Advertisement

சுகம் – 15

ஆயிற்று இன்றோடு முழுதாய் மூன்று நாட்கள் மறுவீடு வந்து.. அதிலும் மாமியார் வீட்டு விருந்து கசக்குமா என்ன?? அதுவும் மனம் விரும்பிய கணவன் மனைவியோடு இருக்கும் பொழுது??

சர்வேஷ் சௌபர்ணிகா இருவருமே மனம் மகிழ்ந்து தான் இருந்தனர். என்னதான் தங்களுக்குள் சிறு பிணக்கு இருந்தாலும் அதை எல்லாம் வெளிக்காட்டாமல், வெளிக்காட்டாமல் என்பதை விட அவர்களே அதை எல்லாம் மறந்து தான் இருந்தனர்.

அதிலும் கார்த்திக் வீட்டில் இருந்தால் மகிழ்சிக்கு பஞ்சம் வேண்டுமா என்ன?? இந்த மூன்று நாட்களில் ஸ்ரீநிதி கூட இரண்டு முறை வந்துவிட்டாள்.. அவளும் வந்துவிட்டால் பேச்சு சிரிப்பு கும்மாளம் மட்டும் தான் அங்கே..

அவ்வப்போது சர்வேஷ் அவனது வேலைகளையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.. எத்தனை நேரம் தான் அவனும் அங்கேயே இருக்க, ஆக நடுவில் கிளம்பி தினமும் ஒருமுறை மாலுக்கு சென்றுவந்தான்.. ஆனாலும் பெரும்பாலும் மாமனார் வீட்டில் இருப்பதுபோல் நேரம் ஒதுக்கிக்கொண்டான்..

இந்த மூன்று நாட்களில்  சர்வேஷ் ஒன்று மட்டும் நன்றாய் புரிந்துகொண்டான், பிறர் முன்பு சௌபர்ணிகா தன்னை ஒதுக்குவது இல்லை.. இயல்பாய், நெருக்கமாய் தான் இருக்கிறாள் என்று.. ஒருவேளை அவளுக்குமே அப்படி இருப்பதில் தான் விருப்பமோ என்னவோ?? காதல் கொண்ட மனதல்லவா??

உறங்கும் நேரம் தவிர தங்களை சுற்றி யாராவது இருக்கும்படி பார்த்துகொண்டான் சர்வேஷ். இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை சௌபர்ணிகா அவளை பொருத்தமட்டில் பிறந்த வீட்டில் சீராட்டுகிறார்கள் அதை அனுபவிக்கிறாள் அவ்வளவே.

நான்காவது நாள் காலையே சர்வேஷ் கூறிவிட்டான் மாலை வீட்டிற்க்கு செல்லவேண்டும் என்று.. இவன் இத்தனை நாள் பொறுமையை இழுத்து பிடித்து இருந்ததே பெரியது என்று எண்ணியவளுக்கு புரியவில்லை அவனுக்கும் இங்கே இருக்கப் பிடித்தே இருந்தது என்று..

என்னதான் சீர் செய்து அனுப்பினாலும், பெண்பிள்ளைகள் வீட்டிற்கு வரும் பொழுது அவர்களுக்கு தேவையானதை மூட்டை கட்டுவர் அன்னையர். அது போல் தான் புனிதாவும்.

“சோபி, இது எடுத்துட்டு போறியா?? அது, அந்த சுடி உனக்கு பிடிக்குமே அதை கொண்டு போறியா???” என்று ஒவ்வொரு பொருளாய் கேட்பதும் அதற்கு அவள் வேண்டாம் என்று பதில் கூறுவதுமாய் பொழுது நகர்ந்தது..

இதை எல்லாம் கவனித்த கார்த்திக் “அம்மா இதோ இந்த பிரிட்ஜ் சும்மா தான் இருக்கு அப்புறம், இதோ இந்த சோபா இருக்கு இதெல்லாம் கூட மூட்டை கட்டுமா.. என்ன சோபி ?? சரிதானே??” என்று ஒவ்வொன்றாய் காட்டவும் சர்வேஷ் சிரித்துவிட்டான்..

புனிதா மகனை முறைத்தார்.. சௌபர்ணிகாவிற்குமே சிரிப்பு தான் ஆனாலும் அம்மாவின் மனம் நோகும் என்று அடக்கிகொண்டாள்..  வரும் சிரிப்பை அடக்க அவள் பெரும் பாடுபடுவதை கவனித்த சர்வேஷ் தனியாய் அறையில் இருக்கும் போது கேட்டான்

“சிரிப்பு வந்தா சிரிக்க வேண்டியது தானே.. ஏன் அவ்வளோ கண்ட்ரோல் பண்ண??” என்று,

‘ஹா!!! சிரிப்பு வந்த உடனே சிரிக்கிரவங்களுக்கு எல்லாம் சீக்கிரம் வயசாகிடுமாம்..’

“உன்னை தான் சுபி கேட்டேன் பதில் சொல்லு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்??”

