Advertisement

அத்தியாயம் – 28
நாட்கள் அதன் பாட்டில் நகரத் தொடங்க ஜெயந்தியின் கிளினிக்கிற்கு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள் வானதி. அதபால் அருள், வானதியின் சந்திப்பு அவ்வப்போது வெளியே தொடர்ந்து கொண்டிருந்தது.
குந்தவை கல்லூரிப் பாடத்தோடு, தேவ் அவ்வப்போது அவளை சந்திக்கையில் சொல்லிக் கொடுக்கும் காதல் பாடங்களையும் கற்றுத் தேர்ந்து கொண்டிருந்தாள்.
மகளின் கல்யாணத்தோடு, மூத்த மகன் வரப் போகும் சந்தோஷமும் சேர்ந்து கொள்ள உற்சாகத்துடன் கல்யாண வேலைகளை கவனிக்கத் தொடங்கியிருந்தார் சகுந்தலா.
சுந்தரத்துக்கு நண்பன் குடும்பமாய் இருந்தாலும் பெரிய இடத்தில் மகளின் கல்யாணம் நிச்சயம் ஆனதில் பெருமை தாங்கவில்லை. கல்யாணத்துக்கு அதை செய்யவேண்டும் இதை வாங்கவேண்டும் என்று பரபரப்புடனே இருந்தார்.
அன்று மாலையில் தொழில் வகை நண்பர் ஒருவரின் மகன் ரிசப்ஷனுக்கு இருவரும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.
“சகு… எப்பவும் போல சிம்பிளா புறப்படாம கொஞ்சம் நகை எல்லாம் போட்டுக்க… நாம போறது பெரிய இடத்து பங்க்ஷன்…” சுந்தரம் சொல்ல சகுந்தலா முகம் சுளித்தார்.
“அங்கெல்லாம் நான் வரணுமாங்க… எனக்கு சரியா யாரையும் தெரியவும் செய்யாது… நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்…” சலித்துக் கொண்டார்.
“என்ன சகு, விளையாடறியா… நிச்சயம் சம்சாரத்தை அழைச்சிட்டு வரணும்னு அவன் ஆர்டர் போட்டிருக்கான்… உனக்கு தான் துணைக்கு உன் அண்ணி தேவி இருப்பாளே…”
“ம்ம்… சரிங்க… அண்ணி வர்றதால நான் வர்றேன்…” என்றவர் தயாராகவும் மனைவியை நோக்கியவர், “அந்த வைர நெக்லஸ் செட்டை எடுத்துப் போடேன்… அதை யாருக்கு எடுத்து வச்சிருக்க…” என்றார் எரிச்சலுடன்.
“என்னங்க நீங்க, ரொம்ப தான் என்னை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க…” என்றவர் கணவனின் திருப்திக்காய் அவர் ஆசையுடன் வாங்கிக் கொடுத்த வைர நெக்லஸ் செட்டை அணிந்து கொள்ள கிளம்பினர். காதில் இயர் போனை மாட்டிக் கொண்டு ஹாலில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்த குந்தவை அன்னையைக் கண்டதும் திகைத்தாள்.
“என்னம்மா, அம்பாளுக்கு நகை சாத்தின போல எல்லாத்தையும் வாரிப் போட்டுக் கிளம்பிருக்கீங்க…”
“உன் அப்பா தான் எல்லாம் போட சொல்லுறார்…” என்று அவர் முகத்தை சுளிக்கவும் அருகில் வந்தவள், “இந்த டயமன்ட் செட் மட்டும் போதும்… மத்ததெல்லாம் வேண்டாம்…” என்று கூற மற்றதைக் கழற்றி அவள் கையில் கொடுத்தவர், “பத்திரமா எடுத்து வச்சிரு… இந்த சேலையைக் கொஞ்சம் சரி பண்ணி விடு…” என்று சொல்ல சேலை மடிப்பை சரி செய்து விட்டாள்.
“சட்னி அரைச்சு வச்சிருக்கேன்… அண்ணன் வந்ததும் தோசை ஊத்திக் குடு, வானதி வந்தா சொல்லிடு…” மகளிடம் சொல்லி அவர்கள் கிளம்ப தனியே இருந்தவள் உற்சாகத்துடன் அலைபேசியை எடுத்து அவள் நாயகனுக்கு அழைத்தாள்.
