Advertisement

சுகம் – 14

“இவன் எப்போ குளிச்சு வர, அத்தை வேற வந்து சொல்லிட்டு போயிட்டாங்க…லேட்டா போனாலும் நல்லா இருக்காது..” என்றபடி அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டு இருந்தாள் சௌபர்ணிகா.

அவள் நினைத்தது அவளது கணவனுக்கு கேட்டதோ என்னவோ வெறும் துண்டை மாட்டும் கட்டிக்கொண்டு ஈர உடம்போடு வந்து வெளிவந்தான் சர்வேஷ். குளியறை கதவு திறக்கும் ஓசை கேட்டு பட்டென்று திரும்பியவள் இவன் இந்த கோலத்தில் வருவதை கண்டு ஒருநொடி திகைக்க,

அவளது திகைப்பை பார்த்து மெல்ல புன்னகை பூத்தவன் “என்ன சுபி காலையிலேயே சைட் அடிச்சா எப்படி…??? ” என்று வினவினான்..

அவன் மேலிருந்து வந்த சோப்பின் வாசமும், அவனது பார்வையும், புன்னகையும் அவளை என்னவோ செய்தது.. தன் கண்கள் செய்யும் வேலையை தடுக்க நினைத்தும் முடியாதவாளாய் நின்று இருந்தாள்.. அவளின் நிலை புரிந்த சர்வேஷோ அவளை இன்னும் நெருங்கி “என்ன சுபி??” என்றான் மிகவும் மென்மையாய்..

சர்வேஷின் அருகாமையும் தொடுகையும் அவளை இவ்வுலகிற்கு மீட்டது.. தன் தலையை உலுக்கிகொண்டவள் வேகமாய் அவனிடம் இருந்து விலகி குளியறைக்குள் புகுந்து கொண்டாள். அவனது சிரிப்போ இன்னும் பலமாய் கேட்டது அவளுக்கு.

‘ம்ம்ச் இப்போ எதுக்கு இப்ப பல்லு சுளுக்குற மாதிரி சிரிக்கிறான்..’ என்று கடிந்தவள் குளிக்கத் தயாராக, 

வெளிய சர்வேஷோ “சுபி, எதுவும் எடுக்காம போயிட்ட, ஒருவேளை நான் உனக்கு ட்ரெஸ், அப்புறம் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எல்லாம் எடுத்து கொடுக்கணும்னு நினைக்கிறியா என்ன?? ஐம் ரெடி சுபி…” என்று சிரித்தபடி கதவின் வெளி நின்று கூறவும், படக்கென்று கதவு திறந்து வந்தவள் தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு அவனை முறைத்தபடி மீண்டும் உள்ளே புகுந்துகொண்டாள்..

“ச்சே.. வெட்கமாயில்ல.. இப்படியா வந்து நிக்கிறது…” என்று அவனை திட்டியபடி குளித்து முடித்து வெளியே வந்தாள்..

அப்பொழுதும் அவன் அங்கே தான் இருந்தான்.. என்னவோ வேலை இருப்பது அறையில் அதுவும் இதுவும் செய்வதும், அங்கே இங்கே நடப்பதுமாய் இருக்க, குளித்து வந்தவளோ “இங்கயே எவ்வளோ நேரம் இருப்பிங்க ???” என்றாள்..

“ஹ்ம்ம் நீ எவ்வளோ நேரம் இருக்கியோ அவ்வளோ…” என்றான் இரு கைகளையும் விரித்து.  

“ம்ம்ச் நான் ட்ரெஸ் மாத்தனும்..” என்று அவளையும் அறியாமல் அவளது குரல் சினுங்கியது..

“சுபி நீ இப்படி எல்லாம் சினுங்காதா.. ஐ வில் லூஸ் மை கண்ட்ரோல்” என்று அப்போதும் சிரித்தபடி சொல்ல,

“கெட் அவுட்டுனு டீசெண்டா சொன்னா தான் புரியுமா??” என்றாள் வேகமாய்.

“சரி சரி நான் பால்கனில இருக்கேன். ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு சொல்லு. முதல் நாளே தனி தனியா போனா நல்லா இருக்காது..”என்றபடி அவன் செல்ல,

“அதானே பார்த்தேன். நான்கூட பொண்டாட்டி மேல இருக்க பாசமோ நினைச்சேன். ஹ்ம்ம், உங்க புத்தி மாறவே போறதில்லை..” என்றாள் வெடுக்கென்று..

அத்தனை நேரம் சிரித்தபடி அவளிடம் வம்பளத்தவன் முகம் அப்படியே கூம்பி விட்டது.. வலி நிறைந்த ஒரு பார்வையை பார்த்துவிட்டு அமைதியாய் சென்று விட்டான்.. அவன் அமைதியாய் சென்றதும் அவளுக்கு எப்படியோ இருக்க,

“பேசிட்டு இருக்கும் போது இப்படி போனா என்ன அர்த்தம்???” என்றபடி அவன் பின்னோடே செல்ல,   

அவனோ வேகமாய் திரும்பியவன், “உனக்கு என் முன்னாடி ட்ரெஸ் மாத்தணும்னு ஆசை போல. அதான் போறவனையும் பிடிச்சு இழுக்குற…” என்றானே பார்க்கலாம்.

