Advertisement

சுகம் – 19

“அறிவு இருக்கா உனக்கு ???”

‘ஏன் உங்களுக்கு கொஞ்சம் வேணுமா???’

“இப்படியா விழுந்து வைப்ப ???”

‘வேற எப்படி விழறது ???’

“எப்ப பாரு எதா ஒரு யோசனை?? என்ன நினைப்புல கீழ இறங்கின ?? ”

‘எல்லாம் உன் நினைப்பு தான்டா….’

“சின்ன பசங்ககூட எஸ்கலேடர்ல ஒழுங்கா வர்றாங்க உனக்கென்ன வந்தது???”

‘உன் மேல காதல் வந்தது….’

“சௌபர்ணிகா!!!!” சர்வேஷ் போட்ட அதட்டலில் தன்னையே உலுக்கி விழித்தாள்..

“ஏன் டி நான் இவ்வளோ திட்டுறேன்.. கொஞ்சமாது சூடு சுரணை இருக்கா?? பிடிச்சு வச்ச மாதிரி இருக்க??? ” என்று சர்வேஷ் கேட்டு முடிக்கவில்லை

“ஆ!! ஐயோ!! அம்மா…… வலிக்கிதே… ஹா…. வலிக்கிது” என்று அலற தொடங்கிவிட்டாள்… இதை கண்ட சர்வேஷும் பதறி விட்டான்..

“சுபி.. சுபி ரொம்ப வலிக்கிதா?? இன்னொரு டைம் ஹாஸ்பிட்டல் போலாமா?? சுபி நான் நான் அழுத்தி பிடிச்சுட்டேனா???” என்று பதற்றமாய் வினவியவனை பார்த்து  இல்லை என்று தலை ஆட்டினாள்..

இவள் போட்ட சத்தத்தில் மோகனாவும் ஸ்ரீயும் கூட என்ன என்ன என்று அவர்களின் அறைக்குள் வந்தனர்.. அவர்கள் முன் சர்வேஷ் மடியில் கால் வைத்து அமர்ந்திருந்தது அவளுக்கு சங்கடமாய் போனது.. வேகமாய் இழுத்துக்கொள்ள போனவளை,

“ம்ம்ச் இப்படியே இருக்காட்டும்.. ஏற்கனவே ரொம்ப வலி உனக்கு அசைக்காத….” என்று சர்வேஷ் சொல்ல வேறு வழியில்லாமல் அப்படியே இருந்தாள் சோபி..

ஆம் அவன்தான் திட்டிக்கொண்டே காலுக்கு லேசாய் மருந்திட்டுக் கொண்டு இருந்தான்.. அதுவும் அவனது மடியில் வைத்து.. முதலில் அவள் தயங்கினாள் தான்.. அவன் பிடிவாதமாய் முறைக்கவும் ‘இந்தா வச்சுக்கோ..’ என்று அவன் கரங்களில் தன் கால்களை கொடுத்துவிட்டாள்.

மகன் மனைவி மீது காட்டும் கரிசனத்தை பார்த்த மோகனாவுக்கு மனம் நிம்மதியாகி போனது.. ஆனாலும் வெளிக்காட்டாமல் “என்ன சர்வா அழுத்தி மருந்து போட்டியா என்ன??? ஏன் சோபி வலிக்கிதா?? ” என்றார்..

“இல்ல அத்தை…”

“பின்ன ஏன் மா கத்தின??” என்று கேட்கவும் சோபி சர்வேஷின் முகம் பார்த்தாள்..

“என்ன சுபி ஏன் கத்தின?? வலிச்சா சொல்லு மறுபடியும் ஹாஸ்பிட்டல் போலாம்” என

“இல்ல இல்ல வேண்டாம்… ” என்றாள் வேகமாய்..

