Advertisement

                                    சுகம் – 2

நினைவெல்லாம் நீயாகிட..

நிஜமெது நானறியேன்…

கண்கள் உனை தேடுதே

நெஞ்சம் உனை நாடுதே…

“எனக்கு நல்லா தெரியும், அம்மா இவனைத்தான் அனுப்பிவைப்பாங்கன்னு.. காலங்கார்த்தால மொக்கை போட்டே கொல்வான்..” என்று நொந்தபடியும், அதே நேரம் இந்த காலை நேரத்தில் அவனது பொன்னான தூக்கத்தை விட்டு தன்னை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்தவனைப் பார்த்து லேசாய் புன்னகை  காட்டியபடியும் கார்த்திக்கிடம் சென்றாள் சௌபர்ணிகா.

எப்பொழுதுமே அவளை பார்த்ததும் அவன் முகத்தில் தோன்றும் புன்னகை இன்று இல்லையோ என்று அவளுக்கு தோன்றியது. பஸ் விட்டு இறங்கியதும் அக்கா அக்கா என்று சொல்லிக்கொண்டு வருபவன், இப்போது அமைதியாய் நிற்க,  “என்னடா அமைதியா இருக்க??? “ என்று கேட்டபடி அவனது பல்சரின் பின் அமர்ந்தாள்..

“அதெல்லாம் ஒண்ணுமில்ல..” என்று மட்டும் கூறிவிட்டு வீட்டை நோக்கி வண்டியை செலுத்தியவன், அவர்களின் வீட்டு  சந்தின்  முக்கில் வண்டியை நிறுத்திவிட்டு சௌபர்ணிகாவின்  முகத்தை பாவமாய் பார்த்தான்..

“என்னடா வீட்டுக்கு போகாம ஏன் இங்க நிறுத்துற?? கார்த்தி உண்மைய சொல்லு எதுவும் பிரச்சனையா?? அம்மா உடனே கிளம்பிவான்னு சொன்னாங்க, நான் கேட்டதுக்கும் எதுவும் சொல்லல.. ஏன்டா??” என்று சற்றே பதற்றமாய் வினவ,

“பிரச்சனை அப்படின்னு எல்லாம் எதுவும் இல்ல சோபி.. நீ வீட்டுக்கு போய் ரொம்ப ரியாக்ட் பண்ணக்கூடாதுன்னு தான் இப்போவே சொல்றேன்.. அம்மாக்கும், மாமாக்கும் சரியான சண்டை.. அவர் பையனுக்கு வேற இடத்தில பிக்ஸ் பண்ணிட்டாங்க போல. அம்மாக்கு உன்னை அங்க குடுக்க ஆசைன்னு எல்லாருக்கும் தெரியுமே.. நேரா மாமா வீட்டுக்கே போய் சண்டை போட்டு  வந்துட்டாங்க..

இந்த விசயம் நம்ம சொந்த பந்தத்தில தெரியவும், சொந்ததில பொண்ணு இருக்கும் போது வெளிய சம்பந்தம் பேசி இருக்காங்க, என்ன விசயமோ என்னவோ ஏதோன்னு அவங்கவங்க இஷ்டத்துக்கு பேச ஆரம்பிச்சுட்டாங்க, , நீ வேற ஒரு வருசமாவே இங்க சரியா வர்றது இல்லையா, பொண்ணு நிஜமாவே சென்னைல வேலைதான் பார்க்குதா இல்லை வேற எதுவுமான்னு பேச்சு வரவும், எல்லாம் சேர்ந்து அம்மாவை இன்னும் டென்சன் பண்ணிடுச்சு…” என்று மெல்லாமல் விழுங்காமல் அவள் தலையில் இடியை இறக்கினான் கார்த்திக்.

சௌபர்ணிகாவிற்கு தலையில் அடித்துக் கொள்ளவேண்டும் போல இருந்தது.. ஒரு பெண் வெளியூரில் வேலை பார்ப்பதும், விடுமுறை இல்லாமல் ஊருக்கு வராமல் இருப்பதும், அவளின் மாமன் மகனுக்கு வேறு இடத்தில் பெண் அமைந்ததும், இத்தனை பிரச்சனைகளை உண்டு பண்ணுமா?? இவர்கள் இன்னும் எந்த காலத்தில் இருக்கிறார்கள் என்று தோன்ற,  

“ம்ம்ச்.. இதுக்கு தான் அம்மா உடனே வான்னு சொன்னாங்களா?? இப்போ நான் வந்தா மட்டும் என்ன ஆகும் சொல்லு ?? ஒரு பொண்ணு வெளியூர்ல வேலை பார்க்கிறது குத்தமாடா ..” என்று கோபமாய் கேட்டாள் சௌபர்ணிகா.

