Advertisement

2
 
திருமணத்திற்கு செல்வதற்காக மகள்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் வசந்தி.
 
“அதைப்போடு..இதைப்போடு..அதைப்போடாதே..இதைப் போடாதே”
அதட்டல் குரல் வந்து கொண்டேயிருந்தது.
 
ஒருக்கட்டத்தில் அனுஷாவிற்கு அம்மாவின் அதட்டல் எரிச்சலைக் கொடுக்க,”அம்மா,உன் பொண்ணு ஊருக்கே மேக்அப் போட்டுவிடுவா..அதை கொஞ்சமாவது நம்பு..! ஏற்கனவே மாமி பொண்ணுக்கு மேக்அப் போட்டு,அங்கிருந்து கிளம்பவே லேட் ஆகிடுச்சு.வீட்டுக்கு வந்தா நீ கிளம்பவிடாம தொந்தரவு பண்ணிட்டு இருக்க! நீ முதல்ல வெளில போ”எரிச்சலில் கத்த,மயூரா கையில் டீயோடு வந்து சேர்ந்தாள்..
 
அனுஷாவிற்கு கொடுத்துவிட்டு,அவளது தலையை இவள் வாரிவிட ஆரம்பிக்க,”மயூவையும் கூட கூட்டிட்டு போயிருந்தா,எனக்கு பாதி வேலை மிச்சமாயிருக்கும்..நீதான் ஏதோதோ காரணம் சொல்லி கூட்டிப்போக விடலை.உன்னால தான்மா இன்னைக்கு எனக்கு இவ்வளவு டென்ஷன்”டீயைக் குடித்தபடியே இன்னமும் வெளியில் செல்லாத தாயை கடித்து குதறிக் கொண்டிருந்தாள்.
 
இந்த எரிச்சலுக்கு காரணமும் உண்டு..மணப்பெண் இவர்களது உறவு தான்.அதனால் தான் மண்டபத்தில் இரவு தங்கியிருந்து,மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யவே வீட்டினர் சம்மதித்தனர்..அங்கே போனால்,பெண்ணிற்கு தோழிகள் என்று பலரும் ஓசியில் மேக்அப் போட்டுக்கொள்ள முன்வர,மாமியும்,”போட்டுத்தான் விடேன் அனும்மா”கெஞ்சலாக சொல்லவும் வேறு வழியேயில்லாததால்,அலங்காரம் செய்துவிட்டு வந்திருந்தாள்..
 
அதுமட்டுமல்லாமல் இன்று ப்ளாகில் லைவ் போடுவதாக சொல்லியிருந்தாள்..அதற்காகவே தம்பியையும் இழுத்துக்கொண்டு சென்றாள்…ஆனால் எதுவுமே செய்ய முடியாமல் போனதால் எரிச்சல்பட்டுக் கொண்டிருக்கிறாள்.
 
டீயை குடிக்கவுமே சற்று எரிச்சல் குறைந்தது போலிருக்க…அழகாய் பின்னியிருந்த,முடியை எடுத்துப் பார்த்தவள்,”இந்த ஹேர்ஸ்டைல் எனக்கு ரொம்பவே நல்லா இருக்கு மயூ..தேங்க்ஸ்டி”என்றவள் இப்போது தங்கைக்கு மேக்கப் போட்டு,செல்ஃபி எடுத்து அலப்பறை செய்து…. இருவரும் கிளம்ப ஒருமணி நேரத்திற்கும் மேலானது..
 
”என்னோட ரெண்டு பொண்ணுங்களும் அழகு தான்..இன்னைக்கு வந்தவுடனே சுத்திப் போடணும்”கையில் திருஷ்டி கழித்தார்.
 
