Advertisement

மெல்ல நிதானத்திற்கு வந்த மயூரா,கண்ணீரை துடைத்துக்கொண்டு கதவுப்பக்கம் சென்றாள்.திறந்து தானிருந்தது.கீழே வினோதன் இருக்கிறானோ என்று அவசரமாய் மாடிப்படியிலிருந்து கீழிறங்க..”ஐயோ,ஏன் கண்ணு இவ்வளவு வேகமா ஓடியாற.மெதுவா வா கண்ணு”என்ற பெண்மணியின் குரல் கேட்க நிதானித்தாள்.
“நீங்க..நீங்க யாரு?”என்று கேட்டவளை வினோதமாய் பார்த்தவர் பதில் சொல்லும் முன்னர்,
“ஆச்சி..இந்த ஊறுகாய் டப்பா எங்க இருக்கு.எடுத்துக் கொடுங்க”என்ற பெண்ணின் குரல் கேட்க திடுக்கிட்டுப் போனாள் மயூரா..அது காயத்ரியின் குரல் அல்லவா!!
ஆச்சியை விட வேகமாய் இவள் சமையலறைக்கு செல்ல,அங்கிருந்த உணவருந்தும் மேஜையில் பிரியாணியை மொக்கிக் கொண்டிருந்தாள் காயத்ரி!!
மயூரா வாயில் கை வைக்காத குறை தான்!
“உன்னையும்,உன்னையும் அவன் கடத்திட்டு வந்துட்டானா?”பதட்டத்துடன் கேட்கவும்,வாயிலிருந்த முட்டையை சிரமப்பட்டு முழுங்கியவள்,
“ஏன் நாத்தனாரே! அறிவு,அறிவுன்னு ஒண்ணு இருக்கே..அது உனக்கு இல்லவே இல்லையா”என்றவளை புரியாமல் நோக்க,
“உன்னோட ஆளுக்கு என்னைய கடத்த தைரியம் இருக்காமா?”எனவும் முறைத்தாள்.
“இப்படி பார்த்தா,நாங்க பயந்துடுவோமா? அந்த பரதேசி ஒருவேளை அதிர்ஷ்டத்துல உன்னையும்,என்னையும் கடத்திட்டான்னு வை..எதுவும் பாழடைஞ்ச பங்களாவில கொண்டு போய் தான் தங்க வைப்பான்.அவனுக்கு இருக்க துப்பு அவ்வளவு தான்…இம்புட்டு பெரிய வீட்டுல அவனால முதல்ல காலடி எடுத்து வைக்க முடியுமா?”நிதானமாய் கூற,
“அப்போ இங்க எப்படி வந்தோம்?”-எதுவோ புரிந்தது போலிருக்க,கனத்த குரலில் கேட்டாள்.
“கார்ல தான் வந்தோம் மயூ”பதில் சொல்லிவிட்டு மீண்டும் உண்ண தொடங்க,
“அப்பா,அண்ணன் வேலையா இது”சரியாய் ஊகித்து கேட்க,
“ஆமாம்”என்ற போது காயத்ரியின் குரலும் உள்ளே போய்விட்டது.
“எதுக்காக இப்படி?”ஒட்டாத குரலில் கேட்க,
“அவன் கூட்டாளிங்க,உன்னை மட்டுமில்லாம,என்னையும் கடத்த போறதா சேதி வந்துச்சு.அதனால தான்”எனவும் சிறிது நேரம் அங்கே மௌனமே ஆட்சி செய்ய,ஆச்சி வேற வேலையாக வெளியே சென்றுவிட,
உள்ளே சென்றுவிட்ட குரலில்,”இப்போ எந்த ஊர்ல யார் வீட்டுல இருக்கோம் காயத்ரி?”கேட்டாள்.
“தெரிஞ்சு என்ன பண்ண போற? அந்த வினோதனுக்கு தகவல் சொல்லவா?”பட்டென்று கேட்க,மீண்டும் அமைதியாகிவிட்டாள்..காயத்ரிக்கும் அவளை பார்த்தால்,பாவமாகத்தான் இருந்தது..
