Advertisement

அத்தியாயம் – 8
அருள் கட்டிலில் சாய்வாய் அமர்ந்து கழுத்தை சாய்த்து அப்படியே உறங்கியிருக்க, மடியிலிருந்த லாப்டாப் எப்போது வேண்டுமானாலும் கீழே குதித்து தற்கொலை பண்ணிக் கொள்வேன் என்பது போல் சரிந்து தயாராய் நின்றது.
அதைக் கண்டு அதிர்ந்த வானதி அவனை அழைத்தால் அசைவில் ஒருவேளை லாப்டாப் கீழே விழுந்துவிடுமோ என நினைத்து சத்தமில்லாமல் உள்ளே சென்று மடியிலிருந்து லாப்டாப்பை எடுக்க அருள் விழித்துக் கொண்டான்.
“எ..என்னாச்சு… நீ இங்க என்ன பண்ணற… என் லாப்டாப் எதுக்கு எடுக்கற…” பதட்டமும், உறக்கக் கலக்கமுமாய் மாறி மாறி கேள்வி கேட்டவனை அமைதியாய் நோக்கியவள், “உறக்கம் வந்தா லாப்டாப்பினே தாழே வச்சிட்டு உறங்கிக் கூடே… நான் வரான் குறச்சு லேட் ஆயிருந்தாலும் தாழ வீணு பொட்டுமாயிருந்து…” என்று கட்டிலில் வைத்தாள்.
“ஓ… மை காட், கீழே விழுந்திருந்தா அவ்ளோதான்… சாரி, நைட் வொர்க் முடிய ரொம்ப லேட்டாகிருச்சு… அப்படியே தூங்கிட்டேன் போலருக்கு…” என்றவன், “சரியான நேரத்துல என் லாப்டாப்பைக் காப்பாத்தினதுக்கு தேங்க்ஸ்…” என்றான்.
“இட்ஸ் ஓகே… நான் எப்பளும் எனிக்கு பற்றுந்த ஹெல்ப் மற்றவர்க்கு செய்யான் மடிக்காரில்லா…” சொல்லிவிட்டு “ஆன்ட்டி விளிக்குந்து…” என்று வெளியே செல்ல அவள் சொன்னது புரியாமல் மீண்டும் யோசித்துப் பார்க்க அவனுக்கு விளங்கியது.
“ஆஹா, அன்னைக்கு பஸ்ல நாம ஹெல்ப் பண்ணலைன்னு பார்ட்டி குத்திக் காமிக்குது போல…” என நினைத்தவனுக்கு சிரிப்பு வந்தது. எழுந்து பாத்ரூம் சென்றவன் ஜாகிங் செல்ல தயாராய் கீழே வர, “என்னடா அருளு, இவ்ளோ லேட்டு… உனக்கு வச்ச காபி ஆறிப் போயிருச்சுன்னு…” அன்னை சொல்லிக் கொண்டிருக்க இடையிட்டவன்,
“கீழ ஊத்திட்டிங்களாம்மா…” என்றான்.
“ச்சேச்சே… சாப்பிடற பொருளை வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு என் வாயில ஊத்திட்டேன்…” என்றதும், “அதுல சுகர் இருக்குமேம்மா…” என்றான் மகன் முறைப்புடன்.
“அதனால என்னடா, உனக்கு வச்ச காப்பில சுகர் இருந்தா உனக்கு தான் சுகர் வருமாம்… சரி உக்காரு, உனக்கு வேற காபி எடுத்திட்டு வரேன்…” என்றவர் அடுக்களைக்கு செல்ல, “இந்தம்மா அப்பாவியா, இல்ல அடப்பாவியா… இப்படி ஓவரா நடிக்குறாங்க…” எனப் புலம்பியபடி செய்தித் தாளை விரித்தான் அருள்மொழி வர்மன்.
“நடிகை ஜலஜா, கள்ளக் காதலனுடன் காரில் ஜல்சா…” கொட்டை எழுத்தில் முன் பக்கத்தில் போட்டிருந்த செய்தியைக் கண்டதும் அவன் முகத்தில் எரிச்சல் தெரிந்தது.
