Advertisement

மகேந்திரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு,போன் பேசிக் கொண்டிருந்தான்.
அழுது கொண்டிருக்கும் அம்மாவையும்,வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் அப்பாவையும் சமாதானம் செய்ய அவனுக்கு நேரமில்லை.தருண் தான் பொறுப்பாய் ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தான்.
மகேந்திரன் வெற்றிமாறனுக்கு அழைத்து விபரம் சொல்ல,கொதித்துப் போனவன்,”நிச்சயம் அவன் தான் கடத்தினான்னு தெரியுமாடா?”கேட்கவும்,மகேந்திரன் கொதித்துப் போனான்.
“இன்னும் உனக்கு ஊர்க்காரன்ற பாசம் போகலையாடா?”ஆத்திரத்துடன் கத்த,
“டேய்,எதுக்கு கேட்கறேன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.அவன் தான் கடத்திருந்தான்னா,சீக்கிரமா கண்டுபிடிச்சிடலாம்.அவனோட பிரண்ட்ஸ்ல ஒருத்தனை பிடிச்சாலும் விஷயம் கறந்துட முடியும்.அனுஷா காணாமல் போய் எவ்வளவு நேரமாச்சுன்னு முதல்ல சொல்லு”
“சரியா முப்பது நிமிஷம் இருக்கும்”
“அப்போ இங்க தான் அவனுங்க சுத்திட்டு இருக்கணும்.அவன் நம்பர் ட்ரெஸ் பண்ணாலே,கண்டுபிடிச்சிடலாம்.ஒண்ணும் பயப்படாத..நான் முதல்ல விசாரணையில இறங்கறேன்”என்றவன் அனுஷாவின் திருமண விவரங்களையும் கேட்டுக்கொண்டவன்,துரிதமாய்,வெகு துரிதமாய் செயல்பட்டான்.
தங்களது டெக்னிக்கல் பிரிவை அணுக முயன்ற நேரம் வினோதனிடமிருந்தே போன் வர,பல்லை கடித்தபடியே போனை எடுத்தான்.
“சார்.மச்சான் போன் பண்ணியிருப்பாரே?”
“வினோதன்,நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்லை.நாளைக்கு அனுஷாக்கு கல்யாணம்.இப்படி நீ கடத்திட்டு போயிட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு தகவல் வேற சொல்லியிருக்க.உன்னால ஒரு பொண்ணு வாழ்க்கையே நாசமா போச்சுடா.இப்போ நீ எங்க இருக்க.அத சொல்லு முதல்ல”
“சொல்றேன் சார்.அதுக்கு தான போன் பண்ணேன்.எனக்கு என் பொண்டாட்டி வேணும்”
“பொண்டாட்டியா?”என்றான் பல்லை கடித்தபடி..
“அதான் சார்.என் மயூ..அவளை தான் சொல்றேன்.ஒரு பொண்ணை எனக்கு கொடுத்துட்டு,இன்னொரு பொண்ணை கூட்டிட்டு போக சொல்லுங்க.என் மயூ என் கைக்கு வந்துட்டா போதும்.வேறெதுவும் எனக்கு வேணாம்.என் மச்சினிச்சிக்கும் எதுவும் வரமா பத்திரமா பார்த்துப்பேன்.இடையில எதுவும் தில்லுமுல்லு பண்ணீங்கன்னு தெரிஞ்சுது,அனுஷாவோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பில்ல.நான் ரொம்ப நல்லவனா இருக்கணும்னு முயற்சி பண்றேன்.கெட்டவனா அவங்க தான் மாத்திக்கிட்டு வர்றாங்க”பேசிக்கொண்டே சொல்ல,வினோதன் அனுஷாவை எதுவும் செய்யமாட்டான் என்று நம்பிக்கை வர,பொறுமையுடன் அவன் பேசுவதை கேட்டான் மாறன்.
“இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற?”
