Advertisement

சுகம் – 18

நாட்கள் போனதுதான் மிச்சம்.. ஆனால் சர்வேஷிடமோ இல்லை சௌபர்ணிகாவிடமோ எந்தவிட மாற்றமும் இல்லை.. ஆனால் வீட்டினர் முன்னர் இயல்பாய் இருப்பதுபோல் காட்டினாலும் அவர்களின் இந்த மாற்றம் யாருக்கும் தெரியாமல் இருக்குமா என்ன??

விஸ்வநாதன் மகனிடம் பேச முயல அவனோ வேலை வேலை வேலை என்று ஓடத் தொடங்கிட்டான்.. இதெல்லாம் காணப் பொறுக்காத ஸ்ரீநிதியோ வழக்கமாய் தன் நண்பனிடம் சொல்ல,, அவனுக்குமே முதலில் அதிர்ச்சியாய் வருத்தமாய் இருந்தாலும் பின் இதில் சற்று பொறுமை தேவை என்றெண்ணி பொறுப்போம் என்றிருந்தான்..

“கார்த்திக், நீ சொன்ன மாதிரி நானும் ஒருவாரம் பொறுமையா இருந்துட்டேன் டா.. ஆனா அண்ணா அண்ணிகிட்ட எந்த சேஞ்சும் இல்லை..” என்று சோகமாய் பேச பதிலுக்கு கார்த்திக்கோ

“என்ன ஸ்ரீ சொல்ற.. ஆனா சோபி எங்கக்கிட்ட எல்லாம் நல்லாதான போன் பேசுறா.. மாமாவும் நல்லா தான் பேசினார்.. எனக்கு என்னவோ ஏதும் இருக்காதுன்னு தான் தோணுது..” என்றான்

கல்லூரியின் மதிய உணவு நேரத்தில் தான் இந்த இரண்டு உடன் பிறப்புகளும் தங்கள் உடன் பிறப்புகளின் வாழ்க்கை பற்றி கலந்தாலோசனை நடத்திக்கொண்டு இருந்தனர்..

“லூசு மாதிரி பேசாதடா.. நீ உங்க வீட்டில் இருந்துகிட்டு பூத கண்ணாடி வச்சா பார்த்த.. நான் அங்கயே இருக்கேன் எனக்கு தெரியாதா? அம்மா கூட அண்ணிக்கிட்ட கேட்டாங்க ஆனா இந்த அண்ணன் இருக்கானே அவங்களை அண்ணிக் கிட்ட பேசவே விடமாட்றான்.”

“ஓ !!!!”

“என்ன ஓ !!! எங்க அண்ணன் இப்படி இருக்கிறது கூட எனக்கு பழகிடுச்சு, ஆனா அண்ணி.. எனக்கு அண்ணி ஆகுறதுக்கு முன்னமே ரொம்ப பிடிக்கும். அவங்க இப்படி டல்லா இருக்கிறது சுத்தமா நல்லாவே இல்லை. அம்மா அப்பா எல்லாம் வருத்தபட்டாங்க தெரியுமா… ”

கார்த்திக்கிற்கு இதை கேட்கும் போது மனம் சற்றே நிம்மதி அடைந்தது. பரவாயில்லை சோபி நல்ல இடத்தில் தான் வாழ்க்கை பட்டிருக்கிறாள் என்று நிம்மதி கொண்டது அவன் மனது. ஆனாலும் பிறர் தன் அக்காவின் மீது அன்பாய் பாசமாய் இருந்து என்ன செய்ய??  இருக்க வேண்டியவன் அப்படி இருக்கவேண்டுமே.

“ஹ்ம்ம் இதை நம்ம அவங்ககிட்டயும் கேட்க முடியாதே ஸ்ரீ.. அதான் யோசனையா இருக்கு.. ”

“எனக்கும் அதேதான் கார்த்திக்..”

“ஹ்ம்ம் சரி ஸ்ரீ நான் ஈவ்னிங் அங்க வர்றேன்.. நேரடியா எதுவும் கேட்டுக்கவேண்டாம். அத்தையை வைச்சு மூவ் பண்ணுவோம். அப்போதான் ரெண்டு பேருமே வாய் திறக்க முடியாது..” என்று ஒரு யோசனை சொல்ல,

“பரவாயில்ல கார்த்திக் உனக்கு கூட கிட்னி வேலை செய்யுது…” என்றாள் ஸ்ரீநிதி..

