Advertisement

             சுகம் – 4…..

உன் மௌனத்தின் வார்த்தைகளும்

கோபத்தின் அர்த்தங்களும்

எனையன்றி யார் அறிவார்?

“ஏன்மா  மூணு வாரம் விளக்கு போட்டா கல்யாணம் நடக்கும்னு சொன்ன. போனவாரமே மூணுவாரம் முடிஞ்சு போச்சு, நீ சொன்னதை வைச்சு பார்த்தா முதல் வாரம் மாப்பிள்ளை வந்து, ரெண்டாவது வாரம் கல்யாணம் நடந்து, மூணாவது வாரம் குழந்தையே பிறக்கனுமே…”  என்று கார்த்திக் அங்கலாய்க்க,

அவன் கேட்டதில் சௌபர்ணிகாவிற்கே சிரிப்பு வந்தது “எங்க இருந்துடா இப்படி எல்லாம் பேச கத்துகிட்ட??” என்றாள்..

“ஹா!!! இதுக்குன்னு தனியா கோச்சிங்கா போக முடியும்… அதெல்லாம் வரும்போது வரவேற்கணும் சோபி கண்ணு…? நீயும் ட்ரை பண்ணு…”

“ஆமாமா உன்னை மாதிரி பேசுனா ஊசிப்போன  சாப்பாடு தான்டா கிடைக்கும்.”

“உன்னை மாதிரி பழமொழி பேசுனா பாட்டியா தான் போகணும்…”

“நான் எப்படா பழமொழி பேசுனேன்..??”

“நீ பேசுறது எல்லாம் பின்ன பொன்மொழியா??”

“பழமொழியோ பொன்மொழியோ நல்லது பேசினா கேட்கணும்..”

“ஐயோ !!!! நிறுத்துங்க…..” என்று மக்கள் இருவரின் வாய் சண்டையை கேட்டு தன் காதுகளை பொத்தி கத்தியே விட்டார் புனிதா…

“வொய்  மா வொய்??? ” என்று இருவரும் ஒரு சேர கேட்கவும்..

“பிள்ளைகளாடா நீங்க ரெண்டு பேரும்?? என் முன்னாடி மட்டும் வாய் கிழிய இப்படி பேசிட்டு உங்க அப்பா முன்னாடி பம்ம வேண்டியது… இதுல இவ மத்தவங்க முன்னாடி அப்படியே ஒண்ணுமே தெரியாதவ மாதிரி இருந்துட வேண்டியது..” என்று சொல்ல,

“ம்மா இதெல்லாம் கொஞ்சம்கூட நல்லா இல்லை ஆமா.. அடுத்தவங்க சோபி ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொல்லும் போதெல்லாம் சந்தோசமா சிரிச்சுட்டு இப்போ என்ன இப்படி சொல்றிங்க…” என்றாள் சௌபர்ணிகா.

“ஆமாடி ஆ.. ஊன்னா எல்லாம் என்னையவே கேள்வி கேளுங்க… இங்க பாரு சோபி மாப்பிள்ளை போட்டோ…. பார்த்து யாரு பிடிச்சிருக்குன்னு சொல்லு..” என்று கையில் வைத்திருந்த அனைத்துப்  புகைப்படங்களையும் கடை பரப்பினார்..

வேகமாய் அவரிடம் இருந்து அதை எல்லாம் பிடுங்கிய கார்த்திக் ஒவ்வொன்றாய் பார்த்து “ஹ்ம்ம் இது நல்லாவே இல்லை, இது கொஞ்சம் குட்டையா இருக்கு… இது கலர் ரொம்ப கூடுதல்… ச்சே இதெல்லாம் நம்ம டேஸ்ட்டுக்கு ஒத்தே வராது…”  என்று கூறி கொண்டே போக,

“டேய் மாப்பிள்ளை பார்க்கிறது இவளுக்கு” என்றார் வேகமாய் புனிதா..

