அப்பாவிடம் உறுதியாக சொன்ன பிறகு,வேறெங்கும் செல்லாமல், வினோதனின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் காவல் நிலையத்திற்கு வந்தான் மகேந்திரன்.
 
இன்ஸ்பெக்டர் மாறன் இவனது நண்பன் தான் என்பதால்,அவனது கேபினுக்குள் நேராய் சென்றவன்,”வேலையில பிசியா மாறா”எனவும்,
 
“நீ வந்துட்டல்ல..உனக்காக வேலையை ஒதுக்கி வைச்சுடறேன்.என்னன்னு சொல்லு..இங்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் வரமாட்டியே”கேட்கவும்,
 
“ஒரு காரியம் ஆகணும்டா மாறா..அரிசி கடத்தல் கேஸ்ல ரொம்ப நாளா வினோதனை பிடிக்காம வைச்சிருக்கியே.அவனை அந்த கேஸ்ல பிடிச்சு உள்ள போடணும்..உன்னால முடியும் தானே?”எனவும் தலையை தட்டியபடி யோசித்தான் மாறன்.
 
“என்னடா பையன் ரொம்ப துள்ளுறானா? ஏன் கேட்கிறேன்னா,என்ன இருந்தாலும் அவன் நம்ம ஊர்க்காரன்.இப்போ இந்த கேஸ்ல உள்ள போனா,வெளில வர நாளாகும்.அதுமட்டுமில்ல,இனி எந்த கேஸ்-க்கு ஆள் கிடைக்கலைன்னாலும் இந்த மாதிரி ஆளுங்களை பிடிச்சு,பொய்யா சாட்சி ரெடி பண்ணி உள்ள வைப்பாங்க.நம்மளால அவனோட வாழ்க்கை கெட்டுப்போயிடக் கூடாது பாரு! வாழ வேண்டிய வயசுடா!! அதனால தான் அவன் அரிசி கடத்தற வேலையை செய்யறான்னு தெரிஞ்சும்,வெறும் வார்ன் மட்டும் பண்ணி விட்டுட்டு இருக்கேன்..யோசிடா மகேந்திரா..”
 
“அவனோட வாழ்க்கையை பார்த்தா,என்னோட குடும்பமே நாசமா போயிடும் போலருக்குடா..அவன் என் தங்கச்சி பேரையே நாறடிச்சிட்டு இருக்கான்..இவனை போய் எப்படி நான் மயூக்கு கட்டி வைப்பேன்..அதுக்கு நானே அவளை கிணத்துல பிடிச்சு தள்ளிவிட்டுடுவேன்..”ஆத்திரமாய் பேச..
 
“நான் வேணும்னா வார்ன் பண்றேன்டா..இனி உன் தங்கச்சி பின்னால சுத்த முடியாத அளவுக்கு பயமுறுத்தி வைக்கிறேன்..போதுமா?”
 
“ஏன்டா..நான் என்ன பொய் கேஸ் போட சொல்லியா உன்னை கேட்கிறேன்..நீ வர்ற நேரமெல்லாம் எவனோ ஒருத்தன் முன்கூட்டியே அவனுக்கு தகவல் சொல்றதினால தலைமறவாகிடறான்.அவனை பிடிச்சு கொடுக்கிறேன்னு தான சொல்றேன்..ஆனால்  நீ என்னவோ வார்ன் கொடுக்கிறேன்னு சொல்ற..அப்போ நீ அவன்கிட்ட காசு வாங்கிட்டியாடா? ‘நா வர்ற மாதிரி வர்றேன்..நீ ஓடி ஒளிஞ்சுக்கன்னு தகவல் கொடுத்துட்டு தான் ஊருக்குள்ள வரியோ? “நண்பனையே சந்தேகப்பட்டு கேட்க,
 
