Advertisement

 

1

 

“ஹாய்,ஹலோ பிரண்ட்ஸ்..நான் உங்க அனுஷா..

 

“இன்னைக்கு நாம உங்களுக்கு பிடிச்ச விதத்தில,குறைஞ்ச செலவுல,எப்படி ப்ரைடல் மேக்அப் போடலாம்னு தான் பார்க்கப் போறோம்..

 

“வீடியோக்குள்ள போறதுக்கு முன்னாடி,நம்ம சேனல சப்ஸ்க்ரைப் பண்ணிடுங்க..அப்படியே பக்கத்துல இருக்க பெல் பட்டனையும் ப்ரெஸ் பண்ணிடுங்க..

 

“இப்போ வீடியோகுள்ள போகலாம் வாங்க”பேசிக் கொண்டிருக்கும் போதே,அனுஷாவின் முகத்தில் கலர் ஜெல்லை ஸ்ப்ரே அடித்துவிட்டான் தருண்..அவளது தம்பி!!!

 

 “அக்கா..இந்த லுக்ல நீ குரங்கை விட அழகா இருக்க….இதை நான் எடிட் பண்ணவே போறதில்ல”என்றவன் அனுஷா துரத்தும் முன்னரே அங்கிருந்து கேமராவை எடுத்துக்கொண்டு ஓடினான்.

 

“டேய்,நில்லுடா..சொன்னா கேளு..அதை டெலிட் பண்ணிடுடா..அசிங்கமா ட்ரோல் பண்ணிடுவாங்கடா..

 

“என் தம்பியில்ல..செல்ல கம்பியில்ல..கொடுத்துடு”கெஞ்சிக்கொண்டே,முகத்தை துடைத்துக்கொண்டவாறே, துரத்திக்கொண்டு ஓடினாள்..

 

பத்து நிமிட ஓட்டத்திற்கு பிறகும் அனுஷாவால், தருணை பிடிக்க முடியவில்லை.அக்காவிடமிருந்து தப்பித்து ஓடிய தருண்,எதிரில் ஆஜானுபாகுவாய் நின்றிருந்தவன் மேல் மோத,

 

“ஐயோ..அக்கா…அண்ணன் வந்துட்டான்”கத்திக்கொண்டு,கதவை பாதிக்கும் மேல் மறைத்திருந்த அண்ணன் மகேந்திரனின் இடப்பக்கம் குனிந்து கிடைந்த சந்தில் புகுந்து ஓடிவிட்டான்.

 

அனுஷா அண்ணனை பார்த்து திருதிருவென்று முழிக்க,”இன்னைக்கும் ஆரம்பிச்சுட்டியா..கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் விட்டுத்தொலைன்னு சொன்னா உனக்கு புரியாதா அனுஷா”கோபப்பட்டவனிடம் எதையும் பேசாமல் அமைதியாய் நின்றுவிட்டாள்.

 

அதிகமாய் அண்ணனுடன் அனுஷாவிற்கு ஒட்டுதல் இல்லை.ஆனால் தம்பியும் அவளும் இரட்டை வால்கள்.

 

வழக்கம் போல தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாகிவிட்ட தங்கையை முறைத்துவிட்டு,ஆசுவாசமாய் சோபாவில் அமர,தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் அவனின் இளைய தங்கை மயூரவல்லி.

 

அதை வாங்கிக்கொண்டு பருகியவன்,”அம்மா எங்க மயூரா”கேள்வி கேட்டாலும் பதிலுக்கு அனுஷாவின் முகத்தை தான் மகேந்திரன் பார்த்தான்..அவளுக்கு தான் வீட்டு நிலவரம் அத்துப்படி.

 

“எதிர்த்த வீட்டு மாமி பொண்ணுக்கு இன்னைக்கு நாள் வைக்கிறாங்கண்ணா.அங்க போயிருக்காங்க”

 

“ஓ..அப்போ நீ போய் உன் கை வண்ணத்தை காட்டலையா?”

 

“மேக்அப் போட்டுட்டு,நான் வந்த பின்னாடி தான்,அம்மா அங்க போனாங்கண்ணா..இனி அம்மா வந்த பின்னால தான்,போய் சாப்பிட்டு வரணும்”என்றாள் தங்கையை பார்த்துக்கொண்டே..!!

