Advertisement

சுகம் – 17

இன்னுமே கூட சௌபர்ணிகாவிற்கு என்ன நடந்தது என்று புரியவில்லை.. புரியவில்லை என்பதை விட மூளை வேலை செய்யவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்.

தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவளுக்கு அவளின் உள்ள கொதிப்பும், உடல் கொதிப்பும் நன்றாய் உணர முடிந்தது.. இருக்காதா பின்னே நேற்று இரவு எத்தனை நேரம் அழுதால் என்று அவளுக்கே தெரியாதே..

முகம் எல்லாம் வீங்கி, கண்களும் கன்னங்களும் சிவந்து அவளது முகமா இது என்று அவளுக்கே சந்தேகம் தான். ஆனால் அழுகை வராமல் என்ன செய்யும் அவன் செய்த வேலைக்கு…

“வேண்டாம் சோபி எதுவும் நினைக்காத.. எவ்வளோ நேரம் நீ இப்படியே இருப்ப??” என்று அவள் மனம் கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை..  

கண்களை இறுக மூடித் திறந்தாள்.. ஒரு நொடியில் முதல் நாள் நடந்த அனைத்தும் கண் முன்னே வந்து போனது.. இயல்பான பேச்சு வார்த்தையாய் ஆரம்பித்தது பின்னே இருவருக்கும் சண்டை ஏற்படுத்தியது தான் மிச்சம்..

ஆசையாய் பார்த்தான் தான், காதலாய் பேசினான் தான், அவளுமே மயங்கி தான் இருந்தாள். ஆனால் ஒன்றை பரிசாய் கொடுத்துவிட்டு உடனே மனம் மாறியதா என்று கேட்டால் என்ன அர்த்தம்??

இனியும் பேசினால் வீணாய் இன்னும் பிரச்சனை தான் என்றெண்ணி விலகியவளை அவன் தான் பிடித்து இழுத்து அணைத்தான்.. அவன் அவளை அணைத்தது என்னவோ அவளது கோவத்தை சமாதானம் செய்யத்தான்

“ச்சி விடுங்க.. என்ன இது..? விடுங்க முதல்ல..” என்று திமிறினாள்.  அவளது நடுக்கமும், பதற்றமும் அவனை என்னவோ செய்தது.. சோபியின் உடலில் ஓடிய நடுக்கத்தை அவனாலும் உணர முடிந்தது.. அத்தனை இருக்கமாய் அணைதிருந்தான்..

“ஏன் சுபி இப்படி பிடிவாதம் பண்ற???புரிஞ்சுக்கோ சுபி..” என்றபடியே அவளை தன்மேல் இன்னும் சாய்த்தான்.. அவளும் விடாது விலகப்பர்த்தாள். 

“ஏன் சுபி நான் உன் புருஷன் தான.. ஏன் என்னைய இவ்வளோ தள்ளி வைக்குற??”

“என் புருஷன் தான் யார் இல்லைன்னு சொன்னது ??? அதுக்காக இப்படியா???”

“வேற எப்படி உனக்கு புரியவைக்கிறதுன்னு எனக்கு தெரியலை சுபி ”

சௌபர்ணிகா பேச பேச சர்வேஷின் வேகம் கூடியதே தவிர குறைந்தபாடில்லை.. ஆனால் அவளுக்கோ தன் அனுமதி இல்லாமல் அவன் முன்னேறுவது சிறிதும் பிடிக்கவில்லை..

“இது தான் நீங்க புரிய வைக்கிற அழகா ??? ம்ம்ச்.. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லை சர்வா.. ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பீகேவ் பண்றதுன்னு உங்களுக்கு தெரியாதா ???”

“என் பொண்டாட்டி கிட்ட எப்படி பீகேவ் பண்றதுன்னு எனக்கு தெரியும்”

அவனது  பார்வையும், அணைப்பும், முத்தங்களும் சௌபர்ணிகாவை தளர்வடைய செய்தன.. அதுவே அவளுக்கு இன்னும் எரிச்சலை கொடுத்தது… தன் கட்டுபாட்டை தானே இழப்பது என்பது அவளுக்கு அத்தனை வேதனையாய் இருந்தது. புத்தி சொல்வதை மனம் கேட்க மறுத்தது.. இன்னும் எதுவுமே உங்களுக்குள் சரியாகவில்லை அதற்குள் இதெல்லாம் தேவையா என்று தோன்றினாலும் அவளால் அவனிடம் இருந்து விலக முடியாதுபோனது..