“ஹ்ம்ம் அந்நேரம் நான் சிரிச்சிருந்தா அம்மா வறுத்தப் படுவாங்க அதான்.. ”

“ஓ !!! ” என்றவன் அவளை ஆழ்ந்து நோக்கினான்..

“என்ன அப்படி ஒரு பார்வை?? உங்க திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைக்கலையா??” என்று பேச்சை மாற்றினாள்.. 

“ஆமா நாலு சட்டை பேன்ட்.. எடுத்து வைக்க எவ்வளோ நேரமாகும்… ம்ம்ச் ஏன் சுபி எல்லாரையும் சரியா புரிஞ்சு நடந்துக்கிற. ஏன் என்னை மட்டும் புரியல உனக்கு???” என்றான் ஒருவித ஏமாற்றத்தில்..

அப்பாவிற்கு இது அம்மாவிற்கு இப்படி.. தம்பிக்கு இது பிடிக்கும் அத்தனை ஏன் மாமனார் மாமியார் நாத்தனார் என்று அவரவர்க்கு ஏற்று சௌபர்ணிகா பேசுகையில் இல்லை நடக்கையில் என்னை மட்டும் ஏன் இப்படி தள்ளி வைக்கிறாய் என்று வருந்தியது அவனுள்ளம்..

அவனது குரலே அவள் மனதை போட்டு பிசைந்தது.. என்ன பதில் கூறுவாள்?? பழைய பல்லவியை பாட இப்பொழுது விருப்பம் இல்லை தான் ஆனாலும் ஏனோ மனம் இன்னும் முழுமையாய் அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.. காதலித்தவன் தான்.. இப்பொழுதும் கணவனும் தான்.. ஆனாலும்…………………..??????

“சொல்லு சுபி.. நாளைக்கு இருந்து ரொட்டின் லைப் ஆரம்பிச்சிடும்.. இப்படி எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேச அவ்வளோ நேரம் இருக்காது….” என்றவன் இங்கேதான் இவளோடு மனம் விட்டு பேச முடியும் என்று ஒரு எண்ணம்..

அவனது வீட்டில் என்றால் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி கழண்டுவிடுவாள், ஆனால் இங்கே அவளது அப்பா அம்மாவிற்காக என்றாவது அவனிடம் நின்று பேசுவாள் என்ற எண்ணம்..

“ஓ !! கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்கு வரணும் சொன்னீங்க?? அப்போ இல்லையா??” என்று அவள் கேட்ட பாவனையில் இத்தனை நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து சிரிப்பு வந்தது சர்வேஷிற்கு…

“ஹேய்!! சுபி அப்போ நீ அதை நிஜம்னு நினைச்சியா?? நான் சும்மா தான் சொன்னேன். வேலைக்கு வேற ஆள் ரெடி பண்ணிட்டேன்..” என்று சர்வேஷ் சிரிக்க,

அவள் முகமே வாடிவிட்டது. திருமணத்திற்கு பின்னும் அவனோடு சேர்ந்து மாலுக்கு செல்வோம் என்று பல கற்பனைகள் அவள் மனதில் இருந்தது.. அவன் சொன்னது நிஜமென்றே நம்பினாள்.. ஆனால் இப்போது இப்படி என்று தெரியவும் அவனுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல்  மௌனமாய் திரும்பிவிட்டாள்.. அவள் முக மாற்றத்தை கண்ட சர்வேஷ் அவளது தோள்களை பற்றி நிறுத்தினான்..

“என்ன சுபிம்மா??” என்ற அவனது இந்த ஒற்றை ‘சுபிம்மா’ வில் கண்கள் கலங்கிவிட்டது சௌபர்ணிகாவிற்கு.

“நா… நான் நிஜமாவே உங்கக்கூட கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்கு வரணும்னு நினைச்சேன்… நினைச்சேன்னு சொல்றதை விட ஆசை பட்டேன்…” என்றாள் ஏமாற்றம் தாங்காமல்..

‘இத.. இத..  இதை தான் எதிர் பார்த்தேன்…’ என்று வேகமாய் எண்ணியது அவனின் மனம்..

“ஏன் அமைதியா இருக்கீங்க?? அத்தைக்கிட்ட கூட சொல்லிட்டேன். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க.. ஆனா இப்போ நீங்க ஏன் மாத்தி பேசுறீங்க?? சோ எல்லாமே நீங்க நினைக்கிறது தான்.. எனக்குன்னு எதுவுமேயில்லை அப்படித்தான..” என்றவளுக்கு ஒரு சிறு ஏமாற்றத்தை கூட அவளால் தாங்கவில்லை போல..   

அவனோ கைகளை மடக்கி நின்று அவள் பேசுவதை வேடிக்கை பார்த்தான். பேசு பேசு நீ பேசு.. எப்படியேனும் உன் மனதில் இருப்பதெல்லாம் நீ பேசிவிட்டால் நல்லது என்று அவன் நின்றிருக்க, தான் இத்தனை பேசியும் அவன் அமைதியாய் இருப்பது கண்டு  “ம்ம்ச் என்ன சர்வா???” என்றாள் எரிச்சலாய்..    