“கோவப்படாம வா சோபி.. இது தான் விஷயம்.. உனக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத சரியா?? வீட்டுக்கு போலாம்.. நீயும் தேவை இல்லாம டென்சன் ஆகாத.. எதுன்னாலும் பார்த்துக்கலாம்..”

“யார்வேணா என்னவேணா சொல்வாங்களாம், இந்த அம்மாவும் உடனே வான்னு சொல்லி கூப்பிடுவாங்களாம்.. என் ஹெட் கிட்ட லீவ் கேட்கிறதுக்குள்ள நான் பட்டபாடு எனக்கு தானே தெரியும்.” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் புலம்பியபடி, அடுத்த சிறிது நிமிடங்களில்  வீட்டில் கால் பதித்தாள் சௌபர்ணிகா..

ஆனால் மனதின் ஓரத்தில் “ஹப்பா!!! ஒருவழியா மாமா வேற இடத்தில சம்பந்தம் வச்சாரு.. “ என்ற நிம்மதியும் இருந்தது..

உள்ளே நுழையும் போதே கேசரி மணம் இவளை இழுத்தது.. சோபி எப்பொழுது ஊருக்கு வந்தாலும் இதே மணம் தான் அவளை வரவேற்கும். புனிதாவின் கேசரிக்கு மிக பெரிய விசிறி சோபி.. நெய்யின் வாசத்திலேயே கண்டுகொண்டாள் “ அம்மா அவ்வளோ டென்சனா இல்லையோ…”  என்று…

கையில் இருந்த பேக்கை ஹாலில் அப்படியே போட்டுவிட்டு, புனிதாவை தேடிப் போனவள், “அம்மா !!!!” என்று பின்னோடு  அப்படியே கட்டிக்கொண்டாள்..

“சோபி மா..” என்று அவரும் மகிழ்வாய் மகளின் முகத்தைப் பார்க்க,  

‘என்ன இவன் சொன்னதுக்கும் அம்மா முகத்துக்கும் சம்பந்தமே இல்லையே??’ என்று யோசித்தபடி, “என்னம்மா ஏன் உடனே வர சொன்ன?? எது.. எதுவும் பிரச்சனையா ??” என்று வினவ,

“பிரச்சனையா?? என்ன சோபி சொல்ற?? பிரச்சனை இருந்தா நான் ஏன் இப்படி ஆற அமர நெய் விட்டு கேசரி பண்ணிட்டு இருக்கப்போறேன்..” என்று புனிதாவும் கேட்க,  

அவர் சொல்வதும் சரிதானே.. கார்த்திக்  சொன்னது போல இருந்தால் இந்நேரம் புனிதா முகத்தை தூக்கி அல்லவா வைத்து இருப்பார் என்று தோன்றியதும் சௌபர்ணிகா,

“டேய்… எருமை.. கார்த்தி…” என்று தன் தம்பியை வசைமழை பொழிந்தபடி தேடினாள்.. அவள் பின்னே புனிதாவும்.

“என்ன சோபி ஏன் அவனை திட்டுற?? பாவம் உனக்காக எழுந்து வந்தான்ல..”

“என்ன எழுந்து வந்தானா?? அம்மா உன் மகன் வரும் போதே என் நிம்மதியை கெடுத்து தான் கூட்டிட்டு வந்தான்.. இப்பதான் புரியுது எல்லாம் அந்த கிறுக்கனோட கிறுக்குத்தனம்னு.. ஒருநிமிஷம் நான் எவ்வளோ டென்சன் ஆனேன் தெரியுமா..” என்றவள்,  வீடு முழுவதும் தேடினாள்..

அவன்தான் இவளை இறக்கிவிட்ட கையோடு மைதானத்திற்கு சென்றுவிட்டானே.. அவனுக்கு தெரியாதா கேசரியின் வாசத்தை வைத்தே தன் அக்கா கண்டுகொள்வாள் என்று…

“ஏய் சோபி… சோபி இரு டி.. என்ன வந்ததும் அவனை பிடிச்சு இப்படி பேசிட்டு இருக்க??” என்று புனிதாவும் விடாது கேட்டுக்கொண்டே வர,  மூச்சுவிடாமல் நடந்ததை கூறினாள்..

அனைத்தையும் கேட்டவருக்கோ முதலில் சிரிப்பு தான் வந்தது.. இது இன்று நேற்று நடக்கும் விசயமில்லை.. இவள் சென்னைக்கு வேலைக்கென்று சென்றதில் இருந்து நடப்பதுதான். வரும்போதே ஏதாவது கூறி சௌபர்ணிகாவை குழப்பிவைத்து தான் அழைத்துவருவான் வீட்டிற்கு வந்ததும் ஒரு பஞ்சாயத்து நடக்கும்.. இல்லையேல் இருவருக்கும் நிம்மதியாய் உறக்கம் வராது..

