Advertisement

அத்தியாயம் – 19
“அம்மா, அண்ணா ஊருக்கு கிளம்பிட்டு இருக்கு…” குந்தவை அன்னையிடம் சொல்லிக் கொண்டே அருகில் அமர்ந்தாள்.
“ம்ம்… இங்க ஒரு பூகம்பத்தையே கிளப்பி விட்டுட்டு அவன் பாட்டுக்குக் கிளம்பறான்… உன் அப்பாவை நான் எப்படி சமாளிக்கப் போறேன் தெரியலை… இவங்க ரெண்டு பேர் பிடிவாதத்துக்கும் நடுவுல மாட்டிட்டு எனக்கு பைத்தியமே பிடிச்சிரும் போலருக்கு…” புலம்பிக் கொண்டே அவிழ்ந்திருந்த கூந்தலை முடிந்து கொண்டவரைக் காணப் பாவமாய் இருந்தது மகளுக்கு.
“அம்மா, நானும் அவங்க போட்டோ பார்த்தேன்…”
மகளைப் பார்த்தவர் எதுவும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “ரொம்ப அழகா இருக்காங்க மா… அண்ணாவுக்கு நல்ல பொருத்தம்…” சொன்னவளை முறைத்தார் சகுந்தலா.
“பொருத்தம் அவங்களுக்கு மட்டும் இருந்து என்ன பிரயோசனம்… இங்கே அப்பாக்கும் பிள்ளைக்கும் எல்லா விஷயத்துலயும் ஏழாம் பொருத்தமா இல்ல இருக்குது…”
அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த அருள், “அண்ணா ஒரு விஷயம் மனசுல நினைச்சா அதை மாத்திக்கவே மாட்டான்… பேசாம அப்பாவை எப்படியாச்சும் சமாதானம் பண்ணி நாமளே கல்யாணத்தைப் பண்ணி வச்சிடலாம் மா…” என்று சொல்லவும் முறைத்தார்.
“பெரிய மனுஷன் போலப் பேசாத… உன் அப்பாகிட்ட எல்லாம் என்னால இந்த விஷயத்துல பேசவே முடியாது…”
“அப்பாக்கு ஏன்மா லவ் மேரேஜ்னா இவ்வளவு வெறுப்பு…” மகன் கேட்கவும் அவர் முகத்தில் கவலை தெரிய “அதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு…” என்றார் சகுந்தலா.
“ஓ… என்ன கதை மா…” ஆர்வத்துடன் மகன் கேட்க குந்தவையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.
“உங்க பாட்டி, தாத்தா இறந்தபிறகு அவருக்கு சொந்தம்னு பெருசா யாரும் இல்லை… ஒரு அத்தை மட்டும் இருந்தாங்க… அவங்களுக்கு ஒரே பொண்ணு… கொஞ்சம் கஷ்டப்படற குடும்பம்… அந்தப் பொண்ணை உன் அப்பாக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அவங்க அத்தைக்கு ஆசை… ஆனா இவர் பெருசா ஏதும் சொல்லிக்கலை… அந்தப் பொண்ணு பக்கத்து பாக்டரிக்கு வேலைக்கு வந்த வெளியூர்க்காரப் பையன் ஒருத்தனைப் பிடிச்சுப் போயி லவ் பண்ணி அவனோடவே ஊரை விட்டு ஓடிப் போயி கல்யாணம் பண்ணிகிச்சு… அந்தப் பையன் சரியில்ல… பொண்டாட்டியை வேற ஆளுங்களுக்கு கூட்டிக் கொடுக்கப் பார்த்திருக்கான்… அதும் அவ மாசமா இருக்கறது தெரிஞ்சும்… புருஷனைப் பத்தி தெரிஞ்சதும் அந்தப் பொண்ணுக்கு மனசு விட்டுப் போயிருச்சு… பெத்தவங்கள விட்டு காதலிச்சவனைப் பெருசுன்னு நினைச்சுட்டுப் போனதுக்கு