Advertisement

“இல்லமா, எனக்கு அதுல விருப்பமில்ல… MBA முடிச்சிட்டு ஒரு பெரிய கம்பெனில பெரிய போஸ்ட்ல வேலைக்கு சேரணும்னு தான் என்னோட லட்சியமே… தயவுசெய்து என்னை என் வழில போக விடுங்க…” பிடிவாதமாய் சொன்ன மகனை என்ன சொல்லி மாற்றுவது என்று அவருக்குப் புரியவில்லை.
ஆதித்யா எப்போதும் அப்படித்தான்… அவனது விருப்பங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத சுபாவம்… வீட்டில் எல்லாரும் தந்தையின் சொல்படி நடக்க இவன் மட்டும் மனது சொல்வதை மட்டுமே கேப்பான்… அதில் உறுதியாய் நிற்கவும் செய்வான்… மகனின் விருப்பத்திற்காய் கணவரிடம் சகுந்தலா பேச அவர் தாம்தூமென்று துள்ளிக் குதித்தார். அதற்கெல்லாம் மகன் அசரவில்லை. அவர் சொன்னதற்காய் எஞ்சினியரிங்கில் சேரவும் இல்லை. வளைந்து கொடுக்காமல் பிடிவாதமாய் இருந்தான்.
மகனைப் பற்றி நண்பனிடம் சுந்தரம் புலம்ப அவர்தான் சமாதானம் செய்து அவன் விருப்பப்படியே படிக்க வைக்க சொல்லி சம்மதிக்க வைத்தார்.
தான் விரும்பியபடி சந்தோஷமாய் BBA வில் சேர்ந்தவன் ஆர்வத்துடன் கல்லூரிக்கு சென்று வந்தான். அடுத்து அவனது பிறந்தநாள் வந்தபோது பதினெட்டு வயது நிரம்பி இருக்க டிரைவிங் கற்று லைசன்சோடு வந்தவன், “அம்மா, எனக்கு பைக் வேண்டும் என்றான்…” அவனது வார்த்தை எதிலும் கெஞ்சலோ, விண்ணப்பமோ இருக்காது… தனது தேவையை சரியாய் சொல்ல தயங்கவே மாட்டான்.
கணவனிடம் போராடி பைக்கும் வாங்கிக் கொடுத்தார் சகுந்தலா. அவனிடம் மட்டுமே சுந்தரத்தின் கெடுபிடிகள் தளர்ந்து போயின. அதற்காக தேவையில்லாமல் எதையும் ஆதித்யா செய்யவும் மாட்டான். அடுத்து MBA சேர்ந்து பர்ஸ்ட் கிளாஸில் முடித்தவனுக்கு கையோடு பெரிய கம்பெனி ஒன்றில்  வேலையும் கிடைத்தது. பாங்களூர் கம்பெனியில் அவனை ஜாயின் பண்ண சொன்னவர்கள் இங்கே ஒரு வருட பயிற்சி முடிந்து வெளிநாட்டு கம்பெனிக்கு பிரமோஷனில் அனுப்புவதாகவும் சொல்ல அந்த ஆபர் அவனுக்குப் பிடித்ததால் அங்கே ஜாயின் செய்தான்.
மகன் தனக்குப் பிடிக்காத படிப்பு படித்தாலும் எடுத்ததுமே நல்ல சம்பளத்தில் வேலைக்கு அமர்ந்தவனை நினைத்து சுந்தரத்துக்கு பெருமையாகவே இருந்தது. அருள் அப்போது எஞ்சினியரிங் இரண்டாம் வருடமும் குந்தவை பத்தாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தனர்.
பெங்களூருவில் சின்ன பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தான் ஆதித்யா. தினமும் மகனை அலைபேசியில் அழைத்துப் பேசுவார் சகுந்தலா.
