Advertisement

அத்தியாயம் – 20
“ஹூம், நான் பெங்களூரு வந்து ரெண்டு நாளாச்சு… என்னோடவே ஊருக்கு கிளம்பின நந்தினி திரும்பி வராம இன்னும் என்ன பண்ணிட்டு இருக்காளோ…” யோசித்துக் கொண்டே காபியைக் கலந்து ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான் ஆதித்யன்.
சனிக்கிழமை அவனது அலுவலகத்திற்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தான். நந்தினி இல்லாததால் அலுவலகம் செல்லவே போர் அடித்தது. உடனே அவளைக் காண வேண்டும் போலிருக்க அலைபேசியில் அழைத்தான்.
அது ஒலித்து எதிர்ப்புறத்தில் ஒரு பெண் குரல், “ஹலோ…” எனவும் அது நந்தினியின் குரல் இல்லையே எனத் தோன்ற சற்றுத் தடுமாறியவன் சமாளித்தான். அதற்குள் எதிர்ப்புறம் மீண்டும் ஒலித்தது.
“ஹலோ, யாரானு சம்சாரிக்கனது…”
“என்னது சம்சாரியா ஹலோ நான் சம்சாரியோ, சாமியாரோ இல்லங்க… நான் ஒரு பிரம்மச்சாரி…” என்றதும் எதிர்க்குரல் குழம்பி மௌனம் சாதிக்க புன்னகைத்துக் கொண்டான்.
“ஐ ஆம் ஆதித்யா, பிரம் பெங்களூரு… நந்தினி இல்லியா…” என்று கேட்கவும், “ஆஹான், ஆதி சேட்டன் ஆனோ… நான் வானதி, நந்தினிட சிஸ்டரா… சுகானோ சேட்டா…”
அவள் இயல்பாய் கேட்கவும் திகைத்தவன், “யா பைன்… நந்தினி…” மீண்டும் கேட்க அவள் கலகலவென்று சிரித்தாள்.
“ஹோ… நிங்கள்டே ஒரு நந்தினி… கொடுக்காம்…” என்றவள், “சேச்சி… இதா, நினக்கு போன்…” என்று அலற அடுக்களையில் இருந்து வந்தவள், “யாராடி போனில்… எனிக்கு வந்த கால் நீ எந்தினு எடுத்தது…” தங்கையை அதட்டிக் கொண்டே வாங்கியவள் அதில் ஆதி என்று காணவும் சட்டென்று தங்கையை நோக்க, “ஹூம்… ஓகே ஓகே… கண்டு கண்டு கண்டில்லா, கேட்டு கேட்டு, கேட்டில்லா…” பாடிக் கொண்டே நகர்ந்தாள் அவள்.
சட்டென்று முகம் சிவந்த நந்தினி அலைபேசியுடன் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“ஹலோ…” ரகசியம் பேசுவது போல் ஒலித்த அவளது குரலைக் கேட்டதும் மனதுக்குள் சந்தோஷப் பூ பூக்க, “ஹாய் நந்து… இன்னும் இங்கே வந்து சேராம அங்க என்ன பண்ணிட்டு இருக்க… என்னைப் பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சியா, உன்ன எவ்ளோ மிஸ் பண்ணறேன் தெரியுமா…” படபடவென்று மனதிலுள்ளதைக் கொட்டித் தீர்த்தான் ஆதி.
“சரி, சரி.. என்ட சக்கரக் குட்டன் அழாத… அப்பாக்கு நேத்து திடீர்னு உடம்பு சரியில்லாமப் போயிருச்சு… அதான் கிளம்பலை… இன்னைக்கு நைட் கிளம்பிருவேன்… நாளைக்கு அங்கே இருப்பேன்… என் சக்கரக் குட்டனைக் காண ஓடி வந்திருவேன்…” ரகசியமாய் கிசுகிசுத்தாள் நந்தினி.