“மயூ எனக்கு வேணும்.நான் சொல்ற இடத்துல அவளை கொண்டு வந்து விட சொல்லுங்க.அனுஷாவை அனுப்பிடறேன்..அதுக்கப்புறம் என்னையும் மயூவையும் யாரும் தேடவே கூடாது.அவளோட எங்கேயாவது வெளியூர் போய் பிழைச்சுக்கறேன்.என் மச்சான்,மாமனார் காதுல நல்லா கத்தி சொல்லுங்க.எங்களை எந்த விதத்திலையும் தொந்தரவு பண்ணக் கூடாது.நான் என் பொண்டாட்டியை ரொம்ப நல்லா வைச்சு பார்த்துப்பேன்.இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள…இல்ல இல்ல..சரியா மூணு மணிக்கு என்கிட்டே மயூ வந்தாகணும்.இல்லைன்னா அனுஷாவை………..நான் சொல்ல விரும்பலை சார்.மச்சான்கிட்ட பேசிட்டு தகவல் சொல்லுங்க”என்றவன் உடனே போனை வைத்துவிட,என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
வினோதனின் போன் டவர் அங்கிருந்து முப்பதுகிலோ மீட்டர் தூரத்திற்குள் இருப்பதாகவே தகவல் காட்ட,நேரடியாக களத்தில் இறங்கவா,இல்லை,வினோதன் சொல்படியே செய்யலாமா என அவன் யோசித்துக் கொண்டிருக்க,திரும்பவும் அழைத்தான் வினோதன்.
“சார்.என் போனை வைச்சு என்னை ட்ரெஸ் பண்ணலாம்னு திட்டம் போடாதீங்க.எல்லாம் முன்னாடியே பக்காவா பிளான் பண்ணி தான் பண்ணிட்டு இருக்கேன்.நான் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு நம்பர்லயிருந்து கூப்பிட்டு பேசுவேன்.அதுவும் வேறேவேற இடத்திலிருந்து! அனுஷா இருக்கறதும் வேற இடத்தில! அதனால போலிஸ் மூளையை ஒதுக்கி வைச்சிட்டு,சாதாரணமா யோசிங்க சார்”என்று வைத்துவிட,அதற்கு மேல் தாமதிக்காமல் மகேந்திரனுக்கு அழைத்து விவரம் சொல்ல,
“இப்போ என்னடா பண்ணலாம்?”தடுமாறி கேட்டான்..இரு தங்கைகளும் அவனுக்கு பத்திரமாக வேண்டுமே!!
“மயூராவை அவன் சொல்படி கூட்டிட்டு போவோம்.அனுஷாவை காப்பாத்தின உடனே,மயூவை நாம சேஃப் பண்ணிடலாம்.நீ உடனே மயூராவை வர வை”
“மயூக்கு பிரச்சனை வராதில்லடா..அவன்,அந்த ராஸ்கல்,அப்படியே கூட்டிட்டு போயிட்டா?”முடிக்க முடியாமல் தடுமாறினான்.
“அப்படியெல்லாம் நடக்காது.நான் எதுக்கு இருக்கேன்? இன்னைக்கு அவனோட ஆட்டம் எல்லை மீறிப்போச்சுன்னா,என்கவுன்ட்டர் தான்.என்ன நடந்தாலும் நான் பதில் சொல்லிக்கறேன்”எனவும்,உடனே பிரபாகரனுக்கு தகவல் சொன்னான்.
“நான் சம்மந்தியம்மாகிட்ட பேசறேன்”என்றவர் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைக்க,எடுத்தவரிடம் தன் நிலைமையை விளக்க,
“ம்ம்ம்..நான் எதிர்பார்த்ததை விட பிரச்சனை பெருசா இருக்கும் போலயிருக்கே?”யோசித்தவர்,
“உங்க பொண்ணு அனுஷாவை காப்பாத்தறது என் பொறுப்பு! அதே நேரத்தில இனியும்,உங்க பொண்ணை என் பையனுக்கு கட்டி வைக்கிறது சரிப்பட்டு வரும்னு எனக்கு தோணலை. கல்யாணத்துக்கு பிறகு இந்த மாதிரி பிரச்சனைகள் வர்றது என் குடும்பத்துக்கு கெட்ட பேரை கொண்டு வந்துடும்.இதையெல்லாம் விட எனக்கு என் பையன் வாழ்க்கை ரொம்பவே முக்கியம்! உங்க பொண்ணை இப்போவே அனுப்பி வைக்கிறேன்”என்று சொல்லிவிட,பிரபாகரனுக்கு கண் கலங்கித்தான் போனது.