“என்ன செய்ய குடும்பத்தில யாராவது ஒருத்தருக்காவது வேலை செய்யணுமே.. வாய் அடிக்காம நடக்கிற வேலையை பாரு ஸ்ரீ.. எக்ஸாம் வேற இப்போதான் வரணுமா.. கடுப்பா இருக்கு…”

“நோ நோ கார்த்திக் கடுப்பெல்லாம் நீ ஆகவே கூடாது.. நமக்கெல்லாம் அது செட்டே ஆகாது.. அடுத்தவங்களை கடுப்பேத்தினா தான் அது கார்த்திக்…”

“இல்லைனா….. ???”

“இல்லைனாலும் நீ கார்த்திக் தான்டா.. உனக்கு வேற பேரா வைக்க முடியும். உன் மூஞ்சிக்கு ஒரு பேரு போதும்..”

இப்படியாக நண்பர்கள் இருவரும் பேசியபடி வகுப்பிற்கு செல்ல, அங்கே வீட்டில் இருந்த சௌபர்ணிகாவோ தன் விரல் நகத்தை கடித்து துப்பி ஒரு வழி செய்துகொண்டு இருந்தாள்.. காரணம் வேறு யாராய் இருக்க முடியும் சர்வேஷ் தான்.. இத்தனை நாள் மதிய உணவிற்கு வராதவன் இன்று வந்திருந்தான். அவனது சத்தம் கேட்டு இறங்கி வந்தவளை கண்டுக்கொள்ளாமல், அன்னையை பரிமாற சொல்லி உண்டுகொண்டிருந்தான்..

“ஏன் சர்வா சோபி தான் வந்தாளே, அவளை போட சொல்ல வேண்டியது தானே.??”

“ஏன்ம்மா எனக்கு சாப்பாடு போட உனக்கு  கசக்குதா என்ன ??”

“டேய் என்னடா இப்படி சொல்ற.. புதுசா கல்யாணம் ஆனவங்க. அவளுக்கு ஆசை இருக்காதா என்ன ?? அதான் சொன்னேன்…”

“இதுக்கு முன்ன நீதான போட்ட.. கஷ்டமா இருந்தா இனிமே மாலுக்கு கொடுத்துவிடுங்க, நான் வீட்டுக்கே வரல…” என்று பேசியபடி அவன் உண்ண

இவையனைத்தும் சௌபர்ணிகாவின் காதிலும் விழுந்தது.. விழ வேண்டும் என்று தான் அவன் கூறியதே. மோகனாவோ பாவமாய் மருமகளை ஒரு பார்வை பார்ப்பதும் பின் மகனுக்கு என்ன வேண்டுமோ அதை பார்த்து வைப்பதுமாய் இருக்க  

‘ரொம்ப ஓவரா போறானே.. எப்படி நிறுத்துறது.. அத்தை முன்ன எதுவும் பேசவும் முடியாது.. தனியா பேசவும் இவன் வாய்ப்பு கொடுக்கிறது இல்ல.. சோபி யோசி… இவனை எப்படியாது மலை இறக்கணும்.. நானும் ஒண்ணும் இப்படி சன்னியாசினியா இருக்க கல்யாணம் பண்ணலையே.. மாட்டுவடா நீ…’ என்று தன்போக்கில் எண்ணியவள் மீண்டும் அவர்களின் அறைக்குச் சென்று  குறுகும் நெடுக்குமாய் நடந்துகொண்டு இருந்தாள்..   

உணவு முடிந்து அறைக்கு வந்தவன் அவளை கண்டும், காணாத பாவனையை வீசி சென்றான்.. அதை பார்த்து இன்னும் உள்ளம் கொதித்தது.. நடந்து கொண்டு இருந்தவள் பேசாமல் ஒரு ஓரமாய் நிற்க அவளின் உள்ளமோ

‘ஹா!!! சோபி உன்னையவே இவன் சுத்தல்ல விடுறானே.. புருசனா போயிட்டான்.. இல்லை கண்டிப்பா பேதி மாத்திரை தான்.. ச்சே இவன் பேசாம இருந்தாலும் கஷ்டமா இருக்கே..’ என்று கடிய,

வேண்டுமென்றே சர்வேஷ் அவளை கடுப்பேற்றும் வகையில் அவள் முன்னே வந்து நின்று எதுவோ செய்து கொண்டு இருந்தான்.. சௌபர்ணிகாவிற்கும் அவனுக்கும் இரு விரல் அளவே இடைவெளி இருந்தது.. முதலில் இதை உணராதவள் உணர்ந்தபின் விழிகள் விரித்தாள்…

பின்னே சுவரில் இதற்குமேல் ஒட்ட முடியாது. பக்கவாட்டில் திரும்பினால் கட்டிலில் தான் விழ வேண்டும் அது இன்னும் கேவலம். முன்னே நகர்ந்தால் அவன் மீதே மோத வேண்டும்.. என்ன செய்வது எப்படி நகர்ந்தாலும் அவன் மீது தான் உரச வேண்டும்.. அவளின் அருகே அத்தனை நெருக்கமாய் நின்றிருந்தவனோ இது எதையுமே அறியாதவன் போல அதையோ போனில் நொண்டிக்கொண்டு இருந்தான்..