“என்ன சோபி அவனை பத்தி உனக்கு தெரியாதா, இதுக்கெல்லாம் போய் இப்படி டென்சன் ஆகலாமா???” என்று மகளை சமாதானம் செய்ய,  

“ம்ம்ச் போம்மா.. பாரு எவ்வளோ பொய்  சொல்றான்னு…” என்று சலித்தாள்..

“பொய் இல்லடா.. அவன் சொன்னதுல பாதிதான்  பொய்.. எங்க அண்ணன் மகனுக்கு நிச்சயம் இன்னும் ரெண்டு நாள்ல.. இதை சொல்லி உன்னை வர சொல்லனும்னு பேசிட்டு இருந்தேன்.. அதை கேட்டு இவன் உன்னை இப்படி டென்சன் பண்ணிட்டான்.. நீயும் ஊருக்கே வராம இருந்தியா அதான் எல்லாரையும் பார்த்தமாதிரி இருக்குமேன்னு உடனே வான்னு சொன்னேன்.. இல்லாட்டி நீயும் வந்திருப்ப பாரு..” என்று புனிதா எடுத்து சொல்லவும்,  சௌபர்ணிகாவின் கோவம் இப்பொழுது அடங்கி இருந்தது..

ஆனால் நிச்சயம் கார்த்திக்கை  கண்டதும் மீண்டும் குதிப்பாள் என்று தெரியும் புனிதாவிற்கு ஆகையால், “போ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு. கொஞ்ச நேரம் கழிச்சு குளிச்சிட்டு வா.. அதுக்குள்ள உங்காப்பாவும் வந்திடுவாரு.. “ என்று கூறிச்சென்றார்..

அப்பா என்ற சொல்லை கேட்டு சற்றே அடங்கி “வரட்டும் அவன்…” என்று முனங்கியபடியே சென்றாள்.

சிறிது நேரத்தில் கார்த்திக்  வீட்டிற்கு வந்தவன், மெதுவாய் வந்து புனிதாவிடம் “ம்மா சோபி எங்க??” என்று சத்தமே இல்லாது வினவ,

“டேய் ஏன்டா இப்படியெல்லாம் கதை விட்டிருக்க.. டென்சன் ஆகிட்டா..” என்றார் புனிதாவும்..

“அடடா.. சரி சரி நெக்ஸ்ட் டைம் சோபி டென்சன் ஆகாத கதை ஒண்ணு சொல்றேன்..” என்றவன் “அந்த பிசாசு வர்றதுக்குள்ள நான் குளிச்சிட்டு வர்றேன்..” என்று சென்றிட, அதுபோலவே வந்தவன்,     

“ம்மா இன்னும் ஒரே ஒரு பூரிம்மா..” என்று கெஞ்சாத குறையாக கெஞ்சிக்கொண்டு இருந்தான்..

அவனுக்கு பூரி என்றால் மிகவும் இஷ்டம். ஆனால் உண்டால்  சேராது, சிறு வயதில் இருந்தே இப்படிதான்.. அதனாலேயே புனிதா கொடுக்க மாட்டார்..  அவன் கெஞ்சி கொஞ்சி புனிதாவை சரிகட்டி தட்டில் இரண்டு பூரிகளை வாங்கி வைத்திருந்தான்,

அந்த நேரம் பார்த்து சௌபர்ணிகா வர, “டேய் எருமை…” என்று அவன் தலையில் தட்டி, அவன் திரும்பிய நேரம் பார்த்து அதை சோபி எடுத்து மற்றொரு தட்டில் போட்டு அதன் முன்னே அமர்ந்திட,

“ஏய் பிசாசு பூரி குடு..” என்று இவன் அதனை எடுக்கப் போக, அவளோ அதனை வேகமாய் சுருட்டி தன் வாயில் திணித்திருந்தாள்..  

சோபியின் முகத்தைப் பார்த்தவன், “பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கி திங்குமாம் அனுமாரு” என்று சிரிக்காமல் சொல்ல, வேகமாய் பூரிகளை விழுங்கியவள்,

“ஓ !! நீ பெருமாள் பிச்சை எடுத்ததை பார்த்தியா??? என்னவோ நீ தான் அவருக்கு போட்ட மாதிரி பேசுற…” என்றாள் வேகமாய்..

வீட்டில் சண்டிராணி தான் சோபி.. ஆனால் வெளியில் மற்ற ஆட்களின் முன்னும்,  அவளது தந்தையின் முன்பும் சௌபர்ணிகா எத்தனை அமைதி என்று அனைவரும் கூறும்படி அத்தனை சாந்த சொரூபியாய் இருப்பாள்..