அவளது குழைவை உணர்ந்த சர்வேஷ் தன் வெற்றியை முகத்தில் காட்டினான்.. “ஹேய் சுபி… நம்ம ரெண்டுபேர் மனசும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புது அப்புறம் என்ன???” என்று அவன் மென்மையாய் தான் கேட்டான்..

ஆனால் அவன் முகம் காட்டிய பாவனையும், அவன் கண்களில் தெரிந்த சிறு கேலியும் அவளை கொதிப்படைய செய்தன.. சர்வேஷிடமிருந்து விலகிட நினைத்தாலும் தன் உடலும் உள்ளமுமே அதற்கு ஒத்துளைக்காததை எண்ணி அவளையும் மீறி கண்ணீர் வழிந்தது..

தன் மார்பில் முகம் புதைத்திருந்தவளின் விழி நீர் உணர்ந்து வேகமாய் அவளை நிமிர்த்தினான். சௌபர்ணிகாவோ அவன் முகம் காண முடியாது தலை கவிழ்ந்தாள்.. காதலும் மோகமும் சேர்ந்து அவனை அவளோடு கலக்க தூண்டிட, அவனது வேகத்தை சோபியின் ஒற்றை துளி கண்ணீர் தடை செய்தது..

ஆனால் சர்வேஷிற்கோ தன் உணர்வுகளை அடக்க பெரும்பாடாய் போனது.. அவளது முகத்தை கண்டதுமே சர்வேஷின் முகம் அப்படியே இறுகி போனது தான் உண்மை.. அவனை பொருத்தமட்டில் கண்ணீர் விடும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை என்றே தோன்றியது..

இருவரும் கணவன் மனைவி. அதுவும் காதலை மனதில் இத்தனை நாள் சுமந்தவர்கள்.. இறைவன் அருளால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் திருமணமும் அழகாய் முடிந்தது.. அப்படிபட்ட வாழ்க்கை எத்தனை இனிமையாய் இருக்க வேண்டும்??

ஆனால் முதல் முறையாய் கணவன் என்ற உரிமையில் எல்லை மீறியதற்கே கண்ணீர் வடிக்கிறாள் என்றாள்???? ஒருவேளை தன்னை இன்னும் இவள் மனதார ஏற்றுகொள்ளவில்லையோ??? இல்லை கணவனாகவே நினைக்கவில்லையோ??? இத்தனை கேள்விகள் அவன் மனதில் வந்து இன்னும் சர்வேஷின் கோவத்தை அதிகப்படுத்தியது.. கோவம் என்பதை விட வருத்தம் தான் மேலோங்கியது. அதை வழக்கம் போல கோவமாய் வெளிபடுத்தினான்..

“சௌபர்ணிகா???!!!!”

ஆள் இல்லாத வீட்டில் அவனது குரல் அனைத்து சுவர்களிலும் பட்டு  எதிரொளித்தது.. தலை கவிழ்ந்து கண்ணீர் வடித்தவள், அவன் குரல் குடுத்த அழுத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்..

அவனது பார்வையும், முகமுமே சௌபர்ணிகாவின் உடலை சில்லிட வைத்தது.. என்ன கூற போகிறானோ என்ற எண்ணத்தில் பார்க்க, அவனோ அவளின் உதாசீனத்தை சிறிதும் தாங்க முடியாத உணர்வில்,

“நீ என்னை இவ்வளோ கேவலமா நினைப்பன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல…” எனும்போதே சௌபர்ணிகா மறுப்பாய் எதோ கூற வந்தாள், ஆனால் அவன் விட்டால் தானே..

“போதும்.. நீ எதுவும் பேசாத.. உன் கண்ணீரே சொல்லுதே நீ என்னை எந்த அளவுக்கு நினைச்சு இருக்கன்னு.. ஆமாடி நான் என் காதலை சொல்லல தான். ஆனா எப்போ இருந்தாலும் என் கல்யாணம் உன்கூட தான் நடந்திருக்கும்.. உன்னை விட்டிருக்க மாட்டேன்.. என்ன பாக்குற?

இது தான் நான்.. என்னால இப்படிதான் என் உணர்வுகளை வெளிபடுத்த முடியும்.. நான் தொட்டா உனக்கு கண்ணீர் வருதோ?? அப்போ எந்தளவுக்கு நீ என்னை கேவலமா நினைச்சிருக்க?? என்னை தேர்ட் ரேட் ஆள் மாதிரி நினைச்சுட்ட இல்ல.. ஊரு உலகத்துல எல்லாம் லவ் பண்ணியே தான் கல்யாணம் பண்றாங்களோ?? அவனவன் முகம் கூட பார்க்கமா கல்யாணம் பண்ணுறான், அவங்க எல்லாம் சந்தோசமா வாழாம இருக்காங்களா என்ன ??