“ஐயோ படுத்துறானே…” என்று எண்ணியவளுக்கு  அவனின் அருகாமையும், நெருக்கமும் அவளை இன்னும் அவன்பால் ஈர்த்தது என்னவோ உண்மை தான்..

“கண்டுக்கிறானா பாரேன்…” என்று கடிந்தவள், அவனது அழகை ரசிக்க தொடங்கினாள்.. “ஒருவேளை இப்படிதான் அவனுக்கும் அன்னிக்கு ஹார்மோன்ஸ் ஹார்மோனியம் வாசிச்சிருக்குமோ??? நான் தான் ரொம்ப ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேனோ???”

இப்படியெல்லாம் அவளது யோசனை பலவாறாய் இருக்க சர்வேஷின் “அம்மா!!!” என்ற குரலில் திடுக்கிட்டு முழித்தாள்.. மோகனாவோ உள்ளே வராமல் வெளியே இருந்தே என்னவென்று குரல் கொடுக்க, சர்வேஷ் தன் மனைவியை கிண்டலாய் ஒரு பார்வை பார்த்தபடி

“ரூம்ல பல்லி நிறைய இருக்குமா சுவர் எல்லாம் பல்லி ஒட்டிக்கிட்டே அழையுதும்மா.. பார்த்து ஏதாவது மருந்து வைங்க” என்றானே பார்க்கலாம்..

அவ்வளோதான் சௌபர்ணிகா காளியாய் மாறிவிட்டாள். ”நான்.. நான் பல்லியா ???” கோவத்தில் மூச்சு வாங்கியது.. அவளையே மேலிருந்து கீழ் பார்த்தவன் தோளை குலுக்கிவிட்டு சென்றான்..

‘என்ன திமிர் இவனுக்கு.. இப்படி திமிரா இருக்கிறவனை எல்லாம் திகார்ல போடணும்…’ என்று எண்ண பின் தானே தன் தலையில் குட்டிக்கொண்டாள்.. ஆனாலும் அவனை விடுவதாய் இல்லை..

“பேசிட்டு இருக்கேனே இப்படி போனா என்ன அர்த்தம்??”

“போறேன்னு தான் அர்த்தம்… ” இடக்காய் வந்தது பதில் சர்வேஷிடம் இருந்து.. அவன் முன்னே வந்து நின்றவள் “என்ன தைரியம் உங்களுக்கு  மருந்து அடிக்க சொல்றீங்க..?? ” என்று இன்னும் விழிகளை உருட்டி மிரட்டினாள்.

“பல்லிக்கு தானே சொன்னேன்…”

“என்னை அப்படி நிக்க வச்சது நீங்க தான்…. ”

“நானா??? வாட் எ ஜோக்.. என் விரல் நுனி கூட உன்மேல படல பின்ன எப்படிம்மா…??? கனவா என்ன?? இல்லை வயசு கோளாறா?? ஆனா அதெல்லாம் உனக்கு வர வாய்ப்பில்லையே…. ” என்று அவளை மேலும் கீழுமாய் பார்க்க.

“போதும் அவ்வளோ தான் உங்க லிமிட்…. ” என்று கைகளை உயர்த்தினாள்.

“நான் என் லிமிட்டை கிராஸ் பண்ணவே இல்லியே..” என்று உதடு பிதுக்கினான் அவன்..

‘ஐயோ இப்படி பதிலுக்கு பதில் பேசுறானே… முன்னெல்லாம் கோவமா எதா சொல்லிட்டு போயிடுவான்.. இப்படி வாயடிக்கிறான்.’ என்று முணுமுணுக்க,

“வாட் ???!!” என்றான் எரிச்சலாய் கேட்பதுபோல்..

அவன் அப்படி கேட்ட நொடி அவளும்  “நத்திங்…. ” என்றிட,  அடுத்த நொடி இருவரின் பார்வையுமே மாறியது.

அவனது முகத்தில் தெரிந்த கேலி கிண்டல் மறைந்து காதல் மலர்ந்தது.. இந்த நத்திங்கில் விழுந்தது தானே அவன்.. சௌபர்ணிகாவுமே பழைய நினைவுகளில் தன்னை தொலைத்தாள் எனலாம்..