எப்படித்தான் அவனின் வலையில் விழுந்தாளோ?-பெருமூச்சோடு எழுந்து சென்று கை கழுவிவிட்டு வந்தவள்,அவளது பேகை கொடுத்து,”போய் ரெடியாகிட்டு வா..சாப்பிட்டு தோட்டத்தை சுத்திப் பார்த்துட்டு வரலாம்”என்று அழைக்க,
“நான் எங்கேயும் வரல.நீ வேணா போய் பார்த்துட்டு வா”வெடுக்கென்று சொல்லிவிட்டு,தன்னுடைய பேகை எடுத்துக்கொண்டு,மேலே தானிருந்த அறையிலையே சென்று கதவை அடைத்துக்கொண்டு,அப்படியே சரிந்து அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
தன் அண்ணனே தனக்கு தூக்க மாத்திரை கொடுத்து,இங்கே கூட்டிக்கொண்டு வந்ததை அவளால் தாங்க முடியாது போக,தன்னை சுற்றி நடக்கும் எதற்கும் பொறுப்பேற்க முடியாமல் குலுங்கி குலுங்கி அழுதாள்.
பெண்ணாய் பிறத்தல் பாவம்!! ஒவ்வொருமுறையும் வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் ஏகப்பட்ட சிக்கல்கள்..எப்படி விடுபடுவது என்று யோசித்து முடிக்கும் முன்னரே,அடுத்த சிக்கல் உருவாகி,வாழ்க்கையே சிலந்தி வலையாக மாறிவிடும் அவலம்! அதிலே சிக்கிக்கொண்டு இறந்தும் போகலாம்..யாராவது ஒருத்தரின் உதவியுடன் மொத்த வலையையும் அறுத்து எறியவும் செய்யலாம்….!!
சிறிது நேரம் பொறுமையாயிருந்த காயத்ரி,மயூரா கதவை திறக்காமல் இருக்கவும்,மேலே சென்றவள் கதவை தட்டினாள்.
“மயூ கதவை திற”எனவும் பட்டென்று திறந்தாள்.
அழுதிருக்கிறாள் என்று புரிய,”இப்போ எதுக்கு இந்த அழுகை! கொஞ்ச நாளைக்கு டூர் வந்திருக்கோம்னு நினைச்சுக்க வேண்டியது தானே?”என்றவளை முறைத்தவள்,
“அக்கா கல்யாணத்தை கூட என்னால பார்க்க முடியாதா காயத்ரி? அந்தளவுக்கு மோசமான நிலையிலா நான் இருக்கேன்?”கோபமாக கேட்க,
“நீயில்லாம கல்யாணம் எப்படி நடக்கும்.அதெல்லாம் மொதநாளே போயிடலாம்.நிச்சயத்துக்கு போயாகனுமில்ல”எனவும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட,உடனே குழம்பிப் போனாள்.
“ஏற்கனவே அக்காக்கு நிச்சயம் ஆகிடுச்சே..பின்ன எதுக்கு மறுபடியும் நிச்சயதார்த்தம்?”
“ஷப்பா..முகூர்த்தப்புடவை முதநாள் நைட்டு தான்,சபையில வைச்சு கொடுப்பாங்க.அதைத்தான் சொன்னேன்..இப்போ நீ கிளம்பி வர்றியா,இல்லையா?”
“இல்ல.ரொம்ப டயர்டா இருக்கு..பிரெஷ் ஆகிட்டு,சாப்பிட்டு தூங்க போறேன்”எனவும் சலிப்போடு சென்றாள்
சிறிது நேரத்தில் உணவு உண்ண அமர்ந்தவளுக்கு ஆச்சி பரிமாற,மெல்லிய குரலில்,“காயத்ரி.இது யாரோட வீடு.எங்க சொந்தத்துல யாரும் இவ்வளவு பெரிய ஆள் இல்லையே?”கேட்க,
“என்னோட பெரியப்பா வீடு”எனவும்,
“ஓ”என்றவள் சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த புகைப்படத்தை பார்த்தாள்.மாலை போடப்பட்டிருந்தது.
