Advertisement

நினைவினில் நிறைந்தவளே

அத்தியாயம் 17

ராஜனுக்கு மட்டும் ஏதோ மனம் உறுத்தலாகவே இருந்தது.. தன் மகளிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ..?? என்ற எண்ணம் அவர் மனதில் தோன்ற ,,அதை தன் மனைவியிடம் சொல்ல அதற்கு சுசிலாவோ “இந்த கவலையெல்லாம் விடுங்கங்க .நம்மள விட்டு பிரிய போற கவலைங்க அது” என்று ஏதேதோ கூறி அவரை சமாதானம் படுத்தினார்.

இங்கு அஞ்சலி மீனுவின் புகைப்படத்தை ஒரு டிடேக்டிவ் ஏஜென்சியில் வேலை பார்க்கும் நண்பனிடம் கூறி ,,அவளைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டாள்.
அவள் அறிந்த ஒன்று ,,” அவளுடன் வேலை பார்க்கும் ஒருவனுடன் திருமணம் என்பதே ” தான். இனி தன் வாழ்விற்கு அவள் இடையூறாக இருக்க மாட்டாள் என்று நினைத்து சந்தோஷமாக சுற்றி வந்தாள். ஆனாலும் செல்வாவின் மேல் ஒரு கண் வைத்தே இருந்தாள்.
இரவு செல்வா வீட்டிற்கு வந்ததும் ,,அஞ்சலி அவனை தேடி அவனது அறைக்கு சென்றவள ” அத்தான் சாப்பிட வாங்க” என்று அழைக்க ,,
” நான் வெளியவே சாப்பிட்டேன் மா  ” என்று பொய் கூற
“சரிங்க அத்தான் அட்லீஸ்ட் ஒரு டம்ளர் பால் மட்டுமாவது குடிங்க “என்று கெஞ்ச ,,அவனும் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் சரியென தலையசைத்தான்.
அவளும் சமையலறை சென்று ,, இரு டம்ளரில் பால் சூடு பண்ணி  ஊத்த,, ஒரு டம்ளரில் மட்டும் தூக்க மாத்திரையை கலந்துவிட்டு அதனை எடுத்து கொண்டு மேலே சென்றாள் .
அந்த நேரம் பார்த்து சுபா மாடியிலிருந்து வேகமாக கீழே வர ,, அஞ்சலியிடம் இருந்த ட்ரேயை பிடித்து ” கொடு அஞ்சலி நான் போய்  அண்ணாக்கு கொடுத்துட்டு வரேன் ” என்க
“பரவாயில்லை சுபா நானே குடுத்துகிறேன் “என்றாள் அந்த ட்ரேவை பிடித்துக்கொண்டே
“என்னடா இது…!!! ஒரு வேலை கூட செய்ய விட மாட்டேன்கிறீங்க…??? இந்த வேலைய மட்டுமாவது நான் செய்ரேன்னே “என்க அதற்கு மேல் அஞ்சலி ஒன்றும் பேசாமல் அவளிடம் அந்த ட்ரேவை கொடுத்தாள்.
அதை வாங்கிய சுபா மேலே செல்ல எத்தனிக்க இன்னொரு பால் கிளாஸ் யாருக்கு என்று அஞ்சலியை பார்த்து கேள்வி எழுப்ப ,,”எனக்கு தான்” என்றாள்.
“சரி அப்போ இந்தா இதை நீ எடுத்துக்கோ” என்று ட்ரேவை அவளிடம் நீட்டினாள்.அவளும் ஒன்றை எடுத்துக் கொள்ள சுபா செல்வாவின் அறைக்கு சென்றாள்.
செல்வாவிற்கு பால் கொடுத்துவிட்டு ,,அவன் குடிக்கும் வரை அங்கே காத்திருந்தவள் ,, அவன் குடித்த பிறகு அதை வாங்கி கீழே சென்றாள். அவன் குடிக்கின்றானா..??? இல்லையா…??? என்று அஞ்சலி கதவின் ஓரத்தித் நின்று கவனித்துவிட்டு அவளது அறைக்கு சென்று அந்த பாலை அருந்தினாள்.