“டேய் ஆதி, நீ பாட்டுக்கு அங்க போயி உக்கார்ந்துகிட்ட… அம்மாக்கு தான் உன்னைப் பார்க்காம கஷ்டமா இருக்கு டா… போன மாசம் வந்ததும் ஓடிட்ட… நாளைக்கு எங்க  வெட்டிங் டே… அதுக்காச்சும் வருவியா…” கவலையுடன் கேட்டுக் கொண்டிருந்த சகுந்தலா வாசல் கேட் திறக்கும் ஓசை கேட்டு எட்டிப் பார்க்க காதில் மாட்டிய இயர்போன் கையில் பெரிய பாகுடன் உள்ளே வந்து கொண்டிருந்த மகனைக் கண்டதும் சந்தோஷத்தில் வாசலுக்கு விரைந்தார்.
“ஹாய் அம்மா… எப்படி என் சர்ப்ரைஸ்…” கேட்டு புருவத்தை மேலே தூக்கி அழகாய் சிரித்த மகனைக் கண்டு  கன்னத்தை வழித்தவர், “அம்மாக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா ஆதி… டேய் அருளு, குந்தவை… அண்ணன் வந்திருக்கான் பாரு…” என்று உள்ளே குரல் கொடுக்க அவர்களும் ஓடி வந்தனர்.
“அண்ணா, பங்களூரு போயி தளதளன்னு வந்திருக்க… நல்ல கவனிப்பா…” கேட்டுக் கொண்டே அருகில் வந்த தங்கையை இழுத்து தோளோடு அணைத்துக் கொண்டவன், “ஹேய் வாண்டு, எப்படி இருக்க…” என்று கேட்க சந்தோஷமாய் தலையாட்டினாள் தங்கை.
“ஆதி அண்ணா, எனக்கு கூப்பிட்டிருந்தா நான் பிக்கப் பண்ண வந்திருப்பேனே எப்படி வந்த…” என்றான் அருள்.
“உனக்கு கால் பண்ணி சொன்னா அம்மாக்கு எப்படி சர்ப்ரைஸ் கொடுக்க முடியும்… அதான் நானே வந்துட்டேன்… ஆமா, எங்கம்மா… உங்க ஹீரோவைக் காணோம்…” என்று அன்னையிடம் கேட்க, “ச்சீ… போடா… விளையாடிட்டு…” என்று அழகாய் வெட்கப்பட்ட சகுந்தலா, “நீ உக்காரு, காபி கொண்டு வர்றேன்…” என்று உள்ளே செல்ல தம்பியிடம் திரும்பினான் ஆதித்யா.
“என்னடா தம்பி, காலேஜ் எல்லாம் எப்படிப் போகுது…” கேட்டுக் கொண்டே சோபாவில் அமர, “எப்பவும் போல தான் அண்ணா… உங்களுக்கு அங்கே எல்லாம் செட்டில் ஆகிடுச்சா…” கேட்ட அருளிடம், “ம்ம்… உனக்கு ஒரு அண்ணியைக் கூட செட் பண்ணிட்டேன்னா பாரேன்…” என்று கண்ணடித்து சிரித்த அண்ணனை திகிலாய் பார்த்தான் தம்பி.
“ஐயோ, என்னண்ணா சொல்லற… லவ்வா…” தங்கை அதிர்ச்சியுடன் வாயைப் பிளக்க, “வந்ததும் விளையாடாத அண்ணா… அம்மா கேட்டா என்ன நினைப்பாங்க… போயி பிரஷ் ஆகிட்டு வாங்க…” என்றான் அருள்.
“ஓகே… உங்ககிட்ட தான் பர்ஸ்ட் சொல்லறேன்… நம்பினா நம்புங்க… இல்லேன்னாப் போங்க…” என்று தோளைக் குலுக்கிவிட்டு இரண்டிரண்டு படியாய் தாவியபடி மாடி ஏறிய அண்ணனின் வாக்கை நம்பலாமா, வேண்டாமா என்று அதிர்ச்சியுடனே பார்த்துக் கொண்டிருந்தனர் இளையவர்கள்.