மாறனுக்கு கோபம் வந்தாலும்,”இங்க பாருடா நல்லவனே! காசுக்காக வேலை பார்க்கறவனா இருந்தா,இந்த ஊருக்குள்ள பாதி பேர் ஜெயிலுக்குள்ள தான் இருக்கணும்.ஏதோ ஒண்ணுக்குள்ள ஒண்ணு..நம்ம ஆளுங்கள தூக்கி உள்ள வைச்சா என்ன கிடைக்கப்போகுதுன்னு தான் அமைதியா இருக்கேன்..என்னைப் பார்த்து எப்படிடா உன்னால இப்படியெல்லாம் பேச முடியுது”எனும் போதே,கதவை தட்டாமல் நான்கு பேர் உள்ளே வந்தனர்..உடன் ஒரு பெண்ணும் வந்திருந்தாள்.
 
‘சொந்தக்காரவங்க இருக்க ஊர்ல ட்ரான்ஸ்பர் வாங்கினது தப்பா போச்சு..எப்படி காட்டான் மாதிரி வர்றானுங்க பாரு..எல்லாம் என் தலைஎழுத்து’நொந்தவன்,அது வெளியில் தெரியாதவாறே..
 
“வாங்க சித்தப்பு..என்ன விசேஷம்”என்று கேட்க…
 
மகேந்திரனை ஒரு பார்வை பார்த்தவர் மாறனிடம்,”ஒரு கம்பிளைன்ட் கொடுக்கணும்.நம்மூர்ல இளவட்டப்பயலுக தொல்லை தாங்க முடியலை..இன்னைக்கு எம்மவ கையை பிடிச்சு இழுத்துட்டானுங்க”எனவும் மாறனும் கோபமாய்,
 
“யார் சித்தப்பு,எந்தத்தங்கச்சி மேலையே கை வைச்சவன்”என்று சீற்றமாய் கேட்க..
 
“எல்லாம் அந்த வினோதனும்,அவன் கூட்டாளிகளும் தான்”எனவும்,மாறனின் கோபம் அடங்கிப் போயிற்று..
 
வேண்டுமென்றே சொல்கிறார்களோ என்று இவனுக்கு சந்தேகமாக இருந்தது..ஏனென்றால் அவன் ஊரில் பாதி பேருடன் வம்பிழுத்து வைத்திருக்க,அதிலும் அவனின் ‘வருத்தப்படாத வாலிப சிறுத்தைகள் சங்கம்’ செய்யும் அட்டூழியம் ஊர் பெரியவர்களை கடுப்பாக்கிக் கொண்டிருந்தது..
 
அதனால் பொய் கேஸ் கொடுக்க வந்திருக்கிறார்களோ எனும் சந்தேகத்தில்,”உட்காருங்க சித்தப்பு..என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க”எனவும் அதுவரை வாயை திறக்காமல் இருந்த பெண்,
 
“நா சொல்றேண்ணே..நம்ம ஊருக்கு பஸ் சரியான நேரத்தில வர்றதில்ல.வந்தாலும் கூட்டமா இருக்குன்னு நிற்காம போயிடறாங்களா.அதனால ஸ்கூல் பசங்களும்..நாங்களும் நம்ம ஊருக்கு வந்த பஸ்சை நிறுத்தி மறியல் பண்ணிட்டு இருந்தோம்..இடையில வந்த இந்த காவலிப்பயளுவ,எங்க கூட்டத்துக்குள்ள நுழைஞ்சு,பொண்ணுங்க இருக்க பக்கமா வந்து,எங்களை சீண்ட ஆரம்பிச்சுட்டானுங்கண்ணே..அதான் கம்பிளைன்ட் கொடுக்க வந்திருக்கோம்”எனவும் வேறு வழியேயில்லாமல்..
 
