Advertisement

தன் அண்ணனால் மாப்பிள்ளை என்று விழிக்கப்பட்ட அரவிந்தனை ஏனோ பார்க்கவே தோன்றவில்லை மயூராவிற்கு!
அவள் எண்ணமெல்லாம் வினோதன் தான் நிறைந்திருந்தானே!!
அக்காவை கடத்தி,அவளது திருமணத்தை நிறுத்தியதில் கடும் கோபத்தில் இருந்தாள்.இனி அனுஷாவின் வாழ்வு என்னாகும்? என்ற கேள்வியிலையே அவள் மனம் மூழ்கியிருந்ததால்,அருகிலிருந்தவன் பெரும் பொருட்டாகவே தெரியவில்லை..
மேலும் நாளை தனக்குத்தான் திருமணம் என்ற விஷயமே இன்னும் அவள் மூளையை சென்றடையவில்லை..தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை…என்ற அளவிலையே அவளது சிந்தனை முடிந்து வினோதனை பற்றிய எண்ணம் ஆக்கிரமித்துக்கொள்ள,அரவிந்தன்  என்றொரு மனிதனையே அவள் கண்டுகொள்ளவில்லை..கண்ணை மூடிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.
அரவிந்தனும் அவளை ஓரப்பார்வை பார்த்தபடி மகேந்திரனிடம் பேச்சுக் கொடுத்தபடி வந்தான்.
“சரியா அங்க எப்படி வந்தீங்க மாப்பிள்ளை..”கேட்கவும்,நடந்ததை சுருக்கமாக சொன்னான்.
“அம்மா வினோதன் பற்றிய சில விஷயங்களை முன்னாடியே சேகரிச்சு வச்சிருந்தாங்க.அது மூலமா,அவனோட பிரண்ட் ஒருத்தனை பணம் கொடுத்து கரெக்ட் பண்ணி,விஷயம் வாங்கிட்டோம்.அவன் இருக்க இடம் சொல்லவும்,என் ஆளுங்க மூலமா அனுப்பி வைச்சிட்டேன்”என்றவன்,
“சில விஷயங்கள் தெரிஞ்சுக்கறதுக்காக,உங்க மொபைல் கால் ட்ரெஸ் பண்ண வேண்டியதா போச்சு”எனவும் மகேந்திரன் அதிர்ந்து போனான்.
அவனது பார்வைக்கு பதில் சொல்லும் விதமாய்,”எனக்கும் சில விஷயங்கள் தெரியணும் இல்லையா! அப்படி தான் நீங்க அந்தக் காட்டுக்கு போற விஷயம் தெரிஞ்சுது. என் கார் டிரைவரும்,உங்க தங்கச்சியை வீட்டுல விட்டுட்டு,உங்க நடவடிக்கையை கவனிச்சு,எனக்கு அப்டேட் கொடுத்துட்டே இருந்தான்”என்று மேலும் சொல்ல,மகேன்(மகேந்திரன் இனி மகேன் என்றே அழைப்போம்..டைப் செய்ய கஷ்டமாக இருக்கு!!!!!)இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியாமல் தடுமாறினாலும்,
“இப்பவும் ட்ரெஸ் பண்ணிட்டு தான் இருக்கீங்களா?”என்றான் தடுமாற்றத்தில்!!
“தப்பா எடுத்துக்காதீங்க! பொண்ணுங்க விஷயம்!!நேரம் கடத்தினா ரொம்ப ரிஸ்க் ஆகிடும்.அதனால தான் இப்படி பண்ண வேண்டியாதாகிடுச்சு!! இனி அதுக்கான அவசியம் இல்லையே”எனவும் கொஞ்சம் சமாதானமானான்.
மகேன் கொஞ்சம் தயங்கியபடியே,”அத்தை,மேரேஜ் நிறுத்திட சொன்னாங்க”கேட்கவும்,
பதில் சொல்லாமல் சில நொடிகள் வெளியே வேடிக்கை பார்க்க தொடங்க,மகேன் சோர்ந்து தான் போனான்.
திரும்ப கேட்க விரும்பாமால் அமைதியாகிவிட,அரவிந்த் தன் மௌனத்தை கலைத்து,”உங்க தங்கச்சிகிட்ட தனியா பேசிட்டு என் முடிவை சொல்றேன்”என்றதும்,கண்ணை திறந்தாள் மயூரா!!