“நாட்டுல எத்தனை முக்கியமான விஷயங்கள் எல்லாம் இருக்கு… அதை எல்லாம் விட்டுட்டு, எவ எவன் கூடப் போனான்… எவளுக்கு மூணாவது கல்யாணம் ஆச்சுன்னு போடுற நியூஸ் எல்லாம் ரொம்ப முக்கியமா…”
“கொரானா நோயாளியான இளம்பெண்ணை ஆசுபத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவர் பாலியல் வன்முறை…” என்ற எழுத்துகளைத் தொடர்ந்து அது சம்மந்தமான வரிகள் கீழே ஓடியது.
“கடவுளே… ஒரு நோயாளியைக் கூட விட்டு வைக்காம அப்படி என்ன காம வெறி புடிச்சு அலையுறானுங்க…” என்றவன் பேப்பரைத் தூக்கி டீப்பாயில் எறிய காபியுடன் வந்த சகுந்தலா, “என்னடா, நியூஸ் பேப்பர் படிச்சிட்டு தூக்கி எரியுற…” என்றபடி கோப்பையை நீட்டினார்.
“இதுல வர்ற செய்திங்களைப் படிச்சா நல்லா இருக்கவன் மனசு கூட தப்புத் தப்பா யோசிக்கத் தொடங்கிரும் போலருக்கு…” சொல்லிக் கொண்டே காபியைக் குடிக்க வாசலில் கலகலவென்று பேச்சைத் தொடர்ந்து சிரிப்பு சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தான்.
வானதியும், குந்தவையும் ஏதோ நகைச்சுவையாய் பேசி சிரித்துக் கொண்டு உள்ளே வந்தனர்.
“என்ன, காலைலயே ரெண்டு பேருக்கும் ஒரே சிரிப்பு…”
“அம்மா, வானதி கேக்குறா…” குந்தவை ஏதோ சொல்ல வர அவள் வாயைப் பொத்த முயன்றாள் வானதி.
“ப்ச்… பரயண்டா பரஞ்சில்லே…” அவள் சிணுங்க இவள் கையைப் பிடித்து விலக்கினாள்.
“நான் கோலம் போடும்போது வானதி கேக்குறா… ஏன், அரிசி மாவுல புட்டு செய்யாம வாசல்ல கோலம் போடறீங்கன்னு…” என்றதும் கேட்டுக் கொண்டிருந்த சகுந்தலா சிரிக்க, அருளும் சிரிப்புடன் ஜாகிங் கிளம்பினான். வானதி வெட்கத்துடன் ஓட்டமாய் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.
“ஹாஹா, அப்படியா கேட்டா… அவங்க ஊருல எல்லாம் பச்சரிசி மாவுல புட்டு தான் செய்வாங்க… எனக்கு கூட புட்டு ரொம்பப் பிடிக்கும்… நாளைக்கு அவளை செய்ய சொல்லணும்…” சகுந்தலா சொல்ல, “எப்படிம்மா, எதை சொன்னாலும் சாப்பிடறதுலயே நிக்கறிங்க…” என்றாள்.
“அடப்போடி, என்ன பண்ணாலும் நமக்கு சோறு முக்கியம்டி…” என்றவர், “நீ இன்னைக்குப் படிக்கலையா…” என்று கேட்க,
“நேத்து படிக்கிறதுக்கு வானதி ஒரு ஷார்ட்கட் சொல்லிக் கொடுத்தாளா… ஈசியா படிச்சுட்டேன்…” என்றாள் குந்தவை.
“ஓ… எதைப் படிச்சாலும் மறந்து போகுதுன்னு புலம்பிட்டு இருந்தே… என்ன ஷார்ட்கட்…” என்றார் சகுந்தலா.
“எனக்கு பிடிச்ச விஷயம் என்ன…”
“உனக்குப் பிடிச்சதுன்னா, நல்லாத் திங்கறது, தூங்கறது, சினிமாப் பாட்டு கேக்கறது…” என்றார் யோசனையுடன்.
குந்தவை அவரை முறைக்க, “என்னடி முறைக்கிற… சரியா தானே சொன்னேன்…” என்றார்.
“ம்ம்… எனக்கு பாட்டு பிடிக்குமா… ஒவ்வொரு கேள்வியோட பதிலையும் ஒவ்வொரு பாட்டு மெட்டுல பாடுற போல படிக்க சொன்னா… நானும் டிரை பண்ணேன்… இப்ப யோசித்துப் பார்த்தா நல்லா நினைவு இருக்கு…” என்றாள் சந்தோஷத்துடன்.