“நா அவனை பார்த்துக்கறேன்மா..நீ கவலைப்படாத.ஆனா இனிமேல் இந்த மாதிரி மறியல் பண்றேன்னு முன்ன போய் நிற்காத! வயசுப்பொண்ணு..தேவையில்லாத பிரச்சனையே வரும்..இப்போ நீ கொடுத்த கம்பிளைண்டே நாளைக்கு உனக்கு எதிரா திரும்பும்..நாளைக்கு உன்ன கட்டிக்க போறவன் உன்ன புரிஞ்சுக்குவான்னு தெரியாதேம்மா?”என்று அவன் அறிவுரை முடிக்கும் முன்,குறுக்கிட்ட சித்தப்பு..
 
“அதெல்லாம் எங்க மாப்பிள்ளை புரிஞ்சுக்குவார்..”என்று குறுக்கிட,
 
“அப்பா..நா கம்பிளைன்ட் எழுதிக் கொடுத்திட்டு கையோட கூட்டிட்டு வர்றேன்.தயவு செஞ்சு வெளில போய் நில்லுங்க”எனவும் மகளதிகாரத்தை மீற முடியாமல்,தன் சகாக்களுடன் வெளியே போய் நின்றுகொண்டார்.
 
மாறன் மீண்டும் அறிவுரையை ஆரம்பிக்க,”அண்ணே..நீங்க ஒண்ணும் ரொம்ப கவலைப்பட வேணாம்.அந்த பொறுக்கிகளால எங்களால ஒழுங்கா வீதியில நடக்கக் கூட முடியல..காலைல பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைக போறதுக்கு முன்னாடியே வந்து நின்னுட்டு அளப்பறைய கூட்ட ஆரம்பிச்சுடறானுங்க..இதுக்கெல்லாம் ஒரு தீர்வா,அவனுங்களே இன்னைக்கு எங்ககிட்ட மாட்டிக்கிட்டானுங்க.நான் கம்பிளைன்ட் கொடுக்கறேன்.வாங்கிக்கங்க..”ஏற்கனவே எழுதி வைத்ததை எடுத்துக் கொடுத்தவள்,
 
“என்புருஷன் ஒண்ணும் சந்தேகப்புத்திக்காரர் இல்ல..நல்லவருதேன்”எனவும்,
 
‘எப்போ இவளுக்கு கல்யாணம் ஆச்சு’ தலையை சொரியும் நினைப்பை கைவிட்டவன்,அவளது பார்வை அங்கே ஜன்னல் பக்கம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மகேந்திரனிடம் இருப்பதை உணர்ந்தான்..
 
“சரிம்மா..நீ கிளம்பு”என்ற போதும் எழுந்துகொள்ளாமல்,மகேந்திரனையே அவள் பார்த்துக் கொண்டிருக்க,
 
“டேய்,நல்லவனே..உன்னோட மாமா மக எதுவோ சொல்ல நினைக்குது போல..திரும்பி தான் பாரேன்..நா வேணா வெளில போய் நிற்கறேன்..நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு வர்றிங்களா”நக்கலாக கேட்கிறான் என்பதை புரியாத காயத்ரி..சந்தோஷமாய் மாறனை பார்க்க கடுப்பாகிவிட்டான்.
 
இதற்கு மேலும் வேடிக்கை பார்ப்பது போல நடிக்க முடியாது என்பதையுணர்ந்தவன்,ருத்ர மூர்த்தியாய் திரும்பி நின்று காயத்ரியை முறைத்தான்.
 
“ஏன்டி..உனக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லையா..ஏற்கனவே அவன்கூட எனக்கிருக்க பிரச்சனை பத்தாதுன்னு நீ புதுசா ஏன்டி இழுத்து விடற”கோபமாய் கேட்க,
 
“எல்லாம் உங்களுக்கு உதவத்தான் மாமா.. எனக்கும் எம்புருஷன் வீட்டு ஆளுங்க மேல அக்கறை இருக்காதா.. அவனால தான தினமும் வீட்டுல சண்டை..வல்லிக்கு வேற,மாப்பிள்ளை பார்க்கறதா கேள்விப்பட்டேன்..அதுக்கு இடைஞ்சலா வினோதன் இருக்கக் கூடாதுன்னு சாமியை கும்பிட்டுக்கிட்டே இருந்தேன்..அவரா ஒரு வழியை காமிச்சுக் கொடுக்கவும்,வாய்ப்பை விடக் கூடாதுன்னு பிடிச்சுக்கிட்டேன்..தப்பா மாமா”இறுதியில் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க…மாறன் கன்னத்தில் கை வைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தான்…
 