“ம்மா இவளுக்கு ஏத்த புருசனா இருக்கணும், உங்களுக்கு ஏத்த மருமகனா இருக்கணும்னு நீங்க பார்க்கும் போது நான் மட்டும் எனக்கு ஏத்த மச்சானா இருக்கணும்னு நான் பார்க்க கூடாதா???” என,

கடுப்பான புனிதா, சும்மாவே இவள் ஏதாவது காரணம் தேடுவாள் இதில் இவன் வேறு இப்படி கூறினால் என்ன செய்ய என்று யோசித்தவர் மேற்கொண்டு மகனிடம் பேச்சை வளர்க்காமல்

“சோபிம்மா நீ பாருடா… உனக்கு இந்த போட்டோஸ்ல எது பிடிச்சிருக்கு??” என்று அன்பாய் கூறவும் சௌபர்ணிகா புகைப்படங்களை பார்க்காமல் அவர் முகத்தை பார்த்தாள்…

“என்ன சோபி…..??? ”

“ம்மா நீங்க சொல்றது நல்ல இருக்கா??  கடைல போய் எதோ கத்திரிக்கா பிடிக்காட்டி முருங்கைக்காய் வாங்குற மாதிரி இந்த போட்டோல இருக்கிறவங்க பிடிக்காட்டி இன்னொருத்தர் அப்படின்னு… ப்ளீஸ்ம்மா.. என்னை ஆள விடுங்க…” என்று எழப் போக,

“ஏய் ஏய் நில்லு டி..” என்று அவளது கரங்களை பிடித்து நிறுத்தியவர்,  “சோபி என்ன இப்படி சொல்ற?? இது காலம் காலமா நடக்குற ஒன்னு தானே ???” என்று அவளை அமர வைத்தார்..

“அம்மா இதெல்லாம் உங்களுக்கு வேணும்னா சகஜமா இருக்கலாம்.. ஆனா எனக்கு வரப்போரவரை நான் இப்படி திஸ் ஆர் தேட்டுன்னு செலக்ட் பண்ண விரும்பலை…”

“ பின்ன ???!!!!!”

“மனசுக்கு பிடிக்க வேண்டாமா மா??? நீங்க தானே சொன்னீங்க இன்னும் அஞ்சு ஆறு மாசம் ஆகும்னு அதுக்குள்ள வந்து போட்டோ காட்டுனா எப்படி??”என,

“இது நல்ல கதையா இருக்கே.. ஒரு போட்டோ பார்க்கிறதுக்கு இவ்வளோ அக்க போறா??? இதேது உங்க அப்பா வந்து காட்டுனா அடுத்த நிமிஷம் சரின்னு சொல்றதை தவிர நீ வேற எதுவும் சொல்லி இருக்கமாட்ட” என்றார் புனிதாவும்..

“இல்லம்மா இது என் வாழ்க்கை சோ நான் அப்பவும் இதை தான் சொல்லியிருப்பேன்…” என்று அப்போதும் திடமாய் சௌபர்ணிகா மறுக்க, 

“ சோபி நீ இப்படி பேசுறவே இல்லையே டி …” என்று அதிர்ந்து போய் பார்த்தார் புனிதா..

“அம்மா நீ சொல்றது சரிதான்.. நான் லைப்ப அது போக்குல விடுறவதான் நான்…. ஆனா ஏனோ இந்த ஒரு விஷயம் மட்டும் நம்ம ரொம்ப அவசர படுறோமோன்னு தோணுது அதான்..”

“ வேற ஒண்ணுமில்லையே????”

“ வேற என்னம்மா இருக்கபோது??”  என்று சௌபர்ணிகா சொல்லவும்

“அட.. நீ யாரையும் லவ் பண்றியா??? இதானேம்மா நீ கேட்க வந்தது.. ” என்று கார்த்திக் பட்டென்று கேட்டுவிட,  அவன் இப்படி சொன்னதும் ஒரு நொடியில் சோபியின் மனதில் அவளது நாயகனின் முகம் வந்து போனது…

மறக்க முடியுமா???? இந்த முகத்தை என்னால் மறக்க முடியுமா??? இதை மறந்தால் தானே நான் வேறு ஒருவரை ஏற்க முடியும்… இரண்டுமே நடவாத ஒன்று…  நான் என்ன செய்ய ???? என்று அவளது மனம் கத்தி கூப்பாடு போடா, இதில் வீட்டிலோ வரன் பார்க்கக் சௌபர்ணிகா அப்படியே மனதளவில் நொந்து போனாள்..

தன்னுள் மூழ்கியவளை “சோபி… ஏய் சோபி…” என்று  புனிதா உலுக்க,

 “ ஹா என்னம்மா…?? ” என்றாள் எதுவும் தெரியாதவள் போல..

“ அப்பாகிட்ட என்ன டி சொல்ல ???”