“போலாமா”கேட்டபடியே உள்ளே வந்த பிரபாகரன் மகள்களின் அழகில் பெருமைகொண்டாலும்,பெண்ணைப் பெற்ற தகப்பனாய் பயமும் கொண்டார்..தினசரி செய்தித்தாளில் எத்தனை சேதிகள் வருகிறது..அதிலுள்ள பயம் தான் இவருக்கும்..நான் தனியாக சொல்ல வேண்டியதில்லை தானே!!
 
‘அந்த ரவ்டி பைய வேற வருவானே’நினைத்த மாத்திரத்தில்,கோபத்தில் பல்லைக் கடித்தவர்,
 
“எவ்வளவு நேரமா கிளம்புவீங்க..நேரமா போனா தான்,சீக்கிரம் வீடு திரும்ப முடியும்”அதட்டவும் அவசரமாய் கைப்பையை எடுத்துக்கொண்டு மயூவை கையோடு இழுத்துக்கொண்டு தான் போனார் வசந்தி..
 
நேற்றெல்லாம் திருமணத்திற்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்தவளை அதட்டி உருட்டி சம்மதிக்க வைக்கவே வசந்திக்கு பெரும்பாடாய் போயிற்று.
 
“நீ வீட்டுல தனியா இருக்கேன்னு தெரிஞ்சா,அந்த குரங்குப்பைய வந்துருவான்..உன்னை நம்பி தனியா விட்டுட்டுப்போய்,என்னால அங்க நிம்மதியா இருக்கவே முடியாது”என்றதும்..
 
“வரவே மாட்டேன்”என்று அடம்பிடித்தாள்.
 
மகேந்திரன் தான்,”நீ வந்தே ஆகணும்”ஒரு வார்த்தையில் அவளது சம்மதத்தை பெற்றுவிட,இதோ இப்போது மண்டபத்திற்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்.
 
இவர்கள் செல்லும் முன்னே திருமணம் முடிந்திருக்க,வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது..
 
இங்கே திருமணத்தில்,தன் மகனுக்கும் நல்ல பெண் கிடைத்துவிட மாட்டாளா என்று தேடிக்கொண்டிருக்கும் சிலரின் கண்ணில் இருபெண்களும் விழ,மூத்த பெண்ணிற்கு அடுத்த மாதம் திருமணம் என்று உறுதி செய்தவர்களின் கண்கள் மயூராவின் மீதும்,அவளைப்பெற்றவர்களின் மீதும் இருக்கத்தான் செய்தது…
 
இங்கே எத்தனையோ பெண்களிருக்க,தன் பெண்ணையே சிலர் ஆர்வமாய் பார்த்ததில் வசந்திக்கு கர்வம் வந்த அதே சமயத்தில்…எவரும் தன் பெண்ணைப்பற்றி தவறாக அவர்களிடம் சொல்லிவிடக் கூடாதேயென்று பதைபதைப்புடன் சுற்றிக் கொண்டிருக்க…இவரின் குடும்பத்தை வெறியேற்றவெனவே வந்து சேர்ந்தான்  வினோதன்.
 
முதலில் பார்த்தது வசந்தி தான்..
 
இன்று அவன் பட்டுவேஷ்டி சிவப்பு சட்டையில் வந்திருந்தான்…தன் பெண்ணின் சேலைக்கு மேட்சாக அவன் சட்டை அணிந்து வந்திருக்க,அவருக்கு பற்றிக்கொண்டு வந்தது…
 
காலைவரை இந்த சேலைதான் கட்டப்போகிறோம் என்று மயூராவிற்கு தெரியவே தெரியாது..இவனுக்கு அழைத்து சொல்ல அவளிடம் போனும் இல்லை..இங்கிருக்கும் இவனைப்போன்ற பொறுக்கி பையன்கள் தான் சொல்லியிருக்க வேண்டுமென்று புரிந்தாலும்,எரிச்சல் மிகுந்ததில் மகளை ஓட்டிக்கொண்டே திரிந்தார்..
 
வினோதனைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் கருமை நிறம்..சாராசரி உயரம்…பெரிய மீசை..குறுந்தாடி..கழுத்தில் மைனர் செயின்..கையில் ப்ரேஸ்லெட் என்று பார்ப்பதற்கு குட்டி தாதா போலவேயிருந்தான்..
 
அவனது கண்கள் மயூராவை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தன…
 
தனக்காகவே மயூவை பிரம்மன் படைத்திருக்கிறான் என்ற எண்ணம் அவனிற்கு…!!!கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கும் மேலாய் மயூராவை சுற்றி சுற்றி வருகின்றான்.
 
தன்னுடைய கெட்ட பழக்கவழக்கங்களை நண்பர்கள் எவரேனும்சுட்டிக்காட்டினால்”மயூ எனக்கு சொந்தமாகற அன்னைக்கு எல்லாத்தையும் விட்டுடுவேன்டா..ஒரே ஒருநாள்..ஒரே ஒருநாள் அவளோட வாழ்ந்தா சொர்க்கத்தில வாழ்ந்த சந்தோஷத்தில,அப்படியே செத்துப் போயிடுவேண்டா”-கள்ளுண்டவனைப்போல கண்கள் கிறங்கிப்போய் சொல்வான்..
 
“அவ அழகென்ன…!என்னைப் பார்க்கற பார்வையென்ன..!!அப்படியே அள்ளி தூக்கிட்டுப்போயிடணும் போல இருக்கும்டா…!!!என்னை கட்டி இழுக்கற அந்த கண்ணுலயும்..உதட்டுலையும்  முத்தம் வைச்சா இந்த கள்ளே தேவையில்ல…”என்பவனின் மனக்கண்ணில் என்னவென்னவோ காட்சிகள் ஊர்வலம் போகும்..சென்சார் செய்யப்படுகிறது இங்கே…!!
 
கல்யாண மண்டபத்தில் மயூவை பார்த்த பின்பும்,சென்சார் செய்யப்பட காட்சிகள் அவன் மண்டையில் ஓடிக்கொண்டிருக்க…யாரையும் கண்டுகொள்ளாது அவளை பார்வையாலையே பின் தொடர்ந்தான்..
 
‘சிவப்பு கலர் சேல..ஹப்பா..ஆளை அப்படியே இழுக்குது….சேல கட்டினா கூட,ஒரு இன்ச் இடுப்பு கூட தெரியாம கட்டறா…அதுலையும் இழுத்து இழுத்து விட்டுக்கறா..கல்யாணம் ஆகட்டும் உனக்கு இருக்குடி’மனதிற்குள்ளையே அவன் பேசிக்கொண்டிருக்க..பெண்ணிற்கே ஏற்படும் இயல்பான உள்ளுணர்வில் திரும்பி பார்க்க,நின்றிருந்தான் வினோதன்..
 
சட்டென்று திரும்பிக்கொண்டாள்.
 
அவனைப் பார்ப்பதை யாரும் பார்த்துவிட்டார்களோ என்று பயத்தில் கைகள் வேர்க்க அண்ணன் இருக்கும் இடத்தைப் பார்க்க..அவனது பார்வையில் அவன் மட்டுமல்ல..குடும்பத்தில் இருக்கும் அனைவருமே பார்த்துவிட்டது புரிந்தது…
 
இப்போது அவளுக்கு பயம் வரவில்லை..தன்னையே பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால்,எதையும் முகத்தில் காண்பிக்காமல்   
ஒருவித அழுத்தத்தோடு நிமிர்வோடு வரவேற்பை பார்க்க ஆரம்பித்தாள்..
 
மகேந்திரனுக்கு வினோதனை அடித்து நொறுக்கிவிடும் வேகம்…தன்னைப் பார்த்தாலே ஒதுங்கி போய்விடுபவன், இன்று இத்தனை தைரியத்தோடு தன் தங்கையை பார்த்துக் கொண்டிருப்பதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை..
 
