Advertisement

சுகம் – 8

உன்னோடு கழிக்கும் பொழுதுகள்

 யாவும்  ஏகாந்தமாய் சிலநேரம்..

ஏமாற்றமாய் சிலநேரம்..

நாட்கள் யாருக்கும் காத்திராமல் அதன் வேலையை செவ்வனே செய்துகொண்டு தன் வழியில் பயணித்தது.. சௌபர்ணிகாவிற்கும் சர்வேஷிற்கும் வழக்கம் போல பொழுதுகள் வாட்டிலும் நத்திங்கிலும் கழிந்தது..

சர்வேஷோ இல்லை சௌபர்ணிகாவோ இருவரும் வேறு எதுவும் தனிப்பட்டு பேசிக்கொள்ள முயல்வதில்லை.. அப்படியான சந்தர்பங்கள் நேர்கையில் இருவரும் தள்ளி தள்ளி இருந்துகொள்ள, சௌபர்ணிகாவோ மனதளவில் மிகவும் ஆடித்தான் போனாள்..

அவளது எண்ணங்கள் அவளுக்கே மிக மிக விசித்திரமாய் இருந்தது.. அவள் மனதில் இருப்பவனுக்கும் எதிரே இருக்கும் சர்வேஷிற்கும் எத்தனை வித்தியாசங்கள் ஆனால் இப்போதெல்லம் அவளது மனம் சர்வேஷை அதிகம் நினைப்பதாய் பட, வெகு சிரமப்பட்டே தன்னை அவள் திடம் செய்துகொண்டு இருந்தாள்.. 

கார்த்திக்கும் ஸ்ரீநிதியும் கல்லூரியில் பேசிக்கொண்டாலும் அவர்களது நட்பு வளர்ந்ததே ஒழிய, தங்கள் உடன் பிறப்புகள் பற்றி அவர்கள் கொண்ட ஆசை அப்படியே தான் இருந்தது.. அன்று என்னவோ சௌபர்ணிகா சீக்கிரமே வேலை முடிந்து வந்திருந்தாள் வீட்டிற்கு.. அலுப்பு தீர குளித்து வந்தவள் டிவி முன்பு அமர்ந்திருந்தாள்..

“சோபி, காப்பியா டீயா ???” என்று புனிதா கேட்க..

“எதாவது ஒண்ணு குடும்மா..” என்று அவளும்  சொல்லிட, சில நிமிடங்களில் அவளுக்கு சூடாய் கமகமக்கும் காப்பியோடு வந்தார் புனிதா..

“சோபி, சாயங்காலம் சப்பாத்தி செய்யட்டா இல்லை பூரி போடவா ??”என்று  அடுத்த கேள்விக்கு போக,

“எதாவது ஒண்ணு செஞ்சு குடும்மா…” என்றவளின் பார்வை தான் டிவியில் இருந்ததே ஒழிய கவனம் எல்லாம் வேறு எங்கோ இருப்பது அந்த அன்னைக்கு மகளின் பேச்சில் இருந்தே புரிந்தது. என்னவென்று விசாரிக்கும் முன்,

“பால்டாயிலா, தூக்க மாத்திரையா சோபி கண்ணு” என்று அக்காவிற்கும் அம்மாவிற்கும் இடையில் கார்த்திக் வந்தமர,

“ஏதாவது ஒ… ” என்று அரம்பிதவளுக்கு அப்பொழுது தான் அவன் கேட்டது புரிந்து கையில் இருந்த ரீமோட்டை தூக்கி எறிந்தாள்.. அதை வாகாய் கையில் பிடித்தவன்..

“என்ன சோபி கண்ணு ஒரே புகை மூட்டதுல இருக்க??” என்று கிண்டலாய் வினவ,

“ம்ம்ம்ச் என்னடா???” என்றாள் எரிச்சலாய்..