இருவரின் மோன நிலையும் எத்தனை நீடித்ததோ தெரியவில்லை சர்வேஷின் கை பேசி அழைக்க அதில் கலைந்தனர்.. ஆனாலும் அவன் நகர்வதாய் இல்லை.. எப்படி நின்றானோ அதே நிலையில் தான் பேசினான்.. அவள் தான் குழம்பினாள், நிற்பதா நகர்வதா என்று??

ஆனால் பேசியது அவளது தந்தை என்று தெரியவும் நகரவில்லை சோபி.. விஷயம் வேறொன்றும் இல்லை இன்னும் பத்து நாட்களில் தீபாவளி வருகிறது, இவர்களுக்கு தலை தீபாவளி ஆகிற்றே அதான் அழைக்க வருவதை பற்றி கூற பரந்தாமன் அழைத்திருந்தார்..

சர்வேஷ் பேசிவிட்டு அவளிடம் கொடுக்க, அவளும் தந்தையோடு பேசிவிட்டு வைத்தாள். மனதிற்குள் சந்தோசமாய் தான் இருந்தது ஆனாலும் இவன் என்ன சொல்வானோ என்று எண்ணும் பொழுதே உள்ளே நடுக்கமாகவும் இருந்தது..  தன் மீது இருக்கும் கோபத்தை இதில் காட்டினால் என்ன செய்வது என்ற யோசனையோடு சர்வேஷை நோக்கினாள். அவனோ எதுவும் கேட்காமல் என்ன என்பதுபோல் புருவத்தை மட்டும் உயர்த்தினான்..

“இல்ல தலை தீபாவளிக்கு கூப்பிட வர்றாங்கலாம்… அதான்…” என்று பார்வையை மட்டும் அவன் மீது திடமாய் செலுத்தி, வார்த்தையை இழுக்க, 

“எனக்கு தெரியும்.. நீ சொல்ல வந்ததை சொல்லு..” என்று அதிகாரமாய் தான் கூறினான்..

‘இப்படி அதிகாரமா பேசுறவனை எல்லாம் அந்நியன் கிட்ட பிடிச்சு குடுக்கணும்..’ என்று பார்வையை சுருக்கினாள்.

“ம்ம்ச் ஐம் கெட்டிங் லேட், என்ன சொல்லணுமோ சொல்லு, இல்லை என்னவோ பண்ணு…” என்று நகர போனவனை

“இல்லை இல்லை ஒரு நிமிஷம்…” என்று தடுத்து நிறுத்தினாள்..

“என்ன ??”

“அங்க போனா எப்படியும் முதல் நாளே போகணும். உடனேவும் வர முடியாது. உங்களுக்கு டைம் இருக்கணுமே. மால்ல வேற பிஸியா இருப்பீங்க அதான்…”

“அப்போ என்னை வரவேண்டாம்னு சொல்றீயா ???”

‘அடேய் அடேய்….’ என்று எகிறிய உள்ளத்தை அடக்கி  “ஐயோ !! நான் அப்படி சொல்லல…. ” என்றாள்.

“வேறெப்படி?? ”

“நத்திங்…” இவனுக்கு விளக்குறதுக்கு நத்திங்னே சொல்லலாம்………

அவளையே ஒரு நிமிடம் பார்த்தவன் “இவ்வளோ யோசிக்கிறவ, மாலுக்கு வந்து ஹெல்ப் பண்ணனும்.. அதெல்லாம் எங்க உனக்கு தோன போது… ஹ்ம்ம் நல்லா பேச மட்டும் வாய் கிழிய வரும்…” என்று   சென்றுவிட்டான்..

முதலில் அவன் என்ன கூறினான் என்றே அவளுக்கு புரியவில்லை.. பிறகு தான் அவள் மண்டைக்கு உரைத்தது..

‘அட என்ன சொல்லிட்டு போறான்.. துர்வாசர் தூது விடுற மாதிரி இருக்கே. சோபி இது தான் உனக்கு நல்ல வாய்ப்பு..’ என்று நினைத்தவள்  “என்னங்க… என்னங்க….” என்றபடி அவன் பின்னாடியே ஓடினாள்..

வாசலை தாண்டியிருக்க மாட்டான், பின்னே போய் மூச்சு வாங்க நின்றாள்.. மோகனாவோ வித்தியாசமாய் பார்த்தார். ஆனால் அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.. அதேநேரம் சரியாய் ஸ்ரீயும், கார்த்திக்கும் கேட்டை திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தனர்..