“பின்ன ஏன் அண்ணி கத்தினிங்க?? ”

“அது ஸ்ரீ, உன் அண்ணன் சூடு சுரணை இருக்கான்னு கேட்டாரா அதான் எனக்கு சுரணை இருக்குன்னு காட்ட கத்தினேன்.. சுரணை இருக்கிறவங்களுக்கு தானே வலி தெரியும்..” என்று விளக்கம் கொடுத்தவளை சர்வேஷ் உக்கிரமாய் பார்த்தான்..

மோகனாவும் ஸ்ரீயும் வந்த சிரிப்பை அடக்க பெரும் பாடு பட்டனர்.. எந்த நேரத்தில் என்ன பேச்சு இது என்று தோன்றினாலும் அவன் சொன்னதற்கும் இவள் செய்ததற்கும் சரியாய் தான் இருக்கிறது என்றும் நினைக்க, சௌபர்ணிகாவோ பாவமாய் முகத்தை வைக்க, சர்வேஷ் நிலை நாம் சொல்லவும் வேண்டுமா..  

“பாரும்மா, என்னை மட்டும் சொல்றீங்களே பொறுமையா போன்னு, இவ பண்றதுக்கு எல்லாம் என்னை எப்படி ரியாக்ட் பண்ண சொல்ற?? மால்ல அவ்வளோ கூட்டம், நான் அதை எல்லாம் விட்டு இவ விழுந்ததுமே பதறி போய் ஹாஸ்பிட்டலுக்கு துக்கிட்டு போயிட்டு வந்தா இவ சொல்றதை பாத்திங்கல்ல…” என்று பொரிய,

 “என்ன சர்வா நீ. அவளே வலியா இருக்கா.. அவ சுபாவம் இப்படி விடுப்பா…” என்றார் தன்மையாய்..

சர்வாவிற்கு சோபி விழுந்துவிட்டாள் என்றதும் பதற்றமாய் தான் வந்தான்.. அவளோ எழுந்து நிற்க கூட முடியாது கண்கள் கலங்கி இருக்க, யார் இருக்கிறார்கள் இல்லை என்று கூட பாராது அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்..   

இப்படி விழுந்திட்டாளே என்ற வருத்தம், பதற்றம், எதுவும் பெரியதாய் அடி பட்டிருக்க கூடாதே என்ற நினைப்பு, அதுவும் இல்லாமல் மாலில் சீசன் நேரத்தில் வேலையை கவனிக்க முடியாமல் போகிறதே என்ற எண்ணம்,  இதெல்லாம் சேர்த்து அவனை மிகவும் டென்சனில் ஆழ்த்தியது..

ஆனால் சோபியோ, தான் விழவும் தன் கணவன் அத்தனை பேரின் முன்னும் தன்னை தூக்கி சென்றது,  வீட்டிற்கு வந்தும் அவன் மடியில் காலை வைத்து மருத்துவர் கூறிய மருந்தை தேய்த்து விட்டது  இதெல்லாம் அவள் மனதில் சாரல் அடிக்க வைத்தது.. இப்படியே இவன் நம்மை கவனிச்சா எத்தனை தடவை வேண்டுமானாலும் விழலாம் என்று எண்ணினாள்.

ஆனால் அவன் திட்டிக்கொண்டே போகவும் தான் என்ன செய்வது என்று தெரியாமல் கத்திவிட்டாள் வலிக்கிறது என்று..  

“பாத்திங்களா மா.. நான் இவ்வளோ சொல்றேன் ஒரு வார்த்தை பதில் பேசுறாளான்னு.. ஆனா அடுத்தவங்க கிட்ட மட்டும் வாய் கிழியும்.. எப்பவுமே இப்படிதான் மா… நான் எது கேட்டாலும் நத்திங் சொல்லிடுவா ஆனா மனசுக்குள்ள பேசிட்டே தான் இருப்பா..” என்று  அவனையும் மீறி அவனது ஆதங்கம் வெளியானது..

மோகனாவும் ஸ்ரீயும்  ஆச்சரியமாய் பார்க்க, அவன் கூறிய வார்த்தைகளில் தெரிந்த ஏக்கம் சோபியை காதலாய் பார்க்க வைத்தது.