நண்பர்களை சந்தித்துவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தேவ் மோகன் அலைபேசி சிணுங்கவும் எடுத்துப் பார்த்தான். குந்தவையின் புகைப்படத்துக்கு கீழே ஹோம் மினிஸ்டர் காலிங் என்று ஒளிர்ந்து கொண்டிருக்க புன்னகையுடன் புளு டூத்தை ஆன் பண்ணினான்.
“ஹலோ பியூட்டி… அதிசயமா இந்த நேரத்துல காலிங்…”
“ஹாய் நாட்டி… வீட்ல தனியா போர் அடிச்சுதா, அதான் உனக்கு அழைச்சுபையிங்…”
“ஓஹோ, போர் அடிச்சதால தான் எனக்குக் கால் பண்ணிருக்க… அத்தானைப் பார்க்கணும்னு ஆசைல பண்ணல… ம்ம் என்னாச்சு, அத்தை வீட்ல இல்லயா…”
“உங்க அத்தையும் மாமாவும் ஒரு ரிசப்ஷனுக்குப் போயிருக்காங்க… என் மாமா, அத்தையும் அந்த பங்க்ஷனுக்கு வருவாங்கன்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்களே… உனக்குத் தெரியாதா…” என்றாள் குந்தவை.
“அப்படியா… நான் காலைலயே ஒரு வேலையா வெளிய வந்துட்டேன்… இன்னும் வீட்டுக்குப் போகலை…”
“ம்ம்… டிரைவிங்ல இருக்கிங்களா… நான் வேணும்னா அப்புறம் கூப்பிடட்டுமா…” என்றாள் கார் ஹாரன் கேட்டு.
“அதெல்லாம் பரவால்ல டார்லிங்… எனக்கு ஒரு ஹெல்ப் வேணும், பண்ணுவியா…”
“அதென்ன ஹெல்ப்னு எல்லாம் சொல்லிட்டு… என்ன பண்ணனும்னு சொல்லு தேவ்…”
“ஏன் சொல்லறேன்னா உனக்கு முடியலைனா சூர்யா ருசி தான் பார்க்கணும்…”
அவன் சொல்லவும் குழம்பியவள், “என்ன சொல்லற… அவங்களாம் யாரு… உனக்கு என்ன வேணும்…” என்றாள்.
“ம்ம்… அதெல்லாம் நான் வர்ற வழில உள்ள ஹோட்டல் பேரு… மதியம் சாப்பிடலை, செம பசில இருக்கேன்… ஏதாச்சும் சமைச்சுக் கொடேன்…” என்றான் தேவ்.
“என்னது, சமைக்கணுமா…”
“எனக்கு சமைச்சுத் தர மாட்டியா டார்லிங்…” அவன் கேட்கவும் புன்னகைத்தவள், “அதெல்லாம் தருவேன்… ஆனா நீ பாவம் தானே…” என்றாள். அவள் கேட்கும்போதே வாசலில் கார் சத்தம் கேட்க எட்டிப் பார்த்தவள் தேவ் உள்ளே நுழைவதைக் கண்டு இனிதாய் அதிர்ந்தாள்.
“அச்சச்சோ, என்ன வீட்டுக்கே வந்துட்டிங்க… அம்மாக்குத் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க… அண்ணாவும், வானதியும் வேற வந்திருவாங்க… கிளம்புங்க…” அவள் புலம்பலைக் கண்டு கொள்ளாமல் சோபாவில் அமர்ந்தான் தேவ்.
“அந்த பேன் சுவிட்சைக் கொஞ்சம் போடறிங்களா மேடம்…” என்றவனை முறைத்துக் கொண்டே ஆன் செய்தாள்.
“நீ ஒரு வில்லங்கம் பிடிச்சவன்னு தெரிஞ்சும் வீட்ல யாருமில்லேன்னு சொன்ன என்னை சொல்லணும்… ப்ளீஸ், என் செல்ல தேவ் தானே… கிளம்பேன்…” தவிப்புடன் தன்னைத் துரத்தி விடுவதிலேயே குறியாய் நின்றவளை நோக்கி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
“எதுக்கு டார்லிங் பதறுற… இங்க நாம மட்டும் தானே இருக்கோம்… எனக்கு குடுக்க வேண்டியதைக் கொடு… கிளம்பறேன்…” என்றான் அந்த விளையாட்டுப் பிள்ளை.