அப்படி பார்த்தா கல்யாணமான அன்னிக்கு இருந்து நான் உன்மேல என் காதலை வெளிப்படுதிட்டு தான் இருக்கேன்.. நீ.. நீ தான் என்னை விட்டு விலகியே இருக்க. இதுல இருந்தே தெரியலை உனக்கு நான் முக்கியமில்லை…”

விட்டால் அவன் இன்னும் பேசியிருப்பான்.. ஆனால் அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் சௌபர்ணிகாவை முள்ளாய் குத்தியது தான் நிஜம்.. அவள் என்ன நினைத்து விலகினாள், ஆனால் அதற்கு இவன் வேறு நிறம் பூசுகிறான்.. அவன் பேசுவதை எல்லாம் இமைகள் தட்டாமல் பார்த்திருந்தவள் கடைசியில்,

“போதும் சர்வா….. ” என்று கத்தியே விட்டாள்..

“போதும் சர்வா. போதும்.. ஏன் இப்படி நீங்களா பேசிட்டு போறீங்க? நீங்க சொல்ற எதுவுமே நான் அந்தமாதிரி நினைக்கல…”என்று சொல்ல,

“பின்ன..?? வேற எப்படி நினைச்ச..?? எப்படி டி நினைச்ச??” என்று அவளது தோள்களை பற்றி உலுக்கினான்.. வலியில் பதில் வரவில்லை சௌபர்ணிகாவிற்கு..

“என்ன அமைதியா இருக்க??? நான் சொல்லவா நீ என்ன நினைச்சன்னு.. ஆமா காதல் காதல்ன்னு சொல்லிட்டு இருக்கியே, நீ சொன்னியா என்கிட்ட, உங்க வீட்டுல அப்போ கல்யாணத்துக்கு வரன் பார்த்திட்டுதான இருந்தாங்க. அதுக்காக தான நீ சென்னை விட்டு இங்க வந்த.. என்ன இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும்னு பாக்குறியா.. உன்னை பத்தி ஒவ்வொன்னும் தெரியும் டி எனக்கு.. என்னை தேடுன சரி, ஆனா என்னை பார்த்தபிறகு ஒருநாள் ஒரு நிமிஷம் நீ உன் காதலை உணர வச்சியாடி சொல்லு.. பேசுறா பெரிய இவ மாதிரி..

ஏய்… நான் சாதாரண மனுஷன்தான். எனக்கும் எல்லா வித ஆசைகளும் இருக்கும்.. அதுவும் நீ நான் காதலிச்சவ.. என் பொண்டாட்டி.. ஆனா இப்போ எனக்கு நல்லா புரிஞ்சது நீ என்னை அப்படி நினைக்கல.. எதோ எதார்த்தமா நடந்தது அப்படின்னு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்ட.. உங்க வீட்ல சொல்றதை தான் உன்னால மீற முடியாதே..

என்ன பாக்குற, நான் அன்னிக்கு கேட்டேனே இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லைனா நான் பேசுறேன்னு, ஏன் தெரியுமா?? அப்போவாது உன் மனசுல இருக்கிறதை நீ சொல்ல மாட்டியான்னு தான்.. ஆனா அப்போகூட நீ என் அப்பா பேச்சை மீற மாட்டேன்னு தான சொன்ன..

இப்போ நான் பண்ணது எல்லாம் தப்புனா, அப்போ நீ பண்ணது?? பண்ணிட்டு இருக்கிறது?? உண்மைய சொல்லவா, நம்ம வாழ்கைய எப்படி எப்படியோ வாழணும்னு ஆயிரம் கனவுகளோட தான் உன்னை கல்யாணம் பண்ணேன்.. உன் பேசுக்கும் உன் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுத்தேன்.. ஆனா நீ ??? எல்லாத்துக்கும் குதர்க்கம் தான்… எதோ நான் கேட்டதுனால இன்னிக்கு நல்லா பேசிட்டு இருந்த, ஆனா இப்போ உன் மனசுல என்ன இருக்குன்னு நல்லா புரிஞ்சது எனக்கு.. செருப்பால அடிச்சமாதிரி புரிய வச்சிட்ட…” என்று உறும,

“ஐயோ!! என்னங்க.. சர்வா… இப்.. இப்படி எல்லாம் சொல்றீங்க.. நான்.. நான் நிஜமா உங்கள அப்படி எல்லாம் நினைக்கவேயில்லை.. என்.. எனக்கு இதெல்லாம்… ” என்று மேலும் வார்த்தை வராமல் திக்கி திணறினாள்..