“என்ன ??? இவ்வளோ நேரம் உள்ள தான இருந்தேன்..” என்று  கடிந்தான் அவன்..

அத்தனை வேகமாய் மாடி இறங்கி ஓடி வந்ததில் பேச்சு வரவில்லை அவளுக்கு..  வேக வேகமாய் மூச்சுகளை வெளிவிட்டாள்.. அவன் கோவமாக பேசவும் லேசாய் தள்ளாட,

“ம்ம்ச், முதல்ல நிதனாமாகு சுபி.. பிறகு பேசு..” என்று கோவமாய் கூறினாலும் அவள் கூறுவதை கேட்கவே அவனும் நின்றான்.,.

ஆனால் சோபியோ எங்கே அவன் சென்றுவிடுவானோ என்ற எண்ணத்திலேயே “நா.. நா.. நானும் மாலுக்கு வ.. வர்றேன்.. ஒ.. ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க…” என்றாள் திக்கி திணறி..

கார்த்திக் ஸ்ரீ இருவரின் கண்ணுக்கும் இவர்கள் நின்று பேசுவது மட்டுமே தெரிந்தது.. கார்த்திக் அருகில் செல்ல வேண்டாம் என்று கூறவும் ஸ்ரீயும் நின்றுவிட்டாள்.. இவர்கள் இப்படி நினைத்திருக்க, மோகனாவோ அவர்களாய் பேசி சரியாகட்டும் என்று காத்திருந்தார்.. சோபியும் தன் கணவன் என்ன கூறுவானோ என்று அவன் முகம் பார்த்திருந்தாள்..

“இதை சொல்ல தான் இவ்வளோ வேகமா வந்தியா?? அறிவிருக்கா கண்ணு மண்ணு தெரியாம ஓடி வர, விழுந்தா என்ன ஆகும். முதல்ல நிதானத்தை கத்துக்கோ.. எல்லாத்திலும் அவசரம்…”

அவன் கோவமாய் கூறினாலும், அவன் வார்த்தைகளில் இருந்த அக்கறை தான் அவள் மனதில் பதிந்தது.. தன் மீது நேசம் இருக்க போய் தானே இப்படி சொல்கிறான் என்று எண்ணியவள் கண்கள் லேசாய் கலங்கின..  அவள் கண்ணீரை கண்டவன் இன்னும் எரிச்சலுற்றான்…

“ம்ம்ச் இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழ ஆரம்பிக்குற?? உனக்கு நல்லது சொன்னா கூட தப்பா?? இல்லை இவனெல்லாம் நமக்கு சொல்றானேன்னே கடுப்பா இருக்கா???” என்று விடாது பேச,

காதலை கூட இத்தனை கர்ன கொடூரமாய் காட்டுபவன் இவனாய் தான் இருப்பான் என்று தோன்றியது சௌபர்ணிகாவிற்கு.. ஆனாலும் பதிலுக்கு கோவம் வரவில்லை மெல்ல புன்னகைத்தபடி

“நீங்க திட்டினாலும் பரவாயில்ல.. ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க நான் ரெடி ஆகிட்டு வர்றேன்…” என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் விரைந்தோடினாள்..

“இப்போதானே சொன்னேன். ஏதாவது மண்டையில் ஏறுதா இவளுக்கு…” என்று முனங்கியபடியே “மெதுவா போ சுபி…” என்று சொன்னபடி அமர்ந்தான்..

மோகனாவிற்கு இப்போது தான் நிம்மதியாய் இருந்தது. என்ன பிரச்சனையாய் இருந்தாலும் சரி அனைத்துமே சரியாகிவிடும் என்ற நம்பிக்கை தோன்றியது.. எத்தனை நேரம் தான் இப்படி வெளியே நிற்பது என்று கார்த்திக்கும் ஸ்ரீயும் உள்ளே செல்ல சர்வேஷோ ஆச்சரியமான பாவனையோடு புன்னகை செய்தான்..

மோகனா “வா கார்த்திக்.. என்ன ரெண்டும் சேர்ந்து வந்திருக்கீங்க??” எனவும்

“இல்ல அத்தை சோபிய பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.. அவ போன் வேற சரியா பேசலையா அதான்..”  என்று இழுத்தான்.. சர்வேஷ் மோகனா இருவரின் முகமுமே இதை கேட்டு மாறியது..

கூறியது போலவே ஐந்து நிமிடத்தில் தயாராகி வந்தவள் தன் தம்பி இருப்பதை கண்டு “ஹேய் கார்த்திக் என்ன திடீர்னு…” என்று மகிழ்ச்சியாய் கேட்டபடி இறங்கி வந்தாள்..