“ஹூக்கும்… இப்ப மட்டும் சக்கரக்குட்டன்… அங்க போனா என் நினைவே இருக்கறதில்லை… எனக்குதான் எப்பவும் உன்னையே நினைச்சு மூச்சு முட்டற போல இருக்கு…”
“ஹேய்… ஆதிக்கண்ணா, கோச்சுக்காத டா… நான்தான் நாளைக்கு வந்திருவேன்ல…” அவள் கொஞ்சவும் குளிர்ந்தான்.
“ம்ம்… என்னை வெயிட் பண்ண வச்சதுக்கு உனக்கு பெரிய பனிஷ்மென்ட் இருக்கு…”
“என்ன பனிஷ்மென்ட்…” தெரிந்துகொண்டே கேட்கும்போது அவளது குரல் குழைய முகம் நாணத்தில் பிரகாசித்தது.
“ச்ச்சீ போடா…” என்றவள், “ஓகே… நாளைக்குப் பார்க்கலாம்…” என்று வைத்துவிட அவளுடன் பேசியதும் உற்சாகமாய் உணர்ந்தான் ஆதித்யன்.
“வாடி வா… உனக்கு நாளைக்கு இருக்கு…” யோசிக்கும் போதே குதூகலமாய் இருக்க விசிலடித்துக் கொண்டான்.
அடுத்தநாள் சொன்னது போலவே நந்தினி காலையில் பெங்களூரு வந்துவிட்டாள். ஞாயிறு விடுமுறை தானே… என்று குதித்த வானதியை சமாளித்து கிளம்பி இருந்தாள்.
நந்தினிக்கு ஆதித்யன் மேல் விருப்பம் இருப்பதை நேரடியாய் அவள் வானதியிடம் சொல்லாவிட்டாலும் அவளது பேச்சில் அடிக்கடி வரும் ஆதியையும் அவனைப் பற்றி சொல்லும்போது சிறு நாணத்துடன் பிரகாசிக்கும் நந்தினியின் முகத்தையும் வைத்தே இருவருக்குள்ளும் சம்திங் சம்திங் இருப்பதை புரிந்து வைத்திருந்தாள்.
நந்தினி கோவை ஹாஸ்டலில் தங்கிதான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தாள். எனவே அழகாய் தமிழ் பேசுவாள்.
அவளுக்கும் ஆதியைப் போல் படிக்கும்போதே காம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாக பெங்களூரு கிளைக்கு வேலைக்கு வந்து சேர்ந்திருந்தாள். ஆதி அட்மினிஸ்ட்ரேசன் டிபார்ட்மென்ட் என்றால் இவள் மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட். இருவருக்கும் தினமும் பார்க்க பேச சந்தர்ப்பம் அதிகமாய் இருந்ததால் நட்புடன் தொடங்கிய பழக்கம் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனதில் புரிதலுடன் அழகான காதலாய் மலர்ந்திருந்தது.
இரவு எட்டு மணிக்கு பேருந்தில் கிளம்பி இருந்தவள் காலை ஆறு மணிக்கு பெங்களூருவை வந்தடைந்தாள். அதிலும் பாதி நேரம் வரை ஆதியுடன் அலைபேசியில் அரட்டை அடித்ததில் உறங்காமல் கழிந்திருந்தது. அவளை பிக்கப் செய்ய வருகிறேன் என்று அடம் பிடித்தவனை வேண்டாம் என்று கூறியிருந்தும் பேருந்தில் இருந்து இறங்குபவள் முன்னில் காத்து நின்றவனைக் கண்டு மலர்ந்தாள்.
அவளைக் கண்டதும் அழகாய் புன்னகைத்தவன் “காலை வணக்கம் கண்மணியே…” என்று சொல்ல, “அவ்ளோ தூரம் வர வேண்டாம்னு சொல்லியும் வந்து நிக்கற… உன்னை என்னதான் பண்ணறது…” என்று செல்லமாய் முறைத்துக் கொண்டே ஆர்வமாய் அவனைப் பார்த்தாள். அதென்னவோ அவன் முகத்தை எத்தனை நேரம் பார்த்தாலும் அவளுக்கு சலிப்பதே இல்லை. சிறு நாணத்துடன் தன் முகத்தையே பார்திருப்பவளைக் கண்டு அவன் தான் சிணுங்குவான்.
