Advertisement

“அங்கிள், நான்தான் நந்தினி என் பொறுப்புன்னு சொல்லி இருக்கேனே… நீங்க தைரியமா இருந்தா தானே அவளுக்கு நம்பிக்கை கொடுக்க முடியும்… நீங்களே இப்படி தளர்ந்து போனா எப்படி அங்கிள்…”
“தம்பி, நீங்க நல்லவர்தான், நந்தினி மேல ரொம்ப பிரியம் வச்சிருக்கீங்கன்னு எங்களுக்குப் புரியுது… ஆனா வீட்ல சம்மதிக்காம உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது…”
“கல்யாணம் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் அங்கிள்… முதல்ல நந்தினி நல்லபடியா குணமாகி வரட்டும்… அவ மனசளவுல தளர்ந்திடாமப் பார்த்துக்கணும்…”
“அதே, இப்ப ஒண்ணும் யோசிக்கறதுல அர்த்தமில்ல… முதல்ல நம்ம பொண்ணை எங்கனே சமாதானிப்பிக்கும் எந்து பார்ப்போம்… அவள்டே முன்னில் நீங்கள் தளரான் பாடில்ல…” தமிழும் மலையாளமும் நன்றாகத் தெரியும் என்றாலும் இரண்டையும் கலந்துகட்டிப் பேசினார் ஷீலா.
“ம்ம்… அவ பக்கத்துல நர்ஸ் இருக்காங்களா… ரெண்டு பேரும் இங்க வந்துட்டிங்க…”
“இல்ல அங்கிள், என் அம்மாவும், தம்பியும் வந்திருக்காங்க… அவ பக்கத்துல அம்மா இருக்காங்க…”
“ஓ…” என்றவரின் முகம் யோசனையைக் காட்ட அவர் மனமோ “ஒருவேளை அம்மாவுக்கு இவர்கள் கல்யாணத்தில் விருப்பம் தானோ…” என மனதுக்குள் நினைத்தார்.
“சரி, ரெஸ்ட் எடுக்கு… நான் நந்தினிகிட்ட போகாம்…”
“நான் அம்மாவை அழைச்சிட்டு வரேன், அங்கிள்…” என்ற ஆதியும் ஷீலாவுடன் நகர்ந்தான். நந்தினியின் சோர்ந்த முகத்தையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த சகுந்தலா, “அம்மா, வாங்க நந்து அப்பாவைப் பார்த்திட்டு வரலாம்…” என்று மகன் சொல்லவும் நிமிர்ந்தார்.
“நான் இருக்கேன்… நிங்கள் போயிட்டு வரின்…” என்று ஷீலாவும் சொல்ல எழுந்து அவனுடன் சென்றார். அதற்குள் ஆதியின் அலைபேசி சிணுங்கத் தொடங்க எடுத்துப் பார்க்க ஆபீசிலிருந்து அழைப்பு வந்தது.
“அங்கிள், அம்மா…” என்று அவசரமாய் அவரிடம் சொன்னவன்,  “நீங்க பேசிட்டு இருங்கம்மா, நான் ஆபீஸுக்கு போன் பண்ணிட்டு வந்திடறேன்…” ஒரு கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க மறுகையை முகத்தின்மீது வைத்துப் படுத்திருந்தவர் ஆதியின் குரலில் கையை நீக்கிவிட்டு அவன் அன்னையை நோக்கினார்.
“வணக்கம்… இப்ப உங்களுக்கு உடம்புக்குப் பரவால்லியா…” புன்னகையுடன் சகுந்தலா பேசத் தொடங்க அலைபேசியில் திரும்ப ஆபீசுக்கு அழைத்த ஆதி அறைக்கு வெளியே சென்று  பேசத் தொடங்கினான்.
ஒரு முக்கியமான புரோஜக்ட் விஷயமாய் கேட்பதற்கு அழைத்திருந்தனர். முடிந்தால் அடுத்தநாள் அலுவலகம் வருமாறு கேட்டனர். நந்தினிக்கு மருத்துவ உதவிக்கும் அவர்கள் அலுவலகம் ஒரு கணிசமான தொகையைத் தருவதாய் ஏற்றுக் கொண்டிருந்தது.
காபியுடன் வந்த அருள் அண்ணனைக் கண்டுவிட்டு அறைக்கு வர அன்னை அடுத்த அறையில் அவள் தந்தையைக் காண சென்றதை அறிந்து அவனும் பார்க்க சென்றான்.
“கவலைப்படாதீங்க அண்ணா… நடந்த எதையும் மாத்த முடியாது… ஆனா முடிஞ்ச வரைக்கும் சரி பண்ண முயற்சி செய்வோம்…” சொல்லிக் கொண்டிருந்தவர் அருள் உள்ளே நுழைவதைக் கண்டு கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டார்.
