Advertisement

அத்தியாயம் – 17
தியேட்டரே அமைதியாய் திரையில் தெரிந்த காட்சியில் கண்ணை விலக்காமல் திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்க வானதியால் மட்டும் நிம்மதியாய் அதில் கவனம் வைக்க முடியவில்லை. அவளுக்கு எதுவும் இடைஞ்சலாய் தோணக் கூடாதென்று அருளும் ஒதுக்கமாய் கைகளை வைத்துக் கொண்டு சீட்டில் சாய்ந்திருந்தான்.
அவளது அருகாமையே அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. தேவையில்லாத ஆசை எதுவும் அவள் மனதில் விதைக்கக் கூடாதென்று நினைத்தவன் முடிந்தவரை இயல்பாய் இருக்க முயன்றான். வானதியால் தான் முடியவில்லை. மனதுக்குப் பிடித்தவனின் அருகாமையும் அவனிடமிருந்து வந்த ஷேவிங் லோஷன் மணமும் மனதை மயக்க தவிப்புடனே விரல்களைப் பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
குந்தவையும் மேகலையும் ஒருவர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டு திகில் காட்சிகளில் கண்ணை மூடிக் கொண்டு படத்திலேயே மூழ்கிப் போயிருந்தனர். வானதி ஒழுங்காய் படத்தைக் காணாததால் அவளுக்கு அதில் பெரிதாய் பயம் தோன்றவில்லை. அருள் அமைதியாய் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்து இருப்பதைப் பார்த்தவளுக்கு குழப்பமாய் இருந்தது.
“ஒருவேளை அவன் எதார்த்தமாய் தான் இருக்கிறானோ… நான்தான் லவ் பண்ணுகிறான் என்று தவறாய் நினைத்து விட்டேனா… மனதுக்குப் பிடித்தவள் இத்தனை அருகே இருக்கும்போது ஒருவனால் தடுமாறாமல் நிதானமாய் இருக்க முடியுமா… என்னால் முடியவில்லையே…” என யோசித்துக் கொண்டே மனதை அமைதிப்படுத்த முடியாமல் திரையில் கண்ணைப் பதித்தாள்.
அங்கேயும் இருட்டு நிறைந்திருக்க சட்டென்று ஒலித்த பின்னணி இசையின் அலறலுடன் திரையில் தோன்றிய உருவத்தைக் கண்டு பயந்து போனவள் ஆ.. என்ற சின்ன அலறலுடன் கண்ணை இறுக மூடிக் கொண்டு சீட்டில் ஒடுங்கிக் கொண்டாள்.   
“பயமாருக்கா…” தன் பக்கமாய் சாய்ந்து காதோடு கேட்ட அருளின் குரலில் சுதாரித்தவள், “ம்ம்…” என்று சொல்ல, இருக்கையின் கைப்பிடி மீதிருந்த அவள் கரத்தை தன் கைகளில் அவன் எடுத்துக் கொள்வதை உணர்ந்தாள்.
அவன் கையை உதற சொல்லி மூளை சொன்னாலும் மனம் அவன் கையை இறுக்கமாய் பற்றிக் கொள்ள சொன்னது. தன் கையை இறுக்கமாய் பற்றிக் கொண்டவளைத் திகைப்புடன் நோக்கிய அருள், “பாவம், பயந்துட்டா போலருக்கு…” என நினைத்துக் கொண்டே மற்ற கையால் அவள் கையில் ஆறுதலாய் தட்டிக் கொடுத்தவன் “ரொம்ப பயந்துட்டியா…” என்று காதில் கேட்க அவள் அமைதியாய் இருந்தாள்.
அவள் கையை விடாமல் தன் கைக்குள் வைத்திருந்தவன் இடைவேளை வரும் நேரத்தில் அவள் கையை இருக்கையின் கைப்பிடி மேல் வைத்து விடுவிக்க அவனை இருட்டில் ஏறிட்டவளிடம் காதில் கிசுகிசுத்தான்.
“இன்டர்வல்…” என்றதும் பெல் அடித்து திரை அணைந்தது.
“ஹப்பா… செம த்ரில்லா இருக்குல்ல… ரெண்டு மூணு சீன்ல நான் ரொம்ப பயந்துட்டேன்…” மணிமேகலை குந்தவையிடம் சொல்லிக் கொண்டிருக்க வானதியை நோக்கியவள், “என்ன வானதி, உனக்கு பயமா இருந்துச்சா…” என்று கேட்க அவள் தலையாட்டியதைக் கண்டு, “பேய்ப்படம் பார்த்ததுக்கே இவ பேயடிச்ச மாதிரி ஏன் இருக்கா…” என யோசித்துக் கொண்டு,
“அண்ணா, ஐஸ்க்ரீம்…” என்று சொல்ல அவன் எழுந்தான்.