வியப்புடன் கன்னத்தில் விரல் வைத்தவர், “ரியல்லி… நானும் டிரை பண்ணிப் பார்க்கறேன்…” என்றதும் யோசிப்பது குந்தவையின் முறையானது.
“நீ என்னமா டிரை பண்ணப் போற…” என்றாள் வியப்புடன்.
“இந்த பொன்னியின் செல்வன் அஞ்சு பார்ட் புக்காச்சா… எவ்ளோ படிச்சாலும் சில நேரம் சில காட்சிகள் மறந்து போயிடுது… நானும் இப்படி படிச்சு மெமரில வச்சுக்கப் போறேன்…” என்றதும் கேவலமாய் அன்னையை ஒரு பார்வை பார்த்தவள், “உன்னைலாம் திருத்த முடியாதே…” என்றாள் கடுப்புடன்.
“எதுக்கு என்னைத் திருத்தணும்… நான் என்ன ஆன்சர் பேப்பரா… நீ ஒழுங்கா எழுதி நல்ல மார்க் வாங்குற வழியைப் பாரு… என்னைத் திருத்த வந்துட்டா…”
“ஹூக்கும்…. அதானே, நீ திருந்திட்டா தான் உலகம் அழிஞ்சிருமே… என்னமோ பண்ணு…” என்றவள் அறைக்கு செல்ல வாயை இட வலமாய் ஆட்டி “இருடி… இன்னைக்கு உனக்கு இட்லி ஊத்தி வைக்கறேன்…” என்றவர் அவளைப் பழி வாங்கும் முடிவுடன் அடுக்களைக்கு சென்றார்.
வானதியும் அவருடன் சேர்ந்து கொள்ள அவளிடம் கோலப் பொடியைப் பற்றி சொல்லிக் கொண்டே தனது புட்டு தின்னும் ஆசையை சொல்லி பிட்டு போட்டார்.
“அதிநெந்தா ஆன்ட்டி, நாள தன்னே புட்டு உண்டாக்காம்… பச்சரி இல்லே…” என்றாள்.
“ஓ இருக்கே… கூட அந்த கடலைக் கறியும் செய்யறியா… நான் நிறைய கதைல படிச்சிருக்கேன்… புட்டுக்கு பெஸ்ட் காம்பினேஷன் கடலைக் கறியாமே…” என்றதும், “ஹாஹா… செய்யாம் ஆன்ட்டி…” என்றவள் சிரிக்க, “அப்பாடா, என்னைக்கோ வாங்கி வச்ச புட்டு குழாய்க்கு இன்னைக்கு தான் வேலை வந்திருக்கு…” என்றார் சந்தோஷத்துடன்.
காலை உணவு முடிந்து அருள் முன்னமே கிளம்பிவிட  தந்தையுடன் சாப்பிட அமர்ந்த குந்தவையின் தட்டில் அவளைப் பார்த்து சிரித்தது இட்லி. தந்தை முன்னில் எதுவும் சொல்ல முடியாமல் அதை வாய்க்குள் போட்டு இறக்கிக் கொண்ட குந்தவைக்கு அது உள்நாட்டு அதிபரின் திட்டமிட்ட சதி என்பது நன்றாகவே புரிய அன்னையை முறைத்தவளை நோக்கிப் பழிப்புக் காட்டினார் சகுந்தலா.
அவர்களை கவனித்துக் கொண்டிருந்த வானதி இருவரும் கிளம்பி சென்ற பிறகு சகுந்தலாவிடம் கேட்க, “அவளுக்கு இட்லின்னா சுத்தமாப் பிடிக்காது… ஆனா அவ அப்பாக்கு இட்லி தினமும் வேணும்… அவருக்கு செய்யறதை மத்தவங்களும் வேண்டாம்னு சொல்லாம சாப்பிடணும்… இல்லேன்னா கோபம் வந்திடும்… இதை அடிக்கடி நான் அவளைப் பழி வாங்க யூஸ் பண்ணிக்குவேன்…” என்றதும் வானதிக்கு சிரிப்பு பொங்கிவர அடக்க முடியாமல் சிரித்தாள்.