அதற்குமேல்  சோபி இல்லையில்லை அவனது சுபி  வாய் திறப்பாளா என்ன.. ஒருவழியாய் இருவரும் தங்கள் சண்டைகளுக்கு நடுவே தயாராகி கீழ் இறங்கி வந்தனர். ஒருசில நெருங்கிய உறவுகள் மட்டுமே இருக்க, அவர்களும் முன்னமே பழக்கம் என்பதால் சௌபர்ணிகாவிற்கு அத்தனை சிரமமாய் இல்லை..

“அண்ணி ” என்று வந்து கட்டிக்கொண்டாள் ஸ்ரீநிதி..

“ஹ்ம்ம் எல்லாம் என் நேரம்..” என்று முனுமுனுத்தான் சர்வேஷ்.

“என்னது ???”

“நத்திங்..” என்றவன்  ஸ்ரீயிடம் பேசு என்பது போல கண் காட்டினான்..

இதை எல்லாம் கவனித்த ஸ்ரீநிதியோ தவறாய் புரிந்துகொண்டாள்.. என்னவோ இருவரும் சகஜமாய் இருப்பதுபோல் நினைத்துகொண்டாள்..

“அண்ணி… இதெல்லாம் நிஜம் தானா?? என்னால நம்பவே முடியல இந்த துர்வாசரா கண் ஜாடை காட்டுறது..??” என்று வியந்து கூறவும் சௌபர்ணிகாவும் சிரித்துவிட்டாள்.

இதை கண்ட சர்வேஷோ “எல்லார்கிட்டயும் சிரிக்கவேண்டியது. என்கிட்ட மட்டும் சீர வேண்டியது.. மனசுல இருக்கிறத சொன்னது தப்பா போச்சு.. எப்படி பேசிட்டா.. வலி இவளுக்கு மட்டும்தானா.. ஏன் எனக்கில்லையா…” என்று  யோசனையில் ஆழ்ந்துவிட்டான்..

மகனின் முகத்தை பார்த்த விஸ்வநாதன் “என்ன சர்வா ஒரே யோசனையா இருக்க ??” என்று வினவினார்..

“அப்பா.. அதெல்லாம் எதுவும் இல்லை சும்மாதான்.” என்று சமாளிக்க,

“பிரச்சனை எதுவும் இல்லையே..???” என்று அவர் திரும்பக்  தந்தை கேட்கவும், அவனையும் அறியாமல் சர்வேஷின் பார்வை சோபியிடம் சென்றது.

அவளோ ஸ்ரீயிடம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள்.. பிரச்சனை இல்லையென்று நினைத்தால் இல்லை.. ஆனால் இருக்கிறது என்று நினைத்தால் பெரிதாய் இருக்கிறது.. இதில் இல்லையென்று நினைப்பதா இருக்கிறது என்று நினைப்பதா என்று தெரியாது சௌபர்ணிகாவின் மீது பார்வையை பதித்திருக்க, விஸ்வநாதனோ அவனது பார்வையை சரியாய் தவறாக புரிந்துகொண்டு மகனின் தோள்களில் மகிழ்ச்சியாய் தட்டிவிட்டு சென்றார்..

‘நான் என்ன நினைக்கிறேன். இவர் ஏன் சிரிக்கிறார்…’ என்று எண்ணியவன் அவர் என்ன நினைத்திருப்பார் என்பது புரியவும் ‘அப்பா!!!’ என்று தன்னையே நொந்துக்கொண்டவன் பார்வையை மீண்டும் சௌபர்ணிகாவின் பக்கம் வீசினான்..

நீ என்ன வலை வீசினாலும் நான் சிக்கமாட்டேன் என்பது போல அவளோ இவன் பக்கம் திரும்பவே இல்லை.. இத்தனை வருடம் காதலித்தவள் என்று இவளை பார்த்தால், யாரும் கூறுவார்களா என்ன?? “ஹ்ம்ம் !!!” ஒரு ஆழ்ந்த பெரு மூச்சை வெளியிட்டவனை மோகனா முறைத்தார்.

“என்னம்மா…. ”

“ஏன்டா பிடிச்சு வச்ச பிள்ளையார் போல இப்படி உட்காந்திருக்க?? நேத்து தான் கல்யாணம் ஆகியிருக்கு இப்படி தான் தனியா வந்து இருப்பியா?? போ போய் சோபிக்கிட்ட இரு. என்னதான் பழகின மனுசங்கனாலும் இது அவளுக்கு புது இடம்..” என்று விரட்டவும்

“அட ஆண்டவா!!!! நல்லா விளையாண்டிங்க முனீஸ்வரா என் வாழ்கையில..” என்றபடி சௌபர்ணிகாவிடம் சென்றமர்ந்தான்.