மேகலையும் ஐஸ்க்ரீம் என்று சொல்ல, “வானதி, உனக்கு என்ன வேணும்…” என்றான் அவளிடம்.
“ஒண்ணும் வேண்டா…” அவள் தலையாட்ட, “இவ அப்படிதான் சொல்லுவா… பாப்கார்ன் வாங்கிக்க அண்ணா…” என்று தங்கை ஆணையிடவே வெளியே சென்றவன் சிறிது நேரத்தில் இரு ஐஸ்க்ரீமுடன் வந்தான்.
“பாப்கார்ன் எங்கே…” குந்தவை கேட்க, “வாங்கிட்டு வரேன்… ஒண்ணா கொண்டு வர முடியுமா…” என்றவன் மீண்டும் வெளியே செல்ல சிறிது நேரத்தில் மணி அடித்தது.
அடுத்து வரப்போகும் திரைப்படத்தின் சில காட்சிகள் ஓடிக் கொண்டிருக்க விளக்குகள் அணைந்து இருட்டானது.
“அருள் இன்னும் வரவில்லையே…” என்று வானதி தவிப்புடன் சாத்தியிருந்த கதவைப் பார்த்துக் கொண்டிருக்க குந்தவையும், மேகலையும் ஏதோ பேசிக் கொண்டே ஐஸ்க்ரீமை சுவைக்கத் தொடங்கி இருந்தனர். அடுத்து விளம்பரமும் முடிந்து திரைப்படம் தொடங்கும் நேரத்தில் உள்ளே வந்தான் அருள்.
கையிலிருந்த இரண்டு பாப்கார்ன் கவருடன் உள்ளே வந்தவன் ஒன்றை அவர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றொன்றுடன் தனது இருக்கைக்கு வந்தான். வானதி காலை ஒதுக்கி வழிவிட அவளிடம் அந்தப் பாக்கெட்டை கொடுத்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தான்.
தனியே சாப்பிடத் தயங்கியவள் அவனுக்கும் பாக்கெட்டை நீட்ட இருவருமாய் சாப்பிடத் தொடங்கினர். எதார்த்தமாய் பாக்கெட்டில் இருவரின் கைகளும் உரசிக் கொண்டது.
“இவன் எதார்த்தமாய் இருக்கிறானே… நான் பயக்கிறேன் என்றுதான் ஒரு தைரியத்துக்கு என் கையைப் பிடித்துக் கொண்டானோ…” அவன் முகத்தை இருட்டில் பார்த்தவளுக்கு எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை.
பாக்கெட் காலியாகியிருக்க அவளிடமிருந்து வாங்கி ஓரமாய் கீழே வைத்தான். அவன் இயல்பாய் படத்தை கவனிக்கத் தொடங்க வானதியின் மனதில் மட்டும் அவனைப் பற்றிய சஞ்சலம் இருந்து கொண்டே இருந்தது. அதற்குப் பிறகு அரைகுறையாய் படம் பார்த்து முடிந்து வீட்டுக்கு கிளம்பினர்.
மூவரும் டாக்ஸியில் வர பின்னிலேயே அருளும் பைக்கில் வந்தான். மேகலையை ஹாஸ்டலில் இறக்கிவிட்டு மூவரும் வீடு வந்து சேர சகுந்தலா காத்திருந்தார். சுந்தரம் டின்னர் வேண்டாம், வர நேரமாகும் என்று கூறியிருந்தார்.
“அம்மா, படம் செம த்ரில்லிங்கா இருந்துச்சு… நாளைக்கு சன்டே… நிம்மதியா தூங்கணும்…” குந்தவை சாப்பிட்டு தூங்க செல்ல வானதி அவருடன் இருந்தாள்.
“என்ன வானதி, நீ எதுமே சொல்லலை… உனக்குப் படம் பிடிச்சுதா…” என்றார் புன்னகையுடன்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த அருள் அவளை ஏறிட இருவரின் கண்களும் ஒரு வினாடி சந்தித்துக் கொள்ள சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்ட வானதி, “ம்ம்… பிடிச்சது ஆன்ட்டி… நிங்கள் போயி ரெஸ்ட் எடுக்கு… நான் நோக்கிக் கொள்ளாம்…” என்றவள் அடுக்களையை ஒதுக்க சென்றாள்.
அருள் மாடிக்கு சென்றிருக்க சிறிது நேரம் புத்தகத்துடன் அமர்ந்திருந்த சகுந்தலா அறைக்கு செல்ல வானதியும் வேலை முடிந்து படுக்க சென்றாள்.
தாமதமாய் வீடு வந்த கணவன் சொன்ன செய்தியைக் கேட்டு திகைத்தார் சகுந்தலா.
“என்னங்க சொல்லறிங்க, நாளைக்கே குந்தவையைப் பொண்ணு பார்க்க வராங்களா… சட்டுன்னு இப்படி சொன்னா எப்படிங்க…” என்றார் யோசனையுடன்.