“ஹாஹா… சூப்பர் ஆன்ட்டி… சான்ஸே இல்லா… நிங்கள்க்கு சப்ஸ்டிடூட்டே கிடையாது…” கண்ணில் நீர் வர சிரித்தாள்.
“எனிக்கும் என்ட வீட்டில் அம்மயோடு இங்கனே ஜாலியாய் இரிக்கணம்னு ரொம்ப ஆச… பக்ஷே, அச்சன்டே அசூகம், (நோய்) சேச்சிட ஹெல்த் கண்டிஷன், நாளே செலவினு எந்தா செய்யுமெந்த யோஜன… இதொக்கே சிரிக்கான் தன்னே சமயமில்லாதே ஆக்கி… நான் இவிடே வந்த பின்னே குறே சிரிக்குன்னு…” என்றதும் சகுந்தலாவின் கண்களும் பனித்தன.
“நீ சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டுட்டே… இனி எல்லாம் நல்லதா நடக்கும்மா… வருத்தப்படாத…” என்றார்.
“ம்ம்… நல்லது நடக்குமோ இல்லியோ, என்டே சேச்சி ஒண்ணு நடந்து கிட்டியால் மதி…” என்றாள் பெருமூச்சுடன்.
“ம்ம்… நிச்சயம் நடப்பா…” என்றார் சகுந்தலா அழுத்தமான குரலில்.
“நிங்களே வாக்கு பலிக்கட்டே ஆன்ட்டி…” என்ற வானதி அவர் கையைப் பற்றிக் கொள்ள ஆறுதலாய் தட்டிக் கொடுத்தார் சகுந்தலா.
“வானதி, சிரிக்குறவங்க எல்லாம் சந்தோஷமானவங்கன்னு சொல்ல முடியாது… தன்னோட துயரத்தைத் தொலைக்க சிரிப்புங்கற முகமூடியைப் போட்டுகிட்டவங்களாக் கூட இருக்கலாம்… அதனால சிரிக்க முடியலையேன்னு யோசிக்கறதை விட்டுட்டு நம்மாலயும் மத்தவங்களை சிரிக்க வைக்க முடியும்னு நம்பு… அது ஒரு பாஸிட்டிவ் பீல் கொடுக்கும்…” அவர் சொன்னது முழுமையாய் புரியாவிட்டாலும் ஏதோ புரிய தலையாட்டினாள்.
நாட்கள் அழகாய் நகர அம்சமாய் அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாய் பொருந்தி கொண்டாள் வானதி.
ஞாயிறு காலை சோம்பலாய் விடிய சகுந்தலா, சுந்தரம் உட்பட எல்லாரும் மெதுவாகவே எழுந்தனர். வானதிக்கு எப்போதும் போல விழிப்பு வந்துவிட வாசல் கூட்டி கோலப் பொடியை எடுத்தவள் கோடு போட நினைத்தால் அது கோணலாக சென்றது. மனம் தளராமல் பலமுறை முயற்சி செய்து கொடு போட்டுப் பழகியவள் சூரியனோ, தாமரையோ பெயர் சொல்ல முடியாமல் எதையோ வரைந்தாள்.
குளித்துவிட்டு வந்தவள் முன்தினம் ஊற வைத்திருந்த கடலையை குக்கரில் வேக வைத்துவிட்டு தேங்காயைத் திருவத் தொடங்கினாள். சகுந்தலா எழுந்து வரும்போதே கடலைக் குழம்பு கொதிக்கத் தொடங்கியிருக்க பச்சரிசி மாவில் உப்பிட்ட தண்ணீர் தெளித்து உதிரியாய் பிசைந்து கொண்டிருந்தாள் வானதி.
“ஆஹா, காலைல சீக்கிரமே எழுந்துட்டியா… சன்டே இங்கே எல்லாரும் எட்டு மணிக்கு முன்னாடி எழுந்துக்க மாட்டோம்…” சொல்லிக் கொண்டே கடலைக் கறியைப் பார்த்தவர், “ம்ம்… சூப்பரா இருக்கே… புட்டுக்கு இப்படி தான் பிசையணுமா…” என்று கேட்க புன்னகைத்தவள், “எனிக்கு எப்பளும் அஞ்சு மணிக்கு மேல உறக்கம் வரில்லா ஆன்ட்டி… நிங்கள்க்கு காபி தரட்டே…” என்றாள்.