மகேந்திரனோ கொஞ்சம் கூட இளகாமல்,”தப்பு தான்.நீ கேசை வாபஸ் வாங்கு.நா அடியாள் யாரையாவது செட் பண்ணி அவனை கவனிச்சுக்கறேன்”என்றான்..தான் போலிஸ் ஸ்டேஷனில் இருக்கிறோம் என்று தெரிந்தும்…!!
 
“முடியாது மாமா.நா பின்வாங்கறதா இல்ல..நான் செய்யறதில எந்த தப்பும் இல்லை..அப்படி அது தப்பா இருந்தாலும்..அதனால யாருக்காவது நல்லது நடக்கும்னா..நிச்சயம் நான் பின்வாங்க மாட்டேன்..முடிஞ்சா சீக்கிரம் வல்லிக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டு,நமக்கு முகூர்த்தம் குறிச்சு என் கழுத்துல தாலிய கட்டுங்க..”
 
“இல்லைன்னா?”
 
“இல்லைன்னா நா உங்க கழுத்தில மூணு முடிச்சு போட்டுடுவேன்”என்றவள்,அவன் அடிக்க கை ஓங்கி வரும் முன்னே சிரித்துக்கொண்டே ஓடிவிட்டாள்..
 
தலையைப் பிடித்துக்கொண்டு அமர..”டேய் மகேந்திரா..நிஜமாவே என் தங்கச்சி பேசினதை கேட்டு நீ கோபப்பட்டியா..எனக்கு நீ நடிக்கற மாதிரியே தோணுச்சுடா..”என்றவனை அடிக்கப் போனவன்,அவனது காக்கி உடைக்கு மரியாதை கொடுத்து பின்வாங்கினான்.
 
“ரொம்பத்தான் நடிக்காத என்ன! என் தங்கச்சி எவ்வளவு தைரியமா இருக்கு பார்..கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னோட குடும்பத்துக்காக எவ்வளவு யோசிக்கிறா பாரு?”
 
“ம்ச்ச்..நான் ஒண்ணும் அவளை கட்டிக்கப் போறதில்ல.அவளாதான் அப்படிப்பட்ட நினைப்போட சுத்திக்கிட்டு இருக்கா..நீ எங்கப்பாகிட்ட எதுவும் உளறிவிட்டுடாத”என்றவனை மேலும் கீழும் ஆராய்ச்சியாய் பார்த்தவன்,
 
“ஏன்டா..ஒரு பொண்ணு,ஒரு பையன்கிட்ட உரிமையா பேசினா,அதோட அர்த்தம் அந்த பொண்ணுக்கு,அந்த பையன் மேல அளவுகடந்த நம்பிக்கைன்னு அர்த்தம்.அதைவிட என் தங்கச்சிக்கு,அந்த நம்பிக்கையை நீ தான் கொடுத்திருக்கன்னு   அர்த்தம்.என் தங்கச்சி,ஆம்பளைககிட்ட எம்புட்டு தெனாவட்டா பேசும்னு எனக்கு தெரியாதா? உங்கிட்ட எப்படி பேசுதுன்னு பார்த்தாலே புரியுதுடா..போலிஸ்க்காரன்கிட்டவே ரீல் விடாதடா”என்று சொன்னவனை மகேந்திரன் முறைக்க,அந்த நேரம் பார்த்து காயத்ரி போன் செய்தாள்.
 