“இல்ல ஒரே யோசனையா இருக்கியே அதான் கேட்டேன்.. ” என்று கார்த்திக் பேச ஆரம்பித்ததுமே புனிதா அடுப்படி சென்றுவிட்டார்.. பின்னே இவர்கள் இருவரும் போடும் மொக்கையை யார் கேட்பது என்று..

“ஒண்ணுமில்லை இந்தா நீ டிவி பாரு.. நான் ரூம்க்கு போறேன்” என்று எழ,

“சோபி நில்லு” என்றவன் புனிதா வேறு வேலையில் கவனமாய் இருப்பதை கண்டு “உன்கிட்ட பேசணும் ” என்றான்..

“என்னடா?? உனக்கு எதுவும் வேணுமா ??” என்று அக்கறையாய் விசாரித்தாள்..

“ம்ம்ச் எனக்கு எல்லாம் எதுவும் வேண்டாம். உனக்கு என்ன பிரச்சனை?? நீ ஏன் சோபி அப்பப்போ என்னவோ போல இருக்க ??” என்றான் பாசமாய்..

கார்த்திக் எப்பொழுதும் விளையாட்டாய் பேசுவான் கேலி கிண்டல் என்று தான் இருப்பான்.. ஆனால் அவனை போல பாசமானவனை பார்க்க முடியாது என்பது சௌபர்ணிகாவிற்க்கு தெரியும். இருந்தாலும் தம்பி கேட்கும் இக்கேள்விக்கு அவள் என்னவென்று பதில் சொல்வாள்.. அவளது மனதில் இருக்கும் எண்ணங்கள் அவளுக்கே முதலில் தெளிவில்லாது இருக்க, 

“என்.. என்ன டா.. என்ன சொல்ற லூசு.. அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று படபடத்தாள்.

“சும்மா பொய் சொல்லாத சோபி.. நானும் நீ வந்ததில் இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன்.. நீ எதோ யோசனையிலேயே இருக்க.. என்ன எதுவும் லவ் மேட்டரா?? எதுவா இருந்தாலும் சொல்லு சோபி.. அய்யா அசலாட்ட தீர்த்து வைக்கிறேன்..” என்று அவளை சகஜமாக்க முயல, சோபி அதிர்ந்தேவிட்டாள்..

“டேய் சும்மா இருடா.. அம்மா காதில விழ போகுது” என்றவள் சுற்றி முற்றி பார்த்துவிட்டு  “ஏன்டா உனக்கு இப்படி எல்லாம் தோணுது..??” என்றாள் ரகசியமாய் பேசுவது போல்..

“நான் என்ன தப்பாவா கேட்டேன்…??  உண்மையா சொல்லு நீ யாரையோ லவ் பண்றதானே?? எதுவா இருந்தாலும் சொல்லு சோபி.. ஒரு யூத் மனசு இன்னொரு யூத்துக்கு தான் தெரியும்..”  என்று விடாமல் நச்சரித்தான்..

‘அவனுக்கு மேல இவன் படுத்துறானே.. கடவுளே.. ஒருவேளை போட்டு வாங்குறானோ.. இருந்தாலும் இருக்கும்..’ என்று யோசித்தவள்  “அப்படின்னு நான் சொன்னேனாடா ??” என்றாள்..

“நீ தான் எதுவுமே சொல்லாம இருக்கியே சோபிக்கண்ணு…”

“அது ஒண்ணுமில்லடா, இந்த அப்பா வேற எப்போ பாரு என்னை கல்யாணம் பண்ணி அப்பனும்னு இருக்காருடா.. ஆனா எனக்கு உங்க எல்லாரையும் விட்டு போக பிடிக்கவே இல்லடா.. நீ அம்மா அப்பா எல்லாரையும் விட்டு நான் எப்படிடா இருப்பேன்” என்று முகத்தை பாவம் போல் வைத்து ராகம் பாடினாள்..

