Advertisement

சுகம் – 5

வாசல் பார்த்து காத்திருந்தேன்

மன்னவன் வருவான் என

மின்னல் கீற்றாய் உன்முகம்

கண்ணிமைக்க மறந்தேன் நானும்..

“ஹலோ!! Mr. பிரசன்னா, யா! நீங்க அனுப்பின சாம்பிள் மெட்டிரியல்ஸ் பார்த்தேன் பட் நான் கேட்டது இது இல்லையே…”

……

“நோ நோ பிரசன்னா.. ஐ வான்ட் வாட் ஐ ஆஸ்க்… நான் கேட்டது வேற.. நீங்க அனுப்பினது வேற..”

“ஐ கான்ட்… டேக் டூ ஆர் த்ரீ டேஸ் டைம்.. டெலிவர் வாட் ஐ ஆர்டர்.. இல்ல உங்கனால முடியாதுன்னா வெரி சிம்பிள் வி கான்செல் தி டீல்…”

சர்வேஷ் பேசுவதையே பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் சௌபர்ணிகா. அவனின் எதிரே தான் அமர்ந்திருந்தாள்.. அழைத்ததும் அவனே தான்.. ஆனால் வர சொல்லிவிட்டு அவன் அலைபேசியில் கதைத்துக் கொண்டு இருக்க, இவளுக்கோ பொறுமை கொஞ்சம் கொஞ்சம் குறைந்துகொண்டு இருந்தது..

‘இவனுக்கு இதே வேலை என்னை வர சொல்லிட்டு இவன் வேலைய பார்த்துட்டு இருப்பான்.. ஒருவேளை சீன் போடுறானோ’

“சௌபர்ணிகா…. ”

“ஹா !! சர்… ”

“ஏன் எப்போவும் எதோ திங்கிங்க்லையே இருக்கீங்க????”

‘ஹா!!! திங் பண்றவங்களுக்கு எல்லாம் டீ கிடைக்குமாம்.. கேட்கிறான் பார் கேள்வியை’  என்றெண்ணியவள் “ ந… நத்திங் சர்….” என்றாள் வேகமாய்..

“நல்ல பதில் பழகி இருக்கீங்க எது கேட்டாலும் நத்திங்.. ஓகே அந்த பி.கே. குட்ஸ்ல இருந்து த்ரீ டேஸ்ல நம்மக்கேட்ட மெட்டிரியல்ஸ் வரலைன்னா டீல் கான்செல் பண்ணிட்டோம்னு மெயில் போட்டிருங்க..”

“ஓகே சர்.. ”

“தட்ஸ் இட்.. யூ மே கோ..” என்றதும்,

“சர்…” என்று தயங்கிப் பார்த்தாள் சௌபர்ணிகா..

“ம்ம் வாட் ???”

“என்.. எனக்கு டூ டேஸ் லீவ் வேணும்…??” என்று கேட்டவளின் மனதோ  ‘யப்பா இத கேட்குறதுக்குள்ள நாக்கு தள்ளுதுடா சாமி.. இவன்கிட்ட மட்டும் தான் எனக்கு இப்படி….’ என்றெண்ண, அவனோ பதில் எதுவும் கூறாமல் அவளையே பார்த்தான்…

‘டேய் பதிலை சொல்லு டா.. அப்புறம் பாரு…’

“ஏன் லீவ்???”

“க…கசினுக்கு மேரேஜ்…”

“கசினுக்கு தானே மேரேஜ்.. உங்களுக்கு இல்லையே…” என்று சர்வேஷ் சொன்னதும்  ‘சோபி உச்சபட்ச அவமானம் உனக்கு..’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டவள்,            

“வியாழன், வெள்ளி கண்டிப்பா லீவ் வேண்டும் சர். ” என்றாள்..

“ம்ம் நானுமே அந்த டேஸ்ல கொஞ்சம் பிசி.. பேமிலி பங்க்சன்.. ரெண்டு பேருமே ஆஃப் ஆனா எப்படி..???” என்று சர்வேஷ் யோசிக்கும் போதே,

‘புடலங்கா நீ… நீ… மட்டும் போய் நல்லா விருந்து சாப்பாடு மொக்கனும், நான் அன்னிக்கும் டப்பா சாப்பாடா…’ என்று கடிந்தவளுக்கு, மனதில் தன் அன்னை படித்து படித்து கூறியது தெளிவாய் கேட்டது…

“ஒன்னு ரெண்டு நாள் லீவ் போடு.. இல்லை அன்னிக்கு நீதான் சமைச்சு சாப்பிடனும்..”  

“ஓ !! நோ…” என்று வாய் விட்டே சொல்லிவிட்டாள் சௌபர்ணிகா..

“என்ன நோ!!??” என்று சர்வேஷ் புரியாது பார்க்க,

“நத்திங் சர்… ” என்றாள் வழக்கமாய்..