எதற்காக சம்மந்தம் பேச வேண்டும்! எதற்காக எங்கள் பெண்,எங்கள் உரிமை என்று கூட்டிக்கொண்டு போக வேண்டும்! அதனால் தானே இப்போது பிரச்சனை! இப்போ வேண்டாம்னு சொன்னா நான் என்ன செய்யட்டும்..பெண்ணைப்பெற்ற தந்தையாய் கண்கலங்கிப் போனவர்,ஒரு முடிவுக்கு வந்தவர்,
“மகேந்திரா…அந்த அம்மா,சம்மந்தத்தை முறிச்சிக்கிட்டாங்க.மயூரா வர்றா! இனி எது வேணாலும் நடக்கட்டும்.நமக்கு இப்போ அனுஷா..அனுஷா மட்டும் தான் முக்கியம்..புரியுதா?”என்றார்.
“அதெப்படிப்பா”என்றவனை பேசவிடாமல் தடுத்தவர்,
“பிரச்சனைக்கெல்லாம் காரணம் இந்த கழுதை தான்..இனி இவளை யாருக்கு நான் கட்டி வைக்க முடியும்.அவ பேரையே அவளே நாற வைச்சுக்கிட்டா! இனி அவ விருப்பப்படி,அந்த பொறுக்கியை கட்டிக்கிட்டு,எங்கேயோ போய் தொலையுட்டும்.மிச்சமிருக்கற ஒருத்தியையாவது,யார் கால்ல விழுந்தாவது கட்டி வைக்கறேன்”என்றவர் மயக்கம் வருவது போலிருக்க,அப்படியே அமர்ந்துவிட்டார்.
உள்ளே அழுதழுது ஓய்ந்து,மயக்க மருந்து கொடுக்க வைக்கப்பட்டு வசந்தி ஒருபக்கம் தூங்கிக்கொண்டிருக்க,அவருக்கு காவலாக தருணை வைத்துவிட்டு அடுத்து நடக்க வேண்டியதை அப்பாவும்,மகனும்,மனதை கல்லாக்கிக்கொண்டு செயல்படுத்தினர்..
இங்கே நடப்பதை அறியாத காயத்ரியும்,மயூராவும் அனுஷா திருமணத்திற்கு வருவதற்காக,சந்தோஷமாய் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னரே காரில்,பாதுகாப்பு ஆட்களுடன் கிளம்பியிருக்க,அனுஷா கடத்தப்பட்ட,ஒன்றரை மணி நேரத்திற்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிட்டனர்.
வீடே விழாக்கோலம் பூண்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டு மயூரா காரிலிருந்து இறங்க,அதற்கு நேர்மாறாய் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வீடிருப்பதை பார்த்து குழம்பிப் போனாள்.காயத்ரியையும் அவள் வீட்டில் இறக்கிவிட்டு தான் இங்கு வந்ததால்,அவளிடமும் கேட்க வழியில்லாமல் போக,தயக்கத்துடனே தான் உள்ளே வந்தாள்.
கார் சத்தத்தை கேட்டவுடன்,வெளியே வந்து பார்த்த அப்பாவும்,மகனும் கலங்கிய கண்களை மறைத்தபடி பார்த்துக் கொண்டிருக்க,
“என்னண்ணா ஆச்சு”என்றாள் பேகை கீழே வைத்தபடி!!
அவளுக்கு தன் வீட்டினர் மேல் பயங்கர கோபம் தான்.ஆனால் வெளிக்காட்டிப் பழக்கமில்லை என்பதால்,அவர்களின் சோகத்தில் தன் கோபத்தை மறந்து கேட்க,
பிரபாகரன் மகளை முறைத்தபடி,”என் பொண்ணு கல்யாணம் நின்னு போச்சு! அதுவும் உன்னால!!”என்றார்.