‘என்கிட்ட பேசணும்னு இவனாவது நினைக்கறானே’கோபமாக எண்ணினாலும்,ஒருவார்த்தை யாரிடமும் பேசவில்லை.
கார் நிற்கவும் தான் தங்களது வீட்டிற்கு வந்துவிட்டதை உணர்ந்தாள்.
அங்கு ஏற்கனவே இரண்டு கார்கள் நிற்க,”அம்மா வந்திருக்காங்கன்னு நினைக்கறேன்”பொதுவாக சொல்லிவிட்டு,இவர்களுடன் வீட்டிற்குள் நுழைய,புதிதாய் தெரிந்த மனிதர்களை,அறிமுகமில்லாமல் எப்படி வரவேற்பது என்பதுடன்,கடந்த சில மணித்துளிகள் நடந்தவையெல்லாம் மறந்துவிட்டு,இயல்பாய் எப்படி வரவேற்பது என்றும் புரியாததால்,ஓரமாய் அமர்ந்திருந்த அனுஷாவின் பக்கம் செல்லப் போனாள்.
அரவிந்தன்,தனது அம்மா வேதநாயகியிடம் பார்வையாலையே சம்மதம் பெற்றுவிட்டு,”மகேன்,உங்க தங்கச்சி கூட கொஞ்சம் பேசணும்”என்றான் அனைவரின் முன்னிலையிலும்!!
“மயூ..மாடிக்கு கூட்டிட்டுப் போய் பேசிட்டு வா”அழுத்தி சொன்னதால்,மறுக்க முடியாமல் மாடிப்படியேறவும்,அரவிந்தனும் செல்ல..தன் வீட்டில் அமர்ந்திருந்த மாறனின் அம்மாவை புரியாமல் பார்த்துக்கொண்டே,மேலே செல்பவர்களை கவனித்துக் கொண்டிருந்தான்…(அண்ணன் பதவி ரொம்ப கொடுமையானதப்பா!!!)
மேலே பால்கனியில் இருந்த சேரில்”உட்காருங்க”சொல்லிவிட்டு நேரெதிராக நின்றாள்.
இப்போது தான் பார்க்கிறாள்..எங்கேயோ பார்த்தது போலிருக்க,அவனையே இமைக்காமல் பார்த்தாள்..
இத்தனை நாள்,தான் தங்கியிருந்த வீட்டில் இருந்த பெரியவரின் புகைப்படத்தோடு ஒத்துப் போக,பல எண்ணங்கள் மனதில் எழுந்தாலும்,கலங்கிய கண்ணை அவனுக்கு காட்டாமல்,தன்னை நிலைப்படுத்தி,”பேசணும்னு சொன்னிங்களே”நினைவுபடுத்தினாள்.
“நாளைக்கு நமக்கு கல்யாணம்னு முடிவானது உங்களுக்கு தெரியுமா?”
“தெரியாது”
“நாளைக்கு கல்யாணம் நடக்காதுன்னு அம்மா சொல்லிட்டாங்க”
“ரொம்ப சந்தோஷம்”என்றாள் அவசரப்பட்டு!!
“அவன் மேல அவ்வளவு காதலோ?”
பதிலில்லை அவளிடம்!!
“என் பக்க சொந்தங்களுக்கு எல்லாம் இன்விடேஷன் வைச்சிட்டேன்.இன்னைக்கு ஈவ்னிங் எல்லாரும் வந்துடுவாங்க..என்ன பதில் சொல்லட்டும்?”
அதற்கும் பதிலில்லை.
கஷ்டப்பட்டு தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன்,”இப்போ உங்க முடிவென்ன?”என்றான்.
அதற்கு பதிலிருந்தது அவளிடம்!!
“இந்ததக் கேள்வியை நீங்க சில நாள் முன்னாடியே என்கிட்ட கேட்டிருந்தீங்கன்னா,இப்போ இவ்வளவு தூரம் எதுவும் வந்திருக்காது”நிதானமாய் சொல்ல,
“அப்போ கேட்டிருந்தா மட்டும்!!”நக்கல் தொனியில் கேட்க,அது அவளை உசுப்பேற்றியதோ!!
“உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது.வெளில போடான்னு சொல்லியிருப்பேன்”சொல்லிக் கொண்டிருக்கும் போதே எழுந்துவிட்டான்.
“மைன்ட் யுவர் லாங்குவேஜ்”கோபப்பட்டவனை விட,அதிகமான கோபத்துடன்,
“உங்களுக்கு அண்ணன் இருக்காங்க தானே”கேள்வி கேட்க,
“ஆமாம்..ஏன் கேட்கற”புரியாமல் கேட்டான்.
“இப்போ என்னோட முடிவை சொல்றேன் மிஸ்டர்….அர்வி..”என்று அவள் பேசும் முன்னே இடைநிறுத்தியவன்,
“அர்வி…உனக்கு எப்படி என் நிக் நேம் தெரியும்..அம்மா தான் உன்னைப் பார்த்து பேசவேயில்லையே?” முகத்தில் குழப்பரேகை ஓட கேட்க,
“எனக்கு உங்களை கல்யாணம் பண்ண இஷ்டமில்லை..ஏன் மேரேஜ் நின்னுடுச்சுன்னு கேட்டா,பொண்ணு வேற ஒருத்தனை காதலிக்கறான்னு சொல்லுங்க.இப்போ வெளில போங்க”என்று அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல்..வெளியில் போக சொல்ல,
அடக்கப்பட்ட கோபத்துடன்,”என் பேர் எப்படி தெரியும்னு கேட்டேன்”அழுத்தி கேட்க,
“உங்க வீட்டுல வேலை செய்யறவங்க சொன்னாங்க.போதுமா?இப்போ வெளில போறிங்களா..இல்லை வெளில வந்து உங்க அம்மாவையும் வெளில போங்கன்னு சொன்னா தான் கிளம்புவீங்களா?”மீண்டும் கேட்கவும்,வெறுப்பாய் பார்த்துவிட்டு கீழே இறங்கியவன்,
“அம்மா போலாம் வாங்க”சொன்னவன் நிற்காமல் நடக்க தொடங்க,அங்கிருந்து வெளியே வந்த வேதநாயகி,”என்ன ஆச்சுப்பா”என்றார் கனிவாய்!!
அந்த கனிவுக்கு எதிர்பதமாய்,மிகவும் கோபமாய் பேசினான்.
“நான் பொண்ணு போட்டோ பார்த்து ஒகே சொல்லிட்டேன்னு ஒரே காரணத்துக்காக,இப்போ இவ்வளவு பெரிய சிக்கல்ல கொண்டு வந்து என்னை நிறுத்திருக்கீங்க..அதுவும் இன்னொருத்தன விரும்பறவள எப்படி நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு நீங்க நினைச்சீங்க.
            
நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு,இன்னொருத்தனை விரும்பறான்னா,அது எனக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? எங்க கல்யாணம் நடந்தாலுமே,அதுக்கு பிறகு அவ மனசில அவன் இருந்தான்னா,எங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் என்ன ஆகும்னு நினைச்சீங்களா?”என்றுமில்லாதவாறு அம்மாவிடம் குரலுயர்த்தி பேசியவன்,
“என் வாழ்க்கைல,நான் நேசிக்கறவங்களுக்காக எத்தனையோ விட்டுக் கொடுத்திருக்கேன்மா.அது உங்களுக்கும் தெரியும்..இப்போ இந்த பொண்ணு மேல எனக்கு ஒரு பிடிப்பு வந்துடுச்சு..கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுன்னு,விரும்பவே ஆரம்பிச்சிட்டேன்”என்றவன் குரல் கமற,அவனை எதுவும் சொல்லி தேற்ற முடியாமல் அமர்ந்திருந்தார்.அவரது கண்களும் கலங்கி போயிருந்ததோ!!
ஒருவாறு தன்னை தேற்றிக்கொண்டவன்,”நான் விரும்பற பொண்ணை என்னால கஷ்டப்படுத்த முடியாதும்மா!! அவளுக்கு அந்தப் பையன் மேல தான் விருப்பம்னா,தாராளமா கல்யாணம் பண்ணிக்கட்டும்..பாசம் வைச்ச குற்றத்துக்காக,விரும்பியத விட்டுக் கொடுக்கறது எனக்கொண்ணும் புதுசில்ல..ரத்ததிலையே ஊறிடுச்சு.இப்பவும் அதையே பண்ணிடறேன்”எனவும்,
“சாரி அர்வி”என்றவர்,மீண்டும் உள்ளே சென்றார்.