‘ச்சே இவனை போய் நான் எவ்வளோ பேசிட்டேன்.. மனசுல காதல் இல்லாமலா இவ்வள்ளோ படுறான். நான் தான் லூசு மாதிரி நடந்துகிட்டேன்.. இனிமே எல்லாத்தையும் சரி பண்ணனும்..’ என்று அவள் நினைத்துகொண்டிருக்க மோகனா மகனையும் மருமகளையும் சமாதானம் செய்வதாய் எண்ணி

“சோபிம்மா, அவன் இவ்வளோ சொல்றான்ல, வாய் திறந்து இனிமே அப்படி எல்லாம் இருக்கமாட்டேன்னு சொல்லு..” என்றார்.

அவள் பதில் கூறுமுன் சர்வேஷே மீண்டும் ஆரம்பித்தான்..

“அவ அப்படி எல்லாம் சொல்ல மாட்டாம்மா.. எப்பவுமே அவ பண்றது தான் சரி அவ செய்றது தான் சரி, அவ நினைப்பு தான் சரி. மத்தவங்க மனசுல என்ன இருக்குனு எல்லாம் மேடம் யோசிக்கவே மாட்டாங்க. ஏன்னா அவங்க மனசுல மட்டும் தான் உண்மையான அன்பு பாசம் எல்லாம் இருக்கும்.. இவ விழுந்துட்டான்னு கேட்டதும் ஒரு நிமிஷம் எனக்கு எதுவுமே ஓடல…. என்ன மாதிரி நான் பீல் பண்ணேன்னு எனக்கு தான் தெரியும்.. ஆனா இவ எவ்வளோ நக்கல் பார்த்தீங்களா?? சுரணை இருக்குன்னு காட்ட கத்தினாளாம்..  இவளை லவ் பண்ணி கல்யாணம் பண்ணேன்ல என்னை சொல்லணும்..  அதான் இவ்வளோ ஏத்தம்..” என்று   உணர்ச்சி மிகுதியில் உண்மையை உளறி இருந்தான்..

அவனுக்கே கூறிய பிறகு தான் தெரிந்தது என்ன கூறினோம் என்று.. படக்கென்று திரும்பி சௌபர்ணிகாவை பார்த்தான். அவளுமே அதிர்ச்சி கலந்த பார்வை தான் பார்த்தபடி திகைத்து அமர்ந்திருந்தாள்.. இருவரின் பார்வையும் அய்யயோ என்று பார்க்க,  

மோகனாவும், ஸ்ரீயும் கேட்கவே வேண்டாம், இவன் என்ன கூறுகிறான் என்று புரிந்துகொள்ளவே சில நேரம் பிடித்தது அவர்களுக்கு. முதலில் சுதாரித்தது ஸ்ரீ தான்..

“அண்.. அண்ணா நீ.. நீ என்ன சொல்ற???” என்று அதிர்வாய் கேட்க, 

அதற்குள் மாலில் இருந்து அவனுக்கு அழைப்பு வர, சர்வேஷ் உடனே அங்கே செல்ல வேண்டிய நிலை..  பேசி முடித்து வைத்தவன் சௌபர்ணிகாவை ஒரு பார்வை பார்த்தவன், பின்

 “ஸ்ரீ, நீ அண்ணிக்கு தேவையானதை பார்த்துக்கோ. நான் மாலுக்கு கிளம்புறேன். நிறைய வேலை இருக்கு.. சுபிம்மா பார்த்துக்கோ…” என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிளம்பி சென்று விட்டான்..

தனியே சிக்கிக்கொண்டது சௌபர்ணிகா தான்..

“ஐயோ!!இப்படி உளறிட்டு ஒடிட்டானே… என்னால வேகமா நடக்க கூட முடியாதே.. இவங்க எல்லாம் கேட்டா என்ன சொல்றது..” என்று புலம்பியபடி மோகனாவை பார்த்தாள்.