“லூசு.. சின்ன விஷயம் இதுக்கு போய் அழலாமா?? நான் அப்படி பண்ணுவேன்னு நினைக்கிறியா?? உன்னை எப்போவும் என் கூடவே வச்சுக்க இருக்கிற வழியையும் நான் விடுவேனா?? என்ன சுபி இது சின்னபுள்ள மாதிரி.. ஒரு ஒன் வீக் நீ வீட்டுல இரு. அப்புறம் நானே இருக்க விட மாட்டேன் இழுத்துட்டு போயிடுவேன்…” என்று சொல்ல,

“என்னை சமாதானம் பண்ண ஒன்னும் எதுவும் செய்ய வேண்டாம்.. வேற ஆள் போட்டீங்கதான..பின்ன என்ன..” என்று முகத்தை இன்னும் சுருக்க,

“நிஜமா சுபிம்மா.. நான் சொல்றதை நம்ப மாட்டியா??” என்றான் அவளது கரங்களைப் பற்றி..

“ம்ம்..” என்று அவனின் முகம் காண, அவனோ நிஜம் என்று கண்களை மூடித் திறக்க, அவன் கூறியதை கேட்ட பின்னரே அவளுக்கு சற்று மனம் நிம்மதி ஆனது.. ஆனாலும் “ம்ம்ச் எல்லாமே உங்களுக்கு விளையாட்டு தானா???” என்றபடி லேசாய்  சலுகையாய் அவனை அடித்தாள்.

“ஆமா நீ மட்டும் அடிக்கலாம், தொட்டு பேசலாம், கிட்ட வந்து உட்காரலாம்.. ஆனா நான் எது பண்ணாலும்  முறைச்சு முறைச்சு பாரு” என்று அடித்த கரங்களை விடாது அவன் கேட்க, பதிலுக்கு அவளோ இம்முறை சிரித்தாள்..

“என்ன சிரிப்பு ???”

“ஹ்ம்ம் என் புருஷன் நான் முறைக்கிறேன்.. அதுக்காக போறவங்க வர்றவங்களை எல்லாம் முறைக்க முடியுமா?? போங்க பாஸ் போய் பெட்டிய கட்டுங்க..” என்று அவன் பதிலுக்கு காத்திராமல் ஓடிவிட்டாள்..

எப்படியோ இந்த மட்டும் சகஜமாய் பேசுகிறாளே என்று இருந்தது அவள் கணவனுக்கு.. வீட்டில் மாட்டியிருக்கும் கடிகாரத்தில் பேட்டரி தீர்ந்துபோனாலும் காலம் யாருக்கும் நிற்காதே. அதுபோல அவர்கள் கிளம்பும் நேரமும் வந்தது.

புனிதா பரந்தாமன் கார்த்திக் மூவரும் வாசல் வரை வந்து வழியனுப்பினர்.. சௌபர்ணிகா திரும்பி திரும்பி பார்த்தபடி காரில் ஏறினாள். சர்வேஷும் அவள் மனநிலை புரிந்து எதுவும் பேசாமல் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

வீட்டிற்கு வந்தாலோ இவனை கேட்பாரில்லை. விஸ்வநாதன் மட்டும் மகனை கண்டு மெல்லமாய் சிரித்தார். ஆனால் பெண்களோ அவளிடம் தான்.. பொருத்து பொருத்து பார்த்தவன் வேண்டும் என்றே ஸ்ரீநிதிக்கும் சௌபர்ணிகாவுக்கும் இடையில் சென்று அமர,

“அண்ணா, அண்ணிக்கிட்ட உட்காரனும்னா சொல்ல வேண்டியதுதானே.. அதுக்கு இப்படியா இடிபாடு மாதிரி வருவ???” என்றாள் ஸ்ரீ..

“ஹ்ம்ம் நான் அதுக்காக எல்லாம் வரல..” என்று மிடுக்காய் அவன் பதில் சொல்ல,

“பின்ன???” என்று புரியாமல் பார்த்தாள் அவனின் தங்கை.

“ஏன்மா, நானும் தான இங்க மூணு நாளா இல்ல. யாருக்காவது என்கிட்டே பேச தோனிச்சா.. நான் கோவமா இருக்கேன்..” என்று  வேண்டுமென்றே முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டான்..

ஸ்ரீக்கோ ஆச்சரியம். தன் அண்ணன் முன்பு போல பேசவும், சீண்டவும், வீட்டினரோடு சகஜமாய் இருப்பது செய்வதை கண்டு.. இதே போல் இனியும் இருந்துவிட்டால் பிரச்னையே இல்லை என்று எண்ணினாள்.. மோகனாவிற்கோ  மகன் மருமகள் முகத்தில் இருக்கும் புன்னகையே போதுமாய் இருந்தது..   