அவனோ அவளை பார்த்து நக்கலாய் சிரித்தான்.. என்னவோ சர்வேஷிற்கும் இன்று பேசிடும் வேகம்.. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இவளோடு முன்னுக்கு பின்னாய் போராட என்று..

“அதான் தெரியுதே, நீ என்னை புருஷனா நினைக்கலைன்னு.. என்ன சொல்றதுன்னு உனக்கே தெரியலை அதான் வார்த்தையை தேடுற.. போதும் சுபி இந்த அளவுக்கு என்னை யாருக் அசிங்கப்படுத்தினது இல்லை.. முதல் முறை அதுவும் உன்கிட்ட… ச்சே..”

“அப்படி எல்லாம் இல்லை சர்வா…. ” என்று அவனது கைகளை பற்ற, அடுத்த நொடி அவளை உதறிதள்ளினான் சர்வேஷ்..

“வேண்டாம்மா வேண்டாம்.. என்னை தொடாத.. அப்புறம் உன் கற்பே போச்சுன்னு அழுவ.. இனிமே என் மூச்சுகாத்து கூட உன் பக்கத்தில் வராது…” என்று அவன் எழப் போக,

“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?? நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்க பாருங்களேன்..” என்று  கிட்டத்தட்ட மன்றாடத குறை தான் சௌபர்ணிகாவிற்கு.. ஆனால் கேட்கும் நிலையில் தான் அவனில்லை..

“என்ன சொல்ல போற?? அதான் சொல்லிட்டியே.. போதும்.. ஒருநாளாவது நீயா என்கிட்ட வந்து பேசவாது செஞ்சியா?? இல்லை நமக்குள்ள இருக்க இடைவெளியை குறைக்க ஏதாவது முயற்சி பண்ணியா எதுவுமே இல்லை.. ஆனா என்னை குறை சொல்ல மட்டும் தயாரா இருந்த.. போதும் சுபி… இதுக்கு மேல நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. ” என்று கைகளை உயர்த்தியவன் அவள் எதுவோ சொல்ல முயலவும்,

“இங்க பார் சுபி, நல்லா கேட்டுக்கோ.. இத்தனை நாள் எப்படியோ ஆனா இனிமே உன் கிட்ட கூட நான் வரமாட்டேன்.. பாக்குறேன் நீயும் தான் என்ன பண்றேன்னு. அதுக்காக நம்ம கடைசி வரைக்கும் இப்படியே இருப்போம்னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன்.. நல்லா வாழனும்னு தான் உன்னை கல்யாணம் பண்ணேன். வாழ்ந்தும் காட்டுவேன். உன் மனசு எப்போ மாறி, என்கிட்ட நீயா நெருங்கி வர்றியோ அப்போ பார்ப்போம்..” என்று கோவமாய் மொழிந்து விட்டு அவளது பதிலையும் எதிர்பாராமல் சென்றுவிட்டான்..

போகிறவனை தடுக்கவும் முடியாமல் அழைக்கவும் முடியாமல் அழுதபடி தான் இருந்தாள் சௌபர்ணிகா.. வார்த்தைக்கு வார்த்தை அவனோடு வாயாடுவாள், ஆனால் இன்று அவன் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியவில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை..

கண்ணீரில் எத்தனை நேரம் கரைந்ததோ அவள் அறியாள்.. கோவமாய்  வெளியே சென்ற சர்வேஷ் திரும்பி வீடு வந்ததோ அவளை சிறிதும் சட்டை செய்யாமல் அறைக்குள் நுழைந்ததோ அவளுக்கு சிறிதும் கண்ணில் படவில்லை.. அவன் போகும் போது எப்படி இருந்தாளோ அப்படியேதான் இப்பொழுதும்..

“கடைசியில் என்னை தப்புன்னு சொல்லிட்டு போறான்.. நான்.. நான் என்ன பண்ணேன்?? ஒருவேளை அவன் சொன்ன மாதிரி நான்தான் ரொம்ப ஓவரா போயிட்டேனோ?? ஆனா இவன் செய்தது மட்டும் சரியா?? பேசிட்டு இருக்கும் போதே இப்படி பீகேவ் பண்ணா நான் என்ன செய்ய?? கொஞ்சம் கூட என் விருப்பத்துக்கு மரியாதை தராம இவன் பாட்டுக்கு போனா… கடவுளே…” என்று அவள் உள்ளம் துடித்தது..