“யோவ் போலீசு, விளையாடாத… பேசாம கிளம்பு…” அவள் சொல்லவும் எழுந்தவன் அவளை நெருங்க, “ஆஹா, நானே வில்லங்கத்தை போன் பண்ணி வரவழைச்சிட்டேனே…” என்று பயத்துடன் அவள் பின்னில் நகர, “செம பசியா இருக்கேன்னு சொல்லறேன்… அப்பவும் சாப்பிட எதுவும் தராம என்னைத் துரத்துறதுல குறியா இருக்க…” சொல்லிக் கொண்டே அவளைத் தள்ளிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தவன், “ம்ம்… அத்தையை சொல்லணும்… கட்டிக்கப் போறவனை உபசரிக்கக் கூடத் தெரியாம பொண்ணை வளர்த்து வச்சிருக்காங்க…” என்றபடி பாத்திரத்தைத் திறந்து பார்க்க இரண்டு வகை சட்னி மட்டுமே இருந்தது. அவன் செயல்களை பயமும் தவிப்புமாய் பார்த்துக் கொண்டிருந்த குந்தவை, “நீ என்ன பண்ணற… சாப்பிட எதும் இல்லை… தோசை தான் ஊத்தணும்…” என்றாள்.
“அப்ப ஊத்திக் குடு…” என்றவன் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கேஸை ஆன் செய்தான்.
“ரொம்பதான் வம்பு பண்ணற தேவ்… நீ ஹால்ல போயி உக்காரு… நான் தோசை வார்த்து அங்கே எடுத்திட்டு வரேன்…” என்று அவனை விரட்ட அவனோ அங்கேயே கை கழுவி திண்டில் தட்டை வைத்து அமர்ந்து கொண்டான்.
“சரியான இம்சை அரசன்…” நொடிந்து கொண்டே தோசை ஊற்ற அவளை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான். “போதும் லுக்குனது, கண்ணு சுளுக்கிக்கப் போகுது…” அவள் சிணுங்க, “என் கண்ணு, என் பொண்ணு… அப்படிதான் லுக்குவேன்…” என்றவன் தொடர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் குனிந்து கொண்டாள். அந்த சூழ்நிலையும், அவன் செய்கைகளும்  அவளுக்கு இனிமையான இம்சையாய் இருந்தது.
தட்டில் தோசையை வைக்க, “என்னமா, தோசை கேட்டா ஊத்தப்பம் ஊத்திருக்கே…” என்றவனை முறைத்தவள், “பசிக்குதுன்னு தான சொன்னிங்க… கொடுக்கறதை சாப்பிட்டு எழுந்திருங்க…” என்று தட்டில் சட்னியை வைக்க வேகமாய் ஒரு வாய் சாப்பிட்டவன் அடுத்து தோசையைப் பிய்த்து அவள் முகத்துக்கு நேராய் நீட்ட, “ம்ம்… வாங்கிக்க…” என்றதும் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டாள் குந்தவை.
“என்னதான் புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும் வாயும், வயிறும் வேற பாரு… உன்னைப் பார்க்க வச்சு சாப்பிட்டு எனக்கு வயிறு வலி வந்துட்டா…” என்றவனை முறைத்தவள், “அத்தை உனக்கு கொழுப்பை ஊட்டி வளர்த்திருக்காங்க… அதான் இப்படி பேசற… நான் வந்து கவனிச்சுக்கறேன்…” அவனுக்கு பதில் சொன்னாலும் தோசையை தட்டில் வைக்க மறக்கவில்லை. ஒருவழியாய் சாப்பிட்டு முடித்தவன், இறுதியில் அவளுக்கும் ஒரு தோசையை வம்படியாய் ஊட்டி விட்டே நிறுத்தினான்.
“சரி, அதான் சாப்பிட்டாச்சே… சீக்கிரம் கிளம்பு…”
“என்ன டார்லிங்… ஆசையா பார்க்க வந்தா என்னை விரட்டறதுலயே குறியா இருக்க… நான் பாவமில்லையா…”
“யாரு நீதான… வீட்ல யாருமில்லேன்னு ஒரு வார்த்தை தெரியாம சொல்லிட்டேன்… இப்படி வந்து உக்கார்ந்துட்டு இம்சை பண்ணிட்டு இருக்க… அண்ணன் வந்துட்டா என்ன நினைப்பான்… நல்ல பையன் தானே, ப்ளீஸ்… கிளம்பேன்…”
“ஹூம்… நீ இவ்ளோ சொல்லறதால கிளம்பறேன்… ஆனா வந்ததுக்கு ஏதும் வாங்காம எப்படி…” என்றவன் அவள் உதடுகளை ஆவலுடன் நோக்க குனிந்து கொண்டாள். அவன் தன்னை நெருங்குவதை உணர்ந்தவளுக்கு படபடப்பாய் இருக்க இதயத்தின் துடிப்பு முழக்கமாய் அதிரக் கேட்டாள்.
