Advertisement

இன்று மாலை நடைபெறும் நிச்சயதார்த்தத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து,அதை பொறுப்பாய் பிரபாகரனிடம் ஒப்படைத்துவிட்ட மகேந்திரன்,தம்பியை தங்கைகளுக்கு துணைக்கு வைத்துவிட்டு,உள்ளூரில் பத்திரிகை வைக்க போனான்.
இவர்களது வழக்கத்தில் உள்ளூரில் இருக்கும் சொந்தங்களுக்கு, திருமணத்திற்கு முதல் நாள் தான்  சென்று பத்திரிகை கொடுப்பார்கள்.
அதனால் ஏற்கனவே சில நாட்களுக்கு முன் கைக்கு வந்திருந்த மயூராவின் பத்திரிக்கையோடு,வெற்றிமாறன் சற்று முன் அச்சடித்துக் கொண்டு வந்த பத்திரிக்கையையும் எடுத்துக்கொண்டு உறவுகளுக்கு வைத்துவிட்டு வந்தான்.
‘என்னப்பா நடந்துச்சு?’-கேட்பவர்களுக்கு பதில் சொல்லி அவனது நா வறண்டு போனது தான் மிச்சம்.
நல்ல வேளையாக வெளியூரில் இருக்கும் சொந்தங்களுக்கு போனில் சொல்லும் பொறுப்பை,அம்மாவிடம் அப்பாவிடமும் கொடுத்துவிட்டான்.
இது போல அவசர கதியில் எல்லாம் நடைபெற்றாலும்,மாலை ஆறரை மணிக்கு நிச்சயதார்த்தம் தொடங்கிவிட்டது.இரு மாப்பிள்ளை வீட்டினரின் பக்கமிருந்து தங்கை முறையுள்ள பெண்,மணப்பெண்களை தங்களது காரில் ஏற்றி செல்ல,அப்போதிருந்தே அனைவருக்கும் பரபரப்பு தொடங்கிவிட்டது.
முதலில் வெற்றிமாறன்-அனுஷா நிச்சயப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டு,மோதிரம் மாற்றும் சடங்கு செய்ய,அனுவிற்கு கண்ணீர் வரப்பார்த்தது.அடக்கிக் கொண்டாள்!!
ஒரு மாதத்திற்கு முன் இன்னொருவனின் கையால்   மோதிரம் மாட்டிக்கொண்ட சம்பவம் ஞாபகம் வர,அந்த சம்பவத்தைவிட்டு வெளியே வருவதற்காகவே முயன்று வெற்றியையே பார்த்தாள்.
பெரிதாய் மனதில் எதுவும் தோன்றவில்லை என்றாலும்,அந்த இன்னொருவனின் முகம் மனதைவிட்டு எங்கோ போனதை அவளே அறியவில்லை..தானும் முழு மனதோடு அவனுக்கு மோதிரத்தை அணிவித்துவிட்டு,அவனருகே சிறிய இடைவெளிவிட்டு நின்றுகொள்ள,வெற்றி புரிந்துகொண்டாற்போல் அமைதியாக நின்றான்.
அவன் மனம் மட்டும் எல்லையில்லா சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தது.வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை.காட்டிக்கொள்ளும் சந்தர்ப்பமும் இது இல்லையே!! 
அவனின் அம்மாவிற்கு தான் பேரானந்தம்!! வெளிப்படையாய் காட்டிக்கொள்ளவே செய்தார்.முகமெல்லாம் பூரிப்போடு தன் பக்க உறவினர்களுக்கு மருமகளை அறிமுகம் செய்துகொண்டேயிருந்தார்.
அடுத்ததாய் அரவிந்த்-மயூரவல்லியின் நிச்சயப்பத்திரிக்கை வாசிக்கப்பட,அரவிந்தன் சங்கடமான நிலையிலையே அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான்.
மயூவோ காலியான அறையில் தான் மட்டும் இருப்பதைப் போல் நினைத்துக்கொண்டவள் போல் குனிந்த தலை நிமிராமல்,மனதை எந்த சிந்தனையும் ஆட்கொள்ளவிடக் கூடாதென்பதை மட்டும் எண்ணமாய் கொண்டு,அதன்படியே நிர்சலனமாய் அமர்ந்திருந்தாள்..பொதுவாய் பெண்களால் இப்படி இருக்கவே முடியாது.ஆண்களுக்கு இது மிகவும் சுலபம்….