பதறியபடி,”என்னாலையா! எப்படி நின்னு போச்சு?”புரியாமல் கேட்க,
“அந்த பொறுக்கி கடத்திட்டான்.மாப்பிள்ளை வீட்டுலையும் பேசி,கல்யாணத்தை நிறுத்த வைச்சிட்டான்”எங்கோ பார்த்தபடி சொன்னவர்,
“போய் ரெடியாகிட்டு வா.உன்னை அவன்கிட்டவே கொண்டு போய்விட்டுட்டு வர்றேன்”என்றவரை தீர்க்கமாக பார்த்தவள்,தன் அண்ணனை பார்த்தபடி,
“என்னை கூட்டிப் போய் விட்டுட்டா,அனுஷாவை விட்டுடுவாங்களா?”சரியாக ஊகித்து கேட்க,
“அப்படிதான் சொன்னான்”எனவும்,
“நீங்களும் சரின்னு சொல்லிட்டிங்களா?”என்றவளை முறைத்த பிரபாகரன்,
“ஆமாம்.ஒத்துக்கிட்டோம்.உன்னை அவன்கிட்ட கொண்டு போய் விடறதுக்கு ஒத்துக்கிட்டோம்.இப்போ உனக்கு சந்தோஷம் தானே! போ..போய் கிளம்பி வா…உனக்கு என்னவென்ன வேணுமோ..அத்தனையும் எடுத்துக்கிட்டு வா! வெறுங்கையோட அனுப்பி வைச்சேன்னு என்னை யாரும் சொல்லிடக் கூடாது”எனவும் அண்ணனை பார்த்தவள் நொடியும் தாமதிக்காது,தனதறைக்கு சென்று   கிளம்பி வந்தாள்.
கையில் பொருட்கள் எதுவும் இல்லை!! கண்டுகொள்ளவும் யாருமில்லை.அனுஷாவை காப்பாற்றும் அவசரம் அவர்களிடம்!!
முன்னவே வினோதனிடம்,எங்கு வர வேண்டும் என்று மாறன் பேசியிருக்க,இப்போது தாமதிக்காமல் நேரத்தோடு வருவதையும் குறிப்பிட்டு சொல்ல,அரைமணி தூரத்திலிருந்த ஆளேயில்லாத அத்துவானக்காட்டில் நம்பர் பிளேட் இல்லாத கார் மட்டும் தனியே நிற்பதை பார்த்த மாறன் வினோதனிற்கு அழைத்தான்.
“நீ சொன்னபடி வந்துட்டோம்.அனுஷாவை உள்ளே காணோமே?”
“நீங்க மயூவை கார்ல உட்கார வச்சிட்டு போங்க சார்.நாங்க சிட்டிக்குள்ள போன பத்தாவது நிமிஷம்,அனுஷா வீட்டுல இருப்பா..நீங்க கேஸ் பைல் பண்ணிடலை தானே?”என்றும் கேட்க,
“அதெல்லாம் ஒண்ணும் போடலை”என்றவன்,மயூராவிடம் திரும்பி,
“போம்மா..எங்க ஆளுங்க பாலோ பண்ணி வருவாங்க.அனுஷா வீட்டுக்கு வந்தவுடனே உன்னை காப்பாத்திடுவோம்”என்றான்.
மகேந்திரன் எதுவும் சொல்லாமல் அமைதியாயிருக்க,அவனுக்கு வீட்டில் அம்மாவிடமிருந்து போன் வந்தது..
“டேய் தம்பி,அனுஷா..நம்ம அனுஷா வீட்டுக்கு வந்துட்டாடா!! நீ மயூவை அவன்கிட்ட விட்டுடலை தானே”பதறியபடி கேட்டார்..
அவனுக்கோ ஆனந்தம்..!
