Advertisement

“உன் பிள்ளை என் பேச்சை எங்க கேக்கறான்… அதான் அந்தப் பொண்ணு கிட்டப் பேசிப் பார்க்க நினைச்சேன்… அதுவும் நான் சொன்னதைப் புரிஞ்சுகிட்டு, சரின்னு சொல்லுச்சு… அதுக்காக ஏதோ கார் வந்து அவளை இடிச்சதுக்கு என்னைக் கொலைகாரன்னு சொல்லுவானா…”
“அவன் ஏதோ ஆத்திரத்துல சொல்லிட்டாங்க… அது சரின்னு நான் சொல்ல வரலை… ஆனா அந்தப் பொண்ணுக்கு இப்படி ஆக மறைமுகமா நீங்களும் ஒரு காரணமாகிட்டிங்களே…”
“என்னது, நான் காரணமா…”
“ம்ம்… நீங்க பேசாம இருந்திருந்தா அவங்களுக்குள்ள எந்தப் பிரச்னையும் வந்திருக்காது… விபத்தும் நடந்திருக்காது…” சகுந்தலா சொன்னதைக் கேட்டு அவர் அமைதியாய் யோசிக்க முதன்முறையாய் தான் செய்தது தவறோ என்ற எண்ணம் வந்தது.
“என்ன இருந்தாலும் வயசுப் பொண்ணு… நம்ம வீட்ல இல்லேன்னாலும் யார் வீட்லயோ வாழ வேண்டிய பொண்ணு… கால் இழந்து நிக்கறதேல்லாம் நரகம்… நீங்க பேசினதுக்கு அது நல்ல பொண்ணா இருக்கவும் தான சரின்னு சம்மதிச்சிருக்கு… பாவம், அந்தப் பொண்ணைப் பெத்தவங்க… அவங்க மனசு என்ன பாடுபடும்…”
“அதுக்கு இப்ப என்னை என்ன பண்ண சொல்லற…” என்றார் சுந்தரம் சிடுசிடுப்புடன்.
“நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு… இதெல்லாம் கேட்டுட்டு கண்டுக்காம இருக்க என் மனசுக்கு முடியலைங்க…” சொல்லும்போதே சகுந்தலா அழத் தொடங்கினார்.
“ப்ச்… அழுதிட்டே இருக்காம என்ன சொல்ல வந்தியோ சொல்லு…” என்றவரின் குரலிலும் சிறுவருத்தம் தெரிந்தது.
“நாம ஒரு எட்டு போயி அந்தப் பொண்ணைப் பார்த்திட்டு வந்திடலாமா…” என்றதும் அவர் முகம் இறுகியது.
“இங்க பாரு சகு… எனக்கு அந்தப் பொண்ணு மேல எந்த கோபமும் இல்லை… சொல்லப்போனா அவளோட பேசின பிறகு நல்ல அபிப்ராயம் கூட இருக்கு… வாழ வேண்டிய வயசுல இப்படி ஆயிருச்சேன்னு வருத்தப்படறேன்… ஆனா, உன் பிள்ளையை நான் மன்னிக்கத் தயாராயில்லை… அவனைப் பார்க்கக் கூட விரும்பல…” என்றார் உறுதியாக.
“ம்ம்… அந்தப் பொண்ணோட நிலமைக்கு நாமளும் ஒரு காரணம்னு நாளைக்கு பழிச்சொல் வந்திடக் கூடாதுங்க…  அ..அதனால நானும் அருளும் வேணும்னா பார்த்திட்டு வரட்டுமா…” தயங்கிக் கொண்டே கேட்டார் சகுந்தலா.
ஒரு நிமிடம் திகைப்புடன் யோசித்த சுந்தரம், “ம்ம்… ஆனா, இதைக் காரணமா வச்சு உன் பிள்ளையை மறுபடி இந்த வீட்டுக்குள்ள கொண்டு வர மாட்டேன்னு சத்தியம் பண்ணனும்… பண்ணுவியா…” என்றார். உண்மையில் சுந்தரத்தின் மனதில் மகன் சொன்ன வார்த்தைகள் பெரிய வலியை உண்டு பண்ணி இருந்தன. அவளும் வாழ வேண்டிய இளம் பெண்… இந்த வயதில் இப்படி ஒரு விபத்து ஏற்பட தானும் மறைமுகமாய் ஒரு காரணம் என்று மனைவி சொல்லவும் தனது செய்கைக்காய் உண்மையிலேயே வருத்தம் தோன்றியது. மனைவியின் அழுகையும் மனதை உலுக்க சம்மதித்திருந்தார்.
