Advertisement

அத்தியாயம் – 22
ஆதி சொன்னதைக் கேட்டதும் சகுந்தலா, “ஐயோ, என்னடா சொல்லற…” என்று அலற சுந்தரம் அதிர்ச்சியும் கோபமுமாய் மகனைப் பார்த்து நின்றார்.
“ஆமாம் மா, நந்தினிக்கு போன் பண்ணி மிரட்டி இருக்காரு… அவரை மீறி நாங்க கல்யாணம் பண்ணிகிட்டா இந்த குடும்பத்தை விட்டே என்னை விலக்கி வச்சிருவேன்னு சொல்லி இருக்காரு… அவளும் உங்க குடும்பம் பிரிய நான் காரணமா இருக்க மாட்டேன்னு வாக்கு கொடுத்திருக்கா…” மகன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுடன் சகுந்தலா கணவரைப் பார்க்க அவர் முகம் கன்றி மனைவியின் குற்றம் சாட்டும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்து கொண்டார். இளையவர்கள் எதுவும் புரியாமல் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அது மட்டும் இல்லை மா… அவ இவர் கிட்ட வாக்கு கொடுத்தாலும் அதை பாலோ பண்ணலைன்னா என்ன பண்ணறதுன்னு தான் யாரையோ செட் பண்ணி நாங்க பார்க்குல இருக்குறது தெரிஞ்சு ஆக்சிடன்ட் பண்ண சொல்லி இருக்கார்… அதோட நேர்ல பார்க்கவும் அங்க வந்துட்டார்… இவ்ளோ நாளா உன் ஹீரோவா இருந்த புருஷன் உண்மைலயே வில்லன் மா…” என்றவன் மடிந்து அமர்ந்து அழத் தொடங்க மகனை சமாதானப் படுத்துவதா, அதிர்ந்து பேச்சிழந்து நிற்கும் கணவனிடம் அவன் சொன்னதெல்லாம் நிஜம்தானா என வாதிப்பதா என்று புரியாமல் கண்ணீருடன் நின்ற சகுந்தலா சுந்தரத்தை கேள்வியாய் ஒரு பார்வை பார்க்க அவர் துடித்துப் போனார்.
“சகு, நீ என்னை அப்படி நம்பிக்கை இல்லாமப் பார்க்காத… நான் எதுவும் பண்ணல… இவன் சொல்லுறதை நம்பாத… நான் அந்தப் பொண்ணுக்கு போன் பண்ணிப் பேசினது உண்மைதான்… ஆனா இந்த மாதிரி எதுவும் நான் பண்ணலை… நான் உண்மைலயே பிசினஸ் மீட்டிங் அட்டன்ட் பண்ணத்தான் அங்க போனேன்… ப்ளீஸ், என்னை நம்புமா…” என்றார் சுந்தரம்.
“இல்லமா, இவர் பொய் சொல்லறார்… இவருக்கு காதல் பிடிக்காதுன்னு உலகத்துல யாருமே காதலிக்கக் கூடாதுன்னு நினைக்கறது முட்டாள்தனம்… இவர் நினைச்சதை சாதிக்க என்ன வேணும்னாலும் பண்ணுவார்… அவருக்கு அவர் நினைச்சது தான் முக்கியம்… யாருக்குத் தெரியும்… நாளைக்கு என்னையே கொன்னு போட்டாலும் போடுவார்… என் நந்தினியை கொல்லப் பார்த்த கொலைகாரப் பாவி…” என்றதும் “ஆதி…” என்று கோபத்துடன் சகுந்தலா கத்த, சுந்தரத்தின் கண்கள் அவனை எரித்து விடுவது போல் ஆங்காரத்துடன் நோக்கின.
“என்னடா சொன்ன… இவர் உன்னைக் கொல்லுவாரா… கல்யாணமாகி ரெண்டு வருஷம் கழிச்சுப் பிறந்த உன்னை மூத்த பிள்ளைன்னு மாருலயும் தோள்ளயும் போட்டு வளர்த்துன மனுஷனைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட… என் புருசனுக்கு காதல் பிடிக்காது தான்… அதுக்காக அவர் ஒரு நல்ல அப்பா இல்லைன்னு ஆயிருமா… ஏண்டா இப்படி சொல்லிட்ட…” மகன் கணவனை சொன்ன சொல்லின் வீரியம் தாங்காமல் கண்களில் கண்ணீர் ஒழுக கோபத்துடன் கேட்டார் சகுந்தலா. இளையவர்கள் நடப்பதை அதிர்ச்சியுடன் நோக்கிக் கொண்டு நிற்க குந்தவை அழுதுகொண்டே சொன்னாள்.
