Advertisement

வசந்தி யாரோ சத்தம் போடுவது போலிருக்க,வெளியே வந்து பார்த்தார்.வினோதனின் அம்மா தான் கத்திக் கொண்டிருந்தார்.
“ஐயோ,மாப்பிள்ளை வேற உள்ள இருக்காரே!இந்த ராட்சசி வேற கத்துக்கிட்டு இருக்காளே?”திட்டியவர்,கணவனை சென்று அழைக்க,உடன் மகேந்திரனும் வந்தான்.
அவர்களை பார்த்ததுமே,இன்னும் குரலுயர்த்தியவர்,”டேய்,என் பிள்ளையை எங்கடா வைச்சிருக்கீங்க.நேத்துல இருந்தே கண்ல படல.சொல்லுங்கடா”அழுகையுடன் கலந்த ஆத்திரத்தில் கேட்க,
“நேத்து இது போல தான்மா நாங்களும் தவிச்சுப் போயிருப்போம்.அப்போ நீ உன் பையன ஏன் தட்டி கேட்கல? இப்போ மட்டும் வந்து கேட்கற? அவன் எங்க குடிச்சிட்டு,எப்படி விழுந்து கிடக்கானோ..போ..ரோட்டோரமா பார்த்துட்டே போ! எங்காவது விழுந்து கிடப்பான்”பிரபாகரனும் பதிலுக்கு பேச,
அவருக்கு உண்மை சுட்டாலும்,”எல்லாம் உன் மவளால வந்து தான்யா! என் பையன் மட்டும் உருப்படாம கெடக்க,உன் பொண்ணு மட்டும் சந்தோஷமா வாழணுமா? என் பையனோட சுத்துனவ தான? எப்படி நல்லா வாழறான்னு பார்க்கறேன்.. எல்லாம் தெரிஞ்சும் கட்டிக்கிட்டானாமே ஒரு ஏமாளி! அவனும் எப்படி வைச்சு வாழறான்னும் பார்க்கறேன்”வீம்பாய்  பேசிவிட்டு,
“என் பையன் மட்டும் வீடு திரும்பலைன்னா,நீங்க யாரும் நல்லாவே இருக்க மாட்டீங்கடா”மண்ணை அள்ளி வீசி சாபமிட்டுவிட்டு போனார்.
ஊரே வேடிக்கை பார்த்தது..
அரவிந்தும் தான் சத்தம் கேட்டு என்னவென்று பார்ப்பதற்காய் வெளியில் வந்தவன்,எல்லாவற்றையும் பார்த்துவிட்டான்.கூடவே வாயில் கதவுக்கு உட்புறமாய் அழுது கொண்டிருக்கும் மனைவியை பார்த்தவன் முகம்,விருப்பமின்மையை பறைசாற்ற,அவளருகே வந்தவன்,
“மேல வா!உன்கூட பேசணும்”எனவும்,கண்ணீரை துடைத்துக்கொண்டே மேலே வந்தாள்.
கட்டிலில் தான் அமர்ந்தவன்,எதிரேயிருந்த சோபாவில்,”உட்கார்”என்று சொல்ல,வார்ட்ரோப் மேலே சாய்ந்தவாறு நின்றுகொண்டாள்.
அப்படி அவள் நின்றதும் கூட அவனுக்கு பிடித்தது.
அதனாலையே சாதாரணமாய்,”இப்போ எதுக்கு அழுத? காதலிச்சவனை கல்யாணம் பண்ணிக்க முடியலைன்றதுனாலையா? இல்லை என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சே அப்படிங்கறதுனாலையா? அதுவுமில்லைன்னா இப்போ ஒரு லேடி சத்தம் போட்டு சாபம் கொடுத்தாங்களே,அதனாலையா?”கேட்டுக்கொண்டே,தன் பாக்கெட்டிலிருந்த கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டான்.
யூவி ரேஸ் ப்ரொடெக்ஷன் கண்ணாடி அது!!  
நேற்றிலிருந்தே,’இவன் அவனா? அவன் இவனா?’மாபெரும் குழப்பத்துடனே தான் சுற்றிக் கொண்டிருந்தாள்.