“ம்ம்ச்.. பங்க்சன் டைம் என்ன??” என்றதும்  அவளும் ஒரு நேரத்தை சொல்ல,  

“சிம்பிள் வியாழன் சாயங்காலாம் கிளம்புங்க, வெள்ளி கல்யாணம் முடியவும் வந்திடுங்க… ஒரு ஒன் ஹவர் லேட்டானா கூட ஓகே” என்றான் பெருந்தன்மையாய் சொல்வது போல்..

‘அட தர்ம பிரபு, தாராள தடுக்கு… என்ன ஒரு பெருந்தன்மை..’

“ஓகே தானே…” என்று சர்வேஷ் அவள் பதில் சொல்லாது இருப்பது கண்டு மீண்டும் கேட்க,

“இல்லை சர்…. அது..” என்று அவளும் தயங்க,  

“இவ்வளோ தான் என்னால முடியும்..” என்று எழுந்து சென்றுவிட்டான்…

‘ஹ்ம்ம் போயிட்டானா… இவன் ஒருத்தன் இவனைப் பத்தி மட்டுமே திங் பண்ணுவான்.. வீட்டில வேற இதை நான் எப்படி சமாளிப்பேன்.. இவன் வேற தினமும் இந்த நேரம் கிளம்பிடுவான்.. ச்சே எத்தனை சிடு சிடுப்பு…’ என்று சலித்தவள் சோர்வாய் அவளின் இருக்கைக்கு வந்தாள்.  

சௌபர்ணிகாவிற்கு இப்பொழுது எல்லாம் தான் அதிகமாய் சர்வேஷை பற்றி நினைக்கிறோமோ என்று இருந்தது.. அவன் ஏன் இப்படி இருக்கிறன்?? என்று .. ‘அவன் எப்படி இருந்தா உனக்கு என்ன உனக்கு சம்பளம் ஒழுங்கா வந்து செருதா அதை மட்டும் பாரு..’ என்று அவளது மனம் இடித்தாலும்

‘அதெல்லாம் இல்லை அவன் கொஞ்சம் சகஜமா பேசி சிரிச்சா எப்படி இருக்கும் ???அதான் சொன்னேன்’ என்று தனக்கு தானே கூறிக்கொள்வாள்..

“சோபி வர வர நீ விரும்புறவனை மறந்துட்ட, இப்ப எல்லாம் இந்த சர்வேஷை தான் ரொம்ப நினைக்கிற….” அவள் மனம் கேட்டதும்

‘அதெல்லாம் இல்லை.. அவனுக்கும் இவனுக்கும் எத்தனை வித்தியாசம்… எனக்கும் எல்லாம் தெரியும்.. நானே நினைச்சாலும் சர்வேஷ் கிட்ட கூட போக முடியாது… நீ கொஞ்சம் தூர போ..’ என்று கேள்வி கேட்கும் மனதை அடித்து விரட்டி இப்படி அவளே அவளுக்குள் சர்வேஷிற்கும் அவளது எண்ணத்தின் நாயகனுக்கும் இடையில் போராடத்  தொடங்கினாள்…

“சர்வா நீ எப்போடா மாமா வீட்டுக்கு வர, நாங்க எல்லாம் காலையிலேயே அங்க போகலாம்னு இருக்கோம்…” என்று மோகனா கேட்கவும்

“காலையிலேயே அங்க வந்து நான் என்ன ம்மா பண்ண போறேன்… ???” என்றான் சுவாதீனமாக…

“அதுக்கில்லடா அங்க நடக்கிற முதல் விசேஷம்.. அத்தையா நான் அங்க இருக்கணுமே… ”

“நம்மல முன்னாடி எல்லாம் கொஞ்சமாது மதிச்சாங்களா?? இப்போ மாட்டும் என்ன?? வசதியா இருக்கோம்னு வந்து வந்து பேசுறாங்களோ??”

கொஞ்சம் குத்தலாகவே பேசினான் சர்வேஷ்.. சில பல விஷயங்கள் அவனுக்கு கசப்பான அனுபவங்களை கொடுத்திருந்தது..

“டேய் என்னடா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க?? அவர் எப்படி இருந்தாலும் என் அண்ணன்டா… இன்னொரு தரம் நாங்க கூட பிறக்க போறது இல்லை.. முன்ன எப்படியோ இப்போ எல்லாம் நல்லாதானே நடந்துக்கிறாங்க”

“பின்ன செய்முறை செமத்தியா வரும்ல”

“அண்ணா இந்த விஷயத்துல நான் உனக்கு தான் சப்போர்ட். ” என்று ஸ்ரீநிதியும் அவனோடு சேர்ந்திட, மக்கள் இருவரும் தனக்கு எதிராய் திரும்பவும் விஸ்வநாதனை பார்த்தார் மோகனா..