அவள் முன்னே வந்தவன் இரண்டு கைகளையும் விரித்து அவளை நோக்கி வாவென்று தலையசைக்க அந்தக் கைகளுக்குள் சந்தோஷமாய் அடங்கிக் கொண்டாள். அவள் துடிப்பை தனக்குள் உணர்ந்தவன், “டார்லிங், எதுக்கு இவ்ளோ பயம்… நாம எந்தத் தப்பும் பண்ணலை… எனக்கு நீ, உனக்கு நான்னு கடவுள் மட்டுமில்லை… நம்ம வீட்டுலயும் முடிவு பண்ணியாச்சு… சோ, கூல் டியர்…” என்றவன் அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு விலகினான்.
“ஓகே… நான் கிளம்பறேன்… லவ் யூ டார்லிங்…” என்று சொல்ல நாணத்துடன் அவனை நோக்கி சிரித்தாள்.
வாசல் வரை அவனது கையை இறுகப் பற்றிக் கொண்டு நடந்தவளுக்கு இப்போது படபடப்பு குறைந்திருந்தது. அவள் விரலில் முத்தமிட்டு, “பை டார்லிங்…” என்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான் தேவ் மோகன்.
அவனது குறும்பும், தைரியமும் மனதுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க உரிமையான செயலும் இதமான அணைப்பும் நிறைவாய் இருக்க அவள் முகம் மலர்ந்து பிரகாசித்தது.
இதழ்கள் தானாய் ஒரு பாடலை முணுமுணுக்க ஹாலில் வந்து அமர்ந்தவள் பைக் சத்தம் கேட்டுத் திகைத்தாள்.
“ஆஹா, ஜஸ்ட் மிஸ்… அண்ணன் வந்தாச்சு போலருக்கு…” நினைக்கும்போதே உள்ளே நுழைந்தான் அருள்.
“அம்மா, அப்பா ரிசப்ஷன் கிளம்பிட்டாங்களா…” தங்கையிடம் கேட்க, “ஆமாண்ணா… கொஞ்ச நேரமாச்சு…” என்றாள்.
“தனியாவா இருக்க…” என்றவனின் பார்வை துளாவ, “வானதி இன்னும் வரலைண்ணா…” என்றவள், “காபி தரட்டுமா…” என்று கேட்கவும், “குளிச்சிட்டு வந்திடறேன் மா…” என்றவன் மாடிக்கு சென்றான். பத்து நிமிடத்தில் குளித்து ஷாட்ஸ், டீஷர்ட்டுடன் கீழே வர குந்தவை காபி கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் கொண்டான்.
“பரவால்லியே, நீ கூட சுமாரா காபி போட்டுப் பழகிட்ட…” கேட்ட அண்ணனின் அருகில் புன்னகையுடன் அமர்ந்தவள்,
“என்ன பண்ணறது… என்னையும் குடும்ப இஸ்திரி ஆக்கப் போறிங்களே… காபி கூடப் போட்டுப் பழகலைன்னா எப்படி…”
“குட்… அம்மாவை விட வானதி போடற காப்பி சூப்பரா இருக்கும்… கேட்டுப் பழகிக்க…” என்றான் அருள்.
“ம்ம்… மனசுக்குப் பிடிச்சவங்க எது பண்ணாலும் சூப்பரா தான் இருக்கும்…” குந்தவை சொல்லவும் சட்டென்று நிமிர்ந்தான்.
“என்னமா சொல்லற… நான் எதார்த்தமா தான் சொன்னேன்…”
“அட, நானும் எதார்த்தமா தான் சொன்னேன் அண்ணா… வானதி எந்த விஷயத்தையும் ரொம்ப ஈடுபாட்டோட பண்ணுறா… அதான் அவ செய்யறதெல்லாம் நல்லாருக்கு… நம்ம அப்பாக்கு கூட அவளைப் பிடிக்குதுன்னா பாரு… சரி, அவளைப் பத்தி நீ என்ன நினைக்கற…” என்றாள்.