சிறிது நேரத்திலே அஞ்சலிக்கு கண்கள் சொக்க அப்படியே கட்டிலில் படுத்து உறங்கிவிட்டாள் .
மண்டபத்தில் இருந்த அனைவரும் அடுத்தநாள் காலை திருமணம் என்ற சந்தோஷத்தில் வேலைகள் செய்தனர்.
மீனு மற்றும் கதிரின் குடும்பத்தினர் அனைவரையும் மொட்டை மாடிக்கு வரும்படி குறுஞ்செய்தி ஒருவர் மூலமாக வந்தது.
அனைவரும் அந்த குறுஞ்செய்தியில் இருந்த நேர்த்திற்கு சரியாக வந்தனர். யார் வர சொல்லி இருப்பார்..??? என்று கேள்வி அவர்களுக்குள் மாரி மாரி கேட்டுக்கொள்ள ,, அனைவரும் கூறியது என்னவோ பதில் தெரியவில்லை என்று தான்.
“உங்க அனைவரையும் கூப்பிட்டது நான் தான்” என்று கூறிக்கொண்டே அவர்களை நோக்கி வந்தான் கதிர்.
“என்ன மாப்பிள இந்த நேரத்துல எங்க எல்லாரையும் வர சொல்லிருக்கீங்க…??? “என்று ராஜன் கேட்க ,, நடுவில் சுசிலா “நாளைக்கு கல்யாணம் மாப்பிள நீங்க இப்ப தூங்கினா தான் நாளைக்கு ஃபிரஷ்சா இருக்க முடியும் “என்று கூற அவன் ஒரு பலத்த புன்னகையை அளிக்க புவனாவின் மனதில் மட்டும் ஏதோ ஒன்று பெரிதாக நடக்க போகுது என்று உணர்த்தியது.
அந்த நேரம் பார்த்து காத்து வாங்கலாம் என்று பவியும் திவ்யாவும் மாடிக்கு வந்தனர். “கல்யாண மாப்பிள்ளை நல்லா தூங்கிட்டு தான் இருக்காரு” என்று கதிர் மொட்டையாக கூற அங்கு இருந்த அனைவருக்கும் தனக்கு காதில் சரியாக தான் விழுந்ததா என்பது போல் பார்த்தனர்.
“என்னடா உளறி கிட்டு இருக்க நீ,,போ போய் படு நாளைக்கு கல்யாணம்” இருக்கு என்று புவனா அவனை பார்த்து அதட்ட ,,
“அம்மா..!!! கொஞ்ச நேரத்துக்கு அமைதியா இருங்க . நான் கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும் உங்க எல்லார்கிட்டயும்” என்றான் கதிர் புதிராக.
“சொல்லுங்க மாப்பிள்ளை “என்று ராஜன் சொல்ல ,,
“நான் சொல்ல போற‌ விஷயம் ரொம்ப பெருசு ,, நான் ஒரு முக்கியமான முடிவெடுத்திருக்கேன் .இதுக்கு நீங்க யாரும் எந்த ஒரு எதிர்ப்பும் சொல்ல கூடாது “என்றான்.
அவனுடைய பேச்சில் பெரியோர்கள் அனைவருக்கும் ஏதோ பயம் வந்து ஆட்கொள்ள சிறியவர்கள் அனைவருக்கும் ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என்று தோன்றுயது.
“நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி மீனுக்குகு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை. அவ உங்க எல்லாருக்காவும் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் கூறி இருக்கா” என்று கதிர் கூற அங்கு இருந்த அனைவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.
திவ்யா மற்றும் பவிக்கும்மே இந்த செய்தியை பெரிய அதிர்ச்சியை தான் கொடுத்தது.
“உனக்கு எப்படி தெரியும் அவளுக்கு இந்த திருமணத்தில இஷ்டம் இல்லன்னு.அவ உன்கிட்ட வந்து சொன்னால ,,நீயா எதாவது முடிவு பண்ணிக்காத “என்று சிறு கோபத்துடன் புவனா கேட்க ,,
“அவளுக்குன்னு ஒரு அழகான வாழ்க்கை காத்திட்டு இருக்கு” என்றான் மொட்டையாக .