இவர்களது பேச்சு உள்ளிருப்பவர்களுக்கும் கேட்டது..
அதில் முகம் தொங்கிப்போய் அமர்ந்திருந்த பிரபாகரன் மற்றும் வசந்தியை பார்த்து,”முன்னாடி பேசினபடி இன்னைக்கு நிச்சயதார்த்தம்  நடக்கும்.நாளைக்கு கல்யாணமும் நடக்கும்”எனவும் ஆச்சர்யப்பட்டு தான் போனார்கள் மயூவின் குடும்பத்தினர்.
சற்று முன்னர் சம்பிரதாயத்திற்காக,திருமணத்தை நிறுத்தியதற்கு வருத்தம் சொன்னவர்,இப்போது இப்படி பேசுவார் என்று அவர்கள் நினைக்கவில்லை.
இவர்கள் திருமணம் நடக்க வேண்டும் என்றால் வேண்டும்..வேண்டாம் என்றால் வேண்டாமா?-என்ன நினைச்சிட்டு இருக்காங்க-கோபம் பிரபாகரனுக்கு எகிறினாலும்,அரவிந்தனின்,
‘விரும்ப ஆரம்பிச்சிட்டேன்’என்ற வார்த்தையை மனதில் கொண்டு நிதானித்தார்.
வேதநாயகியும்,”என் பையனுக்கு உங்க பொண்ணை பிடிச்சிருக்கு.அவன் நல்லா பார்த்துப்பான்..”என்ற உறுதி கொடுத்துவிட்டு,
“உங்க பெரிய பொண்ணுக்கு பேசின மாப்பிள்ளை வீட்டுல,நான் பேசறேன்.சம்மதிக்க வைக்கிறேன்.குறிச்ச முகூர்த்ததில ரெண்டு கல்யாணமும் நடக்கட்டும்”என்றார்!!
மறுத்துப் பேச தோன்றவில்லை என்பதால் அவர்கள் அமைதியாய் இருக்க,அனுஷா சோர்வாய் இருந்தாலும் பேசினாள்..தனக்காக!!
“அவங்ககிட்ட எல்லாம் பேசவேண்டாம் ஆன்ட்டி.இப்போவே என் கேரக்டர் பத்தி தப்பா பேசியிருக்காங்க.கல்யாணத்துக்கு அப்புறமா எப்படி பேசுவாங்கன்னு தெரியாது..அதனால வேண்டாம்.என் தங்கச்சி கல்யாணம் நாளைக்கு நடக்கட்டும்.அதில் எனக்கு விருப்பம் தான்”தெளிவாய் சொல்லிவிட்டு கண் மூட,
மகேன் தன் தங்கையை பார்த்தபடி,”நாளைக்கு ரெண்டு கல்யாணமும் நடக்கும்.நீங்க உங்க பக்கம் செய்ய வேண்டியதை செய்யுங்க அத்தை”என்றான்.
என்ன வேணாலும் செய்யுங்க என்ற பாவனையுடன்,வெளியே நின்றிருந்த மகனை  அழைத்துக்கொண்டு சென்றார்.
“இந்தவொரு விஷயத்தில நீ விட்டுக் கொடுக்கணும்னு அவசியமில்ல அர்வி.நீ ஒண்ணும் கெட்டவணும் இல்ல..மயூரா காதலிச்சவன் நல்லவணும் இல்ல.மயூராவும் அந்த அளவுக்கு மோசமான பொண்ணும் இல்ல.சொன்னா புரிஞ்சுக்கற ரகம் தான்..அதனால தான் தெளிவா சம்மதம் சொல்லிட்டு வந்திருக்கேன்”என்றவருக்கு பதில் சொல்லாமல் காரில் ஏறியவன் புன்னகைத்துக் கொண்டான்
செண்டிமெண்ட் டயலாக்-அரவிந்த்-க்கு பிடிக்கவே பிடிக்காத ஒன்று.படத்தில் யாரும் பேசினால் கூட தியேட்டரிலிருந்து எழுந்து வந்துவிடுவான்..இப்போது தானே அப்படி பேசியதில் அவனுக்கு சிரிப்பு தானே வரும்..