“நா…நான் என்ன நினைக்கறது… நல்ல பொண்ணு… அவ்ளோதான்… வேற என்ன…”
“அவ்ளோதானா அண்ணா, வேற எதுவும் இல்லியா…”
“குந்தவை, உனக்கு என்னாச்சு… எதுக்கு இந்த வேண்டாத கேள்வி எல்லாம்…” என்றான் சற்று கடுப்புடன்.
“என்ன இருந்தாலும் நீ ஆதி அண்ணா போல இல்லண்ணா… அவரா இருந்தா நான் கேட்டதுக்கு பட்டுன்னு ஆமா, நான் அவளை லவ் பண்ணறேன்னு சொல்லி இருப்பார்…” என்றதும் அதிர்ந்து எழுந்து விட்டான் அருள்மொழி வர்மன்.
“நீ..நீ என்ன சொல்லற குந்தவை…”
“சும்மா நடிக்காதண்ணா… நான் ஒரு பிள்ளப்பூச்சி… என்கிட்டயே உன் காதலை ஒத்துக்க மாட்டேங்கற… அப்புறம் நம்ம டைகர் சுந்தரம் கிட்ட எப்படி உன் காதலை சொல்லப் போற… எல்லாம் எங்களுக்குத் தெரியும்…” என்றாள் அவள்.
“இ..இங்க பாரு குந்தவை, சும்மா விளையாடாத… அப்படி எல்லாம் எங்களுக்குள்ள எதுவுமில்லை…” என்றான் அவன்.
“எதுவும் இல்லாம தான் அவளை ஹாஸ்டலுக்குப் போகக் கூடாதுன்னு கோவிச்சுகிட்டியா… மலையாளம் படிக்க டிரை பண்ணிட்டு இருக்கியா… அம்மாக்கும் எல்லாம் தெரியும்…” அவள் சொல்லவும் அதிர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான்.
“என்ன அம்மாக்குத் தெரியும்… சும்மா நீயே ஏதாச்சும் கதை கட்டி விடாதே…” என்றவனின் முன்னில் நின்றவள்,
“யாரு நான் கதை கட்டறேனா…” என்றவள் அவனையே நோக்க தயக்கத்துடன் குனிந்து கொண்டான் அருள்.
“அண்ணா, சும்மா பயப்படாம சொல்லு… அவளைப் பார்க்கும் போதெல்லாம் உன் கண்ணுல பல்பு எரியுறத நானும் பார்த்திருக்கேன்… நாங்க ஒண்ணும் காதலுக்கு எதிரி இல்ல… வானதி அண்ணியா வந்தா எனக்கும் சந்தோஷம் தான்… அம்மாக்கு கூட வானதியை ரொம்பப் பிடிக்கும்…”
தங்கையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவன் அமைதியாய் இருக்க ஆதியின் நினைவு வந்தது.
“நம்ம அண்ணன் காதல் இப்பவும் அந்தரத்துல நிக்குது… எப்படியாச்சும் அவர் கல்யாணத்துக்கு அப்பாவை சம்மதிக்க வச்சிட்டா உங்க காதலுக்கும் தடை இருக்காதுன்னு அம்மா கூட சொன்னாங்க…” என்றதும் அருள் திகைத்தான்.
“இவங்க எங்களை இந்த அளவுக்கு கவனிச்சிருக்காங்களா… நாங்கதான் பூனை கண்ணை மூடின கதையா யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கோமா…” என யோசித்தவன் தங்கையை ஏறிட்டான்.
“குந்தவை, எத்தனையோ முறை மூளை சொல்லுச்சு… நம்ம குடும்பத்துக்கு இந்தக் காதல் எல்லாம் சரிப்பட்டு வராதுன்னு… ஆனாலும் மனசு எங்க கேக்குது… நீங்க நினைச்சது சரிதான்… நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம்… ஆனா, இதோட முடிவு எப்படி இருக்கும்னு யோசிக்கும்போதே பயமா இருக்கு…” என்றான் தயக்கத்துடன்.
“ஹாஹா… அப்படி வாங்க வழிக்கு… அதென்னவோ நம்ம அப்பா வாங்கி வந்த வரம் அப்படி போலருக்கு… அவருக்கு காதல் பிடிக்காது… ஆனா அவர் பிள்ளைகள் மூணு பேருக்கும் காதல் பிடிச்சிருக்கு…” என்றதும் அவளை அவன் வியப்புடன் நோக்க சிரித்தாள்.