“நீ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவ… நாம மீட் பண்ணப் போறோம்னு நினைச்சாலே தூக்கம் எல்லாம் ஓடிப் போயிருது நந்து… அப்புறம் எதுக்கு பேருக்கு படுத்திட்டு… சரி, உன்னயாச்சும் பிக்கப் பண்ணலாம்னு ஓடி வந்துட்டேன்…” சொன்னவன் பாகை வாங்கி வண்டி முன்னில் வைத்தான்.
“லீவாச்சே, பாவம் பையன் கொஞ்சம் தூங்கட்டும்னு நினைச்சா இங்க வந்து நிக்கற… இருந்தாலும் நீ இவ்வளவு சின்சியர் லவ்வரா இருக்கக் கூடாதுடா…” அவனைக் கிண்டல் அடித்துக் கொண்டே பைக்கில் அமர்ந்தாள்.
“காலைல பைக்கைத் தூக்கிட்டு வந்திருக்கேன்… மீட்டருக்கு மேல ஏதாச்சும் போட்டுக் கொடுங்க மேடம்…” அவன் எதை சொல்கிறான் எனப் புரிந்தவளுக்கு வெக்கமாய் வந்தது.
“ச்சீ… போடா… எப்பப் பார்த்தாலும் இப்படியே பேசிட்டு…” அழகாய் வெக்கப் பட்டவளை அப்படியே இடம் பொருள் பார்க்காமல் நெஞ்சோடு அணைக்கும் ஆவல் வந்தது.
“ப்ச்… என் முன்னாடி வெக்கப்படாதன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்… அதைப் பார்க்கும்போதே ஜிவ்வுன்னு ஏதோ ஒண்ணு ஏறுதே…” அவன் சொல்லவும், “ஓ ஏறும்… ஏறும்…” என்றவள் அவன் இடுப்பில் கிள்ள துள்ளினான்.
“காலைலயே மனுஷனை இம்சை பண்ணறாளே…” சொல்லிக் கொண்டே கையால் அழுந்த தலைமுடியை ஒதுக்கியவன் வண்டியை எடுக்க பின்னில் இரண்டு பக்கமும் காலைப் போட்டு அமர்ந்தாள் நந்தினி.
“ப்ச்… இந்தக் குளிர்ல இவ்ளோ இடைவெளி அவசியமா.. நான் பாவமில்லையா…” அவன் கேட்கவும் சிரித்தவள், பின்னிலிருந்து அவனை மெல்ல அணைத்துக் கொள்ள புன்னகையுடன் வண்டியைக் கிளப்பினான். பெங்களூருவின் குளிரான சாலையில் மப்ளர், ஸ்வெட்டர் அணிந்து நடமாடத் தொடங்கிய மக்களைக் கடந்து குளிருக்கு இதமாய் அவள் உடல் கொடுக்கும் ஸ்பரிச வெப்பத்தை உணர்ந்தபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் ஆதித்யன்.
“ஆதி, நீ வீட்ல நம்ம விஷயத்தை சொல்லப் போறேன்னு சொன்னியே… சொல்லிட்டியா…” அவளது உதடுகள் அவன் காதருகே தொட்டும் தொடாமல் ஸ்பரிசித்து கேட்க, சட்டென்று மௌனித்தவன் “வீட்ல போயி விவரமா பேசிக்கலாம்…” என்று சொல்லவும், “வீட்டுக்கா, என்னை ஹாஸ்டல்ல விடு…” என்றாள் அவள் சிணுங்கலுடன்.
“ஏன், அவ்ளோ அவசரமா அங்க போயி என்ன பண்ணப் போற… இன்னைக்கு பிரீதானே… ஈவனிங் போனாப் போதும்…” அவன் சொல்லவும், “எனக்கு கொஞ்சம் தூங்கணும், துணி துவைக்கணும்…” என்றாள் அவள்.