அவள் முகத்தையே பார்த்தவன் “ஹ்ம்ம்.. அம்புட்டு நல்லவளா சோபி நீ.. வேலைக்கு போகும் போதே விட்டா போதும்னு போன நீ.. இப்போ இம்புட்டு கதை சொல்ற.. ஹ்ம்ம் சரி விடு இது தான் உனக்கு கவலைன்னா அதுக்கு நான் ஒரு வழி பண்றேன் ” என,

“டேய் என்னடா செய்ய போற ??” என்றாள் வேகமாய்.

“என்னவோ பண்ணுவேன்.. உனக்கென்ன நீ கல்யாணம் ஆனா பிறகும் இதே ஊருல இருந்தா சரிதானே??”

“சும்மா விளையாடாத கார்த்திக்..  பேசாம உன் வேலையை பாரு..”

“அட சோபி என்கிட்டே” என்று எதுவோ கூற வந்தவன்,  பரந்தாமன் அவரின்  அறையில் இருந்து வரவும் வாயை மூடிக்கொண்டான்.. சௌபர்ணிகாவும் ஒன்றும் தெரியாதவள் போல முகத்தை வைத்துகொண்டு இருக்க,

“என்ன கார்த்திக் வந்துமே சோபிக்கூட அரட்டை.. போ முதல்ல முகத்தை கழுவிட்டு வா…” என்றார் பரந்தாமன்..

“ம்ம் சரிங்கப்பா..” என்று கார்த்திக்கும் பவ்யமாய் எழுந்து சென்றிட,  

“ஹ்ம்ம் இவனை நம்பி நான் மட்டும் சொல்லிருந்தேன் அவ்வளோதான்.. போறான் பாரு ..” என்று எண்ணியபடி அவளும் எழ, பரந்தாமன் அழைத்தார்..

“என்னப்பா..??? ”

“இப்படி உட்கார் சோபி…” அமர்ந்தாள்..

“வேலை எல்லாம் எப்படி சோபி போக்குது?? ”

“நல்லா இருக்குப்பா..  ”

“அப்புறம் சோபிம்மா எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம் பேச பிடிக்காது உனக்கே தெரியும். அதுனால அப்பா கேட்கிறதுக்கு நேரா பதில் சொல்லு என்ன?? ஏன் கல்யாணம் வேணாம்னு தள்ளி போடுற சோபி ?? இல்ல உனக்கு வேற எதாவது பிரச்சனையா??”

அவர் பிரச்சனையா என்ற கேட்ட விதமே உன் மனதில் காதல் கீதல் என்று எதாவது கிறுக்குத்தனம் இருக்கிறதா என்று கேட்டது போல் இருந்தது அவளுக்கு.. அவரது பார்வையும் பேசும் அவளுக்கு உள்ளூர ஒருவித பயம் கொடுக்க, எங்கே தனக்குள்ளே இருக்கும் காதல் அப்படியே உள்ளேயே அமிழ்ந்து போய்விடுமோ என்று அச்சமாகவும் இருந்தது..

அனைவரும் பிரச்சனை பிரச்சனை என்று சொல்லும் அவ்விசயம் அவளுக்கு பிடிதமானதல்லவா.. அதை எப்படி அவள் பிரச்சனை என்று எண்ணுவாள்.. அப்படியே எண்ணினாலும் அது அவளது மனமே ஏற்காதே முதலில்.. அப்படியிருக்கையில் இதை அவள் யாரிடம் என்ன சொல்லிட முடியும்.. 

மகள் அமைதியாய் இருப்பது கண்டு “சௌபர்ணிகா…” என்று பரந்தாமன் அழைக்க,  

“பிரச்சனை எல்லாம்.. எது.. எதுவும் இல்லைப்பா..” என்றாள் சமத்தாய்.