 

வேண்டுமென்று பார்க்கவில்லை..இயல்பாகவே..’நீ தான் காரணம்’என்பது போல தங்கையை பார்க்க..புரிந்துகொண்டவளாய் மயூரா,உள்ளே சென்றுவிட்டாள்.

 

மகேந்திரன் இதை கவனித்தாலும் எதுவும் சொல்லவில்லை..

 

“அதான் இப்போ நா வந்துட்டேன்ல.இன்னைக்கு வேலை எதுவும் இல்லை.நீ போ..கையோட பேமென்ட் வாங்கிட்டு வந்துடு.இல்லைன்னா மாமி பணத்தை கொடுக்காம ரொம்ப இழுத்துட்டே போயிடுவாங்க”

 

“நீ சொல்றதும் சரி தான்-ண்ணா.மாமியை நம்ப முடியாது”என்றவள்,வெளியே மறைவாய் நின்றிருந்த தம்பியின் முடியை ஆட்டிப்பிடித்துக்கொண்டே இழுத்துக்கொண்டு போனாள்..

 

“ஸ்ஸ்..அக்கா வலிக்குது”அவனின் அலறல்கள் எல்லாம் அவளின் செவியை எட்டவேயில்லை.

 

அனுஷா செல்லவும்,மயூராவை நோக்கி வந்தான் மகேந்திரன்.

 

சமையலறையில் இரவு உணவுக்கான தயாரித்தலில் மூழ்கிப் போயிருந்தாள்.

 

காலடி கேட்கவும்,”சொல்லுண்ணா..எதுவும் வேணுமா”திரும்பாமலையே கை வேலையை நிறுத்தாமலே கேட்க,

 

“எத்தனை நாளைக்கு இந்த ரூம்-க்குள்ளையே அடைஞ்சு கிடப்ப மயூ”-குரலில் வேதனை மண்டிக் கிடந்தது.

 

“எனக்கு அண்ணி வர்ற வரைக்கும்”என்று பிசிறு தட்டாத குரலில் அழுத்தமாய் உரைக்க…அந்த நொடி நிஜமாய் தங்கையின் மனதில் என்ன தான் உள்ளது என்று புரிந்துகொள்ள முடியாத தன்னையே வெறுத்தான்..

 

நேரடியாக எதையும் அவளிடம் கேட்க முடியவில்லை..மறைமுகமாக கேட்கவும் மனமில்லை.

 

ஒருமணி நேரத்திற்கு முன் போனில் சித்தப்பா சொன்ன தகவல்,அவனின் மூளையை கொதிக்க செய்தது..

 

‘அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பேயில்லை’என்ற எண்ணத்துடன்,தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு தான் வீட்டிற்கு நேரத்தில் வந்தான்..

 

ஆனால் மயூவின் முகத்தைப் பார்த்ததுமே,’என் தங்கச்சி அப்படிப்பட்டவ இல்ல’என்ற எண்ணம் வந்தாலும் உறுதியாக நினைக்க முடியவில்லை.

 

இந்நேரம் சித்தப்பா,அப்பாவிற்கும் தகவல் சொல்லியிருப்பார் என்று தெரியும்..அவர் வீட்டிற்கு வந்து ருத்ர தாண்டவம் ஆடுவதற்கு முன்,வீட்டுக்கு வந்துவிட வேண்டுமென்று தான்,இன்றைய மாலைப்பொழுது, ஜிம்மிற்கு செல்லாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.

 

சுவற்றில் சாய்ந்தபடியே மயூவை தீவிரமாய் பார்த்துக் கொண்டிருக்க,அதை உணர்ந்தாலும் அவள் திரும்பவில்லை.

 

அண்ணன் கண்ணில் உள்ள ஆராய்ச்சியிலிருந்தே,ஏதோ வேண்டாத பேச்சு காதுக்கு எட்டியிருக்கிறதென்று யூகித்துவிட்டாள்.

 

அதனாலையே அவனை நேருக்கு நேர் பார்க்காமல் வேண்டுமென்றே தவிர்க்க..மகேந்திரனுக்கு தான் படபடப்பு..பரிதவிப்பு எல்லாம்..!!

 

எப்படியாவது தங்கையிடம் கேட்டுவிட வேண்டும் என்று நா பரபரக்க,

 

‘நீ அவனோட ஓடிப் போகப்போறியாமே..உண்மையா?’என  எப்படி கேட்பேன் நான் என்றும் தவித்து தான் போனான் அந்த ஆறடி ஆண்மகன்.