கைமுஷ்டி இறுக அவனை அடித்து துவைத்துவிடும் வேகத்தில் நகரப்போனவனை இறுகப்பிடித்தார் பிரபாகரன்..
 
“நல்ல சம்மந்தம் ஒண்ணு கூடி வர்ற மாதிரி இருக்கு..பிரச்சனை பண்ணி எதையும் இப்போ கெடுத்ததுட வேண்டாம்”என்று அமைதிப்படுத்த..
 
அவர்களை பார்த்துவிட்டு,அவர்களின் அருகில் தன் நண்பனுடன் வினோதன், இன்று அதீத தைரியத்தில்..”யார் சம்மதிச்சாலும், சம்மதிக்கலைன்னாலும் என் கல்யாணம்,நா ஆசைப்பட்டவளோடையே நடக்கும்டா..எவனாலயும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது”சத்தமாக தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்..
 
பிரபாகரன் வெகுசிரமப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டவர்…உணவை முடித்துக்கொண்டு அவசரமாய் குடும்பத்தோடு கிளம்பி வந்துவிட்டார்…
 
வினோதன் சொன்னதை அவனது நண்பர்கள் ஒன்றுக்கு நான்காய் திரித்து அந்த தெருவில் பரப்பிவிடுவார்கள் என்று இவர்களுக்கு நன்றாகவே தெரியும்…
 
எப்படி பிரச்சனையே இல்லாமல் மயூராவின் திருமணத்தை முடிப்பதென்று தெரியாமல் விழி பிதுங்கிப் போனார்…
 
பிரபாகரன் ஒன்றும் காதலுக்கு எதிரியல்ல..அனுஷாவின் திருமண  விஷயத்தில் அவளது முழு சம்மதத்துடன் தான் எல்லாவற்றையும் செய்தார்..
 
மகேந்திரன் மூலம்,”யார் மேலையாவது விருப்பமா?”கேட்டு தெரிந்தும் கொண்டார்..
 
ஆனால் மயூவின் விஷயம் அப்படியல்ல…!!வினோதன் நல்ல வேலையில் பொறுப்புள்ள  நல்ல ஆண்மகனாய் இருந்திருந்தால்,பிரபாகரனுக்கு பிரச்சனையேயில்லை…கட்டிக்கொடுத்திருப்பார்..வினோதன் ஒன்றும் வேற்று ஆள் கிடையாது..உறவுமுறைக்குள் சுற்றி சுற்றி வந்தால்,அவனும் மயூராவிற்கு முறைப்பையனே!!
 
அந்த தைரியத்தில் தானே அவனும் ஆடுகிறான்…திருமணம் முடிந்துவிட்டால் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என்ற இறுமாப்பு!!…
 
இன்று மண்டபத்தில் மயூராவிற்கு மாப்பிள்ளை தேடும் வைபவம் நடப்பதை உறுதிப்படுத்திக்கொண்டவன்..அதையே தனக்கு சாதகமாக்கிக்கொண்டு..பெண் கேட்டு தனது அம்மாவை அவர்களது வீட்டிற்கு அனுப்பியும்விட்டான்..
 
என்ன தைரியம்!!!
 
வினோதனின் அம்மா மகனது பேச்சை தட்டும் எண்ணமேயில்லாமல்,பத்து முழம் மல்லிகைப்பூவை வாங்கிக்கொண்டு,தன்னுடைய மச்சான் மகளையும் அழைத்துக்கொண்டு பிரபாகரின் வீட்டிற்கு வந்தார்.
 
அவர் வந்த நேரம்,மயூரா வீடு பெருக்கிக்கொண்டிருக்க,இந்த நேரம் அவரை எதிர்பாரததினால்,”வாங்க அத்தை..வாங்க மதினி”அழைத்துவிட..அதைப் பார்த்துக்கொண்டே உள்ளிருந்து வந்த வசந்திக்கு பற்றிக்கொண்டு வந்தது.
 