“நல்லது.. அம்மா அன்னிக்கு சொன்னா ரெண்டு மாசம் போகட்டும்னு.. நானும் சரின்னு சொன்னேன்.. நீ கேட்ட ரெண்டு மாசம் முடிஞ்சு நாள் ஆச்சு சோபி.. நாங்களும் எங்க கடமையை முடிக்கணுமே.. அடுத்து தம்பி இருக்கான்.. சோ இனியும் நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கு காரணம் சொல்லமாட்டன்னு நினைக்கிறேன்..” எனும் போதே புனிதாவும் அங்கே வந்திட, அம்மாவை கெஞ்சலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, 

“இல்லைப்பா அது வந்து” என்று இழுக்கும் போதே,  

“அப்பா சோபிக்கு என்ன பிரச்சனைன்னு நான் சொல்றேன்” என்ற  கார்த்திக்கின் குரல் அனைவரையும் அமைதிக்கொள்ள வைத்தது..

“ஐயோ!! அரைக்கிறுக்கன் என்ன உளற போறான்” என்று சோபி பதற்றமாய் பார்த்தாள்..

“என்ன கார்த்திக்..?? இப்போ தான் அவ எதுவும் இல்லைன்னு சொன்னா.” என்று  பரந்தாமன் மக்கள் இருவரையும் மாறி மாறி பார்க்க,

“இல்லைப்பா இதே கேள்வியை தான் நான் கொஞ்ச நேரம் முன்ன கேட்டேன் அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா???” என்று  வேண்டுமென்றே சௌபர்ணிகாவை கிண்டலாய் பார்த்தான் கார்த்திக்..

“இது விளையாடுற நேரம் இல்லை கார்த்திக்..” என்று புனிதா சொல்ல,

“இல்லைம்மா விளையாடலை.. சோபிக்கு மதுரைகுள்ளயே மாப்பிள்ளை வேணுமாம்.. அப்போதான் நம்மல விட்டு ரொம்ப தூரம் போகாம இருப்பாளாம்.. அதான் அவ பயமே..” என்று  போட்டு உடைத்துவிட்டான்..

பரந்தாமனும், புனிதாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள,   சோபிக்கு தான் இப்பொழுது திக் திக் என்றது.. கார்த்திக்கோ என் வேலை முடிந்தது என்று திண்ணமாய் அமர்ந்திருக்க,  

‘பாவி டேய் இப்படியா உளறி வைப்ப’  என்று பயந்தபடி தந்தையின் முகம் பார்த்தாள்.. ஆனால் அவரோ புன்னகை புரிந்தார்.. புனிதாவுமே சிரித்தபடி தான் இருந்தார்.

“இது எல்லா பொண்ணுங்களுக்குமே வர பயம் தான் சோபி. ஆனா இதுதான் உன் ஆசைனா கண்டிப்பா அப்பா அதை செய்வேன். உனக்கென்ன இந்த ஊருக்குள்ளயே இருக்கணும் அவ்வளோதான. பார்த்துட்டா போச்சு. என்ன புனிதா சரிதான??” என்று வினவ,   அவரும் சம்மதமாய் சிரித்தார்.

‘இப்போது சிரிப்பதா வேண்டாமா…’ என்று சௌபர்ணிகா தெரியாமல் இரண்டிற்கும் நடுவில் ஒரு புன்னகையை சிந்த,  கார்த்திக்கோ உடனே இதை ஸ்ரீக்கு வாட்ஸப்பினான்…

“ஹ்ம்ம் முதல் பால் போடவே இத்தனை நாள்.. சரி சரி அந்த உள்ளூர் மாப்பிள்ளை எங்க அண்ணன் தான்னு முடிவு பண்ண நானும் ஏதாவது பண்றேன்..” என்று பதில் அனுப்பியவள்,  அவளின் திட்டத்தை செயல்படுத்த  தன் அன்னையிடம் இருந்து ஆரம்பித்தாள்..