அவனை ஒரு பார்வை பார்த்தவள் மீண்டும் தன் அதிமுக்கிய வேலையான பேச்சினை தொடர்ந்தாள் ஸ்ரீயுடன். என்னவோ அவன் அருகே வந்து அமர்ந்ததும் ஒருசிறு மகிழ்வைக் கொடுக்க, ஆனாலும் அதை வெளிக்காட்டினாள் இல்லை.. இப்போ மட்டும் இப்போ வந்து உட்கார்ந்து என்ன பிரயோஜனம்.. பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இப்போ வாய் கிழிய பேசி என்னாகப் போகிறது என்று அவன் மீது மேலும் ஒரு கடுப்பை வளர்த்துக்கொண்டாள்..

‘கண்டுக்கிறாளா பாரு.. வேலை செய்யும் போதெல்லாம் எப்படி பம்மி பதுங்கினா, ஆனா அதெல்லாம் பாயுறதுக்குன்னு இப்போதானே தெரியுது….’ என்று சர்வா தனக்குள் முணுமுணுக்க,

“அண்ணி அண்ணன் வாய்குள்ளே எதோ முனங்குறான்….” என்று ஸ்ரீ சரியாய் போட்டு கொடுத்தாள்.

உடனே இவளும் “என்னங்க எதுவும் வேணுமா??” என்றாள் மிக அக்கறையாய்..

அடுத்தநொடி “ஆகா..!!! ஐடியா.” என்று சர்வேஷின் மனம் கூப்பாடு போட்டு கூக்குரலிட்டது.. அவனது சடுதியான முகமாற்றத்தை கண்ட சௌபர்ணிகா ‘என்னவோ ப்ளான் பண்றான் போல..’ என்றெண்ணி அவனையே உருத்து பார்த்தாள்..

அவனோ இயல்பாய் இருப்பது போல் முகத்தை வைத்து, சௌபர்ணிகாவைப் பார்த்து சிரிக்க, இவளோ வேகமாய் முகத்தை திருப்பிக்கொண்டாள். என்னவோ அவன் செய்வதற்கு எல்லாம் ஏட்டிக்கு போட்டியாகவே செய்யவேண்டும் என்று அவள் மனம் எண்ணியது..   

காலை உணவு முடிந்து உறவினர்கள் கிளம்பி செல்ல இப்பொழுது வீட்டில் சர்வேஷின் குடும்பம் மட்டும் இருந்தது.. மோகனா அனைவரையும் உண்ண அழைக்க சௌபர்ணிகா அமர்ந்து உண்ணுவதா, இல்லை நின்று பரிமாறுவதா என்று குழப்பமாய் பார்த்தாள்.. சர்வேஷோ இதெல்லாம் கவனிக்காது அவனது அலைபேசியில் கவனமாய் இருக்க,  இவளோ தயக்கமாய் நின்றிருந்தாள்.  

அதை புரிந்துகொண்ட மோகனா “எல்லாம் ஒரேதா உட்கார்ந்து சாப்பிடலாம் சோபி. அதுனால தான் முதல்ல வந்தவங்களுக்கு டிஃபன் பரிமாறினேன். இங்க யாருக்கும் நின்னு பரிமாரனும்னு அவசியமில்லை சோபி, உங்க மாமா, சர்வேஷ் எல்லாம் அவங்களே எடுத்து போட்டு சாப்பிடுவாங்க…” என்று வீட்டின் பழக்கத்தை கூறவும் அவளும் அதன்படி நடந்தாள்..

மோகனா அவனையும் உன்ன அழைக்க, வேகமாய் வந்து சர்வேஷ் சௌபர்ணிகாவின் அருகில் அமர்ந்தான். அமர்ந்தவன் சும்மா இருக்காமல் “அம்மா அங்க ஜிலேபி இருந்தது, எடுத்து சுபிக்கு குடுங்க அவளுக்கு ஜிலேபின்னா ரொம்ப பிடிக்கும்..” எனவும் அவனைத் தவிர மற்ற நால்வரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்..

சௌபர்ணிகாவோ, அனைவரின் முன்னும் இப்படி மானத்தை வாங்குகிறானே என்று பார்த்தாள். மற்ற மூவருமோ அவனது “சுபி” என்ற அழைப்பிலேயே மற்றதை மறந்துவிட்டனர்.

ஸ்ரீயோ “சௌபர்ணிகா சோபியாகி, இப்போ சோபி சுபியாகிடுச்சா.. அம்மா பார்த்தியா.. நேத்தெல்லாம் நீ புலம்பி தவிச்சது என்ன இப்போ பாரும்மா..” எனவும்

சர்வேஷோ அசடு வழிந்தான். அவன் கூறவேண்டும் என்றெல்லாம் கூறவில்லை அவனையும் அறியாமல் வந்துவிட்டது அவ்வளவே..

 ‘இதுக்கு வேற காய்ச்சி எடுப்பாளோ..’ என்று சௌபர்ணிகாவை பார்த்தால் அவளோ வெட்கம் என்ற பெயரில் தலையை குனிந்து இட்லியோடு கதை பேசிக்கொண்டு இருந்தாள்.