“பாரும்மா.. இவளை போய் எல்லாம் நல்ல பொண்ணுன்னு வேற சொல்றாங்க.. எல்லாம் நேரம்.. பிடுங்கி திங்கிறா.. பிள்ளைய பெத்து வைக்க சொன்னா தொல்லைய பெத்து வச்சிருக்கம்மா..” என்று போகிற போக்கில்  சோபியின் தலையில் கொட்டிவிட்டு போனான்..

“டேய்… கோக்காலி… கொட்டுற.. இருடா தடி மாடு..” என்றபடி, அவன் வாசலை தாண்டுமுன் அவன் முதுகில் அடித்துவிடும் நோக்கில் அவன் பின்னே ஓட,

இவர்கள் ஓடி விளையாடவும் அவர்கள் தந்தை பரந்தாமன் வரவும் சரியாய் இருந்தது.. அவ்வளோ தான் அக்காவும் தம்பியும் அப்படியே அட்டென்சன் பொசிசனில் நின்றனர்.. சல்யுட் மட்டும் தான் இல்லை..  பரந்தாமன் மனதில் அன்பு இருந்தாலும் வெளியில் கண்டிப்பை மட்டுமே காட்டுவார்..

“ஏன் இப்படி??” என்று புனிதா கேட்டால் வீட்டில் யாரிடமாவது ஒரு பயம் இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்..

ஆடாது அசையாது லேசாய் அசடு வழிந்து நின்ற மகளைப் பார்த்து “எப்போ வந்த சோபி???”  எனவும்,  

“இப்ப.. கொஞ்ச நேரம் முன்னாடிதான் ப்பா வந்தேன்.. தம்பி தான் வந்து கூட்டிட்டு வந்தான்..” என்றாள் அடக்க ஒடுக்கமாய்..

என்னடா வீடு அமைதியாய் இருக்கிறது என்று அடுப்படியில் இருந்து எட்டி பார்த்த புனிதா தன் கணவரும் வந்துவிட்டதை கண்டு முன்னே வந்தவருக்கு,  பிள்ளைகள் இருவரும் பம்மி போய் நிற்பதை கண்டு லேசாய் புன்னகை அரும்பியது. ஆனால் இந்த மனிதரை பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டுமே என்று மனதில் எப்பொழுதும் தோன்றும் பரிதவிப்பு தோன்றாமல் இல்லை..

“நீ என்ன வாய் பார்த்துட்டு நிக்கிற ??” என்று கார்த்திக்கைப் பார்த்துக் கேட்க,

“இதோ.. கிளம்பிட்டுதான் ப்பா இருந்தேன்.. அப்படியே நீங்க வந்தீங்களா அதான்..” என்று திணறி முழிக்க,

“நான் வேர்ல்ட் டூரா போயிட்டு வர்றேன், அப்படி பார்த்துட்டு நிக்கிற.. கிளம்பு.. பஸ் போயிடும்..” என்று ஒரு அரட்டல் போடவும் அடித்து பிடித்து வெளியே ஓடினான் கார்த்திக்..

என்ன தான் அவனுக்கு அவன் விரும்பிய பல்சர் வாங்கி கொடுத்து இருந்தாலும், அவன் கல்லூரிக்கு போவது வருவது எல்லாம் கல்லூரி பேருந்தில் தான். இது பரந்தாமனின் முதல் கண்டிசன் கார்த்திக்  பைக் கேட்டதுமே..

“பைக் வாங்கித் தருவேன் ஆனா காலேஜுக்கு பஸ்ல தான் போகணும்…” என்று சொன்னதும் வேறு வழியே இல்லாது தலையை ஆட்டினான்..

“என் ஜூனியர்ஸ் எல்லாம் எப்படி வண்டில வர்றான் தெரியுமா ? வண்டியும் வாங்கி கொடுத்து, அதை ஓட்ட விடாம செய்றது பெருங்கொடுமை…” இது தினமும் அவன் செய்யும் புலம்பல்..

ஆனால் அந்த வார்த்தை எல்லாம் பரந்தாமன் முன்னே காற்றில் கரைந்துவிடும்.. அதே போலதான் சௌபர்ணிகாவும்.. எது சொல்வதாய் இருந்தாலும் புனிதாவிடம்  மட்டும்தான்..

கிளம்பவும், பரந்தாமனும் தன் அறைக்கு செல்ல, தம்பி போகும் வரை வாசலில் நின்று கையாட்டியவள் பிறகே உள்ளே சென்றாள். இதுதான் அவர்கள்.. சண்டை இருந்தாலும் அதிலும் ஒருவித அன்புதான் வெளிப்படும். அப்பாவின் முன் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதே இல்லை..