யாருமே சோபி சோகமாய் இருக்கிறாள் என்று கூறினால் நம்ப மாட்டார்கள். அவள் முகத்தில் அத்தனை சந்தோசம் தாண்டவம் ஆடியது..

கார்த்திக் ஒருநொடி சௌபர்ணிகாவின் முகத்தை ஆழ்ந்து நோக்கியவன் எதையும் வெளிக்காட்டாமல் “சும்மா தான் சோபி கண்ணு.. உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்..” என,

“ஓ !! சரி சரி.. பார்த்துட்டல.. எனக்கு நேரமில்லை கார்த்திக். இருந்து அத்தை கிட்ட காபி குடிச்சிட்டு போடா.. நான் மாமா கூட மாலுக்கு போறேன், பை ஸ்ரீ, அத்தை போயிட்டு வர்றேன்…” என்றவள் “என்னங்க போலாமா ” என்று கூறி கொண்டே முன்னே நடந்தாள்..

“திருந்தவே மாட்டா…. சாரி கார்த்திக் அவ..” என்று சர்வேஷ் ஆரம்பிப்பதற்குள் “இட்ஸ் ஓகே மாமா.. நோ பிராப்ளம்..” என்று அனுப்பி வைத்தான்..

ஸ்ரீ “என்னம்மா நடக்குது இங்க?? ” என்றாள் ஆச்சரியமாய்.. 

“எனக்கும் தெரியலை ஸ்ரீ.. மதியம் வந்தான். உடனே கிளம்புவான்னு நினைச்சேன். இப்பதான் கிளம்புறான்.. சோபி உள்ள இருந்து வந்து நானும் வர்றேன்னு சொல்லிட்டு அவளும் கிளம்பி போறா.. எப்படியோ ரெண்டும் சரியான சரிதான்..”

“ஹ்ம்ம் ஆமாம்மா..”

“கார்த்திக் நீ அப்பா அம்மாக்கிட்ட எதுவும் சொல்லலியே.. இல்லைன்னா அவங்களும் கஷ்ட படுவாங்க..”

“இல்ல அத்தை.. எதுவும் சொல்லல.. அவங்களை பார்த்தா நல்லா இருக்க மாதிரி தான் இருக்கு. அத்தை அப்பா போன் பண்ணாங்களா?? தலை தீபாவளிக்கு கூப்பிட வரணும் சொன்னாங்க.. ”

“ஆமா கார்த்திக்.. அதை பத்தி பேசுறதுக்குள்ள, ரெண்டு பேரும் கிளம்பி போயிட்டாங்க. அதுனால ஒண்ணுமில்ல தீபாவளிக்குள்ள ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனையா இருந்தாலும் சரி ஆகிடனும். அவ்வளோதான்..”

இதே எண்ணம் தான் சோபியின் மனதிலும் ஓடியது.. தீபாவளிக்குள் அனைத்தும் சரியாகிவிட வேண்டும்.. எப்படியாவது இவன் மனம் சமாதானமாக  வேண்டும். என்ன செய்யலாம்.. என்று யோசித்தவள் கழுத்தில் அணிந்திருந்த செயினை கடித்தபடி அமர்ந்திருந்தாள்..

அவள் அமைதியாய் இருப்பதை கண்டவன் அவள்புறம் திரும்ப, அவள் செய்த வேலை அவனை கடுப்படித்தது.. 

“என்ன பழக்கம் செயினை கடிக்கிறது ???”

“நகைச்சுவை…”

“வாட்????”

“நத்திங்.. ”  

சர்வேஷ் கோவமாய் எதோ பதில் சொல்ல வாய் திறக்கும்முன் மால் வர அமைதியாய் இருவரும் இறங்கினர். திருமணத்திற்கு பின் முதல் முறையாய் சௌபர்ணிகா வருகிறாள். இத்தனை நாள் அவளும் அங்கே வேலை செய்பவள் என்ற உணர்வில் அனைவரும் அவளோடு பழகியது மாறி, அனைவரின் பார்வையிலும் ஒரு மரியாதை தெரிந்தது.

ப்ளோர் மேனேஜெர் வந்து “வெல்கம் மேம்..” என்று பூங்கொத்து கொடுக்க, அதை புன்னகையோடு பெற்றுக்கொண்டவள்,

“சரவணன் சார், என்ன இது எப்பவும் போல சௌபர்ணிகான்னே கூப்பிடுங்க…” என, அவரோ தயக்கமாய் சர்வேஷ் முகம் பார்க்க,

இவளும் “என்னங்க…” என்று அவனைக் காண,

“இது உங்க பிராப்ளம் என்னை இழுக்கக் கூடாது..” என்று விவரமாய் ஒதுங்கிக்கொண்டான்.. 