தலை கனத்தது.. என்னவோ காய்ச்சல் வந்துவிடும் போல் இருக்க, கை கால்களை எல்லாம் அசைக்க முடியும் போல்கூட தோன்றாமல் போக, அவளுக்கே தான் இப்படி இருப்பது கொஞ்சம் சிரமமாய் இருக்க,   கண்களை மட்டும் இமைத்து சுற்றிலும் பார்த்தாள்..

நேரத்தை பார்த்தாள்.. அது இரவு என்று காட்டவும் “ஐயோ இவ்வளோ நேரமாவா இப்படியே இருந்தோம்.. திருடன் வந்தாகூட தெரிஞ்சிருக்காதே  போல.. இவன் எங்க போனான்.. கோவமா போனான்.. ஆனா வந்தானா ??” என்று கேள்வி மேல் கேள்வி எழ என்ன செய்வது என்பது தெரியாமல் மீண்டும் திகைத்து நின்றாள்..

கண்ணெல்லாம் எறிவது போலிருந்தது.. கண் மட்டும் தானா?? மனமும் கூட சேர்ந்து தகித்தது..

“எப்படி இவனால இப்படியெல்லாம் பேச முடிஞ்சது?? கடைசியில் என் காதலே பொய்ன்னு சொல்ற மாதிரி சொல்லிட்டான்.. இப்போ நான் என்ன பண்றது.. ஆனா நான் பண்ணதும் கொஞ்சம் தப்பு தானோ.. இல்ல.. நான் எதுவும் தப்பு பண்ணலை…” என்று தன்னை உலுக்கிக் கொண்டவள் மேலே அவர்கள் அறைக்கு சென்றாள்..

கட்டிலின் ஒரு பக்க ஓரத்தில் சர்வேஷ் படுத்திருந்தான்..

“வந்துட்டானா?? சாப்பிட கூட இல்லியே.. எழுப்புவோமா?? ஹ்ம்ம் இல்லை வேண்டாம் நானும் தான் சாப்பிடல.. ஒரு வார்த்தை கேட்டானா..??” என நினைத்தவள் வீம்பாய் கட்டிலின் மறுபுறம் படுத்தாள்..

அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.. சௌபர்ணிகாவோ இப்பொழுது பேசுவான், அப்பொழுது பேசுவான் என்று காத்திருந்தது நேரம் போனதே ஒழிய அவன் அவள் பக்கம் திரும்ப கூட இல்லை. என்ன கோவமென்றாலும் இப்படி இத்தனை பெரிய வீட்டில் இருவர் மட்டுமே இருந்து அதுவும் பேசாது இருப்பது அவளுக்கு இஷ்டமானதாய் இல்லை..

“நானும் பாக்குறேன் எவ்வளோ நேரம் இவன் கோவம்னு..” என்று இருந்தவளுக்கு நேரம் போக போகத்தான் சர்வேஷ் கோவத்தின் தீவிரம் புரிந்தது.

சௌபர்ணிகாவை பொருத்தமட்டில் கோவம் சண்டை எல்லாம் சிறிது நேரத்திற்கு மட்டும் தான், பின் இயல்பாய் பேசிவிட வேண்டும்.. அதுபோல தான் அவளும் நினைத்து இருந்தாள்.. ஆனால் அவளது நினைப்பை எல்லாம் பொய் ஆக்கினான் சர்வேஷ்.. மதியம் இருந்து சாப்பிடாமல் இருந்தது வேறு அவளது உடலை போட்டு அசத்தியது.. “இவனும் சாப்பிட்டு இருக்கமாட்டானே…” என்று எண்ணியவள் எழுந்து சென்று பால் எடுத்து வந்தாள்..

அவள் கதவு திறந்து வெளியே சென்ற ஓசை கேட்டு சர்வேஷ் திரும்பி பார்த்தவன், மீண்டும் கண்களை மூடி கொண்டான்..

“ஆடாம அசையாம படுத்திருக்கிரதை பாரு..” என்று முனுமுனுத்தபடி  “என்னங்க…” என்று அழைத்தாள்..

பதிலேதும் இல்லை.. ஆனால் அவள் உறங்கவில்லை என்பதும் அவளுக்கும் தெரியும்.. இரண்டு நிமிடம் நின்று பார்த்தவள் மீண்டும் அழைத்தாள். மௌனம் தான் அவனது பதிலாய் வந்தது..

“உன் பொறுமை எல்லாம் போதும் சோபி…” என்றபடி அவனது தோளை தொட்டு உசுப்பினாள்..

“கோவம் எல்லாம் இருக்கட்டும், இந்த பாலை மட்டும் குடிங்க..”  