“அண்ணா, கொஞ்சம் பொறுமையா இருங்க… அப்பா இப்படில்லாம் பண்ணியிருக்க மாட்டார்ணா…” அவள் சொன்னதைக் கேட்டு இளக்காரமாய் சிரித்தான் ஆதித்யன்.
“ஹூம், உனக்குத் தெரியாது மா… இவர், தான் நினைச்சது நடக்கணும்னு என்ன வேணும்னா செய்வார்… என் ஆபீஸ்ல கூப்பிட்டு நந்தினி போன் நம்பர் வாங்கி அவளை மிரட்டின இவருக்கு ஆக்சிடன்ட் பண்ண வண்டியை ஏற்பாடு பண்ண முடியாதா என்ன… நிச்சயம் பண்ணிருப்பார்…”
“இல்ல, இல்ல… நான் யாரையும் எதுவும் பண்ண சொல்லல…” கத்திய சுந்தரம், “என்னடா சொன்ன, நான் கொலைகாரனா… கொஞ்ச நாள் காதலிச்ச ஒருத்திக்காக உன்னைப் பெத்த தகப்பனையே கொலைகாரன்னு யோசிக்கற அளவுக்கு வந்துட்டியா… இதுக்கு மேலயும் நீ இந்த வீட்ல இருக்கக் கூடாது… என் கண்ணு முன்னாடி நிக்காமப் போயிரு…” அவர் ஆங்காரத்துடன் கத்தியதைக் கண்டு அனைவரும் அதிர்ந்து விழிக்க சகுந்தலா கதறினார்.
“என்னங்க, வேண்டாங்க… அவன்தான் தப்பாப் புரிஞ்சுகிட்டு யோசிக்காம வார்த்தைய விடறான்னா, நீங்களும் கோபத்துல தப்பு பண்ணிடாதிங்க…” கணவனிடம் கெஞ்சினார்.
“ஆமாப்பா, அண்ணன் ஏதோ வருத்தத்துல இப்படிப் பேசிட்டு இருக்கு… நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா…” அருளும் தந்தையை சமாதானப்படுத்த முயன்றான்.
“அருள், நீங்க எதுக்கு இவர்கிட்ட கெஞ்சிட்டு இருக்கீங்க, இதுக்கு மேல நானே இவர் முகத்துல முழிக்க விரும்பல… இவரைப் பாக்குற ஒவ்வொரு நிமிஷமும் என் நந்தினிக்கு நடந்த கொடுமை தான் எனக்கு நினைவு வரும்… நான் கிளம்பறேன்…” என்றான் ஆதித்யன் கோபத்துடன்.
“டேய் ஆதி, நில்லுடா… அவசரத்துல தப்பாப் புரிஞ்சுகிட்டு பின்னாடி வருத்தப்பட வேண்டி வரும்…” அன்னை சொல்ல,
“இல்லமா, எனக்கு எந்த வருத்தமும் இல்லை… காதலிக்கறது ஒண்ணும் கொலை பண்ணற அளவுக்கு மோசமான விஷயம் இல்லையே… இவர் அதையே செய்யத் துணிஞ்ச பிறகு என் காதலை நான் எதுக்கு தூக்கிப் போடணும்… நந்தினிக்கு ஒரு கால் போனாலும் அவளுக்கு இன்னொரு காலா நானிருந்து பார்த்துப்பேன்… நான் வரேன்…” என்றான் ஆதித்யன் எழுந்து தனது பாகை எடுத்துக் கொண்டு.
அவனை கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம், “கிளம்பறதெல்லாம் சரி… மறுபடி இந்த வீட்டுக்கு வர முயற்சி பண்ணறதோ, என் குடும்பத்துல இருக்கவங்களோட பேசவோ கூடாது…” என்று சொல்ல, “நான் வேண்டாம்னு சொன்னது உங்களைத்தான், என் குடும்பத்தை இல்லை…” என்று சொல்லிக் கொண்டே அவன் வாசலுக்கு நடக்க, “ஆதி போகாதடா…” என்று புலம்பியபடி சகுந்தலாவும், “அண்ணா, வேண்டாம்னா…” என்று அழுகையோடு குந்தவையும் செல்ல அவனுக்கு முன்னில் சென்று கையை நீட்டி வழிமறித்து நின்ற அருள், “அண்ணா, ப்ளீஸ், கொஞ்சம் பொறுமையா இருங்க… போகாதிங்க…” என்றான்.