மிகவும் மனதை ஒருநிலைப்படுத்தி வெற்றிகொள்ள முயன்றவர்களுக்கே இது சாத்தியம்!!அதை எளிதாய் செய்தபடி அமர்ந்திருந்தவளை,அவளது அம்மா தான் கையில் கிள்ளி வைத்து,சுற்றுப்புறம் உரைக்க செய்தார்.
“மோதிரம் போடணும்,எழுந்துக்கோ மயூ”காதில் சொல்லவும்,வேண்டா வெறுப்பாய் எழுந்துகொண்டாள்.
மோதிரம் மாற்றிக்கொண்ட பிறகு,இவள் அதிக இடைவெளிவிட்டே நிற்க,புகைப்படம் எடுப்பவர்,’கொஞ்சம் பக்கத்தில நில்லுங்க’என்று சொல்லவும்,அரவிந்த் அளவுக்கதிகமாகவே நெருங்கி நின்றுகொண்டான்.
தன் கையோடு அவன் கை உரசியதில்,கோபமாக அவனை பார்க்க,அவனெங்கே இவளை பார்த்தான்? கருத்தாய் தன்னருகே நின்றிருந்த உறவுக்காரப் பையனுடன் பேசிக் கொண்டிருக்க,அவள் லேசாய் தள்ளி நின்ற வேளையில்,அவளோடு அவனும் சேர்ந்து தள்ளி நிற்க,பல்லைக் கடித்தபடி நின்றுவிட்டாள்..
தன் பேச்சு எப்போதும் தன் வீட்டில் எடுபடாது..அதுவும் இப்போது சபையிலா எடுபடும்? – வருத்தத்தோடு,புன்னகைத்துக் கொண்டிருக்க,அதுவுமே அவளுக்கு தனிஅழகை கொடுத்தது.   
நிச்சயத்திற்கு மிகவும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுத்திருந்ததினால்,புகைப்படம் எடுக்கும் வேலை அதிகமாக இல்லாததால்,மணமக்களை புகைப்பட கலைஞர் பாடாய் படுத்திஎடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
உணவு உண்ணும் வேளையிலும் விடவில்லை.
“ஒருத்தொருக்கொருத்தர் ஊட்டிவிட்டுக்கங்க சார்”-சொல்லவும் அரவிந்த் கடுப்பாகிவிட்டான்.
“அதெல்லாம் வேண்டாம்”என்றவன்,
“அவனவன் மேரேஜ் போட்டோஷூட்ல லிப்லாக் பண்ணி போட்டோ எடுத்துட்டு இருக்கான்.இவன் இன்னும் குழந்தைக்கு சோறு ஊட்டுற மாதிரி,ஊட்ட சொல்லிட்டு இருக்கான்”மெல்லிய குரலில் சொன்னாலும்,அவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த மயூ,உணவை வாய்க்கு அருகில் கொண்டு சென்றவள் திகைத்துப் போய் அப்படியே இருக்க,
மாறன்’இதென்ன சகல’என்பதுபோல் பார்க்க,அனுவிற்கோ புரையேறிவிட்டது..
“பார்த்தும்மா.தண்ணி குடி”மாறன் குடிக்க வைக்க,அதையே போட்டோவும் எடுத்துக் கொண்ட போட்டோகிராபர்,
“சார்,லிப்லாக் போட்டோஷூட்க்கு நான் ரெடி.நீங்க ரெடியா?”கேட்டேவிட்டான்..அவனுக்கு அதுஒரு கிக்.
மாறன் அவனை முறைக்க,அரவிந்தோ,”நாளைக்கு தான் ஃபுல் லைசன்ஸ் கிடைக்கும் தம்பி! அப்போ வைச்சுக்கலாம் போட்டோ ஷூட்டை!!”எனவும் மயூ கலவரமாக பார்த்தாள்.