“ஸ்ரீ அவங்க போய் ரெஸ்ட் எடுக்கட்டும்.. நாளைக்கு இருந்து அவன் மாலுக்கு போகணும்… சோபி நீயும் போறியா என்ன…????”

“ஹ்ம்ம் 24 * 7… என்ஜாய்… ” என்றால் ஸ்ரீ..

சௌபர்ணிகாவிற்குமே தான் எப்பொழுதும் கணவனோடு இருக்க போவதை எண்ணி மகிழ்ச்சியாய் தான் இருந்தது,.. அங்கே வந்தால் எப்படி நடந்துகொள்வான். இதே போல் சீண்டுவானா?? சிரிப்பானா?? இல்லை முன்னை போல் முறைப்பாநா?? இப்படி பல கேள்விகள்..

மோகனா கேட்ட கேள்விக்கு சர்வேஷ் பதில் கூறினான் “இல்லைம்மா சுபி ஒரு வாரம் கழிச்சு தான் வருவா.. கொஞ்சம் இங்கயும் பழகட்டுமே..”

“ஓ!! அப்போ சரி சர்வா.. ஸ்ரீக்கு ஸ்டடி லீவு தான்.. இப்போதான் உன் அத்தை  போன் பண்ணாங்க.. அவங்க ஊர் திருவிழாவாம்.. உடன் பிறப்பு அழைக்கவுமே உன் அப்பா போகணும்னு சொல்றார்.. நாங்க போயிட்டு ஒரு நாலு நாள்ல வந்திடுவோம்…சோபி வீட்ல இருந்து எல்லாம் பார்த்துக்கட்டும்..” என்றார் சாதாரணமாய்..

சௌபர்ணிகாவிற்கு பக்கென்று இருந்தது… நாலு நாட்கள்.. நான் மட்டும் தனியே இவனோடு… “ஐயோ..!! படுத்துவானே…” என்று அவன் முகம் தான் பார்த்தாள்.

இவளது எண்ணத்திற்கு நேர்மாறாய் சர்வேஷ் எண்ணினான் “வாவ்.. வாட் எ சான்ஸ்.. சர்வா தீயா வேலை செய்யணும். சுபியை கரக்ட் செய்யணும்”

“என்னத்தை இப்படி சொல்றிங்க?? நா……………….லு நாள்.. நான் மட்டும் எப்படி?? ” என்று தயங்கினாள் சோபி..

“ஒரு வாரம் திருவிழா. நான் தான் நாலு நாள் போதும்னு சொல்லிட்டேன்.. எப்பவும் வருசா வருஷம் கூப்பிடுவாங்க.. நியாயமாய் பார்த்தா உங்களையும் கூட்டிப்போகணும்..” என்று மோகனா சொல்லும்போதே,

“இல்லைம்மா அதெல்லாம் வேண்டாம்.. நான் சுபிக்கு கூட மாட கொஞ்சம் ஹெல்ப் பண்றேன்.. அவளுக்கு போர் அடிச்சா நான் என்கூடவே கூட்டிட்டு போறேன். இல்லை கார்த்திக்கு லீவ் தானே அவன் வந்து பார்த்துப்பான்..” என்று  பட்டென்று வந்தது சர்வேஷிடம் பதில்..

ஹ்ம்ம் இதற்கு மேல் சோபி ஏதாவது சொல்லி அங்கே சர்வேஷிடம் பளிக்குமா என்ன?? மறுநாள் பொழுது  விடிந்ததும் சர்வேஷ் சௌபர்ணிகா தவிர மற்ற அனைவரும் கிளம்பிவிட்டனர்..

பெரிய வீடு என்றில்லை ஆனாலும் இத்தனை நாள் ஆட்கள் இருந்துவிட்டு இன்று இருவர் மட்டும் இருப்பது எப்படியோ இருந்தது சோபிக்கு. அவளை பொருத்தமட்டில் பேச ஆள் வேண்டும்.. சர்வேஷின் வேலை பளு அவளுக்கு நன்கு தெரியும்.. அவளே கண்டிருக்கிறாளே.. அவனையும் எதற்கும் தொல்லை செய்யக் கூடாது என்று நினைத்தாள்//

முதலில் அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. இரண்டு முறை வீட்டை சுற்றி சுற்றி வந்தாள்.. பிறகு சமைக்க வேண்டுமே என்ற எண்ணம் எழ சமையலறைக்குள் நுழைந்தாள்.. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. அங்கே அவளின் அம்மா வீட்டு சமையல் அறைக்கும் இங்கேக்கும் நிறைய நிறைய வித்தியாசங்கள்.. பொருட்கள் அடுக்கி வைத்திருப்பதாகட்டும், இல்லை சமையல் முறையாகட்டும் எல்லாமே வித்தியாசம் தான்.. இவளுக்கும் ஓரளவு சமையல் தெரியுமென்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு  எது எது எதில் இருக்கிறது என்று தெரியவில்லை..