இப்போது இந்த கண்ணாடியை பார்த்ததும்,அன்றொரு நாள்,சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருந்த அவனோடு இவன் முக அமைப்பும் ஒத்துப் போக,ஒன்றாய் சேர்ந்து வாழ முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் தூள் தூளாகி,அவளுக்கு அவன் மேல் பயங்கர எரிச்சல் உண்டானது.
அதனாலையே பதில் சொல்லாமல் நகர்ந்தாள்.
“நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்,பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்?”கேட்ட போதும்,அவள் நடையை நிறுத்தவில்லை.
எங்கிருந்து தான் அவனுக்கு கோபம் வந்ததோ?
“மயூரா,இப்போ என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ! இல்லை இது தான் நீயும்,நானும் பார்த்துக்கற கடைசி நிமிஷங்களா இருக்கும்”என்றான் அவசரப்பட்டு!!
வார்த்தைகள் அவனையும் அறியாமல் தான் வந்து விழுந்தன!!
அதில் நடையை நிறுத்தி,திரும்பி அவனை பார்த்தவள்,அந்த கண்ணாடியை பார்த்தவுடன் பேயை பார்த்துவிட்டது போல வேகமாய் கீழே சென்றுவிட்டாள்.
அவ்வளவு தான்..அரவிந்தின் நிதானம் பறந்தேவிட்டது. அவனது கல்யாணக் கனவுகள் ஏராளம்! அதில் ஒன்று கூட உருப்படியாய் எதுவும் நடக்கவில்லை.
சில மணி நேரங்களுக்கு முன் தாலி கட்டி தன் மனைவி என்ற அந்தஸ்தை,அதிகாரத்தை அவளுக்கு கொடுத்திருக்கும் போது,அதை சற்றும் உணராமல்,மதியாமல் அவள் போன பின்பு,
‘சொல்,செயல் எல்லாம் ஒண்ணா தான் இருக்கணும்’என்ற கொள்கையுடையவன்,இப்போது தன் சொல்படி,அங்கிருந்து கிளம்பிவிடவே சித்தம் கொண்டான்.
பாக்கெட்டில் தன் கார் சாவியிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டவன்,வேக நடையிட்டு படியிலிருந்து இறங்கி வந்தான்.இறங்கும் சத்தம் வீட்டிலிருக்கும் எல்லாருக்குமே கேட்டது.
அவனது வேகத்தில்,வேறேதுவோமோ என்று பதறி மகேன்,”என்ன ஆச்சு மச்சான்”கேட்க,
“உங்க தங்கச்சியவே கேட்டுக்கங்க”என்றவன்,யாரையும் பார்க்காமல் விடுவிடுவென்று சென்று,பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தன் லம்பார்கினி காரை எடுத்துகொண்டு புறப்பட்டுவிட்டான்.
வினோதன் அம்மா பேசியதை கேட்டுவிட்டு தான் சண்டை போட்டு சென்றிருக்கிறான் என்று ஓரளவுக்கு புரிந்துகொள்ளவே முடிந்தது.
தன் தங்கையிடம்,”என்ன ஆச்சு மயூ”கேட்க அவள் பதில் சொல்லாமல் அமைதி காத்தாள்.
என்னவென்று சொல்வாள்?
திருமணமான முதல் நாளே,கணவன் ‘காதலிச்சவனை கல்யாணம் பண்ணிக்க முடியலைன்றதுனாலையா?’என்று கேட்டதை எப்படி சொல்வாள்?
அவளின் அந்த அமைதி,தப்பெல்லாம் அவள் மேல் தான் என்ற உறுதியைக் கொடுக்க,பிரபாகரன்,”நீ நேத்து சொன்னதை இன்னைக்கு நிரூபிச்சிட்ட இல்ல”விரக்தியாய் கேட்க,வசந்தி தலையில் அடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.