“விடு மோகனா.. இந்த வயசுல எல்லாம் இப்படி தான் தோணும்.. கொஞ்சம் நாள் ஆகி, அவங்கவங்களுகுன்னு ஒரு குடும்பம் ஆனாதான் சொந்தபந்தம் அதோட அருமை எல்லாம் புரியும்.. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு புரியும்..”

“அப்பா ப்ளீஸ் ப்பா நீங்களும் ஆரம்பிக்காதிங்க என்ன.. அம்மா உனக்கு என்ன வியாழன் காலமே அங்க போகணும் அவ்வளோ தான.. நான் வர்றேன் உன்கூட.. அண்ணனுக்கு எப்போ ஃப்ரீயோ அப்போ வரட்டும்.” என்று ஸ்ரீநிதி அவளோன்று சொல்ல,

பதிலேதும் கூறாமல் மோகனா இருக்கவும் சர்வேஷ் “ம்மா நான் என்ன சும்மாவா இருக்கேன்.. வேலை இருக்கும்மா.. நீங்க இப்படி டக்குனு சொன்னா, நான் எப்படி உடனே சரி சொல்ல முடியும்.. நேரம் ஒதுக்க வேண்டாமா?? எப்படியும் நீங்க மண்டபம் போறதுக்குள்ள  நான் வந்திடுவேன்… சரியா..” என்று கொஞ்சம் இறங்கியே பேச,

“ம்ம் சரி… ” என்றார் அரை மனதாய்.

அன்னையை சமாதானம் செய்தவனின் மனம் சௌபர்ணிகாவை நினைத்தது.. ஒருவேளை அவளும் இப்படித்தான் வீட்டில் மாட்டிக்கொண்டு முழிக்கிறாளோ?? சரி நேரில் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டான்… சர்வேஷ் மாலுக்கு வரும் நேரம் சௌபர்ணிகா அவளிடத்தில் இல்லை..

“ரௌண்ட்ஸ் போயிருப்பா.. அந்த மட்டும் வேலை நல்லா பண்றா.. வாய் தான் ஏட்டிக்கு போட்டியா பேசிட்டு..” என்றவனின் எண்ணம் தன்னையும் அறியாமல் அவளை ஆராயத்  தொடங்கியது..

தன் இடத்தில அமர்ந்தபடி வெளியில் அவள் என்ன செய்கிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தான்.. அனைவரிடமும் வேலை வாங்குவதே தெரியாது பேசி வேலைகளை செய்ய வைத்தாள்.. அவளின் வழக்கமான பேச்சுக்கள் இல்லது இலகுவாய் இருப்பது போலவே இருந்தாலும் அவனுக்கு அதில் அவளின் ஒரு எல்லைகோடு தெரிந்தது..

“ஹ்ம்ம் எல்லார்டையும் நல்ல படியா தான் பேசுறா ஆனா அளவா தான்.. என்கிட்டே மட்டும் தான் இந்த வாய்..” போல என்று எண்ணியவன் அன்று கார்த்திக்கிடம் அவள் பேசியது நினைவு வந்தது..

‘ஓ!! மேடம் இது வெளிய போடும் சீனா??? அம்மா முன்னாடி எத்தனை பவ்வியமா நின்னா!!’ என்று எண்ணியவனின் எண்ணங்கள் அவள் பின்னே ஓட இழுத்து பிடித்தவன்.. தன் வேலையை கவனித்தான்.. சிறிது நேரத்தில் அவளும் வந்து சேர்ந்தாள்..

“குட் மார்னிங் சர்…”

“மார்னிங்… சௌபர்ணிகா நீ டு டேஸ் லீவ் கேட்டு இருந்தீங்களே.. வியாழன் மதியம் இருந்து வெள்ளி முழுக்க எடுத்துக்கோ என்ன??”

நீ நீங்கள் என்று போட்டு குழம்பி எடுத்தான்.. அவனுக்கே அதில் ஒரு தயக்கம்.. மற்றவர்களை பெயர் சொல்லி நீங்கள் என்கிறான்.. ஆனால் இவளிடம் அப்படி இருந்திட முடியவில்லை..

‘என்ன இது முசோலனி மெலடி வாசிக்கிறார்’ என்று அவனை ஒருநொடி பார்த்தவள்,  “சர்.. ஐம் யங்கர் தென் யு.. சோ நீங்க எல்லாம் வேண்டாம்..” என,

“யா யா மீ டு திங் தட் …  பட் இட் டேக்ஸ் சம் டைம்..” என்றான் வேகமாய்..

‘அடேய் நீயா தானே இப்படி பேச ஆரம்பிச்ச இப்போ என்ன டைம்ன்னு சொல்லிட்டு இருக்க…’ என்று நினைக்க மட்டும் தான் முடிந்தது அவளால்..