அவர் முகத்தில் தெரியும் பாவனை என்னவென்றே அவளுக்கு புரியவில்லை.. குழப்பம்.. ஆச்சர்யம் அதிர்ச்சி என்று எல்லாம் கலந்து கட்டி இருந்தது அவர் முகத்தில்..  நொடியும் தாமதிக்காமல் ஸ்ரீ கார்த்திக்கிற்கு மெசேஜிட, ஏற்கனவே சுபி விழுந்த சேதி அறிந்து அவளை காண கிளம்பி கொண்டிருந்த  பெற்றோர்களோடு அவனும் சேர்ந்து கிளம்பி வந்தான்..

அகபட்டுக்கொண்ட திருடன் போல விழித்தபடி அமர்ந்திருந்தாள் சோபி ஆயிரம் அர்ச்சனைகளை சர்வேஷிற்கு மனதில் செய்துக்கொண்டு..

எத்தனை வேகத்தில் உளரி கொட்டினானோ அதனை வேகத்தில் வீட்டிலிருந்து  தப்பி மாலுக்கு வந்து சேர்ந்தான்.. தீபாவளி கூட்டம் அலைமோதியது.. ஆனாலும் அவனால் முழு மனதாய் வேலை செய்ய முடியவில்லை. செய்யமுடியவில்லை என்பதை விட அதில் மனம் ஈடுபட மறுத்தது..

எத்தனையோ மனோதிடம் படைத்தவன் தான், ஆனால் இன்று எப்படி இப்படி உளறி தள்ளினான் என்று தெரியவில்லை. ஒருவேளை அவன் மனதில் இத்தனை நாள் இருந்தது ஒரு வேகத்தில் வெளிவந்ததோ என்னவோ.

ஆனால் எதுவாக இருப்பினும் இந்த நிலையில் அவளை மட்டும் தனியே விட்டு வந்தது தவறென்று தோன்றியது அவனுக்கு. என்ன வேலையாய் இருந்தாலும் அப்படி விட்டு வந்திருக்க கூடாது என்றே எண்ணினான்..

“தப்பு பண்ணிட்டோமே…” என்று யோசித்தவன் வினாடியில் முடிவெடுத்து அவனது மனைவிக்கு அழைத்தான்.. அவன் அழைப்பான் என்றே எதிர்பார்த்தாளோ என்னவோ முதல் ரிங்கிலேயே எடுத்தவள் பொரிந்து தள்ளிவிட்டாள்.. 

“ஸ்ஸ்… சரி சரி சாரி சுபி, தப்பு தான்.. அந்த செகண்ட்ல என்ன பண்றதுன்னு தெரியலை.. மால்ல இருந்து போன் வரவும் அப்படியே நான் கிளம்பி வந்துட்டேன்.. பட் ஐம் ரியலி சாரி டா…. நான் ஒரு அரை மணி நேரத்துல வர்றேன்.. ப்ளீஸ்.. அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ..”

….

“அம்மா எதுவும் கேட்டாங்களா ???”

“என்ன பேசலியா?? ஹ்ம்ம் யாருமே எதுவும் கேட்கலியா?? சரி விடு நான் வந்து பார்த்துகிறேன், யார் எது சொன்னாலும் அமைதியா இரு.. நான் பேசிக்கிறேன் நீ எதுவும் வருத்த படாத சுபி..”

….

“சரி… சரி… எனக்கு புரியுது… பட் இங்க ரொம்ப கூட்டம், கொஞ்ச நேரம் தான் வந்திடுறேன்.. லூசு இப்போ ஏன் அழற?? உன்னை யாரும் தப்பா நினைக்கமாட்டாங்க.. நான் தான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன்ல சுபி.. ”

….