“அதுக்குள்ள என்னடி?”எடுத்தவுடன் கத்தவும்,
 
“இந்தா பாரு மாமா..அடுத்தவக கூட இருக்கும் போது,இப்படி ‘டி’ போட்டு பேசற!உங்கப்பாரு மாதிரி,பொண்டாட்டியையும் பொண்ணுங்களையும் வித்தியாசமில்லாம ‘டி’ போட்டு கூப்பிடறார்… உனக்கும் அந்த பழக்கம் வருதோ? இனிமே அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டுடு..இல்ல எம்மவ கையில உருட்டுக்கட்டை கொடுத்து அடி பின்னிடுவேன்…இத சொல்லதான் கூப்பிட்டேன்”படபட பட்டாசாக,இவன் பேசவே வாய்ப்புக் கொடுக்காமல் பேசிவிட்டு வைத்துவிட…அவளின் குழந்தை என்ற பேச்சில் சொக்கித்தான் போனான்..
 
கண்களில் காதல் மயக்கம் வெளிப்பட்டுவிடாமல் இருக்க அரும்பாடு படவேண்டியதாகிவிட்டது..
 
நொடிப்பொழுதில் சமாளித்தவன்,”நீ கேஸ் எல்லாம் எடுக்க வேண்டாம்டா நண்பா.அவனை எப்படி பார்க்கணுமோ,அப்படி பார்த்துக்கறேன்”என்று சொல்ல..
 
“ஏன்,என் தங்கச்சி என் மண்டையை உடைக்கவா?”என்றவன்,
 
“பொண்ணுங்களுக்கு பிரச்சனை கொடுத்த பின்னாடியும்,அவனை எப்படிடா,சொந்தக்காரன்னு மன்னிச்சு விடறது.அவனையும்,அவனோட கூட்டாளிகளையும் சேர்ந்து அள்ளிப்போட்டு வர்றேன்..நீ கிளம்பு”என்றவன்,தனது ஜீப்பில் கிளம்ப…அதற்குள் கான்ஸ்டபில் மூலமாய்,வினோதன்-க்கு விஷயம் கசிய,அவசரமாய் தன்னுடைய பைக்கில் ஏறி குறுக்கு சந்தில் புகுந்து,வெளியூர் போய்விட்டான்.
 
பிறகென்ன! வந்தவர்கள் அவனது கூட்டாளிகளின் ஆறில் மூன்று பேரை மட்டும் கையோடு அள்ளிப்போட்டுக்கொண்டு போய்விட்டனர்.
 
வினோதனின் அம்மா,மாறன் சென்றவுடன் நேராய் சென்றது காயத்ரியின் வீட்டுக்குத்தான்..
 
அங்கு சென்று அவர் பேசிய பேச்சுக்கள் காதை கூச வைக்க,வீட்டிற்குள்ளிருந்து காயத்ரியின் அப்பா பேச வர,
 
“பொம்பளை மாதிரி நீ ஏண்டா,பொம்பளை கூட சண்டைக்கு வர்ற”என்று அவரை அசிங்கப்படுத்த,காயத்ரியின் அம்மா,பொங்கியெழுந்து,கெட்ட வார்த்தையிட்டு சண்டையிட…இறுதியில் வினோதனின் அம்மா மண்ணை அள்ளி சபதமிட்டார்..
 
“எம்புள்ளைக்கு அந்த மயூரா கழுதையையும் கட்டி வைச்சு,இவளையும் ரெண்டாந்தாரமா கட்டிட்டி போய் ரெண்டு பேரையும் ஆட்டி வைக்கல.நான் மாதவி இல்லடி?”என..அத்தனை பேரும் அசூசையாக தான் பார்த்தனர்..
 
உறவுமுறை இல்லையென்றாலும்,ரத்த சொந்தம் இல்லையென்றாலும்,காயத்ரி தங்கை முறைதான் வேண்டும்..இவருக்கு மகள் தானே..!!அப்படியிருக்க கோபத்தில் வாய்க்கு வந்ததை பேசினால்,யாருக்கு தான் கொதிக்காது..
 