“லீவ் ஓகேன்னு சொன்னேன்.. ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்க முடியாது போல..” என்று மீண்டும் அவன் அவளது முகத்தைப் பார்க்க,

‘ஆமா நான் ஏன்னு கேட்டு எனக்கு பசி ஏப்பம் வர வரைக்கும் நீ கிளாஸ் எடுப்ப தேவையா ???’ என்று நினைத்துகொண்டு  “ஹா!! தேங்க்ஸ் ஏன் சர் ???”

“ஒண்ணுமில்லை.. தேர்ட் ப்ளோர்ல திங்க்ஸ் ப்ளேஸ் பண்றாங்க ஒன்ஸ் பார்த்துட்டு வா..” என்று அவளை அனுப்ப முயல, வந்த கோபத்தை அவனிடம் காட்ட முடியாது  ‘வில்லங்கம் சரியான வில்லங்கம்….’ என்று பல்லைக் கடித்து  முனங்கி கொண்டே போனாள்… 

வண்ண விளக்குகளாலும், வாசம் கொண்ட மலர்களினாலும் ஸ்ரீராம் திருமண மண்டபம் அலங்கரிக்கப்பட்டு அந்த மாலை வேலையில் ஜொலித்து கொண்டு இருந்தது.. மாப்பிள்ளை வீட்டினரும் பெண் வீட்டினரும் முன்னமே வந்த காரணத்தினால் வரும் விருந்தினரை வரவேற்கவும், மேற்கொண்டு மற்ற ஏற்பாடுகளை செய்யவும் இரண்டு வீட்டாரும் ஓடி ஆடி  வேலைகள் செய்து கொண்டு இருந்தனர்..

தன் தாய் மற்றும் அத்தை கூறும் வேலைகளை எல்லாம் அழகாய் பாந்தமாய் செவ்வனே செய்துகொண்டு இருந்தாள் சௌபர்ணிகா… ஆனாலும் அவளுக்கு இந்த சேலையை கட்டிக்கொண்டு சுற்றுவது தான் சற்றே சிரமமாய் இருந்தது.. அவளைப் பொருத்தமட்டில் சுடிதார் தான் எப்போதுமே.. சேலை ஆசையாய் இருந்தாலும் கொஞ்சம் சிரமம் என்று காட்டமாட்டாள்..

‘எப்படிதான் அம்மா எல்லாம் கண்ணு மூடி திறக்கிறதுக்குள்ள கட்டுறாங்களோ…’ என்று எப்போதும் நினைப்பவள், இப்போதும் அதையே நினைத்து தட்டுகள் அடுக்கி கொண்டு இருந்தாள்…   

“சோபிக்கா நீங்க எங்க இங்க?????”  என்று, சேலை கட்டி கழுத்தில் காதில் கையில் என்று அழகாய் போட்டு புதுப்பெண் போல நின்று இருந்தவளை வந்து அதிசயமாய் கேட்டாள் ஸ்ரீநிதி..

“ஹேய் ஸ்ரீ… நீ எங்க இங்க….” என்றவள் “மாப்பிள்ள என் மாமா பையன்” என்றாள் வேகமாய்..

“அட.. பொண்ணு என் மாமா பொண்ணுக்கா.. சூப்பர்லக்கா.. இப்போ நம்ம எல்லாம் சொந்தாமா???  இருங்க அம்மாவை கூட்டிட்டு வர்றேன்…” என்று அவளாக பேசி கணக்கு போட்டு, வேகமாய் ஓடியும் விட்டாள்..

“சொந்தமா?? அப்போ நாங்க எல்லாம் சொந்தமா.. இந்த சர்வேஷ் அவனும் தான் சொந்தமா?? சொந்தம்னா என்ன முறை வரும்??” என்று அதற்குள் சௌபர்ணிகாவின் மனது ஆயிரம் கணக்குகளை போட, “அவன் என்ன முறையா இருந்தாலும் உனக்கு என்ன அவன் உனக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளி அந்தளவுல இரு” என்று அவளின் அறிவு எட்டிப் பார்த்தது..

சிறிது நேரத்தில் மோகனாவும் வர சௌபர்ணிகா அவரோடு பேசிக்கொண்டு இருக்க, தன் மகளோடு பெண் வீட்டினர் பேசிக்கொண்டு இருப்பது கண்டு புனிதாவும் அங்கே வர மீண்டும் அங்கே ஒரு அறிமுகப்படலம்…

புனிதாவிற்கு தன் மகள் வேலை செய்யும் இடம் நல்ல இடம் தான் என்று இப்பொழுது நிம்மதியாய் இருந்தது.. புனிதாவின் உடன் பிறந்தவர் மூவர் என்பதால் அவர்கள் மக்கள் என்று இள வயது பெண்கள் ஆண்கள் என்று சோபியை சுற்றி நான்கு ஐந்து பேர் இருந்தனர்… மோகனாவிற்கு உடன் பிறந்தது ஒரே ஒரு அண்ணன் அவரது ஒற்றை மகளுக்கு தான் இப்பொழுது திருமணம் என்பதால் வேறு இளவட்டங்கள் இல்லது போக, ஸ்ரீநிதி தனியே அல்லவா இருக்கிறாள் கோந்து போட்டு ஒட்டியது போல சோபியிடமே ஒட்டிக்கொண்டாள்..