“இங்க பாரு சுபி, இப்போ நம்ம ஒன்னா இருந்து இதை சமாளிக்கணும் அதான் முக்கியம்.. முன்ன நடந்ததை எல்லாம் விடு. நான் பேசினது, நீ பேசினது எல்லாம் போகட்டும் பழையது எல்லாம் விட்டுடு சுபி, இதுக்குமேலயும் என்னால இப்படி இருக்க முடியாது.. யு ஆர் மை வைப்.. புரியுதா.. நான் வந்திடுறேன்… ம்ம் சரியா…”        

இப்படியாக ஒருவழியாய் சௌபர்ணிகாவை சமாதானம் செய்து ஒருவழியாய் போனை வைத்தான் சர்வேஷ்.. ஆனால் சௌபர்ணிகா இத்தனை புலம்பியதற்கும் ஒரு காரணம் இருந்தது.. சர்வேஷ் அப்படி கூறவும் மோகனா ஒருவார்த்தை கூட பேசவில்லை, அதை பற்றி கேட்கவில்லை.. பேசாமல் எழுந்து சென்றுவிட்டார்..

சர்வேஷும் சென்றதுமே மோகனா எதுவும் பேசுவார் என்று பார்த்தவளுக்கு பெருத்த ஏமாற்றமே.. இப்படி முகம் திருப்பி சென்றது.. ஸ்ரீ எதுவோ பேச போனவளையும் “ஸ்ரீ… இப்போ எந்திருச்சு வர்றியா இல்லையா??” என்று மோகனா வெளி நின்றே அழைக்க,

அவளோ என்ன செய்வது என்றே தெரியாது சௌபர்ணிகாவை பார்த்தபடி எழுந்து வெளியே போனாள்.. 

இவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தான், மெதுவாய் தன்னால் முடிந்த அளவு எழுந்து வெளியே போக முயல, மீண்டும் உள்ளே வந்த மோகனா,

“இங்க பாரும்மா.. அவன் வர்றது வரைக்கும் அப்படியே இரு.. இல்லை அதுக்கும் எங்களை ஏதாவது சொல்லிட போறான்…” என்று சொல்லிச் செல்ல, அவளுக்கு அய்யோ என்றுதான் ஆனது..

எத்தனை அன்பான பெண்மணி இப்போது இப்படி பேசுகிறார் என்றதும் மனம் கலங்க, அனைத்து உணர்வுகளும் சேர்ந்து சர்வேஷ் மீது கோபமாய் திரும்பவும் தான் அவனுக்கு அழைத்துப் பேசினாள்..   

அவன் வரட்டும் என்று காத்திருக்க,  மகள் விழுந்த செய்தி கேட்டு, பரந்தாமன் புனிதா கார்த்திக் எல்லாம் வர,  வந்தவர்களுக்கு இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியாய் தான் போனது..

“என்ன அண்ணி சொல்றீங்க???!!” என்று புனிதா திகைத்துப் போய் கேட்க,

“உண்மைதான் இதை நானா கேட்கவும் இல்லை வேற யாரும் பேசவுமில்லை அவனே தான் சொன்னான்.. அதுவும்கூட சொல்லனும்னு சொல்லலை.. போற போக்குல பேசினதுபோல் பேசினான்..” என்று மனதில் இருப்பதை எல்லாம் கொட்ட,

பரந்தாமன் அப்படியே இறுகி போய் அமர்ந்திருந்தார்.. என்ன சொல்வது என்று தெரியவில்லை அவருக்கு.. கார்த்திக்கிற்கு ஓரளவு எல்லாம் புரிந்தாலும் இந்த நிலையில் பெரியவர்களை மீறி என்ன பேச முடியும் என்று இருந்தது.. விஸ்வநாதனும் ஒன்றும் பேசிடவில்லை..

மோகனா, புனிதாவிடம்  “நான் எத்தனை நாள் அவன்கிட்ட கேட்டிருப்பேன் தெரியுமா.. புனிதா, கல்யாணம் பண்ணு கல்யாணம் பண்ணுன்னு, அப்போல்லாம் தங்கச்சிக்கு முதல்ல பண்ணுங்கன்னு சொல்வான்.. சரி பொறுப்பா பேசுறான்னு நானும் நினைப்பேன் ஆனா அதுக்கான காரணம் இப்போதானே தெரியுது.. ஒரு வார்த்தை நம்மக்கிட்ட சொன்னா நம்ம என்ன வேண்டாம்னா சொல்லிருக்க போறோம். யாருக்குமே சொல்லாம இப்படி எல்லாம் மறைச்சு கல்யாணம் பண்ணனுமா…” என்று அங்கலாய்த்தார்..

