Advertisement

அனுஷாவின் சம்மதம் கேட்டபின்,என்னவென்ன செய்யலாம் என்று குடும்பத்தினர் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க,அறையிலிருந்து வெளியே வந்த மயூரா,அவர்கள் அருகில்,சுவற்றில் சாய்ந்தபடி நின்றாள்.
அவளை கவனித்தாலும்,யாரும் கண்டுகொள்ளாமல்,மாலை இருபெண்களின் நிச்சயதார்த்ததிற்கு செய்ய வேண்டியதை விவாதித்து கொண்டிருக்க,
“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”என்றாள் கொஞ்சம் சத்தமாகவே!!
பிரபாகரன் சற்று முன் தான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.அதற்குள் இவள் இப்படி பேச,அவருக்கு கோபம் உச்சக்கட்டத்தை தொட்டாலும்,நாளை வேறு வீட்டுக்கு சென்றுவிடுவாள் என்பதால்,மிகவும் பொறுமையாய்,
“ஏன் வேண்டாமாம்?”கேட்டார்.
“எனக்கு அவனை பிடிக்கலை”
“ஏன் பிடிக்கலை?”
“பிடிக்கலைன்னா விடுங்களேன்.ஏன் பிடிக்கல,எதுக்கு பிடிக்கலைன்னு சொன்னா தான் கல்யாணத்தை நிறுத்துவீங்களா”என்றுமில்லாமல் இன்று குரலுயர்த்தி,அதுவும் தகப்பனையே எதிர்த்துப் பேச,அதுவொன்றே பிரபாகரனுக்கு போதாதா!!
“கல்யாணத்தை நிறுத்த முடியாது.என்னடி பண்ணுவ?”எழுந்தபடி கேட்க,
“எதுவும் பண்ணமாட்டேன்னு நினைக்கறிங்களா? அவனை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நான் செத்துக் கூட போவேன்”என்றாள்…
இப்போது குரலில் இன்னும் ஸ்ருதி கூடியிருக்க, “அப்போ போ..போய் சுருக்கு போட்டு செத்து தொலை”ஆத்திரத்தில் வாயைவிட,
“நீங்க சொல்லிட்டிங்கள்ல,செஞ்சுடறேன்”என்று நகரப்போனவளை,தடுத்த வசந்தி,
“எதுக்குடி இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்க..நீ செத்தா எல்லாம் சரியாப் போகிடுமா? அதுக்கப்புறம் எங்க நிலைமையை யோசிச்சுப் பார்த்தியா?”அழுகையுடன் கேட்க,
விரக்தியுடன்,”நான் செத்தா,எதுவும் மாறப் போறதில்லம்மா.மிஞ்சிப் போனால்,மூணு நாள் அழுவீங்களா? நாலாவது நாள் உங்க தினசரி வாழ்க்கைக்கு போயிடுவீங்க! யாருக்காகவும் இந்த வாழ்க்கை நிற்கப் போறதில்லை..”அதே தொனியில் பேசிவிட்டு நகர,மகேன் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்தான்.
மயூராவின் மனதில் இருப்பதெல்லாம் வெளியே வரட்டும் என்பதே அவன் எண்ணம்!!
வசந்தி,மகள் பேசியதை கேட்டு,”என்ன பேச்சுடி பேசற.இதுக்காகவா உன்னை பெத்து வளர்த்தோம்”கேட்டுக்கொண்டே தலையிலடித்துக் கொண்டே அழ,
பிரபாகரன் கொஞ்சம் சோர்ந்து போன குரலில்,”எல்லாரையும் ஒரே மாதிரி தான வளர்த்தேன்! நீ மட்டும் ஏன்டி இப்படி இருக்க? அனுவை பாரு.நாங்க சொன்னா ஒருவார்த்தை மறுத்துப் பேச மாட்டா..நீ மட்டும் ஏன் இப்படி இருந்து தொலைக்கற?”-கேட்க,
“ஏன்னா,நான் அனு இல்ல…
“நான் அனு இல்ல…..