“என்னம்மா நீ ஸ்டார்ட் பண்ண வேகத்துல இந்த வருசத்திலேயே பாட்டி ஆகிடுவ, நானும் அத்தையாகிடுவேன்னு ஆசையா இருந்தேன்.. ஆனா ஒன்னையும் காணோம்.. அண்ணன் பேச்சுக்கு அப்படியே பயந்து ஒடுங்கிட்டியே மா…”  என்றிட, சரியாய் தான் அவளது தூபம் வேலை செய்தது..

“என்னைய என்னடி பண்ண சொல்ற.. எனக்கும் ஆசை தான்.. ஆனா இவன் பிடிகுடுக்கனுமே. இப்போ பார் ஆடி சீசன் சொல்லி அடுத்து தீபாவளி சீசனும் வந்திடுச்சு.. வேலை வேலை வேலைன்னு சொல்றவனை நான் என்ன செய்ய..”

“அட என்னமா நீ.. நீ கொஞ்சம் அழுத்தமா இருந்தா அண்ணன் என்ன முடியாதுன்னு சொல்ல போறானா என்ன ??” என்றவள் பின்னே யோசிப்பது போல் பாவனை செய்து “ஒருவேளை அண்ணன் மனசுல எதுவும் லவ் அது இதுன்னு..” என்று இழுக்க,

“ஏய் ஸ்ரீ என்னடி சொல்ற..” என்று மோகனா கேட்டிடவும்,

“ம்மா நானா தான் சொல்றேன் ஒருவேளை அப்படி எதுவும் இருக்குமோன்னு..” என்று ஸ்ரீநிதி சொல்ல,

“அப்படி ஏதாவதுன்னா கூட பரவாயில்லை தான்டி.. என்ன நம்ம சொந்தக்காரங்க எல்லாம் ஏதாவது சொல்வாங்க ஆனா அதெல்லாம் கூட பிரச்சனை இல்லை..” என்றார்..

“பின்ன என்னம்மா பிரச்சனை??”

“சர்வா தான் சர்வ பிரச்சனைக்கும் காரணம்..” என்றவர் “நம்ம ஒரு பொண்ணு பார்த்து அது அவனுக்கு பிடிக்கலைன்னா என்ன செய்ய..” என்றார் கவலையாய்..

“ஹ்ம்ம் அப்பாக்கிட்ட இதைப்பத்தி பேசும்மா.. அவரும் ஏதாவது ஐடியா சொல்வார்ல..”  

“ம்ம் பேசணும்.. சொந்தக்காரவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியலை.. ஆனா இவனுக்கு ஏத்த பொண்ணாவும், ஓரளவுக்கு நமக்கு தெரிஞ்ச குடும்பமாவும் இருந்தா நல்லது ஸ்ரீ.. அப்போதான் பழக்கவழக்கம் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும்.. ஆனா யார்கிட்ட என்ன சொல்லி விசாரிக்கன்னு தெரியலை..” என,

“அட பழம் நழுவி பால்ல விழுதே.. ” என்று எண்ணிய ஸ்ரீநிதி,

“ஏம்மா நீ தான் எத்தனை விசேச விட்டுக்கு எல்லாம் போற.. போற இடத்துல எத்தனை பொண்ணுங்க வர்றாங்க.. ஒண்ணு கூடவா உனக்கு கண்ணுல படலை.. என்னையவே நம்ம மாமா வீட்டு விசேசத்துல யாரோ கேட்டாங்கன்னு சொன்ன.. அப்போ உனக்கு ஒரு பொண்ணு கூட தெரியலையா..?? விசாரிம்மா.. அண்ணனை எப்படியாவது சம்சார சகரத்துல தள்ளிடலாம்…” என்று மெதுவாய் கொஞ்சம் கொஞ்சமா அவர் மனதில் யோசனையை கிளப்பி சிரித்தாள்..