வெளியே பேச்சுக்குரல் கேட்டதுமே சௌபர்ணிகா மெதுவாய் முயன்று வெளியே வர, கார்த்திக் அவளைப் பார்த்தவன் வேகமாய் போய் கை பிடித்து அழைத்து வந்து அமர வைத்தான்.. வந்தவர்களை வாங்க என்று கேட்பதற்கு கூட அவளுக்கு வாய் திறக்க முடியவில்லை..

புனிதவும் பரந்தாமனும் பார்த்த பார்வையில் அப்படியே தலை குனிந்து அமர்ந்துகொண்டாள்..  மோகனா பேச பேச, 

“ஐயோ அத்தை எனக்கே கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரியும்..” என்று சொல்லத் துடித்தாலும் அவளால் அனைவரின் முன்னும் தைரியமாய் வாய் திறந்து பேசிட முடியவில்லை..

புனிதாவுமே மகளிடம் திருமணதிற்கு போராடியவர் தானே.. எத்தனை முறை கேட்டிருப்பார், மகள் மனதில் காதல் இருக்குமோ என்று எத்தனை நாள் உறக்கம் இல்லாமல் இருந்திருப்பார். ஆனால் அதை எல்லாம் அவள் பார்த்திருந்தும் எதுவும் கூறாமல் கமுக்கமாய் கல்யாணம் முடித்துவிட்டாளே என்ற வருத்தம் அவரிடம் இருந்தது..

சரி சென்னையில் இருந்து வந்தபோது தான் சொல்லவில்லை.. ஆனால் சர்வேஷிடம் வேலைக்கு என்று சேர்ந்தபின்னே அதன் பிறகு இரண்டு குடும்பங்களும் பழகும்போது கூட சொல்லியிருக்கலாம் தானே என்று எண்ணியவர், சௌபர்ணிகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் இருந்தார் புனிதா..

இப்படி யாரும் தன்னிடம் பேசாமல் இருப்பதே சௌபர்ணிகாவிற்கு நரகமாய் இருந்தது.. என்னவென்று கேட்டால் கூட இன்னதென்று கூறிவிடலாம் ஆனால் எதுவும் கேட்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு கற்பனை குதிரையை கழட்டி விட்டு பேசுவது இன்னும் வருத்தமாய் இருந்தது..

கார்த்திக்கும் ஸ்ரீயும் பார்க்கும் ஆராய்ச்சி பார்வை வேறு, அதை எல்லாம் விட பரந்தாமன் முகத்தில் தெரிந்த பாவனை, எதுவுமே பேசாமல் இருந்த விஸ்வநாதனின் தோற்றம் எல்லாம் சௌபர்ணிகாவை கலக்கமுற செய்தன..

யாரும் அவளுக்கு அடிபட்டது பற்றிக்கூட கேட்கவில்லை.. சிரமம்பட்டே தானே நடந்துவந்தாள் அப்போதுகூட ஒன்றும் கேட்காமல் அவர்களாய் பேசிக்கொண்டு இருந்தானர்..

என்னவோ ‘காதல்…’ என்றதை இன்னமும் அவர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை.. இருவரையும் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைக்க இத்தனை பாடுகள் பட்டிருக்க இவர்களோ காதல் என்றதும் பெரியவர்களுக்கு அது பெரும் மன மாற்றத்தை கொடுத்தது..

“கம் சூன்…” என்று கணவனுக்கு குறுந்தகவல் அனுப்பினாள். அவளால் இந்த மௌனத்தை தாங்க முடியவில்லை.. யாரவது கேள்வி கேட்டாளாவது பரவாயில்லை என்றே தோன்றியது. எத்தனை நேரம் இப்படி அனைவரின் முன்னும் என்னவோ தவறு செய்தது போல் தலை குனிந்து அமர்ந்திருப்பது.. மிக மிக சங்கடமாய் உணர்ந்தாள்..