காயத்ரியும் பொறுமையை கடைபிடிக்காமல் வெளியே வந்தவள்,”ஏ பெரியம்மா..அசிங்கமா இல்ல..உனக்கு இப்படி பேச…!! உம்பேச்சக்கேட்டு,உம்மவன் மட்டும் அப்படியேதும் காரியம் பண்ணட்டும்..உன்னையும் அவனையும் கல்லைப்போட்டு கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்”என்றும் வாயைவிட..அந்த அம்மாள் இன்னும் பேசிப்பேசி,ஒருக்கட்டத்தில் சிலரால் வீட்டுக்கு இழுத்து செல்லப்பட்டார்.
 
இவர்களின் வினோதனுக்கு அவனின் நண்பர்கள் மூலமாய் தெரிவிக்கப்பட…”சீக்கிரம் மயூவை கடத்தனும்டா..கூப்பிட்டா வந்துடுவா..ஆனா அவளை சமாளிக்க நேரமில்ல..வர்ற புதன்கிழமை மருதமலை கோவில்ல கல்யாணத்தை முடிச்சிடப் போறேன்”என்று சொல்ல…எப்படியும் இந்த விஷயம்,தன் நண்பர்கள் குழுவில் இருக்கும்..மயூராவின் சித்தப்பா மகனின் மூலமாய்,மயூராவின் வீட்டுக்கு விஷயம் கசிந்துவிடும் என்று தெரிந்தே சொன்னான்.
 
அவனின் மூலமாய் தான் மகேந்திரனுக்கு அனைத்து விஷயங்களும் தெரிய வரும்..தங்கைக்காக,தானும் இந்த கேடிகளின் கூட்டத்தில் நட்பாய் இருந்தான்….கார்த்திக்!!
 
சிலநேரம் நாம் புத்திசாலியாய்,எதிர்கள் கூட்டத்தில் ஒருவரை துப்பறியும் சாமுவாய் அனுப்பும் போது,கிட்டும் தகவல்கள் எல்லாம் உண்மையாக இருந்துவிடுவதில்லை..ஜித்தனுக்கு ஜித்தனாய்,துப்பறிபவனை பகடைக்காயாய் மாற்றி,நினைத்ததை சாதித்துக்கொள்ளும் ஆட்களும் உண்டு..வினோதனும் அப்படிப்பட்டவனே!!!
 
** காலை பதினொரு மணி..
 
தலை விண்விண்ணென்று வலிக்க,ஜன்னலிலிருந்து வரும் சூரியக்கதிர்வீச்சை தாங்க முடியாமல் எழுந்து அமர்ந்த மயூரா,கண்ணை திரும்ப திரும்ப கசக்கி பார்த்துக் கொண்டிருந்தாள்..இது அவளது வீடல்லவே!!
 
விருட்டென்று படுக்கையிலிருந்து எழுந்தவள்,ஜன்னல் பக்கம் போய் பார்க்க…வாயிலில் காவலுக்கு ஆட்கள் நின்றிருந்தனர்…பால்கனி கதவு திறந்திருந்ததால்..அந்தப்பக்கமும் சென்று பார்க்க,அங்கும் ஆட்கள்…!!
 
பால்கனியிலிருந்து பார்க்கும் போதே,தானிருக்கும் வீடு கொஞ்சம் பெரிய வீடென அவளுக்கு புரிய…சட்டென்று,’வினோதன் தான்,சொன்னது போல என்னை கடத்திட்டு வந்துட்டானா?”திடுக்கிட்டுப் போனாள்..
 
மூளை வேலை நிறுத்தம் செய்ததுபோல அப்படியே அமர்ந்துவிட்டாள்..கண்கள் தானாக கசிய ஆரம்பிக்க,எப்படி இங்கிருந்து செல்வதென்று புரியாமல் தவித்துப் போனாள்.
 
எல்லாவற்றையும் விட  தன் குடும்பத்தை நினைத்து தான் அவளுக்கு பயமாய் இருந்தது.