Advertisement

அத்தியாயம் – 23
வாழ வேண்டிய வயதில் பெண் இப்படிக் கால் இழந்து முடங்கிப் போனால் அவளது எதிர்காலம் என்னாகும் என்ற பயம் நந்தினியின் அன்னை ஷீலாவின் மனதைக் கலங்க வைத்தது. நந்தினிக்கு விபத்து என்றதும் காண வருகிறோம் என்ற அண்ணன் குடும்பம் அவளுக்கு கால் போன விஷயம் தெரிந்ததும் வராமல் அப்படியே பதுங்கிக் கொண்டது.
ஷீலாவின் அண்ணி போன் செய்து “வருணுக்கு திடீர்னு ஒரு வெளியூர் வேலை வந்திருச்சு… அவன் இல்லாம நாங்க மட்டும் எப்படி வர முடியும்…” என்றவர், அடுத்து பக்குவமாய் தனது மனதில் உள்ளதையும் சொன்னதைக் கேட்க ஷீலாவுக்கு மகளது கல்யாண ஆசை தொலைந்து போனது.
“ஷீலா, கல்யாணப் பேச்சைத் தொடங்கியதுமே இப்படி அபசகுணமா நடக்குதுன்னா அவங்களுக்குள்ளே ஏதோ பொருத்தம் சரியில்லைன்னு தானே அர்த்தம்… அதனால இனி அதைப் பத்தி பேசவேண்டாம்னு நினைக்கறேன்… வருண் வந்ததும் நாங்க அவளைப் பார்க்க வரோம்…” என்று மலையாளத்தில் கூறி போனை வைத்து விட மனதுக்குள் சொந்தத்தில் இருந்த நம்பிக்கை அறவே முறிந்து போனது.
ஆதித்யாவுக்கும் நந்தினிக்கும் உள்ள காதலைப் பற்றி அவர்களுக்குத் தெரியாவிட்டாலும் அவன் தன்னை நந்தினியின் நண்பன் என்று அவர்களிடம் கூறிக் கொண்டாலும் ஆதியின் துடிப்பும், பதட்டமும், நந்தினிக்காய் தனது கையிலிருந்த சேமிப்பு முழுதும் கொண்டு வந்து கொடுத்ததும் எல்லாம் அது வெறும் நட்பு மட்டுமல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது. தனது செய்கைகள் தங்கள் காதலை வெளிப்படுத்தி விடுமோ என்றெல்லாம் ஆதியும் யோசிக்கவில்லை. நந்தினிக்கு இனி எல்லாமே தான்தான் என்ற எண்ணத்துக்கு வந்திருந்தான்.
ஆனால், நந்தினியின் தந்தை சிவராமனுக்கு அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் அந்தப் பணத்தை ஏற்றுக் கொள்ள தயக்கமாய் இருக்கவே முன்தினம் ஆதி சென்னையிலிருந்து திரும்பியதும் இரவு விசாரித்தார்.
“தம்பி, இந்த உதவி நீங்க நந்தினியோட உள்ள நட்புக்காகப் பண்ணறீங்கன்னா ரொம்ப சந்தோஷம்… திருப்பிக் கொடுத்துடுவேன்… இல்ல, வேற எதுவும் நினைச்சுப் பண்ணறீங்கன்னா…” என்று இழுக்கவும் ஆதி அவருக்கு புரிந்து விட்டதோ என்பது போல் நோக்கினான்.
“அங்கிள்… எங்களுக்குள்ள இருக்கறது வெறும் நட்பு மட்டும் தானா, இல்ல காதலான்னு கேக்கறிங்க, அப்படித்தானே…” என்றவன், அவர் தலையாட்டவும் தங்கள் காதலை ஒத்துக் கொண்டான்.
வீட்டில் தந்தை தங்கள் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதையும் கூறினான். ஆனால் எந்த சூழலிலும் தான் நந்தினியைத் தவிர வேறு யாரையும் மணக்கப் போவதில்லை என்ற உறுதியையும் அவரிடம் கூறினான்.
“குடும்பத்தை எதிர்த்துகிட்டு கல்யாணம் பண்ணறதில் எனக்கு விருப்பம் இல்லை தம்பி… அதும் என் பொண்ணு இப்ப இருக்கற நிலைமைல…” என்றார் சிவராமன்.
“அங்கிள், என் அப்பா தான அவளை வேண்டாம்னு சொன்னார்… நான் சொல்லலையே…” என்றான் அவன்.