அவளது மனமோ ‘எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கான்.. ஆனா எதையுமே இது வரைக்கும் ஏன் வெளிபடுத்தாம இருந்தான்.. ஒருவேலை வேற எதுவும் பிரச்சனையோ.. மூளை எல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா..’  என்று யோசித்தவளின் மனமோ ‘ஒரு வேளை உடம்பில் எதுவும் பிரச்சனையோ… அந்த மாதிரி..’ என்று அடுத்தகட்ட ஆராய்ச்சிக்குப் போக,

‘அச்சச்சோ அப்படியா ஒருவேளை…’ என்று அவளாகவே ஒன்றை நினைத்து அவனை திகைத்துப் பார்க்க,

அவனோ ‘என்னாச்சு??’ என்று கேட்பதுபோல் பார்த்தான்..

‘இல்லை இல்லை அப்படியெல்லாம் இருக்காது..’ என்று அவளாக நினைத்துக்கொண்டவள் அதை சொல்லவும் முடியாது ஒன்றுமில்லை என்று தலையை ஆட்ட,

மோகனா “சோபி இன்னும் ரெண்டு பூரி வைக்கவா…” என்று கேட்டதும்,

“ஹா.. இல்லத்தை வேணாம்..” என்று மறுத்தவள் பின் சர்வேஷ் பக்கம் திரும்பவே இல்லை..     

இப்படியாக அனைவரும் உண்டு முடித்து எழவும் சௌபர்ணிகாவிற்கு அடுத்த குழப்பம் “இருப்பதா?? இங்கேயே இருந்தால் என்ன செய்வது?? இல்லை அறைக்கு செல்வதா ???” என்று..

மருமகளின் முகத்தை கண்ட விஸ்வநாதன் மோகனவை அழைத்து என்ன கூறினாரோ,

“சர்வா, நீயும் சோபியும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க… பாவம் நேத்தெல்லாம் சாயங்காலம் நின்னுட்டே இருந்தீங்க.. போங்க.. போம்மா…” என்று அனுப்பி வைத்தார்..

‘ரெஸ்ட்டா இவன்கூடவா.. இதுக்கு நான் இங்கயே இருக்கலாம்..’ என்று நினைத்தவளின் மனதை நன்கு அறிந்தவனாய், சர்வேஷ் ஒன்றும் சொல்லாமல் முன்னே நடந்திட, அவளும் வேறு வழியில்லாது பின்னோடு நடந்தாள்.

அறைக்குள் சென்றதும் சோபி எதாவது சண்டையிடுவாளோ என்றே எதிர்பார்த்தான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அவள் அமைதியாய் இருந்தாள். பேசுவாள் பேசுவாள் என்று அவன் பார்க்க அவளோ எதுவும் சொல்லாமல் இருக்க, அவளது அமைதியே அவனை படுத்தியது

“சுபி…. ”

“ம்ம் ”

“ஏன் இப்படி அமைதியா இருக்க??” என்று கேட்டிட, வேறு எதுவும் யோசிக்காது, அப்படியே மனதில் இருப்பதை கேட்டுவிடலாம் என்று    நேராய் விசயத்திற்கு வந்தாள்.

“உங்.. உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?” என்றவளின் முகத்தில் அப்படி எதுவும் இருக்க கூடாதே என்ற பரிதவிப்பு அப்பட்டமாய் தெரிந்தது..

“இல்லையே… ஏன் ??” என்று பார்வையை அவள் முகத்தில் ஒட்டியவனின்  குரலோ இன்னும் நேசமாய் ஒலித்தது..

“இல்.. இல்ல.. அதுனால தான் என்கிட்ட… இல்லை.. அது…” என்று எதையும் கேட்கமுடியாது தயங்கியவள் பின்  “அது.. எதுவும் பிரச்சனையா?? நீங்க..  ஹெல்த்ல.. அதனாலதான் உங்க மனசுல இருக்கிறத சொல்லாம இருந்தீங்களா??” இதை கேட்கும் பொழுது சௌபர்ணிகாவின் முகம் காட்டிய பாவனை சர்வேஷ் மனதில் ஈட்டியை பாய்ச்சியது.

அவனுக்கோ இவன் என்ன கேட்கிறாள் என்று சரியாய் புரியாது “அதெல்லாம் இல்லை சுபி… நீ குழப்பிக்காத…” என்று சொல்ல,

“இல்ல.. நான் கேக்குறது புரியலையா… அது.. அது வந்து உங்களுக்கு.. உடம்புல.. அது வந்து.. அந்த மாதிரி எதுவும் …” என்று தான் கேட்க நினைத்த கேள்வியை கேட்க முடியாமல் தவித்தாள்..

எந்த மனைவியும் திருமணமான இரண்டாவது நாளே கணவனிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கமாட்டாள்.. அவள் கேட்டு முடிக்குமுன் அவளது முகமாருதல்களை கண்ட சர்வேஷோ பயங்கரமாய் சிரித்துவிட்டான்.. சத்தியமாய் அவனால் அவள் இப்படி நினைத்ததை எண்ணி சிரிக்காமல் இருக்க முடியவில்லை..