“ப்ளீஸ் ம்மா கொஞ்ச நாள் போகட்டுமே.. இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காதீங்க..” என்று முகம் சுனங்கியவளை பார்க்கவும் புனிதாவிற்கு  கஷ்டமாய் தான் இருந்தது… என்ன நினைத்தாரோ மகளின் தலையை தடவியவர் “சரி சோபி நான் அப்பாக்கிட்ட கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிடுறேன்…” என்றார்..

“ தேங்க்ஸ் ம்மா” என்றவள் அவரின் மடியில் படுத்துக்கொண்டாள்.. அதற்குமேல் அவளும் பேசவில்லை.. புனிதாவும் பேசவில்லை.. இருவரையும் மாறி மாறி பார்த்த கார்த்திக்,

கார்த்திக் “சோபி உங்க கடைல எப்போ ஆஃபர் போடுவாங்க, எந்த எந்த திங்க்ஸ்க்கு எல்லாம் கிப்ட் குடுப்பாங்க, எது எதுக்கெல்லாம் ஃப்ரீ வருது அப்படின்னு சரியா சொல்லிடு என்ன??” என்றான்..

“எதுக்கு டா???!! ”

“சரியா அப்போ அதான் அய்யா உங்க கடைக்கு என்ட்ரி குடுப்பேன் அதான்… ”

தாயின் மடியில் படுத்திருந்த சௌபர்ணிகா விலுக்கென்று எழுந்து “டேய் அந்த கொடுமையை மட்டும் பண்ணிடாத… அங்க அக்கா சொக்கான்னு வந்து நின்ன அப்புறம் என்ன நடக்கும்னே எனக்கு தெரியாது…” என்று மிரட்ட,

“ ஏன் ??? ஏன் வர கூடாது… ” என்றான் அவனும் எகிறிக்கொண்டு.

“அதெல்லாம் வர கூடாதுன்னா வரக்கூடாது தான்… ஏன் இத்தனை நாள் அங்கயா போன இல்லைல…”

“ஆமா நீ இந்தியாக்கே ராணி.. நீ சொல்லி நான் கேட்கணுமா??”

“டேய் நீ இப்படியே பேசின உனக்கு இடியாப்பம் கூட வாய்க்கு கிடைக்காது… ”

இவர்களின் இந்த சண்டை ஓயாது என்று எண்ணிய புனிதா சத்தம் இல்லாமல் நகர்ந்துவிட்டார் “இதுங்க ரெண்டும் வீட்டில இருந்தா என் உயிர் தான் போகுது..” என்ற முனங்களோடு…

 

சர்வேஷ் மும்புரமாய் எதையோ கணக்கு பார்த்துகொண்டு இருந்தான்… எதையோ எழுதுவதும், தனக்குள்ளே யோசிப்பதும், பின்னே வேறு எதோ கணக்கு பார்ப்பதுமாய் இருந்தான்.. அவன் செய்யும் வேலை எதுவோ முக்கியமானது என்று பார்ப்பவர் யாருக்குமே புரிந்துவிடும்..

அவன் முன்னே இருந்த கணினியில் எதுவோ செய்துகொண்டு இருந்தவன் தானாகவே “நோ நோ..” என்று சொல்லிக்கொள்ள, 

‘என்னைய வர சொல்லிட்டு இவன் என்ன தனியா புலம்பிட்டு இருக்கான்???’ என்று அவனையே ஆராய்ச்சி செய்தபடி அமர்ந்திருந்தாள் சௌபர்ணிகா…

‘ஹ்ம்ம் ஆளும் அவன் சட்டையும்,.. ஆனா எது போட்டாலும் இவனுக்கு நல்லா தான் இருக்கு.. இந்த திமிர் மட்டும் கொஞ்சம் குறைஞ்சா நல்லா இருக்கும்’ என்று எண்ணும் பொழுதே

‘ஏன் உனக்கு மட்டும் திமிர் குறைச்சலாவா இருக்கு ???’ என்று அவளது மனம் இடித்தது..

‘ச்சு… அடுத்தவங்களை ஆராய்ச்சி பண்ணும் போது அமைதியா இருக்கணுமே ஒழிய அட்டுழியம் பண்ண கூடாது…’ என்று அவள் மனதை அவளே தட்டும் வேளை,

“சௌபர்ணிகா….” என்று  அதட்டலாய், அழுத்தமாய் அவன் குரல் கேட்கவுமே

 “ஹா !! என்ன சர்… ” என்றால் மிக பவ்வியமாய்..

