Advertisement

                              சுகம் – 9

கண்களில் காதல் காணுமுன்னே

கழுத்தில் மாலையோ..

காதல் கண்ணாமூச்சியா??

கடவுளின் ஆசியா??

‘அன்னிக்கே என்னைய சோத்து மூட்டை மாதிரி பார்த்தான்.. இன்னிக்கு விருந்துக்கு போக வேற கேட்டா அவ்வளோ தான்..’ என்று யோசித்தபடி கணினி முன்பு இருந்தவளை சர்வேஷின் குரல் இடையிட்டது.. என்னவென்பது போல அவனை பார்த்துவைத்தாள்..            

“வாய் திறந்து என்னன்னு கேட்க முடியாதா ??”

“இல்ல சர்.. அது வந்து.. சாரி.. ”

“எப்போ பார் நத்திங் இல்லை சாரி.. நல்லா பழகி இருக்க..”  என்று சிடுசிடுத்தான்.

‘இப்போ ஏன் காலையிலேயே காயிஞ்சு விழறான்’ பதில் எதுவும் கூறாமல் அமைதியாய் பார்த்தாள்.. இது அவர்களுக்கு பழக்கம் தான்.. அவன் ஏதாவது திட்ட ஆரம்பித்தால் இவள் அமைதியாய் இருப்பாள்.. ஆனால் மனதிற்குள் வெளியே காட்டாமல் உள்ளே தாளித்து எடுத்துவிடுவாள்..

“என்ன அமைதியா இருக்க.?? மத்த எல்லார்கிட்டயும் எப்படி வாய் கிழிய பேசுற.. நான் ஏதாவது கேட்டா பதில் சொல்றியா.. இங்க பாரு சொந்தங்கிறது எல்லாம் இங்க செல்லுபடியாகாது.. புரியுதா.. நீ என் எம்ப்ளாயி மட்டும் தான் அதை மட்டும் மனசில் வை..” என்று அவனோ பொரிந்து தள்ளிட, ஏன் இப்படி பேசினான் என்று அவனுக்குமே தெரியவில்லை.  

சௌபர்ணிகாவை விட்டால் சரிதான் போடா நீயும் உன் வேலையும் என்றுவிட்டு போய்விடுவாள் தான்.. முன்பென்றால் சரி.. இப்பொழுது சொந்தம் வேறு.. எப்படியும் அடுத்தடுத்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்.. அதை எல்லாம் விட ஸ்ரீ.. அக்கா அக்கா என்று பாசமாய் பேசும் அவளுக்கு இப்படியொரு அண்ணன்..

‘ஸ்ரீ அண்ணன் அப்படின்னு தான் நான் உன்னை சும்மா விடுறேன்..’ என்று மனதில் கறுவியவள் பேசாமல் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்..

அவளது மனமோ ‘ஏன் சோபி அவனை நீ சும்மா விட்ட?? போட்டு தாக்கியிருக்க வேண்டியதுதான‘ என்று கேள்வி எழுப்ப அவளோ தன் கோவத்தை எல்லாம் அடக்கிய காரணம் அறியாமல் பேச்சற்று இருந்தாள்..

இதேது மற்றவர்கள் யாரினும் இப்படி பேசியிருந்தால் அவள் பதில் கொடுக்கும் விதமே வேறாய் இருக்கும்.. ஆனால் ஆனால் பேசியது சர்வேஷ் அல்லவா.. சர்வேஷின் கோவம் கூட அவளை ஒன்றும் செய்யவில்லை.. இன்று நேற்றா திட்டு வாங்குகிறாள்..

ஆனால் அவனது வார்த்தைகள்..  “நீ இங்க வெறும் எம்ப்ளாயி மட்டும் தான்.” என்றது தான் அவளால் தாங்க முடியவில்லை..

என்னவோ அதனை அவள் மனம் ஏற்றுகொள்ளவே இல்லை.. பல பொறுப்புகளை அவன் நம்பி கொடுத்திருக்கிறான் தான்.. அதிலும் அவனில்லாத சில பல நேரங்களில் அவளே முடிவுகள் சிலது எடுத்து அதனை நடைமுறை படுத்தியும் இருக்கிறாள் தான்.. அப்போதெல்லாம் அவள் மனதில் அடித்த அந்த சாரால் இன்று அவனது வார்த்தையில் புயலாய் மாறிவிட்டது..