“லூசு…” என்று வாய்விட்டே சொல்லி சிரித்தவன் அவளது முறைப்பை கண்டு,  “சுபி நீ… நீ நினைக்கிறமாதிரி எல்லாம் இல்லை.. ஐம் பிட்…” என்று கைகளை மடக்கி சொல்லிக் காட்ட,

அவளோ ‘இத்தனை நேரம் நான் பட்ட பாடென்ன, இவன் சிரிப்பதென்ன..’ என்ற கோவத்தில் “ஓ!! அது எப்படி உங்களுக்கு தெரியும்.. எதுவும் ட்ரையல் பாத்தீங்களோ…” என்றாள் வெடுக்கென்று.. என்ன வார்த்தை பேசுகிறோம் என்று அவளும் யோசிக்கவில்லை..

இதை கேட்ட சர்வேஷிற்கு முதலில் கோவம் தான் வந்தது. யோசிக்காமல் என்ன பேச்சு பேசுகிறாள் என்று.. ஆனால் அடுத்த நொடியே தன்னை மாற்றிக்கொண்டான்.. தான் செய்த காரியம் தான் இவளை இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்று பொறுமை காத்தான். இருந்தாலும் சௌபர்ணிகா என்ன சொன்னாலும் அதனை அப்படியே விடுமளவு அவன் அவ்வளவு பொறுமைசாலியும் இல்லை அல்லவா.. இவள் வாயை அடைக்க வேண்டுமே..

“ட்ரையல் எதுக்கும்மா, வேணும்னா மெயின் பிக்சரே பார்க்கலாம்..??? லைவா???” என்றான் வேண்டுமென்றே ஒரு மாதிரி குரலில்..

அவ்வளோதான் சுபிக்கு தூக்கி வாரி போட்டது. பேசியபிறகு அவளுக்கே தான் கேட்டது அதிகப்படியோ என்றிருக்க, எங்கே கோபப்பட்டு கத்துவானோ என்று பார்த்தால் அவனோ எதுவுமே நடவாதது போல் இப்படிக் கேட்டதும்   ‘ச்சி ச்சி.. நான் எதா தெரியாம கேட்டா இப்படியா பதில் சொல்றதா ???’ என்று முகத்தை சுருக்கினாள்.

“என்ன சுபி….”

“நத்திங்…. ”

“ஹ்ம்ம் இப்படியே நத்திங் எத்தனை நாளுக்கு தான் சொல்வ??” என்றவனின்  குரல் இன்னும் மாறவில்லை.. இன்னும் அவளை நெருங்கி அருகில் நின்றான்..

“இ….. இப்போ எதுக்கு கிட்ட வர்றீங்க???”

“நீ ஒரு கேள்வி கேட்ட, கேள்விங்கிறதை விட உனக்கு இருக்க சந்தேகம் அது.. தியரியா சொல்றதை விட ப்ராக்டிகலா சொன்னா உனக்கு ஈஸியா புரியுமே அதான்…”      

“வாட்???!!!! என்.. என்ன… சொல்றீங்க??” என்று கேட்கும் பொழுதே அவளது இதழ்கள் பேச வரமால் துடித்தான… அவனுக்கோ அவளை அணைத்து சமாதனம் கூற வேண்டும் போலத் தோன்றியது..

ஆனால் சௌபர்ணிகாவிற்கு அது இன்னும் கோவத்தை கிளருமோ என்று எண்ணியவன் “ஓகே ஓகே கூல் சுபி…”  என்று கைகளை உயர்த்தினான்..

‘இப்போ எதுக்கு இவன் கூல்ட்ரிங்க்ஸ் குடிக்க சொல்றான்.. ஒருவேளை மயக்க மாத்திரை இந்த மாதிரி… நோ… நோ.’

“என்கிட்ட பேசிட்டு இருக்கும் போதே அங்க என்ன மைன்ட் வாய்ஸ்??”

“ம்ம்ச் அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் உங்களுக்கு என்ன பிரச்னையோ என்னவோன்னு இவ்வளோ நேரம் டென்சனா இருந்தேன்…” என்றாள்  சற்றே இயல்பான தொனியில்.

அவளது முகமே காட்டியது அப்படியெதுவும் இல்லை என்ற நிம்மதியை.. 

‘இவளுக்கு என்மேல இத்தனை காதலா..’ என்று எண்ணியவன் “அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை சுபி…” என்றான்..

“பிறகு ஏன் நீங்க என்கிட்டே எதுவுமே சொல்லல.. நீங்க என்மேல வச்சிருக்க பாசம் எல்லாம் புரியுது ஆனா என்னால இன்னும்கூட இதை எல்லாம் போனா போகட்டும்னு விட முடியலை… உங்களுக்கு புரியுதா நம்ம எத்தனை விசயங்களை இழந்திருக்கோம்னு??” என்று அவள் கேட்ட கேள்வியில் கண்களை இறுக மூடி திறந்தவன்,

“ஐம் சாரி சுபி…. நான் இதுவரைக்கும் என் லைப்ல யார் கிட்டயும் சாரி கேட்டது இல்லை.. கேட்கிற மாதிரியும் நடந்துக்கிட்டது இல்லை.. பட் இப்போ உன் வலி எனக்கு புரியுது.. ஆனா நான் இப்படி எல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்கல. அது தான் உண்மை.. இதுக்கு மேல நீ என்ன விளக்கம் கேட்டாலும் என்கிட்டே பதில் இல்ல சுபி..”