மகள் கூறியதை கேட்டு மோகனாவிற்குமே மனது கொஞ்சம் நிம்மதி அடைந்தது.. அப்படியும் சொந்த பந்தம் என்று யோசித்து ஓரளவு தெரிந்த குடும்பம் என்றால் நிம்மதியாய் மகனுக்கு முடித்துவிடலாம் என்று தோன்றவும்,  

“அம்மா மீனாட்சி என் மகனுக்கு ஏத்த பொண்ணா, எங்க குடும்பத்துக்கு நல்ல மருமகளா அவன் மனசுக்கு பிடிச்ச மாதிரி அனுப்பி வைம்மா..” என்று வேண்டினார்..

தன் அன்னையோடு சேர்ந்து ஸ்ரீயும் வேண்டினாள்.. இருவரின் வேண்டுதலுக்கும் அன்னை மீனாட்சியின் அருள் கூடிய விரைவில் கிட்டியது…          

மற்றவர்கள் அனைவரின் எண்ணமும் ஒவ்வொரு விதமாய் இருக்க, சர்வேஷின் எண்ணங்களோ வேறுவிதமாய் இருந்தது.. எத்தனையோ கடின முயற்சிக்குப் பிறகு, அவனது பலவிதமான விருப்பு வெறுப்புகளுக்குப் பிறகு இந்த நிலையை எட்டியிருக்கிறான்..

வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஓட்டத்தில் அவனது இயல்பை அவன் தொலைத்திருக்கிறான் என்பது அவனுக்குமே நன்கு தெரியும்.. இருந்தும் இன்னும் கொஞ்சமா இன்னும் கொஞ்சம் என்று தன்னை அவன் ஆரம்பித்த புதிய தொழிலில் நிலைநிறுத்திக்கொள்ள அவன் ஓடிக்கொண்டே இருக்க, இந்த ஓட்டம் அவனது வாழ்நாள் முழுதும் நிற்காது என்பது அவனுக்கு தெளிவாய் புரிந்துபோனது..

வீடிற்குபோனால் ஒருபக்கம் அம்மாவும் தங்கையும் திருமணம் பற்றி பேசுவதும், அப்பாவோ “என்ன சர்வா..??!!” என்று கேட்பதுமாய் இருக்க, அவனுக்கே அவன் மனதில் என்ன உணர்கிறான் என்பது தெரியவில்லை..

அவன் மனதில் இருக்கும் வெற்றிடம் யார் நிரப்ப போகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்.. ஆனால் சௌபர்ணிகாவை காணும் போதெல்லாம் அந்த வெற்றிடத்தின் அளவு விஸ்தாரமானதாகவே இருந்தது..

பல நேரங்களில் அவளோடு பேசுகையில் அவன் தன்னை மறந்து சிரிக்கிறான்.. ஆனால் அதுவே தொடருமா என்ன?? வேலை என்று வருகையில் மற்றது அனைத்தும் மறந்து போகிறது..

“அண்ணா… அண்ணா…” என்று ஸ்ரீநிதி அவனோடு ஆசையாய் பேச வருகையில் அவளுக்காக நேரம் ஒதுக்க அவனால் முடியவில்லை.

முன்னெல்லாம் இப்படியில்லை.. வார விடுமுறை நாட்கள் என்றால் வீட்டில் அப்படியொரு கொண்டாட்டம் தான் இருவருக்கும்.. இப்போதுமே கூட கார்த்திக் சௌபர்ணிகாவை பார்க்கையில் அந்த நாட்களின் ஏக்கம் இப்போதும் அவனுள்..

‘இவ என்னை ரொம்ப ரொம்ப டிஸ்டர்ப் பண்றா..’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் இன்னும் கொஞ்சம் தன்னை சுய அலசல் செய்திருக்கலாம்..

ஆனால் அப்படி செய்யாமல் விட்டது தான் காலத்தின் ஆட்டமோ என்னவோ..