‘என்னை டீசன்ட்டா வேலைகாரின்னு சொல்லிட்டான்.. இருக்கட்டும், சோபி இதை எல்லாம் திருப்பி கொடுக்க உனக்கு ஒரு நேரம் வரும்.. ஒருநாள் உனக்கு இருக்கு டா..’ என்று எண்ணியவள் தன் போனை எடுத்து பார்த்தாள்.

அவளுக்கு வேலை செய்யும் எண்ணம் எல்லாம் இல்லை.. வெறுமென போனை நோண்டி கொண்டு இருந்தவள் அது காட்டிய தேதியை பார்த்து சற்றே துணுக்குற்றாள்.. அத்தனை நேரம் இருந்த உணர்வுகள் மாறி இதழில் சிறு புன்னகை பூத்தது..  அவளையும் அறியாமல் மனம் அவளது கல்லூரி காலத்தில் போய் நின்றது..

அன்றொரு நாள் மாலை நேரம்.. கம்பியூட்டர் சென்ட்டரில் தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்.. ஆனால் பார்வை எல்லாம் வாசல் பக்கம் தான் இருந்தது.. “இன்னுமா வரலை.. எப்பவும் சரியா ஆறு மணிக்கு எல்லாம் வந்திடுவான்.. இன்னிக்கு என்ன??” என்று நகத்தை கடித்து யோசித்தவளின் தலையை யாரோ தட்டவும் வேகமாய் திரும்பியவள்,

“ஏய் லல்லி…. எருமை..” என்று கடிந்தாள்..

“என்ன டி சோபி.. பார்வை எல்லாம் வாசல் பக்கம் இருக்கு..?? யாரை தேடுகிறது உந்தன் கண்கள்..” என்று கிண்டலாய் கேட்டவளை முறைத்தாள்..

“உன்னை தான் டி எருமை.. ஆளை காணோமேன்னு பார்த்தேன்..”

“ஓ !! எனக்கு தெரிஞ்சவங்க வந்திருந்தாங்க டி அதான் பேசிட்டு இருந்தேன்..”

லல்லிக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது.. அதனால் வந்தது அவளது வருங்கால கணவன் என்று எண்ணி மேலும் கிண்டலை தொடர்ந்தாள் சௌபர்ணிகா.. அவளோடு மற்ற தோழியரும் கூட்டு சேர அங்கே கும்மாளம் தான்.. எங்கிருந்து தான் அவனுக்கு மூக்கு வேர்ததோ.. புயல் வேகமாய் வந்தான்..

“கேர்ள்ஸ், டோன்ட் மேக் நாய்ஸ்.. உங்க சார் இன்னிக்கு லீவ்.. ஒன்னு கிளம்புங்க இல்லை ப்ரோக்ராம் போட்டு பாருங்க.. அடுத்தவங்களை தொல்லை பண்ணாம இருங்க..” என்று கூறவும் அடுத்த நொடி அங்கே மயான அமைதி..

எப்பொழுதும் ஒற்றை வார்த்தையில் பேசுபவன் இன்று வந்து அதும் பெண்களிடம் இத்தனை வார்த்தைகள் கோர்வையாய் பேசியது அங்கே இருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியே…  அனைவரின் மனதிலும் கிளம்பலாம் என்று தோன்ற, முந்திரி கொட்டையாய் சௌபர்ணிகா “நாங்க ப்ரோக்ராம் போடுறோம் சார்..” என்றாள்..

“குட் ” என்றவன் சென்று விட்டான்..

அவன் தன்னை பார்த்து குட் என்று சொன்னதே அவளுக்கு இன்னும் நம்ப முடியவில்லை.. “என்னை பார்த்தா பேசினான்?? நிஜமா?? ஹய்யோ !!! என்னை நேருக்கு நேர் பார்த்து பேசினானே.. அதுவும் குட்டுன்னு..” என்று மெய் மறந்து அமர்ந்திருந்தவளின் முதுகில் அடி விழுவது உணர்ந்து “ஹேய் என்ன டி ” என்று சிலுப்பிக்கொண்டாள்.