அப்படியும் இருக்குமோ-மகேன்-க்கும் தோன்ற,
“மயூ,வேணும்னு தான் மச்சான் கூட சண்டை போட்டியா? என்ன சொன்ன அவரை?”கேட்க அதற்கும் பதிலில்லாமல் போக,கோபத்தை அடக்கிக்கொண்டு அரவிந்திற்கு போன் செய்தான்.
தொடர்ந்து இரண்டு முறை அழைத்தும் அவன் அழைப்பை துண்டிக்க,என்ன செய்வதென்று புரியாமல் அமர்ந்துவிட்டான்.
வசந்தி தான் பொறுக்காமல்,புலம்பினார்.
“ஊர் வாய்க்கு மெல்ல இவளே அவல் கொடுத்தாப்போல ஆகிடுச்சே! இப்போ தான் அந்த ராட்சசி வந்து கத்திட்டுப் போனா.இப்போ மாப்பிள்ளை போயிட்டார்னு தெரிஞ்சா,அவ பேசினத கேட்டு,சண்டை போட்டுட்டு தான் போயிருக்கார்னு நினைச்சிட மாட்டாங்களா..கட்டிக்கொடுத்த மொதநாளே இப்படி அசிங்கப்படுத்திட்டு நிற்கறாளே”புலம்ப,பிரபாகரனால் ஒன்றுமே பேச முடியவில்லை.
தோற்றுப்போன மனநிலையில் அமர்ந்திருந்தார்.மகேனும் அப்படியே!!
தன் தங்கை தன் பேச்சை மதித்து திருமணம் செய்து கொண்டாள் என்று நினைக்க,தன்னை முட்டாளாக்கியிருக்கிறாள் என்ற எண்ணமே,அவனை யோசிக்க விடவில்லை.
இவர்களின் இந்த ஓய்ந்து போன தோற்றம் மயூவை என்னவோ செய்ய,”அத்தைக்கு போன் பண்ணி வர சொல்லுங்க.நான் அவங்க கூட போயிடறேன்”என்றாள்.
மகேன் சந்தேகமாய்”நிஜமா தான் சொல்றியா? இல்ல அவங்களையும் எதுவும் பேசி,ஒட்டுமொத்தமா கழுத்தருக்கணும்னு நினைக்கறியா?”தன் பங்குக்கு அவனும் காய,
அழுகை வந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டு,”இல்ல நான் அவங்களோட போயிடறேன்.அத்தைக்கு அவர் எங்க போறார்னு தெரிஞ்சிருக்கும்.அவங்ககிட்ட சொல்லாம எதுவும் அவங்க செய்யமாட்டாங்க”சரியாய் கணித்து சொல்ல,அதற்கு ஏற்றார் போலவே,பிரபாகரனுக்கு வேதநாயகி போனில் அழைத்தார்.
“நான் வீட்டுக்கு வர்றேன்ணா.பொண்ணை ரெடி பண்ணி வைச்சிருங்க.இப்போ நல்ல நேரத்துல அழைச்சிட்டு போயிடறேன்”என்றவர் அவசரமாய் ஹோட்டலில் இருந்து கிளம்பினார்.
சற்று முன்,”அவ எனக்கு வேணாம்மா.பணம் கொடுத்து முடிச்சு விட்டுடுங்க.நான் சென்னை போறேன்.இனி அவ முகத்தையே பார்க்க விரும்பல”எனவும்,
“என்னப்பா ஆச்சு?”பதறிப்போய் தான் கேட்டார்.
அவரது மகன் கோபக்காரனே கிடையாது.சமீப காலமாய் அவனது இயல்பில் இருந்து விலகியிருந்தாலும்,அவன் கடைபிடிக்கும் பொறுமையில் மாற்றம் இருந்ததேயில்லை.
அப்படியிருக்க மகனின் பேச்சு அவருக்கு,என்னவோ ஏதோ என்று பல நினைப்பை உண்டாக்க,”அவ என்னை மதிக்கவே மாட்டேங்கறாம்மா.மனசுக்குள்ள இன்னும் அவன் நினைப்பு இருக்கும் போலிருக்கு”என்றான் கவலையுடன்!!