அதன் பிறகு அங்கே வேலை செய்பவர்கள் ஒவ்வொருவராய் விஷயம் அறிந்து வந்து வாழ்த்து கூறி, கொஞ்ச நேரம் சௌபர்ணிகாவோடு பேசிச் செல்ல, சர்வேஷிற்கு தான் பொறுமை காற்றி பறந்தது.

மெல்ல அவள் காதருகில் குனிந்து “இதுக்கு தான் வந்தியா?? எல்லார் வேலையும் கெடுத்துகிட்டு.. கூட்டம்  பாரு எவ்வளோ இருக்குன்னு…. எல்லாரும் உன் வாய் பார்த்து நின்ன கஷ்டமர்ஸ யார் கவனிப்பா..” என, அவளோ முகத்தில் இருந்த சிரிப்பு மாறாது, 

அதே போலவே திரும்பி “நான் என்ன செய்ய…??” என்று புருவம் உயர்த்தினாள்..

“ரவுண்ட்ஸ் போற மாதிரி நீயே எல்லா ப்ளோரும் போயிட்டு வா.. எனக்கும் கொஞ்சம் நிம்மதியா மூச்சு விட முடியும்…”

“நீங்களும் கூட வாங்க… ”

“வாட்?? வை மீ ?? ”

“ஹலோ சர், இதென்ன கேள்வி உங்களை கல்யாணம் பண்ணதினால தான் இப்போ எல்லாரும் வந்து விஷ் பண்றாங்க.. சோ நீங்களும் வரணும்..” என்று சௌபர்ணிகா விழிகளை விரிக்க,

“என்னது சாரா ??? முதல்ல சரி, ஆனா இப்போவும் ஏன் சர்ன்னு சொல்ற சுபி..” என்றான் அவளது கண்களில் தன் பார்வையை தொலைத்து..

அவன் கேட்ட விதத்திலும் பார்க்கும் பார்வையிலும் மனதில் ஒரு துள்ளல் பிறக்க,  குறும்பு கூத்தாட “அய்யோடா… உங்களை சர்ன்னு மரியாதையா கூப்பிட்டதா நினைச்சீங்களா?? உங்க பேரோட முதல் ரெண்டு எழுத்து சர் தான். அதான் அப்படி கூப்பிடுறது…” என்று சொல்ல,

“அடிப்பாவி.. அப்போ மரியாதைக்கு சொல்லலியா….” என்று சர்வேஷ் கேட்கவும்,  சிரித்தபடி இல்லையென்று  இடம் வலமாய் தலையாட்டினாள்..

அப்பொழுதுதான் உணர்ந்தனர் இருவரும் பேசியபடியே அறையை விட்டு வெளியே வந்திருந்தது.. வேலையாட்கள் ஒருசிலர் இவர்களை புன்னகையோடு பார்க்க சௌபர்ணிகாவிற்கு வெட்கமாய் போனது…

ஆனால் அடுத்த நொடி “போதும் சுபி, எதோ பேசிட்டே வந்துட்டோம். நீ வேற இப்படி வெட்க பட்டா நம்ம என்னவோ சந்தோசமா இருக்கிறதா நினைச்சுக்க போறாங்க.. சாதாரணமாவே இரு.. இல்லை அடுத்தவங்க அப்படி நினைக்கணும்னு நினைக்கறியோ என்னவோ…” என்றான் குரலில் விசத்தை தடவி..

அத்தனை நேரம் இருந்த இதமான மனநிலை மாறி சௌபர்ணிகாவிற்கு மனதில் சுடு நீர் ஊற்றியது போலானது.. முகம் மாறாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டு போனாள்.. ஆனால் அவளது தடுமாற்றங்களை எல்லாம் திருப்தியாய் பார்த்தவன் ஒரு புன்னகையோடு நகர்ந்து சென்றான்.

அவன் கூறிய வார்த்தைகளில் தான் இருக்கும் இடம் மறந்து அவன் போவதையே பார்த்தபடி நின்றுவிட்டாள் சோபி.. என்ன சொல்கிறான் இவன்.. அன்றும் நடிப்பா என்று கேட்டான்.. இன்றும் அதேபோல் தான் அர்த்தம் கொண்டு பேசுகிறான்..