“இவர நான் எங்கேயோ பார்த்திருக்கேன் காயூ”என்றவள்,பாதி உணவிலையே எழுந்து சென்று,இன்னும் அருகில் அவர் முகத்தைப் பார்க்க,
“நான் இவர எங்கேயோ பார்த்திருக்கேன்.உன்னோட பெரியப்பா நம்ம வீட்டு விசேஷத்துக்கு எப்போவாவது வந்திருக்காரா?”கேட்கவும்,அவளுக்கே கேட்காத குரலில்,
‘நானே இப்போதான் போட்டோவையே பார்க்கறேன்..இதுல எப்படிடி எனக்கு தெரியும்..ஏய் மாமா..உனக்காக நான் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?”மகேந்திரனை மனதிற்குள் வறுத்தெடுத்தபடி,”ஒருவாட்டி எங்க வீட்டுக்கு வந்திருக்கார்”மனமறிந்து பொய் சொல்ல,
“அப்படியா?”சந்தேகமாகவே கேட்டவள்,யோசனையோடு உணவருந்த அமர,இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆச்சியிடம்,
“ஏன் ஆச்சி..இவர் உங்க மகனா?”கேட்டாள்.
“ஐயோ,அவர் என் மகனெல்லாம் இல்ல.அவர் தான் இந்த வீட்டோட மகராசன்..ரொம்ப நல்லவரு.எட்டு வருஷத்துக்கு முந்தி தான்,சொர்க்கத்துக்கு போனார்.அவர் இல்லாம என்னவென்னவோ நடந்து போச்சு”நின்றபடியே பழையகால நிகழ்வுக்கு அவர் செல்ல,அப்படியா என்பது போல காயத்ரியும் பார்த்து வைக்க,மயூ அவளை சந்தேகமாக பார்த்துகொண்டே உண்டு முடித்தாள்.
அதற்கு பின் வலுக்காட்டயமாய்,மயூவை இழுத்துக்கொண்டு,வீட்டின் பின்பக்கமிருந்த தோட்டத்தை பார்க்க இழுத்துக்கொண்டு போனாள் காயத்ரி.
****
“எப்படிடா,எப்படிடா நம்ம கண்ணுல மண்ணை தூவிட்டு,மயூவை கூட்டிட்டுப் போனாங்க..”தன் நண்பர்களிடம் வினோதன் கோபமாய் கேட்க,
“அதுதான் எங்களுக்கும் புரியல மச்சி.நீ அவசரப்பட்டு தங்கச்சியை கடத்தப் போறேன்னு சொல்லியிருக்கக் கூடாதுடா.அதான் உசாருக்கிட்டானுவ! இப்போ எங்க போய் தேடறதுன்னும் தெரியல.கார்த்திகிட்ட விசாரிச்சாலும்,அவனுக்கும் தெரியலைன்னு சொல்றான்.திடீர்னு இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கலடா”நண்பனுக்கு உதவமுடியாமல் போன சங்கடத்துடன் பேச,
“ப்ச்ச்.போங்கடா..எத்தனை வருஷ லவ் தெரியுமா? இப்படி ஒரேநாள்ல கோட்டை விடறதுக்கா,இவ்வளவு நாளா பொறுமையா எல்லா விஷயத்தையும் பண்ணேன்.எனக்கு எப்படியாவது மயூ எங்கிருக்கான்னு தெரிஞ்சே ஆகணும்”குறுக்கும் நெடுக்கும் நடந்து யோசித்தவன்,
“அவனுங்க மயூவை தானே மறைச்சு வச்சிருக்கானுங்க.நாம அனுஷாவை தூக்கிட்டா?”புருவம் உயர்த்தி கேட்க,
“சூப்பர் ஐடியா மச்சி”நண்பர்கள் ஆர்ப்பரிக்க,
அதிலொருவன்,”எப்போ,எங்க,எப்படின்னு மட்டும் சொல்லு மச்சி.தூக்கிடுவோம்”என்றான்.
“என் மச்சினிச்சிக்கு கல்யாணம்டா..அதுக்கு முதல்நாள் வரைக்கும் மயூ வர்றாளான்னு பார்ப்போம்.அப்படி வரலைன்னா,காலையில,அவங்க வீட்டுல வச்சே தூக்கறோம்.இந்த விஷயத்தை கார்த்திக்கிட்ட எவனாவது உலர்னீங்க..உசுர்  உடம்புல நிற்காது..அதையும் சொல்லிட்டேன் பார்த்துக்கங்க”எனவும்,அவனுக்கு சாதகமாகவே அவர்களும் பேசி,அன்றைய இரவு,புது திட்டம் வகுத்ததை கொண்டாடும் விதமாய் பார்ட்டி நடத்தி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.
இங்கே மயூவின் வீட்டில் வசந்தி நிம்மதியேயில்லாமல் நடமாடிக் கொண்டிருந்தார்.கணவரையும் மகனையும் பார்வையாலையே எரித்துக் கொண்டிருக்க,சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தனர்.