சகுந்தலாவும் யோசித்துவிட்டு, “இல்லீங்க… இந்த சம்பவத்தைக் காரணமா வச்சு நிச்சயம் நான் அவனை வீட்டுக்கு வர வைக்க மாட்டேன்… அவன் பேசினதில் எனக்கும் கோபம் இருக்கு… அவன் தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேக்கற வரைக்கும் நான் எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன்…” என்றார் தீர்மானமாக.
“ம்ம்… நல்லது… ரெண்டு பேரும் இன்னைக்கு பிளைட்ல போயிட்டு நாளைக்கு டிராவல்ஸ் பஸ்ல திரும்பிருங்க… அவங்களுக்கு எதுவும் உதவி வேணும்னாலும் பண்ணு… போயிட்டு வாங்க…” என்ற கணவரை உண்மையிலேயே அன்போடு நோக்கினார் சகுந்தலா.
“பலாப் பழம் போல வெளியே முள்ளும் உள்ளே மதுரச் சுளையுமாய் இருக்கும் இந்த மனிதனையா என் மகன் கொலைகாரன் என்றான்…” வருத்தத்தில் பெருமூச்சு வந்தது.
“சரிங்க…” அதுவரை இருந்த சோகம் மாறி சற்று உற்சாகமாய் ஒலித்த மனைவியின் குரலில் திருப்திப்பட்டவராய் வெளியே கிளம்பினார் சுந்தரம். பெற்றோர் பேசுவதை கவனித்தபடி நின்ற மகனும், மகளும் அன்னையிடம் வந்தனர்.
“என்னமா, அப்பா நாம பெங்களூரு போக சம்மதிச்சிட்டாரு… அவர் இருந்த கோபத்துக்கு நீங்க இப்படி கேட்டதும் இன்னும் கோபமா கத்தப் போறாருன்னு நினைச்சேன்…” அருள் சொல்லவும் புன்னகைத்தார் சகுந்தலா.
“அவருக்குள்ளும் ஈரமான மனசு இருக்கு டா… அதென்னமோ சின்ன வயசுல இருந்து கிடைச்ச ஏமாற்றமும், உதாசீனமும், மனசைப் பாறை போல இறுக வச்சிருக்கு… அதோட அவர் பார்த்த காதல் எல்லாம் நாசத்தை மட்டுமே கொடுத்ததால எந்தக் காதலையும் ஏத்துக்க அவர் தயாரில்லை… உன் அண்ணன்தான் அவசரப்பட்டு ஆத்திரத்துல பேசக் கூடாதது எல்லாம் பேசிட்டான்… அவனுக்கு அங்க போயி இருக்கு…” என்றவர், “சரி, சீக்கிரம் கிளம்பறதுக்கு ரெடி பண்ணு… பத்து மணி பிளைட்டுக்கு டிக்கட் புக் பண்ணிரு… நான் சமையலை சீக்கிரம் முடிக்கறேன்…” என்றவர் அடுக்களைக்கு செல்ல குந்தவை முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
“நான் தனியா இங்க இருக்கணுமா… நானும் வரேன்மா…”
“அப்பா துணைக்கு இருக்கார்ல, அப்புறம் என்ன… நாங்க என்ன பிக்னிக்கா போறோம்… நீயும் வரேன்னு சொன்னா அப்பாக்கு கோபம் வரும்… இப்ப நாங்க மட்டும் போயிட்டு வரோம்… நீ அப்பாகூட இரும்மா…” என்றார் சகுந்தலா. சீக்கிரமே சமையலை முடித்து பேருக்கு சாப்பிட்டுவிட்டு அருளின் பைக்கிலேயே இருவரும் ஏர்போர்ட் கிளம்பினர். சுந்தரம் முகத்தை தூக்கி வைத்திருந்தாலும், “அம்மாவை பார்த்து கூட்டிட்டுப் போடா…” என்றார் மகனிடம்.
“சரிப்பா…” அருள் தலையாட்ட, “போயிட்டு வர்றேங்க…” என்ற மனைவியிடம், “ம்ம்… அங்க போயி உன் பிள்ளையைப் பார்த்ததும் எனக்கு கொடுத்த வாக்கை மறந்துடாதே… போனமா வந்தமான்னு இருக்கணும்…” என்றார் கண்டிப்புடன்.
“சரிங்க… குந்தவை, அப்பாவை கவனிச்சுக்கடி, பத்திரமா இரு…” என்றுவிட்டு மகனின் பின்னில் பைக்கில் அமர்ந்தார்.
பிளைட் அன்று சற்றுத் தாமதமாக பனிரெண்டு மணிக்கு ஆதியின் பிளாட்டில் இருந்தனர்.