தன் மனைவியின் நினைப்பில் இன்னொருவன் இருப்பதை எந்த ஆண்மகனால் தாங்கிக்கொள்ள முடியும்.
அவனுக்கும் திருமணத்தின் முன் காதல் என்பதெல்லாம் பொருட்டே இல்லை தான்.ஆனால் திருமணத்திற்கு பின்னும் அப்படி இருக்கக் கூடாதென்று அவன் நினைப்பதில் என்ன தவறு?
ஆனால் வேதநாயகி அதைப்பற்றி கவலைப்பட்டது போல் தெரியவில்லை.
சம்பந்தி வீட்டிற்கு தகவல் சொல்லிவிட்டு,கிளம்பி வீட்டுக்கே வந்துவிட்டார்.
அவர் சொன்னபடியே மயூராவிற்கு அலங்காரம் செய்து,அவளுக்கு கொடுக்க வேண்டிய சீர் எல்லாம் எடுத்து தயாராக வைத்திருக்க,வேதாவை வரவேற்று அமர சொல்ல,”என் மருமககிட்ட கொஞ்சம் பேசணுமே!”என்றார்.
மனதில் கிலி பிறந்தாலும் ஒப்புக்கொண்டனர்.
மருமகளோடு அவள் அறைக்கு சென்றவர்,கை கட்டிக்கொண்டு நேராய் அவள் முகத்தை பார்த்தார்.அதில் எதிராளியின் மனத்தை படிக்கும் பாவம் தென்பட,அவளால் அந்தப் பார்வையை ஏனோ எதிர்கொள்ள முடியவில்லை.
தான் தான் தவறு செய்கிறோமோ என்ற எண்ணம் அப்போதே பிறக்க,”பேசணும்னு சொன்னிங்களே”என்றாள் பார்வையை எதிர்கொள்ள தைரியமற்று!!
“ம்ம்.பேசலாம்.பேசத்தான வந்திருக்கேன்”என்றவர்,இப்போது சேரில் சாய்வாய் அமர்ந்துகொண்டவர்,
“எல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏன்   உன்னை எதுக்காக என் பையனுக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணேன்னு நினைக்கற? என் பையனுக்கு பொண்ணே கிடைக்கலைன்னு நினைக்கறியா? எத்தனையோ சம்பந்தம் வந்துச்சு.நான் தான் அரவிந்த்க்கு பொருத்தமா இல்லைன்னு அத்தனையும் வேண்டாம்னு உதறிட்டு உன்னை தேர்ந்தெடுத்தேன்.
உன்னைப் பத்தி தப்பா காதுல விழுந்தாலும்,என்னால உன்னை விட முடியல.காரணம் உங்கிட்ட இருக்க எந்த க்வாலிபிக்ஷனும்  இல்ல.நான் தெய்வத்த நம்பறவ.என்னோட ஒவ்வொரு செயலுக்கும் காரணம் கடவுள் தான்னு எனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. உன்னை தேர்ந்தேடுத்ததுல கூட கடவுள் சங்கல்பம்னு நினைச்சு தான் எல்லாம் பண்ணேன்.
என் பையன்கிட்ட நான் முதலும் கடைசியுமா காட்டின போட்டோவும் உன்னோடது தான்.நான் சொல்ற பொண்ணை தான் கட்டிக்குவேன்னு இருந்த பிள்ளைகிட்ட’இவ தான் உன்னோட பொண்டாட்டி’ன்னு சொன்னது நான் தான்.அதை அவன் அப்படியே ஏத்துக்கிடான். என் பேச்சை மீறக் கூடாதுன்னு ரொம்ப உறுதியா இருப்பான்.
இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா,உன்னை வலுக்கட்டாயமா கல்யாண பந்தத்துல சிக்க வைச்சுட்டதுனால,உன்கிட்ட ஏதோ பெருசா இருக்குன்னு நீ நினைச்சிடக் கூடாதில்லையா?”-அவளின் முகமாற்றத்தை கவனித்துக்கொண்டே பேசியவர்,அதில் தெரிந்த பலபாவனைகளில் சிரித்துக் கொண்டார்.