விழாக்களில் ஒன்று கூடினால் கேட்கவும் வேண்டுமா என்ன?? பேசியபடி அங்கும் இங்கும் அலைவதும், அவரவர் சொல்லும் வேலையை செய்வதும் பேசுவதும் சிரிப்பதுமாய், ஒருவரை ஒருவர் மாறி மாறி கேலி செய்வது  என்று பொழுது நன்றாய் தான் போனது.. நேரம் ஆக ஆக சோபியின் கண்கள் யாரையோ தேடின…

அவனும் வருவானோ??? குடும்பமே இங்கே இருக்கிறது இவன் எங்கே போனான்?? ஹ்ம்ம் இப்பொழுதும் வேலை தானா??? வேண்டாம் சோபி நீ ஏன் சர்வேஷை பற்றி நினைக்கிறாய்.. உன் மனதில் இருப்பவனுக்கும் அவனுக்குமான  வேறுபாடுகள் எல்லாம் மறந்துபோனதா??… அவளே கூறிக்கொண்டாள்..  ஆனாலும் மனம் சண்டித்தனம் செய்தது.. இந்த சர்வேஷ் எங்கே போனான்..

அவளது தேடுதலை கண்டுகொண்டது போல “அண்ணன் சீக்கிரமே வர்றேன்னு சொன்னான் சோபிக்கா.. பாருங்க இன்னும் ஆளை காணோம்..” என்றாள் ஸ்ரீநிதி..

“ ஓ !! ஏதாவது வேலை இருக்கும் ஸ்ரீ….”

புனிதா வந்து “சோபி நீங்க எல்லாம் போய் வரவேற்ப்புல நில்லுங்க சித்தினால ரொம்ப நேரம் நிற்கமுடியலை.. ஸ்ரீ நீயும் கூட போறதுன்னா போம்மா.. எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க. ” என்று சொல்ல,

“சோபிக்கா நான் தான் பன்னீர் தெளிப்பேன்.. ” என்றபடி ஸ்ரீநிதி ஆளுக்கு முன்ன கிளம்ப,

“நீ பெட்ரோல் கூட தெளி யார் வேணா சொன்னா..??” என்று கிண்டல் அடித்தபடி வந்தான் கார்த்திக்..

சௌபர்ணிகாவோ “ஐயோ இதுங்க ரெண்டையும் நான் தான் சமாளிக்கனுமா..” என்று நொந்தபடி வந்து வரவேற்புக்கு நின்றனர் அனைவரும்..

மோகனா விஸ்வநாதனையும் அழைத்து வந்து சோபி மற்றும் அவளது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தினார்.. ஆனால் இதெல்லாம் அங்கிருந்த ஒருவருக்கு பிடிக்கவில்லை.. வேறு யார் மணப்பெண்ணின் அம்மா தான்.. மோகனாவை அழைத்து “என்ன மோகனா அவங்க உனக்கு தெரிஞ்சவங்களா.. மாப்பிள்ளையோட அப்பாகூட பிறந்த தங்கச்சி..” என்று விசாரிக்க,

“ஆமா அண்ணி.. அவங்க பொண்ணு அதோ அங்க நிக்கிறா பாருங்க சௌபர்ணிகா அந்த பொண்ணு நம்ம மால்ல தான் மேனேஜெரா இருக்கா.. ஸ்ரீயும் அவ தம்பி கார்த்திக்கும் பிரண்ட்ஸ் வேற..” என்றார் சந்தோசமாய் மோகனா..

“அட என்ன இருந்தாலும் அவங்க நம்மக்கிட்ட வேலை செய்ற குடும்பம் தான.. இப்படி தேடி போய் ஏன் பேசுற..??” என்றதும்

“அண்ணி, சௌபர்ணிகா பொழுது போகாம தான் வேலைக்கு சேர்ந்திருக்கா.. அதுவும் இல்லாம அவங்க குடும்பத்துல தான் நம்ம வீட்டு பொண்ணை கொடுக்கிறோம்..முதல்ல அதை பாருங்க..” என்றார் மோகனா யோசிக்காது..

“அட அதெல்லாம் சரிதான் மோகனா இருந்தாலும் நம்ம கொஞ்சம் க்ரிப்பா தான் இருக்கனும். என்ன இருந்தாலும் நீ முதலாளி. அங்க பாரு ஸ்ரீகிட்ட அவங்க ரெண்டு பெரும் எப்படி பேசிட்டு இருக்காங்கன்னு. எதையும் அளவுல வைக்கணும்..”