தனக்கு கிடைச்ச தண்டனைன்னு நினைச்சு புருஷனுக்கு சாப்பாட்டுல விஷத்தைக் கொடுத்து தானும் குடிச்சிட்டு செத்துப் போயிருச்சு… இதெல்லாம் தெரிஞ்சதும் அத்தையும் மாமாவும் தாங்கிக்க முடியாம கதறினாங்க… ஒரே பொண்ணை தூக்கிக் கொடுத்த துக்கம் தாங்காம அவங்களும் தூக்குல தொங்கி செத்துப் போயிட்டாங்க… ஒரு பொண்ணோட தப்பான காதல் அந்தக் குடும்பத்தையே அழிச்சிடுச்சு… அதுல இருந்து காதல்ங்கற வார்த்தையைக் கேட்டாலே உன் அப்பாவுக்கு அலர்ஜி போல ஆயிருச்சு…”
“அச்சோ, பாவம் மா… அந்தப் பொண்ணு விவரம் தெரியாம இப்படி ஆனதுக்கு எல்லாரும் அதே போல இருப்பாங்கன்னு நினைக்கக் கூடாதே… நல்ல காதலும் இருக்கு தானே…”
“காதல்ல என்ன நல்லது கெட்டது… காதல்ங்கற வார்த்தையே கெட்ட வார்த்தைன்னு தான் உன் அப்பா நினைக்கறார்…”
“ம்ம்… ரொம்ப கஷ்டம் தான்…” பிள்ளைகளும் அன்னையுடன் சேர்ந்து கவலைப்பட்டனர்.
“இப்ப என்னம்மா பண்ணறது… அண்ணாகிட்ட கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லி பேசுங்க…” என்றான் அருள்.
“ம்ம்…” என்றவர் மகனைத் தேடி மாடிக்கு செல்ல மற்றவர்களும் பின்னே தொடர்ந்தனர்.
“ஆதி…” கவலையுடன் பின்னில் ஒலித்த அன்னையின் குரலில் திரும்பிய ஆதித்யன் அன்னையைக் கண்டதும் புன்னகைத்தான்.
அவரது கண்களும் முகமும் அழுததில் வீங்கியிருக்க அவனுக்கும் கஷ்டமாய் இருந்தது.
“இப்படி உக்காருங்கம்மா…” சொன்னவன் அவர் கை பிடித்து கட்டிலில் அமர்த்தினான்.
“என் மேல கோபமா…” மகனது கேள்வியில் மீண்டும் கண்கள் கலங்க அவன் கைகளைப் பற்றிக் கொண்டார்.
“கண்ணா, இது வேண்டாம்டா… நான் ஒண்ணும் காதலுக்கு எதிரி இல்ல… ஆனா நம்ம குடும்ப சந்தோஷத்துக்கு அப்பாவும் முக்கியம்டா… அவரை வேதனைப்படுத்தி உனக்குப் பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டா அவர் சும்மாருக்க மாட்டார்… உன்னை இந்த வீட்டுல இருந்தே ஒதுக்கி வச்சாலும் வச்சிடுவார்… அதை எல்லாம் என்னால தாங்கிக்க முடியாது… வீட்டுக்கு மூத்தவன் நீ… நீயே இப்படி குடும்பத்தை எதிர்த்துகிட்டு கல்யாணத்தைப் பண்ணிட்டுப் போனா உன் தங்கை, தம்பியோட வாழ்க்கையும் பாதிக்கும்… நம்ம குடும்ப சந்தோஷத்துக்காக நீ உன் காதலை மறந்திடு கண்ணா…” கண்கள் கலங்க உருக்கமாய் கேட்டார் அன்னை.
ஒரு நிமிடம் அமைதியாய் யோசித்தவன் முகம் இறுகியது.
தன் கையைப் பற்றியிருந்த அன்னையின் கையைத் தட்டிக் கொடுத்தவன், “சரிம்மா… நீங்க சொன்ன வார்த்தைக்காக சம்மதிக்கறேன்… அவளைப் பார்க்காம, பேசாம இருக்கேன்…” ஆதி சொல்லவும் சகுந்தலாவின் முகத்தோடு இளையவர்களின் முகமும் மலர்ந்தது.