பரந்தாமனுக்கு உண்ணும் போது பேசினால் பிடிக்காது.. ஆகையால் அத்தனை நேரம் களேபரமாய் இருந்த வீடு, இப்பொழுது அமைதியாய் இருந்தது..

உண்டு முடித்து, அலுவலகம் கிளம்பாமல், மகளிடம் வந்து,  “சோபி எத்தனை நாள் லீவ் உனக்கு??” என்று கேட்டவரைப் பார்த்து,  ‘எதுக்குப்பா??!!’ என்று இயல்பாய் தோன்றும் எதிர்கேள்வி மனதினுள்ளேயே மறைந்தது

“ நாலு நாள் ப்பா..” என்றாள் சௌபர்ணிகா..

“ஹ்ம்ம்!! சரி “ என்ற யோசனையோடு உள்ளே போனவரை பார்த்துவிட்டு புனிதாவின் முகம் நோக்கினாள். புனிதாவின் முகத்தில் இருந்த பாவனையே  பரந்தாமன் பேச போகும் விஷயம் புனிதாவிற்கும் தெரியும் என்பது போல இருந்தது. தாயும் மகளும் அவரது வருகைக்காக காத்திருந்தனர்..

திரும்பி வந்தவரோ, அவளிடம் அமரவும், அவள் கேள்வியாய் பார்க்க, “சோபி உனக்கு சென்னைல தான் வேலை பார்க்கணும்னு எதாவது அவசியமா???” என்றார்..

‘ஏன் இந்த கேள்வி??’ என்ற எண்ணம் தோன்ற, அதை விழுங்கி,  “அப்.. அப்படி எல்லாம் இல்லைப்பா..” என்றாள் வேகமாய்..

“நல்லது.. அடுத்து நீ சென்னை போறப்போ நானும் வர்றேன்.. அங்க ரிசைன் பண்ணிடு என்ன?? ஹாஸ்டல் வெக்கேட் பண்ணிடு சோபி…” என்றதும், 

சௌபர்ணிகாவிற்கு திடுக்கென்று இருந்தது.. என்ன இது சொல்லாமல் கொள்ளாமல் வீட்டிற்கு வந்ததும் இப்படி சொன்னால் எப்படி என்றிருக்க,  ஒரு தைரியத்தை வரவைத்துக்கொண்டு “என்.. என்னப்பா திடீர்னு..??” என்று கேட்டாள்..

அவள் கேள்வி கேட்டதோ பரந்தாமனிடம், ஆனால் அவரது பார்வையோ புனிதாவிடம் இருந்தது..

“இப்போ தானேங்க வந்திருக்கா அதான் எதுவும் இன்னும் சொல்லலை..” என்று புனிதா மெதுவாய் சொல்ல,  

“ம்ம்ம்!!!” என்று தலையை ஆட்டியவர்  “சோபி மா… நானும் அம்மாவும் உனக்கு வரன் பாக்கலாம்னு முடிவு எடுத்திருக்கோம்.. நீ இங்க இருந்தாதான நல்லது. அதான் உன்னை வேலைய விட சொன்னேன்.. அதுவும் இல்லாம இன்னும் லேட் பண்ண கூடாது இல்லையா..” என்று மகளின் முகத்தைப் பார்த்தார்.

வார்த்தைகள் அன்பாய் இருந்தாலும் அவரது முகமும் குரலும் இது தான் என் முடிவு இதில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லாமல் சொன்னது. அன்பானவர்தான்… கண்டிப்பாய் இருப்பார்தான், ஆனால் எந்த ஒரு விசயத்தையும் பிள்ளைகளிடம் சொல்லாமல் செய்தது இல்லை.  ஆனால் இன்றோ அவரே ஒரு முடிவு எடுத்து சொல்ல,  சௌபர்ணிகா அமைதியாய் இருந்தாள்.

“என்ன சோபி அப்பா சொல்றாங்க அமைதியா இருக்க ??!!” என்று புனிதா கேட்கவும்,

‘இவ்வளோ நேரம் எங்கக்கூட இருந்துட்டு இப்போ அப்பா வரவும் அவருக்கு ஜால்ரா அடிக்கிறயாம்மா.. இரு நீ தனில சிக்குவ தான அப்போ வச்சிக்குறேன்.. அண்ணன் மகன் நிச்சயம்னு சொல்லிட்டு இப்போ நீ எனக்கு மாப்ள பார்க்க போறியா ??’ மனதிற்குள் கருவியவள்,

“இல்லமா அது வந்து…!!” என்று தயங்கியபடி தந்தையின் முகம் பார்த்தாள்..

“என்ன சோபி எதுவா இருந்தாலும் சொல்லு..”

