Advertisement

                        சுகம் – 3 

காணும் முகங்கள்

யாவும் நீயே… 

காட்சி பிழையா??  காதல் பிழையா??

வேலையை விட்டுவிடு என்று சொன்னதும், சௌபர்ணிகா முகத்தை தூக்கிக்கொண்டு தான் இருந்தாள்.. புனிதா என்னென்னவோ சொல்லிப் பார்க்க, அவளுக்கு வேலையை விட மனமே இல்லை.. படித்து முடித்ததும் கிடைத்த வேலை.. இப்படி ஒரு காரணத்திற்காக விட சொல்ல, இப்படியா எல்லார் வீட்டிலும் நடக்கிறது என்று புனிதாவிடம் வாதாடினாள்..

‘மத்த வீட்ல எப்படின்னு தெரியாது சோபி.. ஆனா இங்க உங்கப்பா சொல்றதுதான் நடக்கும்.. அவர் நமக்கு தப்பாவும் சொல்ல மாட்டார்.. அதை புரிஞ்சுக்கோ… உனக்கென்ன வேலை தானே பார்க்கணும்.. அதை இங்க பாரு.. யார் வேணாம் சொன்னது…’ என்று புனிதாவும் சொல்லிட, அதற்குமேல் அவள் ஒன்றும் பேசினாள் இல்லை..

தன் மனதை கடினப்பட்டே சமன்செய்து, பரந்தாமனோடு சென்னை சென்று வேலையை விட்டு, அதிர்ச்சியாய் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டவர்களுக்கு எல்லாம் சிரித்தே பதில் சொல்லி மழுப்பி,  ஹாஸ்டல் காலி செய்து இதோ இப்பொழுது வீட்டிற்கும் வந்தானது.

வீட்டிற்கு வந்தும் கூட அவளுக்கு இன்னும் மனம் சமாதானம் ஆகவில்லை. ஊருக்கு செல்கையில் இருந்ததை விட, இப்போது வீட்டில் சும்மா இருக்க எப்படியோ இருந்தது.. முகத்தை உர்ரென்று வைத்தே சுற்றிக்கொண்டு இருந்தாள்.. பரந்தாமன் கிளம்பி வெளியே சென்றபின் புனிதா,

“என்ன சோபி நீ.. மாமா வீட்டு விசேசத்துக்கு கூட வரலைன்னு சொல்லிட்ட.. வீட்டுக்கு வந்தும் இப்படி உம்முன்னு இருந்தா எப்படிடா.. உன் வயசு பொண்ணு எல்லாம் குழந்தையோட இருக்குதுங்க.. அவ்வளோ ஏன் நம்ம லல்லி பாரு, இப்போ ரெண்டாவது பிள்ளையாம்.. முழுகாம இருக்காளாம்..” என்று அவளின் தோழியைப் பற்றி பேசி, பேச்சை மாற்றி  மகளை சமாதானம் செய்ய கிளம்ப,

“லல்லி கன்சீவா இருக்கிறதுக்கும் என் கல்யாணத்துக்கும் என்னமா சம்பந்தம்!!” என்று சலித்தவள்,   “கொஞ்ச நேரம் நான் அமைதியா இருக்க கூடாதா.. எப்பவும் ஒரே மாதிரி எல்லாம் இருக்க முடியாதும்மா…” என்றாள்..

“சோபி.. நான் உன் அம்மா டி.. அமைதியா இருக்கிறதுக்கும், உம்முன்னு இருக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாதவளா நான்..??”

“ம்ம்ச்.. இப்போ உனக்கு என்னதான் வேணும்???”

“ஒண்ணுமில்ல நம்ம ஜோசியர், மூணு வாரம் செவ்வாய்கிழமை ராகு காலத்தில துர்க்கைக்கு விளக்கு போட்டா, கல்யாணத்துக்கு தடை இருந்தாலும் போயிடும்னு சொன்னாரு.. இன்னிக்கு செவ்வாய் கிழமை தானே.. அவனும் லீவுன்னு இருக்கான்.. நீயும் தம்பியும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வாங்க என்ன??” என்றார் இவள் மாட்டேன் என்று சொல்லாமல் கிளம்ப வேண்டுமே என்ற எண்ணத்தில்..

இதெல்லாம் கேட்டபடி வந்த கார்த்திக்கோ, “ஓ!! அப்போ எனக்கும் சீக்கிரமா கல்யாணமா ம்மா ??” என்று நக்கலாய் கேட்க,

“ஏன்டா உனக்கு அவ்வளோ அவசரமா?? முதல்ல இருக்குற நாலு பேப்பரை கிளியர் பண்ணு… பேச்சு இப்போ மட்டும் ரெண்டு பெரும் வாய் கிழிய பேசுவீங்க..” என்று புனிதா மகனை கடிய,  

“ம்மா அந்த மட்ட மதியானம் வெயில்ல எல்லாம் என்னால இவளை கூப்பிட்டு போக முடியாது.. நீவேணா போ.. இல்லை அப்பாவோட பழைய ஸ்கூட்டில  சோபி மட்டும் போகட்டும்… ” என்று அவனும் சொல்ல,

“டேய் அபசகுணமா பேசாதடா… அவளுக்கு தான் சைக்கிளே ஓட்டத்  தெரியாதே.. அப்புறம் எங்க ஸ்கூட்டில போகப்போறா.. நல்ல பையன்லடா நீ.. இன்னிக்கு மட்டும் நீ போ அடுத்த வாரம் இருந்து நான் போறேன்..” என்று கெஞ்சலுக்கு தாவினார் புனிதா..