அவள் தொடுகையில் கண் விழித்தவன் பட்டென்று அவள் கைகளை தட்டிவிட்டான். “நான் தொட்டா உனக்கு அழுகை வரும். அப்புறம் ஏன் நீ மட்டும் என்னை தொட்டு பேசுற..?? என்ன அக்கறை இருக்க மாதிரி நடிக்கிறையா ??” என்றான் கடுகடுவென்று..

நடிப்பா??? என்ன சொல்கிறான் இவன்?? பசி தாங்கமாட்டானே என்று இவன் நலம் கருதி நான் பால் கொண்டு வந்தால் அதை நடிப்பு என்று சொல்கிறான்.. என்னை பற்றி கூட நான் கருதவில்லையே..  அவள் மனதில் ஓடிய எண்ணங்கள் அப்படியே முகத்தில் பிரதிபலித்தது..

“என்ன பார்க்கிற?? உண்மையை எல்லாம் சரியா சொல்றானேன்னு உனக்கு அதிர்ச்சியா இருக்கா?? இருக்கும் இருக்கும்.. இப்போ உன் மைன்ட் வாய்ஸ் எதுவும் சொல்லலையா..??”

“ப்ளீஸ் சர்வா இப்படி எல்லாம் பேசாதீங்க… நான் உங்களுக்கு பசிக்குமேன்னு தான் பால்எடுத்துட்டு வந்தேன்..”

“பால் தானே.. கொஞ்ச நேரத்துக்கு முன்ன நல்லா பால் வார்த்த என் நெஞ்சில. அது போதும் எனக்கு. வயிறும் மனசும் நிறைஞ்சு இருக்கு.. தயவு செஞ்சு என்கிட்ட இப்படி வராத…” என்றவன் போர்வையை இழுத்து போத்தி படுத்துவிட்டான்..

அவனையே விழியசையாமல் பார்த்தவளுக்கு என்ன சொல்ல முடியும்?? மீண்டும் கண்ணீர் வடித்தது தான் மிச்சம்..  மனதோடு சேர்த்து உடலும் கனத்தது.. தன் சுமையை தானே தாங்க இயலாமல் அங்கிருந்த இருக்கையில் சாய்ந்தாள்..

சர்வேஷின் இந்த திடீர் மாற்றம் அவளுக்கு ஏன் என்று புரியவில்லை.. திருமணமான முதல் நாள் இரவே அவனோடு சண்டை போட்டவள் அல்லவா.. ஆனால் அன்று சௌபர்ணிகாவின் விருப்பத்திற்கு மதிப்பளிதான்.. இன்றோ அவளை சிறிதும் மதிக்கவில்லை..

அன்றைய தினம் எத்தனை அழகாய் தொடங்கியதோ அத்தனை அபத்தமாய் முடிந்தது இருவருக்கும்.. என் இப்படி நடந்தது?? என்ற கேள்விக்கு பதிலாய் சோபி அன்று நடந்த அனைத்தையும் மீண்டும் ஒருமுறை எண்ணி பார்த்தாள்..

தனக்கு அழுகை ஏன் வந்தது?? அவன் தன்னை அணைத்ததாலா?? இல்லையே.. தன் கட்டுபாட்டை தானே இழந்ததால் தானே கண்ணீர் வந்தது.. இதை அவளே இப்பொழுது தான் உணர்கிறாள்.. பின்னே சர்வேஷ் எப்படி புரிந்துகொள்வான்?? இவனிடம் என்ன சொல்லி விளக்குவது?? நானாய் எப்படி அவனை நெருங்குவது??

யோசனை கூட கூட தலை வெடித்துவிடும் போல் தோன்றவும் தன் இரு கைகளால் தலையை பிடித்து அமர்ந்துகொண்டாள்..

திடீரென்று கதவு அறையப்படும் ஓசை கேட்டு தன்னை உலுக்கி விழி திறந்தவளுக்கு அப்பொழுது தான் புரிந்தது இது மறுநாள் என்று..

“ஓ !! இவ்வளோ நேரம் இப்படியே இருந்தோமா.. நேத்து நடந்ததை நினைச்சிட்டு இருந்தோமா??? அப்போ நைட்டு இருந்து இதே இடத்தில் தான் இருக்கேனா..?? சர்.. சர்வா என்னைப் பாக்கலையா??” என்றெண்ணியவள் தன் கணவனை தேடினாள்..

குளியறையில் சத்தம் கேட்டது..