 

வாசலில் அப்பாவின் வண்டி நிறுத்தும் சத்தம் கேட்டது.கூடவே அம்மா,அனுஷா,தருண் குரல்கள் கேட்கவும் வெளியே வந்தான்.

 

வீட்டுக்குள் நுழைந்ததுமே பிரபாகரன்,”எங்கடி அவ..கூப்பிடு அவளை”என்று மனைவியை அதட்ட,

 

“இன்னைக்கு என்னத்த இழுத்து வைச்சிருக்காளோ”வெளிப்படையாகவே சலித்துக்கொண்டு,

 

“மயூ..எங்கடி இருக்க”சத்தமாக அழைக்க,பாதி சமையல் தான் முடிந்திருந்தாலும்,உடனே எப்படியும் திரும்பி வந்துவிட மாட்டோம் என்ற அதீத நம்பிக்கையில் அடுப்பை அணைத்துவிட்டு வெளியே வந்தாள்.

 

மனைவியை பார்த்துக்கொண்டே..”பார்றீ..எவ்வளவு திண்ணக்கத்தோட பயமேயில்லாம வர்றா பாரு..கொஞ்சமாவது அப்பன்னு பயமிருக்கா”ஆத்திரத்தில் கத்தியவர்,

 

“இங்க வாடி”என்று மகளை கை நீட்டி அழைத்தார்.

 

கொஞ்சமும் தயங்காமல் அவரின் முன் நிதானநடையிட்டு வந்து நிற்க,

 

“நேத்து பெருமாள் கோவிலுக்கு போனியா?”எனவும்,

 

“ம்ம்”எனவுமே கொதித்துப் போனவர்,அவளது கன்னத்தில் பலமான அறையை கொடுக்க,வசந்திக்கே அந்த அடி நடுக்கத்தை கொடுத்துவிட்டது.

 

ஒரு அறைக்கே கீழே விழுந்துவிட்டாள்..அடுத்து அடிக்க ஒரு அடி எடுத்து வைக்கும் முன்னே தடுத்த மகேந்திரன்,”பொம்பளப்பிள்ளையை கை நீட்டி அடிக்க வேண்டாம்னு எத்தனை தடவை தான் சொல்றது”அதட்டவும்,அவனை முறைத்தவர்,சின்னவனை அழைத்தார்.

 

“டேய்..நீ நேத்து கிரிக்கெட் விளையாட போனியா?”கேட்கவும்,

 

பயந்துகொண்டே,”ஆமாப்பா”-ஒத்துக்கொள்ள,அவனுக்கும் ஒரு அறை கிடைத்தது..

 

அழுதபடியே அக்காவின் பின்னே சென்று மறைந்துகொண்டான்.

 

அனுஷா அவனை சமாதானம் செய்ய,வசந்தி இருந்த இடத்திலிருந்து நகரவேயில்லை..அடுத்து அவருக்கும் அடி விழ வாய்ப்பிருக்கிறது.

 

மனைவியை நோக்கி தன் பார்வையை திருப்பவுமே அரண்டு போய் அலார்ட்டாகி நின்றார் வசந்தி..

 

“இவளுக்கு துணைக்கு தானே அவனை அனுப்பின!அவன் கிரிக்கெட் விளையாட போயிருக்கான்..அந்த நேரத்தில,இந்த பொட்ட நாயும்,அந்த தெரு நாயும் எப்படி ஓடிப் போலாம்னு பிளான் பண்ணிருக்குதுங்க..!!என் தம்பி போன் பண்ணி விலாவரியா,விளக்கி சொல்லும் போது எனக்கு நாக்கப் பிடுங்கி சாகலாம் போல இருந்துச்சு..என்னடி பொண்ண வளர்க்கற நீ”என்று கை ஓங்கும் போதே இடையில் மகேந்திரன் அம்மாவை மறைத்து நிற்க,ஒன்றும் செய்ய முடியாதவராய்,ஆத்திரம் தனியாமல் சோபாவில் அமர்ந்துவிட்டார்.

 

“எல்லார் மாதிரியுமா நா பொட்டப்பிள்ளைகள வளர்த்தேன்..உனக்கு என்னடி குறை வைச்சேன்”மயூராவை பார்த்து கேள்வி கேட்க,நிமிர்ந்து பார்க்காமல் தலைகுனிந்தபடியே இருந்தாள்.