முதலில் பொருட்கள் எல்லாம் எதில் இருக்கிறது என்று பார்த்துவிட்டால் பின் சமைப்பது எளிது என்று தோன்றவும், என்ன சமைப்பது என்று முடிவு செய்து அதற்கு ஏற்றார் போல் தேவையான பொருட்களை எடுத்துவைப்போம் என்று பார்த்து பார்த்து செய்துகொண்டு இருந்தாள். கொஞ்சம் தவிப்பாகவும் தான் இருந்தது. 

அவள் இப்படி எல்லாம் அவதி படுவாள் என்று தெரிந்து தான் சர்வேஷ் சமையலறை பக்கம் வந்தான். அவனுக்கும் ஓரளவு சமையல் தெரியும். அதைவிட சௌபர்ணிகா பற்றி நன்கு தெரியுமல்லவா..  

அவனை கண்டதும் “என்ன கிச்சன் பக்கம்???” என்று வினவினாள் சோபி..

சர்வேஷோ வீட்டில் ஆள் யாரும் இல்லை என்றதும் ஒரே குஷி மூடில் தான் இருந்தான். இருந்தாலும் யாரும் கண்டுகொள்ள போவது இல்லை ஆனாலும் ஒரு தயக்கம் இருக்குமே.. இப்பொழுது அதில்லையே.

இரண்டு கைகளையும் வீசியபடி “ஹா !!! கிச்சனுக்கு வந்தா கிஸ் கிடைக்கும்னு சொன்னாங்க…” என்றான் உல்லாசமாய்..

‘என்ன நம்மல மாதிரி பேசுறான்…. கூடாதே.. வாழ்க்கையில் ஒருத்தர்மட்டும் தான் பன்ச் பேசணும்..’ என்று நினைத்தவள்   “கிஸ்மிஸ் கூட கிடைக்காது.. இடத்தை காலி பண்ணுங்க…” என்றாள் ஒவ்வொரு டப்பாவாய் திறந்து பார்த்துக்கொண்டே..

“அதான்.. அதான் அதே தான் சுபி, கிஸ்ஸ மிஸ் பண்ணகூடாதுன்னு தான் வந்தேன்..” என்று அவனும் விடாது பேச,

‘என்னடா சோபி உனக்கு வந்த சோதனை.. தனியா மாட்டிகிட்டயே…’ என்று நொந்தவள். எதையும் வெளிக்காட்டாது வேலை செய்ய, 

“என்ன சுபி குட்டி ஒரே திங்கிங்…” என்றான் அவனோ கொஞ்சலாய்..

“நத்திங்….”

“அதானே பார்த்தேன் இவ இந்த நத்திங்கை விட்டாளோன்னு..” என்று கடிந்தவன்  “அப்புறம் சுபி என்ன செய்யுற??” என்று பேசியபடி அவளிடம் நெருங்கி நின்றான்..

“ம்ம்ச் இப்போ எதுக்கு இப்படி கிட்ட வர்றீங்க??? எனக்கு வேலை இருக்கு” என்று  கோவமாய் ஆரம்பித்து சிணுங்கலாய் அவளது குரல்..

“என்ன சுபி இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லை. கல்யாணம் ஆன இளம் ஜோடிங்க.. வீட்டில வேற யாருமில்லை.. அதுவும் காதலிச்சு கல்யாணம் பண்ணவங்க வேற.. இப்படிக்கிட்ட கூட வரலைன்னா லவ் காட் கோவப்பட்டு சபிச்சுட போறார்.” என்று இலகுவாய் சொல்ல,

“ஆமாமா முன்ன மட்டும் உங்க லவ் காட் நல்லா வாழ்த்திட்டார்.. நீங்களும் அப்படியே காதல் மழைல என்னை நனையவச்சிங்க.. போங்க அந்தபக்கம்..” என்று  சலுகையாய் அவனை தள்ளினாள்..

இத்தனை நாளில் சர்வேஷ் ஒன்றை மட்டும் தெளிவாய் புரிந்திருந்தான். சோபியிடம் இலகுவாய் எத்தனை பெரிய விசயத்தை பேசினாலும் அவளும் அதை இலகுவாய் ஏற்றுகொள்வாள். கொஞ்சம் சீரியஸ் மோடில் பேச ஆரம்பித்தால் அவளும் அதுபோலவே பேசுகிறாள்.. அடுத்தது கட்டும் கண்ணாடி போல..

“சுபி..” என்றபடி அவளது கைகளை பற்றியபடி தன்பக்கம் இழுத்தான்.. அவளுக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை.. இத்தனை நாள் இப்படியெல்லாம் செய்தது இல்லை.. இன்று மட்டும் எப்படி?? யாருமில்லை என்ற தைரியமா ??? இல்லை மனைவி என்ற உரிமையா??? ஆனாலும் யாரும் தான் இருந்தாலும் என்ன?? என்று எண்ணியவள், விழிகள் விரித்து அவனை வியந்து பார்த்தாள்..