“எங்க அந்த ப்ரோக்ராம் போடுற முகத்தை கொஞ்சம் காட்டு… ” என்று அவளது முகத்தை திருப்பிய லல்லி காரித்துப்பாத குறைத்தான்.. மற்ற தோழிகளும் போகவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் தவித்து அமர்ந்திருக்க மீண்டும் அவன் வந்தான்

“கேர்ல்ஸ் இந்த ப்ரோக்ராமை எல்லாம் வொர்க்கவுட் பண்ணுங்க.. ஐ வில் செக் தி ரிசல்ட்ஸ்..” என்று ஒரு நான்கு ஐந்து ஜாவா ப்ரோக்ராம் கொடுத்துவிட்டு சென்றான்..

அது இன்னும் அங்கே அனலை கிளப்பியது..

“ஏன் டி சோபி இது உனக்கே நியாயமா?? சி ப்ரோக்ராம் போடவே நம்ம அத்தனை சொதப்பல் பண்ணுவோம்.. இதுல ஜாவா வேற.. ஏன் டி நீ சும்மா இருக்க மாட்டியா” என்று மற்ற தோழி ஒருத்தி புலம்ப சௌபர்ணிகாவிற்குமே தான் அவசர பட்டு வாய் விட்டோமோ என்று தோன்றியது..

ஆனாலும் என்ன செய்ய, ஒரு வேகத்தில் சொல்லியாகிவிட்டது.. இதற்குமேல் போடாமல் இருந்தால் அதுவும் சரியாய் இருக்காது கிளம்புவோம் என்று பார்த்தால் அதுவும் முடியாது என்று தவித்து முழித்தவள் வேறு வழியே இல்லாது அவன் கொடுத்துவிட்டு சென்ற ப்ரோக்ராம் எல்லாம் என்னவென்று பார்த்து போடத் தொடங்கினாள். மற்றவர்களும் வேறு வழியில்லாமல் அமர்ந்திருக்க, 

சிறிது நேரத்தில் “ஷெல் ஐ செக் தி அவுட்புட்…” என்றபடி வந்து நின்றான் அவன்..

அனைவரும் பேய் முழி முழிக்க, ஒரு சிலரது கணினியை பார்த்தவன் முகம் சுளிக்க, பின் என்ன நினைத்தானோ  “ஓகே கிளம்புங்க.. நான் உங்க சார்கிட்ட பேசிக்கிறேன்” என்றதும் விட்டால் போதும் என்பது போல அனைவரும் அடித்து பிடித்து கிளம்பினர்..

ஆனால் மறுநாள் வந்ததும் அவர்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர் ஒரு பிடி பிடித்துவிட்டார்.. “இத்தனை நாள் என்ன படிச்சீங்க.. காலேஜ்லையும் இதானே படிக்கிறீங்க.. இதுபோக இங்கவும் வந்து படிக்கிறீங்க.. ஒரு நார்மல் ப்ரோக்ராம் போட முடியலைன்னா என்ன அர்த்தம்… ” என்று அவனைவரையும் பேசிட,  அனைவரும் சோபியை முறைத்தபடி இரண்டு நாட்கள் இருந்ததை இன்று நினைத்தாலும் அவளுக்கு சிரிப்பு வந்தது.. தன் தோழிகள் முறைத்ததை எல்லாம் அவன் பேசிய அந்த ஒற்றை வார்த்தை மிஞ்சி விட்டது..

ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்று வீட்டில் பாடியபடி உலா வந்தவளை அனைவரும் விசித்திரமாய் பார்த்தனர்.. அதை எல்லாம் நினைத்து சோபி இப்பொழுது சிரித்து கொண்டு இருந்தாள்..

சர்வேஷிற்கு மனம் மிகவும் கஷ்டமாய் போய்விட்டது.. “ச்சே நம்ம இப்படி பேசி இருக்க கூடாது.. அப்படி என்ன கோவம் எனக்கு.. பாவம் அவளுக்கு பதில் கூட சொல்ல முடியாம போயிட்டா.. ” என்று சிறிது நேரம் தன் போக்கில் இருந்தவன் மோகனா அழைப்பு விடுக்கவும் எடுத்து

“ஹ்ம்ம் வர்றேன் ம்மா.. இப்போவே அங்க வந்து என்ன செய்ய போறேன்.. ?? ” என்றான்..

“சரி சரி வர்றேன்.. ஆனா சாப்பிட்டதும் கிளம்பிடுவேன்”

..