“ஆஹா, பொண்ணுங்கன்னா இப்படி இருக்கணும்… நானும் ஒண்ணு பெத்து வச்சிருக்கனே… நீ புட்டை தயார் பண்ணு மா… நான் காபி கலந்துக்கறேன்…” என்றவர் அவளுக்கும் சேர்ந்து கலந்து ஒரு கப்பை நீட்டினார்.
அதற்குள் எழுந்து வந்த குந்தவை உடம்பை நெளித்தபடி, “அம்மா… எனக்கும் காபி…” என்று கையை நீட்ட, “பிளாஸ்க்குல ஊத்தி வச்சிருக்கேன்… எடுத்துக்க…” என்றவர் வாசலுக்கு வர அங்கே கோலமென்ற பெயரில் அலங்கோலம் ஆக்கி வைத்திருந்த வாசலைக் கட்டு முழித்தார்.
“இதென்ன, வாசல்ல இத்தனை கோடு போட்டு வச்சிருக்கு… வானதிக்கு கோலம் போடத் தெரியாதோ…” என நினைத்துக் கொண்டே மகளை அழைத்தார்.
“என்னம்மா…” தலையை சொறிந்து கொண்டே வந்தவளிடம், “அதைக் கொஞ்சம் சரி பண்ணு…” என்றதும் வானதி போட்ட கோலத்தைக் கண்டு குந்தவை சிரிக்க, “ப்ச்… சிரிக்காத… அவளுக்கு கோலம் போடத் தெரியாது போலருக்கு…” சகுந்தலா சொல்லவும், “எனக்குத் தெரியலைனா என்னல்லாம் சொல்லுவ… அவளுக்குத் தெரியலைனா மட்டும் பாவமா…” என்றபடி வானதி அங்கங்கே கேப் விட்டுப் போட்டிருந்த கோடுகளை இணைத்து ஒரு உருவம் கொடுத்து கோலமாக்கினாள் குந்தவை.
அங்கு முடித்து உள்ளே வந்தவள், “வானதி, உங்க ஊருல கோலம் போட மாட்டிங்களா…” என்றதும் முழித்தவள், “ஊறயோ (இடுப்பா)… எந்து கோலம்…” என்றாள்.
“நீ வாசல்ல போட்டு வச்சிருக்கியே… அதுக்குப் பேரு தான் கோலம்…” என்று சிரிக்கவும், “ஓ… கேரளத்துல கோலம் இடில்லா… பூக்கோலம் ஓணத்தினு இடும்… பின்னே எந்தெங்கிலும் மல்சரம் (போட்டி) உண்டெங்கில் ரங்கோலி வரைச்சு கலர் கொடுக்கும்…”
“ம்ம்… பார்த்திங்களா மம்மி… இந்த உலகத்துல எல்லாமும் எல்லார்க்கும் தெரியணும்னு இல்ல… கோலப்போட்டில நான் பர்ஸ்ட் ஆக்கும்…” என்றாள் குந்தவை பெருமையுடன்.
“ம்ம்… சரி சரி, நீதான் மெச்சிக்கணும்…”
“அதான, பெத்த பொண்ணு செய்தா மட்டும் பாராட்ட மனசு வராதே…” என்றவள், புட்டுக் குழலில் ஆவி வந்ததும் வானதி அதை எடுப்பதைப் பார்த்து நின்றாள்.
“வானதி, சூப்பர்… பார்த்ததுமே பசிக்குது…” என்றாள். சிறிது நேரத்தில் ஆண்களும் சாப்பிட வர புதியதாய் செய்த காலை உணவை சுந்தரம் உட்பட ரசித்து சாப்பிட்டார்.
மாலையில் சுந்தரம் கிளம்புக்கு சென்றிருக்க, வானதியை குந்தவை ஷாப்பிங்க்கு அழைத்தாள். அவள் தயங்க சகுந்தலா போய் வருமாறு கூறினார். சகுந்தலாவுக்குத் துணையாய் அருள் வீட்டில் இருந்ததால் சம்மதிக்க இருவரும் கிளம்பினர். வழக்கம் போல் சகுந்தலா கையில் பொன்னியின் செல்வன் புத்தகத்துடன் அமர்ந்திருந்தார்.