அம்மாவும் தம்பியும் பேசுவதை அமைதியாய் பார்த்தப்படி இருந்தவள் “முதல்ல நான் போறேனா இல்லையான்னே கேட்காம நீங்க ரெண்டு பேருமா இப்படி பேசுறதை நிறுத்துங்க…” என,

“ஏய் !! என் டி இப்படி பண்ற… உங்க அப்பா முன்னால எல்லாம் நல்லதுங்க மாதிரி இருந்து தலையை உருட்டுங்க.. என்கிட்ட ஏன் அழிச்சாட்டியம் பண்றீங்க.. ரெண்டு பேரும் மதியம் போய்ட்டு வர்றீங்க.. அவ்வளோதான்.. உனக்கு பிடிக்காட்டியும் பரவாயில்லை.. என் மனசு சமாதானத்துக்கு போயிட்டு வாங்க..” என்று கண்டிப்பாய் புனிதா சொல்லிட,

அக்காவின் முகம் பார்த்தவன் என்ன நினைத்தானோ “சோபி, உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும் வா போயிட்டு வரலாம்” என்றான் கார்த்திக்.

“ ம்ம்… ” என்றுமட்டும் சௌபர்ணிகா சொல்லிவிட்டு எழுந்து செல்ல,

“இதுங்களை சரி கட்டி  இழுக்கிறதுக்குள்ள என் தாவு தீர்ந்திடும்..” என்று புனிதா கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுகையிலேயே, திரும்பியவள்,  “ ம்மா ஒரு நிமிஷம்..” என்றாள்..

“என்ன சோபி ??”

“எனக்கு இங்க ஒரு வேலை ஏற்பாடு பண்ணி தர்றேன்னு அப்பா சொன்னாங்க.. என்னாச்சு ??”

“அதை உங்க அப்பாகிட்ட கேட்கவேண்டியது தான சோபி….” என்று புனிதா சொன்னதும், திரும்ப அவரின் அருகே வந்தவள், 

“ம்ம்ச் கேட்டதுக்கு பதில் சொல்லுமா…” என்றாள்..

“எல்லாம் சொல்லி வச்சிருக்கார்.. எதோ ஷாப்பிங் மால்ல ஓவரால் சூப்பர்வைசிங் வேலையாம்.. நல்ல சாலரி குடுப்பாங்க போல.. நம்ம லல்லி அப்பாதான் சொல்லிருக்கார்..”

“ஓ!! இதை நான் கேட்டப்பவே சொல்லவேண்டியது தான…” என்றவள் முகத்தை சுருக்க,

“ம்ம்ச் சும்மா இடுத்தம் பண்ணாத சோபி.. இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை?? ஏன் இப்படி இருக்க?? இல்ல வேற எதுவும் பிரச்சனையா???” என்றார் அவள் முகத்தை ஆராய்ந்து..

புனிதாவிற்கு மனதினுள்ளே சடுதியில் என்னென்னவோ எண்ணங்கள்.. மகளது இயல்பு இதுவல்லவே பின் ஏன் இப்படி நடந்துகொள்கிறாள் என்று மனதில் ஆயிரம் சலனங்கள்.. அந்த  எண்ணங்களே அவரின் குரலில் பிரதிபலிக்க, அந்த குரல் ஒரு நொடி சௌபர்ணிகாவின் மனதை உலுக்கினாலும், அதை சமாளித்து,   

“அதெல்லாம் இல்லம்மா.. எனக்கு என்ன பிரச்சனை?? உடனே வேலையை விடு, கல்யாணம் அது இதுன்னு சொல்லவும் தான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு.. கொஞ்ச நாள் போகட்டுமே ம்மா….” என்றாள் புனிதாவை சமாதனம் செய்யும் பொருட்டு..

“ஹ்ம்ம் வேற எதுவும் இல்லையே சோபி.. இல்லை அம்மாக்கிட்ட எதுனாலும் சொல்றதுன்னா சொல்லு..” என்று புனிதா கேட்க,

“ம்மா கண்டிப்பா இதுமட்டும் தான் காரணம்..” என்று சத்தியம் செய்யாத குறையாய் சௌபர்ணிகா சொல்ல,  

“சோபி இப்போ உடனேவா உனக்கு கல்யாணம் வைக்க போறோம்.. இப்பதான் தரகர் கிட்ட சொல்லிருக்கு.. எல்லாம் நமக்கு தோதா வந்தாதான… எப்படியும் இன்னும் ஒரு அஞ்சு இல்லை ஆறு மாசம் ஆகும்டா.. நீ எதுக்கும் கவலை படாம வேலைக்கு சந்தோசமா போய்ட்டு வா.. என்ன..” என்றார் அமைதியாய்..

இன்னும் ஆறு மாதங்கள்.. அதற்குள் நான் அவனை சந்திக்க வேண்டுமே… முடியுமா??? சந்தித்தாலும் பேசிவிட முடியுமா??? கடவுளே.. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு காதலை தந்தாய்.. என்று கடவுளிடம் தான் வேகமாய் தன் குமுறலை கொட்டினாள்..

பெயரைத் தவிர எதுவும் தெரியாது.. இதே ஊர்தான்.. ஆனால் இங்கே  தான் அவன் இருக்கிறானா அதுவும் தெரியாது. அப்படியே இருந்தாலும் இங்கே எங்கே சென்று தேடுவாள்.. யாரிடம் கேட்பாள்.. அப்படியே கேட்டாலும் அவனை கண்டுவிட்டாலும் ஒருவேளை அவனுக்கு திருமணம் ஏதேனும் நடந்திருந்தால்?? அச்சோ அதன்பின் அவள் என்ன செய்வாள்?? அவளின் காதலின் ஆயுள் எதுவரை???

இவை அனைத்தும் அவளின் மனதில் ஓட, பதில்கள் இல்லா கேள்விகள் மட்டும் சௌபர்ணிகாவிடம்..