“அருள், இது எனக்கு மட்டுமில்லை, உங்களுக்கான பாடமும் கூடத்தான்… அவரை நம்பாதிங்க…” என்று சொல்லிவிட்டு, “என்னை மன்னிச்சிடுங்கம்மா… இப்படில்லாம் நடக்கும்னு நானும் நினைக்கலை… ஆனா, இனி இவரை என்னால சகிச்சுக்க முடியாது… நந்தினிக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு, நான் கிளம்பறேன்…” என்றவன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம், “உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்லறேன் கேட்டுக்கங்க… எப்ப அவன் என்மேலயே கொலைகாரன்னு பழியைப் போட்டானோ அப்பவே அவனுக்கு நான் அப்பனும் இல்லை… அவன் எனக்குப் பிள்ளையும் இல்லை… இதுக்கு மேல நீங்க யாராவது அவன் கிட்ட பேசறதோ வேற தொடர்போ வச்சுகிட்டா நான் செத்ததுக்கு சமம்…” என்றார்.
“என்னங்க, ஏங்க இப்படில்லாம் சொல்லறிங்க… என்ன இருந்தாலும் அவன் நம்ம புள்ளை இல்லன்னு ஆயிடுமா…”
“இல்லடி, ஆகாது… ஆனா நான் உனக்குப் புருஷன் இல்லைன்னு ஆயிடும்… இவங்களுக்கு அப்பா இல்லைன்னு ஆயிடும்…” ஆத்திரத்துடன் சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்ல, “ஐயோ…” என்று தலையிலடித்துக் கொண்டே அமர்ந்து அழத் தொடங்கினார் சகுந்தலா.
அன்றைய பொழுது வீட்டில் அனைவருக்கும் கண்ணீரும் சங்கடமுமாய் கழிய வீடே அமைதியாய் இருந்தது. மகன் பேசிய வார்த்தைகளில் கோபம் இருந்தாலும் அவனை சுந்தரம் வீட்டை விட்டே போக சொன்னதைத் தாங்கிக் கொள்ள சகுந்தலாவால் முடியவில்லை. நந்தினிக்கு ஆக்சிடன்ட் ஆனதைப் பற்றிய வருத்தமும் சேர்ந்து கொள்ள, என்னதான் இருந்தாலும் மகன் நேசித்த பெண்ணுக்கு இப்படி ஆன கவலையும் சேர்ந்து அழுகையைக் கூட்டியது. அருளும், குந்தவையும் எத்தனை சமாதானப் படுத்தியும் அழுது கொண்டே இருந்தார்.
அடுத்தநாள் காலையிலும் வீட்டில் சோகமே தொடர, அழுது வீங்கிய முகத்துடன் காபி கொண்டு வந்த மனைவியை நோக்கி, “இங்க என்ன இப்ப எழவா விழுந்திருச்சு… ஆளாளுக்கு மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு இருக்கீங்க…” என்று கத்தினார் சுந்தரம்.
“அது ஒண்ணு தான் பாக்கி… நடந்தது எல்லாத்தையும் பார்த்திட்டு நான் இன்னும் உயிரோட இருக்கனே… இந்தக் கொடுமை எல்லாம் பாக்குறதுக்கு செத்துட்டாக் கூடப் பரவால்ல…” கண்ணீருடன் பொங்கிய மனைவியை திகைப்புடன் பார்த்தார் சுந்தரம்.
மனைவியிடம் இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்காத சுந்தரம், “சகு… என்ன பேசற… உன் மகன் சொன்னதை உண்மைன்னு நீயும் நம்பறியா…” என்றார் சற்று தணிந்து
“அவன் சொன்னது உண்மைன்னு நான் சொல்லலை… ஆனா பொறுமையா பேச வேண்டிய விஷயத்தை இப்படி சிக்கலா முடிச்சு விட்டுட்டிங்களேன்னு தான் வருத்தமா இருக்கு…”
“யாரு, உன் மகன் பொறுமையாப் பேசினானா… பெத்த அப்பாவையே நம்பாம அவதான் உசத்தின்னு பேசறான்… நான் சொன்னா கேக்கற நிலமைலையா இருந்தான்…”
“தப்புங்க… அவன் அந்தப் பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு நினைச்சுட்டான்… நீங்க அவளை போன் பண்ணி மிரட்டினது தப்பு… அந்தப் பொண்ணுக்கும் நமக்கும் என்னங்க சம்மந்தம்… யாரோ வீட்டுப் பொண்ணை எந்த உரிமைல நீங்க கால் பண்ணி மிரட்டுனீங்க… உங்களுக்கு எது சொல்லணும்னாலும் நம்ம பிள்ளை கிட்ட தானே சொல்லி இருக்கணும்… அத விட்டு அந்தப் பொண்ணை ஏன் மிரட்டணும்…”

Advertisement