“யாரைக்கேட்டு எம்பொண்ணை கூட்டிட்டுப் போனீங்க.அதுவும் மயக்க மருந்து ஜூஸ்ல கலந்து கொடுத்து கூட்டிட்டுப் போற அளவுக்கு அவ என்னதான் பண்ணி தொலைச்சா?”ஆற்றாமையுடன் பேச,
“முழிச்சிருந்தா எங்க போறோம்னு மயூக்கு தெரிஞ்சிடும்.இல்ல இடையிலையே யாரும் மயூவை பார்த்துட்டா,எங்க போறோம்னு தெரிஞ்சுடும்னு தான் இப்படி பண்ணிட்டோம்”என்ற மகேந்திரனுக்கும் குற்றவுணர்வு!!
பிரபாகரன் அமைதியாகவே இருக்க,”எம்பொண்ணு எங்க இருக்கான்னு இப்போவாவது சொல்லுங்க.நேத்துலருந்து மனசு கெடந்து அடிச்சிக்குது. எவனோ எம்பொண்ணை கடத்தப்போறதா சொன்னா,சொன்னவனை போட்டு மிதிச்சிட்டு வராம,அவனுக்கு பயந்து இப்படியொரு காரியம் செஞ்சு வச்சிருக்கீங்களே?”புலம்ப,பிரபாகரனுக்கு பொறுக்க முடியவில்லை.
“இப்போ அழறத நிறுத்தறியா? இல்ல அடி வேணுமா?”
“அடிங்க..அதைத்தவிர உங்களால என்னை என்ன பண்ண முடியும்”என்றுமில்லாதவாறு என்று எதிர்க்கவும் செய்தார்.
அதில் பிரபாகரன் கொஞ்சம் நிதானத்திற்கு வந்தவர்,”வசந்தி,எனக்கு ஒரு பொண்ணு மட்டுமில்ல.ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க..இப்போ மயூக்கு எதுவும் நடந்தா,சம்மந்தி வீட்டுக்காரங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்..அனுஷா வாழ்க்கையும் எனக்கு முக்கியம்டி.ரெண்டு பேரையும் கரையேத்தறதுக்குள்ள,என் நெஞ்சு வெடிக்காம இருக்கணும்”எனவும் வீட்டிலிருந்த அனைவரும் அரண்டு தான் போனார்கள்.
மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனுஷாவிற்கும் அழுகை வர,இத்தனைக்கும் காரணமான தங்கை மேல் இன்று அளவு மீறி கோபம் வர,கோபத்தை வெளிப்படுத்தும் வகை தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
மகேந்திரன் தான் சமாதானம் செய்தான்.
“அம்மா,நாங்க எதுவும் வேணும்னே பண்ணலை.எனக்கு எல்லாருமே நல்லாயிருக்கணும்.அது தான் வேணும்.அதுமட்டுமில்ல.எனக்கு மயூக்கு வந்த சம்மந்தத்தை மீறி எதுவும் செய்ய முடியல”எனவும் கண்ணீரை துடைத்துக்கொண்டு,
“என்னடா சொல்ற?”புரியாமல் கேட்டார்.
பிரபாகரன் அமைதியாய் இருக்க,மகேந்திரனே சொல்ல முடிவு செய்தான்.
“மயூக்கு சம்மந்தம் பேசி முடிச்சாச்சு.அனுஷா கல்யாணம் முடிஞ்சவுடனே மயூக்கும் கல்யாணம்.எல்லாம் பேசியாச்சு.ரொம்ப நல்ல குடும்பம்..நம்மளை விட கொஞ்சம் வசதியானவங்க வேற! அவங்களே விரும்பி வந்து கேட்கும் போது மறுக்கவும் முடியல..அப்பா சம்மதம் சொல்லிட்டார்.ரெண்டு நாளைக்கு முன்னாடி போன் பண்ணி,வினோதன் விஷயத்தைப்பற்றி அவங்களே விசாரிச்சாங்க”எனவும் நொந்து போனார்.
“வேண்டாம்னு சொல்லிட்டாங்களா?”