அவனோ புன்னகையாய் நின்று இருந்தான்.. அவன் மனதில் இருந்த காதல் கண்களில் ஜொலித்தது.. இப்படியெல்லாம் பார்க்கமாட்டானா என்ற ஏங்கியது எல்லாம் எப்பொழுதோ போன பிறவி போல என்று தோன்றியது சௌபர்ணிகாவிற்கு..

“என்… என்ன ???? திடீர்னு..” என்று திக்கி திணறினாள். ஆனால் அவனது பிடியில் இருந்து விடுபட முயலவில்லை..

“திடீர்னு எல்லாம் இல்லை.. ஏன் நான் உன்கிட்ட இப்படி பேசக்கூடாதா??” என்றவன் அவளது விழிகளையே ஆழ்ந்து நோக்கினான்..அவளால் பார்வையும் திருப்ப முடியவில்லை..

‘ஹய்யோ மெஸ்மரிசம் பண்ணி நம்மள எதுவும் பண்ணிடுவானோ…. ‘

“இத்தன நாளை தான் நாம வேஸ்ட் பண்ணோம்.. இப்போ கல்யாணமும் ஆகிடுச்சு.. இனியும் நம்ம ஏன் இப்படி இருக்கணும்…???” என்றதும் அவளுக்கு சடுதியில் பழைய கோவமெல்லாம் எட்டி பார்த்தது..  

“எதுக்கு???” என்றவளின் கோபம் தெரிய,  அதுவும் புரிந்தது அவனுக்கு..

“ஹேய் சுபி நீ நினைக்கிறது மாதிரி எல்லாம் எதுவுமில்லை… லவ் பண்ணும் போது தான் ரெண்டு பெரும் தனி தனியா மனசுக்குள்ள பண்ணிகிட்டோம்.. இப்போ ஒண்ணா இருக்கோம் இப்போகூட நம்ம உருப்படியா லவ் பண்ணலைனா எப்படி சுபி..”

கோபம் போய் புரியாத பாவனை இப்பொழுது அவளிடம்..

“நம்ம செய்யாம விட்ட காதலை எல்ல்ல்லாம் இப்போ செய்யலாம் சுபி.. இவ்வளோ நாள் மிஸ் பண்ணோம்.. இனியும் மிஸ் பண்ண வேண்டாம்.. லைப்ல அடுத்த கட்டம் போகணும்னு சொல்லல. அதெல்லாம் தானா கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பயாலஜி எல்லாம் நடக்கும்.. நம்ம அட்லீஸ்ட் லவ் மட்டும் பண்ணுவோமே.”

கிட்டத்தட்ட கெஞ்சாத குறை தான் சர்வேஷ்.. அவனுக்கு சோபியிடம் எப்படி நெருங்குவது என்று தெரியவில்லை.. ஆனால் அவளிடம் பேசிப்பார்த்தால் பயனிருக்கும் என்று மட்டும் உறுதியாய் நினைத்தான்.. அதற்கு தோதாய் வீட்டில் இருப்பவர்கள் தனிமை கொடுத்து செல்லவும் அவனுக்கு நன்றாய் போனது..

“என்ன சுபி யோசிக்கிற ???”

“அதான் சொல்லிட்டீங்களே யோசிக்கிறேன்னு.. அப்புறம் என்ன???” அவன் பேசியது அவளுக்கும் சரியென்றே பட்டாலும் உடனே சரி சொல்ல வேண்டுமா என்ற எண்ணம் அதான் அவளுக்கு..

“என்னை இத்தனை நாள்ல என்ன படுத்தி இருப்பான்..” என்ற சிறு பிடிவாதம்  தான்..

இத்தனை வருடங்களை தான் வீணடித்துவிட்டோம்.. இனியாவது உருப்படியாய் இருப்போம் என்றே தோன்றியது சௌபர்ணிகாவிற்கு.. அவன் சொல்வதெல்லாம் சரிதான்… ஆனால் யாருமில்லை என்றதும் தானே இவன் இப்படி வந்து பேசுகிறான் என்றும் இருந்தது..

“ஹ்ம்ம் சரி.. ஆனா எனக்குமே மனசுக்கு என்னவோ குழப்பமா தான் இருக்கு.. அன்னிக்கு நீங்க பேசினதும் கோவம் வந்தது தான். ஆனா யோசிச்சு பார்த்தா என் மேலவும் தப்பு இருக்கமாதிரி தான் இருக்கு…” என்றாள் கொஞ்சம் தயங்கி..

‘ஹப்பா !!!! குழப்பிவிட்டோம்… குழம்பின குட்டையில் மீன் பிடிக்க வேண்டியது தான்…’ என்று சரேஷ் மனதில் ஒருவித நிம்மதி..

“என்ன பதில் சொல்லாம அப்படி பாக்குறீங்க…??”

“எந்த ஒரு விஷயத்துக்குமே அவங்க அவங்க பக்கம் ஒரு நியாயம் இருக்கும் சுபி…”

‘அய்யயோ. ஆரம்பிச்சுட்டானே…. கிளாஸ் எடுக்க..’ என்று நினைத்தவள்,  “சரி சரி அதெல்லாம் இருக்கட்டும்.. நீங்க போய் ரெடி ஆகி வாங்க. நான் எதாவது சமையல் செஞ்சுவைக்கிறேன்..” என்று அவனது முதுகில் கை வைத்து தள்ளினாள்..