 

“பதில் சொல்றாளா பாரு கழுதை”கத்தியவர்,

 

“அந்த நாய் இவளை கூட்டிக்கிட்டு போகப் போகுதாம்..போயி என்ன பண்ணுவானாம்..? இல்ல இவ என்ன பண்ணுவாளாம்..?? வருஷம் திரும்புறதுக்குள்ள பிள்ள பெத்துக்கறத தவிர வேறென்ன தெரியும்,இந்த கழுதைகளுக்கு!!”தேள் கொடுக்காக நாகரீகமாக விஷத்தை தடவ,அதற்கும் நிமிரவில்லை.

 

“உனக்கும் மூத்தவ எவ்வளவு அமைதியா இருக்கா! நாங்க எவன கைகாட்டினாலும் கழுத்த நீட்ட சம்மதம்னு எவ்வளவு அழகா சொல்றா! ஆனா நீ அவளுக்கு முன்னாடியே ஆம்பளை தேடிட்டு இருக்க!! உன்னை என்னடி பண்றது? கழுத்தை நெறிச்சு கொன்னுடவா? இன்னார் பொண்ணு இன்னாரோட ஓடிப் போயிடுச்சுன்னு நாலு பேர் சொல்றதுக்கு முன்னாடி,உன்னைக் கொன்னுடவா? சொல்லு”வார்த்தைகளை அள்ளி வீச,மகேந்திரனால் பொறுக்க முடியவில்லை.

 

அவனுக்கும் ஆத்திரம் தான்.ஆனால் இப்படியெல்லாம் பேச என்ன..தகப்பன் பேசுவதை கேட்கவே அவன் காது கூசியது..

 

“நா பார்த்துக்கறேன்ப்பா..மயூ நா சொன்னா கேட்பா”

 

“ஆமா கிழிப்பா! மூத்தவ இருக்கும் போது இவளுக்கு என்ன அவ்வளவு அவசரம்னு கேட்கறேன்”மீண்டும் ஆரம்பிக்க,

 

“விடுங்கப்பா”மகேந்திரன்,அதட்டவும்,

 

“எப்படிப்பா விடறது? எப்படி விடறது..நா என்னவெல்லாம் இவளை பத்தி நினைச்சு வைச்சிருந்தேன்.அதெல்லாம் கூட நடக்கலை விடு..இப்போ பெரியவளுக்கு கல்யாணத்த முடிச்சிட்டா,அடுத்து ஒரு ரெண்டு வருஷத்தில இன்னும் கொஞ்சம் பணம் காசு சேர்த்து இவளுக்கு,அனுஷா மாதிரியே  பெரிய இடத்தில மாப்பிள்ள பார்த்து கட்டிக்கொடுக்கணும்னு இல்ல நா ஆசைப்பட்டு கிடக்கேன்..

 

ஆனா இவ…அந்த தெரு பொறுக்குறவன்  இல்ல வேணும்ங்கறா..அவனுக்கு நிலையா ஒரு வேலை இருக்கா? கெட்ட பழக்கமாவது இல்லாம இருக்கா? பொம்பள சகவாசம் இல்லாம இருக்கா ? இல்ல கொஞ்சமாவது நல்ல குணமிருக்கா? ஒண்ணுமேயில்லேயேடா..அவன நம்பி போனா..இவளை கொன்னு போடுவானேடா..

 

இவளுக்கு ஏன் அது புரிய மாட்டேங்குது.அவன் கூட போனா அடுத்த வேலை கஞ்சிக்கும் இவ தாண்டா உழைக்கணும்..இதுக்கா வீட்டை விட்டு வெளிய கூட அனுப்பாம,வெயில் படாம பிள்ளையை வளர்க்கறேன்”ஆற்றாமையில் மனம் நொந்து போய் பேச,வசந்திக்கும் அனுஷாவிற்கும் கூட அழுகை வந்தது.

 

ஆனால் மயூரா அழாமல் இருக்க,மனம் விட்டுப்போய் அறைக்குள் போய்விட்டார்..

 

அனுஷாவிற்கு தாங்கவில்லை.