“நிஜமாவாம்மா..அனுஷா வந்துட்டாளா?”சந்தேகமாகவே,சந்தோஷத்துடன் கேட்க,
“இங்க தான் இருக்கா..நீ மயூவை அவன்கிட்ட விட்டுடலை தானே”தாயாய் பரிதவித்து கேட்க,
“இல்லம்மா..நாங்க கூட தான் இருக்கோம்.இன்னும் விடலை..கொஞ்ச நேரத்துல பேசறேன்.அனுஷாவை பத்திரமா பார்த்துக்கோ”என்றவன்,
பரபரத்து காத்திருந்த மாறனிடமும்,அப்பாவிடமும்,”அனுஷா வந்துட்டாளாம்.நாம திரும்பி போயிடலாம்”என்றான்.
மாறனும் சந்தோஷமாய் காரை எடுக்க,
“நான் இறங்கிக்கறேன்”என்று மயூரா சொல்லவும்,
“போ..இறங்கி போயிடு.இனி எங்க முகத்தில முழிச்சிடாத! இதுக்காக..இதுக்காகத்தானே எல்லாம்!! எங்களுக்கு நீ வேண்டாம்..நீ எப்போவும் வேண்டாம்”கண்கள் சிவந்தபடி,பிரபாகரன் கத்த,அந்த கத்தலுக்கு கொஞ்சமும் மதிப்புக் கொடுக்காமல் இறங்கினாள் மயூரா..
அவள் இறங்கியதுமே,”காரை எடு மாறா!! வீட்டுக்கு போனவுடனே தலை முழுகணும்”என்றவர் காரை திருப்ப சொல்ல,எல்லாம் சுமூகமாய் முடியும் நேரம்,இந்தப்பெண் ஏன் இப்படி செய்கிறாள் என்று மூவருக்குமே கோபம் வந்தது..
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை நெருங்கியவள்,”வினோதன்..வினோதன்..நான் பேசறது கேட்குதா?”சத்தமாய் பேச,அங்கு பதிலில்லை.
“எனக்கு தெரியும்..நீ இங்க தான் எங்கேயோ இருக்க! இப்போ..இப்போ நீ என் கண் முன்னாடி வரலைன்னா,நான் அவங்க கூடவே போயிடுவேன்..வெளில வா..வெளில வா முதல்ல!”கத்தி சொன்ன போதும்,அவன் வெளிவரலை..
“கடைசியா சொல்றேன்..இப்போ நீ வெளில வரலைன்னா,நான் அவங்க கூடவே போயிடுவேன்”என்று சொல்ல..இப்போது அவனிடமிருந்து பதில் வந்தது..
“உன் வீட்டு ஆளுங்களையும்,கண்காணிக்க பின்னாடி பைக்ல மறைஞ்சிருக்க போலீசையும் போக சொல்லு.அவங்க கிளம்பினதுக்கு பிறகு நான் வர்றேன்” எனவும்,மயூரா மட்டுமல்ல,மாறனும் கூட குழம்பி போனாள்..
அப்படி யாரும் ஆட்கள் பின்தொடரவேயில்லையே!!
அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே..பைக் அவர்களை கிராஸ் செய்து நேராய்,மயூராவின் அருகே நிற்க…அதிலிருந்து இறங்கியவன்,தனது ஹெல்மெட்டை கழட்டிவிட்டு,
“ஹப்பா..ரொம்ப ஹாட் இல்ல”என்றான் மயூராவை பார்த்தபடி!!
“யாரிந்த புதியவன்…’மயூரா யோசிக்க,காரிலிருந்த மாறனும்,மற்ற இவர்களும் இறங்கி வர…
“ஹலோ..ஹலோ..வினோதன் சார்.நான் பேசறது கேட்குதா”என்றான் மயூரா பேசிய அதே தொனியில்!!
அவள் அதிர்ந்து போய் பார்க்க,வினோதனும் குழம்பிப் போனான்..
எங்கோ தவறு நடக்கிறதென்று அவனுக்கு புரிந்தது..அனுஷா அவன் கைவிட்டுப் போனது இன்னும் அவன் காதுக்கு எட்டவில்லை..இப்போது புதிதாய் ஒருவன் அழைக்கிறான்..ஒன்றும் புரியாமல் பார்க்க…
“ஹலோ சார்..இப்போ நீங்களா வெளில வர்றீங்களா..இல்ல நான் வர வைக்கட்டுமா?”என்றதற்கும் பதிலில்லை..
