருள் கண் விழிக்க அதன் அன்னை தமிழில் சமாதானப் படுத்தும் குரல் கேட்டது.
“தொட்டில்ல தான் தூங்குவேன்னு அடம் பிடிச்சா நான் எங்க போறது… ப்ளீஸ் டா செல்லம்… தூங்குடா…” அவள் கெஞ்சிக் கொண்டிருக்க கணவன் அதட்டினான்.
“பாப்பா, பேசாம தூங்கு… இப்படி சத்தம் போட்டு அழுதா பஸ்ல இருந்து இறக்கி விட்டிருவாங்க… அப்புறம் நாம வீட்டுக்குப் போக முடியாது…” என்று சொல்ல குழந்தை, “”தொத்தி வேணும்…” என்று அடம் பிடித்து அழத் தொடங்க அங்கங்கே சிலர் உறக்கம் கெட்ட கடுப்பில் பார்த்தனர்.
“ஓடுற பஸ்சுல தொட்டிலுக்கு எங்க போறது…” குழந்தையின் அன்னை புலம்பிக் கொண்டே தோளில் போட்டுக் கொண்டு நடக்க அது தேம்பலுடன் கண்ணை உருட்டி முழித்துக் கொண்டு எல்லாரையும் வேடிக்கை பார்த்தது.
“இதுக்குதான் கட்டில்ல படுக்க வச்சுப் பழக்குன்னு சொன்னேன்… இப்பவும் தொட்டில்லயே படுக்க வச்சா இப்படி தான் அழுது அடம் பிடிக்கும்…” கணவன் மனைவியைத் திட்ட அவள் பரிதாபமாய் பார்த்தாள்.
அதைக் கேட்ட அருளுக்கு பாவமாய் இருந்தது. எழுந்தவன், “ஒரு சேலையோ, லுங்கியோ இருந்தா ரெண்டு கம்பிலயும் கட்டி படுக்க வைங்க…” என்றான்.
“அந்த மாதிரி எதுவும் இல்லையே…” அந்தப் பெண் கையைப் பிசைய அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவள் “ஓ… அப்ப இவன் ஊமையல்ல…” என்றாள் மனதுக்குள்.
அந்த இளைஞர்கள் பேகிலிருந்து போர்வை ஒன்றை எடுத்துக் கொடுக்க தொட்டில் போல கட்டி படுக்க வைத்த பிறகே குழந்தை உறங்கத் தொடங்கியது.
“தேங்க்ஸ் தம்பி…” குழந்தையின் அன்னை சொல்ல, “ஹேய், தேங்க்ஸோ, சாரமில்ல சேச்சி…” என்று சிரித்தான்.
“ஏதாயாலும் பிரதர்ட ஐடியா கொள்ளாம்… நான் சதீஷ்…” அருளிடம் கை நீட்ட புன்னகையுடன் பற்றி குலுக்கினான்.
“அருள்…” என்றவனிடம் மற்றவனும் கை நீட்டி, “நான் ராஜீவ்… தமிழ் ஆனல்லே… எங்கள்க்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்…” என்றதும் அருள் சிரித்தான்.
“பின்னே எந்தா செய்யுந்த…” அவன் கேட்கவும் முழித்தான்.
“ஜோலி, ஜாப் எந்தானு…”
“நான் சிவில் எஞ்சினியர், சென்னைல ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சிருக்கேன்..”
“ஓ நைஸ், வீ ஆர் பாஷன் டிசைனர்ஸ்…” என்றவன் ஆவஸ்யம் (தேவை) உண்டெங்கில் விளிக்கனே…” என்று அவர்களின் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.
வாங்கிக் கொண்ட அருள் தனது கார்டையும் கொடுக்க ஆண்களுக்குள் மிக இயல்பாய் நட்பு உருவாகி இருந்தது.
“அருள் மொழி வர்மன்… இதென்னா, இத்தர வலிய பேரு…” சிரிப்புடன் கேட்ட ராஜீவ் “ஆனாலும் நல்லார்க்கு கிட்டோ… பேரிலு ஒரு கம்பீரம் இருக்கு…” அரைகுறை தமிழில் அவன் சொல்ல புன்னகைத்தவன், “அது அம்மாவுக்குப் பிடிச்ச பேரு…” என்றதும், “ஓ… தாய் சொல்லை தட்டாதே, தாயில்லாமல் நானில்லை… தமிழ்ல அம்மா சென்டிமென்ட் ஜாஸ்தி இல்லையா…” என்று கேட்க, சகஜமாய் பேசிக் கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் ஒரு பெட்ரோல் பங்கு அருகே பேருந்து நின்றது.
“பஸ் இவிடே கொஞ்சம் நேரம் நிக்கும்… பாத்ரூம் போனவர், சாய, காபி குடிக்கனவர் போயிட்டு வாங்க…” இரண்டு பாஷையும் கலந்து சொல்லிவிட்டு கண்டக்டரும், டிரைவரும் இறங்கிச் சென்றனர்.