“சௌபர்ணிகா எதுக்கு ??”

“என் நேரம் கூட்டிட்டு வர்றேன்..” என்று வைத்தவனுக்கு மனதில் “பாவம் காரணமே இல்லாம திட்டிட்டோம்.. கூப்பிட்டு போவோம்…” என்று பட  அவளையும் அழைத்து செல்ல எழுந்து வந்தான்..

வந்து பார்த்தால் சௌபர்ணிகாவோ தனியாய் ஒரு மோன உலகத்தில் சஞ்சரிப்பவள் போல பார்வையை எங்கேயோ பதித்து சிரித்துக்கொண்டு இருந்தாள். அவன் அவளருகே சென்று நின்றதோ, இரண்டு முறை அழைத்ததோ எதுவுமே அவள் கவனத்தில் இல்லை என்றதும் சர்வேஷிற்கு அத்தனை நேரம் இருந்து பொறுமை காற்றில் பறந்தது..

“சௌபர்ணிகா !!!!” என்று இவன் அழைக்கவும்,  திடுக்கிட்டு விழித்து பின் எழுந்து நின்றாள்..      

“என்ன பட்ட பகல்ல கனவா ??!! விளங்கிடும்..”

‘ஆமாமா பட்டபகல்ல கனவு கண்ட பட்டு சேலை பரிசா குடுப்பாங்களாம்..’

“என்ன முனுமுனுப்பு ???”

 “நத்…” என்று அவள் சொல்லத் தொடங்கும் போதே,

“நத்திங்க்னு மட்டும் சொன்ன தொலைச்சிடுவேன்…” என்றதும், ‘இந்தா கேட்டுக்கோ..’ என்று தான் நினைத்ததை அப்படியே கூறிவிட்டாள் சௌபர்ணிகா..

கெட்டவனோ ‘வாட்??’ என்று திகைத்து “பட்டபகல்ல கனவு கண்டா பட்டு சேலை பரிசா.. கடவுளே.. நீ.. நீ எல்லாம் படிச்சா பொண்ணுதான.. சென்னைல உனக்கு எல்லாம் எவன் வேலை கொடுத்தான்.. இல்லை அங்கயும் இப்படிதான்ஏதாவது கிறுக்கு தனமா பேசிட்டு இருந்தியோ….” என்று கேட்க,

பொருத்து பொருத்து பார்த்தவள் “சர்.. நான் மனசுக்குள்ள தான் சொன்னேன்.. நீங்க தானே கேட்டீங்க.. இதெல்லாம் திறமை சர்..” என்றாள் கெத்தாக..

“நல்ல திறமை.. எல்லாம் என் நேரம் ஷ்ரவன் சொன்னான்னு உன்னை சேர்த்தேன் பாரு..” என்று அவன் சொல்கையில்,

“ஓ.. அப்போ ரொம்ப சந்தோசம்.. எனக்கு இந்த வேலையும் வேணாம் ஒண்ணும் வேணாம்.. ஸ்ரீக்கிட்டு ஆன்ட்டிகிட்ட எல்லாம் நீங்களே பேசிக்கோங்க..போனா போகுதுன்னு எல்லாம் நான் இங்க வொர்க் பண்ற அவசியம் இல்லை.. எனக்கு என் குவலிபிக்கேசனுக்கு ஏத்தது போல வேலை கிடைக்கும்…” என்று வேகமாய் ரோசமாய் தன் ஹென்ட் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பப் போக,

எப்போதும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்பவள் இன்று இப்படி சரவெடியாய் அடித்துப் பேசவும் கொஞ்சம் அசந்துதான் போனான் சர்வா.. அவள் என்ன பேசினால் எங்கே போகிறாள் என்று சுதாரிப்பதற்குள் சௌபர்ணிகா அவனை கடந்து செல்ல, அவனையும் அறியாது அவனது கரங்கள் அவளை பிடித்து நிறுத்த, அவளோ அவனை முறைத்துப் பார்க்க,      

“கிளம்பு நேரம் ஆகுது…” என்று மட்டும் சொன்னான்..

“நானே கிளம்பிட்டு தான் இருக்கேன்.. கையை விட்டா போயிட்டே இருப்பேன்..” என்று அவளும் சொல்ல,

“ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்…” என்று அவனும் நடக்க, என்ன சொல்கிறான் இவன் என்று பார்த்தவள்,    

“எ.. எங்க சர்.. ??” என்றாள் யோசனையாய்..