ஆனால் அவனோ “இது வேலை நேரம்…” என்றான் அழுத்தம் திருத்தமாய்..

‘நான் மட்டும் வெண்டிக்காய் வாங்குற நேரம்ன்னு சொன்னேனா??’ என்றேண்ணியவள்  “ஆமா சர்” என்றுசொல்ல,

“ஆனா உங்க கவனம் இங்க இல்லியே ???” என்றான்..

“ இல்ல சர் யோசனை பண்ணிட்டு இருந்தேன்..”

“எதை பத்தி ???”

‘கேள்வியா கேட்கிறானே… ஸ்ஸ் இவனை மௌன விரதம் இருன்னு எவனும் சொல்லையா ???’ என்று நொந்தவள்  “இல்லை சர் நீங்க என்னை கூப்பிட்டு இவ்வளோ நேரம் ஆச்சே எதுவும் சொல்லாம இருக்கீங்கலேன்னு யோசனை பண்ணேன்..” என்று லேசாய் கடிந்து கூறினாள்..

சௌபர்ணிகா வேலையில் சேர்ந்ததில் இருந்து இன்னொரு பிரச்சனை சர்வேஷ் முன்னால் அவளது உணர்வுகளை இலகுவாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.. அவன் கூறுவது அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலோ இல்லை இவளுக்கு கோவம் வந்தாலோ அப்பட்டமாய் அதை அவளது முகம் வெளிபடுத்தியது..

“ அடங்கு சோபி ” என்று தனக்கு தானே கூறி முடிப்பதற்குள் அவளது வாய், மனதில் இருப்பதை சொல்லி இருக்கும்…

முதலில் சர்வேஷிற்கே இது எரிச்சலை, கோபத்தை தந்தாலும் இப்படி வெளிப்படையாய் பேசுவதும் நல்லது தான் என்று நினைத்து பொருத்துக்கொண்டான்..

“ஆடி மாசம் சேல்ஸ் எப்படி இருந்ததுன்னு சின்ன கால்குலேசன் தட்ஸ் ஆல்..” என்றான் சாதாரணமாய்..

“சர் அது நேத்து தானே முடிஞ்சது…”

“எஸ்.. இனி அடுத்து நவராத்திரி வருது, அடுத்து திபாவளி இப்படியே பொங்கல் வரைக்கும் சீசன் இருக்கே.. அதெல்லாம் பார்க்க வேண்டாமா???” என,

“பார்க்கலாம் சர்..” என்றாள் அவளும் வேகமாய்..

“அதான் எண்ட்ரன்ஸ் டெக்கரேசன் மாத்தி வைக்க ஆள் வர சொல்லிருக்கேன்..”

“ இன்னிக்கேவா…???!!” என்று முழித்தாள்.  

“என்ன எதுவும் சொல்லாம அமைதியா இருக்கீங்க சௌபர்ணிகா..?? ”

“அது.. அது ஒண்ணுமில்லை சர்.. நேத்து தான் ஆடி சேல்ஸ் முடிஞ்சது.. இன்னிக்கே இதை எல்லாம் ஆரம்பிக்கனுமா?? ஒரு ரெண்டு நாள் கேப் விட்டா இங்க எம்ப்ளாயீஸ்க்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும்…”  

“நோ… நான் எல்லாம் பக்கவா பிளான் பண்ணிட்டேன்… இப்போ இதை ஆரம்பிச்சா தான் அடுத்து அடுத்த நம்ம மத்த வேலைகளை பாக்க முடியும்.. சோ, டூ வாட் ஐ சே…”

அதிகாரமாய் அவன் கூறியதும் அவளுக்கு கோவம் படக்கென்று வந்துவிட்டது… ஒரு இரண்டு நாள் பொருத்து ஆரம்பித்தால் இவனுக்கு என்ன கிரீடம் இறங்கி விடுமா??? எங்கே இவன் முகத்தை பார்த்தால் இன்னும் கோவம் வரும் என்று பக்கவாட்டில் திரும்பி பார்க்க,

“ டியூப்லைட்டை ஏன் உத்து பார்த்துக்கிட்டு இருக்கீங்க ???” என்றான் அவனோ விடாமல்..