“நான் அனு இல்லவே இல்ல.அது தான் காரணம் போதுமா? எப்போ பார்த்தாலும் அனு,….அனு……அனு..அவ பேரை சொல்லியே என்னை,இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கீங்க.எப்போ தான் என்னை,உங்க ரெண்டாவது பொண்ணா மட்டும் பார்ப்பீங்க”பக்கத்து வீட்டுக்கே கேட்கும் குரலில் கேட்டாள்.
யாருமே அவளிடமிருந்து இப்படியொரு ஆத்திரத்தை எதிர்பார்க்கவில்லை.உள்ளே படுத்திருந்த அனுஷா கூட எழுந்துவந்துவிட்டாள்.யாருக்கு வந்த விருந்தோ என்று கேம் விளையாடிக் கொண்டிருக்கும் தருண் கூட,எழுந்து நின்றுவிட,அதையெல்லாம் உணராதவள்,
“உங்களால கல்யாணத்தை நிறுத்த முடியாது..அப்படித்தானே!! கல்யாணம் நின்னு போனாலோ,இல்லை நான் இங்கவே இருந்துட்டாலோ உங்களோட மானம் மரியாதையெல்லாம் காத்துல பறந்து போகும்..அப்படித்தானே!!”இடையில் கண்ணீரை துடைத்தவள்,
“கல்யாணம் பண்ணிக்கறேன்.நிச்சயம் பண்ணிக்கறேன்.ஆனால் மறுநாளே இங்கேயே வந்து நிற்பேன்.அப்போ உங்களால என்ன செய்ய முடியும்? அப்பவும் அவன் கூடத்தான் வாழ்ந்தாகனும்னு கட்டாயப்படுத்துநீங்கன்னா,அவனை நிச்சயம் அசிங்கப்படுத்துவேன்..அரவிந்தோட பொண்டாட்டி,இன்னொருத்தனோட போயிட்டான்னு….”பேசிக்கொண்டிருக்கும் போதே,கன்னத்தில் விழுந்த அறையால்,தூரப் போய் விழுந்தாள்.
அடித்தது பிரபாகரன் இல்லை.மகேந்திரன் தான் அடித்திருந்தான்.நம்ப முடியாத பார்வையில்,எரிந்த கன்னத்தை பிடித்தபடி,அண்ணனை பார்க்க,தன் வலுதூக்கும் கையால்,அதே வலுவோடு தங்கையை அறைந்ததை உணர்ந்தாலும்,கோபக்குரலில் தங்கையிடம் பேசினான்.இல்லை கிட்டத்தட்ட மிரட்டினான்.
“மயூ உன்னோட லிமிட் இது தான்.நீ பண்ற ஒவ்வொரு விஷயத்துலயும் வீட்டுல எவ்வளவு பிரச்சனை வந்தாலும்,நான் பொறுத்துப் போனேன்.ஏன்னா,நீ நான் சொன்னா புரிஞ்சுக்குவேன்னு நம்பினேன்.அதெல்லாம் பொய்ன்னு நிரூபிச்சிட்டு இருக்க!! அரவிந்தனுக்கு என்ன குறை..இல்லை என்ன குறைன்னு சொல்லு! உன்னால சொல்ல முடியாது..முடியாது தானே”கேட்க அவளிடம் பதிலில்லை.
“இவ்வளவு நாளும் நம்ம குடும்ப மானம் தான் போச்சு..இன்னைக்கு உன்னால அனுவோட வாழ்க்கையே கேள்விக்குறியாகி நிற்குது.இருந்தும் உன்னை யாரும் எதுவும் சொல்லாம,உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கத்தானே நினைக்கறோம்.அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது
“இத்தனை நாளும் மனசில என்ன இருக்குன்னு சொல்லாம எங்களை கொன்னுட்டு இருந்த! இப்போ பேசி எங்களை கொன்னுட்ட! அவ்வளவு தான் வித்தியாசம்!! உன்னை நீயே அசிங்கப்படுத்திக்கற அளவுக்கு போயிட்டல்ல
“இப்போ சொல்றேன் கேட்டுக்கோ மயூரா!! நீ அரவிந்தனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் நினைக்கறேன்..உனக்கு விருப்பமில்லைன்னா,இப்போவே கூட சொல்லிடு!! நான் உனக்காக நிச்சயம் இந்த கல்யாணத்தை நிறுத்திடறேன்.ஆனால் அதுக்கப்புறம் உனக்கு அண்ணன்னு ஒருத்தன் இருந்தான்ற நினைப்பே உனக்கு இருக்கக் கூடாது!