“ஏன் எங்கன்னு சொன்னாதான் மகாராணி கிளம்புவிங்களா?? விருந்துன்னு ஏற்கனவே தெரியும் தான..”

“அது தெரியும்.. பட் நான்…” என்று அவள் இழுக்க,

“ஷ்… என்ன ரிசைன் பண்ணிட்டு வீட்டுக்குப் போக போறீயா…” என்று பார்த்தவன், “போயிட்டு வந்து நமக்கு நிறைய வேலை இருக்கு.. ஒழுங்கா என்கூட கிளம்பி வா.. உனக்கு டிரைவர் வேலை வேற பாக்க சொல்லிருக்காங்க.. கிளம்பு” அவன் கூறிய விதத்தில் அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது..

அவனோ முறைத்து நிற்க,  “ஒரு டூ மினிட்ஸ் பிரெஷப் ஆகிட்டு வந்திடுறேன் சர்..” என்று அவள் சொன்னதும், இதுவேறயா என்பது போல பார்த்தவன் ஒன்றும் பேசாமல் நிற்கவும் வேகமாய் வாஷ் ரூம் நோக்கி ஓடினாள்..

“என்ன பெண்ணோ !!” என்று நினைத்தவனை சொன்னது போலவே இரண்டு நிமிடத்தில் அவனை காக்க வைக்காமல் வந்தவளை பார்த்து

“இங்க பார் சாப்டிட்டு உடனே கிளம்பிடனும்.. அங்க என் தங்கச்சி, இல்லை உன் தம்பி கூட அரட்டை அடிச்ச பார்த்துக்கோ..” என்று சிறுபிள்ளை விரல் நீட்டி மிரட்டுவது போல் மிரட்ட, நல்ல பிள்ளை போல தலையை உருட்டினாள்..

அவளது செய்கையில் மெல்ல புன்னகை பூத்தது அவன் முகத்தில்.. கலைந்திருந்த தலை முடியை மேலாய் வாரியிருப்பாள் போல. முகத்திற்கு ஒப்பனை கூட இல்லை வெறுமென முகம் கழுவி வந்திருக்கிறாள் என்று அவளது நெற்றி முடிகள் ஈரத்தில் ஒட்டியிருப்பதிலேயே தெரிய, அதே நேரம் அவனது மனசாட்சி அவனது பிடனியில் அடித்து “உனக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா ??” என்று கேட்கவும் அடங்கி போனான்..

அதன் பின் இருவரும் ஒருவழியாய் கிளம்ப,  சௌபர்ணிகாவோ ‘ஹ்ம்ம் பொண்ணுங்கக்கிட்ட ஒரு வார்த்தைகூட பேசாத அவன் எங்க, இங்க நிக்க வச்சு காய்ச்சி எடுக்கிற இவன் எங்க?? அவன் நினைவுலையும், இவன் நிஜத்திலும் மாட்டிட்டு முழிக்கிறது நான் தான்..  இதுலாம் பத்தாதுன்னு வீட்ல வேற. கடவுளே பாண்டிமுனீஸ்வரா.. இன்னிக்கு உன் சந்நிதானம் வர்றேன்.. நீ தான் நல்ல வழி கட்டனும்..’ என்று வேண்டியவளின் கண்கள் தானாக மூடிக்கொள்ள,  

“என்ன தூங்கிட்டியா?? எனக்கு என்கூட கார்ல வர்றவங்க தூங்கினா பிடிக்காது.” என்று கரோட்டியபடி சர்வேஷ் சொல்ல,

‘கிரகம் டா சாமி..’

“என்ன பதிலையே காணோம்??ஒண்ணு கனவு கான்றது, இல்லை கண்ணை மூடி தூங்குறது”

‘எல்லாம் கண்ணை மூடிதாண்டா தூங்குவாங்க..’

“சௌபர்ணிகா!!! ”

“சர்!!!”

“இவ்வளோ நேரம் மனசுக்குள்ள என்ன கவுன்ட்டர் குடுத்த??”  என்று அவன் கேட்டதும்,

‘இவன் ஏன் இப்போ இவ்வளோ பேசுறான். நம்மகூட சேர்ந்து இவன் மாறிட்டானா ??’ என்று யோசித்தவள் “இல்லை சர் ப்ரே பண்ணேன்..” என்றாள்.