மாறன்,”யார் நீங்க?”அதட்டிக்கொண்டே வர,
கண்டுகொள்ளாமல்,”வினோதன் சார்.கடைசியா உங்களுக்கு ஒரு சான்ஸ் தரேன்..உங்க லவர் உங்களுக்கு வேணும்னா,இப்போ நீங்க வெளில வரணும்…உங்களுக்கு டென் செகேன்ட் தான் டைம்”என்று கவுண்டவுன் சொல்ல ஆரம்பிக்க,
“நீங்க யாருங்க?”எரிச்சலுடன் மயூரா கேட்க..கண்டுகொள்ளாமல்..
தலையை ஸ்டைலாக கோதியபடி“த்ரீ..டூ..ஒன்”என்றெண்ணியவன்..மயூராவை பார்த்து சிரித்தான்..அந்த புன்னகையில் என்னதானிருந்தது!!!
அதே சிரிப்புடன்“உங்களுக்கு இனி சான்ஸ் இல்லீங்கோ…நாங்க கிளம்பறோம்”சொன்ன நொடி…மாறனின் கார் இருந்த எதிர்புற சாலையிலிருந்து,அழகிய லம்போகினி கார் ஒன்று வேகமாக வர..
“உள்ள போ”மயூராவை பார்த்து சொல்ல…அவள் புரியாமல் முறைத்தவள்,அங்கிருந்து நகன்று காட்டுக்குள் செல்ல முயன்றாள்.
“என்ன மச்சான்..ஒண்ணுமே உங்க தங்கச்சிக்கு சொல்லலையா”கேட்கவும் நடந்து கொண்டிருந்தவள் திரும்பி பார்த்தாள்..
பிரபாகரன் அமைதியாய் நிற்க,மகேந்திரன்,”இதுக்கு அர்த்தம் என்ன மாப்பிள்ளை”என்றான் புரிந்தும் புரியாமலும்!!
“நாளைக்கு காலைல கல்யாணத்தை வைச்சுக்கிட்டு என்ன அர்த்தம்னு கேட்டா..என்ன அர்த்தம் மச்சான்”மகேந்திரனை போலவே இவனும் கேட்க…மகேந்திரன் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை.
சிலையாய் நின்றிருந்த மயூராவை வலுக்கட்டாயமாய் இழுத்துக்கொண்டு காரில் ஏற்றியவன்,”அப்பா நீங்க மாறன் கூட வாங்க”என்றவன்,முன்பக்கமாய் ஏறிக்கொள்ள…மயூராவின் அருகே அமர்ந்துகொண்டான் அவன்…!!அவன் அரவிந்தன்!!
அதையெல்லாம் கண்டுகொள்ளாத மயூரா,கார் கண்ணாடியை இறக்கிவிட்டபடி…வினோதன் எங்கேயாவது தென்படுகிறானா என்று உள்ளிருந்தே துலாவ(பார்க்க) ஆரம்பித்தாள்…
வினோதன்…நடப்பது யாவும் விநோதமாய் பார்த்துக் கொண்டிருந்தான்..
இன்றோடு  என் மயூரா..என் கைவளைவில்…எத்தனை எத்தனை கனவுகள் கண்டிருப்பான்..அத்தனையும் சொதப்பிவிடவும்..கோபத்தில் வெறித்தனமும் சேர,தன் நண்பனுக்கு போன் செய்தவன்,”அனுஷாவை கூட்டிட்டு திரும்ப வந்துடு..அவளை என்ன பண்ணனும்னு நான் முடிவு பண்றேன்”என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் வைத்துவிட..எப்போதோ தப்பித்துவிட்ட அனுஷாவை பற்றி சொல்ல முடியாமல்,அமைதியாகிவிட்டனர்..அவனின் நண்பர்கள்…!!
அவர்கள் தான் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்களே!!

Advertisement