“இது என் ரெண்டாவது பிள்ளை அருள்மொழி வர்மன்… மூணாவது பொண்ணு பேரு குந்தவை…” சகுந்தலா சொல்லவும் அன்போடு அவனை நோக்கினார் சிவராமன்.
“வாங்க தம்பி, என்ன படிக்கறீங்க…” என்றார் அன்புடன்.
“எஞ்சினியரிங் பைனல் இயர் படிக்கிறேன் அங்கிள்… இப்ப உங்களுக்குப் பரவால்லியா…” என்றான் அவனும்.
“ம்ம்… எனக்கு எப்பவும் உடம்புக்கு பிரச்சனை தான் தம்பி… அதை விடுங்க… மனசு தெம்பா இருந்தாப் போதும்…”
“அம்மா, காபி வாங்கிட்டு வந்தேன்… உங்களுக்கு இங்க கொண்டு வரட்டுமா…” அருள் கேட்கவும், “நானே வரேன்ப்பா…” என்றவர், “தைரியமா இருங்க அண்ணா, நாங்களும் இங்கே தான் இருப்போம்… நாம தான் நந்தினிக்கு நம்பிக்கை கொடுக்கணும்…” என்று அவருக்கு ஆறுதல் சொல்ல போன் பேசிவிட்டு ஆதித்யா உள்ளே வந்தான்.
“அம்மா, நீங்க போயி காபி குடிங்க… ஆன்ட்டிக்கும் கொடுங்க… அங்கிள்க்கு டிரிப்ஸ் முடிஞ்சுதான் விடுவாங்க… அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்…” என்றான்.
“ம்ம்… ரெஸ்ட் எடுங்கண்ணா… அப்புறம் பேசுவோம்…” என்றவர் எழுந்து கொள்ள ஆதி திகைப்புடன் நோக்கினான்.
வெளியே வந்ததும் அன்னையிடம் கேட்டான்.
“என்னம்மா, சட்டுன்னு அவரை அண்ணான்னு கூப்பிடத் தொடங்கிட்டிங்க… பாவம், ரொம்ப நல்ல மனுஷன்…”
“ம்ம்… உனக்கு மாமனார்னா, எனக்கு அண்ணன் போலத்தானே…” என்றவரின் முகத்தில் யோசனை தெரிந்தது.
“அவர்கிட்ட நந்தினியை மருமகள் ஆக்கிக்க சம்மதம்  சொல்லிட்டீங்களாம்மா…” என்றான் ஆவலுடன்.
“யாரு சம்மதிக்கலைனாலும் நீ மாறப் போறதில்லை… அப்புறம் சும்மா வீம்பு பிடிச்சு என்ன பண்ணுறது… ஆனாலும் எனக்கு உன் மேல கோபம் தான்… நீ அப்பாவை அப்படிப் பேசியிருக்கக் கூடாது…”
“இல்லம்மா, நான் பேசினது தப்பா, சரியான்னு யோசிக்கற நிலமைல நான் இல்லை… அவர் செய்த முதல் தப்பு தான் நந்துவை இந்த நிலமைல படுக்க வச்சிருக்கு… அவர் எதுக்கு அவளை போன் பண்ணி மிரட்டணும்… அது தப்பு தானே… நான் முன்னப் பின்ன வார்த்தைகளை விட்டது வேணும்னா தப்பா இருக்கலாம்… அவர் அவளைக் கொல்ல முயற்சி செய்யலைனாலும் மனசைக் கொன்னுருக்கார்… என் மேல உயிரையே வச்சிருந்தவ எனை விட்டு விலகிக்கறேன்னு வாக்கு கொடுக்கணும்னா எந்த அளவுக்கு அவகிட்டப் பேசிருப்பார்… அதை என்னால ஏத்துக்க முடியாது மா…”
“ஆதி… இருந்தாலும் அவர் உன் அப்பா… அவருக்குப் பிடிக்கலைனா நீ பொறுமையா அவர் மனசை மாத்த தான் முயற்சி பண்ணி இருக்கணும்…”
“இருந்தனே… நான் காத்திருக்கேன்னு சொல்லிட்டுத் தானே வந்தேன்… அவருக்குப் பிடிக்காதுன்னு என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழாம இருக்க முடியாது… நந்தினி தான் என் மனைவின்னு நான் எடுத்த முடிவு எப்பவும் மாறாது…” அந்த நிலையிலும் தனது காதலில் மாறாத உறுதியோடு பேசியவனை சற்று பிரமிப்புடன் நோக்கினார் சகுந்தலா.