அதில் குஷியானவன்,”என்ன சாப்பாடு பிடிக்கலையா!! இரு!! வேறெதுவும் கொண்டு வர சொல்றேன்”என்றவன்,பரிமாறிக் கொண்டிருந்தவரையும் அழைக்க,
“இல்ல,நான் சாப்பிடறேன்”என்றவள் உணவே கண்ணாய் மாறிவிட,
அனுவோ சங்கடமாய் மாறனிடம்,”அந்த மாதிரி போட்டோ எடுக்க வேணாம்னு,அவங்ககிட்ட சொல்லுங்க! ப்ளீஸ்”மெதுவாய் அவனுக்கு மாறனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல,
“அதெப்படி நான் சொல்ல!”தயக்கமாய் பேச,அதையும் போட்டோ எடுத்துக் கொண்டார்…அனுவும்,மாறனும் தயக்கத்துடன் பேசிக்கொள்வது கூட,போட்டோவில் பேரழகாய் இருக்க,
”பெர்பெக்ட் கப்பிள்”என்ற புகைப்பட கலைஞர் அரவிந்தை விடாமல்,
“சார்..நீங்க ரெண்டு பேரும் பேசிக்கற மாதிரி போட்டோ எடுத்துக்கலாம் சார்..கொஞ்சம் சிரிங்க சார்”என்றும் சொல்ல,
“அதெல்லாம் முடியாது”என்றான் கறாராய்!!
“சார்..ஒரே ஒரு ஸ்டில்”கிட்டத்தட்ட கெஞ்சவும்,வேறு வழியின்றி,
“சரி எடு”என்றவன்,பக்கத்திலிருந்தவளிடம்,
“முகத்தை சிரிச்ச மாதிரி வை”மிரட்டும் தொனியில் சிரித்துக்கொண்டே சொல்ல,அவளோ முறைத்தாள்..
ஏற்கனவே அவளுக்கு அவனை பிடிக்கவில்லை..இதில் இப்படி பேசினால்? பட்டென்று இலையை மூடி வைத்துவிட்டு எழுந்துகொள்ள,எதிர்பார்த்தவன் போல்,அவள் கையைப்பிடித்தான்.
அண்ணன் தங்கள் அருகில் வருவது போலிருக்க,சட்டென்று அமர்ந்தவள்,”சொல்லுங்க மாமா.என்ன பேசலாம்”சிரித்துக்கொண்டே கேட்க,ஆச்சர்யப்பட்டுப் போனான்..
அதற்குள் போட்டோகிராபர் ரெண்டு ஸ்டில் எடுத்துவிட்டு,மகேந்திரன் தலை தெரியவுமே நகர்ந்துவிட்டான்..மகேன்-க்கு பொதுஇடத்தில் ரொமான்ஸ் செய்வது போல் நடிப்பது கூட பிடிக்காது..கண்ணால் ஜாடை காட்டுவதும் பிடிக்காது!
 ‘தேவையில்லாம,ஒட்டி உரசி நின்னு போட்டோ எடுக்க சொல்லி கொடுமை பண்ண! திரும்பி போறப்ப,கை இருக்காது”சொல்லித்தான் அனுப்பிவிட்டான்..
அதனாலையே அவன் தலைமறைவாகிவிட,
மகேன் அருகில் வந்தவன்,நால்வரின் இலையும் மடித்து வைக்கப்பட்டிருந்ததை கவனித்துவிட்டு,”ரெண்டு பேரும் ரூம்-க்கு போங்க”என்றதும் அவசரமாய் இருவரும் எழுந்து சென்றுவிட்டனர்.
“மச்சான் சரியான ஸ்ட்ரிக்ட் பார்ட்டியா சகல”மாறனிடம் கேட்க,
“இருங்க..எப்படின்னு காட்டறேன்”என்ற மாறன்,பந்தி பரிமாறிக்கொண்டும்,வம்பு பேச்சு பேசிக் கொண்டுமிருந்த காயத்ரியை பார்த்தவன்,”காயத்ரி,இங்க வாம்மா”அழைக்கவுமே,மகேன் எதிர்ப்பக்கமாய் நகர்ந்தான்.