“நீ இப்போ என்ன சொல்ல வர ஒழுங்கு மரியாதையா என்னென்னு உண்மைய சொல்லு “என்று புவனா கோபத்தை அடக்கி கொண்டு சொல்ல… அதற்கு கதிர்” செல்வாவும் மீனுவும் உயிருக்கு உயிரா விரும்புராங்க” என்று கூறி ஒரு நொடி நிறுத்திவிட்டு மீனுவின் பெற்றோரை நோக்கினான்.
ராஜன் மற்றும் சுசிலாவை பார்த்த கதிர்,,”உங்களோட பொண்ணு எதுக்கு கல்யாணம் வேணாம்னு சொன்னான்னு தெரியுமா…??? “என்க அவர்கள் தெரியவில்லை என்றனர்.
“ஏன்..?? அத நீங்க தெரிஞ்சிக்க விரும்பலை அங்கில்..??? “என்க அவரால் பதில் கூற முடியாமல் தலைகவிழ்ந்தார்.
“ஏன்னா நீங்க உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி குடுக்கணும்ன்னு தான் நினச்சீங்களே தவிர அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைய அமைச்சி தரனும்ன்னு நினைக்கல” என்றான் பொறுமையை இழுத்து பிடித்து.
இதனை கேட்ட பெற்றோர்கள் இருவரும் அமைதியாகவே இருக்கவே அவனுக்கு தெரிந்த விடயத்தை கூற தொடங்கினான்.
“நிச்சயதார்த்தம் அன்று நடுவில் எனக்கு ஒரு ஃபோன் கால் வர ,, நான் அதை பேசிவிட்டு வர போனேன்”.
சிறிது நேரத்தில் பேசிவிட்டு வரும்போது தான் பார்த்தேன் செல்வா அர்ஜுனை அணைத்து  அழுது கொண்டு இருந்தான். அவனுக்கு அர்ஜுன் ஆறுதல் கூற ,,ஏதோ ஒன்று தவறு நடக்கிறது என்று என் மனது உறுத்த சரி என்னவென்று கேட்கலாம் என்று அந்த அறைக்குள் செல்லும்போது அவர்கள் பேச ஆரம்பித்தனர்.அதன் பிறகு அவர்களுக்கு தெரியாமல் மறைமுகமாக நின்று கொண்டேன்.
******
“டேய்…!!! நான் சொல்றத கேளு மச்சி நாம இந்த திருமணத்த நிறுத்திறலாம் டா . நீயும் கஷ்டப்பட்டு எதுக்கு டா மீனுவையும் கஷ்ட்டபடுத்துற ,, அவளுக்கு மட்டும் பழைய ஞாபகங்கள் வந்தா அவ செத்துருவா டா “என்க
“டேய்.! வாய மூடு டா அர்ஜுன் .அவ என்னோட அஞ்சு டா ,,அவள நான் எப்படி சாக விடுவேன் சொல்லு .அவ என்னோட உயிர் மச்சான் .அவ நல்லா இருக்கனும்ன்னு ஒரு காரணத்துக்காக தான டா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவள விட்டு வந்தேன்” .
“டேய் முட்டாள் மாதிரி பேசாத டா. மீனு உன்ன தான் காதலிக்கிறா..,, அவளுக்கு மட்டும் நீ தான் இந்த கல்யாணத்த நடத்தி வச்சேன்னு தெரிய வந்தா ,,அவ என்ன ஆவானே நினைக்க முடியல டா..ப்ளிஸ் டா இந்த பிடிவாதத்தை விட்டுட்டு மச்சான்” என்று கோபத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடிக்க …
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் எதுக்கு அவகிட்ட இருந்து விலகுனேன்னோ அப்பவே எல்லாம் முடிஞ்சிடுச்சி. அவ என்னால நிறைய கஷ்ட பட்ருக்கா . இனியாவது என்னோட மீனு சந்தோஷமா வாழனும் டா. என்னால என்னைக்கும் ஒரு குடும்பத்தை கஷ்ட படுத்தி வாழ முடியாது  .அதுனால யாருக்கும் சந்தோஷம் வர போவதில்லை . அதுவும் இல்லாமல் கதிர் மீனு மேல உயிரையே வச்சிருக்கான்.அவன் கண்டிப்பா  அவளை நல்லா பாத்துக்குவான் டா அந்த  நம்பிக்கை எனக்கு  இருக்கு மச்சி ” என்றான் செல்வா.