அடுக்களையில் நின்ற அன்னையிடம் சென்ற குந்தவை, அம்மாவிடம் சொல்லலமா வேண்டாமா என மனதுக்குள் பூவா தலையா போட்டுப் பார்த்து சொல்ல முடிவு செய்தாள்.
“அம்மா, அண்ணா என்ன சொன்னான் தெரியுமா….”
“என்னடி சொன்னான்…” அவர் சிரித்தபடி கேட்க, “உனக்கு அந்த ஊருல மருமகளை ரெடி பண்ணிட்டானாம்…” என்றதும் திகைத்தவர், “ஹாஹா… அவன் எப்பவும் இப்படி தான் நம்மள சீண்டறதுக்கு வேண்டி எதையாச்சும் விளையாட்டா சொல்லிட்டு இருப்பான்… அதை நீ உண்மைன்னு நம்பிட்டியாக்கும்…” கேட்டுக் கொண்டே காபியைக் கலந்து எடுத்துக் கொண்டு மகனைத் தேடி வந்தார்.
பாகில் இருந்து கொண்டு வந்த பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவன், அன்னையைக் கண்டதும் புன்னகைத்தான்.
“உங்களையும், நீங்க போடுற காபியையும் ரொம்ப மிஸ் பண்ணேன் மா…” சொல்லிக் கொண்டே ஆவலுடன் வாங்கி குடிக்கத் தொடங்கிய மகனை நெகிழ்வுடன் பார்த்தவர் மகள் சொன்னதைப்பற்றி கேட்கலாமா என யோசித்துவிட்டு வேண்டாமென்று முடிவு செய்தார்.
“அம்மா, இங்க பார்த்திங்களா, உங்களுக்காக நிறைய கடைல போயி தேடிப் பிடிச்சு வாங்கினேன்… உங்களுக்குப் பிடிச்ச மாம்பழக் கலர் மைசூர் சில்க் சேலை…” என்று ஒரு பெட்டியைக் கொடுக்க ஆர்வத்துடன் வாங்கி திறந்து பார்த்தவர், “ரொம்ப அருமையா இருக்குடா ஆதி… எனக்கு மட்டுமா வாங்கின…” கேட்க செல்லமாய் முறைத்தான்.
“அதெப்படிமா… விழா நாயகனை மறப்பேன்…” என்றவன் தந்தைக்கும் ஒரு பெட்டியை நீட்டினான்.
“அப்பாக்கு பிடிச்ச சந்தனக் கலர் ஜிப்பா…” என்ற மகனை கண் கலங்க பார்த்தவர், “என் செல்லம்டா நீ…” என்று சொல்லி கன்னத்தில் முத்தமிட, “அதுசரி… எங்களுக்கு எல்லாம் ஒண்ணும் இல்லியா…” கோபத்துடன் கேட்டுக் கொண்டு வந்த தங்கையின் காதைப் பிடித்து திருகியவன், “உனக்கு இல்லாமலா… உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச போல நாளைக்கு வெளிய போயி வாங்கித் தரேன்…” என்று சொல்ல, “ஹே சூப்பர்ணா…” குந்தவை சந்தோஷிக்க, சிரித்தார் சகுந்தலா.
“பார்த்துடா… உன் பாசமலர் பர்சையே காலி பண்ணிடப் போறா…” என்று சிரிக்க, “பண்ணிட்டுப் போகட்டும்… அவளுக்குப் பண்ணாம யாருக்கு பண்ணப் போறேன்…” என்ற ஆதியின் வார்த்தையில், “ஆச்… ரொம்ப குளிருதுண்ணா…” என்றாள் குந்தவை.
“ஏன் குளிராது… எனக்கு வச்ச ஐஸ்க்ரீமும் சேர்த்து மதியம் தின்னுட்டுப் போயிருக்கா…” என்று அருள் குற்றப்பத்திரிகை வாசிக்க அவர்களைப் பார்த்து சிரித்தான் ஆதித்யா.