“அதை நம்ம வீட்லயும் பண்ணலாம்… அடம் பிடிக்காத…”
“யாரு, நானா அடம்பிடிக்கறேன்…” வாய்க்குள் முனங்கிக் கொண்டாலும் அவன் காதில் கேட்கவே செய்ய இதழில் புன்னகை நெளிந்தது.
“உன்கிட்ட நிறைய பேசவேண்டி இருக்கு நந்து… அதான்…” அவன் குரலில் தெரிந்த கனம் மனதை அச்சுறுத்த “ம்ம்…” என்று தலையாட்டினாள். அலுவலகத்திற்கு சற்று அருகில் தான் ஆதியின் பிளாட் இருந்தது. அங்கே ஆண், பெண் பேதமில்லாமல் சகஜமாய் பழகுவது வழக்கம் என்பதாலும் நந்தினி அவன் பிளாட்டுக்கு இதற்கு முன்பே பலமுறை வந்திருந்ததாலும் முன்னிலிருந்த செக்யூரிட்டி சிநேகமாய் சிரித்து சல்யூட் வைத்தான்.
அவனிடம் பதிலுக்கு சிரித்துவிட்டு ஆதித்யனின் பின்னில் சென்ற நந்தினிக்கு கூச்சமாய் இருந்தது.
“காலையில் கையில் பாகுடன் இங்கே வந்ததைக் கண்டு அந்த செக்யூரிட்டி என்ன நினைத்தானோ… இதை சொன்னால் மத்தவங்க என்ன நினைக்கறாங்கன்னு யோசிச்சா நம்மால வாழ முடியாதுன்னு இந்த ஆதி லெக்சர் கொடுப்பான்…” என யோசித்தபடி அமைதியாய் நடந்தாள்.
ஆதியின் பிளாட் இரண்டாவது தளத்தில் இருக்க படியேறி முன்னில் வந்து நின்றனர். பாக்கெட்டில் கை நுழைத்தவன் சாவியை எடுத்து லாக்கின் வாயில் திணிக்க அது க்ளக் என்ற ஓசையுடன் திறந்து வழிவிட்டது.
உள்ளே நுழைந்ததும் “நீ பிரஷாகிட்டுட்டு வா… நான் காபி கொண்டு வரேன்…” என்றவன் அடுக்களைக்கு செல்ல அவளுக்கும் குளிக்க வேண்டுமென்று தோன்றியதால் பாகிலிருந்து வேண்டியதை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.
ஆண் மட்டும் தங்கியிருக்கும் வீடுதான் என்றாலும் ஹால், குளியலறை எல்லாமே சுத்தமாய் வைத்திருந்தான் ஆதி. வாரம் இருமுறை வீட்டைக் கூட்டித் துடைத்து பாத்ரூம் கழுவி விட அங்கே சர்வன்ட் இருந்தனர்.  
குளித்து பிரஷ்ஷாய் வெளியே வந்தவளை பிரட் ஆம்லட்டும் சூடான காபியும் வரவேற்க குளித்ததில் பசி அதிகமாகி இருந்தவள் அவள் கேட்காமலே புரிந்து கொண்டு தயாராய் வைத்திருந்தவனை சந்தோஷமாய் கட்டிக் கொண்டாள்.
அவள் தலையிலிருந்து ஒற்றிக் கொண்டிருந்த நீர்த்துளிகளில் இன்னும் ஷாம்பூவின் மணம் மீதமிருக்க நெஞ்சோடு அணைத்து நின்றவளின் அருகாமையில் மனம் தடுமாறத் தொடங்க சுதாரித்துக் கொண்டவன், “நந்து… நான் இன்னும் குளிக்கல…” விலக்க முயல அவள் இறுக்கிக் கொண்டாள்.
“அதொண்ணும் பரவால்ல…” அவன் மேலுள்ள நேசத்தில் குழந்தை போல் கண்ணை மூடி சிணுங்கியவளை நெற்றியில் முத்தமிட்டு விலக்கினான் ஆதித்யன்.