“என்ன சோபி அப்படியே நிக்கிற.. போ தலைக்கு எண்ணெய் வச்சு தண்ணி ஊத்து… என்ன பிள்ளைகளோ எண்ணெய் தேய்க்கிறது இல்ல… ஜடை பின்றது இல்லை..” என்று தன் போக்கில் சொல்லிக்கொண்டே தன் வேலைகளைப் பார்க்க சென்றுவிட்டார் புனிதா..

ஒருவழியாய் மதியம் கிளம்பி அவளும் கார்த்திக்கும் மீனாட்சி அம்மன் கோவில் வந்திட, 

“ஏன் சோபி.. நீ அந்த ஷாப்பிங் மால் வேலைக்கு கண்டிப்பா போகனுமா???” என்று  துர்க்கைக்கு விளக்கு போட்டுவிட்டு பிரகாரத்தை சுற்றி வரும்போது தான் கார்த்திக் இந்த கேள்வியை கேட்டான்..

“ஏன்டா.. போனா என்ன?? லல்லி அப்பாக்கிட்ட கூட கேட்டேன் நல்ல இடம்னு சொன்னார்.. நமக்கும் வீட்டு பக்கம்..”

அவள் சொன்னதை மிகவும் சீரியசாய் கேட்பது போல் கேட்டவன், எதோ யோசனையாய் இருப்பது போல் காட்டிவிட்டு பின் அடிக்குரலில், 

“ம்ம் இல்ல.. அங்க வேலைக்கு ஆள் வரலைன்னா உன்னை தான் கூட்ட சொல்வாங்க, குப்பை அல்ல சொல்வாங்க அதான் கேட்டேன்.. அஞ்சு மாடி.. மொட்டை மாடியை சேர்த்து ஆறு.. நினைச்சு பாரேன் நீ ஒரு கையில மாஃபும், இன்னொரு கையில வாளியும் வச்சு எப்படி இருப்பன்னு…” என்று அசராமல் கேட்டவனை என்ன செய்தால் தகும் என்று தெரியாமல் பல்லைக் கடித்து முறைத்தாள் சௌபர்ணிகா.  

அவளின் பார்வை கண்டு கார்த்திக் சிரிக்க, “டேய்… கோவில்னு பார்க்கிறேன் பேசாம வா.. எதையாவது சொல்லி அடி வாங்காத… ஏன்டா உனக்கு மட்டும் புத்தி இப்படி கோணலாவே போகுது.. எருமை..” என்று அவன் முதுகில் இரண்டு அடி போட்டு நடக்க,  அவனோ அடங்குவேனா என்று மேலும் சீண்டியபடி வந்தான்..

 “டேய் உன்னை இவ்வளோ திட்டுறேனே கொஞ்சமாவது சூடு சுரணை இருக்கா…”

“அட உனக்கு தம்பியா இருந்துகிட்டு இதை எல்லாம் என்கிட்டே எதிர்பார்க்கலாமா சோபி கண்ணு.. நாங்க எல்லாம் திட்டதிட்ட திண்டுகல்லு..”

“உனக்கு இந்த வாய் மட்டும் இல்லைன்னா நீ எல்லாம் இய்யம் பித்தளைக்கு கூட போகமாட்ட..”

“ஆமாமா நீ எல்லாம் ஓசிக்கு கூட போகமாட்ட…” என்றவன்,  நிச்சயம் இதற்கு சௌபர்ணிகாவிடம் இருந்து இரண்டு அடி கிடைக்கும் என்று பார்த்தவனுக்கு அவளது பார்வை அவனிடம் இல்லை என்பது புரிந்து அவளது தோலை சுரண்டினான்.. பேச்சு ஒருபக்கம் பேச்சாய் இருக்க, இருவரும் கோவிலில் இருந்து வெளி வாசல் வந்திருந்தனர்..

தான் இத்தனை பேசியும் சௌபர்ணிகா பதில் சொல்லாமல் இருக்க, மீண்டும் அவளது தோளை கார்த்திக் சுரண்ட, 

“ம்ம்ச் என்னடா ???” என்று எரிச்சலாய் வந்தது கேள்வி..

“ஆமா ஆளே இல்லாத ரோடுல யாரை அப்படி பார்க்கிற?? ஒருவேளை ஆமானுஷ்யமா எதுவும் உன் கண்ணுக்கு தெரியுதா?? சொல்லு இப்பயே ஏதாவது சேனலுக்கு சொல்லி வர சொல்லுவோம்…” என்று அவனும் சுற்றி முற்றி பார்க்க,  வேகமாய் தன் பார்வையைத் திருப்பி கொண்டாள்..

“என்ன சோபி பதில் சொல்லு…??

“நீ கேட்டா எல்லாத்துக்கும் பதில் சொல்லனுமா?? யாரும் இல்லை.. சும்மா தான் பார்த்தேன்.. இப்போ என்ன அதுக்கு??.. ஏன் நான் வேடிக்கை பார்க்க கூடாதா ?? அதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ???”   என்று அவள் படபடவென பொரிய,

“அம்மா தாயே தெரியாம கேட்டுட்டேன்.. வண்டில ஏறு.. ஒரு கேள்வி கேட்டதுக்கு இத்தனை கேள்வியா???” என்று கேட்டபடி பைக்கை கிளப்பினான் கார்த்திக்..

பின்னால் ஏறி அமர்ந்தவளின் மனமோ அவளிடம் இல்லை.. அந்த அப்பாச்சியில் போனது அவனோ??? பின்னால்  இருந்து பார்க்க அப்படித்தானே இருந்தது.. அதே போல முழுக்கை சட்டை.. முட்டி வரை மடக்கி விட்டு… சாயல் கூட அப்படித்தானே இருந்தது.. அவன் தானோ??? அப்படியென்றால் அவன்  இங்கே தான் இருக்கிறானோ.. தினமும் இந்தபக்கம் வருவானோ?? அப்போ நானும் தினமும் கோவிலுக்கு வர வேண்டியது தான்..  என்று வேக வேகமாய் நினைத்தவளின் மனம் அதே வேகத்தில் ‘ஆனா வேலைக்கு போனா எப்படி முடியும்??’  என்ற கேள்வியையும் கேட்க, அவளிடம் வழக்கம்போல் பதில் இல்லை..