அன்றும் அப்படியே ஒருவித சோம்பிய மனநிலையில் இருந்தவன், மெதுவாய் கிளம்பலாம் என்ற எண்ணம் கொண்டு வீட்டில் இருக்க, 

“ஹலோ!! சோபிக்கா நீங்களும் விருந்துக்கு வர்றீங்களா??” காலங்கார்த்தாலே அலைபேசியில் அரட்டையில் இருக்கும் தங்கையை முறைத்தபடி அன்றைய தினசரி படித்துகொண்டு இருந்தான் சர்வேஷ்..

‘இவதான் வேலை இல்லாம அரட்டை அடிக்கிறானா அவளும் அப்படித்தானா இதெல்லாம் ஒரு பொழப்பு..’ என்றெண்ண,

“என் பொழப்பு தானேக்கா நல்லாத்தான் போகுது.. என்ன இந்த இன்டெர்னல் எக்ஸாம்ஸ் மட்டும் இல்லைனா இன்னும் நல்லா போகும்…” என்று ஸ்ரீநிதி பேசிக்கொண்டு இருக்க,

‘இவளை படிக்கதான காலேஜ் அனுப்புறோம்.. அப்புறம் எக்ஸாம்ஸ் வைக்காம என்ன செய்வாங்கலாம்’ என்று மனதில் நினைத்தான் சர்வேஷ்..

“செய்வாங்கக்கா எல்லாம் செய்வாங்க.. ஆனா அதெல்லாம் எங்களுக்கு ஒத்துவரணுமே.. அதிலும் எங்க அண்ணன் இருக்கானே.. ஹப்பா காலேஜ்ல போடுற ரூல்ஸ் கூட பரவாயில்லை” என்று எதிரே இருந்தவனை பார்த்து பலிப்பு காட்டி பேசியவளை இப்போது  சிரித்தபடி முறைத்தான் சர்வேஷ்..

எப்போதும் இப்படி எல்லாம் அமர்ந்து யார் பேசுவதையும் கேட்பவனல்ல, அதிலும் ஸ்ரீநிதி அவளின் பிரண்ட்ஸோடு பேசுகிறாள் என்றாள் அப்படியே நகர்ந்திடுவான்.. இப்போதோ அவள் பேசுவது சௌபர்ணிகாவிடம் என்று தெரியவும் அப்படியே கோந்து போட்டதுபோல் அமர்ந்திருக்க,

இதை ஸ்ரீநிதியும் புரிந்துகொண்ட மேலும் மேலும் பேச்சை வளர்த்துக் கொண்டு இருந்தாள்..   

ஷர்வேஷிற்கு இன்னும் கூட சந்தேகம், எப்படி பெண்கள் இருவர் சேர்ந்தால் பேச வேறு வேறு விஷயம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது என்று. உடையில் ஆரம்பித்து, சினிமாவிற்கு போய்.. வைக்கும் போட்டு முதற்கொண்டு பேசி அதிலும் வரும் விளம்பரங்களுக்கு இவர்கள் ஒரு கமென்ட் கொடுத்து என்று பேச்சு நீண்டுகொண்டே இருக்க,  நேரம் கடந்து கொண்டே போகவும் “ஸ்ரீ போதும் போய் கிளாஸ்க்கு கிளம்பு.. சௌபர்ணிகாவும் கிளம்ப வேண்டாமா ??” என்றான்.

“ஹலோ அண்ணா இன்னிக்கு சண்டே நீ வேணா காலேஜ் போ.. அதுவும் இல்லாம இன்னிக்கு மாமா வீட்டுல விருந்து.. சோபி அக்காவும் வர்றாங்கலான்னு கேட்கதான் பேசிட்டு இருக்கேன்..” என்று அவளோடு பேசியபடியே இவனுக்கும் பதில் அளித்தாள்..