“ஹா !!! டியுப்லைட்டை உத்து பார்த்தா ட்வின்ஸ் பிறக்குமாம்..” என்று  மனதில் தோன்றிய இடக்கான பேச்சு இப்பொழுது அவளை அறியாமலே வெளி வந்தது… தான் கூறியதை உணர்ந்த சௌபர்ணிகா நாக்கை கடித்தபடி அவனை நோக்க, அவன் முகத்திலோ ஆச்சரியக்குறியும், கேள்விக்குறியும் தெரிய “வாட்… ???!! ” என்றான் முகத்தை ஒருவிதமாய் வைத்து..

“ ந.. நத்திங் சர்…  ”

“ இல்லை எதோ ட்வின்ஸ் அது இதுன்னு சொன்னீங்க.. யாருக்கு….??? ”

‘சரியான டியுப்லைட்டா நீ.. உனக்கு ட்வின்ஸ் தான் பிறக்கும் பாரு’ என்று கறுவிக்கொண்டே “நிஜமா நத்திங் தான்  சர்..” என்றாள் அப்பவியாய்..

“என்னா பேச்சு பேசுறா???? இவளை எல்லாம் வீட்டில எப்படிதான் சமாளிக்கிறாங்கள ..” என்றெண்ணி, சௌபர்ணிகா இப்படி திக்கி திணறி முழிப்பதை கண்ட சர்வேஷுக்கு அவளை சீண்ட வேண்டும் போல இருந்தது..

“சொல்லுங்க சௌபர்ணிகா யாருக்கு ட்வின்ஸ் பிறந்தது…?? ரெண்டுமே ஆணா இல்லை பொண்ணா ???” என்றான் ஒன்றுமே தெரியாதவன் போல,  

‘சோபி சும்மா கிடந்தவனை சொறிஞ்சுவிட்டியே டி..’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள்,  

 “சர் அது ஒரு ப்ளோல வந்தது.. ஆராய்ச்சி பாண்ணாம விடுங்களேன்…” என,

மேற்கொண்டு சர்வேஷ் என்ன கூற வாய் எடுத்தானோ காவலாளி யாரையோ அழைத்து கொண்டு வந்தார்.

“சர் சோபின்னு யாரோ இங்க வேலை பாக்குறாங்களாம், அவங்களை இவர் பார்க்கணுமாம்.. நானும் சொல்லிட்டேன் அப்படி எல்லாம் இங்க யாரும் இல்லைன்னு ஆனா கேட்காம தம்பி அடம்பிடிக்குறார்..” என்று கூற,

“சரி நீங்க போங்க…” என்று சர்வேஷ் அவரை அனுப்பவும்,   அவர் அந்த பக்கம் போனது தான் தாமதம்,

 “டேய் கார்த்திக் எருமை… நான் சொன்னேன்தான இங்க வரக்கூடாதுன்னு.. மீறியும் வந்திருக்க… உனக்கு மதுரைல வேற இடமே இல்லையா??? அங்க எல்லாம் ஷாப்பிங் பண்ண வேண்டியது தான.. இங்க ஏன்டா வந்த ????” என்று சுற்றம் மறந்து, எதிரே இருந்த சர்வேஷை மறந்து தன் தம்பியை உலுக்கிக்கொண்டு இருந்தாள் சௌபர்ணிகா…

இதை கேட்ட சர்வேஷின் முகத்தை பார்க்கவேண்டுமே, பின்னே இருக்காத அவன் முன்னாலே உனக்கு வேறு இடமே இல்லையா ஷாப்பிங் செய்ய என்று கேட்டால் இவனது ஷாப்பிங் மாலை சௌபர்ணிகா மட்டமாய் நினைக்கிறாள் என்று தானே அர்த்தம்… அதையும் மீறி யாரிவன் இப்படி பேசுகிறாள் என்று பார்க்க,  கார்த்திகிற்கோ சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கி,  சண்டைக்கோழியாய் நின்ற சௌபர்ணிகாவை விடுத்து “ஹலோ சார், நான் கார்த்திக் சௌபர்ணிகாஸ் யங்கர் பிரதர்…” என்று தன்னை அறிமுகம் செய்துகொள்ள

நிமிடமும் தயங்காமல் புன்னகை புரிந்து “ஹலோ!! ஐம் சர்வேஷ்…” கை குலுக்கினான் இவனும்..

‘ஓ !! இவனுக்கு ஆம்பிளைங்களை பார்த்தா மட்டும் தான் சிரிக்கிற வியாதியா!!!’ என்றெண்ணியவளுக்கு சற்று முன் கார்த்திக்கிடம் தான் பேசியது நினைவு வந்தது..