“ஒருவேளை கல்யாணத்துக்கு சம்மதம்னு நீ நினைச்சேன்னா,காலத்துக்கும் நல்ல பொண்ணுன்னு தான் பேர் எடுக்கணும்.தேவையில்லாம அரவிந்த் குடும்பத்தை அசிங்கப்படுத்த திட்டம் போட்டு,சம்மந்தமே இல்லாம அவன் வாழ்க்கையை,மரியாதையை கெடுக்கனும்னு நினைச்சேன்னா,உன்னை என்ன செய்வேன்னே தெரியாது!!
“இப்போ முடிவா ஒண்ணு சொல்லு.கல்யாணம் பண்ணி,நல்லபடியா அவனோட குடும்பம் நடத்தறியா? இல்லை என்னோட உறவே வேணாம்னு எல்லாத்தையும் முடிச்சிக்கப் போறியா?”கேட்க,சற்று நேரம் வீடே அமைதியாயிருந்தது.
யாருமே மகேன் இப்படி அடிப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.பெண்களை அடிக்கக் கூடாது என்ற கொள்கையுடையவன் அவன்!அவனையே இப்படி நடந்துகொள்ள செய்த புண்ணியம் அவன் தங்கையையே சாரும்.
அனைவரும் மயூவையே பார்த்துக் கொண்டிருக்க,அரவிந்தனுக்காக,தன்னுடைய நடத்தையை தானே கேவலப்படுத்திக் கொண்டதை எண்ணி நொந்தவள்,”எனக்கு சம்மதம் தான்”என்றாள்.
“எதுக்கு சம்மதம்”மகேன் அழுத்திக் கேட்க,
“நீங்க பார்த்த,அந்த ஆளை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்..போதுமா?”சொல்லிவிட்டு கன்னத்தைப் பிடித்திக்கொண்டே அறைக்குள் போய்விட்டாள்.
கன்னம் அதிகமாய் எரிய,ஆயிலை எடுத்து தடவிக்கொண்டு படுக்கையில் சாய்ந்தாள்.
அனுஷா தங்கையின் அருகே அமர்ந்தவள்,”என்மேல உனக்கு இவ்வளவு கோபமிருக்கும்னு நான் நினைச்சே பார்க்கல மயூ”-அவளும் விரக்தியில் பேச,
எழுந்து அமர்ந்தவள்,”எனக்கு உன்மேல எல்லாம் கோபமேயில்ல..எல்லாம் வெளில நிற்கறவங்க மேல தான்.கட்டாயப்படுத்தி எல்லாத்தையும் சாதிச்சுட்டாங்க!!”என்றவள்,
“என்னால உன் வாழ்க்கை தான் கேள்விக்குறியாகி நிற்குது அனு.தேவையில்லாம இப்போ எவ்வளவு பிரச்சனை! எனக்கு மன்னிப்பு கேட்கக் கூட தகுதியில்ல”-அக்காவின் முகத்தைப் பார்த்துப் பேச முடியாத அளவிற்கு குற்ற குறுகுறுப்பில் உள்ளம் தவிக்க திரும்பிக் கொண்டாள்.
“சம்மந்தமே இல்லாம என்னோட பேரும் இப்போ கெட்டுப்போச்சு மயூ.அது தான் எனக்கு தாங்கல.நான் அம்மா,அப்பா பேச்சைக் கேட்டு,மதிச்சு அவங்க சொல்படி தானே நடக்கறேன்.எனக்கும் இன்னைக்கு இன்னொருத்தனோட போனவன்னு பட்டம் கிடைச்சிடுச்சு பார்த்தியா!! அதுவும் என் கைல மோதிரம் போட்டவனே அப்படி கேட்டிருக்கான்”என்றவள்,கையில் போட்டிருந்த மோதிரத்தை கழட்டி ஜன்னல் பக்கம் வீசிவிட்டாள்.