அருளுக்கு பாத்ரூம் போக வேண்டும் போலிருக்க எழுந்தவன் போய்விட்டு அருகிலிருந்த டீக்கடையில் பிளாஸ்டிக் கப்பில் காப்பியை வாங்கிக் கொண்டு நின்றான். அந்த இளைஞர்கள் இருவரும் பாத்ரூம் சென்றுவிட்டு அங்கே வர, “சேட்டா, மூணு சாயா…” என்றதும் டீக்கடை சேட்டன் மூன்று பிளாஸ்டிக் கப்பில் டீ கொடுக்க, “மூணு எதுக்கு, நான் காபி வாங்கிட்டேன்…” என்றான் அருள்.
“அடுத்திருந்த குட்டிக்கு…” (பக்கத்திலிருந்த பொண்ணுக்கு) என்றவன் பேருந்துக்கு சென்று ஜன்னல் வழியே அந்தப் பெண்ணை அழைக்க, அவள் வேண்டாமென்று மறுப்பதை அருள் கவனித்தான்.
“எல்லாரும் சீப் அல்ல குட்டி… ஞங்களே பிரதராய் கண்டா மதி…” (எல்லாரும் மோசம் இல்லைம்மா… எங்களை உன் பிரதரா நினைச்சுக்க…) என்றபடி அவன் நீட்ட மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.
அவர்கள் செய்தது தனக்குத் தோணாத குற்றவுணர்ச்சி அருளுக்குத் தோன்றினாலும் குடித்து முடித்து மூவரும் பேருந்துக்கு சென்று அமர்ந்தனர்.
அவர்களை நோக்கிப் புன்னகைத்த அந்தப் பெண், “சேட்டா, ஒண்ணு ஸ்ரத்திக்கனே… (அண்ணா, கொஞ்சம் பார்த்துக்கோங்க…) நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வராம்…” என்றவள் அவர்களிடம் சொல்லிவிட்டு இறங்க திரும்பி வரும்போது நான்கு சிப்ஸ் பாக்கெட்டுடன் வந்தாள்.
அவர்களிடம் நீட்ட மறுக்காமல் வாங்கிக் கொள்ள அருள் வாங்க தயங்கினான்.
“வாங்கிக்கோ பிரதர்… மனுஷ்யனே மனுஷன் சம்சயிச்சிட்டே இருந்தால் எப்பளானு சிநேகிக்கான் சமயம் உண்டாவுகா…” (மனுஷனை மனுஷன் சந்தேகப் பட்டுட்டே இருந்தா எப்பதான் நேசிக்க டைம் இருக்கும்…) அவர்கள் சாதாரணமாய் ஒரு பெரிய கருத்தை சொல்லிவிட்டு சிரித்து பேசிக் கொண்டே சிப்ஸை நொறுக்கிக் கொண்டிருக்க கோவை நெருங்கிக் கொண்டிருந்தது. 
“ஓகே… கோயம்பத்தூர் எத்தி… நெக்ஸ்ட் டைம் திருச்சூர் வரும்போல் விளிக்கு… காணாம்…” (கோயம்பத்தூர் வந்திருச்சு… அடுத்த தடவை திருச்சூர் வரும்போது கால் பண்ணுங்க, பார்க்கலாம்…) அவனிடம் சொன்னவர்கள், “ஓகே குட்டி… (ஓகே மா…) ஹாப்பி ஜர்னி…” என்று இறங்க ரெடி ஆகினர்.
“சேட்டா, எண்ட பேரு வானதி… சென்னைக்கு போகுவா…” (அண்ணா, என் பேரு வானதி, சென்னைக்குப் போறேன்…) என்றவளை நோக்கி அவர்கள் புன்னகைக்க, அருள் வியப்புடன் பார்த்தான்.
அதுவரை அவர்களை சந்தேகப் பார்வையுடன் நோக்கி எதற்கும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவளுக்கு அவர்கள் செயல் நம்பிக்கையைக் கொடுத்திருக்க புன்னகைத்து விடை கொடுத்தனர்.
கோவையில் அவர்கள் இறங்க ஒரு தம்பதியர் அந்த இடத்தில் வந்து அமர்ந்தனர். இப்போது பேருந்து நிறைந்து இருக்க நேரம் நள்ளிரவைத் தாண்டி இருந்தது. பயணிகள் அனைவரும் உறக்கத்தில் இருக்க பேருந்து ஹைவேயில் வழுக்கிக் கொண்டு வேகமாய் சென்று கொண்டிருந்தது.
விடியல் நெருங்கிக் கொண்டிருக்க சென்னையை எட்டிப் பிடிக்கும் முயற்சியில் வேகமெடுத்தது பேருந்து.
நம் உடலின்
எந்த பாகங்கள்
நிசப்தமாய் இருந்தாலும்
இதயம் மட்டும்
நிசப்தமாவதில்லை…
அதன் சப்தம் நின்று
போனால் எல்லாமே
நின்று போகிறது…
அப்படிதான்
சில உறவுகளும்…

Advertisement