ஒருமுறை கூட நேரில் பார்த்து,பேசியிராத ஒரு பெண்ணை புகைப்படத்தில் மட்டும் பார்த்துவிட்டு விரும்ப முடியுமா? அதுவும் நான் அப்படி விரும்பிவிடுவேனா?-அம்மாகிட்டவே பொய் சொல்ல வேண்டியதாகிடுச்சே-குற்ற குறுகுறுப்புடன் வேதநாயகியை பார்க்காமல் நேராய் சாலையில் கண் வைத்து ஓட்ட,அவரும் அதே குற்ற குறுகுறுப்பில் தான் அமைதியாக வந்தார்.
இத்தனை இக்கட்டான நிலையில் உள்ள பெண்ணை,என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க,எது என்னை இழுக்கிறது-யோசனையில் அவரும் அமைதியாய் வர…நேரம் அவர்களை உள்ளிழுத்து,மாலை நடக்கவிருக்கும் நிச்சயத்திற்கு தயாராக செய்தது.
மயூரா தான் அடங்கிப் போய் அமர்ந்திருந்தாள்..அடங்கிப் போய் தான் அமர்ந்திருந்தாள்..
தான் அப்படிப் பேசியும்…அவன் தன்னை விரும்பியதாக சொன்னதில்,கண் கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள்..என்றுமில்லாமல் இன்று அழுகை பெருக,கண்ணை துடைத்துக் கொண்டே அறையில் அமர்ந்திருக்க,பார்த்த வீட்டினர் அனைவருமே,அரவிந்துடன் நடக்கவிருக்கும் திருமணத்தில் விருப்பமில்லை என்று புரிந்து அமைதி காக்க…மகேன் அமைதியாகவே பார்த்தான்.
இந்த அழுகை,அவனை அசைத்துப் பார்க்கவில்லை..வினோதனை கட்டிக்கொண்டு காலமெல்லாம் அழுவதற்கு பதிலாய்,இன்று ஒருநாள் அழுதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்ற எண்ணத்துடன் அனுஷாவின் அருகில் அமர்ந்தான்.
அவளோ வெறித்தப் பார்வையில் அமர்ந்திருக்க,”அணு..மாறன் அம்மா வந்து பேசிட்டுப் போனாங்க”என்றான்.
“கேட்டுச்சு”என்று மயூராவைப் போல இவளும் ஒற்றை வார்த்தையில் பதிலளிக்க,
“உனக்கு ஓகேவா..வேண்டாம்னா சொல்லிடு அணு.நான் கொஞ்ச நாள் எல்லாத்தையும் தள்ளி வைக்கிறேன்”என்றவனை ஆழ்ந்து பார்த்தாள்..
அக்கா தங்கை இருவரின் பார்வையும் ஒன்று போலிருப்பதை இன்று தான் வீட்டிலிருப்பவர்களே கண்டுகொண்டனர்..அத்தனை அழுத்தம் அந்த பார்வையில்..!!
“என்னடா சொல்ற அணு”மீண்டும் கேட்க,
“உன்னோட விருப்பபடியே செய்”என்றதும் தான் அவனுக்கு நிம்மதியாக மூச்சே வெளிவிட முடிந்தது…
இந்த இடைப்பட்ட நேரத்தில் அவனுக்கு தான் எத்தனை போன் கால்கள்..!! தன் வீட்டு நிலவரத்தை அறிய துடித்த யாருக்கும் பதில் சொல்லாமல்,போனை அணைத்தும் வைக்க முடியாமல் தவித்த தவிப்பு அவனுக்கு தானே தெரியும்..
குடும்ப மானம் காப்பாற்றவும்..தன் தங்கைகள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமென்றும் எண்ணி தான் அனைத்தையும் செய்கிறான்..ஆனால் அவன் உடன்பிறப்புகள் அப்படி நினைக்க வேண்டுமே…சிக்கலை தானே உருவாக்கிக் கொள்வார்களே!!  என்ன செய்ய!!! அவங்க அப்படித்தான்………!!  

Advertisement