இப்படி பல கேள்விகள் எழுந்து சுற்று புரத்தை மறக்க செய்தது… எதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்து தன்னையே உலுக்கி கொண்டு பார்த்தவளுக்கு கார்த்திக்கின் முகம் வெகு அருகில் தெரிந்தது..

“ஹே என்னடா கிறுக்கா உனக்கு? இப்படிதான் பாப்பியா???”

“கிறுக்கு எனக்கு இல்லை.. உனக்கு..” என்று அவள் முன்னே விரலை நீட்டியவன்  “வீட்டுல வந்து வண்டி நிறுத்தி பத்து நிமிஷம் ஆகுது.. நீ இன்னும் இறங்க காணோம்.. அப்படி என்ன சிந்தனை உனக்கு… இதில என்னை லூசுன்னு சொல்ற” என்று சொல்ல,

“என்.. என்ன வீட்டுக்கு வந்தாச்சா ?? ஏன்டா சொல்லிருக்கலாம்ல..”  என்று வேகமாய் பைக் விட்டு இறங்கினாள்..

“அது சரி!!!  இறங்குன்னு நாலு தடவ சொன்னது உன் காதுல விழல.. அப்போ??” என்று யோசனை செய்தவன்,   “அட கடவுளே என் அக்காக்கு மூளை தான் எதோ கோளாறுன்னு பார்த்தா காதும் கேட்கலையே…” என்று நெஞ்சில் கை வைக்க,

“டேய் சும்மா இருக்கமாட்ட.. எதோ யோசனை அதான்.. அதுக்குன்னு உன் முகத்தை இப்படியா கிட்ட காட்டுவ.. யப்பா என்ன மூஞ்சி!!!!” என்றபடி நின்றால் மேலும் கேள்வி கேட்டு துருவி எடுப்பான் என்று வேகமாய் வீட்டினுள்ளே சென்றுவிட்டாள்..  

“என்னவோ நீ சரியே இல்லை” என்றபடி அவனும் உள்ளே நுழைந்தான்…….

‘அம்மா ஏன் இப்படி பண்றாங்க?? நான் அவ்வளோ சொல்லியும் கேட்காம இன்னிக்கு நேரா இங்கவே அனுப்புறாங்கனா என்ன அர்த்தம்’ என்று ஏக கடுப்பில் இருந்தான் சர்வேஷ்…

அவனது இந்த கடுப்பிற்கு காரணம் அவனது அம்மா மோகனாவே..

“ஹலோ சர்வா… என் ஒண்ணுவிட்ட சித்தப்பா பேத்திடா, மதுரைக்கு  பிரண்ட்ஸ் கூட வந்தாளாம், உங்க கடையை பார்க்கணும் அத்தைன்னு போன் பண்ணா, அனுப்பி விடுறேன்டா… பார்த்து நல்லபடியா கவனிச்சு அனுப்பு.. நீயே கூட இருந்து எல்லாம் சுத்தி காட்டு என்ன??  முடிஞ்சா மதியம் ஹோட்டல் கூட்டிட்டு போ..” என்று கூறியவர் அவனின் பதிலுக்கு காத்திராமல் வைத்துவிட்டார்…

எதற்கு அழைத்தார், என்ன கூறினார் என்றே அவனுக்கு முதலில் விளங்கவில்லை.. வேலையாய் இருந்தான்.. அவர்பாட்டுக்கு போன் செய்து பேசிவிட்டு வைத்துவிட, சிறிது நேரம் என்ன சொன்னார் என்று யோசித்தவனுக்கு எரிச்சலாய் போனது..  

‘அம்மா!!!! ஏன் தான் இப்படி எல்லாம் யோசனை போகுதோ.. ஒரு பொண்ணு என்கூட கொஞ்ச நேரம் பேசி, லஞ்ச் சாப்பிட்டுப் போனா, உடனே நான் கல்யாணத்துக்கு சரின்னு சொல்வேணா?? அவ்வளோ வீக்கா நான்..’ என்று மனதினுள் திட்டிக்கொண்டவன்,  

வேகமாய்  தன் அறையில் இருந்து வெளியில் வந்து அங்கிருந்த வேலையாள் ஒருவரை அழைத்து “என்னை தேடி ஒரு லேடி வருவாங்க, வந்தா நான் டீலர்ஸ்  மீட்டிங்ல இருக்கேன் சொல்லிடுங்க.. நீங்களே கூட இருந்து எல்லாம் சுத்தி காட்டுங்க…” என்றவன் வேகமாய் மேல் இருந்த தளத்திற்கு சென்றுவிட்டான்.

மீட்டிங்கும் இல்லை ஒன்றுமில்லை ஆனால் செய்வது என்று தெரியவில்லை.. அடுத்ததடுத்து அவனுக்கு அழைப்புகள் வரவே அதில் தன்னை தொலைத்தவனுக்கு தலை வலித்தது.. எரிச்சல் கோபம் எல்லாமே உள்ளே இருக்க அதை வெளிக்காட்ட முடியாமல் இருந்தான்..

சரியாய் மீண்டும் அதே நேரம் மோகனா அழைக்க, முதலில் அழைப்பை சர்வேஷ் எடுக்கவேயில்லை.. திரும்ப திரும்ப அவர் அழைக்க “என்னம்மா…” என்றான் கடுப்பாய்..