அர்ஜுன் ஏதோ மீண்டும் சொல்ல வர ,,”போதும் டா இனி இத பத்தி பேச எதுவும் பேசாத ,, அதை விட பேச ஒன்னுமே இல்லை “என்று அதற்கு முற்று புள்ளி வைக்க அவனது கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வெளியே வர ,,அதை வேகமாக யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டான்.
இதை கண்ட அர்ஜுன் ,,இனி இங்கு இருப்பது சரியில்லை என்று அவனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான்.
*******
கதிர் கூறிய அனைத்தையும் கேட்ட குடும்பத்தினருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“அவுங்க ஏன் பிரிஞ்சாங்கன்னு எனக்கு தெரியாது .ஆனா அவுங்க ஒன்னு சேரணும் . அதுதான் அவுங்க வாழ்க்கைக்கு நல்லது “என்று அவனது கருத்தை தெரிவிக்க ,,
“நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு இன்னைக்கு இப்படி வந்து சொல்லிகிட்டு இருக்க..??உன்ன பத்தி யோசிச்சு பாத்தியா டா..??அப்போ உன்னோட காதல்…??? “என்று புவனா எங்கே தன் மகன் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயதில் கேட்டார்.
“அம்மா இதுவும் என்னோட வாழ்க்கையை காப்பாத்திக்கிறதுக்காக தான் பேசுறேன். இன்னைக்கு பரவால்ல நாளைக்கே மீனுவுக்கு ஞாபகம் திரும்பிடுச்சின்னா எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நரகமா பொய்டும் மா .அத நான் விரும்பல . ரெண்டு கையில தட்டுனா தான் மா ஓசை வரும் ஒரு கையால் தட்டுனா வராது ,,நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன் மா “என்று தன்னாலான விளக்கத்தை முடித்தான் கதிர்.
புவனா அமைதி காக்க ,,தன் அன்னை தன்னை புரிந்து கொண்டார் என்ற நிம்மதியில் ராஜன் மற்றும் சுசிலாவிடம் திரும்பிய கதிர் ,, “இப்போ நீங்க தான் முடிவெடுக்கனும்” என்று இருவரையும் நோக்கினான்.
“இதுல எங்களுக்கு சம்மதம் மாப்பிள்ள . என்னோட பொண்ணு வாழ்க்கை நல்லா இருந்தா சரி . அர்ஜுன் கிட்ட ஒரு நாள் செல்வா பேசும்போதே நான் அந்த பையன பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். அப்ப தோனுச்சு இப்படி கூட ஒரு பையனால காதலிக்க முடியுமான்னு ‌.அதே நேரம் கோபமும் வந்துச்சி அவுங்க பேசினத கேக்கும் போது.ஆனா இப்போ சந்தோஷமா இருக்கு மாப்பிள்ள அந்த பொண்ணு என்னோட பொண்ணு தான்னு நினைக்கிறப்ப “என்று பெருமிதமாய் கூறினார் ராஜன்.
“ரொம்ப சந்தோஷம் அங்கில் “என்று அவரை அணைத்துக் கொள்ள ,, பவிக்கும் திவ்யாவிற்கு மன நிறைவாக இருக்க அபிக்கு மனம் வேதனையாக இருந்தது.
“மீனு வாழ்க்கை நல்லா இருக்கும் டா.இனி உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்னா நான் சொல்றதை தான் கேப்பேன்னு நீ என் மேல சத்தியம் பண்ணி கொடு “என்று புவனா கையை நீட்ட ,,
“என்ன டா இது புது பிரச்சினை” என்று மனதில் நினைத்தவன் தன் அன்னைக்கு சத்தியம் செய்து கொடுத்தான் அதன் விபரீதம் தெரியாமல்.