“நந்து, பசியா இருப்பேன்னு தெரியும்… அதான் செய்து வச்சேன்… நீ சாப்பிடு, நான் குளிச்சிட்டு வந்திடறேன்…” சொல்லிவிட்டு டவலுடன் குளியலறைக்குள் நுழைந்து கொள்ள மனதிலும் உடம்பிலும் குளியலறையிலும் கூட அவள் வாசமே நிறைந்திருக்க சுகமாய் உணர்ந்தான்.
“இவளை இன்னும் எத்தனை நாள்தான் எட்டி நின்றே ரசித்துக் கொண்டிருப்பதோ…” நினைக்கும்போதே மனதுக்குள் அன்னையின் சோகமான கண்ணீர் முகம் வந்து போக, “அம்மாகிட்ட வாக்கு கொடுத்திருக்கோம்… நந்து கிட்ட பக்குவமா சொல்லணும்… வேண்டாம எதுவும் சொல்லி பயப்படுத்திடக் கூடாது…” என நினைத்துக் கொண்டே பெருமூச்சுடன் குளித்து முடித்தான். செம பசியில் இருந்தவள் அவன் செய்தது எல்லாவற்றையும் உள்ளே தள்ளி காபியும் குடித்துவிட்டு அடுக்களையில் நின்று உருட்டிக் கொண்டிருக்க மேகி நூடில்ஸ் பாக்கெட்டைக் கண்டவள் முகம் பிரகாசமானது.
வேகமாய் அதைத் தயாரிக்கத் தொடங்கியவள் பின்னில் ஆதி வந்து நிற்பதை உணர்ந்ததும், “சாரி ஆதி, செமப் பசி… நீ செய்து வச்ச எல்லாத்தையும் நானே சாப்பிட்டுட்டேன்… ஜஸ்ட் டூ மினிட்ஸ்… மேகியோட வரேன்…” சொன்னவளின் பின்னில் வந்து நின்றவன் அவள் தோளில் தாடையைப் பதித்து பின்னிலிருந்து அணைத்துக் கொள்ள, கைகளைத் தட்டி விட மூளை சொன்னாலும் அந்த அணைப்புக்குள் புதைந்து போகவே மனம் ஏங்கியது.
கைகள் கத்தியைப் பிடித்தபடி இருக்க வெங்காயத்தை நறுக்காமல் சிலையாய் சிலிர்த்து நின்றவளின் கழுத்தில் அவன் முத்தமிட சட்டென்று திரும்பி அவன் நெஞ்சில் தஞ்சம் கொண்டாள் நந்தினி. இடுப்பில் டவல் மட்டும் அணிந்திருந்தவனின் குளிர்ந்த வெற்று மார்பில் அவள் சாய்ந்திருக்க மேனியிலிருந்து வீசிய சோப்பின் மணமும் இளம் மார்பில் வைரமென மின்னிய நீர்த்துளிகளும் சேர்ந்து மனம் மயக்க இறுக்கமாய் அணைத்துக் கொண்டிருந்தவளின் முகத்தைக் கண்டவன் மனம் காதலில் உருகியது.
வாசங்களும் மனதில்
ஒட்டிக் கொண்டு
வசப்படுத்தும் என்பதை
உனைக் கட்டிக் கொண்ட
போது உணர்ந்தேனடி…
“இவள் எனக்கானவள், இவளை எதற்காகவும், யாருக்காவும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது…” மனம் தவித்தது.
அவள் நெற்றியில் தனது குளிர்ந்த இதழைப் பதிக்க அவள் தேகம் சிலிர்த்து நடுங்குவதை தன்னில் உணர்ந்தான். அவனது இதழ்கள் மெல்ல அவளது கூர்நாசியில் முத்தமிட்டு மெல்லக் கீழிறங்க சட்டென்று அவள் அவனை விட்டு விலகவும் தவிப்பாய் உணர்ந்தவன் தலையைக் கோதிக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்தினான்.