‘அதுக்கு இவ்வளோ நேரமா…’ என்று சர்வேஷ் பார்க்க,

“அக்கா உங்க சார் தான்.. எப்படிதான் எங்க அண்ணாகிட்ட வேலை பாக்குறீங்களோ ஹப்பா!! ஒருநாளைக்கு எத்தனை பாட்டில் தண்ணிக்கா குடிப்பீங்க… ??” என்று ஸ்ரீநிதி கேட்ட கேள்வியில் சௌபர்ணிகா வயிறு வலிக்க சிரித்தாள்..

“சிரிச்சு முடிச்சாச்சா??..” என்ற சர்வேஷின் குரல் கேட்கவும் படக்கென்று சிரிப்பை நிறுத்த “ஹலோ மேடம் லைன்ல இருக்கீங்களா??” என்று நக்கலாய் வினவியது சர்வேஷின் குரல்..

“சர்…”

“சீக்கிரம் கிளம்பி வா”

“ஓகே சர் ” என்று மட்டும் கூறி வைத்துவிட்டாள்..

‘முசுடு இவனும் சிரிக்கமாட்டான் என்னையும் சிரிக்கவிடமாட்டான்..’ என்று திட்டிக்கொண்டே குளிக்கச் சென்றாள்..

“சோபி மா சேலை கட்டுடா..” என்ற தாயின் குரலுக்கு பதில் எதுவும் சொல்லாமல் சுடிதாரை மட்டும் அணிந்து வந்தவளை முறைத்த புனிதா  “ஏன் டி சோபி அப்போ நீ விருந்துக்கு வரலையா ??” என்று கேட்கவும்,  

‘ஆமா அந்த விருமாண்டிகிட்ட வேலைக்கு சேர்ந்து இந்த விருந்துக்கு வரதுதான் குறைச்சல்..’ என்று புலம்பியவள், “அம்மா, நான் என்ன சும்மா டைம் பாஸுக்கு வேலைக்குப் போறேனா?? இல்லை அங்க தான் என்னைய சும்மா சேர்த்திருக்காங்களா?? சும்மா சும்மா லீவ் எல்லாம் என்னால கேட்க முடியாதும்மா..” என, 

அதே நேரம் பார்த்து பரந்தாமனும் வர அமைதியாய் தட்டில் இருப்பதை கொறிக்க தொடங்கினாள்..

“என்ன சோபி நீ விருந்துக்கு வரலையா???” என்று அவரும் கேட்க,

“இல்லப்பா தீபாவாளி சீசன்ல. வேலை இருக்கு.. அதான்” என்றுவிட்டு மீண்டும் தட்டில் கவனம் செலுத்த,

“இதையே தானே நானும் கேட்டேன் எப்படி எரிஞ்சு விழுந்த, அப்பாவை பார்த்தா மட்டும் அப்படியே நல்ல பொண்ணாட்டம் இருந்திட வேண்டியது” என்று  முனுமுனுத்த புனிதாவைப் பார்த்தவள்,

“லீவ் இல்லம்மா..” என்று சொல்லி சமாதனம் செய்ய,    

“லீவ் எல்லாம் வேண்டாம் சோபி.. கொஞ்சம் நேரம் பெர்மிசன் கேட்டு மதியம் சாப்பிட மட்டும் அங்கவா.. வேணும்னா நான் அந்த தம்பிகிட்ட பேசவா??” என்றார் பரந்தாமன்.

“அய்யோ!! அதெல்லாம் வேணாம் ப்பா.. நான்.. நானே அவர்கிட்ட கேட்டிட்டு வர்றேன்.. எப்படியும் மதியம் அங்க வந்திடுறேன்பா..” என்று கிளம்பிட,

“நல்லதும்மா..” என்று அவரும் சொல்லவும்  விட்டால் போதும் என்பது போல கிளம்பி சென்றுவிட்டாள் மாலுக்கு.. அங்கே அவளுக்கு முன்னமே சர்வேஷ் வந்திருந்தான்..

                

                 

                  

                 

    

 

Advertisement