பின்னர் கதிர் செல்வாவின் குடும்பத்தினரிடம் பேசி அவர்களையும் திருமணத்திற்கு சம்மதம் வாங்கினான்.அதன் பிறகே கதிர் செல்வாவை அழைத்து சம்மதம் வாங்கியது  .
வேலை முடித்து வந்த முகில் மற்றும் ஆதி இருவரும் அந்த புகைப்படத்தை எடுக்க பனையபுரம் நோக்கி பயனத்தை தொடங்கினர்.
அடுத்தநாள் காலை அழகாகவும் ஆரவாரமாகவும் விடிந்தது…,,
மண்டபத்தின் முன்பு வாழை மரங்கள் கட்டி இருக்க ,,அதன் பக்கத்தில் செல்வராகவன் weds அஞ்சனா என்று எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பக்கத்தில் பெண்கள் எல்லாம் சேர்ந்து போட்ட கோலம் அதற்கு ஏற்றார் போல் கலர் போட்டு இருக்க பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.
அடி செக்க செவந்த அழகா
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிர
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்கவில்லடி நானும்
அந்த ராஜ கதவு திறந்த
பல ரகசியமும் தெரிஞ்ச
பதியம் கிடந்த மாப்பிள்ளை பையனும்
பைத்தியம் ஆகா வேணும்
அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெடுத்து போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போக்ஹும்
தான தனதான தந்தானே …
என்று அந்த மண்டபம் முழுவதும் பாடல் ஒழித்து கொண்டு இருந்தது.
இளம் பெண்கள் மண்டபத்தின் முன்பு நின்று விருந்தினர்களை வரவேற்று கொண்டிருக்க ,, குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தனர்.
அந்த மண்டபமே நிறைந்திருந்தது மீனு மற்றும் கதிரின் குடும்பத்தினரை தவிர .மீனுவும் திவ்யாவும் மட்டுமே மணப்பெண் அறையில் இருக்க ,, அவர்களுக்கு துணையாக மற்ற பெண்கள் அனைவரும் கூடி இருந்தனர்.
செல்வாவின் குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்திற்கு வர அதே சமயம் கதிர் மற்றும் மீனுவின் குடும்பத்தினரும் வந்தனர். கதிர் கட்டிய தாலியை அணிந்த படியே பவி அந்த மண்டபத்திற்குள் நுழைந்தாள். அங்கு இருந்தவர்களுக்கு அதிர்ச்சி எனினும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
ராஜன் மற்றும் சுசிலாவை பார்த்த லதா இந்திரன் தம்பதியினர் சந்தோஷம் அடைய மீனுவின் தந்தை மற்றும் தாயாருக்கு அதிர்ச்சியாகவும் சிறு கலக்கமாகவும் இருந்தது.
முகூர்த்தம் நேரம் நெருங்கவும் வேலைகள் எல்லாம் வேகமாக நடந்தது. ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வாங்கோ என்று கூற கதிரே செல்வாவை அழைத்துக்கொண்டு வந்து அமர வைத்துவிட்டு பவியின் அருகே சென்று நின்றுக்கொண்டான்.
மணமேடையில் இருந்த செல்வாவிற்கு மனதில் பாரமே இருந்தது. அந்த பாரத்தை வைத்துக்கொண்டே மணமேடையில் ஐயர் சொல்லிய மந்திரங்களை ஒப்பித்து கொண்டு இருந்தான்.
மணப்பெண் அறையில் மணமகளிற்கு இருக்கும் நாணம் இல்லாமல் குற்றவுணர்வோடு தவித்து கொண்டு இருந்தாள் அஞ்சனா.
அனைவருக்கும் மாப்பிள்ளை மாறியது போல் ,, எங்கே பெண்ணும் மாறி இருப்பாளோ என்ற யோசனையுடன் மணப்பெண் அறையை நோக்க ,,அங்கே தேவலோக பெண் போல் அழகு பதுமையாக திவ்யா மற்றும் சிந்துவின் நடுவில் வந்து கொண்டிருந்தாள் .