கார்த்திக் பொறுத்துப் பார்த்தவன் இப்படி யாரும் பேசாமல் இருக்கவும் “சோபி ரொம்ப வலிச்சா ரூமுக்கு கூட போய் படு..” என்றான் இன்னமும் இலகு ஆகாத குரலில்..

“ம்ம்ஹும்…” என்று தலையை மட்டும் அசைத்து அவள் மறுக்க,

“இல்ல நீ வா..” என்று அவளது கரங்களைப் பற்றியவன் கொஞ்சமா பிடிவாதமாகவே மீண்டும் அறைக்கு அழைத்துச் சென்றான். அவளுக்குமே கூட இப்படி அமர்ந்திருக்க,  அறையில் தனியே கூட இருந்துவிடலாம் என்று தோன்றவும் சரி என்று அறைக்கு வந்தாள்..  

புனிதாவிற்கு என்ன தோன்றியதோ அவள் பின்னேயே வந்தவர்,  “சோபி, இதை நாங்க கொஞ்சம்கூட எதிர் பார்க்கல, எத்தனை முறை கேட்டிருப்போம் உன்கிட்ட கல்யாணத்துக்கு.. அப்போல்லாம் எவ்வளோ காரணம் சொன்ன.. நீ சொன்னது எல்லாத்தையும் நம்பினோமே.. ஆனா இப்படி ஒரு விஷயத்தை மறைச்சு எப்படி சோபி?? சரி கல்யாணம் முடிவான பிறகாவது சொல்லிருக்கலாமே..” என்றார் குற்றம் சாட்டும் பார்வையில்..

“அம்மா இல்லைமா.. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லைமா..” என்று சொல்லும்போதே கண்கள் கலங்கிவிட்டது சௌபர்ணிகாவிற்கு…

“அதான் நாங்க நினைக்கிற மாதிரி இல்லைன்னு காட்டிட்டியே டி.. உங்கப்பாக்கு உன்னை நினைச்சு எவ்வளோ பெருமை தெரியுமா, நம்ம பொண்ணு இவர் தான் மாப்பிளைன்னு காட்டினதும் மறுப்பேதும் சொல்லாம சம்மதிசான்னு, ஆனா நீ முன்னமே இவர்தான் மாப்பிளைன்னு முடிவு பண்ணித்தானே எல்லாம் பண்ணிருக்க..”

“அம்மா அப்படியெல்லாம் இல்லைம்மா.. ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..” என்று அழவே தொடங்கிவிட்டாள்..

கார்த்திக்கிற்கு பாவமாய் இருந்தது அவளை பார்க்க.. சடுதியில் அழும் ரகமில்லை அவள்.. பொதுவாய் உணர்வுகளை எல்லாம் தனக்குள்ளே அடக்குவாள் என்பது தெரியும்.. ஆனால் இப்போது அவள் இப்படி கலங்கிப் போய் நிற்பதும் எப்படியோ இருந்தது..

“ம்மா ப்ளீஸ்.. கொஞ்சம் அப்புறம் கூட பேசலாம்…” என்று சொல்ல,

“என்னடா என்ன சொல்ற?? இனி எப்புறம் பேச இதை.. அதான் எல்லாம் பண்ணி கல்யாணமும் முடிச்சிட்டாளே.. நீயும் பார்த்த தான நம்ம எத்தனை டைம் கேட்டிருப்போம் உன் மனசுல எதுவும் விருப்பம் இருக்கான்னு.. ஏன் நீதானே அன்னிக்கு வீட்ல கேட்ட.. அப்போல்லாம் ஒருவார்த்தை சொன்னாளா?? அப்படி என்னடா கமுக்கம்…?” என்று பொரிந்தார் புனிதா..