“என் அளவு எதுன்னு எனக்கு தெரியும் அண்ணி.. பணம் காசு இப்போ வரும் நாளை போகும்.. மனுசங்க தான் முக்கியம்.. இன்னிக்கு நடக்குறது உங்க பொண்ணு கல்யாணம் அண்ணி இந்த பேச்சு வேற யார் காதிலையாவது விழ போறது.. போங்க அண்ணி ” என்றுவிட்டு நகர்ந்தார்..

“எல்லாம் புது பணம் வந்த திமிர்… ஹ்ம்ம் எனக்கென்ன என்னவோ பண்ணுங்க… உங்க லட்சனம் எனக்கு தெரியாது” நோடித்துவிட்டு சென்றார் அந்த பெண்மணி..

நேரம் கடந்து கொண்டே போனது… சொந்த பந்தங்கள் ஒவ்வொருவராய் வர வர மண்டபமே கலை கட்டியது.  சௌபர்ணிகாவின் சொந்தம் முக்கால் வாசி அவளை சில ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது தான் பார்க்கின்றனர்.. ஆக பார்த்தவர்கள் எல்லாம் ஒரு புன்னகை அல்லது ஒருசிறு நலவிசாரிப்பு செய்து செல்ல,

“புனிதா மக இங்கயே வந்துட்டா போல..”

“என்ன எதுவும் நல்ல விசயமா???”

“என்ன பரந்தாமா எப்போ எங்களுக்கு எல்லாம் கல்யாண சாப்பாடு போட போற” என்று கேட்காதவர்கள் பாக்கி இல்லை..

இது ஒரு பக்கம் இருந்தால் இன்னொரு பக்கம் “ஏன் பா மகேஷு நம்ம புனிதா மகளை தானே உன் மகனுக்கு கட்டுறதா பேச்சு, இப்போ என்ன வெளிய பொண்ணு எடுத்துட்ட..” என்ற கேள்விகள் வேறு.. இவை எல்லாம் சௌபர்ணிகாவின் காதுகளிலும் விழுந்தபடி தான் இருந்தது.

“விசேசத்துக்கு வந்தோமா வயிறு நிறைய உண்டோமான்னு இல்லாம ஏன் என் தலையை போட்டு உருட்டுதுங்க… கொஞ்சம் நல்லா என்ஜாய் பண்ணக்கூட முடியலை.” என்று சலிப்பாய் திரும்பியவனின் கண்களில் அவன் பட்டான்…

வெள்ளை நிற காட்டன் சட்டையும், நீல நிற ஜீன்ஸும் போட்டு சிம்பிளாய் இருந்தாலும் அவன் நின்று இருந்த இடமே பளீரென்று இருந்தது போல உணர்ந்தாள் சௌபர்ணிகா…

எப்பொழுதும் இப்படித்தான் உடுத்துவான் ஆனால் அதுவே அவனுக்கு ஒரு கம்பீரத்தையும், அழகையும் கொடுக்கும்.. 

அருகில் இருந்த யாரிடமோ சிரித்து பேசி, அவர் கேட்பதற்கு எல்லாம் தலையை லேசாய் சரித்து பதில் கூறிக்கொண்டும் அப்பப்பா… எத்தனை நாட்கள், இல்லையில்லை எத்தனை ஆண்டுகள் ஆனது இவனை பார்க்க.. சௌபர்ணிகாவிற்கு மனமும் உடலும் லேசானது போல இருந்தது.. எங்கே விட்டால் தோய்ந்து கீழே விழுந்து விடுவாளோ என்பது போல உணர்ந்தாள்..

கண்கள் கலங்கின, ஓடி சென்று அவனது கரங்களை பற்றிக்கொள்ள வேண்டும் போல இருந்தது… மனதில் இருப்பதை எல்லாம் ஒன்று விடாமல் கூறிவிட வேண்டும் போல இருந்தது.. இதற்காக தானே இத்தனை நாட்கள் காத்திருந்தாள்.. எங்கிருந்தாய் நீ என்று அவன் சட்டையை பிடித்து உலுக்க வேண்டும்போல ஒரு வேகம் எடுத்தது அவளுள்..