“டேய் அது…” என்று மோகனா பேசுவதற்குள் “எனக்கு யாரையும் பார்க்க டைமில்ல டீலர்ஸ் மீட்டிங்க்ல இருக்கேன்..” என்றவன் போனை வைத்துவிட, அடுத்து மீண்டும் அலைபேசி சிணுங்கியது.. 

அம்மாவோ என்று பார்க்க, அழைத்தது ஷ்ரவன் என்று தெரியவும், எடுத்துப் பேசியவன் “இதோ வர்றேன்…” என்று கூறி மீண்டும் கீழ வர,  அதே நேரம் ஷ்ரவனும் “நீ இரும்மா நான் அவன்கிட்ட பேசிட்டு வர்றேன்..” என்றுசொல்லி, சர்வேஷை எதிர்நோக்கி வெளியே வர, 

“என்னடா வெளிய நிக்கிற…” என்றபடி சர்வேஷ் அறைக்குள் போக முயல,   உள்ளே ஒரு பெண்ணும் இருப்பது கண்டு, கேள்வியாய் ஷ்ரவனைப் பார்க்க, அவனோ எதுவோ சொல்ல வரும் முன்னரே,    

‘எல்லாம் அம்மாவோட வேலை தான்.. தனியா அனுப்பினா நான் இவங்க சொன்னதை பண்ணமாட்டேன்னு இவன்கூட அனுப்பி இருக்காங்க.. இவனும் கூட்டிட்டு வந்திருக்கான்..’ என்று எண்ணியவன் தன் நண்பனை முறைத்தவன் வேகமாய் அவனையும் இழுத்துக்கொண்டு உள்ளே வர அந்த சத்தத்தில் சௌபர்ணிகா திரும்ப, அவளின் எண்ணங்கள் அப்படியே நின்றுவிட்டன.  

எதுவோ ஒரு ஐம்பது அறுபது வயது முதியவரை எதிர்பார்த்து வந்தவளுக்கு அங்கே அவளைவிட நான்கு அல்ல ஐந்து வயது மூத்தவனாய் ஒருவன் முதலாளியாய் இருக்கவும் நம்பவே முடியவில்லை..

‘இவன்.. இவன்தானா… இவனா இத்தனை பெரிய மாலின் சொந்தக்காரன்… இத்தனை சிறு வயதில் எத்தனை பெரிய சாதனை.?? நிஜமாகவே இது இவனது சொந்த முயற்சிதானா?? ஹப்பா!!!’ என்று கண்களை விரித்து நினைக்கும் பொழுதே சௌபர்ணிகாவின் காதுகளில் சர்வேஷின் கோவமான வார்த்தைகள் விழுந்தன..

‘என்னை பார்த்துத் தான் என்னவோ சொல்றானே’ என்று காதுகளை கூர்மையாக்கி கேட்டாள்..

“ஊருக்கு பிரண்ட்ஸ் கூட வந்தோமா, வந்த வேலையை பார்த்தோமான்னு இருக்கனும்.. அதை விட்டு என் அம்மாக்கிட்ட என்ன பேச்சு?? இல்லை கேட்கிறேன் நான் உனக்கு இங்க சுத்தி காட்டவா இருக்கேன்.. இதுல இவன் கூட துணைக்கு வேற.. முதல்ல ரெண்டு பெரும் இடத்தை காலி பண்ணுங்க” என்று சர்வேஷ் கோபமாய் கத்த,

அவனது பேச்சிலும் முக பாவனையிலும் அத்தனை நேரமிருந்த உணர்வுகள் மறைந்து,  “என்ன இப்படி பேசுகிறான்..” என்று வேகமாய் ஷ்ரவனை பார்த்தாள்.. அவன் முகமோ கலவரமாய் இருந்தது..

“ஹேய் சர்வா.. என்னடா இது.. நீ சொன்னேன்னு..” என்று ஆரம்பித்தவன் சௌபர்ணிகாவை பார்த்து “நீகொஞ்சம் வெளியில வெயிட் பண்ணும்மா.. நான் பேசிட்டு கூப்பிடுறேன் ” என்று சொல்ல, சௌபர்ணிகா மௌனமாய் வெளியேறினாள்..

ஆனால் அவளின் மனமோ மௌனமாய் இல்லை..

‘என்ன மனுஷன் இவன்?? இப்படி பேசுறான்.. இந்த முசுடு முசோலினிக்கிட்ட எப்படி நான் வேலை பார்க்க முடியும்???” என்று எண்ணியவளின் மனம் தன்னையும் அறியாமல் அவள் மனதினுள்ளே விருட்சமாய் வளர்ந்து நிற்கும் அவளின் அவனை நினைத்தது…

அனைவரிடமும் சிரித்து பேசும் அவன் எங்கே, பார்த்த நாளே கடித்து குதறும் இவன் எங்கே??? பணம் இத்தனை திமிரை கொடுக்குமா??? இப்படிப்பட்ட ஒருவனையா என் கண்ணில் காட்ட வேண்டும்?? நான் தேடும் அவன் எப்படிபட்டவன்… என்று தன் எண்ணங்களில் மூழ்கியவளை ஷ்ரவனது அழைப்பு கேட்டு திரும்ப வைத்தது..

“அவன் வேற எதோ டென்சன்ல இருந்தான் சோபி.. மத்தபடி நல்லவன்.. நீ தப்பா நினைக்காத.. உள்ள வா.. நான் எல்லாம் பேசிட்டேன்.” என்று அவளை உள்ளே அழைக்க,

“இல்லண்ணா அது…” என்று இவளோ தயங்க,

“அவனுக்காக நான் சாரி கேட்கிறேன் சோபி.. தப்பா நினைக்காதா.. அவன் சூழ்நிலை அப்படி.. எல்லாம் சொல்லிருக்கேன் நீ என் கசின் லல்லியோட பிரண்ட்னு.. சோ இனிமே எதுவும் பிராப்ளம் இருக்காது…” என்று ஷ்ரவன் தன்மையாகவே எடுத்து சொல்ல,

“ம்ம்..” என்று தலையை ஆட்டி அவனோடு சர்வேஷின் அறைக்கு சென்றாள் சௌபர்ணிகா.     