“அப்படியெல்லாம் சொல்லல.இனி பொண்ணு எங்க வீட்டுப் பொண்ணு.இனி நாங்க பார்த்துக்கறோம்.எங்க வீட்டுலையே இருக்கட்டும்னு சொல்லி,மயூவையும் அழைச்சுக்கிட்டாங்க”
“எல்லாம் தெரிஞ்சும் அவங்க சம்மதம் சொன்னாங்கன்னா,அவங்க பக்கம் என்ன குறையோ..அதை விசாரிச்சீங்களா?”கணவரை பார்த்துக் கொண்டே கேட்க,
“எல்லாம் விசாரிச்சுட்டோம்மா.எந்த பிரச்சனையுமில்ல”என்றவன்,மாப்பிள்ளையின் போட்டோ,அவர்கள் குடும்ப போட்டோ,விவரங்கள் எல்லாம் காட்ட,வசந்தி திருப்தி தான்..அனுஷாவும் மகிழ்ந்து தான் போனாள்..
‘அந்த பொறுக்கியுடன் திருமணம் நடக்காமல் இருந்தாலே போதும்’ என்ற எண்ணம் தான் அனைவருக்குமே!!
அம்மாவை திருப்திப்படுத்திய மகேந்திரன் அர்த்தத்தோடு அப்பாவை பார்க்க,அவரும் தன் பங்கிற்கு சில விஷயங்களை சொல்லி சமாதானம் செய்தார்.
மகேந்திரனுக்கு இன்னுமும் அந்த ஆளுமையான குரல் காதில் கேட்டுக்கொண்டேயிருப்பது போல பிரம்மை!
“எப்போ பொண்ணு கொடுக்க சம்மதம்னு சொல்லிட்டிங்களோ,அப்போவே இனி பொண்ணு எங்களுக்கு சொந்தம்! கல்யாணத்துக்கு முன்னாடி காதல் வர்றது எல்லாம் சகஜம் தான்.அதெல்லாம் எங்களுக்கு அவசியமில்ல.கல்யாணத்துக்குப் பின்னாடி,பொறுப்பா,நல்ல பொண்ணா இருக்கணும்.அவ்வளவு தான்..!! என் பையன்கிட்ட போட்டோவைக் காட்டி சம்மதம் வாங்கிட்டேன்.இனி நானோ,இல்லை நீங்களோ பின்வாங்கவே முடியாது”என்று சொல்ல,ஏனோ மறுக்கவே முடியவில்லை பிரபாகரனுக்கு!!
ஏதோவொரு உந்துதலில் சம்மதம் சொன்னவர்,”முகூர்த்த நாள் வர்ற வரைக்கும் எங்க பரம்பரை வீட்டுலையே பாதுகாப்பா இருக்கட்டும்”என்று அவரே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கூட்டிக்கொண்டும் சென்றுவிட்டார்.
தங்கள் ஊர் பஞ்சாயத்துக்காரரும் அவர்களைப்பற்றி பெருமையாகவே சொல்ல,வினோதனை பிடிக்கும் வரை அவர்கள் வீட்டிலையே இருக்கட்டும் என்று முழுமனதோடு தான் விட்டுவிட்டு வந்தனர்…
நாட்கள் அதன்போக்கில் நகர,வினோதனுக்கு வெறிகூடிக்கொண்டே சென்றது.அவன் காதலி எங்கிருக்கிறாள் என்று சிறுதுப்பு கூட கிடைக்கவில்லை..இறுதியாய் வேறு வழியே தெரியாமல் அனுஷாவை கடத்தியேவிட்டான்…
அனுஷாவின் மாப்பிள்ளை வீட்டுக்கு தான் முதல்தகவலே இவன் சொல்ல…பெரிதாய் ஆர்ப்பாட்டங்கள் இன்றி திருமணத்தை நிறுத்தியே விட்டனர்…
ஒருத்தியின் வாழ்வை காப்பாற்ற எண்ணி,இன்னொருத்தியின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டனர்..பாவம்…பெண்பிள்ளைகளை பெற்றவர்கள்!! யார் யாரோ உரிமை கொண்டாடுகிறார்கள்..எனக்கு..உனக்கு என்று பங்கிட்டுக் கொள்கிறார்கள்..சண்டையிட்டுக் கொள்கிறார்கள்…
இறுதியில் பெண்ணிற்கும் ஓர் மனமுண்டு,அதில் ஆயிரம் ஆசையுண்டு என்பதை மறந்தேவிடுகின்றனர்.. என்று மாறும் இந்த நிலைமை!!!

Advertisement