“முழிச்சுட்டானா..?? அவன் திரும்பி வரும் போது நம்ம என்ன செய்றது.. அவன் வேற துண்டை கட்டிட்டு வந்து போஸ் குடுப்பான்…” என்றபடி தன்னிச்சையாய் கடிகாரம் பார்த்தாள். அது எட்டு என்று காட்டவும்,

“ஐயோ ஒண்ணுமே இன்னும் பண்ணல.. நேத்தும் இவன் சாப்பிடல.. முதல்ல வேகமா குளிச்சு ஏதாவது ரெடி பண்ணனும்” என்று வேறு அறைக்கு சென்று குளித்து முடித்து வேக வேகமாய் காலை உணவை சமைத்தும் வைத்தாள்.. மறந்தும் கூட அவளுக்கு தானும் நேற்று இருந்து உண்ணாதது நினைவில் இல்லை..

குளித்து, மாலுக்கு செல்ல தயாராய் வந்தவன் உணவு மேஜையில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தபடி அமர்ந்தான்..

இதை கண்டதும் சௌபர்ணிகாவிற்கு மகிழ்ச்சியாய் போனது.. “அப்போ கோவம் இல்லை போல… ஹப்பா நான் தான் பயந்துட்டேன்…” என நினைத்தபடி வேகமாய் அவனுக்கு தட்டு வைத்து பரிமாற வந்தாள்..

கைகளை உயர்த்தி மறுப்பாய் தடுத்துவிட்டான்.. ஏன் என்பது போல் அவளும் பார்க்க “எனக்கு கை இருக்கு.. கண்ணும் நல்லா தெரியும்.. சோ எனக்கு தேவையானதை நானே பார்த்துப்பேன்…” என்றான் தேவையில் சிறிதே அழுத்தம் குடுத்து..

ஒரு நொடி மனதில் தோன்றிய மகிழ்ச்சி பட்டென்று மறைந்து போனது.. ஆனாலும் அவன் கோவத்தை என் சமையலில் காட்டவில்லையே என்ற எண்ணம் உதிக்க மனம் சற்றே நிம்மதி அடைந்தாள் சௌபர்ணிகா..

“என்ன நினைக்கிறன்னு தெரியும்.. எனக்கு தேவை இல்லாம வெளிய சாப்பிடுறது பிடிக்காது. அதான்.. மத்தபடி உன் சமையல் சாப்பிடனும்னு எல்லாம் இல்லை..” என்றவன் அதற்குமேல் பேசாது உண்டு முடித்து கிளம்பி சென்றுவிட்டான்..

உண்டாயா என்று கேட்கவில்லை உடன் வருகிறாயா என்றும் கேட்கவில்லை, எதோ கடையில் உண்டு கை கழுவி செல்வது போல் சென்றுவிட்டான்..

சௌபர்ணிகாவிற்கோ அவனது அலட்சியம் மனதை போட்டு அறுத்தது.. என்றுமே இவன் இப்படி இருந்ததில்லை.. வேலையில் இருக்கும் போதுகூட பார்த்து பார்த்து கவனிப்பான்.. வீட்டில் யாரும் இல்லாத தனிமை வேறு இன்னும் மூச்சடைக்க வைத்தது அவளை..

இப்படிதான் அடுத்து வந்த இரண்டு நாட்களும் கடந்து போனது.. சர்வேஷ் காலையில் உணவு முடிந்து கிளம்பி செல்பவன் இரவு எப்பொழுது வருவான் என்று அவளுக்கு தெரியவில்லை.. மதிய உணவை மட்டும் டிரைவரிடம் கொடுத்து விடுவாள்… இரவு ஒருநாள் காத்திருந்தாள் அதற்கும் அவன் குற்றம் சொல்ல அதையும் விட்டாள்..

அவ்வாப்போது கார்த்திக் வந்து செல்வான். இது சர்வேஷின் வேலை என்று அவளுக்கும் தெரியும். ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.. சர்வேஷும் கண்டுகொள்ளவில்லை.. இறுதியாக வெளியூருக்கு சென்றிருந்த  வீட்டினர்  அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்..

வீட்டில் ஆட்கள் சத்தம் கேட்டபின்னரே சௌபர்ணிகாவிற்கு சற்று திடம் வந்தது எனலாம்..

“அண்ணி !!!” என்றபடி வந்து ஸ்ரீ கட்டிகொண்டாள்.. விஸ்வநாதன் மருமகளை பார்த்து புன்னகைதவரின் பார்வை சிறிது நேரத்தில் ஆராய்ச்சி பார்வையாய் மாறவும் முகத்தை தாழ்த்தி கொண்டாள் சோபி..