அவனது புன்னகை கலந்த பேச்சும் பாவனையும் அவளை மேலும் மேலும் அவன்பால் ஈர்த்தது.. இவன் மாறவே இல்லை அப்படியேத்தான் இருக்கிறான்..  எங்கே இமைத்தால் கூட அவன் மறைந்துவிடுவானோ என்று அஞ்சி இமைக்க மறந்து பார்த்திருந்தாள் சௌபர்ணிகா.. ஒரு முறை ஒரே ஒரு முறை என்னை திரும்பி பாரேன் என்று கெஞ்சியது அவள் உள்ளம். அவள் மனம் இத்தனை நாள் பட்ட வேதனை எல்லாம் ஒரு நொடியில் காணமல் போனது…

அவனிடம் செல்ல பரபரத்த கால்களை கடினப்பட்டு இழுத்து அடக்கி வைத்தாள் சௌபர்ணிகா… ஏதோ ஒன்று அவளை தடுத்து.. மனமோ செல், சென்று அவனிடம் பேசு உன்னை பற்றி கூறு என்று கூவிக்கொண்டே இருக்க, அறிவோ வேண்டாம் சோபி போகாதே, உனக்கு இப்பொழுது இருக்கும் நிம்மதி கூட கெட்டுவிட போகிறது என்று கூப்பாடு போட்டது..

இரண்டிற்குமான போராட்டத்தில் பாவம் அவளது காதல் நெஞ்சம் தான் சிக்கி தவித்தது… தன்னை சுற்றி இத்தனை பேர் இருக்க தன் வேதனையை மறைக்கும் பொருட்டு கண்களை இறுக மூடி திறந்தாள், அவ்வளவு தான் எதிரே இருந்தவனை காணவில்லை..

வேகமாய் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் திரும்பி திரும்பி பார்த்தாள் அவன் இல்லை… ‘இதென்ன, இப்போதானே கண் முன்னே இருந்தான்.. கண்ணுல பார்த்து மனசில நிரப்புறதுகுள்ள எங்க போனான்.. இத்தனை வேகம் ஏனாம் இவனுக்கு?? சரி எப்படியும் மண்டபத்தில் தானே இருப்பான்’ என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்தாள்..

அனைவரின் பார்வையும் இவள் மீதே இருப்பது போல தோன்றவும் படக்கென்று தலையை தாழ்த்திக்கொண்டாள்..

“ஏய் சோபி கண்ணு எதை தொலைச்ச இப்படி கீழ தேடிகிட்டே வர, ஆமா எங்க போன நீ தீடிர்னு??” என்றபடி வந்தான் கார்த்திக்..

‘வந்துட்டான் கேள்வி கேட்க…’ என்று நொந்தவள், ”ம்ம்ச் உன்னை அம்மா அங்கதான இருக்க சொன்னாங்க இங்க ஏன் வந்த??” என்றாள்.

“அது சரி… இவ்வளோ நேரம் உன்னை காணோம்னு பார்க்க வந்தா ரொம்பதான் பண்ற, சரி வா வா அப்பா கூப்பிடுறார்”

அப்பா என்ற சொல் சோபியிடம் நன்றாகவே வேலை செய்தது… அங்கே பார்த்தால் சர்வேஷ், அவனின் அப்பா அம்மா இவளின் அப்பா அம்மா, ஸ்ரீநிதி அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்…

‘இவன் எப்படி உள்ள வந்தான்?’ என்ற கேள்வியோடு அங்கே சென்று நின்றவளை சர்வேஷும் கவனித்தான்… இத்தனை நாள் வேலையின் காரணமாய் சாதாரண சுடிதார் மட்டும் அணிந்து பார்த்தவளை சந்தன நிற பட்டு சேலையில் அழாகாய் ஆங்காங்கே மயில் தோகை வண்ணத்தில் பூக்கள் தெளித்து அதை நயமாய் கட்டி இருந்தவளை காண அவனுக்கே ஒரு நொடி இதயம் நின்று துடித்தது போலத்தான் இருந்தது.

அவன் சிரிக்கிறானா என்று கூட அவளுக்கு சந்தேகமாய் இருக்க, கண்களை மீண்டும் மூடித் திறக்க, அவனோ இப்போது சிரிக்கவேண்டுமா இல்லையா என்பதுபோல் ஒரு பார்வையில் இருந்தான்.. 

“என்ன சோபி உன் சார் வந்திருக்கார், சொல்லகூட இல்லை..” என்று  பரந்தாமன் கூறவும்

“அது அப்பா.. இல்ல.. என் எனக்கு இங்க வருவார்னு தெரியாதுப்பா…” திக்கி திணறினாள்..  

அவளது திணறல் சர்வேஷை ஏனோ உசுப்பேத்தியது.. “இல்லை அங்கிள் நான் சொன்னேன்.. நானும் பங்சனுக்கு போறேன்னு சொன்னேன்..”  என்றவன் அவளைப் பார்த்து கிண்டலாய் சிரித்தான்..

‘அடப்பாவி தனியா இருக்கும் போது எல்லாம் நல்லவனா இருந்துட்டு இங்க ஏன்டா நாடகம் போடுற..’ என்று எண்ணியவள் அமைதியாய் தான் நின்றாள்..