“நான் ஒண்ணும் அப்படியே எல்லாம் எடுக்கலை… ஜஸ்ட் ரெண்டே ரெண்டு ஸ்பூன் தான் எடுத்தேன்… அதுக்குப் போயி எப்படி சொல்லறான் பாருண்ணா…” என்று பெரியவனிடம் தங்கை சிணுங்க அருள் முறைத்தான்.
“எது, நீ எடுத்தது ரெண்டு ஸ்பூனா… அவ ஸ்பூன்னு கரண்டியை சொல்லுறா… நம்பாதண்ணா…” என்று அருள் சொல்ல, “ஹாஹா… சரி நாளைக்கு நாம எல்லாரும் வெளிய போறோம்… உங்களுக்கு என்ன வேணுமோ சாப்பிடறோம்… சரியா…” என்று ஆதி சொல்லவும், “சூப்பர்ணா, அப்பாவையும் அழைச்சிட்டுப் போகலாம்…” என்றான் அருள்.
“ஓகே, நாளைக்கு இவங்களோட வெட்டிங் டே செலபரேஷன் டின்னர் வெளிய வச்சுக்கலாம்… அம்மாக்கும் ரெஸ்ட்… சரியாம்மா…” என்று கேட்க, “உங்க விருப்பம் போல செய்யலாம் ஆதி…” என்றார் அவரும் சந்தோஷத்துடன்.
இரவு தந்தை மகனைக் கண்டதும், “நீ எப்ப வந்த… சொல்லவே இல்லை… அடிக்கடி இப்படி வந்துட்டு போறது வீண் செலவு தான…” என்று சொல்ல, சகுந்தலா தலையிலடித்துக் கொண்டார்.
“என்னங்க நீங்க, பையன் நம்ம வெட்டிங் டேக்கு ஆசையா கிப்ட் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கான்… காசைப் பத்தி பேசிட்டு…” என்று முகத்தைத் தூக்கிக் கொள்ள, அவர் கொஞ்சம் தணிந்தார்.
“என்ன சகு, எவ்ளோ தூரம்… வந்து போனா அவனுக்கும் டயர்டு தானே… அதான் சொன்னேன்… எனக்கு மட்டும் அவன பார்க்கணும்னு இல்லயா…” என்றதும் அமைதியானார்.
அடுத்தநாள் காலையில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வந்து வீட்டில் கேக் வெட்டினர். மதிய உணவு மட்டும் சகுந்தலா மகனுக்காய் பிடித்ததைப் பார்த்து செய்ய அவர்கள் மூவரும் வெளியே சென்றிருந்தனர். மாலை சுந்தரத்தையும் அழைத்துக் கொண்டு டின்னருக்கு வெளியே சென்றனர்.
எல்லா செலவுகளையும் ஆதியே பார்த்துக் கொண்டான்.
சுந்தரமும் மகனை செலவு செய்ய வேண்டாமென்று சொல்லவில்லை. என்னதான் இத்தனை நாள் சம்பாதித்தாலும் மகனின் வருமானத்தில் செலவு செய்வதை சந்தோஷமாய் உணர்ந்தார். அவன் மீது முன்பிருந்த வருத்தம் கூட மறந்துவிட்டது. அந்த நாள் அழகாய் கழிய அடுத்தநாள் பிரச்சனை சுமந்து விடிந்தது.
உலகத்தின் ஒட்டு மொத்த
பாதுகாப்பையும் உன்
உள்ளங்கை கதகதப்பில்
ஒளித்து வைத்துள்ளாய்
என்பதை நான் உணர்ந்த
நொடி உன்னதமானது…
உனக்காக உருகும்
உள்ளமும்
எனக்காக மருகும்
மனமுமே
நம் காதலின் சாட்சி…

Advertisement