“கடந்து போன நிமிஷங்கள் எல்லாம் கஷ்டமா இருந்தாலும்,அதால எனக்கு நன்மை தான்னு நினைக்கறேன்.இல்லைன்னா வாழ்க்கை முழுக்க,ஒரு சந்தேக புத்திக்காரனோட வாழ்க்கை நடத்தியிருப்பேன்.நீயும் அந்த ராஸ்கலோட உண்மை முகம் என்னன்னு தெரிஞ்சுக்காம போயிருப்ப”என்றாள்.
மயூ தவிப்புடன் அக்காவை பார்த்துக் கொண்டிருக்க,”அவனுங்க என்னை ரூம்ல கடத்தி வச்சிருந்தப்போ,என் மனசோட நான் போராடினது தான் ரொம்ப கொடுமை.எப்போ எவன் எங்க தொடுவானோ? ஒருவேளை என்னை ரேப் பண்ணிடுவானுங்களோன்னு கூட நினைச்சு தவிச்சுப் போயிருந்தேன்.அந்த நிமிஷங்களை என்னால எப்பவுமே மறக்க முடியாது மயூ..
நான் உங்கிட்ட கேட்டுக்கறது ஒண்ணே ஒண்ணு தான்.. நீ இனி அந்த பொறுக்கிப் பத்தி நினைக்கவே கூடாது.. அவன் உன் வாழ்க்கைல எங்கேயும் இருக்கவே கூடாது மயூ.. உண்மையாவே எனக்காக நீ வருத்தப்பட்டேன்னா,என் மேல கோபமில்லைன்னா,இதை மட்டும் செய்..வேறெதுவுமே வேண்டாம்..”தன் சோகத்தை மறைத்து,தங்கையின் வாழ்க்கைக்காக அவளும் பேச,மயூரா அமைதியாகிவிட்டாள்.
அனுவின் போன் அடிக்க,தெரியாத நம்பர் என்பதால்,அழைப்பை தவிர்த்துவிட்டு,மடியில் முகம் புதைத்து அனு அமர்ந்துவிட,இப்போது குறுஞ்செய்தி வந்தது.
அதில்,”வெற்றிமாறன்”என்றும்,தன்னுடைய அழைப்பை எற்கும்படியும் தகவல் அனுப்பியிருக்க,சில வினாடிகளில் வந்த அவனின் அழைப்பை பெருமூச்சுவிட்டபடி ஏற்றாள்.
“ஹலோ”அனுவின் குரல் கேட்கவுமே,
“உனக்கு சம்மதமா அனு”என்றான் மிகவும் மென்மையாய்!!
“சம்மதம் தான்”
குரலில் ஒட்டுதல் இல்லாததை உணர்ந்தாலும்,”கடைக்கு புடவை எடுக்க வந்திருக்கோம் அனு.நிச்சயத்துக்கும்,நாளை முகூர்த்தத்துக்கும் புடவை எடுக்கணும்.என்ன கலர்ல எடுக்கட்டும்”கேட்க,
“நிச்சயத்துக்கு பச்சைக் கலர்,முகூர்த்தத்துக்கு சிவப்பு கலர்..”எனவும்,மாறன் சரியென்று வைத்துவிட்டான்.
அவளுடன் பேசவே அவனுக்கு பெரும்தயக்கமாக இருந்தது.
காலையில் அனு கிடைத்துவிட்டால் என்ற தகவல் கிடைத்ததும்,பிரபாகரனை வீட்டிற்கு கொண்டுவந்து விட்டவன்,அப்படியே ஸ்டேஷனிற்கு கிளம்பிவிட,தன் அம்மா அனுவின் வீட்டிற்கு வந்து பேசி சென்றதை சற்று முன் தான் தெரிந்தே கொண்டான்.
என்ன பேசுவதென்றும் தெரியவில்லை.அம்மாவின் சொல்லுக்கு தலையையாட்டிவிட்டு துணிக்கடைக்கு அவர,அவரின் உந்துதலால் தான் போனே செய்தான்..
ஆர்வமாய் பச்சைப்புடவையை தேடிக் கொண்டிருக்கும்,அம்மாவை பார்த்துக்கொண்டேயிருந்தான்..
எனக்காக…எனக்காக மட்டுமே யோசிக்கும் அம்மா….நெஞ்சம் நிறைந்து போயிற்று அவனுக்கு!!