அவனது குரலே அவனும் வருந்துகிறான் என்று உணர்த்தியது.. அதுவும் அவளுக்கு தாங்க முடியவில்லை..

“சரி சரி பீலிங் விட்டது எல்லாம் போதும்.. அத்தை ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க தான. எனக்கு வேற தூக்கம் வருது. நீங்க உங்க வேலையை பாருங்க..” என்று  அவனது பதிலுக்கு காத்திராமல் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

இந்நேரம் படுப்பது அவளுக்குமே ஒருமாதிரி தான் இருந்தது. ஆனால் அவனோடு பேசினால், பேசியே தன் மனதை மாற்றிவிடுவானோ என்ற பயம் தான். அவனுமே அதே எண்ணத்தில் தான் இருந்தான்..

அவளாய் நெருங்கி வந்தாள், பேசினாள், தூக்கம் என்று போய்விட்டாள்.. “ஹ்ம்ம் இன்னும் கொஞ்ச நேரம் பேசுனா, என்னை புரிய வச்சிருக்கலாம்.. “ என்று எண்ணினான்.

ஆனால் அவனது மனமோ “வேண்டாம் சர்வா.. பொறுமை.. மெதுவாய் தான் அவளை சரி செய்ய வேண்டும். எல்லாம் ஒரே நாளில் நடந்துவிடாது.. சௌபர்ணிகாவின் மனதில் உன்னை புரியவைப்பது பெரிது அல்ல உன் காதலை புரியவைக்க வேண்டும்…” என்றது

அதே நேரம் சௌபர்ணிகாவின் மனமோ “இவனுக்கு என்மேல் காதல் இருக்கிறது.. காரணம் எதுவும் இல்லையென்றால் ஒரு மனிதனால் தான் காதலிக்கும் பெண் அருகிலேயே இருக்கும் பொழுது இத்தனை ஒதுக்கமாய் இருக்க முடியுமா??? இல்லை இவனுக்கு காதல் பெரிதாய் தெரியவில்லையா ?? எதுவாக இருந்தாலும் சரி அவன் ஒதுக்கி நிறுத்திய காதல் அவனுக்கு எத்தனை பெரியது என்று உணர்த்த வேண்டும். அவன் உணர வேண்டும். ஒரு நாள் என்றாவது எல்லார் முன்னிலும் என் மீது கொண்ட காதலை அவன் வெளிபடுத்த வேண்டும்.. அவன் மனதை மாற்ற வேண்டும்..” என்றெல்லாம் பல எண்ணங்களில் மூழ்கியது..             

அமைதியாய் கண்கள் மூடி படுத்திருக்கும் சௌபர்ணிகாவை பார்த்தபடி அவனும் மெத்தையில் சாய்ந்தான். அருகில் அவன் சாய்ந்திருக்கும் உணர்வு தெரிந்தாலும் கண்கள் திறக்கவில்லை சோபி.

சேலை கட்டியபடி ஒருக்களித்து படுத்திருந்தாள்.. பக்கவாட்டில் வந்து  படுத்தவனுக்கோ அவளது தோற்றம், கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாய் போனது..

‘அவ பார்க்காத நேரம் நம்ம பார்க்கிறது தப்பு..’ என்று தலையில் குட்டியவன் அவனும் கண்களை மூடிக்கொண்டான்.. அடுத்த நொடி அவள் இமைகள் திறந்தாள்..

“ஹ்ம்ம் படுத்துருக்கான் பார் யாருக்கு வந்த விருந்தோன்னு.. இவனெல்லாம் என்னத்த தான் லவ் பண்ணானோ.. கற்பனைல கூட லவ் பண்ணிருக்க மாட்டான் போல.. சர்வேஷ்னு பெயர் வச்சதுக்கு சாமியார்னு வச்சிருக்கலாம். இவனெல்லாம் எப்போ திருந்தி, ஹ்ம்ம். விளங்கிடும் சோபி..” என்று அலுத்துக்கொண்டாள்..

இத்தனை நேரம் சௌபர்ணிகாவோடு பேசியதே சர்வேஷின் மனதிற்கு இதம் தந்தது. அவனையும் அறியாமல் பல கற்பனைகள் தோன்றின மனதில். அந்த கற்பனை தந்த சுகத்தில் கண்ணயர்ந்தான்.. சில நேரம் அவனையே பார்த்தபடி படுத்திருந்த சௌபர்ணிகாவோ தன் அன்னையோடு பேசவில்லை என்று தோன்றவும் தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு சற்று தள்ளி போய் அமர்ந்தாள்..