‘அய்யயோ!!! இப்படியா சொல்வ சோபி.. போச்சு போச்சு… இவன் கேள்வி மேல கேள்வியா கேட்பானே..’ என்று சர்வேஷைப் பார்க்க,  கார்த்திக்கோடு அவன் இயல்பாய் பேசுவது கண்டு இவளுக்கு ஆச்சரியமாகவும் சற்று பொறாமையையும் கூட இருந்தது..

‘கருங்கொரங்கு.. அத்தனை சொல்லியும் வந்து இஇஇன்னு நிக்கிறான் டேய் கார்த்திக் வா டா வீட்டுக்கு… உனக்கு இருக்கு..’ என்று கடிந்தவள்  “கார்த்திக்… கிளம்பு டா டைம் ஆகுதே.. அம்மா தேடுவாங்க” என்றவளின் குரலில் அத்தனை மென்மை கலந்திருந்தது..

“இரு சோபி பேசிட்டு இருக்கோமே… !!” என்றார் கார்த்திக் சொல்ல, பல்லை கடித்தபடி நின்றிருந்தாள்…

‘இவ தான் சோபியா… இவளைதான் ஸ்ரீ ரெண்டு நாளா சோபிக்கா சோபிக்கான்னு புராணம் பாடினாள?? இது நமக்கு தெரியாம போச்சே..’ என்று சர்வேஷ் நினைத்து முடிக்கவில்லை,

“சோபிக்கா…” என்றபடி ஸ்ரீநிதி உள்ளே நுழைந்தாள் உடன் மோகனாவும்.. சர்வேஷையோ இல்லை கார்த்திக்கையோ யாரும் கண்டுகொள்ளவே இல்லை..

“சோபிக்கா இவங்க தான் எங்கம்மா, ம்மா நான் சொன்னேன்ல இவங்க தான் சோபிக்கா…” என்று அறிமுகப்படலம் தொடங்கி நல விசாரிப்புகள் ஆரம்பித்து, பெண்களின் பேச்சு தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.. ஆண்கள் இருவரும் பாவமாய் தான் நின்று இருந்தனர்..

எதோ சொல்லவென்று திரும்பிய ஸ்ரீநிதி “ஹேய் கார்த்திக் நீ என்ன பண்ற இங்க???” என்று ஆச்சர்யமாய் கேட்க,

கேட்ட அவளுக்கு பதில் கூறாமல் “வணக்கம் ஆன்ட்டி, நான் சோபியோட தம்பி.. ஸ்ரீநிதி கிளாஸ் தான்..” என்றான் அவனும்  பொறுப்பாய்..

இந்த விஷயம் சர்வேஷ், சௌபர்ணிகா இருவருக்கும் புதியது.. ஆக இருவரும் சற்று ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டிருக்க,

“ஓ !!! நீ தானாப்பா அது.. எதோ லேப்ல ஹெல்ப் பண்ணேன்னு சொல்லிட்டு இருந்தா.. நல்லது.. அங்க சுத்தி இங்க சுத்தி எல்லாம் தெரிஞ்சவங்க தான்” என்றார் மோகனாவும் பாந்தமாய்..

இவ்வளவு கிடைத்தால் போதாதா?? இப்பொழுது சர்வேஷ் மட்டுமே தனியே நிற்கும்படி ஆனது.. வழிய சென்று அவர்களோடு கலக்கவும் முடியவில்லை.. தனியாய் நிற்பதும் அல்லலாய் இருந்தது.. சௌபர்ணிகாவோ அவன் பக்கம் திரும்புவதாகவே இல்லை.. ஓரிரு முறை அவளாக திரும்பியவளைக் கூட ஸ்ரீநிதி இழுத்துக்கொள்ள, 

மெல்ல குரல் உயர்த்தி “என்னம்மா ரெண்டுபேரும் சொல்லாம கூட வந்திருக்கீங்க??” என்றான் தானும் இங்கே இருக்கிறேன் என்று காட்ட..