அன்றொரு நாள் பல பெண்களின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு,”எந்த பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லுப்பா”-தாய் கேட்கவும்,
“மகேந்திரன் வீட்டுல பேசிப் பார்க்கறிங்களாம்மா..”தலை சீவிக்கொண்டே கேட்கவும்,புன்னகை முகமாக,
“சரிப்பா”என்றார்.
ஆனால் சற்று நேரத்தில் அனுவின் திருமணம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதை மகேன் மூலமாய் அறிந்தவன்,”அனுக்கு வேற இடத்தில பார்த்துட்டாங்கம்மா.நீங்க போய் எதுவும் பேசிடாதீங்க”உடனடியாய் போன் அடித்து சொல்லிவிட,அவருக்கு மிகவும் வருத்தம்..
தன் மகன் பிறந்ததிலிருந்து அப்படியொன்றும் எதுவும் வேண்டும் என்றும் கேட்டதில்லை..ஆசைப்பட்டதும் இல்லை.
‘அனுவை பிடிச்சிருக்க போய் தானே கேட்க சொன்னான்..’என்று மிகவும் கவலைப்பட்டுப் போய் கிடந்ததார்.
இன்று என்ன நடந்ததென்று விசாரிப்பதற்காய்,அனுவின் வீடு சென்றவர்,
“அனுவை என் பையனுக்கு கொடுக்கறியா வசந்தி..”கேட்க,வசந்திக்கு மகிழ்ச்சி தான்..
அந்த நேரத்தில் வேதநாயகி வரவும் மேற்கொண்டு பேசமுடியாமல் மாறனின் அம்மா அமைதியாகிவிட்டாலும்,மகேன் வந்தவுடன் அவனின் காதில் விஷயத்தை போட்டுவிட்டு தான் தன் வீட்டிற்கே வந்தார்.
எப்படியும் சம்மதித்துவிடுவார்கள் என்று உறுதியாய் நம்பினார்..அதன்படியே அவர்களும் சம்மதித்துவிட,அதுவும் நாளைக்கே திருமணம் என்றும் சொல்ல,இவருக்கு சந்தோஷம் தான்.
தன் சொந்தங்களுக்கு எல்லாம் போன் மூலம் தகவல் கொடுத்துவிட்டு,இப்போது புடவை எடுக்கவும்,மகனுக்கு பட்டு வேஷ்டி சட்டை எடுக்கவும்,மாறனை அழைத்தும் வந்துவிட்டார்.
சொடக்கு போடும் நிமிடத்தில்,எல்லாம் நடந்துவிட,நடப்பது எல்லாம் கனவா இல்லை நிஜமா என்பதையே நம்ப முடியாமல் தவித்தான் வெற்றிமாறன்.
மொத்தத்தில் நடந்த களேபரங்களில்,ஜாக்பாட்(அனு) கிடைத்தது வெற்றிக்கே!!  
அதே சந்தோஷத்தில் அவன் மணவறையேற,அனுவும் விருப்பு வெறுப்பற்ற நிலையில் அவனோடு இல்வாழ்க்கையில் இணைந்தாள்..
இவர்கள் இருவருக்கும் நேர்மாறான மனநிலையில் அரவிந்தனும்,மயூராவும் திருமண பந்தத்தில் இணைய..தாலி கட்டும் போது,கண் கலங்கிப்போய் அமர்ந்திருந்த மயூராவை கண்ட அரவிந்திற்கோ….’இன்னொருத்தனை லவ் பண்றவளை,வீம்புக்காக கல்யாணம் பண்ணிட்டோமோ’ என்ற யோசனையிலையே அனைத்து சடங்கும் செய்தான்.
மயூராவோ தாலி ஏறிய பின்,அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை..
‘என்னோட இத்தனை கஷ்டங்களுக்கும் ஆரம்பப்புள்ளி வைச்சவனையே,கைபிடிச்சிருக்கனே..’-தன்னுடன் இணைந்திருந்த அவன் கைகளை ஆழமாய் உணர்ந்தபடி, அண்ணனுக்காய் முகத்தில் சிரிப்பை தேக்கி வைத்து நின்று கொண்டிருந்தாள்..
நெஞ்சம் மட்டும் தீக்கங்குகளாய்  கொதித்துக் கொண்டிருந்தது..

Advertisement