வசந்தி சற்றும் கூச்சபடாமல்,”என்ன மதினி,திடீர் விஜயம்”பட்டென்று கேட்க,வினோதனின் அம்மாவிற்கு சுருக்கென்று இருந்தாலும்,எதையும் காட்டிக்கொள்ளாமல்,
 
“அத நா என்னோட அண்ணன்கிட்ட சொல்லிக்கிறேன்.அவரைக் கூப்பிடறியா”சிரித்துக்கொண்டே வசந்தியை அலட்சியப்படுத்த,
 
‘அண்ணனாம்..நொண்ணன்..வந்துட்டா வீட்டுக்கு’மனதினுள் வறுத்தெடுத்தபடியே..
 
“தருண் அப்பா..மதினி வந்திருக்காங்க..”சத்தமாய் எந்த மதினி என்று குறிப்பிடாமல் கணவனை அழைத்தவர்,மகளை கண்ணாலையே மிரட்டி உள்ளே செல்ல பணித்தார்..
 
அதை தடுத்த வினோதனின் அம்மா,”நில்லு கண்ணு..இந்த பூவை வைச்சுக்க”என்றவர்,
 
தன் மச்சான் மகளிடம்,”இதை வைச்சு விடு”என்று கொடுக்க,அந்த பெண்ணும் வைப்பதற்கு சென்றாள்..
 
அவளை இடையில் மறித்த வசந்தி,”இவ்வளவு பூவும் அவ ஒருத்திக்கு எதுக்கு? கொடுங்க…கொஞ்சம் மட்டும் வெட்டி நானே வைச்சு விடறேன்”நாகரீகமாய் பூவை பிடுங்கிக்கொள்ளவும்,மயூரா உள்ளே சென்றுவிட்டாள்..
 
மணமகனின் சகோதரி பெண்ணிற்கு பூ வைத்துவிட்டால்,திருமணம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்று அர்த்தமாகிவிடுமே..!!! அதனாலே வினோதனின் அம்மா பூ வைத்துவிட அவசரப்பட..வசந்தி பூவை பிடுங்கிக்கொள்ளவும்,கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் அமைதிகாக்க..அந்த நேரம் பிரபாகரனும் வந்துவிட..
 
“வாம்மா”பொதுப்படையாக வரவேற்றுவிட்டு..என்னவென்பதாய் பார்க்கவும்,
 
“என் மருமவளுக்கு மாப்பிள்ளை பார்க்கறதா தகவல் வந்துச்சு..அதான் என் பையனுக்கு கேட்கலாம்னு!!”தயங்கி நிறுத்த..
 
“கல்யாணம் பண்ணிடலாம்னு தான் நினைச்சேன்மா..ஆனால் ஜாதகம் பார்க்கப்போன இடத்தில, இன்னும் கல்யாண அமைப்பு கூடி வரலைன்னு சொல்லிட்டாங்க..அவசரப்பட்டு பண்ணா,பொண்ணும் பையனும் நல்லா வாழமாட்டாங்களாம்..அதனால ஒருவருஷம் பொறுத்துப் பார்க்க சொன்னாங்க” பிரபாகரன் பொறுமையுடன் சொல்ல..
 
“இந்தக்காலத்தில ஜாதகம் போய் பார்க்கலாமண்ணே..அதுவும் எம்பையனுக்கும்,மருமவளுக்கும் பிடிச்சிருக்கும் போது..அதெல்லாம் கணக்கில எடுத்துக்க தேவையில்லையே” நேரடியாகவே இருவரின் காதலையும் பற்றிப்பேசி,சம்மதம் வாங்கிவிட முயன்றார்..
 