அப்போது சார்ஜில் இருந்த அலைபேசி சிணுங்க எழுந்து சென்றவர் அதில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டதும் திகைத்து வேகமாய் எடுத்தார்.
கண்கள் கலங்க, மனம் உருக பேசிக் கொண்டிருந்தார்.
“உனக்கு என் நினைவே வரலதான… இவ்ளோ நாளா போன் கூடப் பண்ணல…” விசும்பிக் கொண்டே கேட்டார்.
எதிர்ப்புறம் என்ன பதில் சொன்னதோ, “நீ கவலைப்படாத… கூடிய சீக்கிரமே எல்லாம் மாறும்… அதுக்கான முயற்சியில் தான் நான் இருக்கேன்… எங்கயோ கண் காணாத இடத்துல நீ இருந்தாலும் உனக்காக என் மனசு எப்பவும் துடிச்சிட்டு தான் இருக்கும்னு மறந்துடாத…” சொல்லிக் கொண்டிருக்கும்போதே அருளின் குரல் ஹாலில் “அம்மா…” என்று ஒலித்தது.
“சரிப்பா, அருளு வந்துட்டான்… நான் வச்சிடறேன்… டைம் கிடைக்கும்போது எனக்குக் கூப்பிடு…” என்றவர் அழைப்பை வேகமாய் துண்டித்துவிட்டு தலையணைக்கடியில் வைத்துக் கொண்டு கதவைத் திறந்தார்.
“கதவை சாத்திட்டு இந்நேரத்துல என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க… எவ்ளோ டைம் கூப்பிடறது…”
“என்னடா நொய்யு நொய்யுனு… அவசரத்துக்கு கக்கூஸ் கூடப் போக விட மாட்ட போலருக்கு…” என்றார் கண்ணைத் துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டே. 
அவரை உறுத்துப் பார்த்தவன், “போன் பேசிட்டு இருந்தியா…” என்று கேட்க, “ஆமாம்… கொவிட்க்கு லாக் டவுன் நீட்டலாமா வேண்டாமான்னு நம்ம முதலமைச்சர் கால் பண்ணிக் கேட்டாரு… அதான் டிஸ்கஷன்ல இருந்தேன்…” என்றவரை அமைதியாய் நோக்கியவன், “நம்பிட்டேன் மா… நான் பிரண்டு வீட்டுக்குக் கிளம்பறேன்…” என்றான்.
“ம்ம்… போயிட்டு வா…” என்றவர் வாசலுக்கு சென்று அவன் வண்டியை எடுத்துப் போகும் வரை நோக்கி நின்றுவிட்டு கதவைத் தாளிட்டு ஹாலுக்கு வந்தார். மனம் மறக்க முடியா நினைவில் கலங்கி கனத்துக் கிடந்தது.
கணவர் வரும்போது கண்கள் கலங்கி இருந்தால் அநாவசியக் கேள்விகள் வருமென்று உணர்ந்தவர் முகத்தைக் கழுவிக் கொண்டு மீண்டும் பொன்னியின் செல்வனை நாடினார்.
கையிலிருந்த தடிமனான புத்தகத்தை குருட்டாம் போக்கில் திறந்தவர் கண்கள் அதில் ஓடிய வரிகளில் நிலைத்து வலித்தது.
ஆதித்த கரிகாலனைப் பார்த்து அவனது தாத்தா அவன் பிறந்தபோது அரண்மனையில் நடந்த கொண்டாட்டங்களைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். சோழ குலத்தை விளங்க வைக்க ஆண்மகன் பிறந்துவிட்டான் என்று குதூகலம் அடையாதவர்கள் அங்கு யாரும் இல்லை… என்பது போல் வரிகள் தொடர்ந்து கொண்டிருக்க நெஞ்சோடு புத்தகத்தை அணைத்துக் கொண்டவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ஆதித்யா… நீ பிறந்தப்போ நம்ம வீட்டுலயும் இப்படி தானேடா கொண்டாட்டமா இருந்துச்சு…”
வயிற்றில் பத்து மாதமும்
மனதில் ஆயுள் முழுதும்
பிள்ளைகளை சுமக்கும்
அன்னையின் சுமை
மண்ணுக்குள் மண்ணாய்
மக்கிப் போவது வரை
முடிந்து போவதில்லை…

Advertisement