“இப்ப உள்ள சூழ்நிலைல உங்க உதவியை என்னால மறுக்க முடியலை… ஆனா, உங்க அப்பா சம்மதிக்காம என் பொண்ணை உங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க நான் விரும்பலை…” என்றவர் எழுந்து சென்று விட்டார்.
அவர் சொன்னதில் மனம் குழம்பினாலும் பிறகு அவரை சரி பண்ணிக் கொள்ளலாம்…” என்று ஆதியும் விட்டுவிட்டான்.
வீட்டிலிருந்து கிளம்பிய மூவரும் மருத்துவமனையை அடைந்து நந்தினிக்கான வார்டை அடையும்போது பரபரப்புடன் எதிரில் வந்தார் நர்ஸ் ஒருவர்.
“சார், எங்க போயிட்டிங்க… அந்த பேஷன்ட்க்கு நினைவு திரும்பினதும் விஷயம் தெரிஞ்சு ரொம்ப கத்தி ரகளை பண்ணினாங்க… அவங்க கதறலைப் பார்த்து அவங்க அப்பாவும் மயக்கம் போட்டு விழுந்துட்டார்… அவரையும் அட்மிட் பண்ணி டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காங்க… பாவம், அவங்க அம்மா அழுதுட்டே இருக்காங்க… சீக்கிரம் போங்க…” என்றதும் மூவரும் பதட்டத்துடன் நந்தினியின் அறைக்குள் நுழைந்தனர்.
நந்தினிக்கு அப்போதுதான் உறக்க ஊசி போடப்பட்டிருக்க அவள் கண்ணில் மிச்சமிருந்த கண்ணீர் இன்னும் கன்னத்தில் ஈரத்துடன் பளபளக்க அவள் அருகே அமர்ந்து வாயைப் பொத்தி அழுது கொண்டிருந்தார் அவள் அன்னை ஷீலா.
“எ..என்னாச்சு ஆன்ட்டி…” கேட்டுக் கொண்டே அவர் அருகில் வந்தவனிடம், “அவளுக்கு எல்லாம் மனசிலாயி…” சொல்லிக் கொண்டே அழுகையுடன் திரும்பியவர் அவன் பின்னில் வந்தவர்களைக் கேள்வியும் நோக்க, “அம்மாவும், தம்பியும்… நந்தினியைப் பார்க்க வந்திருக்காங்க…” என்றான்.
“வாங்க…” என்றவர், “நீங்க கிளம்பி குறைச்சு நேரத்துல அவளுக்கு ஓர்ம வந்திருச்சு… அவளுக்கு என்ன தோணியோ, காலை அசைக்க முடியலைன்னு பார்த்தாளோ என்னவோ, சட்டுன்னு போர்வையை விலக்கிப் பார்த்தவ, ஐயோ… என் காலு என்னாச்சுன்னு கத்திக் கதறத் தொடங்கிட்டா… நாங்க எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி பண்ணியும் முடியல… நான் எப்படி கால் இல்லாம வாழப் போறேன், என்னால முடியாது… பேசாம என்னைக் கொல்ல சொல்லிடுங்கன்னு அவ கதறின கதறலைப் பார்த்து தாங்கிக்க முடியாம அவருக்கு மயக்கம் வந்திருச்சு… அதைப் பார்த்ததும் ஐயோ, அப்பாக்கு என்னாச்சுன்னு… இன்னும் அழத் தொடங்கிட்டா…” கண்ணீருடன் கூறினார். அதைக் கேட்கும்போதே மூவரின் மனமும் பதற நந்தினியை வேதனையுடன் பார்த்தார் சகுந்தலா.
“அவளைக் கன்ட்ரோல் செய்ய முடியலைன்னு டாக்டர் ஊசி போட சொல்லிட்டார்…” சொன்ன ஷீலாவுக்கு நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று புரியாமல் நின்ற சகுந்தலாவின் கண்ணிலும் கண்ணீர் நிறைந்து வழிந்தது. கனத்த மனதுடன் நந்தினியின் அருகில் வந்தார். அருளுக்கும் நடந்ததைக் கேட்டு வருத்தமாய் இருந்தது. ஆதியின் கண்ணீரைக் கண்டவன் அவன் கையைப் பிடித்து அழுத்தி ஆறுதலாய் தட்டிக் கொடுத்தான்.