“ஓ !!” என்றவன் அதற்குமேல் அவன் பேசவில்லை.. 

“எனக்கு கூடத்தான் கார்ல அமைதியா வந்தா பிடிக்காது” என்று முனுமுனுத்தவள் ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..

அவர்கள் செல்லவேண்டிய பாண்டிமுனி கோவிலும் வர, இவர்களை வரவேற்கவே வெளியில் ஸ்ரீநிதியும், கார்த்திக்கும் சென்றனர்.. நால்வரும் பேசியபடி உள்ளே சென்றால் அங்கே விருந்து நடக்கும் மண்டபத்தில் சமையல் காரரை தவிர யாரும் இல்லை.

“என்ன கார்த்திக் யாருமே இல்லை..??”

“இல்ல சோபி எல்லாம் சன்னிதானத்துல இருக்காங்க.. பூஜை நடக்குது.. உங்களை கூட்டிட்டு போகத்தான் நாங்க வந்தோம்..”

“ஓ !! அப்போ ஸ்ரீ நம்மளும் சாமி கும்பிட்டு வரலாமா??” என்று சோபி கேட்கவும் மூவரும் வேகமாய் கிளம்பினர் சர்வேஷைத் தவிர..

“அண்ணா நீ வரல??”

“இல்லை ஸ்ரீ நீங்க எல்லாம் போய்ட்டு வாங்க.. நான் இங்க இருக்கேன்”

“சர், நீங்க மட்டும் தனியா இருக்கணும் வாங்க.. கோவிலுக்கு வந்துட்டு சாமி பார்க்காம இருக்கலாமா?? வாங்க சர்” என்று சோபி அழைக்கவும் வேண்டா வெறுப்பாய் அவனும் வந்தான்..

அங்கே பார்த்தால் ஆட்கள் வரிசை கட்டி நின்று இருந்தனர்.. இவர்களின் வீட்டினரோ முன்னிருந்த எதோ வரிசையில் இருந்தனர்.. கஷ்டபட்டு கூட்டடினுள் நுழைந்து  முண்டி அடித்து எப்படியோ அவர்கள் அருகில் சென்றுவிட்டனர்.. அனைவரும் ஒருமாதிரி ஒட்டி உரசி என்று நிற்க நேர, முன்னே கார்த்திக்கும், அவனுக்கு அடுத்து ஸ்ரீயும், அடுத்து சௌபர்ணிகாவும் சர்வேஷும் நின்றிருக்க,   

“இதுக்கு தான் சொன்னேன் வேண்டாம்னு.. கேட்டீங்களா.. பூஜை முடிஞ்சிட்டு எல்லாம் அங்கதான வருவாங்க..” என்று முனங்க, அவனை ஒருபார்வை திரும்பிப் பார்த்தவள் பின் மீண்டும் நேராய் திரும்பிக்கொண்டாள்.  

தீப ஆராதனை நடந்துக்கொண்டு இருக்க, மேல தாலங்கள் முழங்க, மணியோசை இசைக்க பாண்டி முனீஸ்வரருக்கு பூஜை நடந்துக்கொண்டு இருந்தது.. வந்திருந்த மக்கள் எல்லாம் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற பிரார்த்தித்து கொண்டிருந்தனர்.. கூட்டம் தாறுமாறாய் இருந்தது..

பின்னே இருப்பவர்கள் தள்ள, சர்வேஷோ அவனுக்கு முன்னிருக்கும் சௌபர்ணிகா மீது சாய வேண்டிய நிலை ஏற்பட, அவன் பேலன்ஸ் செய்து நிற்கவே பெரும்பாடாய் போக,  சொல்ல முடியாத அவஸ்தையில் நின்று இருந்தான்.. முன்னே தன் பிடிப்பிற்கு சௌபர்ணிகாவை தான் பிடிக்க வேண்டிய நிலை.. ஆனால் அவளோ இலகுவாய் ஸ்ரீயின் தோள் மீது கைகளை வைத்து நின்றிருந்தாள். இதை பார்த்தவனோ,     

“ஸ்ரீ நீ வந்து இப்படி நில்லேன் ” என்று சர்வேஷ் கூறவும் அவளோ,

“போண்ணா இங்கதான் சாமி நல்லா தெரியுது..” என்று கூறியவள் பின் திரும்பவே இல்லை.. 