மறுவீட்டிற்கு மாலை அழைக்க வருவோம் என்று புனிதா கூறவுமே அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாகி போனது…

“ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைக்கணுமே..” என்று யோசித்தவள்
“இல்லை அத்தைகிட்ட முதல்ல சொல்லணும்.. கேட்டிட்டு வந்துஎடுத்து வைப்போம்..” என்று முடிவெடுத்து கீழே சென்றாள்.

மோகனாவும் அதே நேரம் மாடி ஏறிக்கொண்டு இருந்தார். மருமகளை கண்டவர் “என்ன சோபி அதுக்குள்ள தூங்கி எழுந்தாச்சா???” எனவும்.

“இல்லத்தை பேசிட்டு தான் இருந்தோம்.. இப்போதான் அவர் தூங்குறார்…” என்றாள்..

“கொஞ்ச நேரம் முன்ன தான் உங்க அப்பா பேசினார்மா.. சாயங்காலம் மறுவீட்டு அழைப்புக்கு வர்றாங்க.. உனக்கு சர்வாக்கு வேண்டியது எல்லாம் எடுத்து வைங்க.. அதுசொல்ல தான் வந்தேன்..”

“சரிங்க அத்தை.. எத்.. எத்தனை நாளுக்கு..” தயக்கமாய் அவள் குரல்..

“சர்வாக்கிட்ட கேட்டுக்கோம்மா.. அவன் ஆயிரம் வேலை இருக்குன்னு சொல்லுவான்.. ஆனா ஒரு மூணு நாளைக்காவது இழுத்து வை.. பாவம் அவனுக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து வேலை வேலைன்னு தான் இருக்கான்…”

ஒரு அன்னையாய் அவர் வருந்துவதும் சரிதானே.. மோகனாவுக்கு மகனது வாழ்வு எப்படியேனும் நல்ல முறையில் இருந்திட வேண்டும் என்ற எண்ணம்.. பாவம் சிறுவயதில் இருந்தே குடும்பத்திற்காக என்று நிறைய நிறைய பார்த்து செய்துவிட்டான்.. அவனது விருப்பு வெறுப்புகளுக்கு என்று இடம் கொடுக்காமல் வீட்டில் இருப்பவரின் நிலை என்று மட்டுமே பார்த்து நிறைய செய்துவிட்டான்.. ஆக அவனுக்கு இந்த ஓய்வாவது கிடைக்கவேண்டுமே என்று நினைத்தார்..

“சரிங்கத்தை..” என்றபடி அவள் திரும்ப முயல,

“அப்புறம் சோபி… உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று அவளை மோகனா நிறுத்த, என்ன பேசப்போகிறாரோ என்று இருந்தது சௌபர்ணிகாவிற்கு..

அவளின் முகம் பார்த்தே “ஒண்ணுமில்ல சும்மாதான்…”என, இருவரும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர்..

ஸ்ரீ அவளது அறையில் எதுவோ செய்துக்கொண்டு இருந்தாள்.. விஸ்வநாதன் வெளியே சென்று இருந்தார்.. இவர்கள் எல்லாம் இருந்திருந்தால் மோகனா பேச எண்ணியிருப்பாரோ என்னவோ..

“அது வந்து சோபி.. அவன்.. சர்வா கொஞ்சம் முன்கோபி.. ஆனா பாசமானவன்.. அது.. அது உன்கிட்ட நல்லபடியா நடந்துக்கிட்டானா??” அவர் கேட்கும் அர்த்தம் புரிந்து அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. தலைகுனிந்து கொண்டாள்.. பெண்களுக்கு இது ஒரு வசதி.. வெட்கம் என்ற பெயரில் தலையை குனிந்துகொள்வது.

“இல்லம்மா நான் ஏன் கேட்கிறேனா, மத்த கல்யாணம் மாதிரி இது முடிவாகலை.. அதான்.. எனக்குமே கொஞ்சம் பயமாவே இருந்தது. இவன் குணத்துக்கு இவன் எப்படி நடந்துப்பானோ என்னவோன்னு….” என்று அவர் மேலே கேட்க முடியாது தயங்க,

“அது.. அதெல்லாம் இல்லை அத்தை.. எங்களுக்கு ஏற்கனவே ஒருத்தரை ஒருத்தர் தெரியும்தான.. அதுனால பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை…  மத்தபடி வேற எதுவும் இல்ல..” என்று பட்டும்படாமல் கூறி முடித்தாள்..

அவளது குரலே அவருக்கு உணர்த்தியது நீங்கள் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை ஆனாலும் பிரச்சனை எதுவும் இல்லையென்று.  இப்போதைக்கு இதுவே போதும் என்பது போல இருந்தது மோகனாவிற்கு.. போக போக எல்லாம் சரியாகிவிடும் என்று மருமகளுக்கு ஆறுதல் வேறு கூறினார். அந்த ஆறுதல் அவருக்கும் தானோ என்னவோ..