“பார்த்துக்கோ சர்வா…” என்றவன் “ஆல் தி பெஸ்ட் சோபி..” என்று இருவருக்கும் பொதுவாய்  கூற, சௌபர்ணிகாவோ எதிரே இருக்கையில் அமர்ந்து தன்னையே ஆராய்வது போல் பார்க்கும் அவனை கண்டு என்ன பேச என்றுகூட தெரியவில்லை..

மேலும் இரண்டொரு நொடிகள் இருந்த ஷ்ரவன் கிளம்பிட, இவளுக்கோ பேச்சு வரவில்லை.. நா வறண்டு போனது.. ஏ சி  அறையிலும் வேர்த்தது.. எல்லாம் இவனால் என்று மனம் கடிந்தது.. அமருமாறு கை காட்டிவிட்டு அவளது பைலுக்காக கை நீட்டினான்..

‘‘பெரிய இவன் வாய் திறக்க மாட்டானோ!!’ என்று நினைத்தபடியே அவளது பைலை நீட்டினாள்.. அனைத்தையும் பார்த்தவனுக்கு சற்றே ஆச்சரியத்தில் புருவம் உயர்ந்ததோ என்று அவள் கவனிப்பதற்குள் முகத்தை இயல்பாய் மாற்றிக்கொண்டான்..

அதே நேரம் மீண்டும் மோகனா அழைத்து “சர்வா அந்த பொண்ணு ஊருக்கே வரலையாம் டா…” என,

“ரொம்ப சந்தோசம்..” என்று சொல்லி வைத்துவிட்டு, சௌபர்ணிகாவைப் பார்க்க,  

‘என்ன கேட்பானோ…’ என்று நினைக்கும் போதே, “சென்னைல நல்ல ஜாப்ல இருந்திட்டு ஏன் ரிசைன் பண்ணீங்க..??” அவன் கேட்டதும், அவளுக்கு சொல்லவா முடியும் ‘எனக்கு வரன் பார்க்கிறார்கள்..’ என்று..

“அது…..” என்று தயங்கியவள், “பெர்சனல் ரீசன்ஸ்..” என்றுமட்டும் சொல்ல,

“ஓஹோ..!!!” என்று புருவம் உயர்த்தியவன், “இந்த ஜாப்ல அப்படியான ரீசன்ஸ் எதுவும் வந்திடாதே…” என,

‘டேய்…’ என்று பல்லைக் கடித்தவள், “நோ…” என்றாள் அழுத்தமாய்..      

“ஓகே!! மிஸ். சௌபர்ணிகா… லெட்ஸ் வி ஸ்டார்ட்..” என்று ஆரம்பித்தவன் அதற்குமேல் அவளை பேசவும் விடவில்லை யோசிக்கவும் விடவில்லை…

அவனது பேச்சுக்கள் எல்லாம் வேலை வேலை வேலை பற்றியே இருக்க, சௌபர்ணிகாவிற்கோ அன்றெனப் பார்த்து அவளின் நாயகன் நினைவு அப்படி ஆட்டிப் படைத்தது.

அவனது நினைவு ஒருபக்கம்.. இந்த சர்வேஷின் தோரணையும் பேச்சும் ஒருபக்கம் என, அன்று இரவெல்லாம் சௌபர்ணிகா உறங்கவே இல்லை… என்ன முயன்றும் அவளது கோவம் குறையவில்லை…    

“ச்சே என்ன இவன் ?? முதல் நாள் வேலைக்கு வர பொண்ணுகிட்ட இப்படியா பேசுவான்.. இவன் முதலாளின்னா அது அவனளவுல.. என்ன ஒரு திமிர் அப்படி முகத்தில அடிச்ச மாதிரி பேசிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி வேலை சொல்ல ஆரம்பிச்சுட்டான்… முசுடு முசோலினி…” என்று சர்வேஷை கடிந்தபடி கண்ணுறங்க முயல,

கண்கள் மூடிய அடுத்தநொடி, அவளது நினைவடுக்கில் அடுக்கபட்டிருந்த அவளது நாயகனின் நினைவுகள் விழித்துக்கொண்டன..

எத்தனை அழகாய் சிரிப்பான்… அனைவரிடமும் எப்படி சிரித்து பேசுவான்… அத்தனை கண்ணியம் அவனிடம் தெரியும்…. என்று ஆரம்பித்த எண்ண ஊர்வலங்கள் இப்பொழுது சர்வாவிடம் வந்து நின்றது..

இவனுக்கு சிரிக்கவே தெரியாதா??? இல்லை சிரிப்பை தொலைத்துவிட்டானா?? எத்தனை அலட்சியம்… நடை உடை பாவனை அத்தனையிலும் அலட்சியம் அலட்சியம் அலட்சியம் மட்டுமே.. அவசியம் இந்த வேலை வேண்டுமா??  இவனோடு எப்படி நான் மீதி நாட்களை நகற்ற போகிறேன்… பணம் இருந்தால் மனிதனின் இயல்பு கூட மாறிவிடுமா என்ன ???

இப்படியாக சோபியின் தூக்கம் அவளது எண்ணத்தின் நாயகனையும், எதிரில் நிற்கும் சர்வேஷையும் ஒப்பிட்டு பார்த்து பார்த்து அலுத்து சலித்து ஒருவழியாய் ஆழ்ந்த உறக்கம் சென்றது… அதுவே அவளது தினசரி வழக்கமும் ஆனது..