“பார்த்தீங்களாம்மா, என் நந்து எப்படிக் கிடக்கறான்னு பார்த்தீங்களா… எப்பவும் கலகலன்னு பேசிட்டு, துருதுருன்னு ஓடிட்டு இருக்கறவ இப்ப கண்ணீரோட எப்படி இருக்கான்னு பாருங்க… இ..இவளை என்ன சொல்லி நான் சமாதானப் படுத்துவேன்…” கேட்கும்போதே மகனின் கண்ணில் நீர் நிறைய சகுந்தலாவுக்கு மகனை எப்படி ஆறுதல் படுத்துவதென்று புரியாமல் நந்தினியைப் பார்த்தார்.
தனக்கு நடந்ததைப் பற்றித் தெரிந்து கொண்ட அதிர்ச்சியின் மிச்சம் இன்னும் அவள் முகத்தில் இருக்க தாங்க முடியாத வேதனையுடன் முகத்தை சுளித்து கன்னத்தில் உறைந்த கண்ணீருடன் எல்லாம் மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது கன்னத்துக் கண்ணீரை தனது முந்தானையால் ஒப்பியவர் கலைந்திருந்த முடியை ஒதுக்கி விட்டு மெல்ல தடவிக் கொடுத்தார்.
“இத்தனை அழகான, நல்ல பெண்ணுக்கு இப்படி ஒரு துயரம் நடந்திருக்க வேண்டாம்… கடவுளே… உனக்கு அப்பப்போ கண் இல்லாமப் போயிடுமா…” என மனதுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டே அவள் முகத்தையே பார்த்தார்.
“ஆன்ட்டி, அம்மா இருப்பாங்க… வாங்க, அங்கிளைப் பார்த்திட்டு வரலாம்…” ஆதி சொல்ல ஷீலா கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தார்.
“ஆதி, அவங்க எதுவும் சாப்பிட்டாங்களா, சாப்பிட எதுவும் வாங்கிட்டு வர சொல்லவா…” சகுந்தலா கேட்கவும்,
“இல்ல பசிக்கல, எதுவும் வேண்டாம்… கொஞ்சம் கழிச்சு காபி குடிச்சுக்கறேன்…” என்றார் ஷீலா.
“நான் காபி வாங்கிட்டு வரேன் மா…” என்ற அருள் அங்கிருந்த பிளாஸ்க்கை எடுத்துக் கொண்டு கான்டீனுக்கு நகர்ந்தான். தந்தையின் பிடிவாதம் மட்டும் இல்லையென்றால் சந்தோஷத்துடன் தனது அண்ணியாய் வீட்டுக்கு வர வேண்டிய பெண் இப்படி சாறிழந்த சக்கைபோல் துவண்டு கலங்கிக் கிடப்பதைக் காண அவனுக்கும் வருத்தமாய் இருந்தது.
சகுந்தலா நந்தினிக்குத் துணையிருக்க ஆதியும், ஷீலாவும் சிவராமனைக் காண சென்றனர். அடுத்த அறையிலேயே அவரையும் அட்மிட் செய்திருந்தனர். கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க சோர்வுடன் படுத்திருந்தவருக்கு மயக்கம் தெளிந்திருந்தது. உடல் நோய்க்கு வேண்டிய மருந்துகளைத் தவறாமல் எடுத்துக் கொண்டிருந்தாலும் மகளைப் பற்றிய மனச்சோர்வு அவரைத் தளர்த்தியிருந்தது.
கணவர் அருகில் சென்ற ஷீலா, “என்னங்க…” என்று அழைக்கவும் கண்ணைத் திறந்தார்.
அவர் கையை ஆதரவாய் பற்றிக் கொண்டவர், “நீங்களே இங்கனே தளர்ந்து போயால் நான் என்ன பண்ணுவேன்… இப்ப எங்கனே உண்டு…” என்றார் கண்ணீருடன். மனைவியைப் பரிதாபமாய் பார்த்தவர் கண் கலங்கினார்.
“எ..என்னால முடியல ஷீலா… ஐயோ, என் காலு போச்சே… இனி நான் எப்படி இருக்கப் போறேன்னு நந்தினி கதறின கதறல் என் நெஞ்சுக்குள்ள இடி விழுந்த போல கேக்குது… அவளை எப்படி சமாதானப்படுத்துவோம்… அவ எதிர்காலம் என்னாகும்னு மனசுக்குள்ள தோணின பயம் என்னைத் தளர்த்திடுச்சு… இனி நம்ம பொண்ணு வாழ்க்கை அவ்வளவு தானா…” கேட்கும்போதே கண்ணீர் வழிந்தது.
அவருக்கு பதில் சொல்லத் தெரியாமல் ஷீலாவும் கலங்க ஆதிக்கு கலக்கமாய் இருந்தது.

Advertisement