வெட்கத்துடன் குனிந்து கொண்டவள், “தேவ் என்னைப் பொண்ணு பார்க்க வரதுக்கு முன்னமே எனக்குத் தெரியும் அண்ணா… ஆனா ராஜ் அங்கிள் பையன்னு தெரியாது… அப்பாவே அந்த சம்மந்தம் கொண்டு வரவும் பிரச்சனை இல்லாமப் போயிருச்சு… நம்ம மனசுக்குப் பிடிச்சவங்களை  நமக்குப் பொருத்தமானவங்கன்னு மூளை நம்பினதை மத்தவங்களுக்காக வேண்டாம்னு சொல்லறது ரொம்பப் பெரிய வலி… நம்ம ஆதி அண்ணன் மனசுல எவ்வளவு வலி இருக்கும்… எனக்கு அமைஞ்ச போல உங்க வாழ்க்கையும் மனசுக்குப் பிடிச்சவங்களோட சந்தோஷமா அமையணும்… அப்பாவை சம்மதிக்க வச்சு அம்மா மனசுல உள்ள வேதனை எல்லாம் மாத்தணும்…” என்றாள் கண்களில் கனவோடு.
“ம்ம்… நீ நினைக்கற போல எல்லாம் நடந்தா சந்தோஷம் தான்… அப்பாவோட பிடிவாதத்தை நினைச்சா தான் பயமா இருக்கு… எங்க காதல் தெரிஞ்சா அண்ணனைப் போல என்னையும் வீட்டை விட்டுத் தள்ளி வைக்கத் தயங்க மாட்டார்… எல்லாம் மூளைக்குத் தெரிஞ்சாலும் மனசு ஒத்துக்க மாட்டேங்குதே…” என்றான் அருள் பெருமூச்சுடன்.
“ம்ம்… அண்ணன் வரட்டும்… எல்லாத்துக்கும் சீக்கிரமே ஒரு முடிவு எடுப்போம்…” என்றவள், “அண்ணா… உங்க லவ்வை முதல்ல கண்டு பிடிச்சு என்கிட்டே சொன்னது யார் தெரியுமா…” என்றாள் அண்ணனிடம்.
அவன் கேள்வியாய் நோக்க, “நம்ம போலீஸ் மாப்பிள்ளை தான்… உங்க ரெண்டு பேர் பார்வையை வச்சே கண்டு பிடிச்சுட்டார்…” என்றாள் பெருமிதத்துடன்.
“ம்ம்… அப்படியே எங்க கல்யாணத்துக்கும் வழி கண்டு பிடிச்சா நல்லா தான் இருக்கும்…” என்றான் சிரிப்புடன்.
“ஹாஹா… கவலைப்படாதே சகோதரா… எங்கம்மா சகுந்தலா தான் காத்து நிப்பா… காதலத்தான் சேர்த்து வைப்பா… கவலைப் படாதே சகோதரா…” என்று அவள் பாட அருள் மனம் விட்டு சிரித்தான்.
“அம்மா பாவம், இந்த ஹிட்லர் அப்பாகிட்ட மாட்டிட்டு பிள்ளைகளுக்கும் சப்போர்ட் பண்ண முடியாம ரொம்ப தான் முழிக்கிறாங்க…” என்றவன் கடிகாரத்தைப் பார்க்க மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
“டைம் ஆச்சு, எங்க… இன்னும் உன் அண்ணியைக் காணோம்…” என்று கேட்கவும் சிரித்தவள், “ஏன், நீங்க போயி உங்க ஓமனக் குட்டியை அழைச்சிட்டு வர்றது தானே…” என்றதும் புன்னகைத்தான்.
“ஓகே, நான் போயி கூட்டிட்டு வந்திடறேன்… நீங்க எல்லாரும் எங்க காதலுக்கு சப்போர்ட்னு தெரிஞ்சா அவளும் ரொம்ப சந்தோஷப்படுவா…” என்றவன் பைக்கை எடுத்துக் கொண்டு அவளை அழைக்கக் கிளம்பினான்.
தீ தின்ற காடுகள்
போலவே
பிரியம் தின்ற
சில மனங்கள்…
எதையும்
நேசிக்கப் பழகுவதில்லை…
சாம்பலை நினைத்து
தீயை எதிர்பார்த்துக்
காத்திருத்தலை விட
நேசித்து வாழ்ந்திடுதல்
நலமல்லவா…

Advertisement