எப்போதடா பூஜை முடியும் என்னும் நிலைக்கு வந்துவிட்டான். அவன் நிலை இறைவனுக்கு புரிந்ததோ என்னவோ சற்று நேரத்தில் பூஜை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது..

அங்கே வந்தவர்களில் யாரோ நிலை மாலை சாத்தியிருப்பர்கள் போல அதற்கு பதிலாய் பிரசாதம் தர பூசாரி ஒரு பெரியா ரோஜா மாலையை தூக்கி கொண்டு வந்தார்..

அதை வாங்க வேண்டிய நபரோ சரியாய் சர்வேஷ் மற்றும் சௌபர்ணிகா பின்னே நிற்க, கூட்டத்தின் நெரிசலின் காரணமாய் பூசாரி அந்த நபருக்கு நீட்டிய மாலை சரியாய் தவறி போய் சர்வேஷ் சௌபர்ணிகாவின் கழுத்தில் ஒன்றாய் விழுந்தது..

கண்கள் மூடி வேண்டிக்கொண்டு இருந்த சௌபர்ணிகா கழுத்தில் எதுவோ பாரமாய் படவும் வேகமாய் கண்கள் திறந்து பார்த்தாள், அங்கே சர்வேஷின் அதிர்ந்த முகமே காட்சி கிடைத்தது..

‘இவன் ஏன் மாலையை கழுத்துல போட்டுக்கிட்டு திகைச்சுப் பார்க்கிறான்??!!’ என்று யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் உண்மை உரைத்தது.. அடுத்த நொடி அவளது உணர்வுகளை சொல்லவும் வேண்டுமா..

எடுக்கவா?? கோர்க்கவா?? என்று கர்ணன் துரியோதனன் மனைவியிடம் கேட்டது போல கழட்டவா?? இருக்கவா ?? என்ற கேள்வி அவளுக்கு எழாமல் இல்லை.

சர்வேஷ் தான் நிலை உணர்ந்து வேகமாய் கழட்ட விழைந்தான். ஆனால் பூசாரியோ “தம்பி கழட்ட வேண்டாம், கோவில்ல வச்சு புருஷன் பொண்டாட்டி கழுத்துல இப்படி மாலை விழறது நல்லது..  தீர்க்க சுமங்கலியா இரும்மா.. உங்க வாழ்கை சிறப்பா இருக்கும்…” என்று வாழ்த்திவிட்டு போக,

சர்வேஷ் சௌபர்ணிகா இருவரும் செய்வது அறியாது திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க அவர்களை அங்கே கூடி இருந்த ஊரே பார்த்தது..

‘என்ன இது எல்லாம் ஒரு மாதிரி பார்க்கிறாங்க ??’ என்று யோசித்தபடி திரும்பிய ஸ்ரீக்கு சந்தோஷ அதிர்ச்சி..

“அடப்பாவி அண்ணா, சொல்லாம கொல்லாம கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணியா ????!!!! ” என்ற திகைப்போடு கார்த்திக்கை சுரண்டினாள்..

“ம்ம்ச் என்ன ஸ்ரீ இன்னும் கொஞ்ச நேரத்தில சோறு போட்டிருவாங்க” என்று சலித்தபடி திரும்பியவனும் திகைத்து நின்றான்..

மற்றவர்கள் என்ன பார்க்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் கழுத்தில் மாலை வாங்கிய இருவருக்கும் தெரியவில்லை.. கண்களும் கண்களும் நோக்கியபடி நின்று இருந்தது தான் மிச்சம்..

ஸ்ரீநிதி கூட அதிர்ச்சியில் இருந்தாள், ஆனால் கார்த்திக் வேகமாய் சுதாரித்து இரு வீட்டு பெற்றோர்களையும் அழைத்து அந்த கண்கொள்ளா காட்சியை காட்டிவிட்டான். பார்த்த அனைவருக்கும் முதலில் அதிர்ச்சி, திகைப்பு, எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இருவரின் பெற்றோருக்கும் கோவில் சந்நிதானத்தில், இறைவன் முன்பு இப்படி ஒரு நிகழ்வு நடக்கவேண்டுமே, அதிர்ஷ்டம் தான்  என்று கூட்டத்தில் யாரோ சொன்னதை கேட்டு மனதின் ஓரத்தில் மகிழ்ச்சி தான்..