“ஏன், நாளைக்கு சன்டே… எல்லாரும் வீட்ல தானே இருக்கப் போறாங்க… அப்புறம் என்ன, அவங்க ஈவனிங் தான் பொண்ணு பார்க்க வராங்க… நீ காலைல அவகிட்ட விஷயத்தை சொல்லி தயாரா இருக்க சொல்லிடு…”
“இருந்தாலும் கல்யாண விஷயத்துல இப்படி அவசரமா…” சகுந்தலா இழுக்க அவர் அருகே அமர்ந்தார் சுந்தரம்.
“சகு, எனக்கும் நீ சொல்லுறது புரியாம இல்ல… படிச்சு முடிஞ்சதும் கல்யாணம் போதும்னு தான் அவங்களும் நினைச்சாங்க… ஆனா இப்ப ஜோசியர் சொன்னதை வச்சுப் பார்க்கும்போது மாப்பிள்ளைக்கு கல்யாண யோகம் முடிய நாலு மாசம் தான இருக்கு… அப்புறம் நாலு வருஷம் கழிச்சு தான் மறுபடி யோகம் வருதாம்… எதுக்கு அவ்ளோ நாள் லேட் பண்ணனும்… இப்ப என்ன, நல்லாத் தெரிஞ்ச குடும்பம் தானே… நாளைக்கு சம்பிரதாயமா வந்து பொண்ணு பார்த்துட்டுப் போகட்டும்… அடுத்த மாசம் நிச்சயம் வச்சிட்டு மூணு மாசம் கழிச்சு கல்யாணம் வச்சுடலாம்…” என்றார் மனதில் கணக்கு போட்டுக் கொண்டே.
“ம்ம்… நீங்க சொல்லுறது சரிதான்… ஆனாலும் அவ மனசும் இந்தக் கல்யாணத்துக்கு தயாரா இருக்கணும்ல… இப்ப சட்டுன்னு சொன்னா… எப்படி எடுத்துப்பாளோன்னு கொஞ்சம் கவலையா இருக்கு…” தாயின் பரிதவிப்பு அவரிடம்.
“நாளைக்கு நீ குந்தவை கிட்ட சொல்லு… நானும் பேசறேன்… எல்லாம் நல்லபடியா நடக்கும்… அவ நம்ம பேச்சுக்கு மரியாதை கொடுக்கிற பிள்ளை… நீ நிம்மதியாத் தூங்கு…” என்றார் சுந்தரம் மகளின் மீதுள்ள நம்பிக்கையில்.
“ம்ம்… சரிங்க…” என்று படுத்தாலும் உறக்கம் வராமல் பழைய நினைவுகள் மாறி மாறி மனதுக்குள் அலைமோதிக் கொண்டிருந்தது சகுந்தலாவுக்கு.
“கடவுளே… என் மூத்த மகன் விஷயத்துல தான் எல்லாம் தப்பாப் போயிருச்சு… பொண்ணு கல்யாணத்தையாச்சும் நல்லபடியா நடத்திக் கொடு…” வேண்டிக் கொண்டவரின் மனதில் ஆதித்யாவின் கலங்கிய முகமே வட்டமிட அவனைப் பற்றிய நினைவில் கண்ணீருடன் படுத்திருந்தார்.
“அம்மா…” அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த ஆதித்யாவை பிரமிப்புடன் பார்த்தார் சகுந்தலா.   
இப்போதுதான் பிளஸ் டூ முடித்திருக்கிறான்… அதற்குள் என்ன ஒரு வளர்ச்சி. வாட்டசாட்டமாய் உயர்ந்து நிற்கும் கம்பீர மகனை அன்போடு நோக்கினார்.
“என்னப்பா… காலேஜ்ல அப்ளிகேஷன் வாங்க போகணும்னு சொன்ன… இங்க வந்து நிக்கற…”
“அம்மா உங்க புருஷன்கிட்ட சொல்லி வைங்க… எனக்கு என்ன வேணும்னு தீர்மானிக்கிற அறிவு எனக்கு இருக்கு… இஞ்சினியரிங் தான் எடுக்கணும்னு என்னை நிர்பந்திக்க வேண்டாம்னு சொல்லுங்க… நான் MBA தான் படிக்கப் போறேன்… எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு…” உரத்த குரலில் சொன்னவனை சற்று கலக்கமாய் பார்த்தார்.
“ஏண்டா… பிளஸ் டூ ல நல்ல மார்க் எடுத்திட்டு என்ஜினியரிங் வேண்டாம்னு சொல்லற… நீயும் படிச்சு முடிச்சா நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியைப் பார்த்துக்க வசதியா இருக்கும்ல…” தன்மையாய் கேட்டார்.

Advertisement