சௌபர்ணிகாவிற்கு இப்போது காலில் இருக்கும் வலியைவிட மனம் வலித்தது எனலாம்.. எது பேசினாலும் அது தவறான அர்த்தம் கொண்டு பதில் பேசினால் அதற்கு அவள் என்ன செய்வாள்??

அறைக்கு வந்தபின்னும் கூட அமைதியாய் இருக்க, கார்த்திக் தான் ஒருவழியாய் புனிதாவை வெளியே அழைத்துச் சென்றான்..

நல்லவேளை  சரியாய் அந்நேரம் பார்த்து சர்வேஷும் வந்திட, அவன் கண்கள் சௌபர்ணிகாவைத் தான் முதலில் தேடியது.. என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு அவன் யூகிக்க, முதலில் வந்திருந்தவர்களைப் பார்த்து,  “வாங்க மாமா, வாங்க அத்தை, ஹாய் கார்த்திக்…” என்று வரவேற்றான். சம்பிரதாயமாய் அவர்களும் தலையை ஆட்டினர்.

ஒருநொடி தயங்கி நின்றவன், வேறு யாரிடமும் பேசாமல் நேராய் தன் அறைக்குச் சென்றான்.. மோகனா விஸ்வநாதன் எல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தனர்.. சரி மகன் நின்று என்ன ஏதென்று கேட்பான் என்று பார்த்தால் இப்படி அவனும் உள்ளே செல்வதை கண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,

அங்கே உள்ளே சென்றவனோ கட்டிலில் குப்புற படுத்திருக்கும் சௌபர்ணிகாவை காண மனம் மிகவும் வலித்தது அவனுக்கு.. அனைத்தும் தன்னால் தானே என்று தோன்ற “சுபி…” என்றான் மென்மையாய்..

அவ்வளவு தான் அவனது குரல் கேட்டதும், பட்டென்று நிமிர்ந்தவள், காலில் பட்டிருக்கும் அடி, அவளது வலி எல்லாம் மறந்து “சர்வா…” என்று வேகமாய் எழ,

அவனும் “ஹேய் பார்த்து..!!” என்றபடி அவளருகே வர, எழுந்தவள் வேகமாய் அவனை கட்டிக்கொண்டாள்.. கட்டிக்கொண்டவள் மீண்டும் அழத் தொடங்க,

“என்ன சுபி ரொம்ப வலிக்குதா..?? ” என்றான் மிருதுவாக..

“நா… நான் ரொம்ப பயந்துட்டேன் சர்வா.. எல்லாரும் என்னவோ நம்ம தப்பு பண்ணது போல பார்க்கவும் ரொம்ப அசிங்கமா போச்சு…” என்று உதடுகள் நடுங்கச் சொல்ல,

“ஷ்…” என்று கண்களை இறுக மூடித் திறந்தவன், “உன்னால இப்போ வெளிய நடந்து வர முடியுமா??” என்றான்..

“எ.. எதுக்கு??”

“ம்ம்ச்.. பின்ன.. பேசித்தான் ஆகணும் சுபி.. உன்னால நடக்க முடியுமா??” என,

“ம்ம்…” என்றாள் மெதுவாய்..

“சரி வா…” என்றவன், அவளை கை தாங்கலாய் மெதுவாய் அழைத்துச் சென்று அமர் வைத்துவிட்டு, அவளருகே அமர்ந்தான்.. இத்தனை நேரம் சோபியிடம் அத்தனை பேசியவர்கள் எல்லாம் இப்பொழுது மௌனம் காத்தனர். ஆனால் எத்தனை நேரம் தான் யாரும் எதுவும் பேசாமல் இருப்பார். மோகனாவிற்கு பொறுக்கவே முடியவில்லை..

“என்னடா வந்து ஒண்ணுமே தெரியாதவன் போல உட்காந்து இருக்க ?? இன்னும் எதை மறைக்க நினைச்சு இருக்கீங்க ரெண்டு பேரும்??” என்று கேட்டிட,

“அம்மா !!!!” என்றான் சர்வா அழுத்தமாய்..

 

 

 

 

                                      

 

    

        

 

 

 

 

 

Advertisement