“அதுவாண்ணா, நானும் அம்மாவும் இந்த பக்கம் வந்தோம் அப்படியே சோபிக்காவை பார்த்துட்டு போலாம்னு தான்..” என்று ஸ்ரீநிதி சொல்ல,  

ஆக, நான் ஒருவன் இங்கு இருப்பதே மறந்து போனது.. இவளிடம் அப்படி என்ன இருக்கிறது என்று இவளை தேடி வந்து பேசுகிறார்கள்..??? பார்பதற்கு சுமாராய் இல்லை இல்லை அதற்கும் சற்று கூடுதலாய் இருக்கிறாள் அவ்வளவே.. மற்றபடி நினைவில் வைத்து தேடி வந்து பார்க்கும் அளவுக்கு என்ன இருக்கிறது.. அன்று ஷ்ரவன் கூட எதோ சொன்னானே.. நான் தான் கவனிக்க வில்லையோ….

இப்படியாக மெல்ல மெல்ல சௌபர்ணிகாவை பற்றி நினைவுகள் அவன் மனதில் எழ ஆரம்பித்தன.. அவனே ஆரம்பித்தது தான் ஆனால் அப்படியான யோசனையில் தன் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று அவனே அதை கலைத்தும் விட்டான்..

நேரம் கடந்து கொண்டிருந்ததே ஒழிய அவர்கள் நால்வரும் தங்களின் பேச்சை முடிப்பதாய் தெரியவில்லை.. சர்வேஷிற்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்காமல் இருப்பதே கடுப்பாய் இருந்தது…

அவர்களோடு கலந்துகொள்ளலாம் என்று சென்றவனை மோகனா “நீ போய் வேலை இருந்தா பாருடா கண்ணா.. எங்களுக்காக நிற்க வேண்டாம்..” என்று அனுப்பிவிட்டார்..

வேலை நேரத்தில் நின்று அரட்டை அடிக்கிறோமே என்று சௌபர்ணிகா மெல்ல சர்வேஷை பார்த்தாள். அதற்கும் “அதெல்லாம் அவன் எதுவும்  சொல்லமாட்டான்.. நீ கிளம்புற நேரம் தான..” என்று மேலும் இவர்கள் நால்வரின் பேச்சு தொடர்ந்தது…

பொருத்து பொருத்து பார்த்த சர்வேஷ் உள்ளே அமர்ந்தபடி சௌபர்ணிகாவின் செல்லுக்கு அழைத்தான்… எடுப்பதா வேண்டாமா என்ற யோசனையோடு மற்றவர்களை பார்த்தபடி நின்றாள் அவள்.. அவனோ விடாது அழைக்க, அவளோ தயங்கி நிற்க, 

“ எடுத்து பேசும்மா…” என்றார் மோகனா..

“இல்லை ஆன்ட்டி சர் தான்..” என்று சௌபர்ணிகா தயக்கமாய் சொல்ல,

“ ஓ !! சரி போய் என்னன்னு கேட்டிட்டு வா..” எனவும்,

‘காய்ச்சி எடுக்கபோறான்…’ என்று எண்ணியபடி தன் தம்பியை திரும்பி பார்த்தபடி சர்வேஷின் அறைக்குச் சென்றாள்..

“சர்… ”

“உட்காருங்க என்ட்ரன்ஸ் டிசைன் செலக்ட் பண்ணலாம்…”

“ இல்ல சர் வெளிய… அவங்க எல்லாம்”

“கொஞ்சம் வெயிட் பண்ணட்டும்.. இது வேலை நேரம்”

‘அடப்பாவி பெத்த அம்மா, கூடபொறந்த தங்கசிக்கே இந்த நிலைமைன்னா இவன் பொண்டாட்டிக்கு???!!!!’ என்று அவள் மனம் தன் கணக்கை போட,

“ சௌபர்ணிகா….. ”  என்று அவள் பெயரை அவனோ கடித்து குதற,

‘ஹ்ம்ம் இப்போ வந்த இவங்க அம்மாவே சோபின்னு அழகா அன்பா சொல்றாங்க.. சொல்றான் பார் பேரு வச்சவன் போல…’ என்று எண்ணியவள்  

“சொல்லுங்க சர்… ” என்றாள் பவ்யமாய்..

“ இதெல்லாம் கொஞ்சம் பாருங்க… ” என்று  சில டிசைன்சை நீட்டினான்..

வெளியே ஒரு பார்வையும் அவன் காட்டியதில் ஒரு பார்வையுமாய் இருந்தாள்.. எதுவுமே மனதில் ஒட்டவில்லை.. தீடீரென்று ஏன் இவன் இப்படி நடந்துகொள்கிறான் என்று தோன்றியது.. அவனோ அவளை இறுத்திக்கொள்ள என்னெனவோ பேசினான்.. 