குனிந்த தலை நமிராமலே எல்லா சடங்குகளையும் செய்ய‌ ,, ஐயர் செல்வா கையில் தாலியை எடுத்து கொடுக்க அதை வாங்கிய செல்வா கட்டலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலே இருக்க கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று ஐயர் குரலில் அனைவரது ஆசீர்வாதத்துடனும் செல்வா மீனுவின் சங்கு கழுத்தில் தாலியை கட்ட ,, கதிரின் மனதில் எப்பொழுதும் நீ சந்தோஷமாக இருக்கனும் என்று நினைக்க அவன் கையை பவி அழுத்தமாக பிடித்து ஆறுதல் படுத்தினாள்.
செல்வா தாலி கட்டிய அடுத்த நொடி பனையபுரத்தில் இடியுடன் மழை பெய்ய தொடங்கியது.
அந்த இருட்டு அறையில் இருந்தவரின் சிரிப்பொலி அதிமாக கேட்க ‌.‌அவரை கண்காணிக்க இருந்த அடியாட்களுக்கு இடியின் சத்தத்தை விட அவரின் சிரிப்பின் சத்தம் பயத்தை ஏற்படுத்தியது.
கதவை திறந்து கொண்டு வந்த அடியாட்களை பார்த்து,, “போ போய் அந்த ஆளு கிட்ட சொல்லு இந்த ஊருக்கு விடிவுகாலம் பிறந்துருச்சின்னு .என்னோட பொண்ணு மிதுனா இந்த ஊருக்குள்ள இன்னும் கொஞ்ச நாள்ள காலடி எடுத்து வைக்க போறா ‌.உன் தலைவனோட உயிர காப்பாத்திக்க சொல்லு ” என்றார் அந்த பெரியவர்.
அவர் பேசிய விதத்தை கண்டு ,,அந்த அடியாட்களே பயந்து நடுங்கினர் .
முகில் மற்றும் ஆதி இருவரும் பனையபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருக்க ,,மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.
வீட்டிற்கு சென்ற இருவரும் ,,சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு அந்த புகைப்படத்தை தேடும் வேலையில் ஈடுபட தொடங்கினர்.
அடியாட்களில் ஒருவன் அவனது தலைவனுக்கு போன் பண்ணி நடந்ததை கூற ,, “டேய் அந்த ஆள போட்டு நல்லா அடிங்க டா. கூடிய சீக்கிரத்துல இந்த ஆளுக்கு ஒரு நாள குறிக்கனும்” என்று கூறி ஃபோனை அணைத்தான்.
இதனை கேட்ட ஒருவன் குழம்பிப்போய் அந்த இடத்தை விட்டு சென்றான்.
மீனுவின் கண்களில் வடிந்த கண்ணீரை துடைக்க ,,அப்போது தான் தன் பக்கத்தில் இருக்கும் தன்னவனை நோக்க ,,அங்கு கதிர் இல்லாது செல்வா இருக்க ,,கடந்த நிமிடம் வரை இருந்த குற்ற உணர்வு ஏனோ நீங்கியது போல் உணர்ந்தாள் மீனு .
இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு இருக்க செல்வா அவள் நெற்றியில் இதழ் பதிக்க அதை கதிர் அவன் மொபைலில் கிளிக் செய்து கொண்டான்.
பின்னர் ,,அனைத்து சடங்குகளும் முடிய குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது தான் பவியின் கழுத்தில் இருந்த தாலியை கண்டு மீனு அதிர்ந்தாள். இரு ஜோடிகளும் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள ,, அப்பொழுது அங்கு வந்த அர்ஜுனனுக்கு ஆச்சிரியம் அதிர்வு சந்தோஷம் என்ன பலவகையான முகபாவனைகள் அவன் முகத்தில் தெரிந்தது. அர்ஜுனை கண்ட அபிக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்ற இதைப்பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.
பின்னர் ,,மணமக்களை அழைத்துக்கொண்டு மீனுவின் வீட்டிற்கு சென்றனர்.
இது எதுவும் அறியாத அஞ்சலியோ தூக்க மாத்திரையின் வீரியத்தில் நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தாள். இனிமேல் அனைவருக்கும் நிம்மதியான உறக்கத்தை கிடைக்க விடுவாளா என்று தெரியவில்லை .

Advertisement