மோகனா வந்து கோவில் குங்குமத்தை மருமகளின் நேற்றில் வைத்தவரின் பார்வையும் மாறியது..

“என்ன சோபி உடம்பு எதுவும் சரியில்லையா?? முகமே வாடி கிடக்கு.. ” என்று விசாரிக்க, 

முதலில் திகைத்து விழித்தவள் பின்னே “இல்.. அதெல்லாம் இல்லை அத்தை..” என்றாள்..

ஸ்ரீயோ ஒருபடி மேலே போய் “என்ன அண்ணி ஆள் இல்லைன்னு வீட்டில ஒரே ரொமான்ஸ் தானா?? அதான் இவ்வளோ டயர்ட்டா இருக்கீங்காளா ??” என்று கேட்டு முடிக்கவில்லை சர்வேஷ் வந்து சேர்ந்தான் அங்கே.

“இந்த நேரம் பார்த்தா இவன் வரணும்…” என்று நொந்துகொண்டாள் சௌபர்ணிகா..

திருமணமான நாளில் இருந்தே யார் இருந்தாலும் இல்லையென்றாலும்  சர்வேஷ் சௌபர்ணிகா அருகில் தான் அமர்வான், ஆனால் இன்றோ தனியே அமரவும் அனைவரின் பார்வையிலும் கேள்வி தெரிந்தது.. மோகனாவும் விஸ்வநாதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.. வந்து அமர்ந்தவன் ஒரு வார்த்தை தானாய் பேசவில்லை..  முன்பு எப்படி இருப்பானோ அப்படியே மாறிப்போனான்..

இப்பொழுது சிறிது நாட்களாய் தான் அனைவரோடும் சகஜமாய், சிரித்து பேசுகிறான், என்று வீட்டினர் எல்லாம் கொஞ்சம் நிம்மதியாய் இருக்க,  இன்று அதுவும் இல்லாமல் போனது.. ஸ்ரீநிதி மாறி மாறி அண்ணன் அண்ணி முகத்தைப் பார்க்க, பெரியவர்களுக்கு சடுதியில் புரிந்தது என்னவோ பிரச்சனை என்று..

சௌபர்ணிகா அனைவருக்கும் இரவு உணவை தயாரிக்க மோகனா மெல்ல பேச்சு கொடுத்தார்..

“என்ன சோபி சர்வா உன்னை நல்லா பார்த்துக்கிட்டானா..??”,

“ஆமா அத்தை…” என்று  பதில் கூறியவள் அவர் முகத்தை பார்க்கவில்லை.. இப்படியாக ஒவ்வொரு கேள்வியாய் கேட்க இதையெல்லாம் கவனித்தபடி இருந்த சர்வேஷ் எழுந்து வந்தான்..

“அம்மா, இப்போ வந்ததுமே என்ன பேச்சு.. போ போய் ரெஸ்ட் எடு.. சுபி சமையல் பண்ணுவா.. பேசி பேசி என் பொண்டாட்டியை வேலை சரியா செய்ய விடலை நீ..” என்று கைகளை பிடித்து இழுத்து சென்றான்..

இச்செயல் மகனுக்கு தன் மேல் இருக்கும் அக்கறையா?? இல்லை மனைவியோடு பேச விடாமல் செய்யும் சூதா என்று குழம்பி போனார் மோகனா… ஒருவித குழப்பப் பார்வையை மகன் மீதும் மருமகள் மீதும் வீசிக்கொண்டே போக, அங்கே அவர்களின் அறையில் இருந்த விஸ்வநாதனோ,

“என்னம்மா மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுதா??” என்றார் ஒருவித வருத்தத்தில்..

“என்னன்னு தெரியலைங்க.. என்னவோ அவனும் சரியில்ல.. சோபியும் எப்படியோ இருக்கா..” என்றவரிடம்,

“ஹ்ம்ம் ரெண்டுநாள் பாப்போம் மோகனா இல்லன்னா சர்வாக்கிட்ட பேசித்தான் ஆகணும்.. நம்ம பொருத்துப்போம் ஆனா வாழ வந்த பொண்ணு பாவமில்லையா..” என,

“நானும் ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து தான் பேசுறேன்.. செய்றேன்.. ஆனா இந்த பையன் இப்படி பண்றானே..” என்றார் வருத்தமாய் மோகனா..

இவர்களின் வருத்தம் எல்லாம் இப்படி சர்வேஷ் சௌபர்ணிகாவை பற்றி இருக்க, அவர்கள் இருவரும் தங்களின் சிந்தனைகளில் கட்டுண்டு கிடந்தனர்..      

        

 

Advertisement