இதுவரை யார்யாரின் மூலமோ காதுக்கு கிட்டிய விஷயம்…இன்று இவர்களது வாயாலும் பேசப்பட…’இந்த அவச்சொல்லுக்கு பயந்தே..எம்பொண்ண இவபுள்ளைக்கு கட்டிக்கொடுத்திடுவேனோ’ கலங்கித்தான் போனார்..
 
அதுவரை பேச்சில் குறுக்கிடாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த மகேந்திரன்,”அப்பா நான் பேசட்டுங்களா?”அனுமதி வேண்ட…
 
“ம்ம்”-சம்மதம் சொன்னார்..
 
“அத்த…இப்போதைக்கு கல்யாணப்பேச்சே எடுக்க நாங்க தயாராயில்ல..எங்களுக்கு எங்க பொண்ணு வாழ்க்கை முக்கியம்..இன்னும் ஒருவருஷம் போகட்டும்..பார்ப்போம்..இப்போ கிளம்புங்க”என்றதும்,மேலும் பேச இயலாமல்,மச்சான் மகளையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்..
 
அது என்னவோ மகேந்திரனின் பேச்சுக்கு பெரும்பாலும் யாரும் எதிர்ப்பேச்சே பேசமாட்டார்கள்…அவனின் ஆஜானுபாகுவான உடல் கொடுக்கும் பயமா..இல்லை இயல்பாகவே அவனது பேச்சில் தெறிக்கும் கம்பீரமா..எதுவோ ஒன்று எதிராளியை மறுபேச்சே பேச விடாது.
 
அவர்கள் தெருமுனையை தாண்டிவிட்டதை உறுதிசெய்துகொண்டவன்..”அப்பா..இவங்க வீட்டுக்கே வந்துட்டாங்கன்னு கவலைப்படாதீங்க..இன்னும் ஆறுமாசத்துக்கு அந்த வினோதன் தொல்லையே இருக்காது..அதுக்கு ஒருவழி பண்ணியிருக்கேன்..அதுக்குள்ள நாம கல்யாணத்தை முடிச்சிடுவோம்..அனுஷா கல்யாணம் முடியற வரைக்கும்,மயூவோட கல்யாணப்பேச்சு வெளில போக வேண்டாம்”என்று சொல்லவும்,பிரபாகரனும் மௌனமாய் தலையசைத்தார்..
 
வசந்தி சந்தேகமாய்,”இவ எப்படியாவது அவனுக்கு தகவல் சொல்லிட்டா?”என்று இழுக்க..
 
“உனக்கு அவ கூட இருந்து காவ காக்கறதை விட..வேறென்ன ——— வேலை?”கெட்ட வார்த்தையிட்டு கணவன் திட்டவும், வாயை மூடிக்கொண்டார்..
 
“மகேந்திரா..ஜோசியர் வேற இந்த வருஷத்துக்குள்ள கல்யாணம் வைச்சுக்க சொல்லியிருக்கார்..உனக்கு பண்ணிட்டு அவளுக்கு பண்ணுவோமா?”கேட்க…
 
“தங்கச்சிங்களுக்கு முதல்ல முடிப்போம்-ப்பா”என்றவன்…
 
“மயூக்கு வரன் வர ஆரம்பிச்சு ரொம்பநாள் ஆச்சுன்னு ஜோசியர் சொன்னாரே…ஆனால் நாம இப்போ தானே பேச்சே எடுத்திருக்கோம்”சந்தேகமாய் கேட்க…
 
“அவர் அப்படி சொல்லலை மகேந்திரா…பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கறீங்களான்னு யாராவது கேட்டாலே,குருதிசை ஆரம்பிச்சுடுச்சுன்னு தான் அர்த்தம்..அதனால ஜாதகம் எல்லாம் பார்க்க வேணாம்…பொருத்தம் பார்க்க மட்டும் வாங்கன்னு சொன்னார்டா”விளக்கி சொல்ல….உள்ளிருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மயூராவின் நெஞ்சில் அனலடிக்க ஆரம்பித்தது..
 
 

Advertisement