“இல்லப்பா.. ஜாப் அங்க எனக்கு நல்லா செட்டாகிடுச்சு.. அதுவும் இல்லாம சாலரியும் நல்லா இருக்கு.. இப்போ திடீர்னு இந்த ரீசனுக்காக வேலையை விடனுமான்னு தான்….”

“ஓ!!! பாரு புனிதா நம்மக்கு தான் பிள்ளை பாசம்.. கல்யாணம் ஆகி போறவரைக்கும் நம்ம கூட கொஞ்ச நாள் இங்க இருக்கட்டும்னு ஆசை படுறோம்.. ஹ்ம்ம் சோபிக்கு இங்க பிடிக்கலை போல” என்று சென்டிமெண்டில் தாவினார் பரந்தாமன்…

“அய்யோ!! அப்படி எல்லாம் இல்லைப்பா.. நான் அந்த மாதிரி எல்லாம் நினைக்கலை..” என்று சோபி வேகமாய் மறுக்க,

“பின்ன என்ன சோபி.. அப்பா சொல்ற படி கேளு.. உனக்கு இங்கயே ஒரு வேலை வாங்கித்தர்றேன்… சொல்லப் போனா அதுக்கு நான் ஏற்பாடு எல்லாம் கூட பண்ணிட்டேன்.. அப்புறம் நாளைக்கு நல்ல நாள் வேற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்து அப்படியே தரகரை கூப்பிட்டு பேசிடலாம் என்ன புனிதா..” என்று மகளிடம் ஆரம்பித்து மனைவியிடம் முடித்தார்..

சௌபர்ணிகாவிற்கு புரிந்துவிட்டது இதற்கு மேல் அப்பா தன்னிடம் இதை பற்றி பேசமாட்டார் என்று.. தாயும் தந்தையும் பேசுவது காதில் விழுந்தாலும், அவளது எண்ணம் எல்லாம் இப்பொழுது அவனை பற்றியே…

‘நான் என்ன செய்யட்டும்… எத்தனையோ நாளா வேலையை காரணம் சொல்லி அங்கேயே இருந்துட்டேன்.. இப்போ நிலைமை கை மீறிடுச்சு.. நீங்க எங்கதான் இருக்கீங்க.. ஒருதரம்… ஒரே ஒரு தரம்  என் கண் முன்னாடி வந்தா என்ன?? ப்ளீஸ் ஒரே தரம் மட்டும் பார்த்தா கூட போதுமே.. நான் கண்டிப்பா என் மனசுல உள்ளது எல்லாம் சொல்லிடுவேன்..’ மானசீகமாய் அவனோடு பேசத் தொடங்கினாள் சௌபர்ணிகா..

அங்கே சர்வேஷின் வீட்டிலோ “ம்மா.. இட்ஸ் கெட்டிங் லேட்….” என்று தன் அன்னையை அவசர படுத்திக்கொண்டு இருந்தான்..

“என்ன சர்வா, கொஞ்சம் பொறுமையா இரு.. மூணு பேரும் ஒரே நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தா நான் என்ன செய்ய..?? ஒருத்தியா கிடந்தது அல்லாடுறேன்..” என்று மோகனா சொல்லியபடி வந்து அவனது தட்டில் தோசையை வைக்க,

“ம்மா, இனிமே தினமும் அண்ணனுக்கே சீக்கிரம் குடும்மா.. சார் இப்போ எல்லாம் ரொம்ப தான் சீன போடுறான்…” என்று வேண்டும் என்றே சர்வேஷை சீண்டினாள் ஸ்ரீநிதி.

அம்மாவையும் தங்கையையும் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் தட்டில் கவனம் செலுத்தினான் சர்வேஷ். முன்பெல்லாம் இந்த காலை நேர சாப்பாடு வேளை கலகலப்பாய் இருக்கும்..

ஸ்ரீநிதியும், சர்வேஷும் பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு என்று ஆர்ப்பாட்டமாய் தான் உண்ணுவார்கள்.. பதிலுக்கு பதில் சீண்டும் தன் அண்ணனை எண்ணினால் மகிழ்ந்து தான் போவாள் ஸ்ரீநிதி.

ஆனால் என்று இவன் படிப்பு முடிந்து வேலை விசயமாய் வெளிநாடு சென்றானோ, அப்பொழுது கூட நன்றாய் தான் இருந்தான். இங்கு வந்து சொந்தமாய் தொழில் தொடங்கி எல்லா பொறுப்புகளையும் தனதாக்கி கொண்டானோ அன்றிலிருந்து மாறிவிட்டான்..