“அண்ணனின் காதலின் உறுதி இத்தனை தானா…” என்று குந்தவை மனதில் சின்ன ஏமாற்றம் கூடத் தோன்றியது. அவர்கள் சந்தோஷத்துடன் பார்க்கும்போதே, “ஆனா, ஒரு கண்டிஷன்…” என்ற ஆதி உலர்ந்திருந்த உதட்டை நாவால் நனைத்துக் கொண்டான்.
“என்னப்பா, என்ன கண்டிஷன்… நீ சம்மதிச்சதே பெரிய விஷயம்… என்னன்னு சொல்லுடா…” என்றார் சகுந்தலா.
“கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது அவளோட மட்டும் தான்… எத்தனை வருஷமானாலும் காத்திருக்க நான் தயார்… என்னை வேற எந்தப் பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க சொல்லக் கூடாது… என் மனசுல வந்த ஒருத்திதான் என் வாழ்க்கைலயும் வரணும்… வேற யாரையும் இனி அந்த இடத்துக்கு என்னால அனுமதிக்க முடியாது… உங்க புருஷன் இதுக்கு சம்மதிப்பாரா… சொல்லுங்க…” அவன் கேட்கவும் பதில் சொல்லத் தெரியாது அன்னை விக்கித்து நிற்க தங்கை பிரமிப்புடன் அண்ணனை நோக்கினாள். அருளின் கண்களிலும் ஒரு சபாஷ் தெரிந்தது.
“அம்மா, என்னைப் பொறுத்தவரை காதல் ஒருவழிப் பாதை பயணம்… அதுல போனவங்க திரும்பி வர முடியாது… நான் சும்மா தமாசுக்கு, நேரம் போக்குக்கு நந்தினியைக் காதலிக்கல… என்  அடிமனசுல இருந்து அவ மேல தோணின பிரியம் தான் என்னை இப்படிப் பேச வைச்சது… இனி நீங்க தான் முடிவு சொல்லணும்…” என்றவன் “நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்…” என்பது போல் அங்கிருந்த தண்ணி பாட்டிலை எடுத்து வாயில் சரித்துக் கொண்டான்.
சகுந்தலாவின் தலைக்குள் இப்போது பிரளயமே நடந்து கொண்டிருந்தது.
“இன்னும் எத்தனை காலம் ஆனாலும் அவன் தந்தை இதற்கு சம்மதிக்கப் போவதில்லை… எந்த நம்பிக்கையில் அவனிடம் பேசுவது…” என குழம்பி நின்று கொண்டிருந்தார். இருந்தாலும் அப்போதைக்கு அவனது கல்யாண முடிவைத் தள்ளிப் போடுவது மட்டுமே தற்காலிக வழி எனத் தோன்ற நிமிர்ந்து மகனை நோக்கினார்.
“ஆதி, உன்னைப் பத்தி எனக்குத் தெரியும்டா… எந்த ஒரு விசயத்திலும் யோசிக்காம நீ இறங்க மாட்ட… இந்த அளவுக்கு உன் மனசுல அந்தப் பொண்ணு இருக்கான்னு சொல்லும்போது மறந்திடுன்னு என்னால ஈஸியா சொல்ல முடியாது… ஆனா, எனக்கு கொஞ்சம் டைம் கொடுப்பா… எப்படியாச்சும் அப்பாகிட்ட பேசி சம்மதிக்க வச்சு உங்க கல்யாணத்தை நாங்களே நடத்திக் கொடுக்கறோம்… அதை விட்டுட்டு நீயே கல்யாணம் பண்ணிட்டு வந்தா நம்ம குடும்ப மானமே போயிரும்… அது எல்லாரையும் பாதிக்கும்…” மிகவும் தன்மையாய் எடுத்து சொன்னார் அன்னை.