அன்னை வருகிறார் என்றதும் உண்மையிலேயே அவனுக்கு மிகப் பெரிய ஆறுதலாய் உணர்ந்தான். கீழே விழுந்ததில் தலையில் அடி பட்டிருந்ததால் ஒரு நாள் முழுதும் மயக்கத்தில் இருந்த நந்தினி அடுத்த நாளும் அடிக்கடி நினைவு திரும்புவதும், மயக்கத்திற்குப் போவதுமாய் இருக்க, உணரும்போது வலியில் கதறுபவளை சமாளிக்க முடியாமல் உறக்க ஊசி போட்டு உறக்கத்திலேயே வைத்திருந்தனர்.
அவளது நிலை கண்டு அவளது பெற்றோர் துவண்டு கதற ஆதிதான் ஆறுதல் சொல்லித் தாங்கிக் கொண்டிருந்தான். அன்று காலையில் அவளது காலும் நீக்கப்பட்டிருக்க ஆதியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கட்டுப்பாட்டை மீறி கண்ணிலிருந்து வழியும் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அப்போது தான் அருள் போனில் அழைத்து அவர்கள் வருவதை சொல்ல பிளாட்டுக்கு சென்று காத்திருந்தான். நந்தினிக்கு இன்னும் அவளது காலை அகற்றியதைப் பற்றி சொல்லி இருக்கவில்லை. அவளுக்குத் தெரியும்போது…
ஆதியால் யோசிக்கவே முடியவில்லை. அவளை எப்போதும் உறக்கத்திலேயே வைத்திருக்க முடியாதே… உணர்வு திரும்பி, “என் கால் எங்கே என்று கேட்டால் என்ன செய்வேன்…” என்று மனதுக்குள் கதறிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அன்னையின் வருகை மனதுக்கு சற்று ஆறுதலாய் இருந்தது.
முன்னமே ஆதியின் பிளாட்டுக்கு வந்திருந்ததால் இருவரும் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்துவிட்டனர்.
சோகமே உருவாய் கதவைத் திறந்த மகனைக் கண்டதும் சகுந்தலாவுக்கு மனதைப் பிசைந்தது. அவன் மீதிருந்த கோபம் எல்லாம், “அம்மா…” என்று அவரைக் கட்டிக் கொண்டு கதறும் மகனைக் கண்டதும் உருகிப் போனது. அவருடைய கண்களும் கலங்கத் தொடங்க ஆறுதலாய் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
அருளுக்கும் கஷ்டமாய் இருக்க, “அண்ணா… ப்ளீஸ் அழாத… இப்ப அவங்களுக்கு எப்படி இருக்கு…” என்றான்.
“ம்ம்… எதுவும் தெரியாம தூக்கத்திலேயே இருக்கா…”
“ஆதி, கலங்காதப்பா… இந்த நேரத்துல உன்னோட தைரியம் தான் அந்தப் பொண்ணுக்கும், அவளைப் பெத்தவங்களுக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்…”
“முடியலியே மா… எழுந்து என் கால் எங்கேன்னு கேக்கப் போறவளுக்கு நான் என்ன பதில் சொல்லப் போறேன்னு தெரியலியே…” சொல்லும் போதே வார்த்தைகள் வெடிக்க கண்கள் நிறைந்து கன்னத்தை நனைத்தது.
முந்தானையால் அவன் கண்ணைத் துடைத்துவிட்டவர், “நீ எதுவும் சாப்பிட்டியா…” என்று கேட்க, ஒருநாள் முழுதும் சாப்பாட்டைப் பற்றியே மறந்திருந்தவன் அன்னையின் பரிவான கேள்வியில் இடவலமாய் தலையாட்டினான்.
“நீ போயி குளிச்சிட்டு வா… நான் சீக்கிரம் எதாச்சும் சமைக்கறேன்… ஹாஸ்பிடல் போகலாம்…” என்றவர், “அருளு, கூட்டிட்டுப் போ…” என்று மகனிடம் சொல்லி நகர்ந்தார்.
குளிக்க, சாப்பிட மறந்து மரத்துப் போயிருந்தது அவன் மனது. நந்தினியின் பெற்றோருக்கு மட்டும் நேரத்துக்கு உணவு வாங்கிக் கொடுக்க மறக்கவில்லை. அவர் ஒரு ஹார்ட் பேஷன்ட் என்று நந்தினி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்ததால் மகளின் இந்த நிலை அவரது ஆரோக்கியத்தைப் பாதித்து விடக் கூடாது என்ற கவலையும் அவனுக்கு சேர்ந்து கொண்டது.
சகுந்தலா உள்ளதை வைத்து பருப்பு சாம்பார், ரசம், முட்டைப் பொறியல் என்று சமையலை முடிக்க, குளித்து வந்தவன் பேருக்கு சாப்பிட்டுவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான்.
நொடிக்கு நொடி நிறம் மாறும்
இந்த வாழ்க்கை வட்டத்தில்
எதற்கிந்த கோபமும் துவேஷமும்…
இறுதியில் ஒரு நாணயம்
மட்டுமே நமக்கு சொந்தமாய்…

Advertisement