பாசமாய் இல்லாமல் இல்லை.. பழைய துள்ளல் இல்லை. அந்த கலகலப்பு இல்லை.. எப்பொழுது எதோ யோசனை, ஒரு கணக்கிடல் இருந்துகொண்டே இருக்கும் அவனது பார்வையில்,, அவனது மனத்தில்.. என்னதான் ஸ்ரீநிதி பழையதை எண்ணி அவனிடம் பேசினாலும் ஓரளவிற்கு மேல் அவன் பழைய மாதிரி நடந்துகொள்ளவில்லை..

ஆனால் அவன் என்ன மாதிரி இருந்தாலும் மோகனா மட்டும் நினைத்ததை பேசிவிடுவார். அன்னை அல்லவா.. விஸ்வநாதன் கூட மகனிடம் சற்று எட்டி தான் நிற்பார்.. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை என்ற மரியாதை. ஆனால் அவனுமே எது செய்வதாய் இருந்தாலும் தந்தையிடம் கலந்துவிட்டு தான் முடிவெடுப்பான்..

இதில் எல்லாம் நடுவில் மாட்டிக்கொண்டு முழிப்பது ஸ்ரீநிதி தான்..

முன்போல அண்ணனிடம் நெருங்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் தவிப்பாள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவனும் தங்கையோடு இருப்பான் தான் ஆனால் நேரம் கிடைப்பதில் தான் பிரச்சனையே…

இருபத்தி நான்கு மணி நேரமும் எனக்கு போதவில்லை என்பதுபோல் இருந்தவனை காண்கையில் சில நேரம் ‘இவனை எல்லாம் ஏன் கடவுளே எனக்கு அண்ணனா கொடுத்த..?’ என்று ஸ்ரீநிதி கடவுளிடம் நொந்துகொண்டாலும், அவர்களின் பழைய வாழ்வை எண்ணி கொஞ்சம் ஆறுதல் பட்டுக்கொள்வாள்  

மோகனா தோசையை வைத்தபடியே “டேய் சர்வா, நான் சொன்னது என்னாச்சு?? யோசிச்சியா… ஷ்ரவன் கூட வந்து பேசினான் போல..” என்று வினவ,  

“ஹ்ம்ம்!! அம்மா நான் உன் பையன், என்கிட்டே பேசுறதுக்கு ஏன்மா நடுவில் அவனை இழுத்து விடுற?? அப்புறம் நீ சொன்ன விஷயம்… நல்லா யோசிச்சேன் ம்மா.. இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்.. முதல்ல ஸ்ரீக்கு பண்ணலாம்.. வீட்ல தங்கச்சி இருக்கும் போது எனக்கு ஏன் ம்மா முதல்ல..???” என்றான் நிதானமாய்..

மோகனாவின் முறைப்பை கண்டு நீங்கள் என்ன முறைத்தாலும் இதுதான் என் பதில் என்பது போல அவனும்  பார்த்தான்.. இவர்கள் முறைத்துக்கொள்வதை தந்தையும், மகளும் வேடிக்கை பார்த்தனர்..

“என்னங்க இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ?? இவனுக்கு என்ன நாளுக்கு நாள் வயசு குறைஞ்சுகிட்டே போகுதாமா ??? நீங்க சொல்ல கூடாதா ??” என்று அடுத்து மோகனா தன் கூட்டுக்கு கணவரை இழுக்க, அவர் பதில் சொல்லுமுன்னே,

இது தினமும் நடக்கும் விசயமாதலால் ஸ்ரீநிதிக்குக்கு இது பெரிதாய் தெரியவில்லை.. ஆனால் மனதில் ஒரு எண்ணம் அண்ணன் தன்னை முன்னிட்டு தான் திருமணம் வேண்டாம் என்று கூறுகிறானோ என்று.. ஆகையால்

“ம்மா, ப்பா நானும் சொல்றேன் கேட்டுக்கோங்க. இங்க பாருண்ணா உனக்கு கல்யாணம் வேண்டாம்னா அதுக்கான சாலிட் ரீசன் சொல்லு.. ஆனா ப்ளீஸ் தங்கச்சி இருக்கும் போதுன்னு மட்டும் சொல்லாத சரியா.. எனக்கு படிச்சு முடிக்கவே இன்னும் ஒரு வருஷம் இருக்கு.. ஐம் ஜஸ்ட் ட்வென்டி டு…  சோ, இதில் என்னை இழுக்காத..” என்று தெள்ளத் தெளிவாய் சொல்லிட,

அவள் இத்தனை தெளிவாய் பேசுவதை கேட்டு மெச்சாமல் இருக்க முடியவில்லை அவனால்..