அப்.. அப்போ இவனது மனதில் என்ன இருக்கிறது.. நான் செய்வது எல்லாம் நடிப்பது போலா இருக்கிறது.. என்று இதே எண்ணங்களோடு தான்  சௌபர்ணிகா மேல் தளங்களில் எல்லாம் ரவுண்ட்ஸ் போனது..

முதலில் படி ஏறியவள், பின் என்ன நினைத்தாளோ இரண்டாவது தளத்தில் இருந்து லிப்ட் வழியாய் மேலே செல்ல, அவளது மனதோ அன்று அவனும் அவளும் லிப்டில் வந்து உள்ளே கொஞ்ச நேரம் மாட்டிக்கொண்டதை எல்லாம் எண்ணிடத் தொடங்க, ஏனோ அவன் என்னதான் கோபமாய் பேசினாலும் அவனது அருகாமைக்காக சௌபர்ணிகாவின் உள்ளம் ஏங்கத்தான் செய்தது..   

இப்படியே தன் எண்ணங்களில் இருந்தவள் நான்காவது தளம் வரவும்,   “மேடம்….” என்று ஓரிரு பெண்கள் அவளருகே வர அதன்பின்னே அவள் தெளிந்தாள்..

“வாழ்த்துக்கள் மேடம்… நாங்க எல்லாம் எதிர்பார்க்கவே இல்லை.. சாரும் நீங்களும் கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு…” என்று கரம் குலுக்க,

‘நானே எதிர் பார்கல….’ என்று எண்ணியபடி “தேங்க்ஸ்..” என்றாள் அவளும்..

“எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம் மேடம்.. இனிமே சார்கிட்ட எது கேட்கிறதுனாலும் உங்ககிட்ட சொன்னாலே போதும்..” என்று ஒரு பெண் சொல்ல,

‘நினைப்பு தான் பொழப்பை கிடக்கும்…’ என்று எண்ணிக்கொண்டாள்.

“என்ன மேடம் அமைதியா இருக்கீங்க ???”

“ஹேய் மேடம்க்கு வெட்கம் போலடி.. அதான் பேசாம அமைதியா இருக்காங்க,. முன்ன எல்லாம் மாடிக்கு வந்தா எப்படி பேசுவாங்க, இப்போ சார்கூட சேர்ந்து மேடமும் அமைதியா ஆகிட்டாங்க போல…” என்றாள் மற்றொருத்தி..

“ஹய்யோ சோபி எல்லாருக்கும் நீ காமடி பீசாவா தெரியுற.. வாய் திறந்து பேசு…” என்று தனக்கு தானே கூறிக்கொண்டு வாய் திறக்கும் நேரம்  சரியாய் சர்வேஷ் மீண்டும் அங்கே வந்து சேர்ந்தான்..

“இன்னும் உங்க அரட்டை முடியலையா ???” எனவும் சோபியோடு பேச வந்த பெண்கள் வேகமாய் தங்கள் இடம் நகர்ந்தனர்..

அனைவரும் போனதும்.. “அதெப்படி எல்லார்கிட்டையும் நல்லவ மாதிரி நடந்துக்கிற??” என்றான் தணிந்த குரலில்..

“நான் இயல்பா தான் இருக்கேன்.. ” என்றாள் வெடுக்கென்று..

“இயல்பா.. ஹா ஹா குட் ஜோக்.. உன் இயல்பு என்னனு எனக்கு தெரியும்.”

“என்ன தெரியும் உங்களுக்கு??? ”

“ஆமாமா.. என்ன தெரியும் எனக்கு?? என் மனசுல இருக்கிற அதே காதல் அதே உணர்வுகள் எல்லாம் உன்கிட்டயும் இருக்கும்னு நினைச்சேன். ஆனா அது இல்லைனு தெரியவும்…………” என்றவன் அதற்குமேல் எதுவும் கூறாமல்  “போய் உன் வேலையை பார்..” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்..

“ஹய்யோ!!! என்ன சொல்ல வந்தான்??? இல்லைனு தெரியவும்னு இழுத்தானே… என்ன சொல்ல வந்திருப்பான்…????” என்ற யோசனையோடே தன்னை மறந்து  எஸ்கலேட்டரில் இறங்கியவள் சரியாய் கீழ் தளம் வந்தும் காலை நகற்றாமல் போக, பின்னே இறங்கி கொண்டிருந்த வாண்டு சரியாய் கால் வைக்க, இன்னதென்று உணர்வதற்குள் கால் பிசகி கீழே விழுந்தாள் சௌபர்ணிகா…   

    

 

         

   

                

Advertisement