“ச..சாரி நந்து… ஒ..ஒரு வேகத்துல…” அவனது வார்த்தைகள் தடுமாறப் பொறுக்காதவள் வேகமாய் திரும்பி அவனது இதழைத் தன் இதழால் பற்றி சமாதானப் படுத்த முயன்றாள்.
அவளது முத்த முற்றுகையை எதிர்பார்க்காத அவனது இதழ்கள் மெல்லத் துடித்து அவளுக்குள் அடங்க சிறிதுநேரம் ஒருவர் இதழ்மேல் மற்றவர் இதழ்கள் இளைப்பாறிக் கிடந்தன. கைகள் இரண்டும் முதுகில் தேடலைத் தொடங்கியிருக்க கட்டுப்பாட்டை மனம் இழந்திடுமோ எனத் தவிக்கையில் சட்டென்று சுதாரித்து விலகினாள் நந்தினி. விளையாட்டை நடுவில் நிறுத்திய சங்கடம் இருவருக்குள் தவிப்பாய் படர்ந்தாலும் அவர்களுக்குள் இருந்த நிதானம் எல்லை தாண்டக் கூடாது என்று எச்சரித்தது.
முற்றுப்பெறவே
கூடாதென்று மனம்
வேண்டிக் கொள்ளும்
யுத்தகளம் உன்
முத்தங்களடி…
தலைகுனிந்து முகம் சிவக்க நிற்கும் மனம் நிறைந்தவளைக் காதலுடன் பார்த்த ஆதித்யன், “மீட்டருக்கு மேல கொஞ்சம் அதிகமாவே போட்டுக் கொடுத்துட்ட நந்து…” என்று சொல்ல வெட்கத்துடன் திரும்பிக் கொண்டாள் நந்தினி.
“இப்படில்லாம் நடந்திடுமோன்னு தான் நான் ஹாஸ்டலுக்குப் போறேன்னு சொன்னேன்… கேட்டால் தானே…” என்றவளின் குரலில் தாபத்தின் சாயல் மிச்சமிருந்தது.
“எனக்குப் பிடிச்சிருக்கு…” அவன் சொல்லவும் திரும்பியவள், “என்ன பிடிச்சிருக்கு…” என்றாள் பார்வையாலேயே.
“உரிமையோடு நீயாக எனக்குக் கொடுத்த முதல் முத்தம்… இதுவரைக்கும் நான் உன்னை எத்தனையோ தடவை கிஸ் பண்ணி இருந்தாலும் இது ஸ்பெஷல்…” என்றவனின் குரலின் குழைவு அவளை என்னவோ செய்தது.
“சரி போதும், நீ போ… நான் சாப்பிட செய்துட்டு வரேன்…”
அதற்குமேல் நின்றால் அவன் மனமும் தடுமாறுமோ என யோசித்தவன் சிரித்துக் கொண்டே நகர்ந்தான். சிறிது நேரத்தில் சூடான நூடுல்ஸை ஸ்பூனுடன் பிளேட்டில் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள் நந்தினி. அதற்குள் ஆதித்யன் முக்கால் டிரவுசரும் டீஷர்ட்டும் அணிந்து பவ்யமாய் அமர்ந்திருக்க அவனைப் பார்த்துக் கொண்டே அருகில் சென்று அமர்ந்தவள் பிளேட்டை நீட்டினாள்.
“என்னடி, ஓவரா என்னை சைட் அடிக்கற…”
“கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் நீ அழகன்தான்டா…” சொன்னவளை நோக்கிப் புருவத்தைத் தூக்கியவன், “ஓஹோ, ரொம்ப தேங்க்ஸ் மேடம்…” சொல்லிக் கொண்டே சாப்பிடத் தொடங்க அவனையே பார்த்திருந்தாள்.