“சொல்லுங்கண்ணே”என்றபடி,காயத்ரி வந்து நிற்க,
”நீயும்,உன் மாமனும் ஒரு போட்டோ எடுத்துக்கலாம்ல.நான் வேணா மச்சான்கிட்ட சொல்லட்டுமா”எனவும் சிரித்தவள்,
“அதெல்லாம் எப்போவோ எடுத்துட்டோம்ல..செல்ஃபி பாருங்க”என்று போனை எடுத்து காண்பிக்க போகவுமே,வேகமாய் வந்த மகேன்,
“லூசு..போய் வேலைய பாருடி”கத்தவும்,அவனை முறைத்துவிட்டு,
“வாட்ஸ்அப்ல அனுப்பிவிடறேன்”சொல்லிவிட்டு அவசரமாய் ஓடியே போனாள்.
அரவிந்த் சுவாரசியமாய் பார்க்க,மகேந்திரன்”நான் கட்டிக்க போற பொண்ணு.அதான் இப்படி! தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை”என்றவன் காயத்ரியை தேடித்தான் போனான்.
போட்டோவில் மகேன்-க்கு முத்தம் கொடுப்பது போல,பலவிதத்தில் எடுத்திருந்தாள்.
‘எதையெல்லாம் யோசிக்காம காண்பிக்க வர்றா..தத்தி..தத்தி’அர்ச்சனை செய்து கொண்டே செல்ல,
“மச்சானோட வீக்னஸ் இவங்க தானா!”கேட்டு சிரித்துக்கொண்டான்.
இரு சகலைகளும்,இப்படியான பேச்சுக்களில் நட்பாகிவிட்டனர்..
அன்றைய நாள் இனிதாய் முடிந்து,அடுத்த நாள் காலை இனிதாய் விடிந்தது..இடைப்பட்ட அந்த நேரத்தில் பிரபாகரன் தூங்கவேயில்லை..
அவர் தான் மகள்கள் படுத்திருந்த அறைக்கு வெளியே சேரை போட்டு காவல் காத்துக் கொண்டிருந்தாரே!! மயூரா அமைதியாய் அனைத்தையும் செய்து கொண்டிருப்பது அவருக்கு மகிழ்ச்சிக்கு பதிலாய்,கவலையே கொடுக்க,கண்கொத்தி பாம்பாய் கவனித்துக்கொண்டேயிருந்தார்..
காலையில் தான் கண் அசந்திருக்க,மணப்பெண்களுக்கு அலங்காரம் செய்பவர்கள் வரவும் தான் அங்கிருந்தே போனார்.
அனுவிற்கு தன் திருமணத்தில் தானே தனக்கு மேக்-அப் போட வேண்டுமென்று ஆசையாய் இருந்தாள்.ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் எதிலும் பெரிதாய் ஆர்வமாய் ஈடுபட மனமில்லாததால்,அமைதியாகிவிட்டாள்..
யாரின் மனநிலையும் காலத்திற்கு தெரிவதில்லை..தெரிந்தாலும் அதற்காக கவலைப்பட்டு தன் பணியை நிறுத்துவதுமில்லை..!!
சரியான முகூர்த்த நேரத்தில்,மாறன் மனமகிழ்ச்சியுடன் மணவறையேற,அனுவும் விருப்பு வெறுப்பற்ற நிலையில் அவனோடு இல்வாழ்க்கையில் இணைந்தாள்..
இவர்கள் இருவருக்கும் நேர்மாறான மனநிலையில் அரவிந்தனும்,மயூராவும் திருமண பந்தத்தில் இணைய..தாலி கட்டும் போது,கண் கலங்கிப்போய் அமர்ந்திருந்த மயூராவை கண்ட அரவிந்திற்கோ….’இன்னொருத்தனை லவ் பண்றவளை,வீம்புக்காக கல்யாணம் பண்ணிட்டோமோ’ என்ற யோசனையிலையே அனைத்து சடங்கும் செய்தான்.
மயூராவோ தாலி ஏறிய பின்,அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை..
‘என்னோட இத்தனை கஷ்டங்களுக்கும் ஆரம்பப்புள்ளி வைச்சவனையே,கைபிடிச்சிருக்கனே..’-தன்னுடன் இணைந்திருந்த அவன் கைகளை ஆழமாய் உணர்ந்தபடி, அண்ணனுக்காய் முகத்தில் சிரிப்பை தேக்கி வைத்து நின்று கொண்டிருந்தாள்..