கல்யாணம் ஆனதில் இருந்து சௌபர்ணிகா இயல்பாய் அவனை தொட்டு தான் பேசுகிறாள். ஆனால் அந்த இயல்பு ஏனோ சர்வேஷிற்கு அவ்வளவு இயல்பாய் வரவில்லை.. அது ஏன் என்றும் தெரியவில்லை…

முதலில் இந்த ஒதுக்கத்தை விரட்ட வேண்டும் என்று எண்ணியவன் “சரி தள்ளாத, போறேன்.. ஆனா அதுக்கு முன்ன ஒரே ஒரு கிஸ்…” என்று சிரித்தபடி நிற்க,

“என்னது ???? கிஸ்ஸா…..” என்று கண்களை விரித்தாள்.  

“கிஸ்ஸா இல்ல சுபி கிஸ்.. ஷார்ட் ஸ்வீட்டா சொல்லணும்.. சொல்றதை விட குடுக்கணும்.. அதான் இன்னும் ஸ்வீட்டா இருக்கும்”

‘ஹய்யோ இவன் வேற நேரம் காலம் தெரியாம… கிஸ்க்கு கிளாஸ் எடுக்கிறான்.. வேணும்னா குடுத்துட்டு போகவேண்டியது தானே…’ என்று அவனை பார்க்க,

“ஓய் என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு ???”

“உங்களுக்கு என்ன சத்தம் எல்லாம் பலமா இருக்கு ???”

“பாருடா பதிலுக்கு பதிலா… சரி சரி கிவ் ஓன் டேக் ஒன்….”

‘ஒரு முத்தத்துக்கு பாலிசி போட்டவன் என் புருசனா தான் இருப்பான்…’ என்று நினைத்தவள் அதனை முகத்திலும் காட்ட,

“சுபி என்ன அப்பபோ நீ சைலன்ட் மோடுக்கு போற.. நல்லதில்ல…” என்று கூறியவன் அவள் எதிர்பாரா நிமிடத்தில் இதழ் பத்திதான் அவள் இதழின் மேல்..

“பேச்சு பேச்சா மட்டும் தான் இருக்கணும்…” என்று சொல்ல நினைத்தவளை வாய் பூட்டிவிட்டானே.. திகைத்தாள்… திமிறினாள்…. தயங்கினாள்… தஞ்சமடைந்தாள்..

யாருமில்லா அவ்வீட்டில், இந்த காதல் பறவைகள், புதிதாய் ஒரு காதல் ஒப்பந்தம் போட்டு முதல்படி எடுத்துவைக்க, இந்த இதழ் ஒற்றுதல் எத்தனை நேரம் தொடர்ந்ததோ, தொடர்ந்திருந்தால் இன்னும் என்ன நடந்திருக்குமோ வீட்டின் காலிங் பெல் ஓசை விடாது ஒலித்து இவர்களின் முத்தத்திற்கு தற்காலிக முற்றுபுள்ளி வைத்தது..

அத்தனை நேரம் எத்தனை விதமாய் வாயடித்த சோபிக்கு இப்பொழுது சர்வேஷின் முகம் காண்பது கூட முடியாமல் போனது.. எதிர் பாராத நேரத்தில் எதிர் பார்க்காத ஒன்று.. முகம் சிவக்க, லேசாய் மூச்சு வாங்க, சமையல் அறை மேடையை இறுக பற்றி நின்றிருந்தாள் சோபி…   

சர்வேஷோ  மனைவியின் முகத்தில் தோன்றிய மாற்றங்களை எல்லாம் ரசிக்கும் ரசிகனாய் மாறி நின்றிருந்தான்..  இடைவிடாது காலிங் பெல் அடிக்க..  சௌபர்ணிகாவிற்கோ அவளது இதய துடிப்பின் ஓசையை தாண்டி காலிங் பெல் சத்தமாவது இன்னொன்றாவது என்ற ரீதியில் மூளைக்குள் எதுவுமே பதியவில்லை.. அவள் நிற்பதும், பார்ப்பதும், லேசான படபடப்பும் சர்வேஷை இன்னும் நெருங்கவே தூண்டின..

ஆனால் விதி வெளியே மணியடிக்க வேகமாய் இன்னொரு முத்ததை அவள் கன்னத்தில் பதித்துவிட்டு விசிலடித்தபடி சென்றான் கதவு திறக்க..

‘ரவுடி… என்ன பண்ணிட்டான். ஹய்யோ நானே ஷாக் ஆகி நிக்கிறேன்.. இவன் நடந்து  போறான். பவர் சப்ளை சரியா இல்லையோ.. போச்சு.. முன்ன கிளாஸ் எடுத்து கொள்ளுவான்.. இனி காதலிச்சு கொள்ளுவானோ…’ என்று அவனை காதலாய் கடிந்துகொண்டு இருக்கும் போதே

“சுபி…… சுபி……….  ” என்று அழைத்தான் வெளியே நின்று.