“ம்ம்… சரிம்மா, நீங்க இவ்வளவு சொல்லுறதுக்காக நான் காத்திருக்கேன்… அல்லாம அப்பாவோட மிரட்டலுக்கு வேண்டி எல்லாம் இல்ல… ஆனா, எதுவா இருந்தாலும் சீக்கிரமே ஒரு முடிவு தெரியனும்… இன்னும் ஆறு மாசத்துல எனக்கு யூஎஸ் போக வேண்டி வரும்… அதுக்குள்ள இந்தக் கல்யாணத்தை முடிச்சிட்டா அவளையும் அழைச்சிட்டுப் போயிடுவேன்… ஹனிமூன் செலவு மிச்சம் பாருங்க…” என்று சிரித்த மகனை நோக்கிப் புன்னகைத்தாலும் மனதுக்குள் திகிலாகவே உணர்ந்தார் சகுந்தலா.
இளையவர்கள் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ஆதி, “குந்தவை… அண்ணியை உனக்குப் பிடிச்சுதா…” என்று கேட்க, “ம்ம்… ரொம்பப் பிடிச்சுது அண்ணா… ரொம்ப அழகா இருக்காங்க…” என்றாள் அவள்.
“நீ என்னடா, எதுமே சொல்ல மாட்டேங்கற…” என்றான் தம்பியைத் தோளுடன் அணைத்துக் கொண்டு.
“எல்லாம் நல்லபடியா நடந்தா எனக்கும் சந்தோசம் தான் அண்ணா…” என்றான் அவன்.
“அம்மா, சீக்கிரம் டின்னர் ரெடி பண்ணிட்டா நான் சாப்பிட்டு கிளம்பிருவேன்… மறக்காம அப்பம் பேக் பண்ணி வச்சிருங்க… நீங்க செய்யற அப்பம் நந்தினிக்கும் ரொம்பப் பிடிக்கும்…” என்ற மகனின் பேச்சைக் கேட்டு முழுமனதுடன் அவரால் சிரிக்க முடியாமல் கீழே சென்றார்.
இரவு உணவை சீக்கிரமே முடித்துக் கொண்டு சற்று நேரத்திலேயே கிளம்பினான் ஆதித்யன். அருள் பைக்கில் அவனை டிராவல்ஸில் விட அழைத்துச் சென்றிருக்க உர்ரென்ற முகத்துடன் உள்ளே நுழைந்தார் சுந்தரம்.
“எங்க, உன் பையன் கிளம்பிட்டானா… கல்யாணம் எப்ப பிக்ஸ் பண்ணிருக்கான்… நாளைக்கா, நாளான்னிக்கா…” கிண்டலாய் கேட்டவரின் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருக்க அமைதியாய் உணவு மேசையில் அவருக்கு வேண்டியதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் சகுந்தலா.
“சாப்பிட வாங்க… சப்பாத்தி ஆறிடப் போகுது…”
“ஓ… உன் பிள்ள தான் என்னை மதிக்கலேன்னா, நீயும் பதில் சொல்ல மாட்டியா… எல்லாம் என் நேரம்…”
“என்னங்க இப்படிப் பேசறீங்க… மதியமும் சாப்பிடலை, பசியோட வந்திருப்பீங்கன்னு தான் சாப்பிட கூப்பிட்டேன்… இப்ப என்ன தெரியணும்…” என்றார் அமைதியாய்.
“ஹூம்… அடுத்த எலக்சன்ல தாமரை மறுபடி மலருமா, மலராதான்னு தெரியணும்… உன்னால சொல்ல முடியுமா…” ஆங்காரமாய் கேட்டவரைக் கண்டு முழித்தார் சகுந்தலா.
அவர் சத்தத்தைக் கேட்டு அறையில் எழுதிக் கொண்டிருந்த குந்தவை வெளியே வந்து எட்டிப் பார்க்க அவளையும்  முறைத்துவிட்டு, “ஹூம்…” என்று அறைக்கு சென்றுவிட்டார்.
“கடவுளே… இப்படி ஒரு முரட்டு மனுஷனை நான் எப்படி தான் சமாளிச்சு அவனுக்கு சம்மதம் வாங்கித் தரப் போறேனோ…” மனதுக்குள் புலம்பிக் கொண்டே அவரைத் தேடி அறைக்கு சென்றார் சகுந்தலா.