நெஞ்சம் மட்டும் தீக்கங்குகளாய்  கொதித்துக் கொண்டிருந்தது..
திருமண சடங்குகள் எல்லாவற்றிலும்,பெரியவர்கள் சொன்னது போல் செய்து கொண்டிருந்தாலும்,மனம் மட்டும் இருவரை தேடியது..ஒருத்தன் வினோதன்..இன்னொருவன் அரவிந்தின் அண்ணன்.
‘தம்பி கல்யாணத்துக்கு கூட வரலையா?’அரவிந்தின் அண்ணனை முடிந்த மட்டும் கண்களால் யாருக்கும் தெரியாமல் தேடிக் கொண்டிருந்தாள்.
வினோதன் எப்படியும் பிரச்சனை செய்ய இங்கு வருவான் என்றே எதிர்பார்த்தாள்.அவனையும் காணவில்லை என்பதால்,’அவனோட லவ் அவ்வளவு தான் போல,இதுக்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும்’விரக்தியாய் எண்ணியவள்,அண்ணன் தன்னை பார்ப்பது போலிருக்க,அதற்கு பின்னே தான்,நடக்கும் செயல்களில் கவனம் வைத்தாள்.
முதலில் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வது தான் வழக்கம்.
ஆனால் பிரபாகரனின் அண்ணன் முறையுள்ள ஒருவர்,”எங்கள கலந்துக்காம தான் ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்தையும் ஏற்பாடு செஞ்சுக்கிட்டீங்க..மத்த விஷயத்திலாவது நாங்க  சொல்றபடி கேளுங்க”என்றவர்,
“ஒரே நாள்ல,வீட்டுல இருக்க ரெண்டு மகாலட்சுமிங்களையும் அனுப்பக் கூடாது.யாராவது ஒருத்தர் இன்னைக்கு நம்ம வீட்டுலயே இருக்கட்டும்”எனவும் அனைவருமே யோசித்தனர்.
வேதநயாகி தானே முன் வந்து,”என் பையனும்,மருமகளும் இங்கேயே இருக்கட்டும்.நாளைக்கு நல்ல நேரம் பார்த்து அழைச்சுக்கறேன்”என்றார்.
இங்கிருந்து அவர்கள் வீட்டிற்கு சென்று,மறுபடியும் பெண் வீட்டிற்கு வந்து தங்கள் வீட்டிற்கு திரும்ப நேரமாகும் என்பதால்,அவர் இப்படி சொல்ல,அனைவரும் சம்மதித்து முதலில் அனுவை,சீரோடு மாறனின் வீட்டில் கொண்டு போய் விட்டு வர,அடுத்ததாக மயூராவையும்,அரவிந்தையும் தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்தார் பிரபாகரன்..
உணவை முடித்துக்கொண்டு வேதநாயகி கிளம்பிவிட்டார்.அவரது சொந்தங்கள் தங்குவதற்கு இந்த இடமெல்லாம் பத்தாது.வசதியை எதிர்பார்ப்பார்கள்..அதனாலையே மகனிடம் சொல்லிவிட்டு விடைபெற..
தன் மனைவியின் ஒட்டாத நடவடிக்கையை பார்த்துக்கொண்டிருந்தவன்,‘கல்யாணமாகியும் பிரம்மச்சாரியா இருக்கணுமோ?”யோசனையுடன் மகேன் காட்டிய அறைக்கு சென்றான்.
தாலி கட்டிய பின்னரும்,எட்டி நின்று ரசிக்கும் எண்ணமெல்லாம் அரவிந்திற்கு சுத்தமாக இல்லை..
அதிலும்,மௌன ராகம் படத்தில் வருமே..அதுபோலவெல்லாம் இன்றிரவு மயூ நடந்து கொண்டால்,கடுப்பாகிவிடுவான்.
அப்படியெதுவும் அவள் உளறிவைக்கக் கூடாதென்று எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொண்டான்.
அவன் கவலை அவனுக்கு……..!!!

Advertisement