அவளோ செல்லாமல் தயங்கி தயங்கி நிற்க, “சுபி……… ” என்று மீண்டும் அழைத்தான்..

“ஹேய் சோபி கண்ணு.. என்ன பண்ற மாமா இவ்வளோ நேரம் தவளையா கத்துறார்…  ” அடுத்து கார்த்திக்கின் குரல்..

தம்பியின் குரல் கேட்டதும் அத்தனை நேரம் இருந்த உணர்வு மாறி புள்ளி மானாய் துள்ளி வந்தாள்..

“கார்த்திக்….. வா டா….” என்று வந்தவளின் முகத்தில் தெரிந்த மகிழ்வு இப்போது முற்றிலுமாய் வேறொரு விதத்தில்.. 

“எவ்வளோ நேரமா கூப்பிட்டேன் சுபி.. அவ்வளோ சீரியஸா என்ன சமைச்ச ??” என்று கார்த்திக்கின் பின்னே நின்றபடி கண்ணடித்தபடி கேட்டான் சர்வேஷ்…

அவளுக்கோ சட்டென்று பதில் சொல்லவும் வரவில்லை. தம்பி முன்னே முகத்தையும் சீராய் வைத்திருக்கவும் முடியவில்லை.. சர்வேஷை ஒரு பார்வை பார்த்தவள் பட்டென்று திரும்பிக்கொண்டாள்..

“ஹேய் சோபிக்கண்ணு… மாமா கேட்கிறார்ல..”

“முதல்ல உட்காரு கார்த்திக்.” என்றவள்  மறந்தும் கூட கணவன் பக்கம் முகம் காட்டவில்லை..

“பாரு கார்த்திக்.. உன் அக்காவை நம்பி என் அப்பா அம்மா விட்டுட்டு போயிருக்காங்க.. இன்னும் ஒரு காபி கூட குடுக்கல.. என்னன்னு கேட்க போன என்னையும் கிச்சன்ல இருந்து வெளிய தள்ரா..” என்று  வேண்டுமென்றே சோபியை சீண்டினான்.

“மாமா இவ போடுற காபிக்கு நீங்க பட்டினியே இருக்கலாம்.. தப்பிச்சிங்கன்னு சந்தோஷ படுங்க”

“அப்படியா சுபி???” என்று ஆர்வமாய் பார்ப்பது போல் பார்த்தான்.

அவளோ பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்க, “என்ன சோபி இப்போ எல்லாம் அமைதியின் சொரூபமா மாறிட்ட.. மாமா முன்ன எல்லாம் அடுத்தவங்க முன்னாடி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுவா தெரியுமா ???” என்று அக்காவில் ஆரம்பித்து கார்த்திக் மாமாவிடம் முறையிட,

‘இப்போ அதெல்லாம் கேட்டானா இவன் ?? கார்த்திக் எப்போ இருந்து எனக்கு கொ. ப. செ வா மாறினான்..’ என்று பல்லை கடித்தாள் சௌபர்ணிகா..

“சுபி…….” இம்முறை அழுத்தம் திருத்தமாய் வந்தது சர்வேஷின் குரல்..  திடுக்கிட்டு அவன் முகம் பார்த்தாள்.. அவளை பார்த்து கார்த்திகை நோக்கி கண் காட்டினான் பேசு என்பதுபோல்.. அவளும் அது புரிந்து,  

“என்.. என்ன கார்த்திக்..” என்றாள் மெதுவாய்..

“ஹா !!!! இப்போவாது  நினைவு திரும்பிச்சே… மாமா தான் வர சொன்னார் சோபி..பட் எதுக்குன்னு எனக்கும் தெரியாது…” என்றதும் “எதுக்கு..??” என்று சௌபர்ணிகா சர்வேஷ் முகம் நோக்கினாள்.

“அது கார்த்திக். உனக்கு ஸ்டடி லீவ் தானே. எப்படியும் படிக்கமாட்ட தெரியும்… அதுக்கு உருப்படியா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு…”

“மாமா இதுக்கு நீங்க ஒரு ஹெல்ப்னு மட்டும் சொல்லி இருக்கலாம்… ”

“சரி சரி விடுடா.. நானும் உன் அக்காவும் அவுட்டிங் போலாம்னு இருக்கோம். நீ மதியம் வரைக்கும் மட்டும் மாலுக்கு போறியா. அங்க சொல்லிட்டேன்.. கொஞ்சம் நேரம் மட்டும் போய் பார்த்துக்கோ.. முடியுமா?? இல்லை மாமாக்கிட்ட எதுவும் நான் கேட்கணுமா ???

‘அவுட்டிங்கா… இது எப்ப இருந்து..’ என்று  கார்த்திக், சௌபர்ணிகா இருவரின் முகத்திலும் ஒரே பாவனை..            

 

 

                                             

                     

Advertisement