‘ஆக இவ அப்பாக்கு பயந்த புள்ளையா!!! சௌபர்ணிகா மாட்டுன இன்னிக்கு.. என்னைய எப்படி எல்லாம் பேசுவ…’ எண்ணிக்கொண்டது வேறு யாரும் இல்லை சர்வேஷ் தான்… அவன் ஏன் இப்படி நினைக்கிறான் என்று அவனுக்கும் தெரியவில்லை..

அவளை பார்த்து லேசாய் புன்னகைத்துக்கொண்டே “ஹேய் கார்த்திக் நீ ஏன் மென் அங்கேயே நிக்கிற, என்ன கடைக்கு வரக்கூடாதுன்னு அன்னிக்கு சொன்னது போல இன்னிக்கும் உன் அக்கா எதாவது சொன்னாளா?? ” என்று அவனையும் இழுக்க,

இது போதாதா கார்த்திக்கிற்கு கூட்டனிக்கு ஆள் இல்லையென்று தானே இவள் பின்னால் சுற்றிக்கொண்டு இருந்தான்.. ஆக இப்போது வகையாய் ஆள் சிக்கியது என்று,

“சார் சரியா சொன்னீங்க.. சோபிக்கு எப்பவுமே இப்படிதான். பாருங்க நீங்க வந்திருகீங்கன்னு சொல்றேன் அவ கண்டுக்கவே இல்ல தெரியமா???” என்று மேலும் பிட்டு போட்டான்..

தன் தம்பியை அடிக்க துறுதுறுத்த கைகளை இறுக மூடிக்கொண்டவள் ‘வீட்டுக்கு வா டா உனக்கு இருக்கு…’ என்று பல்லைக் கடிக்க,  

“உன் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்கவே இல்லை சோபி… ஹி ஹி..” என்றான் கார்த்திக்..

“அம்மா பாரும்மா…”

“டேய் அரட்டை ஆள் கிடைச்சா போதுமே.,. சும்மா இருடா.. இவங்க ரெண்டு பேரும் இப்படிதான் தம்பி.. நீங்க தப்பா எல்லாம் நினைக்க வேண்டாம்.. அதிலும் இந்த சோபி இருக்காளே சில நேரம் என்ன பேசுறான்னு அவளுக்கே புரியாது” என்று புனிதாவும் ஆதரிப்பது போல ஆரம்பித்து கடைசியில் காலை வாரினார்..

ஸ்ரீநிதிக்கு இதை எல்லாம் பார்க்கும் பொழுது தன் அண்ணனும் தன்னிடம் இப்படி எல்லாம் கேலி கிண்டலாய் பேச மாட்டானா என்று இருந்தது.. அவளையும் அறியாமல் அவளது கண்கள் சர்வேஷை காண, அவனது பார்வையோ சௌபர்ணிகாவிடம் இருந்தது..

தன் தமையனின் பார்வை கண்ட திக்கை காணவும் ஸ்ரீநிதியால் நம்பக்கூட முடியவில்லை.. ரசனையை.. ஆராய்ச்சியை ஆவலாய் சர்வேஷின் பார்வையில் இருந்தது இன்னது தான் என்று அவளால் சொல்ல முடியாது ஆனாலும் எதுவோ இருந்தது அதுவும் அவனின் பார்வை சௌபர்ணிகா மீது இருந்தது..

“அண்ணன் ஏன் இப்படி பார்கிறான்.. ஐயோ சோபிக்கா வேற தலைக்குனிஞ்சு நிக்கிறாங்களே.. என்னடா நடக்குது இங்க…?? என்னடா நடக்குது இங்க?? முன்ன பின்ன இவன் சேலை கட்டின பொண்ணுங்களை பார்த்தது இல்லையா??” என்று சர்வேஷை ஆராய முனைந்தாள்..

அவனது பார்வை சௌபர்ணிகாவை விட்டு இம்மி அளவு கூட அகலவில்லை.. சௌபர்ணிகாவே கூட லேசாய் திணறினாள்.. ‘ஏன் இப்படி பார்த்து தொலைக்கிறான்..’ என்று ஒருபுறம் தோன்றினாலும் அடுத்த நொடி மனதின் ஒரு ஓரத்தில் சாரல் அடித்தது..

ஆனால் அடுத்த நொடியே “வேண்டாம் சோபி நீயும் இவன் பணம் பகட்டு இதை எல்லாம் பார்த்து மயங்காத என்ன??” என்ன என்று தலையில் குட்டிக்கொண்டாள்..

அதே நேரம் அவளது அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வர அதை படித்தவளின் முகம் படக்கென்று சர்வேஷை பார்த்தது.. இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று தாங்கி நின்றது.. இருவரையும் ஒருசேர தாங்கி நின்றது ஸ்ரீநிதியின் பார்வை…                                                     

                                                  

             

                     

Advertisement