எப்படி இருந்தாலும் சரி மனைவி என்ற ஒருத்தி வந்தபிறகு கண்டிப்பாய் சர்வேஷ் கணவன் என்ற பொறுப்புகளில் இருந்து தவறமாட்டான் என்று உறுதியாய் நினைத்தார்..

இப்படியாக ஒருவழியாய் பொழுதுகள் நகர, மாலை நேரமும் வந்தது. சௌபர்ணிகாவின் பெற்றோரும் வந்தனர்.. அனைவரும் பேசி மகிழ்ந்து, உண்டு, சிரித்து, கார்த்திக்கும் ஸ்ரீயும் சோபியையும் சர்வேஷையும் கேலி கிண்டல் பேசி பொழுது நன்றாகவே கழிந்தது.. மறுவீட்டு அழைப்பு முடிந்து சர்வேஷ் சௌபர்ணிகா, சௌபர்ணிகாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்..

கார்த்திக்கோ மாமா மாமா என்று சர்வேஷை சுற்றி சுற்றி வந்தான். பரந்தாமன் அத்தனை சகஜமாய் பேசவில்லை என்றாலும் மருமகனிடம் சற்று நன்றாகவே பேசினார்..

“அது ஒண்ணுமில்ல மாமா, அப்பா ஸ்ட்ரிக்ட்னு காட்டிக்குவார்.. நாங்களும் பயந்த மாதிரி காட்டிபோம்…” என்று கார்த்திக்  ரகசியம் பேசினான்…

“ஓ!! சுபியுமா கார்த்திக்??” என்று சர்வேஷ் கேட்க,

“சுபி யாரு??”என்றான் கார்த்திக் சந்தேகமாய்..சர்வேஷின் பார்வையோ சௌபர்ணிகாவை காட்ட..

“அக்கா தான் சுபியா…” என்று மீண்டும் கேட்க,

“ஆமா கார்த்திக்.. நீங்க எல்லாம் சோபின்னு சொல்றீங்க.. நான் அதையும் சுருக்கிட்டேன் சுபின்னு நல்லா தானே இருக்கு…” என்று சர்வேஷ் கேட்க,

“நாங்க நல்லா இல்லை சொன்னாலும் நீங்க அப்படித்தான மாமா சொல்ல போறீங்க…” என்று கார்த்திக்கும் பதில் கொடுக்க, “ஹா ஹா..” என்று சிரித்தவனுக்கு அலைபேசி சிணுங்க,

“பேசிட்டு வர்றேன்..” என்று எழுந்து போனான் சர்வேஷ்..    

அவன் எழுந்து சென்றதையே பார்த்தவன், ‘ஆ!!!! ஒரே நாள் தான ஆச்சு… அப்போ ஆடியன்ஸ் நாங்க தான் அவுட்டா….’ என்றபடி  சோபியிடம் சென்றான்.

கார்த்திக் வருவதை பார்தவளோ இத்தனை நேரம் அவனும் சர்வேஷும் பேசியதை எண்ணி, ‘ஐயோ இவன் சும்மாவே பேசுவான்.. இதுல ரெண்டும் ரகசியம் வேற பேசி.. என்ன சொல்ல வரானோ..’ என்று பார்த்தபடி நின்றாள்..

“சுபி கண்ணு.. ச்சி சோபி கண்ணு…” என்று கார்த்திக் சற்று சத்தாமாகவே சொல்ல,  பதிலுக்கு அவனையும் சர்வேஷையும் சேர்த்தே முறைத்தாள்.

இவளின் முறைப்பை அவளது கணவன் காணவில்லை என்றாலும் தம்பி கண்டானே, ஆக,   “ஹி ஹி டங் ஸ்லிப் ஆகிடுச்சு சோபி….. ” என்று இளிக்க,

“என்னடா வேணும் உனக்கு??? ” என்றாள் கடுப்பாய்..

“குற்றம் நடந்தது என்ன??? ஒரே நாளில் செல்ல பெயர், ஜாடை பேச்சு, முறைப்பு.. அதுவும் திருமணமே வேண்டாம் என்ற இருவரிடம்.. இந்த மாற்றம் எப்படி உருவானது?? எதனால் உருவானது ????” என்று தொலைக்காட்சியில் வரும் தொகுப்பாளர்கள் போல கைகளை நீட்டி மடக்கி பேசியவனை காண அவளுக்கு சிரிப்பு வந்திட்டது..

அதே நேரம் போன் பேசி வந்தவனும் இதனைக் காண அவனுக்கே கார்த்திக்கின் பேச்சு சிரிப்பைக் கொடுத்தது.. சௌபர்ணிகாவோ கணவனை பார்த்தாள்.. முகமெல்லாம் மலர்ச்சியாய் கண்களும் சிரிக்க மனம் நிறைந்து புன்னகை புரிந்துக்கொண்டு இருந்தான்..

“ஹ்ம்ம்!!!! இந்த சிரிப்பை பார்த்து தானடா விழுந்தேன்..” என்று எண்ணியவள் அவனையே பார்த்தபடி நின்றுவிட்டாள்…

 

 

           

Advertisement