ஆனாலும் வெளியில் காட்டமல் “அப்புறம் என்ன ம்மா?? நானும் என் முடிவை சொல்லிட்டேன். ஸ்ரீயும் அவ முடிவை சொல்லிட்டா. சோ, இப்போதைக்கு ஃப்ரீயா, நிம்மதியா இரு..”  என்று கூறிவிட்டு செல்லும் மகனை செய்வது என்று அறியாது பார்த்தார் மோகனா..

மகனிடம் தன் பேச்சு எடுபடவில்லை என்றதும்அவரது இயலாமை கோவமாய் மகளிடம் திரும்பியது..  “ஏய் ஸ்ரீ ஏன்டி இப்படி பேசுன?? பாரு அவன் என்ன சொல்லிட்டு போறான்னு.. கொஞ்சம் கூட இதெல்லாம் நல்லாவே இல்லை.. உன் கல்யாணத்தை சாக்கா வச்சு அவனுக்கு பொண்ணு பார்க்கணும் அப்படின்னு நான் நினைச்சா நீ இப்படி பேசிட்ட??” என்று பொரிய,

“அம்மா !! ப்ளீஸ்.. அண்ணனுக்கு தாராளமா பொண்ணு பாருங்க. கல்யாணம் பண்ணுங்க.. ஆனா அவன் கல்யாணம் இப்போ வேண்டாம்னு சொல்றதுக்கு என்னை காரணம் காட்டுற மாதிரி இருக்கு.. அதான் நான் அப்படி பேசினேன்.. நான் இங்க இருக்கும் போதே அண்ணன் கல்யாணம் நடந்ததுன்னா தான் என்னாலையும் நல்லா என்ஜாய் பண்ண முடியும்.. இதை எல்லாம் அவன்கிட்ட விளக்கி பேச, அவனுக்கு நேரமில்லை.. முதல்ல உன் மகனை வீட்டில் கொஞ்ச நேரம் இருக்க சொல்லு பாப்போம்..” என்று கூறி செல்லும் மகளின் வார்த்தைகளில் இருந்த நியாயம் அவரை வாயடைக்க வைத்தது..

கடைசியில் அகப்பட்டது பாவம் விஸ்வநாதன் தான்..

“என்ன அப்படி பாவமா பாக்குறீங்க?? பிள்ளைங்க கிட்ட பேசவேண்டியது தானே.. அப்பாவும் புள்ளையும் உட்கார்ந்து கணக்கு வழக்கெல்லாம் பார்த்து பேச தெரியுதில்ல. இதையும் பேசினா என்ன??” என்று அவரையும் பார்த்து நாலு வார்த்தை கேட்க,

“அவன்தான் இப்போ விருப்பம் இல்லைன்னு சொல்றானே.. அதுவும் இல்லாம ஸ்ரீக்கு இப்போதானே “ என்று ஆரம்பிக்க,  

“எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க நான் ஸ்ரீ கல்யாணம் பத்தி எல்லாம் பேச்சே எடுக்கலை.. இவனுக்கு தான் பேசுறேன்.. நீங்களே பாருங்க என் அண்ணன் வேற இடத்துல பார்த்துட்டார்.. எல்லாரும் கேட்கிறாங்க, அதுவும் இல்லாம பணம் காசு கூட கூட பசங்க நம்ம கண்ட்ரோல இருக்க மாட்டாங்க அப்படின்னு வேற சொல்றாங்க. எனக்கு என் மகன் என் கை குள்ள இருக்கணும்னு எல்லாம் ஆசை இல்லை ஆனா அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்கணுமா இல்லையா ??” என்று பேசி முடித்தார் மோகனா..

“ஹ்ம்ம் நீ எல்லாம் பேசிடுற மோகனா.. என்னால அது முடியலை.. நானும் அவன்கிட்ட பேசிட்டு தான் இருக்கேன். கொஞ்சம் விட்டு பிடிப்போம்.. உங்க அண்ணன் வீட்டு விசேசம் முடியட்டும்… நீ உன் உடம்பையும் மனசையும் போட்டு அலட்டிக்காத.. கொஞ்சம் ஆற விடு..” என்று விஸ்வனாதன் தன்மையாய் எடுத்து சொல்ல,

தாயும் தந்தையும் பேசிக்கொள்வதை எல்லாம் சற்று தள்ளி அமர்ந்து கேட்டுக்கொண்டு தான் இருந்தான் சர்வேஷ்.. தாயின் மனம் புரிந்தாலும் அவனுக்கு இப்பொழுது திருமணத்தை பற்றிய எண்ணம் இல்லை.. இன்னும் சிறிது நாட்கள்.. நாட்களா என்று அவனுக்கே தெரியாது, ஆனால்  இன்னும் சிறிது நாள் கழித்து யோசிப்போம் என்று அவனது திருமணம் பற்றிய யோசனையை கூட தள்ளி போட்டான்…  

 

 

Advertisement