அவனுக்குமே இது புரிந்தால் தானே.. அவளை ஏன் அழைத்து இப்படி பிடித்து வைத்திருக்கிறோம் என்று அவனுக்குமே விளங்கவில்லை.. ‘நான் இருக்கும் போது அம்மாவும் ஸ்ரீயும் இவளை பார்க்க வந்தால் கடுப்பாகாதா.. அதான்…’ என்று அவனே அவனுக்கு ஒரு காரணம் சொல்ல,

‘அட கூடவே கார்த்திக் வேற இருக்கானே.. ஸ்ரீயின் பிரண்டாமே… ஹ்ம்ம் இனி பேச்சுக்கு கேட்கவா செய்யணும்..’ என்று சலிதவன்,  “ என்ன பார்த்தாச்சா ??” என்றான் அவளிடம்..

“ம்  பார்த்துட்டேன் சர்.. ” என்று சொன்னவள் அடுத்து என்ன சொல்வானோ என்று பார்க்க

“சரி கிளம்புங்க…” என்றான் மொட்டையாக..

“சர்???!!”

“டிசைன்ஸ் பார்க்கத்தான் கூப்பிட்டேன் .. பார்த்தாசுல்ல.. கிளம்புங்க..” என்று வெளிய கை காட்ட. ‘ஞே’ என்று விழித்தாள் சௌபர்ணிகா…

‘எதுக்கு கூப்பிட்டான், இப்போ ஏன் போக சொல்றான்… திமிர் பிடிச்சவன்.. நான் அவங்க கிட்ட சகஜமா பேசினது இவனுக்கு பொறுக்கலை.. அகம்பாவம் பிடிச்சவன்…’ என்று கடுகடுக்க,  

“உங்களை நான் கிளம்ப சொன்னேன்… ” என்றான் இன்னமும் அழுத்தமாய்.

“ம்ம் இதோ ” என்று அடித்தேன் பிடித்தேன் என்று வெளிய வந்தாள்..

வெளியே அனைவரும் இவளுக்காக காத்திருக்க “சாரி ஒரு இம்பார்ட்டன் வொர்க்..” என்று சௌபர்ணிகா மழுப்ப, “அவனைப் பத்தி எங்களுக்குத் தெரியும் சோபி..” என்று மோகனா சொல்ல, “நாங்களும் இப்போ கிளம்பலாம்னு தான் சோபிக்கா இருக்கோம்..” என்றாள் ஸ்ரீநிதி..

ஒருவழியாய் நால்வரும் கிளம்பி மால்  விட்டு வெளிவந்து பின் அவரவர் வழியைப் பார்த்துப் போக,   

“எப்படி கார்த்திக் ஸ்ரீ அம்மா முன்னாடியே அவட்ட அவளோ பேசுற ??”  என்றாள் தம்பியிடம்..

“நீ எல்லாம் சென்னைல வேலை பார்த்தேன்னு வெளிய சொல்லாத என்ன.. ஸ்ரீ என் கிளாஸ்மேட் பேசுனதுல என்ன தப்பு..” என்றான் அவனும்..

“அதுக்கில்ல…. ”

“அதுக்கும் இல்லை, எதுக்கும் இல்லை… ஏன் உன் சார் கூடத்தான் நாங்க எல்லாம் இருக்கும் போது உன்னை கூப்பிட்டாரு..”

“ஹே அது வேலை விஷயம்… ”

“ஹே !! இது பிரண்ட்ஸ் விஷயம்…”   என்று சொல்ல அத்தோடு அவளும் வாயை மூடிக்கொண்டாள்..

அனைவரும் கிளம்பிய பின்னரும் சர்வேஷ் கிளம்பவில்லை.. அமைதியாய் அமர்ந்திருந்தான்.. இதுநாள் வரைக்கும் உணராத ஒரு தனிமை, ஒரு வெறுமை அவனை கட்டியணைத்து கொண்டது…

அது ஏன் என்றும் அவனுக்கு புரியவில்லை… ஏன் என்னால் மற்றவர்களை போல் இருக்க முடியவில்லை.. ஆனால் நான் தவறேதும் செய்யவில்லையே.. என் வேலைகளை நான் பார்கிறேன் அவ்வளவே.. இருந்தாலும் மனதில் ஒரு வெற்று இடம் உருவாவதை உணரத்தான் செய்தான்…                

                   

 

 

    

        

Advertisement