“ஆதி, நீ ஒண்ணு யோசிக்கணும்… இவ்வளவு நடந்தும் நான் நந்தினியைப் பார்த்திட்டு வரேன்னு சொன்னதும் அவர் சம்மதிச்சார்னா அவரோட மனசையும் நீ புரிஞ்சுக்கணும்… கொஞ்சம் பொறுமையா இரு…”
“ம்ம்… நீங்க நந்தினியைப் பார்க்க வரதுக்கு அப்பா சம்மதிப்பார்னு நானும் சத்தியமா எதிர்பார்க்கல… அதுக்காக அவர்மேல உள்ள கோபம் போயிருச்சுன்னு பொய் சொல்ல விரும்பலை மா… என்னை மன்னிச்சிருங்க…” என்று மனதில் உள்ளதை வெளிப்படையாய் பேசும் மகனிடம் அதற்கு மேல் என்ன சொல்லி கணவனுக்காய் வாதிப்பது என்று புரியாமல் அவர் அமைதியாய் நின்றார்.
“சரி, நந்தினியைப் பார்ப்போம்… அப்புறம் எல்லாத்தையும் பேசிக்கலாம்…” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஷீலா நந்தினியிடம் பேசுவது கேட்க ஆதி உள்ளே செல்ல சகுந்தலாவும் தொடர்ந்தார்.
“நந்து…” வேகமாய் அவளிடம் சென்றவனை ஏறிட்டவளின் விழியில் நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க உதடுகள் உணர்ச்சி வேகத்தில் துடித்தன.
“ஆ..ஆதி… என் காலு…” சொல்லும்போதே அழுகை வெடிக்க அவளது கையைப் பிடித்துக் கொண்டவன், “நந்து, நந்து… அழாத… இங்க பாரு… உனக்கு நான் இருக்கேன்…” ஆறுதலாய் அவன் சொல்ல, “ஆனா எனக்கு கால் இல்லையே… இனி நான் எப்படி ஆபீஸ் போவேன்… எப்படி என் குடும்பத்தைப் பார்த்துப்பேன்… ஐயோ… நான் என்ன பண்ணுவேன்…” படுத்துக் கொண்டே முகத்தில் அறைந்து கொண்டவளின் கையைப் பிடித்து வைக்க முயன்றனர். அவள் கதறலைக் கேட்டு அங்கே நின்ற அனைவரின் நெஞ்சமும் கலங்க சகுந்தலா அருகே சென்றார்.
“நந்துமா…” என்ற அன்பான புதிய அழைப்பைக் கேட்டவளின் அழுகை தடைபட கண்ணை சுருக்கிப் பார்த்தவளுக்கு ஆதியின் அன்னையை புகைப்படத்தில் கண்டு பரிச்சயம் இருந்ததால் அவரை நோக்கித் தேம்பினாள்.
“ஆ..ஆன்ட்டி… எனக்கு வந்த நிலமையைப் பார்த்திங்களா… நான் எந்தத் தப்பும் பண்ணவே இல்லையே… எதுக்கு கடவுள் எனக்கு இவ்ளோ பெரிய தண்டனையைக் கொடுத்தார்…” சொல்லிக் கொண்டே தேம்பியவளின் அருகே நின்றவர் அவளது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்.
“நந்து, அழாதடி… சகிக்கான் பற்றுனில்லா… நினக்கு இப்படி ஆயிருச்சேன்னு நினைக்கும்போது மனசு பதறிப் போகுது…” ஷீலா மகளைத் தேற்ற முயல அவரை நோக்கியவர், “அ..அப்பா எங்கேம்மா… அவருக்கு ஒண்ணும் இல்லையே…” என்றாள் தந்தையைக் காணாமல். தனது நிலை மறந்து தந்தைக்கு எதுவும் நேர்ந்ததோ என்று துடிக்கும் அன்பு மகளைக் காண்கையில் அவருக்கு துக்கம் பொங்க வெடித்துக் கதறினார்.
“ஐயோ ஆன்ட்டி, நீங்களே இப்படித் தளர்ந்து போனா அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லுறது…” என்றான் ஆதி. முகத்தை மூடிக் கொண்டு கதறி அழும் நந்தினியைக் காண எல்லாரின் இதயத்திலும் கண்ணீர் வழிந்தது.
சில இழப்புகளுக்கு
மனம் யாருடைய
ஆறுதலையும்
ஏற்றுக் கொள்வதில்லை..
அந்த நேரத்தில்
எல்லாமே மாயை போல்
வாழ்க்கையே அந்நியமாய்
ஒரு பிம்பம் தோன்றுகிறது…
அதை ஏற்கவும் முடியாமல்
கடக்கவும் முடியாமல்
பழகிக் கொள்ளப் பிடிக்காமல்
எட்டி நின்றே பார்க்கிறது…
எதுவும் அத்தனை சீக்கிரத்தில்
கடந்து போவதில்லை…
முழுக்க முழுக்க சில நேரம்
வலிக்க வைத்தே
ஏற்றுக் கொள்ளத் துணிகிறது…
ஏற்றுக் கொண்டதெல்லாம்
மனதுக்கு என்றும்
ஏற்புடையதல்லவே…

Advertisement