“இப்போ எனக்கு ஒரே ஒரு பதில் தான் வேணும். உன் மேல யாரும் சேறை எடுத்து வீசறாங்களா? இல்லை நீயே அந்த சேத்துல ஆசைப்பட்டு விழுந்து புரண்டுட்டு இருக்கியா?”சரியாய் கேட்க,
“தெரியலை”ஒற்றை வார்த்தையில் பதில் கிடைக்க,
“ரொம்ப அழுத்தம் தான்”வாய்விட்டே சொன்னவர்,
“கடந்த காலத்தை நினைச்சுட்டு,நிகழ்காலத்தை வீணடிக்கிறது தப்புன்னா, எதிர்காலம் எப்படியிருக்குமோன்னு யோசிச்சு,நம்ம சுத்தி இருக்கவங்களை நோகடிக்கறதும்   அதைவிட பெரிய தப்பு தான்.நீ ரெண்டு தப்பையும் பண்ணிட்டு இருக்க மாதிரி தான் எனக்கு தோணுது”என்றார்.
“இப்போ நான் என்ன பண்ணா சரியா இருக்கும்”என்று அவரிடமே ஆலோசனை கேட்டாள்.இதுவரை யாரிடமும் இப்படி அவள் கேட்டதில்லை.
ஏனோ அவரின் பேச்சு,முகத்திலடிப்பது போல் இருந்தாலும் கூட,அவர் சொன்னால் சரியாய் இருக்கும் என்ற நம்பிக்கை அவளையறியாமலே ஏற்பட்டது தான் நிஜம்.
வேதாவும் தன் நினைப்பை அவளின் புத்தியில் ஏற்றாமல்,”அது உனக்கு தான் தெரியணும்.சுயபுத்தியுள்ளவளால தான் எனக்கு மருமகளா இருக்க முடியும்”சொல்லிவிட்டு வெளியே வந்து அமர்ந்து கொண்டார்.
இங்கிருந்து குடும்பத்தினரை நோகடிக்கவே விரும்பவில்லை.அதிலும்  அண்ணனின்,’ ஒட்டுமொத்தமா கழுத்தருக்கணும்னு நினைக்கறியா?’என்ற பேச்சு,அவளை இங்கிருக்கவே விடவில்லை.எங்காவது போய்விட வேண்டுமென்ற உந்துதலில்,கணவன் வீட்டுக்கே செல்ல முடிவெடுத்துவிட்டாள்.
பேகில் தன்னுடைய சான்றிதல்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்தவள்,”கிளம்பறேன்”பொதுவாய் சொல்ல,
“எல்லாரும் தான் போறோம்”என்ற வசந்தி,
“மயூவை விட்டுட்டு,நாங்க உடனே கிளம்பி வந்துடறோம் வேதா.அனுவையும் பார்க்கணுமே”என்றார்.
“அதுவும் சரி தான்”என்றவர்,
வெளியே சென்று மகனுக்கு அழைத்தார்,
அவன் உடனே எடுக்க,”அரவிந்த் வீட்டுக்குள்ள எல்லாம் போயிடாத! நாங்க வந்துட்டு இருக்கோம்”எனவும்,
“அதெல்லாம் முடியாதும்மா..வெளில எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்க முடியும்”குரலில் ஸ்ருதி குறைந்துவிட்டது.
“லான்ல உட்கார முடியலைன்னா,உன் வைஃப் கூட கேண்டில் லைட் டின்னர் சாப்பிடறதுக்கே,தனியா ஒரு குடில் கட்டி வச்சிருக்கியே.அங்க போய் உட்கார்! அதுவும் இல்லைன்னா செக்யூரிட்டி ரூம்ல போய் செட்டில் ஆகிடு”என்றதற்கு கோபத்தோடு சம்மதித்தாலும் ,
‘அவளோட எப்படி ஒரே வீட்டுல இருக்க முடியும்.எனக்கு என்னை மட்டுமே நினைக்கறவ தான் வேணும்’அடமாய் எண்ணிக்கொண்டான் அரவிந்தன்.

Advertisement