“என்ன, நூடுல்ஸ் வேணுமா…” கேட்டுக் கொண்டே அவன் ஸ்பூனில் எடுத்து நீட்ட அழகாய் வாங்கிக் கொண்டவள் அவன் அருகே அமர்ந்து அவனையே காதலுடன் பார்த்தாள்.
“போதும்டி… அப்படிப் பார்க்காத… எனக்கு நூடுல்ஸ் இறங்காம தொண்டைலயே நிக்குது…” அவன் அழகாய் வெட்கப்பட்டபடி சொல்ல மனதுக்குப் பிடித்த ஆணின் வெட்கம் கண்டு பிரமிப்புடன் பார்த்தாள். அந்த அழகில் அவன் காலடியில் விழுந்து தொலைந்து போகத் துடித்தது அவள் பெண்மை.
அவன் கன்னத்தைக் கிள்ளி உதட்டில் வைத்தவள், “சோ கியூட் டா நீ… உம்மா… சாப்பிடு… நான் வந்திடறேன்…” என்றவள் அடுக்களையில் இருந்த பாத்திரத்தைக் கழுவி வைத்துவிட்டு வர அவன் சாப்பிட்டு முடித்திருந்தான். அவன் அருகே அமர்ந்தவள், “ஆதி, வீட்ல என்ன சொன்னாங்கன்னு நீ சொல்லவே இல்லை…” கேட்கும்போதே எதிர்பார்ப்பை விட முகத்தில் பயம் அதிகம் தெரிந்தது. அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன் அவள் முகத்தையே பார்த்தான்.
“நந்து, என்னை நீ நம்பறியா…” அவன் கேட்பதன் காரணம் புரியாவிட்டாலும் அந்தக் கேள்வியே வலித்தது.
“ஏன் ஆதி இப்படிக் கேக்கற… உன்னை நம்பற அளவுக்கு நான் என்னைக் கூட நம்பலை…” அவள் வார்த்தைகள் தெளிவாய் நெகிழ்வுடன் ஒலித்தன.
“அப்படின்னா நான் சொல்லப் போறதைக் கேட்டு கலங்கக் கூடாது… தைரியமா இருக்கணும்…” என்றவன் வீட்டில் நடந்ததை அவளிடம் சொல்ல கண்ணீருடன் கேட்டிருந்தாள்.
“ஏன் ஆதி, அங்கிள் சம்மதிக்கலைன்னாலும் பரவால்லன்னு சொன்ன… இத்தனை வருஷம் நம்மை வளர்த்து ஆளாக்கின அவங்களுக்கு நம்ம மேல எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாதா… நீ அப்படி சொல்லிருக்கக் கூடாது… அம்மா ஆசிர்வாதம் மட்டும் முக்கியம்னு சொல்லிருக்க அப்பா முக்கியம் இல்லையா… அவருக்கு அது எவ்ளோ வலிச்சிருக்கும்…” அவள் வார்த்தையில் உண்மையான வருத்தம் தெரிந்தது.
“அப்பா சம்மதிக்கமாட்டார்னு தான் அப்படி சொன்னேன்…”
“எல்லாரும் சம்மதிச்சு தான் நம்ம கல்யாணம் நடக்கணும்… அதான் என் ஆசையும்… ஆன்ட்டி சொன்னதுபோல அவங்க சம்மதிக்கற நாளுக்காக காத்திருக்கலாம் தப்பே இல்லை…” என்றவளை அவனுக்கு அவ்வளவு பிடித்தது.
“ம்ம்… இந்தப் புரிதல் தான் உன்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது… உனக்கு அதிகமா நான் விளக்கம் கொடுக்கத் தேவை இல்லை… எனக்கும் சேர்த்து மத்தவங்களைப் பத்தி நீயே யோசிச்சிடுவ… ஐ லவ் யூ நந்துமா…” சொன்னவன் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
தென்றலிலும் இல்லாத
மேன்மை – எனைத்தொட்டு
பேசும் உன் அண்மை…
மலரிலும் இல்லாத
மயக்கம் என்னருகில்
நீ இருக்கும் கிறக்கம்…

Advertisement