 

“ஏன்டி..ஏன் இப்படி அவங்களை போட்டு படுத்தற..நீயும் இப்படி அடி வாங்கி சாகற..கன்னத்தைப் பாரு..எப்படி சிவந்து போயிருக்குன்னு..இப்படியெல்லாம் அடி வாங்கணும்னு உனக்கு தலையெழுத்தா..அந்த நாயை மறந்து தான் தொலையேன்டி..”கண்ணீரை துடைத்தவள்,

 

“நா வேணா,உனக்கும் சேர்த்து மாப்பிள்ளை பார்த்து,ஒரே முகூர்த்தத்தில நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை நடத்த சொல்லவா? அவன் வேண்டாம்டி உனக்கு..”புதிதாய் யோசனை சொல்ல,மகேந்திரனுக்கும் அப்படியே செய்துவிடுவோமா என்றும் தோன்றியது..அவனது தாய் தந்தைக்கும் அதுவே சரியெனப்பட்டது..

 

 

அனுஷாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,விழுவேனா என்று துடித்துக் கொண்டிருந்த கண்ணீருக்கு இமைமூடி அணைபோட்டவள்”பாதிலேயே சமையல நிறுத்திட்டு வந்துட்டேன்..போய் பார்க்கறேன்.முடிச்சிட்டு வந்து உனக்கு ரோஜா மாலை கோர்த்து தர்றேன்”என்று சொல்லிவிட்டு எழுந்து செல்ல,

 

இவள் எந்த மாதிரியான பிறவி என்று புரிந்துகொள்ள முடியாமல் தவித்துப்போய் அமர்ந்திருந்தாள்.

 

அனுஷாவின் பேச்சைக் கேட்ட வசந்திக்கு ஒரே யோசனை..

 

“சின்னவளுக்கும் இப்பவே கல்யாணம் முடிச்சிடலாமாங்க”யோசனையாய் அமர்ந்திருந்த கணவனிடம் கேட்க,

 

“நானும் அதையே தான் நினைக்கறேன்.ஏற்கனவே ரெண்டு மூணு பேர் பொண்ணு கேட்டாங்க தான்.நான் தான் ரெண்டு வருஷம் போகட்டும்னு சொல்லிட்டேன்..அதுவுமில்லாம உள்ளூர்ல நம்மளால மாப்பிள்ளை பார்க்க முடியாது.பாதி பேருக்கு அரசல் புரசலா விஷயம் தெரியும்.அந்த ரவ்டி பயலும் விடமாட்டான்.ஒண்ணுக்கு நாலா சொல்லி கல்யாணத்த நிறுத்த தான் பார்ப்பான்…வெளியூர்ல இருக்க என்னோட அக்கா பையனுக்கு கொடுக்கலாம் தான்..அவனும் நல்ல வேலைல தான் இருக்கான்.ஆனால் அவனைக் கண்டாலே சின்னவளுக்கு பிடிக்காதே”எனவும்,வசந்தியும் சாதக பாதகங்களை அலசியவர்,உடன் நிதிநிலைமையையும் அலசினார்.

 

கையிருப்புகள் எல்லாம் தாராளமாக இருப்பதைக் கணக்கிட்டவர்,”சுமதி பொண்ணு கல்யாணத்துக்கு மயூவையும் கூட்டிட்டு போகலாங்க..”எனவும் உள்ளர்த்தம் புரிந்தவராய் சரியென்று தலையசைத்தார்.

 

அவர்களது பக்கம் திருமணத்திற்கு பெண் தயார் என்றால்,இதுபோன்ற திருமண விஷேஷங்களுக்கு பெண்ணை அலங்காரம் செய்து கூட்டிக்கொண்டு போவார்கள்..அங்கேயே தங்கள் சொந்த பந்தத்திலையே அவர்களுக்கு வரன் அமைந்துவிடும்.அனுஷாவிற்கும் அப்படித்தான் அமைந்தது.  

 

இவர்களது பேச்சைக் கேட்டுக்கொண்டு வந்த மகேந்திரன்,”கல்யாணத்துக்கு அவனும் வருவான்,அப்போ என்ன பண்ணுவீங்க?”கேட்டவனிடம்,

 

“ஒண்ணுக்கு நாலு பேர் இருக்கோம்.அவன் எப்படி எம்பொண்ணுகிட்ட பேசறான்னு நான் பார்த்துடறேன்”கோபமாக சொன்னவர் அறையை விட்டு வெளியேறிவிட்டார்.

 

அம்மாவும் மகனும் கவலையோடு பார்த்திருக்க,”டின்னர் ரெடியாகிடுச்சு”குரல் கொடுத்த மயூராவின் எண்ணம் என்ன என்று புரிந்துகொள்ள முடியாமல் தவித்து தான் போனார்கள்.

 

 

Advertisement