குளியலறையில் சத்தம் கேட்க, சிறிது நேரத்தில் டவலால் உடலைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்தார்.
அமைதியாய் கட்டிலில் அமர்ந்திருந்த சகுந்தலா, “என்னங்க வந்து சாப்பிடுங்க… பசியில தலை வலிக்குது…” என்று பரிதாபமாய் சொல்ல விருட்டென்று ஹாலுக்கு சென்றார்.
தொலைக்காட்சியில் செய்திகளை வைத்துவிட்டு அமர்ந்தவர் முன்னில் தட்டில் சப்பாத்தி, குருமாவுடன் நீட்டியவர், “இப்ப நீங்க சாப்பிடப் போறீங்களா… நான் சாப்பிடாம போயி படுக்கட்டுமா…” என்று பிளாக்மெயில் போலக் கேட்க விருட்டென்று பிளேட்டை வாங்கிக் கொண்டவர், “சாப்பிட்டுத் தொலையறேன்…” என்று சாப்பிடத் தொடங்கினார்.
புன்னகையுடன் தனக்கும் ஒரு பிளேட்டில் சப்பாத்தியை எடுத்துக் கொண்டு அவரருகே வந்து அமர்ந்தார் சகுந்தலா.
தொலைக்காட்சியில் இருந்து பார்வையை அங்குமிங்கும் அகற்றாமல் உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தவரின் பிளேட் காலியாகியிருக்க மீண்டும் ஒரு சப்பாத்தியை சகுந்தலா வைக்க, பாவம், பசியோ என்னவோ அதையும் சாப்பிட்டு முடித்தார்.
“இன்னொண்ணு வைக்கட்டுமாங்க…” மனைவி கேட்க முறைத்தவர், “போதும்… போதும்…” என்று எழுந்து செல்ல சிரித்துக் கொண்டார் சகுந்தலா.
“உங்களால பசி பொறுக்க முடியாதுன்னு எனக்குத் தெரியுமே…” என நினைத்துக் கொண்டே பாத்திரத்தைக் கழுவி விட்டு கணவரிடம் வந்து அமர அப்போதும் அவர் உர்ரென்று தான் அமர்ந்திருந்தார்.
சட்டென்று ரிமோட்டை எடுத்து மியூசிக் சானலை சகுந்தலா வைக்க அவர் முறைப்புடன் திரும்பினார்.
“போதுங்க… ரொம்ப தான் ஓவரா முறைக்கறீங்க… முறை மாப்பிள்ளைன்னு நினைப்பு… நான் என்ன பண்ணேன்…”
“நீ எதுக்குப் பண்ணனும்… அதான் உன் அருமைப் புள்ள பண்ணி வச்சிருக்கானே… காதலாம் காதல்… புடலங்காக் காதல்… அழகா, தோலு வெள்ளையா ஒருத்தியைப் பார்த்திடக் கூடாதே… உடனே அவ யாரு என்னன்னு தெரியாமயே லவ் பண்ணத் தொடங்கிட வேண்டியது…” அவர் சொல்ல, “எல்லாம் தெரிஞ்சுட்டு வந்தா அதுக்குப் பேரு லவ்வு இல்லை…” சகுந்தலா சொல்ல, “ஓஹோ, உனக்கு ரொம்பத் தெரியுமோ…” என்றார் எரிச்சலுடன்.
“ஹூம், ரொம்ப தெரியலைனாலும் கொஞ்சம் தெரியும்…” என்று சிரித்து அவரை சமாதானிக்க முயல அவர் வேகமாய் ரிமோட்டை எடுத்து நியூஸ் சானலை வைத்தார்.
ஹாலில் அவர்கள் பேசுவது காதில் அவ்வப்போது விழ குந்தவைக்கு சிரிப்பாய் வந்தது.