ஆனாலும் புது இடம், அதுவும் சொந்த ஊரில் இத்தனை பெரிய கட்டிடத்தை நிர்வகிப்பது என்றால் சும்மா அல்லவே… என்னதான் சர்வேஷ் கொஞ்சம் அலட்சியமாக இருப்பது போல் காட்டினாலும் அவனிடம் அவளுக்கு ஒரு விஷயம் மட்டும் மிகவும் பிடித்து இருந்தது… அவளை நம்பி அனைத்து பொறுப்புகளையும் கொடுத்து இருந்தான். அவன் அங்கு இல்லாத சமயத்தில் அனைத்தும் சௌபர்ணிகாவே…

லிப்டில் மேலும் கீழும் இறங்கியும் ஏறியும் அங்கும் இங்கும் சுற்றி வந்து பார்த்து, வேலையாட்களிடம் பேசி, அவர்கள் குறை அறிந்து, வரும் வாடிக்கையாளரிடம் பேசி அவர்கள் கூறும் விசயங்களை கவனித்து என்று அவளுக்கும் பொழுது இனிமையாய் தான் கழியும்..

அந்த இனியவனின் எண்ணங்கள் மட்டும் வரமால் இருந்தால் சௌபர்ணிகா பம்பரமாய் தான் சுற்றுவாள்.. ஆனால் அவனது புன்னகை பூசிய முகம் மனதில் தோன்றிவிட்டால் சுற்றியும் ஒரு வெறுமை சூழ்ந்துவிடும்,.. என்று தீரும் இந்த வேதனை??? பதில் அறியா கேள்வி வந்து அவளது முகத்தை வாட வைத்துவிடும்…

சில நேரம் சர்வேஷ் நன்றாய் பேசுவான்.. ஆனால் பல நேரம் மில்லிமீட்டர் அளவு கூட எதுவும் இருக்காது.. இவன் ஏன் இப்படி இருக்கிறான்??? என்ற புது கேள்விகளும் அவளுள் சேர்ந்துக்கொண்டது…

ஆனால் சர்வேஷோ, அவனது மனதில் என்ன இருக்கிறதோ அதை செயல் படுத்துவது தவிர அவனுக்கு வேறு எதுவும் இல்லை.. நினைத்தது, நினைத்த மாதிரியே நடந்தேரவேண்டும்.. அவனது விருப்பபடி ஒரு பெரிய மால் வாங்கி, அதை தொடங்கியும் ஆகிவிட்டது..

ஆனால் அதை வெற்றிகரமாய் நடத்திச்செல்ல வேண்டும்… அதற்கு என்னென்ன செய்யலாம்?? மேலும் மேலும் இதை எப்படி விஸ்தரித்து எப்படி முன்னேறி செல்லலாம். இந்த யோசனைகளின் பிடியில் தான் அவனிருந்தான்… சாப்பிடும் நேரம் மட்டுமே வீட்டினரால் அவனை காண முடிந்தது.. எப்பொழுது வருகிறான், எப்பொழுது உறங்குகிறான் என்று யாருக்கும் தெரியாது…

“அம்மா இந்த அண்ணன் செய்றது கொஞ்சம்கூட சரியே இல்லைம்மா.. இதென்ன வீடா இல்லை சத்திரமா?? அவன் பாட்டுக்கு வர்றது என்ன போறது என்ன” என்று வீடே அதிரும் படியாய் தான் ஸ்ரீநிதி கத்தி கொண்டு இருந்தாள்..

எங்கே மகளது பேச்சை கேட்டு மகன் கோவம்கொள்வானோ என்ற எண்ணம் தோன்றினாலும் வீட்டில் யாராவது ஒருத்தராவது பேசவேண்டுமே என்ற எண்ணத்தில் மோகனாவும் அமைதியாய் சர்வேஷின் முகம் நோக்கினார்.. அன்று சற்றே இலகு மனநிலையில் இருந்ததால் ஸ்ரீநிதி பேசுவதை ஒரு புன்சிரிப்போடு பார்த்தான் சர்வேஷ்.

“என்ன என்ன சிரிக்கிற??? இப்படி நீ சிரிச்சா நாங்க எதுவும் சொல்லாம இருப்போமா ?? இங்க பாருண்ணா சம்பாரிக்கிறது எல்லாம் இருக்கட்டும் முதல்ல நீ இந்த வீட்டுக்கு பையனா எனக்கு அண்ணனா இரு… என்ன ???”

“அடேங்கப்பா!!! பெரியமனுசி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்களே.. என்ன மேடம் செய்யணும் உனக்கு நான்??” என்றான் சிரித்தபடி..

பல நாட்கள் கழித்து அண்ணனின் பேச்சில் இழையோடிய கேலியும் கிண்டலும் அவன் முகத்தில் தோன்றிய சிரிப்பும் ஸ்ரீநிதியை மகிழ செய்தது..

“பார்த்தியாம்மா உன் மகன் எப்படி ஒரு சவுண்ட்ல வழிக்கு வந்துட்டான்னு.. உனக்கெல்லாம் அண்ணன்கிட்ட பேசவே தெரியலைம்மா..” என்றவள்  “அண்ணா என்னை இன்னிக்கு நம்ம மாலுக்கு கூட்டிட்டு போ..”  என்றாள்..

ஆனால் அன்று பார்த்து அவனுக்கு டீலர் மீட்டிங் வேறு இருந்தது… தங்கையிடம் கூறினால் அவ்வளவே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாள். என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு சௌபர்ணிகாவின் நினைவு வந்தது.,.

ஸ்ரீநிதியை அழைத்து சென்றவன் பொறுப்பை சௌபர்ணிகாவிடம் விட்டுவிட்டு அவன் வேலையை பார்க்க கிளம்பி சென்றுவிட்டான்.. சர்வாவின் தங்கை என்ற நினைப்பை எல்லாம் தாண்டி இருவருக்கும் நல்ல ஒட்டுதல் இயல்பாய் ஏற்பட்டது..