மேலும் கூட்டம் போடவேண்டாம் என்று பூசாரி கூறவும் அனைவரும் விருந்து நடக்கும் மண்டபத்திற்கு வந்தனர்.. சர்வேஷும் சௌபர்ணிகாவும் எப்படி அங்கு வந்து சேர்ந்தார்கள் என்று இருவருக்கும் தெரியாது..

“நான் தான் அன்னிக்கே சொன்னேன்ல பரந்தாமா?? நீ தான் அப்படி எல்லாம் இல்லைன்னு சொல்லிட்ட பாரு ஆண்டவனே ஜோடி சேர்த்துட்டான்..” என்று உறவில் அந்த பெரியவர் சொல்ல..

பரந்தாமனோ விஸ்வநாதன் முகத்தை பார்த்தார்.. ஸ்ரீயோ தன் அன்னையிடம் “ஏம்மா உனக்கு சோபிக்காவை விட நல்ல மருமக கிடைப்பாளா என்ன?? பாரு அண்ணனே அதிர்ச்சியில் நிக்கிறான். அவன் தெளியுறதுக்குள்ள பேசி முடிச்சிடுங்க.. இல்லை எல்லாருக்கும் சேர்த்து வைச்சு சாமி ஆடுவான்..” என்று காதை கடிக்க..

கார்த்திக்கோ மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “அப்பா எதாவது  பேசுங்கப்பா.. சோபி பாவமா நிக்கிறா..” என்று எடுத்து கூறினான்..

இருவீட்டு உறவுகளுமே அங்கே குழுமி இருக்க மோகனா தன் கணவரிடம் என்ன பேசினாரோ, விஸ்வநாதன் “பரந்தாமன், சௌபர்ணிகாவை எங்க வீட்டு மருமகளா கொண்டு போக எங்களுக்கு  சம்மதம். எங்களை உங்க சம்பந்தியா ஏத்துக்க உங்களுக்கு விருப்பமா ??” என்று கேட்டேவிட்டார்..

மாப்பிளையை பெற்றவர் இத்தனை வெளிப்படையாய் கேட்கவும் புனிதா தன் கணவரிடத்தில் “என்னங்க இதை விட நல்ல இடம் நம்ம சோபிக்கு கிடைக்குமா ?? அவங்களுக்குமே ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சவங்க.. சரின்னு சொல்லுங்க..” எனவும் பரந்தாமன் தன் மகளின் முகத்தை பார்த்தார்..

அவளோ தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் நிற்பதை போல நின்று இருந்தாள்.

“அட என்ன பரந்தாமா சரின்னு சொல்லுப்பா..” என்று உறவுகளில் சிலர் கூறவும் அவரும் தன் சம்மதத்தை வழங்கினார்..

ஸ்ரீக்கும், கார்த்திக்கும் குத்தாட்டம் போடாத குறை தான்..

மோகனாவோ “அய்யா !! பாண்டிமுனி, பிள்ளையார் சுழி போட்ட நீயே நல்ல படியா கல்யாணத்தை நடத்தி குடு சாமி..” என்று வேண்டினார்..

புனிதாவிற்கு மனதில் சந்தோசம் தாங்கவில்லை.. மகளுக்கு உள்ளூரிலேயே நல்ல இடம் அமைந்தது அவருக்கு பெரும் நிம்மதி. விஸ்வநாதனுக்கு மகன் என்ன கூருவானோ என்று பயம் ஒருபுறம் இருந்தாலும் இத்தனை பேர் முன்னில் வாக்கு கொடுத்தால் மீறமாட்டான் என்று எண்ணியவர் அத்தனை சொந்தகளின் முன்னும் தாம்பூலம் மாற்றிக்கொள்ள கேட்க, கார்த்திக்கும் தன் தந்தையை தூண்டிவிட அழகாய் அங்கே சர்வேஷ், சௌபர்ணிகா திருமணத்திற்கான நிச்சய தாம்பூலம் மாற்றப்பட்டது சம்பந்தப்பட்டவர்களின் சம்மதம் கேட்காமலேயே….                    

 

Advertisement