“இந்த அப்பா சரியான முசுடு… எதுக்காவது கோவிச்சு மலையேறிட்டா அம்மா பாடு ரொம்பவே கஷ்டம் தான்… பாவம், நிறைய தண்ணி குடிக்கணும் போலருக்கே…” என யோசித்துக் கொண்டே எழுதிக் கொண்டிருந்தாள்.
“என்னங்க, எதுக்கு இவ்ளோ கோபம்… கொஞ்சம் அமைதியா நான் சொல்லுறதைக் கேளுங்க… நம்ம பிள்ளை அப்படி எல்லாம் அவன் இஷ்டத்துக்கு எதுவும் பண்ணிட்டுப் போக விட மாட்டேன்… அவன் ஏதோ ஒரு வேகத்துல அப்படிப் பேசிட்டான்… அதுக்காக அதைப் பண்ணிருவான்னு நினைக்காதிங்க… அவனுக்கும் நம்ம குடும்பத்து மானம், மரியாதை மேல அக்கறை இருக்கும்ல…
“ஆமா, அக்கறை இருக்கவன் தான் என் சம்மதம் இல்லேன்னா அவனே கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னான் ஆக்கும்… நீ ஓவரா உன் பிள்ளையைத் தாங்கித் தாங்கி தான் அவன் இப்படி என்னை மதிக்காம வளர்ந்து நிக்கறான்…” பழியை அவர் மீதே திருப்பினார்.
“அப்படி எல்லாம் இல்லைங்க, கொஞ்சம் பொறுமையா கேளுங்க…” என்றார் சகுந்தலா டீவி சத்தத்தைக் குறைத்து.
“பெத்த பிள்ளையே மரியாதை கொடுக்க மறக்கும் போது எப்படிப் பொறுமையா இருக்கறது…” அவர் மீண்டும் அதையே சொல்வதிலேயே அந்த வார்த்தை அவர் மனதை எத்தனை காயப்படுத்தி இருக்கும் என்று சகுந்தலாவுக்குப் புரிந்தது.
“தப்புதான், அவன் அப்படி சொல்லியிருக்கக் கூடாது… அதுக்கப்புறம் அவன் கிளம்பறதுக்கு முன்னாடி நான் போயி பேசினேன்… அவன் அந்தப் பொண்ணை ரொம்ப சின்சியரா லவ் பண்ணறான் போலருக்கு… எத்தனை காலம் வேணும்னாலும் அப்பாவோட சம்மதத்துக்கு வேண்டி காத்திருக்கேன்… ஆனா, அவளைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னான்…”
“ஓஹோ… இப்படி சொல்லிட்டா மட்டும் அவன் நல்லவனா…”
“அதில்லைங்க, நாமளும் அந்தப் பொண்ணு, யாரு என்னன்னு விசாரிச்சுப் பார்த்து ரெண்டு குடும்பத்துக்கும் இது ஒத்துவந்தா சம்மதிக்கறதுல தப்பில்லையே…” மெதுவாய் தனது கருத்தை சொன்னார் சகுந்தலா.
“ஓ… எனக்குப் பிடிக்காத விஷயத்தை மட்டும் அவனுக்காக நான் ஒத்துக்கணும்… அவனுக்குப் பிடிச்ச விஷயத்தை மட்டும் அவன் விட்டுத்தர மாட்டான்… என் சம்மதத்துக்கு வேண்டி அவன் காத்திருந்தா இந்த ஜென்மம் முழுசும் காத்திருக்க வேண்டியது தான்… அந்த எழவெடுத்த காதலை நான் எந்தக் காலத்திலும் சம்மதிக்க மாட்டேன்…” பிடிவாதமாய் சொல்லியவர் எழுந்து அறைக்கு சென்றுவிட சகுந்தலாவுக்கு தான் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலத் தோன்றியது.
அனுசரணைக்குப்
பின் இருக்கும் அன்பை
அறிந்து கொள்வதை விட
அடங்காத கோபத்தில்
அடங்கி இருக்கும்
அடக்கப்பட்ட அன்பை
அறிந்து கொள்ளும்
துணை பெற்றவரே
அதீத அதிர்ஷ்டசாலி…

Advertisement