“நீங்க எப்படி எங்க அண்ணாகிட்ட வேலை செய்றீங்க??? ரொம்ப பொறுமை தான் உங்களுக்கு” என்றவளை விழி விரித்து பார்த்தாள் சௌபர்ணிகா…

“அட நிஜம் தான்.. நான் எப்பவும் உண்மையை மட்டும் தான் பேசுவேன். எனக்கு அண்ணனை பத்தி தெரியும்.. எப்போ எப்படி இருப்பான்னு சொல்லவே முடியாது. அதான் கேட்டேன்..” என்று ஆரம்பித்து சௌபர்ணிகாவின் சென்னை வேலை, குடும்ப விவரம் என்று அனைத்தையும் பேசி அலசி ஆராய்ந்துவிட்டாள் ஸ்ரீநிதி…

அவள் கேட்கும் கேள்விக்கு எல்லாம் பொறுமையாய் சிரித்தபடி உண்மையாய் பதில் அளிக்கும் சௌபர்ணிகாவை ஸ்ரீநிதிக்கு மிகவும் பிடித்துவிட்டது… இப்படி ஒரு பெண் வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அவளையும் அறியாமல் தோன்றியது…

சௌபர்ணிகாவிற்கு இன்னும் ஆச்சரியம்.. அப்படி ஒரு அண்ணன் இப்படி ஒரு தங்கை… ஹப்பா!! பாவம் பேச்சுதுணைக்கு ஆள் இல்லாமல் கூட மிகவும் ஏங்கி இருப்பாள் போல் அதான் முதல் நாளே இத்தனை பேசுகிறாள்.. இவனெல்லாம் வீட்டில் என்ன தான் செய்வானோ.. சிடுமூஞ்சி, அவனோடு பேசுவதற்கு இவள் வீட்டில் அமைதியாகவே இருப்பது மேல்..

“அட என்ன அமைதியா இருக்கீங்க??? ஆமா உங்களை நான் எப்படி கூப்பிட??” என்ற கேள்விக்கு என்ன பதில் கொடுப்பது என்று ஒரு நிமிடம் திகைத்து விழித்தாள் சௌபர்ணிகா..

“சரி ரொம்ப யோசிக்காதிங்க.. உங்க வீட்டில கூப்பிடுற மாதிரி சோபின்னே கூப்பிடுறேன் என்னக்கா??” என்று புன்னகையோடு கேட்டவளுக்கு இல்லை என்று சொல்ல மனம் வருமா என்ன..

“சரி சோபிக்கா, நேரம் ஆச்சு சாப்பிடலாமா.. நான் லஞ்சு கொண்டு வந்தேன்.. இன்னிக்கு முழுக்க இங்க தான் இருக்கணும்னு வந்தேன்…” என்று ஸ்ரீநிதி சொன்னதும்,

‘நாள் முழுக்கவா!!! கடவுளே’ என்றெண்ணியவள்  “சரி ஸ்ரீ நான் ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன்.. வந்து சாப்பிடலாம்…” என,

“அப்போ நானும் வர்றேன்” என்றாள் மற்றவள்..

“சரியான வால்பிடி போல” என்று மெல்ல புன்னகைத்தபடி இருவரும் பேசி சிரித்துகொண்டே ஒரு வலம் வந்தனர்… அரட்டை அத்தோடு முடியவில்லை மதிய உணவினோடும் தொடர்ந்தது…

“சோபிக்கா நீங்க நல்ல பேசுறிங்க.. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. ஒருநாள் எங்க வீட்டுக்கு வாங்க கண்டிப்பா எங்க அம்மாவுக்கும் உங்களை பிடிக்கும்”

“அதெல்லாம் வேண்டாம் ஸ்ரீ…”

“அட சும்மா வாங்கக்கா.. நான் வந்து கூட்டிட்டுப் போறேன்.. உங்களுக்கு லீவ் இருக்கா இல்லையா?? இதெல்லாம் வேலைக்கு சேரும்போதே அண்ணன்கிட்ட பேசலையா?? அவனைவிட்டா இருபத்திநாலு மணி நேரமும் இங்கயே இருக்க சொல்வான்..”

“அட அதெல்லாம் லீவ் இருக்கு ஸ்ரீ.. ஆனா வீட்டுக்கு எல்லாம் வேணாம்.. உங்க அண்ணனுக்கு பிடிக்குமோ என்னவோ ?!!!” எனும்போதே,

“என்ன என்னை பத்தி இங்க என்ன பேச்சு ஓடிட்டு இருக்கு???” என்ற குரல் கேட்டு இருவரும் வாயை இறுக மூடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்..

முதலில் சுதாரித்த ஸ்ரீநிதி “சரிண்ணா எனக்கு நேரம் ஆகுது.. வேலை நிறைய இருக்கு… நீ கூட வரவேண்டாம்.. நான்… நானே போயிடுவேன்.. சோபிக்கா நான் கிளம்புறேன்.. டாடா…” என்று யாரின் பதிலுக்கும் காத்திராமல் கிளம்பி சென்றும் விட்டாள்..

‘ஐயோ !! என்னை தனியா மாட்டிவிட்டு போறாளே… இப்போ இவன் என்னன்னு கேட்டா நான் என்ன சொல்வேன்…’ என்று முழித்தவள் சர்வேஷின் முகத்தில் தோன்றிய புன்னகையை கண்டு சமைந்து நின்றாள்…

நிஜமாய் இவன் தான் சிரிக்கிறானா???!!! கண்களை வேறு சிமிட்டிக்கொண்டாள்…

  

                    

                                           

Advertisement